Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007


உமா சித்தியும் சாம்பல்நிற ஸர்ப்பக்குட்டிகளும்

- லஷ்மி சரவணக்குமார்

பேருந்து அவர்களை இறக்கிவிட்டுப் போனபோது நிலம் முழுக்க வெயில் ஆக்கிரமித்து விட்டிருந்தது. அவர்களின் நிழலைத் தவிர்த்து அங்கு ஒதுங்குவதற்கென நிழல் எதுவுமில்லை. இருபுறமும் மண்டிக் கிடந்த கருவேல மரங்களுக்குள்ளாக நீண்டு குறுகி தொலைவில் ஓர் புள்ளியைப் போல் மறைந்துவிட்டிருந்தது சாம்பல்நிற சாலை. பேருந்து போன தடத்தை பின்பற்றியபடியே வந்த தம்பியை சித்தி தலையில் தட்டிக் கூப்பிட்டபோதுதான், தார்ச்சாலையிலிருந்து காட்டினூடாக நீண்டு கிடந்த மண் சாலையை அடையாளம் கண்டுகொண்டான். வாசுகி அக்கா அவர்கள் இருவருக்கும் முன்பாக சென்று கொண்டிருந்தாள். செருப்பில்லாத கால்களோடு சித்தி வெயிலை எப்படிப் பொருத்துக் கொள்கிறாள் என்று நினைத்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

"உனக்கு காலு பொசுக்கலயா சித்தி?" என அவன் கேட்பதற்கு முன்பாகவே சித்தி இவனைத் திரும்பிப் பார்த்து "உனக்கு காலு பொசுக்குதாடா?"என்று கேட்டாள். அப்பா புதிதாக வாங்கிக்கொடுத்த ரப்பர் செருப்பை அவளிடம் காட்டினான். "எப்போ வாங்கினதுடா?" என்று கேட்கமாட்டாளா என நினைத்தவனுக்கு அவள் எதுவுமே கேட்காமல் போவது வருத்தமாக இருந்தது.

முன்னால் சென்று கொண்டிருந்த வாசுகி அக்காவின் தலைக்கு மேலாக இரண்டு தட்டான்கள் பறந்து கொண்டி ருந்தன. இவன் சத்தம் போட்டு சொல்ல நினைத்தான். அப்படி சொன்னாலுங்கூட அதனை அவள் பொருட்படுத்தமாட்டாள். ஏனெனில் அவளுக்கு வண்ணத்துப் பூச்சிகளின் மீதுதான் அதீதப் ப்ரியம் இருந்தது. அவள் சேகரித்து வைத்திருக்கும் இறந்துபோன வண்ணத்துப் பூச்சிகளிலிருந்து வெளிப்படும் விநோத நெடியை தம்பி ஒருபோதும் விரும்பியதில்லை. நீண்டநாள்களுக்குப் பிறகு சித்தியோடு கோயிலுக்கு வந்திருக்கிறான். உண்மையில் முன்பைப்போல் அவளை அவனுக்குப் பிடிப்பதில்லை. அவள் இந்த வீட்டிற்குப் புதிதாக வந்தபோது இவன்மீது அதீதப் ப்ரியத்துடன் இருந்தாள்.

இவனுக்குப் பிடித்தமான சினிமா •பிலிம் வாங்கிக் கொடுப்பதும் யானை விளையாடுவதுமாய் இவனோடுதான் நிறைய நேரங்களை செலவிட்டாள். வெளியில் கூட்டிப்போகும் போது வெள்ளரிக்காயையோ மாம்பழத்தையோ வாங்கி கொடுப்பாள். அந்த சித்திதானா இப்போது இப்படி மாறி யிருக்கிறாள் என்பதை நினைக்கிறபோது வேதனையாக இருந்தது. வாசுகி அக்காவிற்கு முன்பிருந்தே அவளைப் பிடிப்பதில்லை. 'தலைக்கனம்' பிடித்தவள் என அவள் முன்பு சொல்லியதை தம்பி நம்பியிருக்கவில்லை. இப்போது அது உண்மையோ என்று பட்டது. இப்போதெல்லாம் அவளோடு வெளியில் வருவதை முற்றிலுமாக வெறுத்துவிட்டிருந்தான். அவளே கூப்பிட்டாலும் கூட படிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டோ, அல்லது வேறு ஏதாவது காரணங்களை சொல்லியோ மறுத்துவிடுவான்.

