Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007


பெரிய அக்காக்களும் ‘பிற’-ராக்கப்பட்ட தங்கைகளும் - இஸ்லாமிய பெண்ணியம் குறித்து சில கருத்துக்கள்.

ஜமாலன்

பின் நவீணத்துவம் மற்றும் மார்க்சிய பார்வையில் இஸ்லாமை புரிந்துகொள்ள முயலும் ஹெச். ஜி. ரசூலின் ‘இஸ்லாமிய பெண்ணியம்’-என்கிற அறிமுக நூலை வாசித்தபோது இந்நூலைவிடவும் இஸ்லாம் குறித்து இவர் எழுதியுள்ள திண்ணை.காம் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக தோன்றியது. இவரும் எச். பீர்முஹமது என்பவரும் இஸ்லாம் குறித்து தமிழில் எழுதுபவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். காரணம் கடந்த 15-ஆண்டுகளாக இஸ்லாம் குறித்து எனக்குள் ஏற்பட்ட மனப்பதிவுகளை அவை பிரதிபலித்ததுதான். இஸ்லாமியர்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ளும் அடிப்படையான 2 விஷயங்கள் எனக்குள், எப்பொழுதும் சந்தேகம் என்கிற பனிமூட்டத்திற்குள் ஆதாரமற்று அலைந்து கொண்டிருந்தபோது அவற்றிற்கு சில ஆதாரங்களை நிலை நாட்டியது அக்கட்டுரைகள்.

இஸ்லாம் எனக்குத் தெரிந்து, இந்த ‘எனக்குத் தெரிந்து’ என்பது முக்கியமானது, எல்லா மதங்களையும்போல பலருக்கும் தெரிந்த இஸ்லாம் பல மாதிரிகளில் உண்டு ஆணால், சமீப காலங்களில் இந்தியாவில் ‘தௌகீது’-என்கிற ஓரிறைக் கொள்கை (ஓரமைவாக்க இஸ்லாம்) குறித்து மிக அதிகமான உரையாடல்களும் நடைமுறைகளும் தொடங்கியிருக்கும் வேளையில் இந்நூலும் அவரது கட்டுரைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

தௌகீது அதாவது ஓரமைவாக்க இஸ்லாம், ‘இஸ்லாமிய மறுமலர்ச்சி’-என்ற பெயரில் உருவாக்கிக் கொண்டிருக்கும் தன்னிலைகளை புரிந்துகொள்ள இச்சம்பவம் உதவும். எனது நண்பரான ஒரு தௌகீதுவாதியிடம் ஒருமுறை சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றிய இஸ்லாமிய பார்வைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர்கூறிய புதிய கருத்தாக்கம் என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. இஸ்லாமின் ‘ஜகாத்’ எனப்படும் ஏழைவரி முறையாக வசூலித்து விநியோகித்தல் மற்றும் வட்டியை ஒழிப்பதன் மூலம் இந்த ஏற்றத்தாழ்வு ஒரு காலத்தில் ஒழிந்துவிடும் என்றார். 1400 ஆண்டுகளாக இஸ்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த நாடுகளிலும், இஸ்லாம் தோன்றிய சவுதி அரேபியாவிலும் இவை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் இந்த ஏற்றத்தாழ்வு ஒழியவில்லை என்று சுட்டிக்காட்டினேன்.

உடனே வழக்கமான மதவாதிகளின்; மதில்மேல் ஏறி நின்றுக்கொண்டு ஏழை பணக்காரன் வேறுபாடு இறைவனின் நாட்டம் அதாவது ‘நசீப்’, அதை மாற்ற முடியாது என்றார். இந்திய விதிவாதத்தின் மற்றொரு வடிவம்தான் இஸ்லாமிய ‘நசீப்’-என்கிற கருத்தாக்கம். இன்று பணக்காரனாக இருப்பவன் தனது கடுமையான உழைப்பின் மூலம் பணக்காரனாக இருக்கிறான். அதனை காப்பாற்றிக் கொள்ளாத அவனது தலைமுறை சோம்பேறியாக இருந்தால் அத்தலைமுறை ஏழையாக இருந்துவிடும். ஓவ்வொரு தலைமுறையும் ஒரு காலத்தில் பணக்காரனாக இருந்து வந்ததுதான். ஏழையாக இருப்பவர்கள் சோம்பேறிகளாக இருந்துவிட்ட அவரது முந்தைய தலைமுறையினரின் விளைவு என்றார்.

அதாவது ஆற்றல்மாறாக் கோட்பாட்டைப்போல, இது ஒருவகை பொருள்மாறாக் கோட்பாட்டை விளக்குவதுபோல இருந்தது. அவரிடம் மூலதனம் அதன் திரட்சி உபரி மதிப்பு என்று விளக்கப்புகும் முயற்சி முட்டையில் மயிர் பிடுங்கும் வேலை என்பதுடன் அதை கேட்கும் நிலமையோ அவருக்கில்லை. கருத்தியல், உலகை தலைகீழாக பிரதிபலிக்கிறது என்று மார்க்ஸ் தனது ‘ஜெர்மானிய கருத்தியலி’-ல் எழுதினார். மதம் ஒரு கருத்தியல் என்ற வகையில் யதார்த்ததில் நிலவும் பொருளியல் முரண்களை தலைவிதி என்கிற கருத்தியலுக்குள் தலைகீழாக பிரதிபலித்துக் கொண்டிருந்ததைதான் அவரது விவாதத்தில் காணமுடிந்தது.

நிற்க, மீண்டும் இஸ்லாமியர்களின் இரண்டு நம்பிக்கைகள் அல்லது ஈமானிற்கு வருவோம். 1. இறுதிதூதரான முகமது நபி; படிப்பறிவற்றவர். 2.; குர்ஆன் அல்லாவினால் இறக்கப்பட்ட திருமறை, அது இந்நாள்வரை மாறாமல் அப்படீயே இருக்கிறது. ஒரு சிறு குற்றமோ முரண்பாடோ அதில் காணமுடியாது. இவ்விரண்டிலும் சந்தேகம் கொள்வது மதக் குற்றமாகும். இஸ்லாம் என்கிற பேரமைப்பே இவ்விரண்டின் மேல்தான் கட்டமைக்கப் பட்டுள்ளது. இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. முதல் கருத்துடன் உறவு கொண்டதே இரண்டாம் கருத்து அல்லது முதல் கருத்துதான் இரண்டாம் கருத்தின் அடிப்படை. இதனை இவரது கட்டுரைகள் நுட்பமாக விவாதிக்கின்றன என்ற வகையில் இச்சிறு நூலை விடவும் அவை முக்கியமாக நூலாக்கம் பெற்று வெளிக் கொணரப்படவேண்டும். இதனை இங்கு குறிக்க காரணம் பாலைவனத்தின் கடும் வெயிலில் பயணப்பட ஒரு சகப்பயணியைக் கண்ட சந்தோஷம்தான்.

