Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007


நேர்காணல்: இயற்கை வேளாண் ஆர்வலர் பாலசுப்பிரமணியன்

ஜே.ஷாஜஹான்

இடதுசாரி அரசியல், பின் தமிழ்த்தேசியம், பழந்தமிழ் இலக்கியம் என்கிற ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட உங்களுக்கு இவற்றிலிருந்து முற்றிலும் வேறான 'இயற்கை வேளாண்மை' குறித்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

படிக்கிற காலத்திலேயே தமிழார்வம் இயல்பாக இருந்தது. பள்ளி ஆசிரியர்களும் ஒரு காரணம். பத்திரிகை சார்ந்த ஆர்வம் காரணமாக ஒரு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியிருந்தது. அப்போது மக்களுடைய அடிப்படையான சிக்கல்களை நேரடியாகக் காணமுடிந்தது. வேளாண்மைதான் பெரும்பான்மையான மக்களின் சிக்கலுக்குத் தீர்வாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் தற்போதைய வேளாண்மையில் ஏதோ நெருடலாக இருந்தது. விவசாயிகள் மென்மேலும் ஏழைகளாகிற விசயத்தை அனலிட்டிக்கலாகப் பார்க்கிறபோது மேலும் நிறைய படிக்க வேண்டி வந்தது.

அந்த சமயத்தில் 'இல்லஸ்டிரேடட் வீக்லி'யில் கிளாடு ஆல்வாரிஸ் நேர்காணல் வந்தது. நமது பாரம்பரிய வேளாண்மை எப்படி பசுமைப்புரட்சி எனும் பெயரில் மாற்றி அமைக்கப்பட்டது என்று சொல்லியிருந்தார். பின் 1992ல் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டினைத் தொடர்ந்து உலகம் முழுவதும் சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை பற்றிய விவாதங்கள் கிளம்பின. Sustainable Development பற்றி பேசப்பட்டது. பூவுலகின் நண்பர்கள் எனும் அமைப்பின் மூலம் 'ஒற்றை வைக்கோல் புரட்சி' எனும் நூலை தமிழில் கொண்டு வந்தோம். இயற்கை வேளாண்மை பற்றி நிறைய பேசிக்கிட்டு மட்டும் இருக்காமல் அடுத்தகட்டமாக ஏதாவது செய்தால் என்ன என்று தோன்றியது.

அடிப்படையில் இடதுசாரி பார்வை இருந்தது. கியூபா வில் இயற்கைவேளாண்மை வெற்றிபெற்ற செய்தியை முதன்முதலில் தினமணியில் நான்தான் எழுதினேன். வெறும் புத்தகம், எழுத்து என்றில்லாமல் நடைமுறை யில் இவற்றைச் செய்துபார்க்கத் தோன்றியது. ஈடுபட்டேன்.

இந்தியாவில் சுற்றுச்சூழலியம், இயற்கை வேளாண்மை என்பன மேட்டுக்குடிகளின் அக்கறையாக இருந்த நிலையில் உங்களின் ஈடுபாடு எத்தகையது?

மேட்டுக்குடிகளுக்கானது என்பது முழு உண்மை அல்ல. அடிப்படையில் இயற்கை வேளாண்மை தற்சார்புள்ளது. எளிய தொழில்நுட்பம் மூலம் வெற்றி பெறக்கூடியது. உண்மையில் அடித்தட்டு மக்களுக்கு ஏற்றது.

பின் மேட்டுக்குடி அடையாளம் ஏற்படக் காரணம்...?

இந்தியா பல்வேறு சிக்கல்கள் நிறைந்த சமூகம். இதில் தலித் அமைப்புகள், இடதுசாரிகள் ஒவ்வொரு தளத்தில் வேலை பார்க்கிறார்கள். சுற்றுச்சூழல் அமைப்புகளில் பணிபுரிகிறவர்கள் பெரும்பாலும் மேட்டுக்குடியினர். அவர்கள் விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்றனர். பசுவை பாதுகாப்பதை மதத்தோடு தொடர்புபடுத்தி பேசினார்கள். இங்கே தலித்துகள் இரட்டைத் தம்ளர் முறை, சாணிப்பால் எனும் கொடுமைகளுக்கு உட்படும் போது அத்தகைய முக்கியப் பிரச்னைகளைப் பேசாமல் விலங்குகள் பற்றி பேசுவது இயல்பாகவே வெறுப்புக்கு உட்படுகிறது. மனிதர்கள் பற்றி பேசாமல் விலங்குகள் பற்றி பேசுவது ஒரு மோஸ்தராக விளங்கியது.

இயற்கை வேளாண்மையில் கியூபாவின் ஈடுபாடும் வெற்றியும் ஏகாதிபத்திய எதிர்ப்பிலிருந்து வேர் விட்டவை. எனில் இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களான இடதுசாரிகள் இயற்கை வேளாண்மையை ஏன் முன்னெடுக்கவில்லை?

விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தி ஒருவகையான போர்முறையையும் இடதுசாரிகள் மற்றொரு வகையான போர்முறையையும் மேற்கொண்டனர். அம்பேத்கர் வேறொரு வகையான முறையில் போராடினார். இயற்கைவேளாண்மை இயந்திரங்களைப் புறக்கணித்து மாடுகளைப் பயன்படுத்துவது, மனித உழைப்பை முன் னிறுத்துவது என்பனவெல்லாம் காந்தியின் கோட்பாடாகும். அவரைவிடவும் ஜே.சி.குமரப்பா பெரிய சிந்தனைவாதி.

