Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007


நான் நாம் அவர்கள்
தன்மை படர்க்கை நிலைகளினூடான ஒரு ஊடாட்டம்

- குட்டி ரேவதி

இக்கட்டுரையை ‘நான்’ என்ற தன்மை ஒருமை நிலையிலிருந்து வாசிப்பதினும், அவர்கள் என்ற படர்க்கை வெளியின் முன்னே ‘நாம்’ என்ற தன்மை பன்மையைக் கட்டமைத்து வாசிப்பதே மிகப் பொருந்தும். ‘அவர்கள்’, அதிகாரத்தைச் சுவைக்க சாதியத்தை உத்தியாகக் கொண்ட ஆண்களாயிருக்கலாம் அல்லது பெண்களாயிருக்கலாம். பெண்ணிய அரசியலை விவாதிக்கும் களத்திலெல்லாம், சாதியத்தைத் தமது அதிகாரத்திற்கும் இருப்பிற்கும் ஒரு வெளியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பெண்டிரை விடுவித்துவிட்டு வாதிப்பது முறையன்று. இதைப் பேச, இப்பெண்கள் இலக்கியச் சந்திப்பையும் இது விரித்துக்கொடுக்கும் வெளியையும் ஒரு சாக்காக எடுத்துக் கொள்கிறேன். ஏனெனில் இத்தகைய ஒரு பெண்கள்சந்திப்பைத் தமிழ் இலக்கிய உலகம் அனுபவிப்பதில்கூட பல தடைகளும் அச்சுறுத்தல்களும் உண்டு.

நாம், பெண்கள், ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள விரும்பும் கருத்துகளை எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடிவதற்கான முக்கியக் காரணி அவற்றின் நுட்ப வேறுபாடுகள் ‘குறியீடுகளால்’ ஆனவை என்பதே. நாம் அவர்களை ஆண்களாகப் பார்க்கிறோம். அவர்களோ நம்மைப் பெண்களைப்போலவே நடத்துகிறார்கள்.

ஏனெனில் நமது ஞானம் எல்லாம் மனிதப் பாலியலை, பாலியல்உறவைப் புரிந்து கொள்வதிலிருந்தே நாம் பெறுவது. நம்மைப் போன்ற பெண்களின் பின்னணியோடும் வலிகளோடும் களிப்புகளோடும்தாம் நம்மை வரையறுத்துக்கொள்ள முடிகிறது; தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் அவர்களின் முகக்குறிப்புகளும் சொற்கோர்வைகளும் எதிர்ப்புவடிவங்களும்தாம் நிகழ் அரசியலைத் தெளிவுபடுத்துகின்றன; அர்த்தப்படுத்துகின்றன.

இங்கு இன்னும் இன்னும் ‘இயங்கும்’ ‘பாலியல் அதிகாரங்களை’ அவற்றின் அடுக்குமுறையில் சாதி யத்தை விவாதிக்க முடியுமாவெனத் தெரியவில்லை. மேல்சாதிப் பெண்கள் கோரிய விடுதலை இயக்கம், சாதிஅதிகாரத்தின் துணைகொண்டு மேல்சாதி ஆண்கள் என்ன செய்தார்களோ, செய்கிறார்களோ, அதையே தாங்களும் செய்ய விரும்புவதற்கான அல்லது அதையே கோருவதற்கான விடுதலையை வேண்டும் போராட்டமே. இப்போராட்டத்தில், போராட்ட நோக்கத்தில் ‘விடுதலை’ என்று ஏதும் இல்லை. சமத்துவத்திற்கான நெம்புகோல்கள்தாம் இயங்குகின்றன. விடுதலைவேறு; சமத்துவம் வேறு.

