Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007


குஜராத்: சோதனைச்சாலையல்ல தொழிற்சாலை

- கவின்மலர்

கலைஞர்களை மதிக்காத சமூகமோ, இயக்கமோ எதுவாயினும் சிறந்து விளங்க முடியாது. சமூகத்தை உள்வாங்கி கலையின் மூலம்- அது இசையோ நாடகமோ சிற்பமோ ஓவியமோ நாட்டியமோ எதுவாயினும் அதன் மூலம் வெளிப் படுத்தும் கலைஞர்கள் சுதந்திரமாக சிந்தித்தால் மட்டுமே சிறந்த படைப்புகள் வெளிவரும். மாறாக, விலங்கு பூட்ட நினைக்கும் சமூகம் தன்னைத்தானே கூண்டில் அடைத்துக் கொள்ளும் அல்லது அடைக்கப்படும்.

இலக்கணத்தை மீறுபவனே கலைஞன். மீறல்களை ஏற்க மறுப்பவர்கள் மதவெறிப் போர்வைக்குள் பதுங்கிக் கொள்கின்றனர். இந்த மதவாதிகளின் தாக்குதலுக்கு சமீபகாலமாக உள்ளாகி வருகிறது கலைத்துறை. சல்மான் ருஷ்டி, எம்.எப். ஹ¤சேன், அமீர்கான், தீபா மேத்தா, மீராநாயர், ஷில்பா ஷெட்டி -இப்படி பட்டியல் நீள்கிறது. நடிகர் மம்முட்டி குஜராத்தை சுட்டிக்காட்டினால் சங்பரிவார் கும்பல் கேரளாவில் கொடும்பாவி கொளுத்துகிறது. காங்கிரசும் இதற்கு உடந்தை.

இதே கேரளத்தில் இன்னொரு சம்பவம். கோட்டயம் மாவட்டம் சங்களச்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் நான்கு மாணவர்களை தற்காலிகமாக நீக்கியது. ஓரினச் சேர்க்கை சமூகத்தில் நடப்பதை பிரதிபலிக்கும் ‘Secret minds’ என்ற 5நிமிட குறும்படத்தை அவர்கள் உருவாக்கியது தவறாம். நான்கு மாணவர் களில் ஒருவர் படத்தயாரிப்பாளர், இன்னொருவர் இயக்குநர், மற்ற இருவரும் நடித்தவர்கள். இயக்குநர் ஜோ பேபி, எம்.ஏ. (சினிமா மற்றும் தொலைக்காட்சி) இறுதியாண்டு மாணவர். “நான் என்ன இங்கே நடக்காததையா சொல்லி விட்டேன்?” என ஆதங்கப்படுகிறார். இவரது முந்தைய படங்கள் ‘பொண்ணு’- டீன்ஏஜ் பருவத்திலேயே கர்ப்பமாவது பற்றியது, ‘God’s own country’-பிச்சையெடுப்பது பற்றியது. இவை இரண்டுமே மாணவர்களுக்கான படவிழாவில் விருதுகள் பெற்றவை.

‘Secret minds’ வசனமற்ற, இசை மட்டுமே கொண்டது. ஒரு திரைப்பட நிறுவனம் நடத்தும் படவிழாவிற்காக சமர்ப்பிக்கப்பட்ட போதுதான் கல்லூரி நிர்வாகம் இக்குறும் படம் பற்றித் தெரிந்து உடனே அது தொடர்பான மாண வர்களை தற்காலிக நீக்கம் செய்துள்ளது. கலைத்திறன் கொண்ட தம் மாணவர்களுக்கெதிராய் திரும்புபவர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றி துணை நிற்கவேண்டிய கல்வி நிறுவனமே இப்படி அதிரடி நடவடிக்கையில் இறங்கியதைக் கண்டு அம்மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களே இல்லையா என்ன? நடப்பவைகளை சொல்லாமல் இருந்தால் அவையெல்லாம் இல்லை என்றாகிவிடுமா?

இதற்கு நேர்மாறானது குஜராத். அங்கே கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள் தங்கள் மாணவனுக்கு துணை நிற்க, பல்கலைக்கழக நிர்வாகம் சங்பரிவார் கும்பலுக்கு துணை போனது. குஜராத்தின் மஹாராஜா சாயாஜிராவ் (எம்.எஸ்) பல்கலைக்கழகம் வடோதராவில் உள்ளது. ஆந்திராவின் தச்சர் குடும்பத்தில் பிறந்த சந்திரமோகன் அங்குதான் நுண்கலைத்துறையில் முதுகலை பயில்கிறார்.

