Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007


கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்

ஆதவன் தீட்சண்யா

கக்காநாட்டின் இந்த ஜனாதிபதியும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கொஞ்ச நேரத்திலேயே பதவி விலகிவிட்டார். இது எதிர் பார்க்கப்பட்டதுதான். அண்டையிலிருக்கும் உச்சாநாட்டிலும் கலீஜ்பாளையத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகள் முழுமையாக தங்கள் பதவிக்காலத்தில் நீடிக்கிறார்கள். இங்கு அப்படியா... கடந்த பத்துவருடங்களில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தேர்தலை அறிவிப்பது, நடத்துவது, பதவியேற்கிறவர் ஜனாதிபதியாகி விட்டதன் அடையாளமாக தனது மாளிகையில் உள்ள கழிவறைக்கு சென்று திரும்பியதும் அவர் ராஜினாமா செய்துவிடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. பக்கத்துநாடான இந்தியாவில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்ற கிராமங்களில் நடந்ததைப்போல கக்காநாட்டு ஜனாதி பதியை யாரும் வற்புறுத்தியோ மிரட்டியோ பதவி விலகச் சொல்வதில்லை. இவர்கள் தாங்களாகவே முன்வந்து விலகிவிடுகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளாக இங்கு தொடர்ந்து ஜனாதிபதியே இல்லாததால், இந்நாட்டிற்கு வருகிற வெளிநாட்டு அதிபர்களுக்கும் அரசர்களுக்கும் அவர்களோடு உதட்டுச்சாயம் பூசிக் கொண்டு வருகிற குட்டைக்கவுன் மொழி பெயர்ப்பாளினிகளுக்கும் வரவேற்பளித்து தேநீர் விருந்து கொடுக்கிற மிக முக்கியமான பணி முடங்கிவிட்டது. எனவே ஜனாதிபதி மாளிகையில் வாங்கி அம்பாரமாய் குமிக்கப்பட்டிருந்த டீத்தூள் பயனின்றி மக்கிக் கொண்டிருந்தது.

பழக்கதோஷத்தில் பால்காரன் தினமும் போட்டுவிட்டுப் போகும் பால் பாக்கெட்டுகள் கேட்பாரற்று வாசலில் கிடந்தன. பால் திரிந்து எழும் துர்நாற்றம் அப்பகுதியை எல்லைதாண்டிய/தாண்டாத பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதாயிருந்தது. இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் முக்யஸ்தர்கள், தம்மை வரவேற்று உபசரிக்க யாருமில்லையே என்ற துக்கத்தோடு அவர்களாகவே ரோட்டோர கடைகளில் வண்டியை நிறுத்தி டீ குடித்து விட்டுப் போகவேண்டியிருந்தது. தங்களுக்கிணையான அந்தஸ்தில் யாருமேயில்லாத ஒரு நாட்டிற்கு செல்லும்போது இத்தகைய அவமானங்களை சந்திக்க நேர்வது குறித்து உளைச்ச லடைந்த அவர்கள் கக்காநாட்டுடனான ராஜீய உறவுகளை துண்டித்துக் கொண்டனர். அங்கெல்லாமிருந்த கக்காநாட்டுத் தூதரகங்கள் மூடப்பட்டன.

இதற்குமுன் பதவி விலகியவர்களைப் போலவே இந்த ஜனாதிபதியும், எதற்கும் உதவாத வெறும் அலங்காரப் பதவியில் நீடித்திருப்பதைவிட ஒரு தூய்மைப் பணியாளராகி மக்களின் செப்டிங் டேங்க் சுத்தம் செய்வது, கக்கூஸ் கழுவுவது, தெருக்கூட்டுவது போன்ற வேலை களில் ஈடுபட வேண்டுமென்பதே தன் வாழ்நாள் லட்சிய மென்றும் ஆகவே தான் பதவி விலகுவதாகவும் தன் அறிக்கையில் தெரிவித்திருந்தார். தான் நினைத்ததை துணிந்து பேசிட ஒவ்வொரு ஆண்டும் குடியரசுதினம் வரைக்கும் காத்திருக்க வேண்டிய இந்த அடிமைப் பிழைப்பை சுதந்திர வேட்கையும் மானவுணர்வுமுள்ள எந்தவொரு பிரஜையும் ஏற்கமாட்டான் என்பதை உலக றியவே அவர் இம்முடிவை எடுத்திருப்பதாய் அறிக்கை மேலும் தெரிவித்தது.