இன்றும் கூட சித்தி கூப்பிட்டாளென அம்மா சொன்ன போது முடியவே முடியாதென மறுத்தவன், அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காத பின் செமத்தியாக இரண்டுஅடி வாங்கிய பிறகு அழுது கொண்டே போய் வாசுகி அக்காவிடம் சொன்னான். அவளும் உடன் வருகிறாள் என்று தெரிந்த பிறகு சற்றே ஆறுதலாக இருந்தது. பேருக்கு மட்டுமே சித்தியோடு பேசும் வாசுகி எப்படி சம்மதித்தாள் என்று நினைத்த போது வியப்பாக இருந்தாலும், அவள் முகத்தைப் பார்த்தபோது முரட்டு விரல்கள் பட்டு சிவந்து போயிருந்தது. அனேகமாக அப்பாவினுடையதாக இருக்கலாம். நீண்டநேரமாக கண்ணாடியில் முகம் பார்த்தபடி வாசுகி அழுது கொண்டிருந்ததைப் பார்த்தபோது ஏனோ அவனுக்கும் அழவேண்டுமெனத் தோன்றியது.

சித்தி தோற்றத்திலேயேகூட மற்றவர்களிடம் நெருங்காத வளாகவே இருந்தாள். குட்டையாகவும், கருப்பாகவும் முகம் முழுக்க அம்மைத் தழும்புகளுமாய் விகாரமானவ ளாக இருந்தவளுடன் எவரும் நெருங்கிப் பேசிப் பழகி அவன் பார்த்ததில்லை. உமா என்று பெயர் வைத்த தாத்தா இப்போது உயிரோடிருப்பின் பெயர் வைத்ததற் கான காரணத்தைக் கேட்டிருப்பான். ஏனெனில் அந்தப் பெயர் அழகனதாக இருந்தபோதும் அவளுக்குப் பொருத் தமில்லாமல் இருப்பதாய்பட்டது. இந்த வீட்டிற்கு வந்த சில மாதங்களிலேயே அவளுக்கு தனியார் பள்ளியொன் றில் மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டிருந்தது. அதன் பிறகுதான், அவள் மீதான வெறுப்பு வீட்டில் யாவரிடமும் பெருகத் தொடங்கியது.

சமயங்களில் தனக்கான உணவை தானே சமைத்துக் கொண்டோ வெளியில் சாப்பிட்டுக் கொண்டோ இருந்து விட்டு இந்த வீட்டிற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதைப் போலிருப்பாள். பிறகு அம்மாவோ அப்பாவோ அவளை சமாதானப்படுத்த வேண்டும். ஏனெ னில் ஒவ்வொரு மாதமும் அவள் கொடுக்கிற இரண்டாயிரம் ரூபாயை அவர்கள் இழக்க விரும்பாததும் ஒரு காரணமாக இருக்கலாம். வேலைக்கு சேர்ந்த சிலநாட்க ளிலேயே அவள் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் தென்படத் துவங்கி விட்டிருந்தது. ஒரே நிறத்திலான ஆடைகளை பெரும் ஆவலோடு அணிந்து கொண்டாள். முன்னெல்லாம் அதிகநேரம் அவள் அறையிலிருந்த தம்பியைக்கூட அதன் பிறகு அவள் அனுமதிக்கவில்லை.