அவர் வேளாண்மை மட்டுமல்ல, அனைத்து தொழில்நுட்பமும் குவியல் முறையை நோக்கிப் போகும்போது சிக்கல்களை ஏற்படுத்தும் என்றார். சோவியத்தில் பெரும் உற்பத்தியை நோக்கிய திட்ட மிடல் என்பது நிறைய உற்பத்தி செய்தால் எல்லோருக் கும் கிடைக்குமே என்று நினைக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் பிரித்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தப்படவில்லை. மேல்மட்டத்திலேயே செல்வம் இருந்ததேயன்றி கீழேவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை.

தலித்துகள் கிராமத்தைவிட்டு நகரங்களுக்கு வரும்போது வேளாண்மைபற்றிய கவனம் தலித் இயக்கங்களில் கூடுதலாக இல்லை. கேரளாவில் நிலப்பகிர்வு நடந்தி ருக்கு. அது சமச்சீராக நடந்திருக்கிறதா என்கிற கேள்வி இருக்கு. சீனாவின் வளர்ச்சி பற்றி ஆயிரம் கேள்விகள் இருந்தாலும்கூட இன்றைக்கும் அவர்கள் தாக்குப்பிடிக்க நிலச்சீர்திருத்தம், பகிர்ந்தளிப்பு என்பவை முக்கிய காரணிகளாக இருக்கு.

கியூபாவில் நெருக்கடி காலத்தில் 90% நிலம் அரசிடமி ருந்தது. நிலம் பொதுவானதாக இருந்தபோது விவசாயி களுக்கு மண்ணின் மீதான பிடிப்பு இல்லாமல் போனது. அப்போதுதான் காஸ்ஸ்ட்ரோ கூட்டுறவு பண்ணைகள் என்று துவக்கி சிறுசிறு குழுக்களாக்கி விவசாயம் செய் வித்தார். இந்தப்போக்கு இயல்பாகவே அமெரிக்க எதிர்ப்பிற்கு பயன்பட்டது. எப்படியாவது கியூபாவை நசுக்கிவிடலாம் என அமெரிக்கா நினைத்தபோது சோவியத் உடைசலால் கியூபா பெரும் நெருக்கடிக்குள்ளானது.

அமெரிக்காவிற்கு பணிவதா சோசலிசத்தை தக்க வைப்பதா எனும் போராட்டத்தில் இயற்கை வேளாண் மைதான் கியூபாவிற்கு கைகொடுத்தது. இது ஒரு தற்சாற்பு வேளாண்மை என்பதை உலகம் அதன்பிறகுதான் அறிந்து கொண்டது. இந்தியாவில் அதை ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளமாக விரிவாக்காமல் மேட்டுக்குடி மோஸ்தராக்கிக் கொண்டார்கள்.

சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மைத் தளங்களில் நிதிபெறும் நிறுவனங்களின் செயல்பாடுகள்கூட இடதுசாரிகளுக்கு ஈடுபாடின்மையை உருவாக்கியிருக்கலாமோ?

பெரும்பாலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நிதி கிடைக்கும் திட்டங்களை நோக்கிப் போகிறவர்கள். அவர்களும் சில சரியான விஷயங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். குறிப்பாக 'கொக்கோகோலா எதிர்ப்பு இயக்கம்'. எய்ட்ஸ் பற்றி அரசால் எவ்வளவு அக்கறை செலுத்தப்பட்டு தன்னார்வ அமைப்புகள் மூலம் பணம் செலவழிக்கப்படுகிறதோ, அந்தளவுக்கு இயற்கை வேளாண்மைக்காக செலவழிக்கப்படுவதில்லை. துண்டு துண்டான போராட்டங்கள் மட்டுமே நடத்தப்படுகிறது.

இடதுசாரி இயக்கங்களுக்கு இயற்கை வேளாண்மை பற்றி கூடுதலான புரிதல் இல்லை. சிபிஎம், சிபிஐ தோழர் களிடம் இந்த விவாதத்தை முன்னெடுத்தோம். பெரும் பாலும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் முன்னெடுத்துச் செல்லவில்லை. அவர்களுக்குள்ள சூழலில் நேரமில்லையா? அல்லது மனமில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் இதனை மறுக்கவில்லை, தவறானது எனச் சொல்லவில்லை, கொள்கைரீதியாக இடதுசாரிகள் இதனை ஏற்றுக் கொண்டு ஏன் நடைமுறைப்படுத்த முன்வரவில்லை என அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.

சுற்றுச்சூழல் தளத்தில் சிறுசிறு போராட்டங்களாக நடத்தி, பெரும் மக்கள் போராட்டங்களை தொண்டு நிறுவனங்கள் மடைமாற்றுகின்றன எனும் கருத்தாக்கம் இயற்கை வேளாண்ஆமை நோக்கி இடதுசாரிகள் வருவதில் சிக்கலாக இருக்குமா?