வேதங்கள், பைபிள் அல்லது யூத புணித மறைகள் குறித்து இந்த உண்மைத்துவ சந்தேகங்கள் எழுப்பப்படுவதில்லை. இவை குர்ஆனை நோக்கி மட்டுமே எழுப்பப் படுகின்றது என்பது மேலைத்தேய-கீழைத்தேய அரசியல் வேறுபாடுகள் சார்ந்தது. இஸ்லாமும் குர்ஆனும் அதன் மதத்தன்மையை தாண்டி, இன்று, அரசியல் வடிவம் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. பிற மதங்கள் ஆன்மீக வாழ்வை நேரடியாகவும் அரசியல் வாழ்வை மறைமுகமாகவும் பேசுகின்றன. இஸ்லாம் ஆன்மீக வாழ்வைவிட அரசியல் வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் தருவதும் இதற்கு ஒரு காரணம். இவை விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது என்று சொல்லி மேற்செல்வோம்.

இஸ்லாமிய பெண்ணியம் இன்று உலக அளவில் பல இஸ்லாமிய பெண் அறிவுஜீவிகளால் ஒரு இயக்கமாக முன் எடுக்கப்பட்ட போதிலும் இத்தலைப்பில் நமக்கு ஒரு முரண்பாடு உண்டு. அது பொதுவாக மதங்கள் குறித்த நமது கண்ணோட்டத்திலிருந்து வருவதால், அதனை இங்கு தெளிவுபடுத்திக் கொள்வோம்.

மதம் என்பது பெண்ணை ஒடுக்குவதற்கான ஒரு எந்திரம். எல்லா சமூகங்களிலும் அடிப்படை அலகாக இயங்கிக் கொண்டிருக்கும் குடும்பம் என்கிற அமைப்பு தனிச்சொத்தின் தோற்றத்துடன் உருவாகுகிறது. குடும்பங்களுக்கு முன்பு மதங்கள் என்கிற நிறுவனம்; சாத்தியமில்லை, மந்திரம் என்கிற சடங்குகள் மட்டுமே சாத்தியம். குடும்பங்களின் உருவாக்கத்துடன் மதங்களின் ஆதிநிலை வடிவங்களான சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஒழுங்குப் படுத்தப்படுகின்றன.

இக்குடும்பம் என்கிற அமைப்பு பெண்ணை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது தனிச்சொத்தை காப்பதற்கான வாரிசைப் பெற்றுத்தரவும், அதன் உரிமையை நிர்ணயிப்பதற்கும் பெண் என்பவள் குடும்ப அமைப்பின் மையத்தில் அமர்த்தப்பட்டுள்ளாள். பெண் மணைவியாகவும், தாயாயகவும் மாற்றப்படாத ஒரு சமூக அமைப்பு குடும்பமற்ற நாடோடி சமூகமாகத்தான் இருக்கமுடியும். அச்சமூகம் இன்றைய மையப்படுத்தப்பட்ட முதலாளித்துவ நிரந்தர உற்பத்திமுறை என்கிற மறைவியக்க (Abstract) உற்பத்தி முiறையைக் கொண்டிருக்காது.

நவீன சமூகங்களின் இத்தகைய உற்பத்திமுறை நிலவுவதற்கான உற்பத்திச் சக்திகளின் மறு உற்பத்திக்கான தொழிற்கூடங்களாக இயங்குவதே குடும்ப அமைப்புகளின் முக்கிய பணியாகும். இக்குடும்ப அமைப்பு சமூக பொருளுற்பத்தியை நுகர்வதற்கும்;, இவ்வுற்பத்தி அமைப்பை காப்பதற்குமானதாக இருக்கிறது. குடும்பம் என்கிற இத்தொழிற்கூடத்தின் மைய எந்திரமாக பெண் உருமாற்றப்படுகிறாள். இந்நுட்பமான எந்திரத்தை கட்டிக் காப்பதற்கான கண்காணிப்பு தொழில் நுட்பமாக உருவானதே மதங்கள். எனவேதான் எல்லா மதங்களது அறவியல்களும் ஆடையாக பெண் உடல் மீது போர்த்தப்பட்டுள்ளது. இவ் ஆடையை உதறிய நிர்வாண பெண் உடல் எல்லா மதங்களுக்கும் எதிரான கலகமாகிவிடும் என்பதால் அவ்வுடலை மூடிப்பாதுகாப்பதற்கான அறக்கோட்பாடுகளின் காப்புறுதிப் பத்திரங்களாகவே புணித மறைகள் வடித்து வைக்கப்பட்டுள்ளன.

மதங்கள் வர்க்கங்களின் குரலை பிரதிபலிப்பதில்லை, மாறாக வர்க்க உறவுகளை காப்பாற்றிக் கொண்டிருக்கும் உற்பத்தி நிலைமைகளைக் கட்டிக்காக்கும் குடும்ப அமைப்புகளின் குரலாகவே ஒலிக்கிறது. மதங்களின் மயிர்பிளக்கும் தத்துவங்கள் நல்ல சமூகங்களைவிட நன்னெறிமிக்க குடும்ப உரிமைகளைப்பற்றியே அதிகம் பேசுவதைக் காணலாம். இதுவே மதங்களை காலத்தை தாண்டி இன்றும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இவை தனது கண்காணிப்பு வலையை உலகெங்;கிலும் விரித்து வைத்துள்ளன. ஓவ்வொரு தனிமனிதனின் ரகசிய செயலைக்கூட கண்காணிப்பதான ஓரு ஆழ்மன அமைப்பை உருவாக்கி உள்ளன.