இனி...
மே 9, 2007

காலை. எம்.எஸ். பல்கலைக்கழக மாணவர்கள் உற்சாகத்துடன் தங்கள் கலைப்படைப்புகளை பார்வைக்கு வைத்துவிட்டு பரபரப்புடன் வளைய வருகிறார்கள். ஆசிரியர்கள் படைப்புகளை மதிப்பிட்டுக் கொண்டே வருகிறார்கள். தேர்வும், மதிப்பீடும் நடந்து கொண்டிருக்கின்றன.

மாலை 3.30 மணி. நீரஜ் ஜெயின் (உள்ளூர் பாஜக பிரமுகர்) தலைமையில் ஒரு கும்பல் நுண்கலைத்துறைக்குள் நுழைகிறது. செய்தியாளர்களும் அந்த கும்பலோடு வருகிறார்கள். கும்பலால் அழைக்கப்பட்ட காவல்துறையினர் இரண்டே நிமிடத்தில் அங்கே வந்தடைகிறார்கள். ஆனால் அதற்கும் முன்னமேயே சந்திரமோகனை தாக்கி விடுகின்றனர். பல்கலைக்கழக அனுமதியோ, துறைத் தலைவர் சிவாஜி பணிக்கரின் அனுமதியோ பெறாமல், முதல் தகவல் அறிக்கையோ (எப்.ஐ.ஆர்) கைது வாரண்டோ இல்லாமலேயே சந்திரமோகனையும், அவரது நண்பர் வெங்கட் ராவையும் காவல்நிலையம் இழுத்துச் செல்கிறார்கள் காவல்துறையினர்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க சிவாஜி பணிக்கரையும், ஆசிரியர்களையும் மாணவர்களையும் கேவலமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததோடு சுதந்திரமாக மிரட்டவும் ஆரம்பிக்கிறது நீரஜ் ஜெயின் தலைமையிலான குண்டர் கும்பல். சிவாஜி பணிக்கர் துணைவேந்தருக்கும் உயரதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தும் அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித உதவியும் வரவில்லை. எந்த உயரதிகாரியும் துறைக்கு வரவேயில்லை. துறை சார்ந்த ஒரு நிகழ்வில் நடந்த இந்த மோசமான குறுக் கீட்டை இரக்கமற்ற தன்மையுடனும் பல்கலைக்கழகம் அணுகியது விந்தைதான்.

சர்ச்சைக்குரிய ஐந்து ஓவியங்களை சீல் வைக்க உத்தர விடுகிறார் காவல் உதவி ஆணையர் டி.ஆர்.பாரிமர்.

நீரஜ் ஜெயின் கும்பல் அந்த ஓவியங்களை கிழித்து சேதப் படுத்துகிறது. மாணவர்கள் காவல்துறை ஆணையருக்கு புகார் மனு தயாரிக்கின்றனர். பல்கலைக்கழக சார்பதி வாளர் அம்மனுவை சாயாஜி கன்ஜ் காவல்நிலையத்தில் அளிக்கச் சொல்கிறார். காவல்துறையினர் புகாரை பதிவு செய்ய மறுக்கின்றனர். பிறகு பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கை போடாமல் விடுகின்றனர். புகாரை வைத்து எப்.ஐ.ஆர். போடுவதற்கு காவல்துறை ஆணையரோடு பேச்சுவார்த்தை நடக்கிறது. துறைத்தலைவர் சிவாஜி பணிக்கரிடமும் வாக்குமூலம் வாங்குகின்றனர். நள்ளிரவில் சந்திரமோகனுக்கெதிரான எப்.ஐ.ஆர். சட்டப்பிரிவு 153ஏவின் கீழ் பதிவு செய்யப்படுகிறது. மாணவர்கள் அளித்த புகார் கிடப்பில் போடப்படுகிறது. சமூக நீதிக்கான மையம் (Centre for Social Justice) இப் பிரச்னையை கையாள ஒரு வழக்கறிஞரை நியமிக்கிறது.