ஊரில் எத்தனையோ கோவில்கள் இருக்கிறபோதும் கூட இந்தக் கருவேலங்காட்டுக்குள்ளிருக்கிற கோயிலின்மீது எதற்காக இத்தனைப் ப்ரியமாக இருக்கிறாள் என்பது ஒரு வருக்கும் புரியாததாகவே இருந்தது. இந்த கோயிலுக்கு வருகிற போதெல்லாம் மூட்டைப்பூச்சி உடலில் ஊர் வதைப் போன்ற பயமிருக்கும் தம்பிக்கு. பெருங்கோபத் துடன் கண்கள் உருள குதிரையில் நிற்கும் ஐய்யனார் சிலைக்குக் கீழாக மண்ணில் செய்யப்பட்டிருக்கிற நாய்களின் பிரம்மாண்டத் தோற்றத்தினை நினைத்துப் பார்த்தபடியே பல இரவுகளில் தூக்கத்தில் மூத்திரம் பெய்துவிட்டிருக்கிறாள். சற்றுதூரம் நடந்து வந்தவுடன் கோவிலைப் பார்க்க முடிந்தது. வெயில்பட்டதால் ஐய்ய னாரைச் சுற்றி விழுந்திருந்த தண்ணீர் வளையம் நெருங்கி செல்ல செல்ல ஏதுமற்றதாக இருந்தது.

கோவிலுக்குப் பக்கத்திலிருந்த ஆலமரத்தைப் பார்த்துக் கொண்டே தம்பி வந்தான். இவர்களுக்காக காத்திராம லேயே வாசுகி கோவிலை அடைந்துவிட்டிருந்தாள். பீடத்திற்குப் பக்கத் திலிருந்த சிறிய மண்சுவரில் அவள் போய் உட்கார்ந்து கொள்ள சித்தியும் சாமி கும்பிடாமல் சிலைக்குப் பின்னா லிருந்த நிழலில் போய் உட்கார்ந்து கொண்டாள். தம்பிக்கு தான் போட்டுக்கொண்டு வந்த செருப்பை எங்கு கழற்றி வைப்பதென்று தெரியவில்லை. அக்காவி டம் கொடுக்கலாமா என்று யோசித்தவன் அவள் வயர்க் கூடையை வைத்திருந்த திட்டிற்குக் கீழாக செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு பக்கத்திலிருந்த ஆலமரத்தில் கிளி இருக்கிறதாவென பார்க்கச் சென்றுவிட்டான். பால் சொம்பை மட்டும் எடுத்துக் கொண்டு போன சித்தி நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.

வாசுகி அக்காதான் சற் றைக்குப் பிறகு பின்னால் போய் எட்டிப் பார்த்தாள். மூன் றடி உயரமே இருந்த புற்றிலிருந்து வெளிப்பட்ட ஸர்ப்பம் ஒன்று ஊற்றி வைத்திருந்த பாலைக் குடிக்கமால் சித்தியைப் பார்த்துக் கொண்டிருந்தது. வாசுகி நிற்பதைக் கவ னித்த பின் மெல்ல ஊர்ந்து மீண்டும் புற்றுக்குள் போனது. ஏதோ, தன் உடல் மீதேறி ஊர்வதைப் போன்ற உணர்வு வாசுகிக்கு. எவ்வித சலனமுமின்றி அமர்ந்திருந்த சித்தி நீண்டநேரங் கழித்தும் எழுந்து வருவதாயில்லை.

வீட்டிற்குப் புறப்படும்போது வாசுகி தம்பியின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். அவர்கள் பேருந்து ஏற வந்த நேரத்திற்கெல்லாம் இருள் சாரலைப் போல் தூவி கருவேல மரங்கள் முழுக்க நனைந்து விட்டிருந்தன பனித் துளியினூடாக...

ஊருக்கு வந்த சில நாட்களில் சித்தியின் நடவடிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு மாறிவிட்டிருந்தது. இப்போதெல்லாம் அவள் யாருடனும் பேசுவதில்லை. சமயங்களில் அவள் ஊமையாகிப் போனளோ என்று கூடத் தோன்றும் வீட்டிலுள்ளவர்களுக்கு. உணவுமுறை களை மாற்றிக்கொண்டதில் நாளுக்கு நாள் மெலிந்தவளாய்க் காணப்பட்டாள்.