ஓவ்வொரு புதிய மதமும் நிலவும் உற்பத்தி முறையில் ஒடுக்கப்படும் வளரக்கூடிய புதிய உற்பத்தி முறைக்கான உற்பத்திச் சக்திகளின் குரலாகவே தோற்றம் கொள்கிறது. புதிய உற்பத்தி முறைக்கேற்ப பழைய குடும்ப அமைப்புகளை அல்லது உறவுகளை மறு கட்டமைப்பு செய்து புதிய ஆளும் வர்க்கத்திற்கான ஒரு உற்பத்தி நிலமையை உருவாக்குகின்றன. இப்புதிய புரட்சியே மதங்களின் சீர்த்திருத்தமாகவும், பழைய உற்பத்தி முறையின் ஆளும் வர்க்கங்கள் ஏற்படுத்தும் தடைகளே புதிய மதங்களின் தியாகமாகவும், புதிய குடும்ப அல்லது வாழ்க்கை முறைக்கான நடைமுறைகள், சித்தாந்தங்கள், அறக்கோட்பாடுகள், சிறுநீர் கழிப்பது முதல் சிற்றின்பம் வரையிலான ஒழுக்கவியல் நடைமுறைகள் என எல்லாம் புதிய ஒழுங்கமைப்பிற்கு ஏற்ப மறு கட்டமைப்பு செய்யப்படுகிறது. இவற்றின் தொகுப்புகளாகவே மறைகள் உருவாகுகின்றன.

இம்மறைகள் தங்களது உண்மைத்துவத்தை நிலைநிறுத்திக் கொள்ள மக்களிடையே நிலவும் பழங்கதைளை புதிய உள்ளடக்கங்களுடன் மறுசொல்லுதலுக்கு உட்படுத்துகின்றன. புராதன சமூகத்தில் உருவாகிய மந்திரங்களை முறைப்படுத்தி உள்ளடக்கிக் கொள்கின்றன. மக்களிடம் மறைகளை பிரபலப் படுத்துவது இப்பழங்கதைகளே ஒழிய அதன் சலிப்பூட்டும் அறவியல் கோட்பாடுகள் அல்ல. இவ்வறவியல் கோட்பாடுகள்கூட இக்கதைகள் மூலமே மக்களிடம் சென்றடைகிறது.

மதங்களின் இவ்வறவியல் பெண்ணை மீண்டும் மீண்டும் குடும்பம் என்கிற உள்ளமைப்பிற்குள் அடக்குகிறது. பெண்ணின் ஆற்றலை ஒடுக்குவது, பெண்ணிற்கான வெளிகளை இறுக்குவது, பெண்ணை போற்றிப் புகழ்வதான தந்திரங்களின் மூலம் பெண்ணை தனது அமைப்பிற்குள் இயபுபடுத்துவது, மீறக்கூடியவளை கடுமையான தண்டனைக்கு உள்ளாக்குவது என்கிற தொழில்நுட்ப எந்திரங்களாகவே மதங்கள் இயங்குகின்றன.

அரசியல் பொருளாதார அடிப்படையிலான சமூக வரலாற்றி;ல் முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு பிறகு மதகுருமார்கள் பழைய வகைப்பட்ட அதிகார மையங்களாக இருக்க முடியாத நிலையில், புதிய அதிகார மையங்களான அறிவியல் மற்றும் பகுத்தறிவுடன் தங்களது விவாதத்தை துவக்கினர். இந்நூற்றாண்டில் தங்களது ஆதாரமான இறைவனிடம் கொண்ட நம்பிக்கையைவிட்டு அறிவியல்; மற்றம் பகுத்தறிவுடன் இவர்கள் முட்டி மோதிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இவர்கள், தனது இறைவனுக்கு துரோகம் செய்துவிட்டு பகுத்தறிவிடம் சரணடைந்திருப்பதைக் காண்கிறோம். அதாவது, தனது இறையை அதன் கோட்பாடுகளை அறிவியல் மற்றும் பகுத்தறிவுபூர்வமானதாக நிரூபிக்க முயல்கின்றனர்.

அல்லது நினைவிலி நிலையில் பகுத்தறிவை தங்களது கோட்பாட்டைவிட உயர்வானதாக, ஒரு உரைகல்லாக அங்கிகரிக்கின்றனர். அதற்கான மயிர்பிளக்கும் விவாதங்களை விஞ்ஞானிகளுடனும் பிற மதத்தினருடனும், இவர்கள்; நடத்தி வருவதை பார்க்கிறோம். மதங்களை மறுவரையறை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, புதிய ஆளும் வர்க்கங்களுக்கான உற்பத்தி நிலமைகளை உருவாக்க தங்களை தயாரித்துக் கொள்ளும் இவ்வரலாற்றுச் செயல்போக்கில் நவீன முதலாளித்துவ தாரளவாதத்தை நோக்கி நகர்கின்றனர். இத்தகைய செயல்போக்கில் ஒன்றாகவே இஸ்லாமிய பெண்ணியத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

“இஸ்லாத்தின் நவீனத்துவம் அறிவவுவாத மரபினர்களால் மேற்கொள்ளப்பட்டது. குர்ஆனிய வசனங்களுக்கு விஞ்ஞானத் தேடல்களுடனான விளக்க உரை கூறும் தன்மை நிகழ்ந்தது. இதன் மற்றுமொரு வடிவமாகவே நவீனப் பெண்ணிய இஸ்லாமியப் பார்வை உருவானது.” (பக்.-38) என்பதை சுட்டிக்காட்டும் ரசூல், இப்பார்வை நவீன அரசியல் தளத்தில் ஏகாதிப்பத்திய சார்பு மேற்கத்தியப் போக்கை அடிப்படையாகக் கொண்டது என்பதை குறிப்பிடாமல் விட்டதையே மேலே விளக்கினோம். இஸ்லாத்தை நவீனப்படுத்த வேண்டிய தேவையும் அதன் பலனும் யாருக்கு என்பதில்தான் அதன் அரசியல் அடங்கியுள்ளது. இவ்வரசியலைப் புரிந்துகொள்ள ‘இஸ்லாமிய பெண்’-பிம்பம் கட்டமைக்கப்பட்டதை புரிந்துகொள்வது அவசியம்.