அப்படியொரு விவாதத்தை நான் சந்தித்த இடதுசாரிகள் யாரும் நடத்தலை. நீங்கதான் இந்தக் கேள்வியை முதன் முதலாக முன்வைக்கிறீங்க. அதுபற்றி ஆரோக்கியமான விவாதங்கள் தேவை. கியூபா போன்ற சோசலிச நாட்டில் வெற்றி பெற்று, முற்போக்காளர்கள் உலகம் முழுவதும் ஒப்புக்கொண்ட ஒருமுறைதான் இது. அதில் ஏதேனும் மாற்றுக் கருத்திருந்தால் விவாதிப்பது நமது கடமை யாகும். அப்புறம், சிறுசிறு போராட்டங்கள் என்றீர்கள். எங்கேயும் தன்னெழுச்சியான போராட்டங்கள் சிறுசிறு பகுதிகளில்தான் நிகழும். அதனை ஒன்று சேர்த்துப் பெரும் போராட்டமாக ஒருங்கிணைக்க வேண்டியது இடதுசாரிகளின் கடமை. அவர்கள் அதைச் செய்யத் தவறினால் வரலாற்றுப் பிழையாகத்தான் மாறும்.

இயற்கை வேளாண்மையில் பலவித சிந்தனைப் போக்குகள் பேசப்படுகின்றன. நீங்கள் கூறுவது இதில் எத்தகையது?

உண்மைதான். இயற்கை வேளாண்மையில் நிறைய சிந்தனைப்பள்ளிகள் உள்ளன. புகாகோ பேசுவது இயற்கைக்குத் திரும்புவது. ஆசையைத் துறத்தல் எனும் பௌத்தக் கோட்பாட்டின் அடிப்படையில் சொல்கிறார். இயற்கை வேளாண்மையில் நிறைய கிரியேட்டிவிட்டி சாத்தியங்கள் உள்ளன. ஆஸ்திரேலிய பில்மோல்சன் கோள்கள், காஸ்மிக் கதிர்கள் என பிரபஞ்சத்தையே கணக்கில் கொண்டுதான் பண்ணையம் செய்யவேண்டும் என்கிறார். அது மற்றொரு சிந்தனைப்பள்ளி. மஹா ராஷ்டிராவில் வாழ்ந்த தபோல்கர் எனும் அறிஞர் Natural Eco Culture எனும் முறையைப்பற்றி பேசுகிறார். ஐரோப்பாவில் Bio intensive gardening பேசுறாங்க. நாங்க பேசுவது தாளாண்மை எனும் 'தற்சார்பு வேளாண்மை'. நமது அடிப்படை நோக்கம் வேளாண் தற்சார்பு உள்ளதாகவும், விவசாயி தற்சார்பு உள்ளவராக வும் இருக்கவேண்டும் என்பதுதான்.

நமது பாரம்பரிய வேளாண்மைக்குத் திரும்புவதில் விவசாயிகளுக்குள்ள இடர்ப்பாடுகள் எவை?

இயற்கை வேளாண்மை என்பது அறிவியல் சார்ந்தது தான். நிலத்தில் ஏதேனும் ஒரு சத்து குறைந்தால்கூட விளைச்சல் குறையும். முதன்முதலில் இரசாயன உரங்களைப் போடும்போது நமது நிலம் குறைவாக இருந்த சத்துக்களை எடுக்க முடிந்ததால் விளைச்சல் நன்றாக இருந்தது. ஆனால் நிலத்திலிருந்த நுண்ணுயிரி கள் ரசாயன உரங்களால் கொல்லப்பட்டதும் கடுமை யான வீழ்ச்சி ஏற்பட்டது. 1970க்குப் பின் விளைச்சல் கடுமையாக குறைந்துவிட்டது. பசுமைப்புரட்சி என்பது உற்பத்தியை அதிகப்படுத்தி, இந்திய மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தது என்பது எள்ளளவும் உண்மையில்லாத தகவல். நோபல் பரிசு பெற்ற அமர்த் தியா சென் தன் ஆய்வுகளின் மூலம் பஞ்ச காலங்களில் கூட நமது ஏற்றுமதி குறையவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனவே எப்போதும் நமது வேளாண் உற்பத்தி யில் குறைபாடு இல்லை. பங்கீட்டில்தான் பிரச்னை. இன்றைக்கும் இந்திய கிடங்குகளில் புழுத்துப் போகிற உணவுப்பொருட்கள் பெருமளவில் உள்ளன.

பசுமைப்புரட்சியை ஜோஷி போன்ற இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்திருக்காங்க. முதன்முதலில் டிராக் டரை அறிமுகப்படுத்தியபோது 'இது சாணி போடுமா வென்று' காந்தியடிகள் கிண்டலாகக் கேட்டதாகச் சொல்வார்கள். டிராக்டருக்கான எரிபொருளுக்கு நாம் பிறரைச் சார்ந்து இருக்கணும். பசுமைப்புரட்சி என்பது இரண்டாம் உலகப்போருக்குப் பின் வந்தது. முதல் உலகப்போர் காலத்திலேயே 'அம்மோனியா' கண்டு பிடிச்சுட்டாங்க. ஆனால் அப்போது அது வெடிகுண்டு செய்யப் பயன்பட்டது. உலகப்போர்களுக்குப் பிறகு பெரிய பெரிய அம்மோனியா கம்பெனிகளை மூட வேண்டி வந்தது. அப்போதுதான் அதனை 'யூரியா' தயாரிக்கப் பயன்படுத்தி மூன்றாம் உலகநாடுகளில் சந்தைப்படுத்தினார்கள். வறுமையும், பட்டினியுமா யிருக்கிற நாடுகளில் கோதுமையை இலவசமாகக் கொடுத்துவிட்டு, ஏன் இந்தக் கோதுமையை நீங்களே உற்பத்தி செய்யக்கூடாது என்று கூறி உப்பு உரங்களை விற்க வந்த திட்டம்தான் 'பசுமைப்புரட்சி' திட்டமே தவிர வேறு நல்ல நோக்கங்கள் கிடையாது. வறுமையை ஒழிப்பது தான் உலகவங்கியின் வேலைத்திட்டம், அதற்காகவே நாங்கள் கடன் தருகிறோம் என்று சொல்லிக்கொண்டு உலகநாடுகளை சுரண்டுகிற மாதிரி தான் 'பசியைப் போக்க பசுமைப்புரட்சி' என்பதும்.