ஒரு சாதிஅதிகாரமிக்க பெண், அடுக்குமுறையின் எந்தப் படிநிலையில் இருந்தாலும், சாதிய அதிகாரமற்ற ஒரு பெண்ணின் மீது தனக்கு அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே முடியும். ஏனெனில் அவர்களுக்கு சாதிய அதிகாரமற்ற பெண்களின் மீதான ஒடுக்குமுறையைக் களைவதைவிட வேலைகள் நிறைய இருக்கின்றன. அவர்களுக்கு அளிக்கப்பட்ட சாதிய அதிகாரத்தை தாம் அறிந்த அத்தனை சூழ்ச்சித்திறன்கள் வழியாகப் பேணுதலும், நிலைநாட்டலும் இன்னும்இன்னும் பல உத்திகள் வழியாக அதைப் பலப்படுத்துதலும் அவர்களுக்கு மிக மிக அவசியமானவை. அவர்களின் அக்கறையையும் பாராட்டுதலையும்கூட நமக்கு இருக்கும் சொற்ப அதிகாரத்தையும் அல்லது அதிகாரமின்மையையும் கட்டுப்படுத்தும் இரும்புக்கைகளாகவே நான் பார்க்கிறேன்.

ஆகவேதான், அவர்களால் நம்மைத் தொடவே இயலவில்லை, புறவயமாகவும் அகவயமாகவும். எல்லாச் சாதிய அதிகாரமிக்க ஆண்களையும் இப்பெண்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். ஆக, மேல் சாதி அதிகாரப் பாலியல்தத்துவத்தின் கௌரவமும் மேட்டிமையும் களங்கப்படாமல் காப்பாற்றப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு பாலியல் தொழிலின் செயல்படுதலுக்கு நிகரான இயங்கியல்தான் இங்கும் செயல்படுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஓர் ஆணின் அதிகாரப் பலமும் கௌரவமுமே அச்சமூகப் பெண்ணினுடையது மாகக் கருதப்படுகிறது. இறுதியாக, தாழ்த்தப்பட்ட சமூகப்பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்கு அவளே காரணம் என்றும் கூறுவார்கள்.

மேல்சாதிப் பெண்கள் உருவாக்கிய இயக்கப் போராட்டங்களையும் தத்துவத்தையும் அவதானித்துப் பாருங்கள். மார்க்ஸியத்தைக்கூட உள்வாங்கிக் கொள்ளாத, அதன் கூர்மையை மழுங்கடித்த, அதன் சித்தாந் தத்தை நமதுமண்ணின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் பொருத்திப்பார்க்காத ஒரு தவளைக்கூச்சலாகத்தான் அவர்களின் தத்துவம் வெளிப்படும். ஒரு மேல்சாதி ஆணின் சாதிய அதிகாரத்தையும் அதற்கான சமத்துவத்தை மட்டுமே வேண்டும் பெண்ணியப் போராட்டத்திற்கு நாம் ஏன் துணைபோக வேண்டும்? அத்தகைய பெண்ணிய இயக்கங்களிலிருந்தும் போராட்டங்களிலிருந்தும் அரசியலிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்வதுதான் முதன்மையான நமது போராட்ட உத்தியாக இருக்க முடியும்.

ஏனெனில், மேற்சொன்ன போராட்டம், ஒரு பொழுதும் பெண்களை இணைக்கப் போவதேயில்லை. மேலும் சாதியபேதத்துடனான ஒரு பெண்ணிய அரசியல் நிலைப்பாடோ, தத்துவமோ செல்லரித்தவையாகவே இருக்கமுடியும். நம்மை, அதன் அரசியலைத் தொடவிடாத தூரத்தில் வைத்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் பெண் சமத்துவத்தைக் கோரும் போராட்ட இயக்கங்கள் மீது அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இருப்பதில்லை. மாறாக, சாதியத்தின் வழி இயங்கும் பாலியல்அரசியலையோ பாலியல் பேதத்தை நிலை நிறுத்தும் காரணியாக சாதியத்தை அடையாளம் காட்டும் போதோ அவர்களுக்கு நம்மீது அளவிலாத சந்தேகம் எழுகிறது. ஆக, அவர்களின் போராட்ட நோக்கங்கள் எல்லாம் தந்திரங்களை விளையாடும் சுதந்திரமும், விட்டேத்தியான பாலியல் இச்சைகளைச் சுகிப்பதன் வழி, உடலை மீண்டும் மீண்டும் சாதியஅதிகாரம் தோய்ந்த விஷ அம்பாக்குவதும்தாம். சொற்கவர்ச்சியும் மேடைச்செயல்பாடும் உடையவர்கள் நமது விடுதலைக்கான நெடுஞ்சாலையைத் திறந்து வைப்பார்கள் என்ற நம்பிக்கை கண்மூடித்தனமானது; அது ஒரு மூட நம்பிக்கையே. நாம் முன்வைக்கும் அரசியல் இதுவன்று.