மே 10, 2007 காலை 10.30 மணிக்கு சந்திரமோகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். கூடவே மாணவர்கள் சார்பில் ஒரு பிரதிநிதியும், வழக்கறிஞரும் சந்திரமோகனுக்கு ஜாமீன் வாங்க வருகிறார்கள். வி.எச்.பி.யின் பெரும் கும்பல் வேறு அங்கே வந்து, சந்திரமோகன் மீது முட்டி மோதி அச்சுறுத்துகிறது. எனவே நீதிபதி அவரை பரோடா மத்திய சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிடுகிறார். காவல் துறை நீதிமன்றத்தில் எப்.ஐ.ஆர். சமர்ப்பித்தபோது இரு புது சட்டப்பிரிவுகள் 293ஏ, 293பி சேர்க்கப்பட்டிருக்கின்றன. 3.30 மணிவரை வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது. மீண்டும் வி.எச்.பி. கும்பலின் அத்துமீறலால் மறுநாள் மதியம் 2.30 மணிக்கு வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது. மறுநாளோ நீதிபதி வரவில்லை. தொடர்ந்து வரும் அடுத் தடுத்த நாட்கள் சனி-ஞாயிறாக இருப்பதால் மேலும் இரு நாட்களுக்கு சந்திரமோகன் ரிமாண்ட் செய்யப்படுகிறார்.

மாணவர்களும், ஆசிரியர்களும் துணைவேந்தரை அணுகி இரண்டு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கின்றனர்.

1.தேர்வினை இடையூறு செய்ததற்காக நீரஜ் ஜெயின் மீது எப்.ஐ.ஆர். தாக்கல் செய்யும் வகையில் பல்கலைக் கழகம் புகாரளிக்க வேண்டும். 2. சந்திரமோகனுக்கு அனைத்து சட்ட உதவிகளையும் செய்யவேண்டும்.

கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு பதிலாக மாணவர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களின் உணர்வுகளை புண் படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என துணைவேந்தர் நிர்பந்திக்கிறார். தவறு செய்யாத போது மன்னிப்பு கோரப்போவதில்லை என உறுதியுடன் புறக்கணிக்கின்றனர் ஆசிரியர்களும் மாணவர்களும்.

மாலைவரை பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து ஒரு உதவியுமில்லை. வேண்டுமானால் துறைத்தலைவர் சிவாஜி பணிக்கர் தனது சொந்தமுறையில் புகார் தாக்கல் செய்ய லாம். பல்கலைக்கழகம் சார்பாக அல்ல என்கிறார் துணை வேந்தர். இதுவும் நிராகரிக்கப்படுகிறது. பல்கலைக்கழ கம் சார்பாக நீரஜ் ஜெயினுக்கெதிராக எந்தவொரு நட வடிக்கையையும் எடுப்பது என்ற விஷயத்தில் துணைவேந்தரின் குரல் மிக விநோதமாகவே ஒலிக்கிறது.

மே 11, 2007

இந்திய, மேற்கத்திய ஓவியங்களில் பாலியல் சித்தரிப்பு தொடர்பான ஓவியக் கண்காட்சிக்குத் திட்டமிடப்பட்டு மாணவர்களால் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மதியம் 3 மணியளவில் கண்காட்சி தயாராக இருக்கிறது. பலர் வந்து பார்வை யிட்டு செல்கின்றனர். நிலைமை மிகவும் மோசமாகவும் பரபரப்பாகவும் மாற ஆசிரியர்கள் மட்டும் வளாகத்தை விட்டு வெளியேறலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் செய்தியாளர்களில் ஒருபகுதியினர் அதற்கு அனு மதிக்கவில்லை. ஆகவே ஆசிரியர்கள் கலை-வரலாறு துறையின் உள்ளே நுழைந்து கதவை தாழிட்டுக் கொள்கின்றனர். துணைப்பதிவாளர் 4 மணிக்கு வந்து கண் காட்சியை மூடச்சொல்லி வேண்டுகோள் விடுக்கிறார். “அமைதியான முறையில் மாணவர்கள் தம் எதிர்ப்பை ஓவியங்கள் மூலம் காண்பிக்கிறார்கள். இது அவர்கள் முடிவு. இதை நான் மூட முடியாது” என மறுக்கிறார் சிவாஜி பணிக்கர். கண்காட்சியை மூட எழுத்துவழி உத்தரவு துறைத்தலைவருக்கும் பிற ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் கண்காட்சி தொடர்கிறது.

பிறகு முன்னாள் துணைவேந்தர் பல்கலைக்கழக சிண்டி கேட் உறுப்பினர்கள் சிலரோடு வந்து, சிவாஜி பணிக்கரை கண்காட்சியை மூடச்சொல்லி முதலில் வேண்டுகோள் விடுத்து பின்னர் கட்டளையிடுகின்றனர். பணிக்கர் தங்க ளுக்கு வளைந்து கொடுக்கமாட்டார் என உறுதியான பின் கண்காட்சி பலவந்தமாக இழுத்து மூடப்படுகிறது. “எத்தனையோ முறை கோரியும் இதுவரை எவ்வித உதவி யும் மாணவர்களுக்குக் கிடைக்காதபோது பல்கலைக் கழக நிர்வாகத்தின் எந்த செயலுக்கான நோக்கமும் நல்ல தாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்? ஆகவே நான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கே துணைநிற்பேன்” என்கிறார் பணிக்கர். கண்காட்சி மூடப்பட்டு விடுகிறது. இப்போது கண்காட்சியைப் பார்க்க வந்த பாஜகவினர் சிலரின் நடவடிக்கையும் பேச்சும் காது கூசும்படி அமைந்திருக்கிறது. எந்த அளவிற்கென்றால் சில ஆசிரியைகளை நோக்கி “நாங்கள் உங்கள் நிர்வாண ஓவியங்களை இந்த சுவற்றில் பார்க்க விரும்புகிறோம்!” என்று சொல்லும் அளவிற்கு.