1970 மற்றும் 80-களில் அமேரிக்காவில் உருவான பெண்ணிய எழுச்சியுடன் மேற்கத்திய நாடுகள் இஸ்லாமை புதிய எதிரியாக உருவாக்கியதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இக்காலங்களில் ஈரானின் அயத்துல்லா கொமைனி, ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன்கள், லிபியாவில் கடாபி, பாலஸ்தீனத்தில் யாஸர் அராஃபத் ஆகியோர்கள் மேற்கத்திய ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றம் குடியரிமைகளின் எதிரிகள் என்கிற பய உணர்வு சர்வதேச அளவில் கட்டமைக்கப்பட்டது. இத்தைகய பய உணர்வை அடிப்படையாகக் கொண்ட பிம்பங்களில் இருந்தே இஸ்லாமிய பெண் குறித்த வரைபடங்கள் உருவாக்கப்படுகின்றன. யதார்த்தத்திற்கு புறம்பாக, இந்நூலின் அட்டையை அலங்கரிக்கும், முற்றிலும் முகத்திரையிடப்பட்டு பரிதாபமாக ஏக்கத்துடன் உலகை நோக்கும் இரண்டு கருவிழிகள் மட்டுமே இஸ்லாமிய பெண் பிம்பமாக கட்டமைக்கப் பட்டது. இப்பிம்பம் ஓருபடித்தான (stereotype) இஸ்லாமிய பெண்ணை குறிக்கும் ஒரு குறியீடாக மாற்றப்பட்டது. இக்குறியீட்டின் ஏக்க விழிகள் ‘மேற்கத்திய பெண்’ என்கிற ‘உயர் பண்பாட்டை’ அடைவதற்கான நோக்கைக் கொண்டது என்பதை சொல்வதுதான்.

ஏக்கம் கொண்ட இரு விழிகள் மட்டுமே கொண்ட இப்பெண் இஸ்லாமால் பெரும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறாள். ஒரு மூடுண்ட அமைப்பிற்குள் முக்காடிடப்பட்டு அடிமையான, ஊமையான பதுமையாக இருத்தப்பட்டிருக்கிறாள். அவளது கைகள் கட்டப்பட்டுள்ளன. அவளை உடனடியாக சுதந்திர வெளிக்குள் கொண்டு வந்து முகத்திரை நீக்கி, உரிமைகளை மீட்டுத்தரும் மிகப்பெரிய பணியை அல்லது இரட்சகத்தை பெரிய அக்காள்களாக பாவித்துக்கொண்டு தாங்களாவே கையில் எடுத்துக் கொண்டனர் அமேரிக்க மற்றும் மேற்கத்திய பெண்ணியவாதிகள்.

அமேரிக்க, மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பெண்ணிய சிந்தனையாளர்கள் தங்களை மதச்சார்பற்ற பெண்ணிய சிந்தனையிலிருந்து பிரித்துக் கொள்ளவும், தங்களது மத பழமைவாதத்தை எதிர்த்து தாங்களே போராடுவதற்கான ஒரு கருத்தியல்தளமாகவும் உருவாக்கிக் கொண்டதே ‘இஸ்லாமிய பெண்ணியம்’. இதன்மூலம் இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது என்கிற மேற்கத்திய கருத்தாக்கம் மறு கட்டமைப்பு செய்யப்பட்டு அமைப்பபாக்கத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இவர்கள் இஸ்லாத்தை மறுப்பதில்லை அல்லது அதன் நம்பிக்கைகளை அதன் அரசியல் தன்மைகளை மறுப்பதில்லை. மாறாக இஸ்லாத்தின் வரட்டுவாதம் மற்றும் பழமைவாதப் போக்கிற்கு எதிராக இஸ்லாமின் அடிப்படைகளான குர்ஆன் மற்றும் முகம்மது நபி அவர்களின் போதனைகள் இஸ்லாமிய பெண்ணிற்கு தந்த உரிமைகளை மீட்டெடுக்க முயலுகிறார்கள்.

இவர்கள் இரண்டு நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது செயல் திட்டத்தை அமைத்துக் கொண்டுள்ளார்கள். 1. குரானில் கூறப்பட்டுள்ள பால் சமத்துவம் மற்றும் சமூக நீதியை முறையாக பின்பற்றவதற்கான செயல்முறைகளை முன்னெடுப்பது 2. குரானை பெண்ணிய வாசிப்பிற்கு உட்படு;த்தி அதிலிருந்து இஸ்லாமிய பெண்ணை கட்டமைப்பது. முதல்வகையினர்; ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அமேரிக்க பேராசிரியர் ஆமினா வதூத் போன்ற நடைமுறை செயல்பாட்டாளர்களாகவும் இரண்டாம் நிலையினர் மொராக்கோவைச் சேர்ந்த பாத்திமா மெர்னிஸி போன்ற பிரதியியல் செயல்பாட்டாளர்களாகவும் உள்ளனர்.

ரசூல் இச்சிறு நூலில் இவ்விரண்டாம் நிலை செயல்பாட்டை தமிழில் அறிமுகப்படுத்த முனைகிறார். இஸ்லாமிய பெண்ணியம் குறித்து வரையறையை சொல்லாமலே அதன் அறிமுகத்தை துவங்கிவிடுகிறார். இஸ்லாமிய பெண் சிந்தணையாளர்களையும் இஸ்லாமிய பெண்ணியவாதிகளையும் ஒன்றாக ஒரே தளத்தில் எந்தவித அரசியல் வேறுபாடுகள் இன்றியும் நிறுத்தி விடுகிறார். சர்வதேச அளவில் இன்று நடைபெறும் இஸ்லாமிய பெண்ணிய விவாதப் புள்ளிகள் அனைத்தையும் சிறு சிறு பகுதிகளாக எளிமையாக விளக்கிச் செல்கிறார். இவ்விளக்கங்களுடே ஒரு கவிஞருக்கே உள்ள அவரது உள்மன அவசங்களையும் அதன் ஆதங்கங்களையும் உணர முடிகிறது. மதவாதத்தின் முன் கவித்துவம் சிந்தும் கண்ணீரை இரத்தத்தில் கலப்பதுதான் இதுநாள்வரையிலான மதங்களின் பணி என்பது அவருக்கும் தெரிந்ததே.

‘தீனின் அடிப்படையானக் இறைக்கோட்பாடு மாறாத்தன்மை கொண்டும் ஷரீஅத்தின் அடிப்படை இயங்கியல் தன்மை கொண்டதாகவும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது’-(பக்.4) எனக்கூறும் ரசூல் இம்மாறாத்தன்மை என்பது வரலாற்றை பின்னிழுக்கும் ஒரு பிற்போக்குத்தனம் என்பதை மறந்துவிட்டார். ஷரீஅத் சமூக மாற்றித்திற்கு ஏற்ப பல மறுவிளக்கங்களால் மாற்றங்களுக்கு உட்பட்டிருப்பதால்தான் இஸ்லாம் இன்றுவரை நிலைத்தும் சில பகுதிகளில் வளர்ந்தும் வருகிறது. சமூக மாற்றத்திற்கு ஏற்ப தேவதூதர்களின் அவதாரங்களும் வேதங்களின் வெளிப்பாடும் நடந்து கொண்டுதான் இருக்கும்.