நமது எல்லாச் செயல்பாடுகளும் கலை, இலக்கியம், அரசியல் எல்லாமும் அவர்களை அச்சுறுத்துகின்றன. ஆகவேதான், இன்னும் இன்னும் நம்மைக் காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள், அன்றையநாட் களைப்போலவே. நமது பாவங்களைப் பற்றிய உணர்வு அவர்களிடம் அச்சமாய் உருவெடுத்திருக்கிறது. ஓர் ஆய்வாளரிடம் ‘எதிர்அதிகாரம் என்று உருவாவதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு’ என்று கூறியதும், ‘அதிகாரத்தை எதிர்ப்பதும் ஏன் அதிகாரம் என்பதாகவே இருக்கவேண்டும்’ என்று கேட்டார். ஆக அவர்கள் கைகளில் இயங்கும்வரை அதிகாரம் என்பது நல்ல குணாம்சங்களில் ஒன்றாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் தமது அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ளுகையில் மட்டும் அது தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் அவர்களின் அதிகாரத்தை அவ்வாறு தவறானதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் அந்த அதிகாரம் அவர்களுடையது. இன்னொரு அதிகாரப்பகுதிக்கு அவர்கள் சலுகை அளிக்கக் கூடுமேயன்றி, இன்னொரு அதிகாரத் தொகைக்கும் மையத்திற்கும் உரிமை உண்டு என்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயல்வதில்லை. மேலும், ‘எதிர் அதிகார மையத்தில்’ அவர்கள் விலக்கப்படுவதாக உணர்வதன் எதிரொலியே இது. அடிப்படையிலேயே ‘அதிகாரம்’ என்ற ஓர் ஆயுதத்தை நாம் விரும்புவதில்லை என்ற தகுதியே போதுமானது, அதைப் பெறுவதற்கான அத்தனைப் போராட்டங்களையும் தொடங்க.

நமது விடுதலை என்பது சாதிய ஒடுக்குமுறை நம்மீது பாய்ந்த வரலாற்றின் முதல்-கடைசி பக்கங்களோடு முடிந்துவிடுவதில்லை. மாறாக அதையும் புறம்தள்ளி ஓர் ஆழமான பண்பாட்டு வரலாற்றையும், அதுசார்ந்த வளமான வாழ்வையும் கொண்டது. நம்மக்களின் வரலாறு இந்தப்பூமியின் வரலாற்றைக் குறிப்பது. ஆகவே தான், நமது இருப்பைப் பூமியின் வரலாற்றோடு இணைத்துப் பார்க்கச் சகியாது, அவர்களின் ஒடுக்குமுறை வரலாற்றோடு அடையாளப்படுத்தும் உத்தியைக் கையாளுகிறார்கள். ஆனால், நம்மை ஒடுக்கும் அவர்களின் பண்பாட்டு அடையாளங்களோடு நம்மால் ஒருபொழுதும் அடையாளப் படுத்திக்கொள்ள முடிவதில்லை.

