Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007


பின் - நவீனத்துவமும் 'பெண்' அடையாளமழிப்பும் (அல்லது)
கழித்துவிடப்படக் கூடிய - வேண்டிய ஒரு 'மாமி'யின் கடிதம்

- லதா ராமகிருஷ்ணன்

எழுத்தாளர் ஷோபாசக்தியின் படைப்புகள் என் அபிமானத்திற்கும், மரியாதைக்கும் உரியவை. அவருடைய பேட்டியில் இடம்பெறும் சில கருத்துக்கள், அணுகு முறைகள் குறித்த எனது எதிர்வினையைப் பதிவு செய்வது அவசியமாகத் தோன்றுகிறது.

பின்-நவீனத்துவம், இடதுசாரித் தத்துவம் ஆகிய இரண்டின் மீதான அவருடைய அக்கறையையும், நம்பிக்கையையும் பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார் தோழர் ஷேபாசக்தி. இடதுசாரித் தத்துவத்தின் அடிப்படையும் குவிமையமும் வர்க்கவுணர்வும் வர்க்கபேதமும் ஆகும். பின்-நவீனத்துவத்தின் முக்கியக்கூறுகளில் சில 'மையம்-சிதைவு', 'ஒற்றை அர்த்த மறுப்பு, பொதுமைப்படுத்தல் சார் எதிர்ப்பு முதலியவை. ஆனால் இந்த அம்சங்கள் எழுத்தாளரின் பதில்களில் காணக்கிடைக்கவில்லை. மாற்றுக்கருத்து உடையவர்களெல்லாம் 'அல்லக்கைகளாகச் செயல்படுகிறார்கள் என்று சொல்லிவிடுவது சரியா? இது ஒற்றைக் கருத்தை வலியுறுத்தும் போக்கல்லவா?

தனக்குப்பிடித்த படைப்பாளிகள் என்பதால் காலச் சுவட்டில் எழுதினாலும் பரவாயில்லை என்று கூறுபவர் தனக்கு மாறுபட்ட கருத்துக்களை காலச்சுவட்டில் எழுது பவர்களையும் அப்படியே ஏற்றுக்கொள்வாரா? தெரியவில்லை. சமயங்களில் யார், எந்தப் பத்திரிக்கையின் வாயிலாகப் பிரபலமடைகிறார்கள் என்று பார்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

"ஈழ எழுத்தாளர்களைக்கூட பொதுமைப்படுத்தி சுரணையான, அதிகாரங்களுக்கு எதிரான எழுத்தாளர்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது" என்று ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது 'பொதுமைப்படுத்தலை' மறு தலிப்பவர் "புலம்பெயர்ச் சூழலில் பெண் படைப்பாளிகளை பெரிதாக உருவாகாத காரணங்கள் என்ன?" என்ற கேள்விக்கு "அப்படி சொல்லிவிட முடியாது. அய்ந்தரைக் கோடித் தமிழர் வாழும் தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பெண்படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள்? மாமிகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் கவனிக்கத்தக்க பெண் எழுத்தாளர்களாக ஒரு இருபது பேர் இருப்பார்களா?" என்று எதிர்கேள்வி கேட்கிறார்.

பார்ப்பன குலத்தில் பிறந்த காரணத்தாலேயே 'மாமிகள்' என்று ஒட்டுமொத்தமாக ஒரு முத்திரை குத்தி கழித்து விடுவதில் 'பின்நவினத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஒருவருக்கு இருக்கவேண்டிய வர்க்கம்சார் புரிதலை மீறிய வன்மமும், காழ்ப்புணர்வும் தான் புலப்படுகிறது. இந்தவிதமான அணுகுமுறையைத்தான் "பார்ப்பனர்கள் யூதர்களைப் போல் நடத்தப்படுகிறார்கள்" என்று figuarative ஆக எழுத்தாளர் அசோகமித்திரன் ஒருசமயம் குறிப்பிட்டார். அதை, வேண்டுமென்றே ‘Literal’ஆக பொருள் பெயர்த்து அவரை எத்தனை முடியுமோ அத்தனை கொச்சையாக வசைபாடினார்கள், இன்னமும் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனீயம், ஆணாதிக்கம் முதலான சொற்பிரயோகங்கள் இத்தகைய வசைபாடலுக்கும், மறைமுகமாய் ஒருவரை அச்சுறுத்துவதற்கும் பயன்படுகிறதே தவிர, குறிப்பான அத்துமீறல்களை, குறிப்பான அக்கிரமக்காரர்களை ஒளிக்கவும், தப்பிக்கச் செய்யவுமே உதவி செய்கின்றன.

