Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007


Red Tea

- Dr.P.H.Daniel, M.B.B.S / தமிழில்: இரா. முருகவேள்

ஆனைமலைக்காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயரின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாக இடப்பட்டவை எமது உயிர்கள்...

மலைகளிலிருந்து மிதந்துவரும் தேயிலை மணத்திலிருந்து எமது வியர்வையை தனித்து நுகரும் நாசியற்ற நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக்குடிக்கும் ஒவ்வொருதுளி தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்...

- என உலுக்கியெடுக்கும் துயரங்களைப் பொதித்து வைத்திருக்கும் ரெட் டீ நாவலின் 8,9 வது அத்தியாயங்கள்.

உயிரியல்ரீதியாகப் பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமைவாய்ந்தவன் மனிதன்தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தையே வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன்தான்.
- 'மெமரீஸ் அண்டு ஸ்டடீஸ்' - வில்லியம் ஜேம்ஸ்

கருப்பனுக்கு இன்னொருமுறை காய்ச்சல் வந்தது. இந்த முறை அவன் தானே மருத்துவமனைக்குச் சென்றுவிட்டான். அவன் பின்புறத்தில் குரூப் ஒரு ஊசி போட்டதும் காய்ச்சல் சரியாகிவிட்டது. ஆனால் ஊசி போட்ட இடம் வீங்கிப்போய் நடக்கவே முடியாத அளவுக்கு விண்விண் என்று வலித்தது. ஒவ்வொரு இரவும் வெள்ளையன் வந்து மறுநாள் வேலைக்குப் போகாவிட்டால் தலைமை எழுத் தரிடம் சொல்லி வார ரேஷனை நிறுத்திவிடப் போவதாக மிரட்டிவிட்டுப் போவான். இறுதியில் காலையே தூக்கிவைக்க முடியாவிட்டாலுங்கூட கருப்பன் வேலைக்குப் போயே ஆகவேண்டிய நிலை வந்தது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் மலேரியா மாதங்கள். எஸ்டேட்டிலிருந்து அத்தனை பேரும் ஒரு முறையாவது காய்ச்சலில் விழுந்தனர். குரூப்பும் மெடிக்கல் கூலியும் பரபரப்பாக லைன்களில் சுற்றி சிகிச்சையளித்துக் கொண்டிருந்தனர். ஒரு சமயம் ஒரே நேரத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் படுக்கையில் கிடத்து மளவிற்கு குளிர்ஜுரம் (மலேரியா) தாண்டவமாடியது.

அந்த ஆண்டு எஸ்டேட்டில் ஏராளமானவர்களை மலே ரியா பலிகொண்டது. ஒருநாள் மாலை வேலையிலிருந்து திரும்பிய வள்ளி பக்கத்து அறையில் அழுகுரல் கேட்டு ஓடினாள். அங்கே ஒரு பனிரெண்டு வயதுச் சிறுமி இறந்து போயிருந்தாள். அவளுக்கு ஒருவாரத்திற்கு மேலாக காய்ச்சல் அடித்துக்கொண்டிருந்தது. குரூப் சிலமுறை ஊசி போட்டும்கூட அவளது நிலைமை சரியாகவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை மோச மடைந்து கடைசியில் இன்று காலை உயிரை விட்டுவிட்டாள்.

காலையில் மகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேரத்திலுங்கூட வெள்ளையனின் வற்புறுத்தலின் காரணமாக அவள் அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போக வேண்டி வந்தது. அந்தச் சிறுமியின் தம்பியான பத்து வயதுப் பையன் தன் நோய்வாய்ப்பட்ட அக்காவோடு, கைக்குழந்தையாக இருந்த தன் தம்பியையும் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. தகப்பன் மாலையில் வேலையிலிருந்து திரும்பியபோது தன் மகள் விரைத்துப் பிணமாகக் கிடப்பதையும், மகன் குளிர்காய்ச்சலில் நடுங்கிக் கொண்டிருப்பதையும், குழந்தை இறந்து போன அக்காவின் பிணத்தோடு விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்டான்.