கருணையற்ற, இரக்கமற்ற கொடூரமான மனமற்ற உலகை படைத்துவிட்டு அதன் துன்பத்தை, வலியை, வேதனையை ஆற்றுப்படுத்த ஒரு அப்பாலை மனத்தை ஆளும் வர்க்கத்திற்காக மதங்கள் படைத்துக் கொண்டுதான் இருக்கும். மனமற்ற உலகின் மனமாக பாமர மக்கள் அதில் தஞ்சம் புகுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். முகமது நபி இறதிதூதா என்கிற ‘ஈமான்’- என்றுமே மாற்றத்திற்குள்ளாகப் போவதில்லை. காரணம், அதன்பிறகு தோன்றிய மாமனிதர்களும் மகான்களும் போதிப்பவை மதங்களாகவும், புணித மறைகளாகவும் போற்றதலுக்குரிய அடையாளத்தைப் பெறப் போவதில்லை இனி. நவீன காலம் எனப்படும் 19-ஆம் நூற்றாண்டிற்கு பிறகான உலகை பகுத்தறிவும், விஞ்ஞானமும் ஆளத்துவங்கி தனிமனிதனின் உலகப் பார்வையைக் கட்டத்துவங்கிய பிறகு இனியொரு மதமும் தேவதூதரும் புணித மறையும் தோன்றப் போவதில்லைதானே.

குர்ஆனின் வசனங்களை மறு வாசிப்பு செய்து மூலப்பிரதியில் இருந்து பிரதிசார்ந்த இரண்டாம் நிலை அர்த்தம் என ‘பலதாரமணமுறை மறைமுகமாக ஒருதாரமணமுiறையை மையப்படுத்துவதை’-சுட்டிக்காட்டும்(பக்.-6) ரசூல், இது இன்று ஒரு சமூகப் பிரச்சனையில்லை என்பதை மறுக்கமாட்டார் என நினைக்கிறேன். காரணம் ஒருதார மனமுறையை வலியுறுத்தக்கூடிய மதங்களை சார்ந்தவர்கள் மட்டுமே ஒருதார மணத்தில் வாழ்ந்து வருவதுமில்லை, பலதாரமணத்தைக் கூறும் இஸ்லாமைச் சார்ந்தவர்கள் எல்லோரும் பலதாரமணம் செய்துக்கொள்வதுமில்லை. இந்தியாவில் இஸ்லாமியர்களைவிட பிற மதத்தினர்தான் அதிகம் ஒன்றுக்கு மேற்பட்ட மணைவிகளை கொண்டுள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். மணைவிகளை தீர்மாணிப்பது மதங்கள் இல்லை, சொத்தும் அது உருவாக்கும் அதிகாரமும்தான். ஆணால் இச்செயலை குற்றமாக கணித்துவிட்டு அக்குற்ற உணர்வை நியாயப்படுத்திக் கொள்வதற்கும், பணம்படைத்தவர்களுக்கும், அதிகாரத்தை எதிர்க்காது தலைவிதி என நொந்துகொள்ளும் ஏழைகளுக்கும் சொர்க்க நரகத்திற்கான இடப்பதிவை (பிளாட்-ரிஜிஸ்ட்ரேஷன்) செய்வதற்கும்தான் மதங்கள் பயன்படுகின்றன.

இஸ்லாம் குறித்த விமர்சனங்களில் தலையாய இடத்தைப்பிடித்தது ‘தலாக்’-தான் என்றால் மிகையாகாது. ‘இஸ்லாமிய வாழ்க்கைமுறையில் தலாக் என்பது மனைவியை நினைத்த நேரத்தில் கணவன் மணவிலக்கு செய்யும் மன முறிவு நிகழ்வாகும்’ (பக்.8) இது ரசூலின் கொஞ்சம் அதிகப்படியான உணர்ச்சிவசப்பட்ட விளக்கமாகத் தெரிகிறது. காரணம் ‘நினைத்த நேரத்தில்’ என்பது ஏதோ இஸ்லாம் கட்டுப்பாடற்று ஆண்களுக்கு தலாக்கை திறந்துவிட்டது போன்ற பார்வை நிலையை உருவாக்குகிறது. தலாக் என்பது பெண்ணிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு உரிமை என்பது பெண்ணிய அடிப்படையிலும், அடிப்படை ஜனநாயக உணர்விலும் சிந்திப்பவர்கள் அறிந்ததே. இஸ்லாத்தின் வணிக வர்க்கப் பிண்ணனி இக்குறைந்தபட்ச உரிமையை பெண்ணிற்கு வழங்குவது, அதன் பெண் குறித்த வர்க்க அறிதலுடன் உறவு கொண்டது.

இஸ்லாத்தில் திருமணமும் ஒருவகை வணிக ஒப்பந்தத் தன்மையுடனேயே அனுகப்படுகிறது. பெண் விற்பதற்கும் வாங்குவதற்குமான ஒரு வணிகப் பொருளைப் போன்றவள். இது பலதாரமணத்தை சமூகவயப்படுத்தும் செயலாகும். வாங்க சக்தி உள்ளவர் நான்குவரை வாங்கலாம். அதற்குமேல் அனுமதிப்பது பற்றாக்குறையை உருவாக்கி சமூக அமைதியை ஒரு கட்டத்தில் குழைத்துவிடும். இதர விற்பனைப் பொருளிளிருந்து ஒரே வித்தியாசம் பெண் உயிர் உள்ள பொருள் என்பதால் அதனை காப்பதற்கான சக்தி, உடலுறவு உட்பட, வாங்கியவனுக்கு இருக்க வேண்டும் என்பதே நிபந்தனை. இது அன்றைய அரேபிய சமூகத்தில் நிலவிய கட்டுப்பாடற்ற திருமண முறைகளை ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவருவதற்கும், போரினால் விதவை ஆக்கப்பட்ட பெண்களின் பாலியல் ஆற்றலை முறைப்படுத்துவதற்கும்; செய்யப்பட்ட சீர்த்திருத்தம். இதுவே அன்றைய அரேபிய வணிகர்களையும், அடிமையாக்கப்பட்ட பெண்களையும் இஸ்லாம் உள்ளிழுப்பதற்கு காரணமாக அமைந்தது என்பதை வரலாறு உணர்த்துகிறது.