ஏன் அவர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள் என்ப தைவிட ஏன் அடிமைப்படுத்தப்பட்டோம் என்ற கேள்வி குடைகிறது நம்மை. யார் இந்த ஒடுக்குமுறையை செயல்படுத்தியது என்பதைவிட, இந்த ஒடுக்குமுறை நிறுத்தப் படவேண்டும் என்பதே நமது வாதம். ஆனால் பாலியம் வழியாகத் திணிக்கப்படும் சாதியத்திற்குள் நான் அடங்குவதில்லை. ஆகவே நான் விடுதலையாகிறேன். ஏனெனில் அது உங்களை வீட்டுக்குள் அடக்குகிறது. நகரத்துக்குள் திணிக்கிறது. நாட்டின் சனாதனப்பேழைக்குள் ஒரு வராக்குகிறது. அவர்கள் மீதெல்லாம் நாம் அதிகாரத்தை, கட்டுப்பாட்டை, ஆதிக்கத்தைச் செலுத்த முடியவில்லை யெனினும் அவர்கள் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு இருக்கவேண்டிய அவசியமில்லை.

இம்மண்ணில் ஒவ்வொருவரின் பிறப்பும் ஒரு தற்செயலான நிகழ்வாய், விபத்தாய், தன்னை அடையாளம் காணும் நேரிடையானதொரு வழியாய் இல்லையெனில் அந்தப் பிறப்பில் வேறு எந்த அர்த்தமுமில்லை. ஏனெனில் பிறப்பை, இடத்தை, காலத்தை, பாலிமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பிறப்பதில்லை எவரும். அது ஒரு நேர்மையான அடையாளமில்லாத பட்சத்தில் அதைக் காரணம்காட்டி ஒருவர் தனது அதிகாரத்தைக் கட்டமைப்பதும், மற்றவரை ஒடுக்குவதும், தன் மீதான அடிமைத்தனத்தை ஏற்பதும், தனது உரிமையை மறுப்பதிலும் எந்த நியாயமுமில்லை. ஓர் ஆணாக இருப்பதற்கா கவே அதிகாரத்தைச் சுகிக்கும் அனுமதியை அவருக்கு அளிக்கமுடியாது. அவ்வாறே மேல்சாதியில் பிறந்து விட்டதற்காகவும்.

எப்பொழுதுமே வரலாற்றின் தரவுகளோடும் வரலாற்றறிஞர்களோடும் போராடிக்கொண்டிருக்க முடியாது. இன்றைய நிகழ்காலச் சம்பவங்களை, குழப்பங்களை, தவறான நடவடிக்கைகளை, மனப்பான்மைகளை மாற்ற வேண்டியிருக்கிறது. இத்தகைய வரலாற்றைத்தான் நாம் எழுதவேண்டியிருக்கிறது, எல்லா படைப்பாளியும். மாறாக, ஒரு அருட்போதகரைப் போன்று ‘இதனால் அறியப்படும் நீதியாதெனில்’ என நீதிகளைப் படைப்புகளில் விற்கமுடியாது. ஏனெனில், அதிகாரத்தை எந்த விலைக்கும் வாங்கும் அவர்களின் விதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை நமது நீதிகள்.

நாம் எல்லாச் சாதியதிகாரமிக்க சமூகத்திற்கும் பதிலிறுக் கப்போகிறோம். அவர்கள் விதிகளை அனுப்பும் போதெல்லாம் நாம் விடைகளை அனுப்பிக்கொண்டே யிருப்போம். சாதியம் என்பது ஆராய்ச்சிக்கு உரிய பொருள் மட்டுமேயன்று, முடிந்துபோவதற்கு. ஏனெ னில் சாதியத்திற்கு எதிரான போராட்டம் சென்ற நூற்றாண்டில் தொடங்கியதும் அன்று. ஆசீவகம் இருந்த காலந்தொட்டே இந்துமதத்தைப் பலவகைகளில் எதிர்க்கவும் தோற்கடிக்கவும் வேண்டிஇருந்தது. கடந்த நூற் றாண்டில் தமது அதிகாரத்தை அதிகப்படுத்திக் கொண்ட மற்ற சாதிப்படிநிலைகளில் இருந்தவர்கள்கூட சாதியின் அடையாளத்தோடுதான், அதன் வழியாகத்தான் தங்களின் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முடிந்தது. ஆகவே, நான் முதல் தலைமுறையன்று, ‘ஒடுக்கு முறை சரியன்று’ என வெறுமனே வார்த்தைகளால் எதிர்த்துப் போராட..