முத்தையாவும் சங்கனும் கருப்பனும் குழிவெட்டச் செல்ல, ஒரு பக்கத்து வீட்டுக்காரன் அடக்கத்துக்குத் தேவையான புதுத்துணிகளும், மற்ற பொருட்களும் வாங்கி வந்தான். குழி தயாரானதும் அவர்கள் சிறுமியின் உடலை புதுத்துணி கொண்டு போர்த்தினர். அவள் அன்றிரவே தகப்பனால் குழிக்குத் தூக்கிச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டாள். மறுநாள் அதிகாலையில் மேஸ்திரியின் அடிஉதைக்குப் பயந்து தகப்பன் வேலைக்குத் திரும்பினான். சுயநினைவையே இழந்து மரத்துப்போய் உட்கார்ந்திருந்த சிறுமியின் அம்மாவை சங்கரபாண்டியன் இரக்கமின்றி உதைத்து வேலைக்கு அனுப்பினான்.

"இத்தன கொடுமையாகக்கூட இருப்பாகளா மனுசங்க?" வள்ளி கணவனிடம் கிசுகிசுத்தாள்.

மலேரியா பலரை பலிகொண்டதோடு மேலும் பலரை முடக்கிப்போட்டது. மரணத்துக்குத் தப்பிய பலர் வாழ்நாள் முழுவதும் எழுந்து நடமாட முடியாத நிலையை அடைந்தனர். கருப்பனின் லைனிலேயே பல குழந்தைகள் நோயில் விழுந்தன. மலேரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வயிறுகள் வீங்கிப் போயிருக்க உடலின் மற்ற பகுதிகள் குச்சிக் குச்சியாக மெலிந்து வற்றி போயிருந்தன. அந்தக் குழந்தைகள் ரத்தமே இல்லாமல் வெளுத்துப் போய் நகர முடியாமல் உணர்ச்சியற்ற முகங்களோடு காலையிலிருந்து மாலைவரை ஒரே இடத்தில் அசைவற்று உட்கார்ந்திருந்தன. இதைபோல் பல பெரியவர்களும் லைன்களில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

அடிக்கடி காய்ச்சலால் தாக்கப்பட்டவர்களுக்கு வயிற்றுக்குள் கட்டி வளரும் என்று கருப்பன் கேள்விப்பட்டான் (கணையமும், ஈரலும் வீங்கிப் போவது). ஒருவனுக்கு ஒருமுறை இதுபோன்ற ஒரு கட்டி வந்துவிட்டால் வருடக்கணக்கில் அவன் எதற்கும் உதவாதவனாகப் படுத்துக்கிடக்க வேண்டியதுதான். இப்படி பாதிக்கப் பட்ட குழந்தைகள் பெரும்பாலும் மீண்டு வருவதே இல்லை. அவை மெல்ல மெல்ல பலவீனமடைந்து மரணத்தை தழுவின.

கருப்பனை பலமுறை காய்ச்சல் தாக்கினாலும் வள்ளி அதிர்ஷ்டவசமாக ஒரே தாக்குதலோடு தப்பித்துக் கொண்டாள். மொத்தம் அறுநூறு பேர் இருந்த டிவிஷனில் சுமார் எழுபத்தைந்து பேர் காய்ச்சலுக்குப் பலியாகினர். அவர்களில் பாதிபேர் குழந்தைகள். ஒவ்வொரு நாளும் மரணமாவது நிகழாமல் டிவிஷனில் பொழுது விடிவதே இல்லை. அந்த மலைகள் அனைத்தையுமே மரணம் ஒரு போர்வை போலப் போர்த்திருப்பதுபோல் தோன்றியது.

எழுத்துப் பணியாளர்களும் காய்ச்சலுக்குத் தப்பவில்லை. தலைமை எழுத்தரும் அவரது உதவியாளரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நாட்களில் மேஸ்திரிகளும் உதவி மேலாளர்களுமே பணிகளை மேற்பார்வையிட்டனர். தலைமை டீ மேக்கரின் குழந்தைகூட காய்ச்சலுக்குப் பலியானது. கருப்பனுக்கும் வள்ளிக்கும் அறிமுகமான ஒருகூலியும் அதேவாரத்தில் மலேரியாவால் இறந்து போனான். அவர்களோடு பயணம் செய்து எஸ்டேட்டுக்கு வந்த நோயாளி சின்னராமன்தான் அவன். அவனை அடுத்தடுத்து மூன்றுமுறை காய்ச்சல் தாக்கியது. நடக்கவே முடியாத அளவுக்குப் பலகீனமாய் இருந்த அவன் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்டு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டான். அரைகுறை நினைவுடன் முனகிக் கொண்டிருந்த நிலையிலுங்கூட அவன் மனைவி அருகிலிருக்க அனுமதிக்கப்பட வில்லை.