இரவு 10 மணிக்கு சிவாஜி பணிக்கரின் இல்லத்தின் வாசலில் தற்காலிக பதவி நீக்க அறிவிப்பு ஒட்டப்படுகிறது. நீக்கத்திற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்பட வில்லை. உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி மஹேஸ்வரி என்ற மற்றொரு துறையின் தலைவர் நுண்கலைத் துறைக்கு பொறுப்பாக்கப்பட்டிருக்கிறார். (ஆசிரியர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து பல்கலைக் கழகத்திற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.)

மே 12, 2007

மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தியா முழுவதிலும் கலைஞர்கள் வெவ்வேறு வடிவங்களில் மதவெறிக்கு எதிர்ப்பைத் தெரிவித்து, கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்குகின்றனர்....

அதேசமயம், பரோடாவில் விசுவ இந்து பரிஷத்தோடு சேர்ந்து கிறித்துவ பாதிரிகளும் எதிர்ப்பு நடவடிக்கை களில் இறங்கினர். உருப்படியான காரணங்களுக்காக இருதுருவங்கள் ஒன்று சேர்ந்தால் பாராட்டலாம். இங்கே இவர்கள் ஒன்று சேர்ந்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அல்லவா? சிலுவையையும், இயேசுவையும் அவமானப்படுத்திவிட்டதாம் ஓவியம். சிவனும் பார்வதியும் அணைத்தபடி இருக்கும் ஓவியம் இந்துக் கடவுளர்களை இழிவுபடுத்திவிட்டதாம். இவர்கள் கஜூராஹோ கோயில் சிற்பங்களைப் பார்த்தேயில்லையா? அஜந்தா ஓவியங்களைப் பார்த்ததில்லையா? இவ்வளவு ஏன்? வாத்ஸாயனரின் காமசூத்திரத்தை கிழித்தெறிந்தா விட்டார்கள்?

ஒரு மாணவன் வரைந்த ஒரு ஓவியத்தால் அவமானப்படும் அளவுக்கு சக்தி குறைந்தவையா சிலுவையும், இயேசுவும், இந்து மதக் கடவுளர்களும்? இட்டுக்கட்டிய புராணம் சொல்கிறதே சிவனுக்கும் பார்வதிக்கும் இரண்டு பிள்ளைகள் இருந்ததாக! அவர்கள் என்ன டெஸ்ட் டியூப் முறையிலா முருகனையும், விநாயகனையும் பெற்றார்கள்? முருகனை அங்கம் அங்கமாக வர்ணிக்கும் கந்தசஷ்டி கவசத்தின் பொருள் தெரியாமலேயே பாடிக்கொண்டு திரிபவர்கள் இவர்கள். இவர்கள் விரும்பிப் பார்க்கிற திரைப்படங்களில்தான் எத்தனை ஆபாசக் குப்பைகள் வருகின்றன. அவற்றுக்கெல்லாம் எதிராகப் போராடினார்களா? இல்லையே! கலாச்சாரப் பாதுகாவலர்கள் என்று தங்களைத் தாங்களே பறை சாற்றிக் கொண்டு செய்யும் அபத்தங்களும், அத்துமீறல்களும் எல்லையற்றுப் போய்விட்டன.

திரைப்பட ஆபாசக் குப்பைகளை விட்டுவிட்டு பெரியார் திரைப் படத்தின் ஒரு நாத்திகப் பாடலுக்கு தடை கேட்டு நீதிமன்றம் போகின்றனர். இவர்கள் குஜராத் கலவரங்களின் போது எத்தனை இஸ்லாமியப் பெண்களை வன் புணர்ச்சிக்குள்ளாக்கினர்? அந்தக் காட்சிகளையெல்லம் விடவா இந்த ஓவியங்கள் ஆபாசமாகப் போய்விட்டன? மைக்கேல் ஏஞ்சலோவின் ‘டேவிட்’ ஓவியத்தின் முன் நிற்கும் ஒருவனுக்கு அவனுடைய ஆண்குறி மட்டுமே தெரிந்தால், அது வரைந்த மைக்கேல் ஏஞ்சலோவின் குற்றமல்ல. பார்ப்பவர் கண்களில் இருக்கிறது குற்றம்.