அரபிப்பழங்குடியில் கணவனை விலக்கும் உரிமை பெண்ணிற்கே இருந்துள்ளது. அதனை இஸ்லாம் பெண்ணிடம் இருந்து தட்டிப்பறித்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் (பக்.10) ரசூல். தலாக்கை ஆணின் உரிமையாக்கி, ஆணை தனக்குள் உள்ளிழுக்கும் செயலாகவே இதனை காணமுடிகிறது. பிரச்சனை தலாக்கை ஆண்கள் தவறாக பயன்படுத்துகிறர்கள் என்பதுதான். மார்க்ஸ_ம் ஏங்கல்ஸ_ம் கம்யூணிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல கணவன் மனைவி உறவு ரொக்கப்பட்டுவாடா உறவாக உள்ள இன்றைய பிற்போக்கான முதலாளித்துவ உற்பத்தி அமைப்பில் மண ஒப்பந்தங்கள் மன ஒப்பந்தங்களாக இல்லை என்பதுதான் இதற்கு காரணம். சேர்ந்து வாழ விருப்பமற்ற இருவரை மதமோ, சட்டமோ அல்லது தாதாக்களோ சேர்த்துவைப்பதன் மூலம் எது சாதிக்கப்படுகிறது? அல்லது எது காப்பாற்றப்படுகிறது? என்பதே கேள்வி. பெண்களை சுயச்சார்பற்றவர்களாக இருத்தி வைத்திருப்பதுதான் இத்தகைய தலாக்குகளுக்கு காரணம். பெண்; சுயச்சார்புடன் தேர்வுக்குரியவளாக இல்லாமல் தேர்வு செய்பவளாக மாறும்போது தலாக்குகள் ஒரு விடுபடுதலுக்கான செயல்களமாக மாறிவிடும்.

பெண் அதிகாரத்தை பெறுவதற்கான ஒரு முன்முயற்சி என்றவகையில் பெண்களின் தனி ஜமாத் குறித்து கூறும் ரசூலின் கருத்து ஏற்புடைய ஒன்றே. அதுவும்கூட ஏழையான பெண்களுக்கு நன்மை பயக்கப்போவதில்லை. ஆண் ஜமாத்துகள் போன்றே அதுவும் ஒரு இணை அதிகார அமைப்பாக இயங்கும் என்பதுடன் அதனுள் நடப்புலகின் எல்லா வர்க்க முரண்களும் பிரதிபலிக்கதான் செய்யும், என்றாலும், குறைந்தபட்சம் பெண்களுக்கான ஒரு வெளியை அது திறக்கிறது. சுயமாக சுவாசிப்பதற்கான ஒரு தளமாக இருக்கும். பெண்கள் தங்களை உணரவும், பயிற்றுவித்துக் கொள்ளவும் அது ஒரு முன்முயற்சிக்கான களமாக இருக்கும்.

ஜீவானாம்சம் குறித்து ரசூலின் கருத்துக்கள் ஜனநாயகத்தன்மை கொண்டவை என்பதுடன் இது இஸ்லாமிற்குள் ஏற்படுத்;தப்படவேண்டிய சீர்திருத்தம் மற்றும் போதாமை குறித்து பேசுகிறது. அரேபிய திருமணமுறைகளில் மகர் எனப்படும் பெண்ணிற்கான பரிசப்பணம் என்பது சொத்தின் அளவிற்கு சமமானதாக ஆணால் தரப்படுகிறது. அதாவது ஆண் பெண்ணிற்கு பணம் தந்து திருமணம் செய்துகொள்ளும் முறையே உள்ளது. இதுவும் ஒருவகையில் பெண்ணை விலைக்கு வாங்கும் வணிகச் செயல்பாடுதான். இந்தியாவி;ல் குறிப்பாக தமிழகத்தில் இது பெண் ஆணிற்கு வரதட்சிணையாக பணம் தந்து திருமணம் செய்துகொள்ளும் முறையாக எதிர்மறையாக உள்ளது.

இவ் வரதட்சிணைப்பணம் தலாக் சொல்லப்பட்ட முஸ்லிம் ஜமாத்துகளில் திரும்ப கணவனிடமிருந்து பெற்று பெண்ணிடம் ஈடாகத் தரப்படுகிறது என்றபோதிலும் அது எஞ்சிய காலங்களுக்கு பாதுகாப்பைத் தர போதுமானாக இருக்குமா? என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. மறுமணத்தை மறுக்கும் மதங்களே ஜீவாணாம்சம் என்கிற ஒரு ஏற்பாட்டை செய்துள்ளன. இஸ்லாம் மறுமணத்தை ஆதரிப்பதால் இந்நிலை குறித்து தெளிவான வரையறைகள் இல்லை. இவை மறுவரையறை செய்யப்பட வேண்டியவை என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. அதேசமயம், மறுமணத்தில் சிக்கலுக்குள்ளாவதாக கருதப்படும் கற்பு மற்றும் ஒரு ஆணைவிட்டு மற்றொரு ஆணுடன் உறவு கொள்வதில் உருவாகும் உடல் புணிதம் சார்ந்த உளவியல் பிரச்சனைகள் இஸ்லாமின் வணிக வர்க்கச் சிந்தனைக்கு முந்தைய நிலவுடமை சிந்தனையுடன் உறவு கொண்ட பிற்போக்கச் சிந்தனையாகும்.