"ஒனக்கும் ஒம் புருஷனுக்கும் எத்தினி கடனிருக்கு. அந்தப் பய முப்பதுநா கூட வேல செய்யல. இப்ப நீயும் அவங்கூட ஆஸ்பத்திரியில உக்காந்தா யாருல எம் பணத்தை திருப்பித் தருவா? விடிஞ்சதும் வேலைக்குப் போ. ராவுல வந்து இவனத் தொட்டில்ல போட்டு ராராட்டு". சங்கரபாண்டியன் உறுமினான்.

அவள் தினமும் வேலைக்குச் சென்றாள். சின்னராமனின் உடல்நிலை மேலும் மேலும் மோசமடைந்தது. முடிவு நெருங்கிக் கொண்டிருப்பதை எல்லோரும் புரிந்து கொண்டனர். ஒருநாள் முத்துலட்சுமி இலை பறித்துக் கொண்டிருக்கும்போது அவன் நினைவிழந்து வருகிறான் என்று தெரிவிக்கப்பட்டது. அவள் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே சின்னராமனின் வேதனை மிகுந்த வாழ்க்கை முடிவடைந்துவிட்டது. சின்னராமனும், முத்துலட்சுமியும் எதற்குமே வழியில்லாத கொடும் வறுமையில் இருப்பவர்கள் என்பதால் லைனில் இருந்த சில கூலிகள் தங்களுக்குள் கொஞ்சம் பணம் புரட்டி அவனைப் புதைத்தனர். கணவனை நினைத்து அழுது புலம்புவதற்கு முத்துலட்சுமி ஒருநாள் அனுமதிக்கப் பட்டாள். மறுநாள் தேயிலைச் செடிகளை நோக்கி விரட்டி அடிக்கப்பட்டாள்.

ஆனைமலைகளில் உள்ள வேறு சில தேயிலைத் தோட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தங்களுடைய எஸ்டேட்டை ஆரோக்கியமானது என்று சொல்லலாம் முத்தையா சொன்னபோது அவனுக்கு மூளை பிசகிவிட்டதோ என்று கருப்பனுக்குத் தோன்றியது. ஆனால் முத்தையா தெளிவாகத்தான் பேசினான். கருங்குண்டு என்ற ழைக்கப்பட்ட எஸ்டேட்டில் இரண்டு ஆண்டுகளில் இந்த காய்ச்சலின் காரணமாக பாதிப்பேருக்கு மேல் இறந்து போய்விட்டார்களாம். ஒரு கூலிகூட புதிதாக அங்கே வேலை செய்ய முன்வராத அளவிற்கு அந்த எஸ் டேட்டில் நிலைமை மோசமாம், கல்யாணப்பந்தல் எஸ்டேட்டைப் போன்ற வேறு சில எஸ்டேட்டுகளிலும் சாவு விகிதம் மிகமிக அதிகம் என்று அவன் சொன்னதைக் கேட்டு கருப்பனுக்கு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை.

"காய்ச்ச காலத்துலதா இந்த எஸ்டேட்டுகள்ளேர்ந்து கூலிக தப்பியோடப் பாப்பாங்க. காவக்காரங்களும் காச்ச வந்து உழுந்து கெடக்கும்போது கூலிகளை கங்காணிக்க யாரும் இருக்கமாட்டாங்க. யார் யாருக்கெல்லாம் முடியுமோ அவங்கல்லாம் ஓடிருவாங்க. ஆனா நூத்துக்கு ஒண்ணு ரெண்டுபேர் கூட பொள்ளாச்சி போய் சேர மாட்டாங்க. காச்ச, களப்பு குளிரால வழியிலேயே நெறய பேரு செத்துப் போவாங்க. ரெண்டு வருசத்துக்கு முந்தி பொள்ளாச்சி போற வழியில அங்கங்க குமிஞ்சு கெடந்த பொணங்களைப் பொதைக்க கம்பெனிங்க எக்கச்சக்கமான சக்கிலி கூலிகள வேலைக்கு சேக்க வேண்டி வந்திச்சி. ஆனா எத்தினி நடந்தாலும், கச்சா வந்தவுகளுக்கும், கஷ்டப்படுறவுகளுக்கும் ஏதாவது செய்யணு முன்னு மட்டும் நெனக்கமாட்டாங்க. தப்பிச்சோடிப் போய் மாட்டிக்கிட்ட கூலிங்கள எஸ்டேட்டுக்குத் திருப்பிக் கொண்டாந்து அவங்கள பலபேர மேஸ்திரிக கொடூரமா அடிச்சி கொன்னே போட்டுட்டாங்க. கம்பெனிங்க செய்யறதெல்லாம் எத்தன பேரு செத்தாங்கங்கிறதை கீழ இருக்கிறவங்களுக்குத் தெரியாம மறைக்கிறதுதான். அப்படி தெரிஞ்சா யாரும் மலைக்கு வேலைக்கு வரமாட்டாங்கல்ல".