பசுமைப்புரட்சி என்பதே மஞ்சள் புரட்சிதான். நெல், கோதுமை போன்ற நன்செய் தானியங்கள் மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது. புன்செய் தானியங்கள் பசுமைப்புரட்சியின் கீழ் ஏன் வரவில்லை?

புன்செய் தானியங்கள் வசதிப்படாது. நெல், கோது மைக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். அதற்காக பல அணைக்கட்டுகள் கட்டலாம். சிமெண்ட் விற்கலாம். பெரிய நிலப்பரப்புக்கான டிராக்டர் விற்கலாம். பண்ணையார்கள் 100 ஏக்கர் 200 ஏக்கர் என நன்செய் வைத்தி ருப்பவர்கள்தான். புன்செய் நிலங்கள் இயந்திரமயத்திற்கு சாத்தியப்படாது என அவர்களுக்கு நன்கு தெரியும்.

ஆனால் எம்.எஸ். சுவாமிநாதன் உணவு நெருக்கடி காலத்தில் பசுமைப்புரட்சிதான் ஒரேவழியாக இருந்தது என்கிறாரே?

எம்.எஸ்.சுவாமிநாதன் பற்றி நிறையச் சொல்லிட்டாங்க. ஒரு சம்பவம் சொல்கிறேன். அவருக்கு மகசசே விருது கொடுத்தாங்க. இவரது குருநாதர் Norman Borlock இவர் பெயரை முன்மொழிந்தார். விருதுக்கான காரணமாக இவர் கண்டுபிடித்த கோதுமையில் 16% புரோட்டின் சத்து இருக்குதுன்னு சொன்னாங்க. பரிசும் கிடைத்து விட்டது. பல விஞ்ஞானிகள் பன்றி இறைச்சியில்கூட இவ்வளவு புரோட்டின் இல்லையேன்னு கேட்டார்கள். அப்போது அவர் 16% கிடையாது, 1.6%தான். டைப்பிங்கில் தவறு நடந்துவிட்டது என்றார். அப்படியானால் விருதை திருப்பித் தந்திருக்க வேண்டும். அல்லது மன்னிப்பாவது கேட்டிருக்க வேண்டும்.

முன்னர் பசுமைப்புரட்சிதான் சிறந்ததுன்னாரு. பிறகு இயற்கை வேளாண்மைதான் சிறந்ததுன்னாரு. இப்ப மரபீணி மாற்ற விதைகளைப் பரிந்துரைக்கிறார். இவரைப்பற்றி பல விஷயங்கள் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனா பெரும் பத்திரிகைகள் கண்டுக்கிறதில்ல. வெளிநாடுகளில் இப்படி ஒருவரை ஏத்துக்கிடவே மாட்டாங்க. இந்தியாவில் இன்னும் விருதுகளும் பாராட்டும் கிடைச்சிட்டிருக்கு.

செயற்கை வேளாண் உரங்கள் நிலத்தை மலடாக்கி விட்டன. உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் நிலத்தின் நுண்ணுயிரிகளை அழித்துவிட்டன. இந்நிலையில் நிலங்கள் பழையநிலைக்குத் திரும்புவதோ, இயற்கைவேளாண் முறைக்கு மாறுவதோ நடை முறையில் சாத்தியமானதுதானா?

எளிதான காரியம்தான். பசுமைப்புரட்சிக்கு எவ்வளவு பணம் கொட்டினார்கள். நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. இப்போது நிலம் மலடாகிவிட்டது. மண்ணில் நல்விளைச்சலுக்கு 2.4% உயிரகக் கரிமம் இருக்கவேண்டும். இப்போது இல்லை. சிறு குறு விவசாயிகளுக்கு அரசு ஒரு ஆண்டிற்கு மண்ணகக் கரிமத்திற்கு மானியம் தந்தால் முற்றிலுமாக இயற்கை வேளாண்மைக்கு மாறி விடலாம். 33,000 கோடி ரூபாய் யூரியாவுக்கு மட்டும் மானியம் தர்றாங்க. 100 கோடி ரூபாய் மண்புழு மானியம் தர்றாங்க. 33,000 கோடி எங்கே? 100 கோடி எங்கே? ஜப்பானில் இன்னமும் 1மாடு வச்சிருந்தால் 1 டாலர் மானியம் தர்றாங்க. இந்தியாவில் மாட்டிற்கு மானியம் தந்தால் இயற்கை வேளாண்மை வளரும்.