''ஆட்டுக்கு தாடியும் பூட்டுக்கு சாவியும் தேவையில்லாததைப் போலவே நாட்டுக்கு ஜனாதிபதியும் தேவையில்லை என்று எங்கள் தலைவர் அன்றே சொன்னார்'' என்று சுவரொட்டி மூலமாக ஒரு கட்சி இந்த ராஜினாமாவை வரவேற்றிருந்தது.

வீதிகளையும் கழிவறைகளையும் துப்புரவாய் சுத்தப் படுத்தி சுகாதாரத்தைப் பாதுகாத்து மக்கள் ஆரோக்கிய மாய் வாழ சேவையாற்றும் தூய்மைப் பணியாளரைவிட, நாடுநாடாய் சுற்றிக்கொண்டும்- எதுவும் புரியாத பள்ளிச் சிறார்களிடம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்போல் கண்டதையும் பேசிக்கொண்டும் இறக்குமதித் துணியாலான தேசியக்கொடியை ஏற்றிட கோடிக்கணக்கில் செலவழித்தும் திரிகிற இந்தப் பதவி நாட்டுக்கு முக்கியமல்ல என்று ஒரு ஜனாதிபதி உணர்ச்சிவயப்பட்டு பேசியதில் ஆரம்பித்ததுதான் இந்த வினை.

அப்படியானால் உபயோகமற்ற ஜனாதிபதிக்கு வழங்குவதைவிட நாட்டுக்கு மிகவும் அவசியமான தூய்மைப்பணியாளருக்கு கூடுதல் சம்பளமும் சலுகைகளும் வழங்கத் தயாரா என்ற கேள்வி எழப் போய் கடைசியில் மலம் அள்ளும் தொழிலைச் செய்கிறவர்களுக்கு ஜனாதிபதியின் சம்பளத்திற்கு மேல் ஒரு ரூபாய் சேர்த்து வழங்கப்படும் என்று அவசரச் சட்டம் நிறைவேற்ற வேண்டியதாகிவிட்டது. அது வெறும் சம்பளத்துடன் முடியவில்லை. ஜனாதிபதி மாளிகையில் 300அறைகள் உள்ளதெனில் 301 அறைகளைக் கொண்ட தாய் இருந்தது தூய்மைப் பணியாளர் குடியிருப்பு.

அதற்கு வாடகை, மின் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் எதுவும் கிடையாது. நகரின் வெளியே மாசற்ற காற்றும் குளிர்ந்த நன்னீரும் கிடைக்கும் நிலப்பரப்பில் அடர்ந்த மரங்களுக்கிடையில் மறைந்து எப்போதும் பறவை களின் வினோத ஒலிகளில் கிறக்கமுற்று இருப்பதாய் அமைந்திருந்தன அந்த குடியிருப்புகள். குடியிருப்பில் இம்மென்றால் ஏனென்று கேட்கவும் நிறைவேற்றவும் திரும்பிய பக்கமெல்லாம் உதவியாட்கள்.

அதிகாலையில் இருசொட்டு ஒடிகோலன் விடப்பட்ட இதமான வெந்நீரில் கமகம வென குளித்து காக்கிச்சட்டை, காக்கி அரைக்கால் டிரவுசர் (பெண்களுக்கு காக்கி புடவை, ரவிக்கை) உடுத்தி கனகம்பீரமாக தூய்மைப் பணியாளர்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது அவரவர் வாசலில் சைரனும், சிவப்பு சுழல்விளக்கும் பொருத்திய கார் தயராய் நிற்கும். அவர்களது கார்களுக்கு பதிவெண்கள் கிடையாது. விஐபி அந்தஸ்தைக் குறிக்கும் 3 அல்லது 5 நட்சத்திரங்களும் அரசு இலச்சினையும் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும். முகப்பில் தேசியக்கொடி. டிக்கியைத் திறந்து பணியிட உபகரணங்களாகிய துடைப்பம், தொரட்டி, ஏந்துகரண்டி, பினாயில் பாட்டில், குளோரின் பவுடர் பாக்கெட், கையுறைகள், மாஸ்க் ஆகியவை உள்ளனவா என ஒருமுறை சோதிக்கப்படும். பின் வண்டி கிளம்ப வேண்டியதுதான்.