***

பல்கலைக்கழக வளாகத்திற்குள் சந்திரமோகன் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது வெளியாட்களுக்கு எப்படித் தெரியும்? ஆக உள்ளேயே ஏதோ ஒரு கறுப்பு ஆடு இந்த ஓவியங்கள் பற்றி சங்பரிவார் கும்பலுக்கு தகவல் அனுப்பித்தானே அவர்கள் வந்திருப்பார்கள். பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக நடைபெறும் Internal Assessment தேர்விற்காக நடத்தப்படும் கண் காட்சியைப் பற்றி வெளியே தகவல் கொடுத்த புல்லுருவியையும், தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்ய வேண்டிய காவல்துறை சந்திரமோகனை கைது செய்து சிறையிலடைத்தது. நடப்பது நரேந்திர மோடியின் ஆட்சியல்லவா? காட்சிகள் இப்படித்தான் இருக்கும்.

காவல்துறை கண்காணிப்பில் இருந்த சந்திரமோகனுக்காக, துறை ஆசிரியர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தி னரை சந்தித்து சட்ட உதவி வேண்டினர். நிர்வாகமோ சந்திரமோகனும், நுண்கலைத்துறையும் நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றது. இதைத் தொடர்ந்து மாணவர்களும், ஆசிரியர்களும் அவசரக் கூட்டம் நடத்தி உள்ளூர் விஎச்பி குண்டர்களின் மீதும் பாஜகவின் நீரஜ் ஜெயின் மீதும் பல்கலைக்கழகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்க மிட்டனர்.

நடந்ததோ அதற்கு நேர்மாறாக! துணை வேந்தர் மனோஜ் சோனி, நீரஜ் ஜெயினை வெற்றிலை பாக்கு வைக்காத குறையாக வரவேற்று நடந்தவற்றிற்கு வருத்தமும் தெரிவித்தார். நுண்கலைத் துறைத்தலைவர் சிவாஜி பணிக்கர் “பொதுமக்களுக்காக நடத்தப்படாத, பாடத்திட்டத்திற்காக நடத்தப்படும் ஒரு கண்காட்சியில் அந்நியர்கள் எப்படி நுழையலாம்?” என்று கேள்வி எழுப்புகிறார். துணைவேந்தரோ இன்றுவரை பதில் கூற மறுக்கிறார். மாணவனின் கருத்து சுதந்திரத்திற்காக அவரோடு தோள்கொடுத்த சிவாஜி பணிக்கர் மீது அடுத்த குறி பாய, அவர் தலைமறைவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சந்திரமோகன் மீது 153, 114, 295ஏ, 295பி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. அவரை ஜாமீனிலும் விடவில்லை. 295ஏ- மதவுணர்வை புண்படுத்தியதற்காக, 153பி- தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதற்காக.

இந்த கல்லூரி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உயர்ந்த படைப்பாற்றலுக்கும், தரத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் பேர்போனது. 50களில் இதன் முதல் துணைவேந்தராக இருந்த வரன்ஸா மேத்தாவிலிருந்து 80களில் இருந்த பிக்கு பரேக் வரை கொள்கைகளுக்காக துணைநின்றனர். இப்போதைய நிகழ்வுகளை உற்று நோக்கினால் அரும் பாடுபட்டு முன்னோர்களால் கட்டிக் காப்பாற்றப்பட்ட பெருமையை காற்றில் பறக்கவிட்டுள்ளது நிர்வாகம் என்பது விளங்கும்.

நிர்வாகம் அழைக்காமல் காவல்துறை கல்வி நிறுவனத் திற்குள் வரக்கூடாது என்கிறது சட்டம். காவல்துறையோ “சில அசாதாரண சூழ்நிலைமைகளில் யாரும் அழைக்காமலேயே நாங்கள் வரலாம்” என்கின்றது. அங்கே அமைதியாக நடந்திருக்க வேண்டிய தேர்வினை குலைத்து அசாதாரண சூழலை உருவாக்கிய சங்பரிவார் கும்பலையல்லவா கைது செய்திருக்க வேண்டும்? அதை விடுத்து ஓவியம் வரைந்த மாணவனை அல்லவா கைது செய்திருக்கிறது? மோடியின் காவல் துறை ஆணையர் தாக்கூரோ “மாணவர்களோ ஆசிரியர்களோ நீரஜ் ஜெயின் மீது புகார் தர முயலவில்லை. யாரும் தாக்கப்படவில்லை. சந்திர மோகனின் ஓவியங்கள் ஆபாசமாக இருந்ததால் கைது செய்தோம். ஆனால் துன்புறுத்தவில்லை. மோசமாக நடத்தவில்லை” என்றார்.