நமது உடல்களால் எதிர்க்க வேண்டியிருக் கிறது. ஏனெனில் எல்லா ஒடுக்குமுறைகளும் நமது உடல்வழியாகவே நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. கொடுமையான நினைவுகளைச் சேகரிக்க முடியாத இடமாக அல்லது சேகரிக்கவேண்டிய இடமாக உடல் மாறியிருக்கிறது. அவை உடலைக் குறுக்கவேண்டிய தருணங்களைப் பற்றியதாகவும், அவை பற்றிய ஞாபகங்களாகவும் இருக்கின்றன. உடலரசியலை எழுதும் போதும் சுயம் முற்றிலும் விடுபட்டதைப்போன்று உடலரசியல் அவதானிக்கப்படுகிறது.

நான் இந்த வரிசையில், விடுதலைக்கான போராட்டத்தை அதன் எல்லாத் தளங்களிலும், திசைகளிலும் எழுதத் துணியும் முதல் பெண் அல்ல; கடைசிப் பெண்ணும் அல்ல. எனது காலத்தில், நான் கடக்க வேண்டிய காலத்தில் எழுதிவைத்துக்கொள்கிறேன். மற்ற சாதிய விமர்சகர்களால் ஒடுக்கப்பட்ட இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

ஏனெனில், அவர்களின் சாதி தந்த சங்கப்பலகையில் அமர்ந்துகொண்டு, அதன் அரிய ணையை ஏற்றுக்கொண்டே அது தந்த அதிகாரத்தில்தாம் மற்றவர்களின் படைப்புகளை விமர்சிக்கத் துணிகிறார்கள். ஆகவே அவர்களால் ஒடுக்கப்பட்ட பெண்களின் படைப்புகளை, படைப்பாக்கப் பணியைப் புரிந்து கொள்ளவும் உள்வாங்கவும் இயலாது.

அவர்களுடைய திறனைக் கற்பனை செய்து படைப்ப தற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

வாழ்க்கையை விதிகளால் வரையறுத்துவிட்டவனுக்கு அவ்விதியை மீறிய அனுபவங்களோ, அற்புதங்களோ நிகழப்போவதே யில்லை. ஆனால் எப்போதும் நமக்கு விதிகளை முறித்துப்போட வேண்டியிருக்கிறது. ஆகவே, நமது திறனை நாம் விதிகளை மீறும் நிகழ்வுகளால் படைப்புகளை உருவாக்கப் பயன்படுத்துகிறோம்.

ஒடுக்கப்பட்ட பெண்படைப்பாளிகள் எப்போதும் போராடவேண்டியிருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள்தாம் எழுதவேண்டியிருக்கிறது. ஏனெனில் அதிகாரத்தைச் சுவைப்பவர்களுக்கு எழுத ஏதுமில்லை. அவர்கள் எல்லா வகையிலும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். வாழ்க் கையில் அன்றாடநடைமுறை அல்லது உருவாக்கம் குறித்த பாதுகாப்பின்மை அவர்களை வாட்டுவதற்கான வாய்ப்பே இல்லை.

எப்பொழுதும், ஆண்-பெண் என்று பாலியல்பேதத்தின் கீழ் மட்டுமே பேசப்பட்டுவந்த பெண்ணியப் பிரச்சனைகள் எனக்கு மிகவும் அலுப்பூட்டுகின்றன. பிரச்சனை அந்த வடிவத்தில் வெளிப்படுகிறதேயன்றி நமது அடிப்படையான செயல்பாடுகள் ஏதும் அங்கிருந்து எழுவது இல்லை. சாதியின் வடிகால் மட்டுமே ஆண்_பெண் பேதப்படுத்துதல் வழியாக நிகழ்கிறது. அவர்களைப்போலவே நானும் எதிர்வினையாற்ற முடியாது. என்னையும் அவ்வாறே எதிர்வினையாற்றப் பயிற்றுவித்துக்கொள்ள முடியாது.