நகரின் பிரதான சதுக்கம்வரை அணிவகுத்துச் செல்லும் அவ்வண்டிகள் அங்கிருந்து பல்வேறு பாகங்களுக்கும் பிரிந்து செல்லும் அழகே தனிதான். வழிநெடுக குழந்தை களும் பள்ளிச்சிறாரும் பூங்கொத்துகளை ஆட்டி தெரிவிக்கும் காலை வணக்கத்தை ஏற்றுக்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களை ஆங்காங்கே இறக்கிவிட்டு சாலை யோரப் பூங்காக்களின் நிழலில் வண்டிகள் காத்திருக்கும். எட்டு மணியளவில் பிரபல உணவுவிடுதி ஏதாவதொன்றிலிருந்து மெய்க்காப்பாளரால் பரிசோதித்து வாங்கி வரப்படும் காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொள்ள அரை மணிப்பொழுது ஓய்வு. ஓய்வின்போது புகைக்க கியூப சுருட்டு வழங்கப்படும். (பிடல் காஸ்ட்ரோவை கொல்ல சுருட்டில் மெதுநஞ்சு கலந்த சிஐஏ சதி அம்பலமான பிறகு தடயவியல் நிபுணர்களால் கடுமையாக சோதிக்கப்பட்ட பிறகே சுருட்டு வழங்கப்படுகிறது) இந்த சிற்றுண்டிக்கும் பணிநேரத்திலான மதிய உணவு, தேநீர், லாகிரி வஸ்துக்கள் போன்றவற்றுக்குமான அலவன்சுகள் ஊதியத்தை விடவும் கூடுதலாக இருந்தன. மிலிட்டரி சரக்கைப் போலவே ஸ்கேவன்ஜர் சரக்கு (கேஎம்எப்எல்) என்பதும் சமீபத்தில் புகழடைந்த ஒன்று.

ஊராரின் அசுத்தங்களை சுத்தப்படுத்தும்போது ஏற்படும் துர்நாற்றம், அசூயை, அருவருப்பு, மனசஞ்சலத்தை உணராதிருக்க குடித்த மறுநொடியிலேயே போதையின் உச்சத்தை அடைய வைக்கிற அளவுக்கு அந்த சரக்குகள் வீர்யமுள்ளவையாய் இருந்தன. இவற்றை தூய்மைப் பணியாளருக்கு வழங்குவதற்கென்றே வட்டத் தலை நகரங்களில் தனியாக கேன்டீன்களும்கூட உருவாக்கப் பட்டுள்ளன. ஆண் பெண் இருபாலருக்குமே குழந்தைகளுக்கும் இங்கு தனித்தனியாக கோட்டா உண்டு.

இருவருமே தூய்மைப் பணியாளராகவே இருக்க வேண்டியுள்ளதால் இந்த ஏற்பாடு. இவ்வகையான மது வகைகளை உலகின் பிறநாடுகளில் உயரதிகாரிகள், ராஜ வம்சத்தார் மட்டுமே உபயோகிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் கக்காநாட்டு தூய்மைப் பணியாளர்கள் அவற்றை சர்வசாதாரணமாக குடித்து வந்தனர். அரிதாக குடிப்பழக்கம் இல்லாத ஒருசில பணியாளர்களின் டோக்கனைப் பயன்படுத்தி நாட்டின் உயர்குடியினர் சிலர் கள்ளத்தனமாக கோட்டாவை வாங்கிக் கொள்வது முண்டு. கண்டவர்களின் அசுத்தத்திலும் புழங்கி அலுப் பும் அயர்ச்சியும் கண்டுவிடுகிற தூய்மைப்பணியாளர்கள் மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கொள்ளும் வகையில் அவர்கள் குடும்பத்தோடு வருடத்தில் இரண்டுமுறை உலகத்தின் எப்பகுதிக்கும் சென்று உல்லாசமாய் சுற்றி ஓய்வெடுத்துத் திரும்ப இலவச விமான டிக்கெட்டுகள் வழங்குகிற ஏற்பாடும் நடப்பிலிருக்கிறது.