ஆனால் மாணவர்களும் ஆசிரியர்களும் கையெழுத்திட்டு அவருக்கு அனுப்பிய புகார் மனுவின் நகலை ஊடகங்களுக்கும் அனுப்பி, அதில் வெளியாகிவிட ஆணையரின் புளுகுமூட்டை அவிழ்ந்துபோனது. பல்கலைக்கழக தேர்வை குலைத்தது வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, சந்திரமோகனை தாக்கியது, குண்டர்களை உசுப்பேற்றி பல்கலைக்கழக சொத்துக்களை சேதப்படுத்த தூண்டியது ஆகிய குற்றங்களுக்காக நீரஜ் ஜெயின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.

***
சமீபகாலம் வரை சிவாஜி பணிக்கர் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இச்சம்பவத்திற்குப் பின் அவர் வாழ்க்கை நேர்மாறாக மாறிவிட்டது. இந்திய சிற்பக்கலை, ஓவியக்கலை பற்றிய அவரது நூல்கள் மிக முக்கியமானவை. உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது வசிக்கும் அவருடைய பழைய மாணவர்கள் அவருக்கு நேர்ந்த கதியைப் பார்த்து அதிர்ந்துபோய் ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர். கல்வித்துறை மற்றும் கலைத்துறையின் போராட்டச் சின்னமாக அவர் தற்போது அறியப்படுகிறார். பஜ்ரங்தள் குறிவைத்துள்ள தால் அவர் தலைமறைவாய் இருக்க வேண்டியதாயிற்று. 06.07.2007 அன்று பள்ளிக் குழந்தைகளின் தேசிய ஓவியக் கண்காட்சியைத் தொடங்கிவைக்க ஆமதாபாத் வந்த பணிக்கரையும் அவரது ஓட்டுநரையும் கடுமையாக தாக்கிய சங்பரிவார் வெறியர்கள் அவரது காரையும் சேதப் படுத்தியுள்ளனர். ( தி இந்து 07.07.07)

தனது மாணவன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர் கூறியது: “இது ஒரு தனிமனிதனின் பிரச்னை அல்ல. கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் சுதந்திரம் தொடர்பான மிக இன்றியமையாத பிரச்னை இது. தன்னாட்சியையும், சுதந்திரத்தையும் யாரோ பறித்துக் கொண்டு போய்விட நாங்கள் அனுமதிக்க முடியாது.”

அவர் தனிமனிதரல்ல. குஜராத்தின் அறிவு ஜீவிகள் என கூறிக் கொள்பவர்கள் பழமைவாதிகளாய் இருப்பதையும், கல்வி காவியமாக்கப்படுவதையும் எதிர்க்கும் பல கல்வியாளர்கள் அவருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

“பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டு அமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.க்கு மிக மிக விசுவாசமாக இருக்கின்றனர். இங்கே அறிவு வறுமை காணப்படுகிறது.

விவேகம் குறைந்து வருகிறது” என்கிறார் நூலாசிரியர் மற்றும் சமூகவியலாளரான அக்யூட் யாக்னிக். “இலக்கிய அமைப்பான குஜராத்தி சாகித்திய பரிஷத் 2002ம் ஆண்டு கலவரங்களின் போதும், சூ•பி கவிஞரான வலிகுஜராத்தியின் கல்லறை போன்ற கலாச்சார சின்னங்கள் தகர்க்கப்பட்டபோதும் அமைதி காத்தே இருந்தது. வகுப்புவாதத்திற்கெதிராக கணேஷ் டேவி பேசியபோது அவரை புறக்கணித்தது அந்த அமைப்பு. குஜராத்தின் ஊடகங்கள் கூட இந்துத்துவா விற்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. ஆகவே அறிவுத் துறையில் எல்லா முனைகளிலும் வெற்றிடமே உள்ளது. இங்கு விவாதங்களே இல்லை” என்கிறார்.