சாட்சிகள் என்ற பகுதியில் ஆயிஷா நாயகத்தின்; ஞாபக சக்தியைப்பற்றி குறிப்பிடுகிறார் (பக். 15). நினைவு (ஞாபகம்)-மறதி என்பது உளப்பகுப்பாய்வு அடிப்படையில் விருப்பம்-விருப்பமின்மை என்கிற தேர்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு உடல் அரசியல் நிகழ்வாகும். ஆயிஷா நாயகத்தின் நினைவாற்றல் அவர்களது தேர்வு சார்ந்தும், அதனை வெளிப்படுத்துதல் அவரது புரிதல் சார்ந்தும், சொல்லுதல் என்பது அன்றைய சொல்லுதல் முறைமைகளின் அர்த்த சாத்தியங்களை சார்ந்தும் அமைவதாகும். ‘ஹதீஸ்’-களில் பெரும்பாலானவை ஆயிஷா நாயகம் அவர்களால் சொல்லப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

‘சுன்னத்’-எனப்படும் நபிகளின் வாழ்வு நெறிகளை வெளிப்படுத்தி இஸ்லாமைக் கட்டமைத்ததில் முகமது நபிகளுக்கு பிறகு ஆயிஷா நாயகத்திற்கு முக்கிய பங்கிருப்பதையும், மத நடைமுறைகள் துவங்கி ஆட்சி அதிகாரம் வரை அவரது ஆதிக்கத்தை மறுவாசிப்பு செய்வது இஸ்லாத்தின் பெண்ணியக் கூறுகளை ஆயிஷா அவர்களின் ஆளுமை அடிப்படையில் புரிந்துகொள்ள உதவும். மறுசொல்லுதலுக்கான உளபகுப்பாய்வு மற்றும் சொல்லுதலின் அரசியல்கூறுகளை கவனத்தில் கொண்டு இவை மறுவாசிப்பு செய்யப்படவேண்டியவை.

சானியா மிர்ஷாவின் ஆடைகுறித்த சர்ச்சையை குறிப்பிடுகிறது இந்நூல் (பக். 18). மதம் தனிமனித ஆடை ஒழுக்கங்களில் தலையிடுவது எதிர்க்கப்பட வேண்டியதுதான், அதேசமயம் ஆணிய பாலிண்ப நோக்குடன் விளையாட்டுக்கான வெளியை ஒரு காமவெளியாக (நசழவiஉ ளியஉந) கட்டமைக்கும் நுகர்வுப்பண்பாட்டுப் போக்கும் விமர்சிக்கப்பட வேண்டியதே. குறிப்பாக டென்னிஸ் வீராங்கனைகளுக்கு தரப்படும் உடைகள் ஆட்ட நேரத்தில் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் பாலியல்ரீதியான உளவியல் தூண்டல்கள் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே. பெண்ணை நுகர்வுப்பண்டமாக மாற்றும் ஒரு வியபார உத்தியே இது.

பிரச்சனை சானியா மிர்ஷாவைப்பற்றி மட்டுமே மேதகு இஸ்லாமிய மதகுருமார்கள் பேசுகிறார்கள். இதர கிறித்துவ பெண் உடல்கள் குறித்த அக்கறை இவர்களுக்கு இல்லை என்பதுதான் விமர்சிக்கப்பட வேண்டியது. தோழில் முதலாளித்துவம் பெண்ணை நுகர்வுப்பண்டமாக மாற்றும் இப்போக்கை சரியாகவே குறிப்பிடுகிறார் ரசூல் (பக்.-19). இதே சானியா மிர்ஷா ஒரு பேட்டியில் தான் 5-வேளை தொழுகையை கடைப்பிடிப்பதாகவும், மெக்காவிற்கு ‘உமரா’-எனப்படும் சடங்கை நிறைவேற்ற வந்தபோது ‘ஹிஜாஃப்’-எனப்படும் தலைக்கவசம் அணிந்தும், தனது இஸ்லாமிய அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டார்.

அடுத்து பெண்ணிய சிந்தனையாளர்கள் வாதிடும் ஒரு முக்கிய பிரச்சனை இஸ்லாமியப் பெண்கள் முகத்திரையிடும் வழக்கம் பற்றியது. பெண்கள் முகத்திரை அணிவது அவர்களது உரிமை சார்ந்த பிரச்சனை அதை மத அடையாளமாக மாற்றுவதும், அதே அடையாளத்தைக் கொண்டு இஸ்லாமிய பெண்ணை ஒருபடித்தானவளாக குறியிடுவதும் அடிப்படையில் மனித உரிமையை மறுக்கும் எதேச்சதிகாரமாகும். இஸ்லாமியப் பண்பாட்டிற்காக மேற்கத்திய பெண்களை முகத்திரை அணியச் சொல்வதைப் போலத்தான் இஸ்லாமிய பெண்களை முகத்திரை அணியக்கூடாது என்று கூறுவதும். இரண்டுமே மனித உரிமையை மறுக்கும் பிரச்சனைதான். இது இஸ்லாமிய பெண்மீது நடத்தப்படும் ஒரு பண்பாட்டு ஏகாதிபத்தியம் ஆகும்.

மேலும், இரு விழிகள் மட்டும் தெரியும் முகத்திரைப் பழக்கம் இஸ்லாமால் எல்லா பெண்களுக்கும் முன்வைக்கப்பட்டதில்லை முகமது நபியின் மணைவியர்களைத்தவிர (பக்.-17) என்பதை சுட்டிக்காட்டும் ரசூல், உலக அளவில் பெரும்பாலான இஸ்லாமிய பெண்களிடம் அப்பழக்கம் இல்லை என்பதையும், இது திட்டமிட்டு ஊடகங்கள் வழி பெருக்கப்படும் ஒரு தவறான பதிவு என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கலாம். இஸ்லாமியர்களை அதிகம் கொண்ட நாடுகளான இந்தோனேஷியா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளிலோ அல்லது சூடான், எகிப்து போன்ற ஆப்பரிக்க நாடுகளிலோ அப்பழக்கம் இல்லை.

இந்நாடுகளில் தலை முக்காடிடும் பழக்கம் அந்தஸ்த்தை குறிக்கும் ஒரு சின்னமாகவே உள்ளது. கூலித்தொழிலில் ஈடுபடும், உழைக்கும் இஸ்லாமிய பெண்களிடம் இப்பழக்கம் இல்லை. தனது இஸ்லாமிய தூய்மைத்துவத்தையும் பெருமிதத்தையும் காட்டிக்கொள்ள அரேபிய நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியாவில் இது கட்டாயப்படுத்தப்படுகிறது. இங்கும்கூட அரேபிய பெண்கள் கார் ஓட்டும் உரிமைக்காகவும், ஓட்டுரிமை, வேலை மற்றும் வியாபார உரிமைக்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வழுத்தங்களின் காரணமாகவும், உலக வர்த்தக மையங்களின் நிர்ப்பந்தம் காரணமாகவும் சவுதி அரசும் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை கட்டாயமாக்கி உள்ளது தற்பொழுது.