அன்று அப்படி நடக்குமென்று வாசுகியோ, தம்பியோ சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. மாலைநேர இருள் ஒரு புள்ளியைப் போல் விழுந்து பெருகத் துவங்கியது மூர்க்கமாய் வெளியெங்கும். சாலையில் உலவும் மனிதர்கள் இருளை சுமந்துகொண்டு அலைபவர்களைப் போன்று தோற்றமளித்தனர். ஏதோ வேலையாக சித்தி கடைக்குப் போய்விட்டிருந்தாள். ஏழுமணி ஆகிவிட்டதற்கான மணிச்சத்தம் சர்ச்சில் ஒலித்துக்கொண்டிருந்தது. அவள் சென்ற சிறிதுநேரத்திற்குப் பிறகு வாசுகி அந்த அறையைக் கடக்கும்போது பூட்டப்படாத அறைக்குள்ளிருந்து சீற்றத்துடன் வெளிப்படும் காற்றின் சப்தம் இடை வெளியற்றபடி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. சற் றும் விருப்பமற்ற போதிலும், தம்பியைக் கூட்டிக் கொண்டு போய் அது என்ன சப்தமென்று பார்க்க வேண்டு மெனத் தோன்றியது வாசுகிக்கு. சிரமமின்றி திறந்து கொண்டது பிளைவுட் கதவு.

நொடிப்பொழுதில் தேகம் முழுக்க திராவகம் ஊற்றி விட்டதைப் போன்ற பிரக்ஞை வயப்பட்டனர் இருவரும். உமாவின் மெத்தை முழுக்க நெளிந்து கொண்டிருந்தன குட்டி குட்டியாய் சாம்பல் நிற ஸர்ப்பங்கள். வாசுகிக்கு உடல் வியர்த்து விட்டிருந்தது. திரும்பி தம்பியைப் பார்த்தபோது நின்ற இடத்திலேயே அவன் மூத்திரம் பெய்துவிட்டிருந்தான். இருவரும் அவசரமாக வெளியேற முயன்றபோது, கீழே கிடந்த சித்தியின் பிரா காலில் சுற்றி தம்பி கீழே விழுந்தான்.

வாசுகி அம்மாவிடம் போய்ச் சொன்னதை அம்மா நம்ப மறுத்தாள். பின்பு உமாவின் அறையிலிருந்து வெளிப் படும் சீற்றத்தை உணர்ந்துவிட்டு அவளிடமே கேட்டுக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள். உமா திரும்பி வந்தபோது, இதுவரை இல்லாத அளவிற்கு அவளுடைய கருவிழி நீலநிறமாகிவிட்டிருந்தது. அவ்வப்போது இதழ்களை மடித்து ஈரப்படுத்திக் கொண்டாள். அறையில் இருப்பதைப் பற்றிக் கேட்டாள் மறுப்பாளோ என்று தோன்றிய அம்மாவின் எண்ணத்திற்கு மாற்றாக உமா சிறிதும் சங்கடமின்றி 'தானே வளர்ப்பதாய்க் கூறினாள்' ஏதோ பூனைக் குட்டிகளை வளர்ப்பதைப் போன்று.

"வேணாண்டீ, சின்னப்புள்ளைக இருக்கற எடம்.' என்று அம்மா எவ்வளவோ மன்றாடினாள். "உம் புள்ளைக மேல அக்கற இருந்தா பத்திரமா பாத்துக்க அதுவும் முடிய லேன்னா சொல்லு நான் வேணும்னா வெளிய போயிட றேன்" அவள் நிதனமாகச் சொல்லிவிட்டு தன் கைப் பையிலிருந்து புதிதாக வாங்கி வந்த அல்லது பிடித்து வந்த ஸர்ப்பக் குட்டியொன்றை கையிலெடுத்துக் கொஞ்சிய படியே அறைக்குள் சென்றுவிட்டாள். நாக்கைத் துழாவியபடி உடலை நெளிக்கிற சாமர்த்தியம் அதற்கு மட்டும் எப்படி வாய்த்ததோ என்று நினைக்கிற போது வியப்பாக இருந்தது அம்மாவுக்கு.