இயற்கை வேளாண்மை சிறு அளவில்தான் சரியாக வரும். அனைவருக்கும் சாத்தியம் கிடையாது என்பதும் இயற்கை வேளாண்மைக்கு ஏற்ப விவசாயிகள் எண்ணிக்கை இல்லை என்பது பற்றியும் உங்கள் கருத்து என்ன?

முன்பே சொன்னதுபோல உற்பத்தியில் பிரச்சினை இல்லை. பகிர்தலில்தான் சிக்கல். வேதி வேளாண்மை வெற்றி பெற்றிருந்தால் உற்பத்தி அதிகமாகி இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஆகவில்லை. 60களின் உற் பத்தி சதவீதம் 70களின் பிற்பகுதியில் மிகவும் குறைந்து விட்டது. இதை எம்.எஸ். சுவாமிநாதன்கூட ஒப்புக் கொள்கிறார். இயற்கைவேளாண்மையிலோ ஆண்டுக் காண்டு நிலம் வளம் கூடி உற்பத்தி பெருகி வருகிறது. ப.சிதம்பரம் 3%மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டால் போதும்கிறார். அமெரிக்காவில் 20கோடி மக்கள் இருக்கிறார்கள். அங்கே பெரும் பண்ணைகள் அமைத்து 3% மக்கள் ஈடுபட்டால் போதுமானதாக உள்ளது. ஆனால் இந்தியாவில் 60% மக்கள் வேளாண் உற்பத்தியை நம்பி வாழ்கிறார்கள்.

இயற்கைவேளாண்மைப் பொருட்கள் விலை கூடுதல் என்பது பற்றி?

உற்பத்தி செலவு குறைய குறைய விலை குறையும். மேலும் இயற்கை வேளாண்மைப் பொருட்களை அதிகம் வாங்குவது மேல்தட்டு மக்களே. அதையும்கூட அரசு ஏற்றுமதி செய்யுங்கள் என்கிறது. ஏற்றுமதிக்கு இயற்கை வேளாண்பொருட்கள், நாம் உண்பதற்கு வேதிப் பொருட்கள் என்பதே யதார்த்தநிலை. கோக்கோ கோலாவை பாராளுமன்ற வளாகத்தில் தடை செய்து விட்டு நாடு முழுவதும் குடிக்க அனுமதித்திருப்பது போலத்தான் இதுவும்.

இயற்கை வேளாண்மை நமது மொத்தத் தேவையை பூர்த்தி செய்துவிடக் கூடியதுதானா?

நிச்சயமாக, கியூபாவில் முடிந்திருக்கு. ஹவானாவின் மொத்தக் காய்கறித் தேவையை அந்த நகரமே உற்பத்தி செய்கிறது. வீட்டைச் சுற்றியுள்ள சிறு துண்டு நிலங்கள், டப்பாக்கள், மாடிகள் என இயற்கைவேளாண் முறை யில் காய்கறிகள் வளர்க்கப்படுகின்றன. நகர்ப்புறத்தி லேயே நஞ்சில்லாத உணவு அங்கே சாத்தியப் பட்டிருக்கு. இயற்கை வேளாண்மைக்கு அதிகமான விவசாயிகள் வர வர விலைகளும் குறையும்.

சமீபத்திய காலச்சுவடு இதழில் மலையாள எழுத்தாளர் திரு.சக்காரியா எழுதிவரும் பத்தியில் கோக் நிறுவனத்திற்கு எதிரான சுற்றுச்சூழலியர் களின் போராட்டத்தை தவறானது என்கிறார். கேரளத் தொழில்துறை இதுபோன்ற போராட்டங் களால் பாதிக்கப்படுகிறது என்கிறார்.....

இதுகுறித்து விரிவாகப் பேசணும். மனிதர்கள் முதலில் கைகளால் மட்டுமே உற்பத்தி செய்தார்கள். பிறகு இயந்திரங்களால். இப்போது மின்னணு உற்பத்தி வந்து விட்டது. உற்பத்தி என்பது Infinitive ஆகிவிட்டது. தொழில் உற்பத்தி பூதாகரமாகிவிட்டது. இந்த பூதத்திற்கு உணவு தரணும். அதற்கு இயற்கை வளங்கள்தான் உணவு. அது உண்டு உண்டு கழிவை வெளியே தள்ளிட்டே இருக் கும். அந்தக் கழிவுகளை மறுபடி பயன்படுத்த முடியாது. இந்த வளங்கள் சாமானிய மக்களுடையவை. சாமானிய மக்களின் வாழ்வாதாரங்கள்தான் இந்த பூதங்களின் தீனி.

எடுத்துக்காட்டாக பழங்குடி மக்களின் நிலங்களை அரசு கையகப்படுத்தி சுரங்கங்களை அமைக்குது. ஒரிஸ்ஸாவில் நடக்கிற போராட்டங்கள் உங்களுக்குத் தெரியும். அலுமினிய, இரும்புச் சுரங்கங்கள் வளமான காட்டு நிலங்களில் அமைகின்றன. பழங்குடி மக்களுக்குப் பட்டா இல்லை. நீதிமன்றங்களில் அவர்கள் போராட முடியாது. கடலோரங்களில் தீம்பார்க் அமைக்க அவர் களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுகி றார்கள். அங்கே யாரிடம் பட்டா இருக்கு? ஆண்டாண்டு காலமாக வாழும் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். வளரும் தொழில்நுட்பங்கள் எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் உண்டு.