சுற்றி நடப்பவைகளால் பயந்து நடுங்கி விதிர்விதித்துப் போயிருந்த கருப்பனும் வள்ளியும் கட்டாயம் ஓடிப் போக முடிவு செய்திருப்பார்கள். ஆனால் முத்தையா மேலும் மேலும் வற்புறுத்தி அந்த எண்ணத்தைக் கைவிடச் செய்தான்.

"ஏப்பரல் மாசத்துல பாதி தாண்டிருச்சு. இந்த மாசம் முடியறதுக்கு முன்னாலேயே மழை வந்துரும். அப்புறமா காச்ச வராது. ஓடிப்போனா ஒருவேள மாட்டிக் காமத் தப்பிச்சாக்கூட கண்டிப்பா வழியில செத்துப் போவீக. எப்படியாவது தாக்கு புடிச்சு இருங்க. கஷ்டமெல்லாம் தீருவதற்கு ஆச்சு."

பகல் குளிர்ந்திருந்தது, இருண்டிருந்தது,
வெறுமையை விதைத்தது,
மழை கொட்டியது, காற்று ஓய்வின்றி
சுழன்றடித்தது.
ஒரு மழைநாள்
-லாங் •பெல்லா

இரண்டு வாரங்களில் முத்தையா சொல்லியது போலவே பருவமழை பெய்யத் தொடங்கியது. என்ன ஒரு மழை! கொட்டியது, கொட்டியது, கொட்டிக்கொண்டே இருந் தது. நிமிட நேரமும் மழை நிற்கவேயில்லை. வானம் பொத்துக்கொண்டது போல் மழை கொட்டும். பின்பு சிலநிமிடங்கள் சாரல் விழும். பின்பு ஒரு மணிநேரம் கன மழை கொட்டும். பிறகு சில நிமிடம் சாரல். சில நிமிடங்கள்கூட முழுமையாக மழை நிற்கவேயில்லை.

தொடர்ந்து பலநாட்களுக்கு அவர்கள் சூரியனைப் பார்க்கவேயில்லை. இரவு நேரங்களில் கூரையாகப் போடப்பட்டிருந்த இருப்புத் தகடுகளை உக்கிரமாகத் தாக்கிய மழைத்துளிகள் எழுப்பிய பேரிரைச்சல் காதையே செவிடாக்கிவிடும் போல்த் தோன்றியது. குளிர் எலும்புவரை ஊடுருவிப் பாய்ந்தது. விடாது பெய்த மழையால் கருப்பனும் வள்ளியும் மிகுந்த மனச்சோர்வும், உடல் சோர்வுமடைந்தனர்.

வேலை செய்யும்போது கம்பளிச் சுற்றிக் கொண்டாலுங் கூட சிலநிமிடங்களில் உடல்முழுவதும் மலையில் நனைந்து ஊறிப்போனது. மழைக்காலம் இன்னொரு தொல்லையையும் கொண்டுவந்து சேர்த்தது. அதுவரை கண்ணிலேயே படாமலிருந்த அட்டைகள் எங்கிருந்தோ கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வரத்தொடங்கின. கால்களிலும் உடல் முழுவதிலும் பரவி ரத்தத்தை உறிஞ்சியெடுக்கத் தொடங்கின. அட்டைக்கடி வலிக்க வில்லை என்றாலும் அது கடித்த இடத்திலிருந்து தொடர்ந்து அட்டை விட்ட பின்பும் பலமணிநேரத்திற்கு ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

புகையிலை, எலுமிச்சை, சோப்பு கலந்து ஒரு பசை தயாரித்து வேலைக்கு போவதற்கு முன்பு கால்களில் தடவிக்கொள்ள வேண்டும் என்று ராமாயி வள்ளிக்குச் சொல்லிக்கொடுத்தாள். அது ஓரளவுக்கு அட்டைகளைத் தடுத்தது என்றாலும் இரண்டு மூன்று அட்டைக்கடி இல்லாமல் ஒருநாள் கூட கழியவில்லை. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கோடுகோடாக கால்களில் ரத்தம் ஒழுக தெருவில் நடந்து செல்வதை சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிந்தது.