“குஜராத்தில் சகிப்புத்தன்மையின்மையும் இந்துமத வெறியும் கூடுதலாக இருக்கின்றன. காந்தியை குஜராத் மக்கள் மறந்துவிட்டனர். பொருளாசை கொண்டவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் மாறிவிட்டனர்” என்று டெஹல்காவுக்கு அளித்த பேட்டியில் குறிப் பிட்டார் என்பதற்காக டேவியை அவர் சார்ந்துள்ள குஜராத்தி சாகித்ய பரிஷத் அமைப்பினரே அவரை “குஜராத்தின் எதிரி” என்றழைத்து தேஜ்கட்டில் அவரது நிறுவனத்தில் நடக்கவிருந்த அமைப்பின் மாநாட்டை வேறு இடத்திற்கு மாற்றினர். “அவர்கள் எப்போது என்னை புறக்கணிக்கின்றனரோ அப்போது நான் கூறியவை உண்மை என்று நிரூபிக்கின்றனர். பரிஷத்தின் தலைவர் மாரடைப்பால் காலமானபோது செய்தித்தாள்களில் அவரது மரணத்திற்கு நான்தான் காரணம் என செய்திகள் வந்தன.

இதுபற்றி அமைப்பின் குமார் பால் தேசாயிடம் விசாரித்தபோது கருத்து கூற மறுத்து விட் டார். மாநிலத்தில் நடப்பவை சுத்த பைத்தியக்காரத் தனமாகவும், அச்சமூட்டுபவையாகவும் உள்ளன. நான் மாநிலத்தில் எல்லோரையும் குறை சொல்லவில்லை. பொதுவாக இருக்கும் நிலைமையைக் கூறுகிறேன். என்னை ஆதரிக்கவும் இங்கே சிலர் உள்ளனர். ஆனால் பரந்து நோக்கினால் நிலைமை அச்சமூட்டுவதாக இருக்கி றது. யாவரும் சொல்வதுபோல் குஜராத், இந்துத்துவா சோதனைச்சாலை அல்ல. இது இந்துத்வா தொழிற் சாலை,” என்கிறார் டேவி.

வடோதரா குஜராத்தின் கலாச்சார தலைநகரம் என பெயர் பெற்றது. அதன் மணிமகுடமாய் நிகழ்ந்து வந்தது எம்.எஸ். பல்கலைக்கழகம். வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து நிறைய மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக, வெளிநாட்டு மாணவர் களுக்கான சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது.

“என் மாணவப் பருவம் பலநாட்டு மாணவர்களுடனான அறிமுகத்தில் தொடங்கி, அவர்களோடு வாழ்ந்து, மிகச் சிறப்பானதாக இருந்தது. ஆனால் நான் பல்கலைக்கழகத்திலிருந்து படிப்பை முடித்து வெளியேறும் சமயம் வெளி நாட்டு மாணவர்களுக்குத் தடைவந்தது. பொதுவாக ஒரு காரணமில்லாத வெறுப்பு அம்மாணவர்கள் மீது பலருக்கு இருந்தது. அவர்களால் உள்ளூர் மாணவர்கள் சேர்க்கை இடங்களை இழக்கிறார்கள் என்ற உணர்வோடும் சகிப்புத்தன்மையில்லாமலும் இங்கு பலருள்ளனர்,” என்கிறார் பழைய மாணவர் ஒருவர்.

80களில் பரிவாரத்தின் பல்வேறு கிளைகள் மாநிலத்தில் ஆக்டோபஸ் கரங்களை நீட்டிப் பரவின. இன்று வேலைகளைக் காட்ட சங்பரிவாரம் அன்றே தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்திருக்கிறது. குஜராத்தில் மிகக் குறைந்த பல்கலைக்கழகங்களே உள்ளன. “பல்கலைக் கழகங்களுக்கு காவிமயமானவர்களால் பெருத்த ஆபத்து விளைவிக்கப்பட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் தொடர்புள் ளோர் என்ற ஒரே காரணத்திற்காக உயர் பதவிகளில் தகுதியற்றோர் நியமிக்கப்படுகின்றனர். அதனால் தரம் கெடுகிறது. ஆர்.எஸ்.எஸ். தனக்குப் பிடிக்காத எதையும் காலில் போட்டு மிதிக்கவே முயலும். சில ஆசிரியர்கள் குறிப்புணர்ந்து பாதுகாப்பாக வளைந்து கொடுத்து நடந்து கொள்கின்றனர்,” என்கிறார் கலவரங்களின் போது இரு முறை தாக்கப்பட்ட சமூக ஆர்வலரும் இயற்பியலாளருமான கே. பந்துக்வாலா.