அன்று தம்பி திண்டில் கிடந்த பழைய சாமான்களுக்கு மத்தியில் தன் ரப்பர் பந்தை தேடிக் கொண்டிருந்தவன் தற் செயலாக குளியலறை ஜன்னலைப் பார்த்தபோது உமா ஒரு பிராவில் ஸர்ப்பக் குட்டிகளைப் போட்டுக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள். அவள் உடலில் ஊர்ந்து நெளி கிற ஸர்ப்பங்கள் எல்லாம் ஏதோ அவளுடைய பிம்பத் தைப் போலவே ஆயாசமின்றி ஊர்ந்து கொண்டிருந்தன. தம்பிக்கு பயத்தில் தொண்டை அடைத்து வீங்கிவிட்டி ருந்தது. இறங்கி ஓடி வந்தவனுக்கு அதன் பிறகு இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சல் கண்டது.

தூக்கத்தில் ஸர்ப்பங்கள் அவனைத் துரத்துவது போல கனவு கண்டு புலம்பத் துவங்கிவிட்டிருந்தான். இதற்கும் மேல் பொறுக்க முடியாதென வாசுகி அக்கா அம்மாவை நச்சரிக்கத் துவங்கிவிட்டாள். அக்கா சிணுங்கி அழு வதைப் பார்க்கும் போதெல்லாம் அம்மாவிற்குக் கவலை யாகத்தான் இருந்தது. ஆனால் என்ன சொல்லி சித்தியை வெளியேற்றுவதெனத் தெரியவில்லை. இரண்டு நாட் கள் போயிருக்கும். வீட்டில் நடப்பவற்றையெல்லாம் உமா தானே உணரத் துவங்கிவிட்டிருந்தாள். அவள் எப்போதுமே தயார்தான், முகவரியற்ற ஒரு பயணியைப் போல் சென்று கொண்டே இருக்க. இந்த உறவுகள் அவளை விரும்பாததைப் போலவே அவளும் இந்த உறவுகளை விரும்பவில்லை.

"நான் கௌம்பறேங்க்கா. எந்துணி மணில பாதிய மட்டும் எடுத்திருக்கேன். மத்தத எல்லாம் வாசுகிட்ட குடுத்திடு.." என்று சொல்லிவிட்டு தம் கைப்பையிலிருந்த சிறிய நகைப்பெட்டியொன்றை எடுத்து அம்மாவிடம் கொடுத்தாள். 'இத வெச்சிக்க. வாசுகிக்கின்னு நான் சேத்தது. அவ கல்யாணத்துக்குப் போட்டுடு. இனிமே எந்த நல்லது கெட்டதுக்கும் என்ன எதிர்பார்க்காத...' என்று சொல்லிவிட்டு கடமை முடிந்து துறவறம் அடைந்தவளைப் போல் அவள் செல்வதைப் பார்க்க அம்மாவிற்கு கண்களில் நீர் சுரந்தது.

சிலநாட்கள் போய்விட்டிருந்தது. யாரும் அவளுடைய அறைக்குள் போகவில்லை. ஏதோ நினைவு வந்தவளாய் வாசுகி அந்த அறையை சுத்தம் செய்வதற்காகத் திறந்தாள். இத்தனை நாட்கள் அடைத்துக் கிடந்தும் கூட ஓர் வசீகரம் நிறைந்திருப்பதைப் போன்றே இருந்தது. எல்லாவற்றி லும் படிந்த தூசியைத் தட்டி சுத்தம் செய்தார்கள். நீண்ட நேரத்திற்குப் பிறகு சீற்றத்தோடு காற்று வெளிப்படும் சப்தம் கேட்டது. முன்பு உமா இருந்தபோது கேட்ட அதே சப்தம். சுற்றிலும் பார்த்தனர் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உமாவின் ஆடைகளிலிருந்த குட்டி ஸர்ப்பம் ஒன்று தலையை மட்டும் தூக்கிப் பார்த்தது. மெல்லிய பயம் இருந்தபோதும் ஒரு ஆர்வத்தில் வாசுகி அதன் வாலை மென்மையாய்ப் பிடித்துத் தூக்கினாள். ஒரு குழந்தையைப் போல் நெளிந்து கொண்டிருந்த ஸர்ப்பக் குட்டியைப் பார்த்தபோது சித்தியின் மேல் இருவருக்குமே நேசம் பிறந்தது பிரவகமாய்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com