இந்நூலின் அடிப்படை தர்க்கம் இதுதான். இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை தந்துள்ளது. குர்ஆனின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமத்துவமாகவே பாவிக்கப் படுகிறார்கள். ஓரு சில குர்ஆனின் வசனங்கள் மத குருமார்களால் தவறான விளக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டு பெண்ணுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. ஷரியத் சட்டம் என்கிற இஸ்லாமிய சட்டமுறை காலமாற்றங்களுக்கு ஏற்ப அடிப்படை மாறாமல் மறுவிளக்கங்களுக்கும் விரிவுபடுத்தலுக்கும் உட்பட்டது. அதனை சூழ்நிலைக்கு ஏற்ப நெகிழ்வுடன் அனுக வேண்டும். இக்கருத்துக்களை பெண்களுடன் தொடர்புடைய முக்கியமான நடைமுறைகளை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார். தலாக், சொத்துரிமை, முகத்திரை துவங்கி, சொத்துப் பங்கீடு மற்றும் பாசிச எதிர்ப்புவரை இவரது விளக்கம் சுருக்கமாக எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது.

இவ்விளக்கங்கள் இஸ்லாமிய மதகுருமார்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஊக்கமளிக்கக்கூடியவை என்பதுடன் இஸ்லாம் குறித்து தவறான பதிவுறத்தலை கொண்டிருப்பவர்களுக்கு இந்நூல் ஒரு நல்ல அறிமுகத்தை தரக்கூடியது. இன்றைய மதவாத பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக ரீதியான தாராளவாத இஸ்லாமை அறிமுகப்படுத்தும் இம்முயற்ச்சி அவசியமானதும்கூட. ஆணால் நாம் முரண்படுவது இதன் அடிப்படை தர்க்கத்தில்தான். இஸ்லாமை பொதுவாக மதங்களை பெண் விடுதலைக்கான அல்லது மனித விடுதலைக்கான ஒரு மார்க்கமாக ஏற்க முடியுமா? நாம் மேலே மதம் குறித்து அலுப்பூட்டும் பெரும் உசாவலை நிகழ்த்தியிருப்பது இத்தர்க்கத்திற்கு எதிரான நமது கருத்தை புரிந்துகொள்ளத்தான். பொதுவாக நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்ட எந்த மதமும் மனித விடுதலை குறித்து வாழ்வின் பொருளியில் நெருக்கடிகளுக்கு அப்பால் சொர்க்கம் நரகம் என்கிற அப்பாலை கருத்தியில் கற்பணார்த்தங்களைத்தான் போதித்துவருகிறது. அல்லது மனிதனை ஆளப்படும் தன்னிலைகளாக உருவாக்கும் தன்னிலை உருவாக்க எந்திரங்களாக இயங்கிவருகிறது.

இறுதியாக இஸ்லாமிய பெண்ணிய விவாதங்களில் விடுபட்டிருக்கும் ஒரு கேள்வியுடன் இதனை முடிக்கலாம். இறுதிப்பேரழிவு, விசாரணை, சோர்க்கம், நரகம் ஆகிய பெரும்புனைவுகளற்ற இறைவன்சார் மதங்களே இல்லை எனலாம். யுதார்த்த உலகில் ஏற்படும் துன்ப துயரங்களுக்கு தீர்வாகவும், வாழ்வை ஒரு தத்துவ அடிப்படையில் புரிந்து கொண்டு வாழ்வதற்கான ஒரு அர்த்தமும் இப்புனைவுகளின் வழியாக வழங்கப்படுகிறது. இவற்றில் சொர்க்கம் நரகம் பற்றிய வியப்பூட்டும் கற்பனைகளைக் கொண்ட ஒரு புனைவு உலகத்தை இஸ்லாம் படைத்துக்காட்டுகிறது. அவ்வுலகில் உள்ள பெண்கள் பற்றிய வர்ணனை பெண் குறித்த சில அடிப்படைக் கற்பிதங்களை அல்லது இஸ்லாம் அனுமானிக்கும் இலட்சிய பெண் உடல் பற்றிய பிம்பங்களை காட்டுவதாக உள்ளது.

சொர்க்கத்தை அடையும் ஆண்களுக்கு ‘ஹ_ருல் ஈன்(நீண்ட கண்களுடையவர்)களை மணம் முடித்து வைப்போம்’ (அல் குர்ஆன் 44:54) ‘அவர்கள் வெண் முத்தையும், பவளத்தையும் போல் இருப்பார்கள்.’ (55:58) ‘இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை’ (55:74). குர்ஆனில் சுட்டப்படும் இவ்வசனங்களில் நீண்ட கண்கள், வேண்முத்து, பவளம் போன்ற வர்ணனைகள் ஆணிய காட்சியின்பத்தையும் (அயடந பயணந), யாராலும் தீண்டப்படாத பரிசுத்தமானவள் (pரசவைல) என்பது ஆணிய நுகர்வு இன்பத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஆணிய நொக்கிலான தந்தைவழி அதிகாரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு இத்தகைய பெண்கள் எனில், சொர்க்கம் புகும் பெண்களுக்கு? இதற்கான பதிலை இஸ்லாமிய பிரதிகளின் மௌனங்களிலும், இடைவெளிகளிலும் தேடத் துவங்கினால், இஸ்லாமிய மத அமைப்பிற்குள் புதையுண்டு கிடக்கும் பெண் உடலை அகழ்ந்து எடுத்துவிடலாம். இதுவே ‘இஸ்லாமிய பெண்ணிய’-த்தின் முதல் வேலைத்திட்டமாக இருக்கமுடியும். இவ்வகழ்வாய்வு இஸ்லாமிற்குள் மட்டுமல்லாமல் எல்லா மதங்களுக்குள்ளும் நிகழ்த்தப்பட வேண்டியது பெண்ணியத்தின் அடிப்படை வேலைத் திட்டமாகும். இவ்வேலைத்திட்டமே பெண்ணியம் முன்வைக்கும் ‘பெண்’-ணை நமக்குக் காட்டித்தரும். ‘ஆண்’-என்கிற கருத்தாக்கம் நவீன யுகத்தின் (ஆழனநசn யுபந) கட்டமைப்பு என்கிறார் மிஷல் ஃபூக்கோ. பின்-நவிணத்தவ யுகத்தில் நாம் ‘பெண்’-என்கிற கட்டமைப்பை கண்டடைய இங்கிருந்து துவங்கலாமே?

- ஜமாலன், 31-05-2007.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com