அவர்கள் சொல்லும் காரணங்களையும் ஆதாரங்களையும் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் என்னால் அந்தக் காரணங்களையும் ஆதாரங்களையும் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஏனெனில் நான் வேறு காரணங்களோடும் ஆதாரங்களோடும் வருகிறேன். எனக்கான அல்லது நான் அடையாளப்படுத்தும் பிரச்சனைகள் எல்லாம் அவர்களுக்குச் சம்பந்தமில்லாததாக, அவர்களால் புரிந்துகொள்ள முடியாதாக இருக்கிறது.

படைப்பாளிகள் தமது நினைவுகளையும் அனுபவங்களையுமே எழுதுவதில்லை. மாறாக மனித மாண்பின் மீதான தமது கரிசனத்தையே பதிவுசெய்கின்றனர். அணுமின் உலை அல்லது சேதுசமுத்திரத் திட்டம் அல்லது பிரபஞ்சப் பரப்பில் நிகழும் எந்தப் பிரச்சனையாயிருந்தாலும், அறிவியல், தொழில்நுட்பப் பிரச்சனையாயிருந்தாலும், அது மனிதவாழ்வினோடு பொருந்துகிறதா, மனிதமாண்பின் விழுமியத்திற்கு ருசி கூட்டுகிறதா என்ற உறவுநிலையைக் கண்டறியவே எழுத்து.

ஓர் இலட்சியப்பூர்வமான நோக்கத்தை அரூபமாக மனோவெளியில் எழுப்பிக்கொண்டு அதைச் சென்றுசேர்வதற்கான பயணத்தை எண்ணும்போது அந்நோக்கம் அன்றே நிறைவேறிய ஒன்றாகிவிடுகிறது. மீண்டும் நாளைய பயணம் சுழிநிலையிலிருந்தே தொடங்குகிறது. நமது எழுதப்பட்ட புத்தகங்களின் அளவிற்கே சிறந்தவராக இருக்கமுடியும் என்ற நிலையில் நாம் இன்னும் நிறைய பரிமாறிக்கொள்ள ஊக்கம் பெறவேண்டும் என்றோ ஒரு படைப்பாளி தன்னை முன்னிறுத்த உருவாக்கிய சிந்தனையிலேயே இன்றும் ஊறிப்போய் அதையே மோகிப்பது, கடவுளின் உலகத்தில் நாம் ஏதும் செய்யவேண்டியதில்லை என்ற அசட்டுத்தனத்தையே குறிக்கிறது.

தனது உடலை நிர்வாணப்படுத்துதல் என்பது கருத்துகளை அன்றாடம் புதுப்பித்தல் வழியாகத்தான் நிகழும். ஆக, மீண்டும் மீண்டும் தோலுரித்துப் புறப்பட வேண்டியிருக்கிறது, ஆணாதிக்கமிக்க சாதியத்தெருவில். சாதியம் ஊறிய சிந்தனை உடைய பெண்ணையும் ஆணாதிக்கமுடையவளாகவே கருதவேண்டும்.

நிர்ப்பந்திக்கப்பட்ட வார்த்தைகளின் கோடுகளிலிருந்து சாதியத்தால் உரிமை மறுக்கப்பட்ட பெண்கள் வெளியேறவேண்டும். நாம் நமது அனுபவங்களை எழுதிஎழுதி சாதியத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் பலப்படுத்திக்கொண்டேயிருக்கிறோம். இது சாதியதிகாரமிக்கப் பெண்களுக்கு நம்மை விமர்சிக்கவும் பாராட்டவும் அக்கறைகாட்டவும் வசதியாக இருக்கிறது. ஏனெனில் நமது அனுபவங்கள் என்பவையெல்லாம் நம் மீது வரையறுக்கப்பட்ட, நிர்ப்பந்திக்கப்பட்ட சாதியக் கட்டுமானங்களால் எழுந்தவைதாமே.

தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நம்மை அகதிகளாக வைத்திருக்கிறது. நாம் அகதிகளாக இருப்பதை ஒவ்வொரு தருணத்திலும் தனிமையிலும் உணர்ந்திருப்போம். ஆனால் அதுவே நமது பலமாகவும் ஞானமாகவும் வெளிப்படுகிறது. இந்தப் பலமும் ஞானமும் அதிகாரமயமானது. இலக்கியத்தைப் படைக்க அனுமதிக்கப்படாத ஒரு சமூகமும், படிக்க அனுமதிக்கப்படாத ஒரு சமூகமும் புத்தாய்வு செய்யும் வாய்ப்பையும் நுகர்வதில்லை.

கவிதை, வடிவத்தை மட்டுமே முன்வைத்துக் கற்பிக்கப்படக்கூடாது. உள்ளடக்கத்தையும் கருத்தில்கொண்டே கற்பிக்கப்பட வேண்டும். தமிழ் நவீனக்கவிதையின் பொற்காலம் என்பது ஏதேனும் ஒரு கவிஞரின் சிறந்த கவிதைகள் வழியாக மட்டுமே நிகழ்ந்து விடமுடியாது என நம்புகிறேன். வெவ்வேறு கருத்துகளை முன்வைக்கும் வெவ்வேறு கவிஞர்கள் வழியாகவும் அது நிகழவேண்டும். நாம் என்ன சிந்திக்க வேண்டுமென்று போதிக்க எவரும் தேவையில்லை. மாறாக நாம் எதைச் சிந்திக்க விரும்புகிறோமோ, அதையே சிந்திக்க ஊக்குவிப்பவர்களே வேண்டும்.

அன்று வாய்மொழிப்பதிவுகளின் வழியாகக் குறிப்பிட்ட வார்த்தைகளின் வழியாக மனக்காட்சியைப் பதிவுசெய்வதன் வழி, நாம் இவ்வளவு தொலைவு மொழியின் வழி பயணப்பட்டிருக்கிறோம். ஆகவே, அடுத்துவரும் பெண் அவ்விடத்திலிருந்து தொடங்கி வேறொரு எல்லையை நோக்கி நகரமுடியும். ஒவ்வொரு தலைமுறையும் புதிதாகப் பழைய ஆரம்பப் புள்ளியிலிருந்தே மனிதவாழ்க்கையை, நாகரிகத்தைத் தொடங்கும் அவசியமில்லை.

கலை என்பது கலைக்காகவோ அல்லது வெறும் அழகியல் அனுபவத்திற்காகவோ மட்டும் என்று நினைப்பவர்கள் சிந்திப்பதை மறுப்பவர்கள். சிந்திக்கத் தொடங்கிவிட்டால், சிந்தனை கட்டறுந்த விடுதலையைக் கோருகிறது.

அடிமைத்தனத்தில் உழன்று கொண்டிருக்கும் மனிதன் நுகரும் விடுதலையுணர்வும் கலையின் மகத்துவமும் ஒன்றேயானது.

இந்நிலையில் நினைவூட்டுதலும் நினைவுகளைப் பதிவுசெய்தலும் நினைவூட்டிக் கொள்ளுதலும் நமக்கு மிகவும் முக்கியமானதாகிறது. ஏனெனில் இப்படித்தான் தனித்த வரலாற்றை உருவாக்க முடியும். இது அவரவருடைய சுயநேர்மையையும் பண்புமாறாமல் அதில் நிலைத்து நிற்பதையும் கோருகிறது. ஒரு நூலின் இடத்தை, எழுத்தின் தகுதியை வேறெதுவும் எடுத்துக்கொள்ள முடியாது, புரட்சிக்காகவும் சீர்திருத்தத்திற்காகவும் மாற்றத்திற்காகவும் ஒரு பதிலீடாகவும் ஒரு போருக்காகவும்.

நாம் நமதை உரிமை கொண்டாட வேண்டியிருக்கிறது. அபகரித்ததை அல்ல. மாறாக நாம் உருவாக்குவதை, நமது சிந்தனையை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com