ரத்தம் வழிவரைத் தடுக்க அவர்கள் கொழுந்து இலைகளையோ, மெல்லிய காகிதத் துண்டுகளையோ அட்டை கடித்த இடத்தில் ஒட்டிக் கொண்டனர். இரத்தம் உறைத்தாலும் அது வழிவது நின்றுவிடும். ஆனால் மழை உறைந்த ரத்தத்தை கழுவிப் போக்கிவிட கடிவாயிலிருந்து திரும்பவும் ரத்தம் வழியத் தொடங்கிவிடும்.

வள்ளிக்கு அட்டைகளைப் பார்த்தால் பைத்தியமே பிடித்துவிடும் போலாகியது. காலில் அட்டை ஏறு வதைப் பார்த்துக்கொண்டே இருந்தாலும்கூட அதைத் தட்டிவிடும் துணிச்சல் அவளுக்கு வரவில்லை. ஆனால் பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த மற்ற பெண்கள் அவளுக்கு உதவினர். பலமாதங்கள் கழித்ததுதான் அவளால் அட்டை பயத்திலிருந்து விடுபட முடிந்தது. விடாது கொட்டிய மழையில் ஊறி குளிரில் விறைத்துப் போயி ருந்த கை, கால்கள் இயல்பாக இயங்க மறுத்தன. மரத்துப்போன கைகளைக் கொண்டு அவளால் இலை களைப் பறிக்கவே முடியவில்லை. சுற்றியிருந்த கம்பளி யால் ஒரு உபயோகமுமில்லை. மழையிலும், குளிரிலும், காற்றிலும் பற்கள் கிடுகிடுக்க உடல் தன்போக்கில் நடுங்கிக்கொண்டிருந்தது. அரிசியை தண்ணீரில் ஊற வைத்து வாயில் மென்று கொண்டிருக்க அவள் ராமாயியிடமிருந்து கற்றுக்கொண்டாள். நடுக்கத்தைச் சமாளிக்க அதை அசைபோடுவது ரொம்பவும் உதவியாயிருந்தது.

வேலை முடிந்தபிறகு அறைக்குச் சென்றால் கம்பளியிலிருந்து சொட்டும் நீர் ஒருநொடியில் தரை முழுவதையும் சொதசொதவென்றாக்கிவிடும். கொட்டிக் கொண்டிருக்கும் மழையிலிருந்து நேராக அறைக்குள் கால் வைத்ததும் முதல் வேலையாக அடுப்புத் தீயில் கம்பளியை உலர வைப்பார்கள். அந்த கம்பளியைத்தான் இரவில் அவர்கள் போர்த்திக் கொள்ள வேண்டியதாயிருந்தது. ஏற்கனவே ஈரமாகி குளிர்ந்து போயிருந்த தரை தன் பங்குக்குச் சித்திரவதை செய்தது.

இப்போது இன்னொரு வகையான காய்ச்சல் தலை தூக்கியது. இரத்தக் காய்ச்சலோடு கடுமையான இருமலும், பலநேரங்களில் இரத்தம் கக்குவதும் சேர்ந்து வந்தது (நிமோனியா,ப்ரோங்க்கோ நிமோனியா). தொழிலா ளர்களில் கால்வாசிபேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டனர். ஏதாவது குழந்தைக்கு இந்தக் காய்ச்சல் வந்து விட்டால் அதை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றவே முடியாது. பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மரணமடைந்தனர். வாணலியில் வறுபட்டுக் கொண்டிருப்பதற்கு பதிலாக நேரடியாக நெருப்பி லேயே விழுந்துவிட்டது போல கருப்பனுக்கும் வள்ளிக்கும் தோன்றியது.