ராஜம் கிருஷ்ணன், அம்பை என எல்லோருடைய எழுத் தும் 'மாமிகள்' எழுத்துதானா? கழிக்கப்பட வேண்டியவைதானா? இல்லை, பார்ப்பனகுலத்தில் பிரக்ஞையோ செல்வாக்கோ ஆணவமோ அதிகாரமோ இல்லாமலிருந் தும் 'முற்போக்கு' என்று மற்றவரால் அங்கீகரிக்கப்பட வேண்டி 'பாவம்' புரிந்துவிட்ட 'பாவ'த்தைத் தாங்கி கூனிக்குறுகி, குட்டுப்பட்டுக் கொண்டே வளைய வந்தால்தான் அவர்கள் பொருட்படுத்தப்படுவார்களா? 'எல்லா மதங்களும், எல்லா சாதிகளும் பெண்ணை இரண்டாந்தரப் பிரக்ஞையாகவே பாவிக்கின்றன' என்ற நடப்புண்மையை வசதியாகப் புறந்தள்ளி விட்டு 'மாமிகளைக் கழித்துவிட்டுப் பார்க்கச் சொல்வது எப்படி பெண்ணியப் பார்வையாகும்? அல்லது எப்படிப்பட்ட பாரபட்சமான பெண்ணியப் பார்வை இது?

இத்தகைய ஆண்பலம், படைபலம் 'மாமிகளுக்கு இல்லையென்பதால் அவர்களை யாரும், என்னமும் பேசலாம், எளிதாக அவர்களுடைய படைப்பாக்கங்களைக் கழித்து விடலாம்... அப்படியா? அவரவர் விடுதலைக்கான உரிமைக்குரலை அவரவர் தான் எழுப்ப வேண்டும், எழுப்ப முடியும் என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டே மறுபக்கம் 'பெண்ணியப் போக்கில் பேசிவரும் ஆண்களை எப்படி பெண்ணியவாதிகள் என்று கூறு இயலும்? பெண் படைப்பாளிகளை இப்படி 'மாமிகளாக'க் கட்டம் கட்டி அடையாளமழிக்கலாகாது என்று சொல்ல சம்பந்தப்பட்ட பெண்ணியப் படைப்பாளிகளுக்கு நேரமும் மனமுமிருக்குமோ என்பது சந்தேகமே.

எனில், ஷோபாசக்தி உண்மையிலேயே தன்னை ஒரு பெண்ணியவாதியாக உணரும்பட்சத்தில் 'மாமிகள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி 'பார்ப்பன குலத்தில் பிறந்த காரணத்தாலேயே பெண் படைப்பாளிகள் சிலரை அடையாளமழித்து கொச்சைப்படுத்தும் தன் மனப்போக்கிற்காக அவர் வருந்தவேண்டும். வருத்தம் தெரிவிக்க வேண்டும். இலங்கையில் நிலவும் போர்ச் சூழலினால் உலகின் பல்வேறுநாடுகளில் அகதிகளாக இருந்துகொண்டு விடுதலைப்புலிகளை விமர்சிப்பவர் களை தன்நாட்டின் அரசியல் சூழலை தொலைவிலிருந்து விமர்சித்து வருபவர்களை 'அல்லக்கைகள்' என்ற ஒன்றை வார்த்தையில் பொதுமைப்படுத்திவிடுவது சரியா? ஷோபாசக்தியையும் அப்படி கட்டம் கட்டிவிட முடியும் என்பதை அவர் உணரவேண்டும். தவிர, பார்ப்பனப் பின்புலம் இல்லாத, மாமிகளல்லாத சிறந்த பெண்ணியப் படைப்பாளிகளாக அவர் சிலாகிப்பவர்கள் விடு தலைப்புலிகளை தமிழீழ விடிவெள்ளியாகப் பார்ப்பவர்கள். இதனால் அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்தைக் கொச்சைப்படுத்திவிட முடியுமா ஷோபாசக்தியால்?

தாங்கள் எதிர்பார்ப்பதை, எழுதச் சொல்லிக் கட்டளையிடுவதை எழுதாத பெண்களை 'ஆண்குரலில்' எழுதுவதாக அவதூறு பரப்பிவரும் 'பெண்ணியவாதப் படைப்பாளிகளும் நம்மிடையே இருக்கிறார்கள். எப்படி பெண்களின் குரல்களை, பெண்ணியத்தின் பரிமாணங்களை ஒரு 'மொந்தையாக்கி'விட முடியாதோ அதைப்போலத் தான் 'ஆண்குரல்' என்று 'பொதுமைப்படுத்துவதும் ஏற்புடையதல்ல. "உண்மையில் இவர்கள் தங்கள் தலை முறையைச் சார்ந்த ஆண் எழுத்தாளர்களைவிடத் தீவிரமாக இயங்குகிறார்கள். விவாதங்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார்கள், "உண்மையில் இவர்கள் தங்கள் தலைமுறையைச் சார்ந்த ஆண் எழுத்தாளர்களைவிடத் தீவிரமாக இயங்குகிறார்கள்.