கத்தியைக் கொண்டு ஆப்பிளையும் வெட்டலாம் மனிதனையும் வெட்டலாம். ஆனால் அணுகுண்டு யாரிடம் இருந்தாலும் ஆபத்துதான். இன்றைக்கு இது புதிய சூழல். மார்க்ஸ் காலம்வரை இந்தச்சூழல் இல்லை. பிரமாண்டமான தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களுக்கு எதிரானவைதான். அத்தகைய பூதாகரமான தொழில்நுட்பங்கள் இன்றைக்கு பன்னாட்டுக் கம்பெனிகளிடம் உள்ளன.

இப்போது கோக்கோகோலா பற்றிப் பேசுவோம். விவசா யத்தில் 80% தண்ணீர் செலவழிக்கப்படுவது உண்மை தான். வேளாண்மைக்குப் போக மீதி தண்ணீர் ஆறு, குளத்திற்கோ அல்லது ஆவியாகியோ போகிறது. அத்த கைய விவசாய பயன்பாட்டு நீரில் கழிவுகள் கிடையாது. பூமிக்குள்ளே போனாலும் அது மறுபயன்பாட்டுக்கு உகந்ததுதான். கோக் நிறுவனம் பூச்சிக்கொல்லிகளைப் போட்டு நீரை நஞ்சாக்கி விடுகிறது. தற்போது மக்களின் ஆதாரமான தண்ணீரை அப்படியே வியாபாரமாக்கு கிறார்கள். அவர்களுக்கு ஆதரவான பார்வையே தவறு. பழங்குடி மக்கள் காட்டை அழிப்பவர்கள், அவர்களை வெளியேற்றினால் காடுகளைக் காப்பாற்றலாம் என்பதைப் போன்ற பிழையான பார்வைதான் சக்காரியாவின் பார்வையும்.

ஐரோப்பா அளவிற்கு இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்கள் கடுமையாக இல்லாதது ஏன்?

ஐரோப்பாவில் தோல் தொழிற்சாலைகள், சாயப்பட் டறைகள் வைக்க முடியாதா? ஏன் திருப்பூரிலிருந்து தம் நாட்டிற்கு இறக்குமதி செய்கின்றனர்? சுற்றுச்சூழல் சட்டங்கள் அங்கே கடுமையாக இருக்கின்றன. அதனால் தயாரிப்பு செலவுகள் மிக அதிகம். இங்கே சட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக இல்லை. அதனால்தான் 'ஸ்டெரிலைட்' போன்ற கம்பெனிகள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. இவை சீர்கெடுக்கும் தொழிற் சாலைகள்.

ஒருகாலத்தில் தேம்ஸ் நதி சாக்கடைபோல் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் இன்றைக்கு அதனை Crystal clear நதியாக பாதுகாக்குறாங்க. நாம நதிகளையெல்லாம் மாசுபடுத்துகிற ஆலைகளை அனுமதிச்சுக்கிட்டிருக்கோம். அங்கே சுற்றுச்சூழலில் ஒரு பாதிப்பு எனில் உடனடியாகத் தெரிந்துவிடும்.

பூகோளரீதியாக நிலநடுக்கோட்டுப் பகுதியில் நல்ல வெயிலும் நல்லமழையும் கிடைக்கிறது. எனவே அங்கே அடர்ந்தகாடுகள் உள்ளன. கொஞ்சம் தள்ளி புல்வெளி கள், அதைத்தாண்டி ஊசியிலைக்காடுகள், பின் தூந்திரப் பிரதேசம் என அமைந்துள்ளது. எங்கே நிறைய மழையும் வெயிலும் கிடைக்கிறதோ அதுதான் வளமான நாடு. இங்கேதான் உயிரியல் பன்மையம் இருக்கு. நீலகிரி மலையில் மட்டுமே உலக உயிரினத்தின் 50 முதல் 60% வரை இருக்குன்னு கண்டறிந்து, ஐ.நா.நிறுவனம் அதனை Biosphere ன்னு அறிவித்திருக்கிறது.

சுனாமி போன்ற பேரழிவுகள் காடுகள் இருந்த இடத்தில் குறைவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதே?

ஆமாம். சென்னையிலிருந்து குமரிவரை அலையாத்தி காடுகள் இருந்திருக்கு. அவற்றை முற்றிலும் நாம் அழித்து விட்டதால் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் சக்காரியா போன்றோர் எழுதுகின்றனர்.

ஆந்திரா, மஹாராஷ்டிராவில் BT விதைகளின் பாதிப்பினால் பூச்சிக்கொல்லிகளைக் குடித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட அவலங்கள் பற்றி...

நமது பாரம்பரிய பருத்தியை குட்டை இழைப் பருத்தின்னு சொல்வாங்க. நமது ராட்டைச் சக்கரத்துக்கு பொருத்தமானது. லாங்ஷேர், மான்செஸ்டர் ஆலைகளுக்கு குட்டை இழைப் பருத்தி பொருந்தவில்லை. அதனால அமெரிக்காவில் நீண்ட இழைப் பருத்தியை உருவாக்கி அதன் விதைகளை நம்மைப் போன்ற நாடுகளிடம் கொண்டு வருகிறார்கள். அவை தம்மோடு புதிதான நோய்களையும் பூச்சிகளையும் கொண்டு வருகின்றன. நம்மிடம் உள்ள 99% பூச்சிகள் வெளியேயிருந்து வந்ததுதான்.
மூட்டையில் வந்ததாலதான் மூட்டைப்பூச்சின்னு பேரு.