இதில்லாமல் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்குதல் அல்லது பணியிடத்தில் வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுமானால் நாட்டின் தலைமையகத்திலுள்ள ஏகேஐஎம்எஸ் (ஆல் கக்காநாடு இன்ஸ்டிடியூட் ஆ•ப் மெடிக்கல் சயின்சஸ்) மருத்துவ மனைக்கு உடனடியாக தனி விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். ஒருவேளை உயிரிழப்பு நேர்ந்துவிடுமெனில் அப்பணியாளரின் குடி யிருப்பும் அவர் உபயோகித்த காரும் அவரது குடும்பத்தா ருக்கே சொந்தமாக்கப்படுவதோடு இழப்பீடாக பெருந் தொகையும் மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்பட்டன. வாரீசுதாரருக்கு வேலையும் உண்டு. டேங்கில் இறங்கி மீண்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசுதின விழாவில் வீரதீர செயலுக்குரிய நாட்டின் மிகவுயரிய விருதும் பணமுடிப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நட்சத்திர உணவுவிடுதியையோ நகைக்கடையையோ திறந்துவைக்கவும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வில் சிறப்பு விருந்தினராய் பங்கேற்குமாறும் சுகாதார அமைச்சர்களின் சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைக்குமாறும் புதுப்பட ப்ரிவியூ காட்சிக்கு வரவேண்டு மென்றும் தூய்மைப் பணியாளர்களை தொல்லைப் படுத்தும் போக்கு கக்காதேசத்தில் அதிகரித்து வந்தது. பேட்டிக்கான டி.வி.களின் தொல்லையும் கூடிவிட்டது. கல்லூரி மாணவர்கள், இளைய தலைமுறையினரிடயே காக்கிசட்டையும் காக்கி டிரவுசரும் பிரபலமடைந்து வந்தன. வைபவங்களிலும் கொண்டாட்டத்திற்குரிய தருணங்களிலும் ஸ்கேவஞ்சர்/ஸ்வீப்பரைப் போல உடுத்திக்கொள்வதை மிகுந்த பெருமைக்குரியதாய் கருதும் போக்கு அவர்களிடையே பரவிவந்தது.

தூய்மைப் பணியாளருக்கு கிடைக்கிற வருமானமும் சலுகைகளும் ஊரையே சுத்தம் செய்கிறவர் என்ற மரியாதையும் இத்தொழிலுக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்ற ஆசையை யாவருள்ளும் கிளறிவிட்டது. நாட்டின் மாவட்ட, மாநில, தலைமை நீதியமைப்பு களாயிருந்த எச்ச, சொச்ச, மிச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களுக்கு தூய்மைப் பணியாளருக்கு இணையான சம்பளம் சலுகை வழங்குமாறு அரசிடம் போர்க் கொடி உயர்த்தினர். ஐ.டி படித்து முடித்ததும் டாலர் பிச்சையெடுக்க பறந்தோடி வருவோரது எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது கண்டு பதற்றமடைந்த யு.எஸ். புதிய குடியுரிமைச் சலுகைகளை அறிவித்தது. எப்போதும் திருவிழாக் கூட்டம்போல் நிரம்பி வழியும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் வெறிச்சோடத் தொடங்கின.

பாஸ்போர்ட்டை வாயில் கவ்விக்கொண்டு பிறந்த வர்கள் இப்போது ஏன் ஸ்டேட்சுக்கு செல்வதில் ஆர்வம் காட்டாமல் இப்படி தூய்மைப் பணியாளர் வேலைக்குப் பறக்கிறீர்கள் என்று கேட்டால் ‘வெளியூர் லாபமும் சரி உள்ளூர் நஷ்டமும் சரி’ என்று இளைஞர்கள் தங்கள் முடிவை நியாயப்படுத்தினர். பன்னாட்டு நிறுவனங் களை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட சிஇஓக்களை விடவும் அந்நிறுவனங்களின் ஸ்கேவஞ்சருக்கு கூடுதல் சம்பளமும் சலுகைகளும் வாய்த்ததும் இக்காலத்தில் தான்.எனவே அவர்கள் மாதக்கடைசியில் கேளிக்கை விடுதி செலவுகளுக்கு ஸ்கேவஞ்சர்களிடம் கைமாற்று வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஸ்கேவஞ் சர்களை பசப்பி ஏமாற்றி சிஇஓவாக சிக்கவைத்துவிட்டு அவர்களது துடைப்பத்தையும் மலக்கரண்டியையும் கைப்பற்றும் ரகசியமோசடியில் ஈடுபட்டனர். டாக்டர் வக்கீல் கலெக்டர்கூட இத்தகைய ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதாய் தகவலுண்டு. இதைவிட பெரிய கூத்து என்னவென்றால், ஜனாதிபதிகள் ராஜினாமா கொடுத்து விட்டு எஸ்எஸ்சி தேர்வெழுதி தூய்மைப் பணியாளராக ஆசைப்பட்டதுதான். (வீடுவீடாக கெஞ்சியும் ஜனாதி பதியாவதற்கு ஒருவரும் முன் வரவில்லை. மிஞ்சி வந்தா லும் நாமினேஷன் தாக்கலிடும் நேரத்தில் ஒன்னுக்கு வருவதாய் ஒருவிரலைக் காட்டிவிட்டு ஓடி தலைமறை வாகிவிடுகிறார்கள். கடைசியில் பக்கத்து நாடுகளி லிருந்து ஆள்பிடித்து ஜனாதிபதியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசு).