விவாதங்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார்கள்" என்று ஷோபாசக்தி இன் றைய, அவர் மொழியில் கூறுவதென்றால் 'பார்ப்பன சாதிப் பின்புலம்' (பார்ப்பனீய சாதிப் பின்புலம் என்று சுற்றி வளைத்துக் கூறும் சிரமத்தைக்கூட ஷோபாசக்தி எடுத்துக் கொள்ளவில்லை!) இல்லாத இன்றைய பெண் படைப்பாளிகளை சிலாகித்துக் கூறுவதிலும் ஒரு மேம் போக்குத்தனமான பொதுமைப்படுத்தல்- பின்நவீனத்துவக் கோட்பாடுகளுக்கு எதிரான அணுகுமுறை - புலப் படுகிறது. இன்றைய ஆண் எழுத்தாளர்கள் (பார்ப்பன பின்புலம் இருக்கும்-இல்லாத) துணிச்சலாக எழுதவில்லை என்பது உண்மையல்ல. அவர்களுடைய எழுத்துக்களை அகல் விரிவாகப் பேசும் 'வெளி' இன்று இல்லை என்பதே உண்மை. இன்னொன்று, அவர்களு டைய தலைக்கு நேர்மேலே 'ஆணாதிக்கவாதி' என்ற வாள் தொங்கிக்கொண்டிருப்பதும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டியது. மாறாக, 'காலங்காலமாக, அடக்கப்பட்ட குரல்' என்ற 'பாதுகாப்புக் கவசம்' இன்றைய பெண்படைப்பாளிகளுக்கு (தோழர் ஷோபா சக்தியின் கருத்தாக்கப்படி, பார்ப்பன சாதிப் பின்புலம் இல்லாத பெண்படைப்பாளிகளுக்கு) இருக்கிறது.

'சிறுபத்திரிகைகளின் காலம் முடிந்துவிட்டது' என எழுத்தாளர் அசோகமித்திரன் கூறிய கருத்து ஏற்புடையதல்ல. அதேசமயம், சிறுபத்திரிகைகள் இலக்கிய, சமூக அக்கறையும் பிரக்ஞையும் வாய்ந்த பல தனிநபர்களால், ஒத்த கருத்துள்ளவர்களோடு, அரசுகளின் ஆதரவில் கொழித்து வளர்ந்திருந்த வெகுஜன 'இலக்கியக் கலாச்சாரத்திற்கான எதிர்ப்புக்குரல்களாய் இயங்கி வந்தவை. இயங்கி வருபவை. ஒருவித 'உள்நோக்கத்துடனான பொதுமைப்படுத்தல் தான்' என்பது 'தமிழ்ச் சிறுபத்திரிகை வரலாறு தெரிந்தவர்களுக்கு' புரியும்.

தனிமனிதர்கள், தனிமனிதர்களடங்கிய சிறுகுழுக்கள் ஆர்வம், அர்ப்பணிப்பு காரணமாக ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கும் மேலாக எந்தவித அரசு அங்கீகாரமும் இன்றி இயங்கிவந்த சிறுபத்திரிகைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட நவீன தமிழ் இலக்கியப் போக்குகள் விரைவில் 'திராவிடக் கட்சிகளின் இலக்கியப் பாரம்பரியமாக நிறுவப்பட்டுவிடக்கூடும்'அறிகுறிகள் தென்படுகின்றன. கவிஞர்.சல்மா தி.மு.கவில் இணைந்துகொண்டது, தி.மு.க.மகளிரணிப் பேரணியின் முதல்வரிசையில் கவி ஞர் கனிமொழியும், கவிஞர் தமிழச்சியும் அணிவகுத்துச் சென்றது, இந்த இருவருடைய கவிதைகள் 'பெண் படைப்பாளிகள்' என்ற அளவிலும், வேறுசில காரணங்களுக்குமாய் சிறுபத்திரிகைகளுக்கேயுரிய 'காத்திரமான' திறனாய்வுக்கு உட்படுத்தப்படாமல் காலச்சுவடு, உயிர்மை முதலான பல இலக்கியப் பத்திரிகைகளினால் கவனமாக அணுகப்பட்டுவரும் போக்கு முதலிய பல காரணங்களினால் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை வெறும் மனப்பிரமை என்று ஒதுக்கிவிட முடியாமலிருக்கிறது. அதனாலென்ன? கோடிகளில் புரண்டாலும் 'மாமிகளாக' இல்லாதவரை எந்த வில்லங்கமுமில்லை. அப்படித்தானா தோழர் ஷோபாசக்தி?

நிறைய எழுத இருக்கிறது. என்ன எழுதினாலும் மாமிகள் எழுத்து கழிக்கப்பட வேண்டியதுதான் என்ற ஷோபா சக்தியின் அறிவுத்தெளிவு ஆயாசமூட்டினாலும் அதற்காக எழுதாமல் இருக்க முடியவில்லை. "நவீனத்துவத்தின் ஒற்றைப்படைத்தன்மைகளின் நிராகரிப்புகளுக்கு எதிராகக் கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும் ஓர் அறிதல் முறைமை நமது சூழலுக்கு தேவை யில்லை என்று சொல்வதில் ஏதாவது அறிவு நாணயம் இருக்க முடியுமோ?" என்ற ஷோபாசக்தியின் கேள்வியோடு என் எதிர்வினையைச் (தற்காலிகமாக) முடித்துக் கொள்கிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com