Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007


தியேட்டர்-இன்-எஜுகேஷன்

- பிரளயன்

ஒசூர் டிவிஎஸ் அகாதமியில் குழந்தைகளோடு பணியாற்றி நான் உருவாக்கிய நாடகம் பற்றி மதிப்பீடு செய்த பா.வெங்கடேசனுக்கும் வெளியிட்ட புதுவிசைக்கும் என் நன்றி.

சென்னை போன்ற பெருநகரங்களில் கண்டுகொள்ளப்படுவது போல பிற மாவட்டங்களில் நடக்கிற நாடக முயற்சிகள் ஊடகங்களால் உணரப்படுவதில்லை. இந்தச் சூழலில் புது விசையில் மதிப்பீடு வெளியானது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நாடகத்தைப் பார்த்தவர்களில் ஒருசிலர் கேட்டதைப் போலவே பா.வெங்கடேசனும் பள்ளிச்சிறார்களைக் கொண்டே நடத்தப்பட்டாலும் இதை குழந்தைகளுக்கான நாடகம் என்று சொல்லிவிட முடியுமா? என்று கேட்டிருக் கிறார். அவர்களுக்கு நான் சொன்னதையே புதுவிசை வாசகர்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

‘குழந்தைகள் நாடகம்’ என்பதன் வரையறை வேறு. நான் கடந்த பத்தாண்டுகளாக பள்ளி மாணவர்களோடு குறிப்பாக டிவிஎஸ் அகாதமி(ஒசூர்,தும்கூர்) பள்ளிகளில் தியேட்டர்-இன்-எஜூகேஷன் என்ற புதிய அணுகுமுறையின் கீழே நாடகம் செய்கிறேன். குழந்தைகள் நாடகம் என்ற வரையறைக்குள் அவை முற்றிலும் அடங்காது.

வகுப்பறைச் சூழலில் புதிய எல்லைகளை கண்டறிய முயலும் போதனாமுறையின் (pedagogy) ஒருபகுதியாக மாற்றுக் கல்வியாளர்களால் நாடகம் முன்வைக்கப்படுகிறது. ஒரு பாடத்தை/சமூகவியல் உண்மைகளை பாடப்புத்தகத்திற்கு வெளியேயும் தேடிக் கண்டடையக்கூடிய வாய்ப்பை இந்த நாடக முயற்சி வழங்குகிறது. நாடகத் தயாரிப்பின் படி முறைக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறது இந்த அணுகுமுறை. கதையை, மையக்கருவைத் தேர்வு செய்வதிலும் இறுதி செய்வதிலும் மாணவர்களின் பங்கேற்பை உறுதி செய்வதை முன்னிபந்தனையாக இவ்வணுகுமுறை கோருகிறது. நாடக உருவாக்கத்தின் போக்கில் முரண்பட்டால் நாடகத்தை விட்டு வெளியேறவும் நிராகரிக்கவும் மாற்றுக் கருத்தை சொல்லவும் இவ்வணுகுமுறையில் முழுச் சுதந்திரமுண்டு.

குழந்தைகளுக்கான கலைஇலக்கிய முயற்சிகள், கற்பனை யற்புத உலகைப் படைத்துக் காட்டுவது என்பதாகவே இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது. அதனாலேயே குழந்தைகளுக்கான படைப்புகள் ஒரு குறுகிய பரப்பையே தம் செயல்எல்லை யாகக் கொண்டுள்ளன. இன்றைய உலகில் நிலவும் முரண்கள் அனைத்தையும் அவர்கள் கண்ணில் காட்டாமல் ஒளித்து வைப்பதன் மூலம் அவர்களுக்கு கற்பனையற்புத உலகையோ குழந்தைமையையோ வழங்கிவிட முடியாது. நாம் கற்பனை செய்துகொள்வதைப் போல குழந்தைகள் பாதுகாப்பான கண்ணாடிப்பேழைக்குள் இருந்துகொண்டிருக்கவில்லை. நாம் வாழும் அதே உலகத்தில்தான் இருந்து கொண்டிருக் கிறார்கள். ஊடகங்களும் மின்னணு தொலைச்சாதனங்களும் அவர்கள்மீது மிகப்பெரும் குறுக்கீடுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. இந்த குறுக்கீடுகள், அதிகார மையங் கள் தாம் விரும்புகிற வகையில் வருங்காலத் தலைமுறையை தகவமைக்கிற முயற்சிகள்தான். இந்தநிலையில் எதிர்வினை யாற்றுகிற ஒரு சிறுமுயற்சியாகத்தான் தியேட்டர்-இன்-எஜ ¨கேசனைப் புரிந்துகொண்டு செயல்படுகிறேன்.

இத்தகைய அணுகுமுறைக்கு இடமளிக்கும் வகையில் புரிதலோடு வாய்ப்பு தருகிற டிவிஎஸ் அகாதமி போன்ற பள்ளிகளில்தான் இதை என்னால் செய்யமுடிகிறது. அதோடு அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் ஒரு குழுவாக என்னோடு சேர்ந்து ஒத்துழைக்கிறபோதே இது எளிதாகிறது. நாடகம் கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல, நாம் கற்றுக் கொள்வதும் அங்கு நடக்கிறது.

தமிழ்ச்சமூகத்தைப் பற்றி நமக்கு வழங்கப்பட்டிருக்கிற வரலாற்றுப் பிம்பங்கள் எளிமைப்படுத்தப்பட்டு கத்தரித்து வெட்டி ஒட்டப்பட்டவைதான். இந்த ஒற்றைத்தன்மை மீதான கேள்விகளோடு வரலாற்றையும் பெண்ணையும் புரிந்துகொள்கிற முயற்சியாகவே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் (நேற்றும் இன்றும்) நாடகத்தை நான் மாணவர்களோடு சேர்ந்து தயாரித்தேன். நடிகர்கள், நாடகர்கள் என்ற அனுபவத்தையும் தாண்டி ஒன்றை கேள்விக்குள்ளாக்குகிற, உண்மைகளைத் தேடி கண்டடைகிற சக மனிதர் களோடு கூட்டாக இயங்கக் கோருகிற திறன்களை மாணவர்களிடத்திலே இம்முயற்சி உருவாக்குகிறது. மாணவர்களது தன்மதிப்பையும் ஆளுமைகளையும் இன்னொரு தளத்திற்கு இட்டுச் செல்கிற உடன் விளைவையும் இது நிகழ்த்துகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com