'ஆசையிருக்கு மலமள்ள அம்சமிருக்கு கலெக்டராக' என்பதுபோல எல்லோருக்கும் ஆசையிருந்தாலும் ஒரு தூய்மைப் பணியாளராய் சேர்வது அப்படியொன்றும் எளியக் காரியமாயிருக்கவில்லை. அதற்கான எஸ்எஸ்சி (ஸ்கேவஞ்சர்/ ஸ்வீப்பர் செலக்ஷன் கமிஷன்) தேர்வில் வெற்றி பெற்றாகவேண்டும். அதைக்கூட மனப்பாடம் செய்து ஒருவர் எழுதிவிட முடியும். ஆனால் செய்முறைத் தேர்வு? மகா கடினம். அதில் பெறும் மதிப்பெண்ணைப் பொறுத்தே ஒருவரின் வேலை தீர்மானிக்கப்படுகிறது. இந்த செய்முறைத் தேர்வு முடிந்தபின் நேர்முகத்தேர்வு. நேர்முகத்தேர்வில் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப் படுவதாயும், பிரதமர் உள்ளிட்ட எவரின் சிபாரிசும் அங்கு செல்லுபடியாகாதென்றும் கருத்துள்ளது. தகுதியும் திறமையுமுள்ள விண்ணப்பதாரரை பகிரங்கப் போட்டியின் மூலமே தேர்வு செய்யவேண்டும், அல்லாவிடில் பணியின் தரம் குறைந்துவிடும் என்பதால் இத்தனை கெடுபிடிகள் நிறைந்ததாய் இருந்தது தேர்வுமுறை.

இத்தேர்வுக்கு தயார்படுத்திட நாடெங்கும் பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. செழித்த அனுபவமும் நிபுணத்துவமும் வாய்ந்த, ஓய்வு பெற்ற தூய்மைப் பணி யாளர்களால் இம்மையங்கள் நிர்வகிக்கப்பட்டன. லட்ச லட்சமாய் காசுபணம் கொட்டி இடம் பிடித்து சேர்ந்து விடினும் பாடத்திட்டம் மிகக்கடுமையாகவே இருந்தது. எல்லாமே செய்முறைப் பயிற்சிதான். முதற்பாடம் தொடங்கும் முன் கேன்டீனிலிருந்து சலுகைவிலையில் பெறப்பட்ட மதுவகைகளை மூக்குமுட்ட குடித்தாக வேண்டும்.

அரைமயக்க நிலைக்காட்பட்டு மலத்தையும் சந்தனத்தையும் ஒன்றென பாவிக்கும் மனோநிலையை எய்துவதற்கே இந்த ஏற்பாடு. இருமருங்கும் பலவண் ணங்களிலும் தினுசுகளிலும் மலம் நிறைந்துள்ள தெரு வோரத்தில் அமர்ந்து மாணாக்கர்கள் தங்கள் காலை ஆகாரத்தை உண்ணவேண்டும் என்பதே முதல்பாடம். துளியும் முகச்சுளிப்பின்றி குமட்டி குடல்புரட்டி வாந்தி யெடுக்காமல் உண்போர் மட்டுமே அடுத்த பாடத்திற்கு செல்லமுடியும். இச்சோதனையில் தேறியோர் தெருவில் குமிந்துள்ள மலக்குவியல்கள்மீது சாம்பல் தூவி ஏந்து கரண்டியால் துப்புரவாக சுரண்டியள்ள வேண்டும்.