இலக்கியத்தில் கூட வள்ளுவர் களையைக் கொல்லுன்னு சொல்றாரே தவிர பூச்சியைக் கொல்லுன்னு சொல்லல. சங்க இலக்கியத்துலகூட பயிர் வளர்ப்பு பற்றி நிறைய செய்திகள் இருக்கு. ஆனால் பூச்சிகளைப்பற்றி செய்திகள் இல்லை. எப்போதெல்லாம் வெளியேயிருந்து விதைகள் வந்ததோ அப்போதெல்லாம் பூச்சிகளும் வந்தது.
பருத்தியில வருகிற ஒரு பூச்சிக்கே பேரு 'அமெரிக்கன் காய் புழு' என்று உள்ளது.

Sucide- தற்கொலை. Genocide - இனக்கொலை. அது போல Pesticide என்பது பூச்சிக்கொல்லி. ஆனால் அப்படிச் சொன்னால் வாங்கமாட்டார்கள் என பூச்சி மருந்துன்னு மொழிபெயர்த்தார்கள். வீரியவிதை என்பதும் பொய்தான். வறட்சியைத் தாங்காத, பூச்சியைத் தாங்காத விதைகள் அவை. உலகத்திலேயே பூச்சிக் கொல்லிகள் அதிகம் பயன்படுத்துவது பருத்திக்குத்தான். எனவே அதிக செலவு செய்து மகசூல் வராமல் போகும் போது விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

மிகக் கடுமையான கந்துவட்டி விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணமாகிறது. இதை ஏன் விவசாயிகளால் தவிர்க்க முடியவில்லை?

ஏழை விவசாயிகளுக்கு வங்கிக்கடன் கிடைக்காது. பூச்சிக்கொல்லிகள், இடுபொருட்களின் தேவைக்கு உடனடியாகக் கடன் தருபவன் கந்து வட்டிக்காரன்தான். விவசாய சமூகம் மண்சார்ந்து இருப்பதால் மானம் சார்ந்த சமூகம். எனவே கடன் தந்தவன் நெருக்கும்போது வேறு வழியின்றி தற்கொலை செய்கின்றான். புள்ளிவிபரங்களின்படி 10 ஆண்டுகளில் 10 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது நாம் சகிக்க முடியாத விசயம். தற்கொலைகள் நடந்தபோது பிரதமர் கூடப் போய் அந்த விவசாயிகளின் குடும்பங்களைப் பார்த்தார். ஆனால் மகாராஷ்டிரத்தில் நடைபெறும் இந்தக் கொடுமையை மத்திய விவசாய அமைச்சரும், அந்த மாநிலத்தை சேர்ந்தவருமான சரத்பவார் போய்ப் பார்க்கவில்லை. அதேநேரத்தில் இலங்கைக்கு போகிற கிரிக் கெட் டீமை பாதுகாக்கிற கூட்டத்தில கலந்துகிட்டார். இதுதான் அரசு தரப்பு நிலைமை.

மரபீணி மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அவ்விதைகள் ஏற்படுத்தும் சிக்கல்கள் என்னென்ன?

வறட்சியைக்கூட தாங்கிவளர்ந்த நமது பயிர்களிலிருந்து தேர்ந்தெடுத்து விதைகளை எடுப்போம். அதனை பொறுக்கு விதைகள் என்போம். Selected Seeds. இவை எந்த நெருக்கடியிலும் விளைந்துவிடும். ஹைபிரீடு, முதலில் நல்ல பலன்தரும். வரவர விளைச்சல் குறைந்துவிடும். அடுத்தடுத்து விதைகளுக்கு இந்த கம்பெனிகளையே நம்பணும். பழமொழி என்னவென்றால் 'மடிவிதையை விட பிடிவிதை மேல்' என்பது. அதாவது மழை வந்தால் அவ்வளவு வேகமாக விதைக்கனும்னு அர்த்தம்.

விதை, விவசாயிடமிருந்து பசுமைப் புரட்சிக்குப் பின் அரசாங்க கிட்டங்கி களுக்குப் போனது. தற்போது இது அரசாங்கத்திடமிருந்து மரபீணித் தொழில்நுட்பத்தால் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் போய் விட்டது. இத்தொழில்நுட்பம் சிறப்பானதுன்னு பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அடிப்படை பற்றிக் கூறுங்கள்.