வகுப்புவாதத்திற்கெதிரான சுவரொட்டிகளைத் தயாரித் ததற்காக 1990களின் ஆரம்பத்திலேயே எம்.எஸ். பல் கலைக்கழகத்தின் மிகச்சிறந்த ஓவியர் குலாம் முகமது ஷேக், தனது சகாக்களாலேயே எதிர்க்கப்பட்டு பணியை விட்டு விலகிக் கொண்டார். “அவர் சென்றது ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு- எங்கள் துறைக்கு” என்கிறார் பணிக்கர். “நிலைமை இப்படியே தொடர்ந்தால் எங்கள் பாடத்திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியான நிர்வாண ஓவியங்கள் வரைதல் என்பதையே நீக்கச் சொல்வார்கள். நாங்கள் அதற்கு எப்படி ஒத்துக்கொள்ள முடியும்,?” என்கிறார்.

எம்.எஸ். பல்கலைக்கழகம் மிகச் சுதந்திரமானதாக ஒரு காலத்தில் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக காவிமய மாக்கப்பட்டு இன்று விஎச்பி செலவில் வளாகத்திலேயே பூஜைகள் நடத்தப்படுகிறது. பாஜக மாணவர் அணியினர் மாணவிகளுக்கு இந்திய உடையையே அணியவேண்டும் என கட்டளையிடுகிறார்கள்.

“2002ம் ஆண்டின் படுகொலைகளுக்கெதிராக குரல் கொடுத்த எந்த ஒரு ஆசிரியருக்கும் பதவி உயர்வு இது வரை அளிக்கப்படவில்லை. தற்போது கூட உயர்ந்த தகுதிகளைக் கொண்ட ஒரு ஆசிரியருக்கு பேராசிரியர் பதவி மறுக்கப்பட்டது. இதுபோன்று அடிக்கடி நிகழும்,” என்கிறார் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர். வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் மதவெறி எப்படியெல்லாம் புகுத்தப்படுகிறது என்பதை ஆராய்ந்த ஒரு ஆசிரியைக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டு அவரும் பணியிலிருந்து விலகிவிட்டார்.

“சிறையிலடைக்கப்பட்ட தங்கள் மாணவனை மீட்க பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டபோதும் அமைதி காத்தது. நான் இன்றே பணிவிலகல் கடிதம் கொடுத்துவிட்டு விலகிப்போய் விடலாம் ஆனால் இந்த கல்வி நிறுவனத்திற்கு நாளை என்ன நடக்கும்?” _என்று வினவுகிறார் பணிக்கர்.

சந்திரமோகன் ஸ்ரீலமன்துலா மட்டுமே இந்த ஆண்டு லலித்கலா தேசிய அகடமி விருது பெற்ற மாணவர். ஆந்திர மாநிலம் மதனப்பள்ளிக்கு அருகே உள்ள முலுகு கிராமத்தில் தச்சர் குடும்பத்தில் பிறந்தவர். 2004-05ல் ஜே.என்.டி.யு கல்லூரியில் நுண்கலை பயின்று முதுகலைக்காக இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவரோடு இளங்கலை பயின்ற ஆத்ரஸ் பாஜி சம்பவம் நடந்த அன்று சந்திரமோகனோடு இருந்திருக்கிறார். “நான் எதை ஓவியமாக்க வேண்டும் என நினைத்தேனோ அதை வரைந்தேன். அவ்வளவுதான்.”- சந்திரமோகன் தன் ஓவியம் சிதைக்கப்படுவதற்கு முன் கூறியவார்த்தைகள் இவை.

அவர் இளங்கலை பயின்ற கல்லூரியில் அவரை மிகவும் அமைதியானவர் என்கின்றனர். “அவர் இங்கே பயிலும் போது இப்படியெல்லாம் வரையவேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தியதேயில்லை. இங்கே மாணவர்கள் கொடுக்கப்படும் கருத்தை மையமாக வைத்தே வரைய வேண்டும். ஆனால் முதுகலை பயில்கையில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த அதிக சுதந்திரம் கிடைக்கிறது” என்கிறார் சந்திரமோகனின் பேராசிரியர் ஒருவர்.

சந்திரமோகன் தனது ஓவியங்களுக்காகவும், கண்காட்சிக்காகவும் பெருந்தொகை செலவிட்டுள்ளார். இவ்வளவு விலைகொடுத்து அவர் பெற்றது சங்பரிவாரத்தின் அடி உதைகளும் 21 வழக்குகளும் 6 நாள் சிறை வாசமும்தான்.

தன் மகனை சிறையிலடைத்ததையோ, நாடு முழுவதும் இந்தப் பிரச்சனை பெரிதாக பேசப்படுவதையோ எதையும் அறியாமல் சந்திரமோகனின் பெற்றோர் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தரும் செய்தி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com