அந்த நாட்களில், முக்கியமாக கடுமையாக மழை பெய்த நாட்களில் வேலைக்குப் போகாமல் லைனிலேயே இருக்க வள்ளி விரும்பியிருப்பாள். ஆனால் வெள்ளையன் அவளையும் மற்ற அத்தனை பேரையும் தேயிலைக் காட்டுக்கு விரட்டியடித்தான். அதைவிட மோசமானது என்னவென்றால் இவ்வளவு பயங்கரமான சூழ்நிலைகளில் வேலை செய்தாலும்கூட இலை பறிப்பவர்களால் ஒருநாளைக்கு ஒரு அணாகூட சம்பாதிக்க முடிய வில்லை. பயங்கரமான மழை, குளிரின் காரணமாக தேயிலைப் புதர்களில் மிகச்சொற்ப இலைகளே இருந்தன. மிகத்திறமையான இலை பறிப்பவர்களா லேயே கூட நான்கைந்து பவுண்டுக்கு மேல் இலை பறிக்கவே முடியவில்லை. ஜூன் ஜூலை மாதங்கள் முழுவதும் நிமிட நேர இடை வேளையின்றி மழை கொட்டித் தீர்த்தது. ஒருநாள் கூட சூரியன் இருண்ட மேகக் கூட்டங்களுக்கு பின்னிருந்து வெளியே வரவேயில்லை. பழனி, ஈரோடு கூலிகளுக்கு ஜூன் மாதத் தொடக்கத்தில் கணக்குத் தீர்க்கப்பட்டது. திருநெல்வேலிக் கூலிகள் மட்டுமே எஸ்டேட்டில் மீதி இருந்தனர்.

ஜூன் மாதத்தில் தேயிலைப் புதர்களை கத்தரித்து சமப்படுத்தும் வேலை நடக்கும். எஸ்டேட்டில் தேயிலை வளரும் பகுதியில் கால்பங்கு வெட்டி சீர்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் ஒருமுறை எஸ்டேட் முழுவதும் சீர்படுத்தப்படும் விதத்தில் இந்த கணக்கு கடைபிடிக்கப்பட்டது. தேயிலை பறிப்பவர்களுக்கு எளிதாக எட்டும் விதத்தில் தேயிலைப் புதர்களை மூன்று நான்கடி உயரத்தில் தொடர்ந்து வைத்திருக்கவே அவை வெட்டி வெட்டி விடப்படுகின்றன. வெட்டி சீர்படுத்தும் போது புதர்களின் உயரம் ஒன்றரை அடியாகக் குறைக்கப் படும். வெட்டப்பட்ட ஒரு புதரில் பறிப்பதற்கு ஏதுவான இலைகள் வளர ஆறுமாதங்கள் ஆகும்.

ஆகஸ்டு மாதம் வந்ததும் பருவமழையின் சீற்றம் சற்றே தணிந்தது. கார்மேகக் கூட்டங்களுக்குப் பின்னிருந்து சூரியன் மெதுவாக எட்டிப்பார்க்கத் தொடங்கியது. முதலில் சிலநிமிடங்களும், போகப்போக சிலமணி நேரங்களும் சூரியஒளி தேயிலைப் புதர்களையும் குளிரில் வாடி விரைத்துப் போயிருந்த மனித உடல்களையும் வருடிக் கொடுக்கத் தொடங்கியது. முதல்நாள் சூரியனைக் கண்டதும் வள்ளிக்கு ஆனந்தத்தில் கத்திக் கூச்சலிட வேண்டும் போல் தோன்றியது. ஒவ்வொருவரும் மாற்றத்தை உணர்ந்தனர். காலைநேரங்களில் கதகதப்பான சூரிய ஒளி யில் முதியவர்களும், பெண்களும், குழந்தைகளும் தங்களை சூடுபடுத்திக் கொண்டனர். இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது மழை கொட்டித் தீர்த்தது.

"இன்னொரு பதினைந்து நாளைக்கு இதேமாதிரி வெயில் அடிச்சா நல்லா இலைக துளிர்த்து வந்திடும்". ராமாயி வள்ளியிடம் சொன்னாள். "இனியும் மழை பெய்யுமா?" அந்த நினைப்பே வள்ளியைப் பீதியடைய வைத்தது.

"ஆமா, அடுத்த மழைகாலம் இனிமேதான வரும். ஆனா அது அக்டோபர் மாசந்தான் வரும்." "அந்த மழைக்காலம் எத்தனை நாளைக்கு இருக்கும்கா?"

"அக்டோபர் மாசம் முழுக்க மழை கொட்டித்தள்ளும். நவம்பர் மாசம் தொடங்கிட்டா மழை கொறைஞ்சுடும். முணாவது வாரத்தில் மழை கொஞ்சங் கொஞ்சந்தா பெய்யும்" ராமாயி கூந்தலை அள்ளி முடிந்துகொண்டே பதிலளித்தாள்.

(Red Tea நாவலின் முதற்பதிப்பு 1969ல் அப்போதைய குடியரசு துணைத்தலைவர் வி.வி.கிரி அவர்களின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது. நாவலின் தமிழாக்கத்தை மிகவிரைவில் வெளியிடவிருக்கிறது விடியல் பதிப்பகம்.)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com