மரபை ஈணுவதால் அது மரபீணி. மரபுக்கூறுகள் அதன் செல்களில் பதியப்பட்டிருப்பதால் வேப்பவிதை மீண்டும் வேப்பமரத்தையும் புளியவிதை மீண்டும் புளிய மரத்தையும் தருகிறது. தொழில்நுட்பங்களை பயன் படுத்தி தன்மைகள் மாற்றப்பட்டிருக்கு. Bacilous Turuncious எனும் நுண்ணுயிரியைக் கொண்டு பூச்சிகள் வரவிடாமல் மரபீணி மாற்றம் செய்துள்ளார்கள். இதற்கு 'பேடண்ட்' வாங்கியிருப்பதால் வேறு யாரும் செய்ய முடியாது. நம்மிடம் நேரடியாக முதல்தலைமுறை விதையைத் தரமாட்டார்கள். ஒட்டுரக விதையைத்தான் விற்பான். அதன் விலை 450 கிராமுக்கு ரூ.1600 வரை. எல்.ஆர்.ஏ. ரக ஒட்டுரக விதைப்பருத்தி கிலோ 70 ரூபாய்க்கு விற்குது. மரபீணி விதை கிலோ எவ்வளவு என பாருங்கள். ஒவ்வொரு பாக்கெட்டுக்கும் 1700 ரூபாய் அமெரிக்க மான்சான்டோ கம்பெனிக்கு போகுது. அதன் விதைகளில் மலட்டுத்தன்மை மாற்றம் செய்து விடுவதால் விதையிலிருந்து கிடைக்கும் விதை மீண்டும் முளைக்காது. அதனால்தான் அதனை 'டெர்மினேட்டட் சீட்ஸ்' என்கிறான். அதாவது மலட்டு விதைகள். நமது மரபில் விதை என்பது வளமைக்கான அடையாளம்.

தாய்ப்பாலில் டீடிடி இருக்குன்னு கண்டுபிடித்துள்ளனர். தாய் நேரடியாக டீடிடி எடுப்பதில்லை. புல்லில் அடிக்கப்பட்ட டீடிடி, உண்ணும் பசுவுக்குப் போய், அதை அருந்தும் தாய் மூலமாக குழந்தைக்கும் போகிறது. அதுபோல இவ்விதைகளின் மலட்டுத்தன்மை பருத்திக் கொட்டை சாப்பிடுகிற மாட்டுக்கு வந்து மாட்டின் பாலை அருந்தும் மனிதர்களுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் கத்திரி, வெண்டை போன்ற உணவுப்பொருட்களுக்கும் வருகிறது.

தங்களின் சுமார் 15 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டு தமிழகத்தில் இயற்கை வேளாண்மையின் எதிர்காலம் என்னவாக வரும் என்று நினைக்கிறீர்கள்?

ஒருகாலத்தில் உலகம் பூராவும் மார்க்ஸீயம் தீப்பிடிச்ச மாதிரி இன்று இயற்கைவேளாண்மை உலகம் முழுவதும் பரவி வருகிற ஒரு கருத்தியல். இந்தியாவில் மரபான தொழில்நுட்ப மீட்டெடுப்பு மற்றும் இயக்கம் சார்ந்து கொண்டுசெல்வது என இருதளங்களில் செயல்பட வேண்டியுள்ளது.

அதில் உங்களின் அனுபவங்கள் என்னவாக உள்ளது?

முதலாவது நாம் செய்த வேலைகளின் மூலம் இயற்கை வேளாண்மை வெற்றிகரமானது என்பதை நிரூபித்திருக் கிறோம். இரண்டாவது, நமது மரபான தொழில்நுட்பம் மிக மேம்பட்டதாகவே உள்ளது. கியூபாவில் இருந்து வந்த திருமதி.மார்க்கெரட் மர்பி அவர்களது நாட்டின் தொழில்நுட்பத்தைவிட நம்முடையவை மேம்பட்ட தாக இருக்கு என்றார். மூன்றாவதாக வசதி படைத்த பணக்கார விவசாயிகள்தான் இயற்கை வேளாண்மைக்கு வருகின்றனர். சிறு குறு விவசாயிகள் தயங்குகின்றனர். என்.ஆர்.ஐ. பலர் வெளிநாடுகளில் சம்பாதித்துவிட்டு இயற்கை வேளாண்மையில் ஈடுபடுகிறார்கள். யார் வரணுமோ அவர்கள் வரவில்லை.

இதற்கான தீர்வு என்னவாக இருக்க முடியுமென கருதுகிறீர்கள்?

புறநானூற்றில் கூறியுள்ளபடி ''உணவெனப்படுவது நிலத்தடி நீரே: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே''. நமது உணவு என்பது நிலமும் நீரும் தான். அதனை நஞ்சாக்காமல் பாதுகாக்கணும். உணவு தரும் விவசாயியையும் காப்பாற்றணும். முற்போக்காக பேசுகிற படித்த கூட்டம் உணவுப் பொருட்களில் மட்டும் பேரம் பேசுது. அது மாறணும். இயற்கை வேளாண் மையை இயக்கங்கள் கையில் எடுக்கணும். ஏனெனில் இயற்கை வேளாண்மை என்பது தற்சார்பு வேளாண்மை. முற்போக்கு, தலித் இயக்கங்கள் கையில் எடுத்து அரசுக்கு நெருக்கடி தரவேண்டும்.

நிறைய விவசாயிகள் இயற்கைவேளாண்மை நோக்கி வர ஆரம்பித்து விட்டார்கள். இந்த தருணத்தில் இயக்கங்கள் நேரடியாக தலையிடாவிடில் விவசாயமே அழிந்து விடும். அதனைத் தலையிட்டு காக்கத் தவறினால் இடதுசாரி இயக்கங்கள் வரலாற்றுப் பிழை செய்தவர்கள் ஆகிவிடுவார்கள்.

அத்தகைய நிலை வராது என்கிற நம்பிக்கையும் உள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com