பின் தெருவை சுத்தமாகக் கூட்டி பவுடர் தெளிக்கவேண்டும். இவ்வேலைகளை செய்யும்போது டுர்டுர்ரென உலும்பிக் கொண்டு வரக்கூடிய பன்றிகளை செல்லமாக விரட்டத் தெரிந்திருக்கிறதா என்பதும் பயிற்றுநர்களால் கவனிக்கப் படும். பன்றிகள் விட்டை போடுமானால் அவற்றையும் முகங்கோணாமல் அள்ளியாக வேண்டும். தெருவிலிருந்து கிளம்பும் முன் சமுதாயக் கழிப்பிடம்/ கட்டணக் கழிப்பறை இருக்குமானால் அதை சுத்தப்படுத்துவதும் மாணாக்கர்களின் பாடத்திட்டத்திற்குள் வருவதுதான். இதற்குள் நடுப்பகலாகிவிடுமாதலால் அந்த கழிப்பறைத் தண்ணீரிலேயே கைகால் முகம் அலம்பி வாய் கொப்ப ளித்து அங்கேயே மதியஉணவை முடித்துக் கொள்ள வேண்டும். உணவுக்குப் பிறகு, காலியாக இருக்கிற கழிப் பறையில் சற்றே ஓய்வெடுக்க அனுமதியுண்டு. கலை இலக்கிய தாகம் கொண்ட மாணவர்கள் கழிவறை சுவர்களிலும் கதவிலும் காணப்படும் ஓவியங்களையும் காவியங்களையும் இப்போது படித்துக் கொள்ளலாம்.

தமது படைப்பையும் பொறித்து வைக்கலாம். பின் கிளம்பி ஆங்காங்கே அடைத்தும் தேங்கியுமுள்ள சாக்க டைகளை சுத்தம் செய்யவேண்டும். இவ்வேலைகளின் போது வெண்ணிறச்சீருடை அணிந்திருக்க வேண்டும். காலணிக்கு அனுமதியில்லை. மனோதிடத்தை குலைய வைக்கும் இந்த ஆரம்பப் பயிற்சிகளுக்கு தாக்கு பிடித்து நிற்பவர்களே அடுத்தக் கட்டத்திற்கு உயர முடியும்.

பயிற்சி தொடங்கிய ஆறாம் மாதத்திலிருந்து செப்டிக் டேங்கில் இறங்கி அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்யும் பயிற்சி தொடங்கும். இத்தருணத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு பயிற்சிமையம் பொறுப்பல்ல என்று உறுதி எழுதிக் கொடுத்தப் பின்தான் மாணவர்கள் அனுமதிக்கப் படுவர். இறங்கும்போது வாய்க்குள் புகுந்துவிடும் கழிவு நீருக்குப் பழகவேண்டி தெருவோர சாக்கடையிலிருந்து ஒரு மடக்கு குடிப்பதும், தலை மற்றும் உடலின் பல பாகங்களிலும் கழிவுகளை பூசிக்கொள்வதும், குப்பைத் தொட்டியிலிருந்து சானிடரி நாப்கின்களை எடுத்து வீசுவதும் இந்தப் பயிற்சிக்கான முன்தயாரிப்புகள். தொட்டிக் குள் இறங்கும்முன் மீண்டும் மது அருந்தி முக்கால் மயக்க நிலைக்குச் சென்றுவிட வேண்டும்.

ஒருவேளை இதுவே கூட கடைசியாய் குடிப்பதாக இருக்கக் கூடுமாதலால் தொட்டிக்குள் இறங்குபவர் எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துக்கொள்ளலாம் என்பது பொதுவாக பின் பற்றப்படும் மரபு. போதையின் உச்சத்தில் பிரக்ஞையும் மனித சுபாவங்களும் தப்பியதொரு கணத்தில் உள்ளே இறக்கிவிடப்படுவர். மீண்டு மேலேறி வருகிறவருக்கு குளிப்பதற்காக ஒருகுடம் நன்னீரும் சந்தன சோப்பும் பயிற்சிமையத்தால் வழங்கப்படுகிறது. எமன் வாயிலிருந்து மீண்டு புதுப்பிறப்பு எடுத்ததாய்க் கருதி வீடு திரும்பும் ஆண்களை குலவையிட்டு பெண்கள் வரவேற்கும் காட்சி மிகவும் நெகிழ்ச்சியானதாயிருக்கும். இச்சடங்கு கல்லூரியில் பயிலும் மாணவியருக்கானதாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடினமான இப்பயிற்சிகளை முடித்தப்பின் எஞ்சியிருப்பவை சற்றே லகுவானவைதான். அழுகியப் பிணங்களை அப்புறப்படுத்துவது, செத்தமாட்டை புதைப்பது, பன்றி வளர்ப்பது, பன்றிக் கொட்டிலை சுத்தப்படுத்துவது என்ப தெல்லாம் அடுத்தடுத்து பயிற்றுவிக்கப்பட்டு வருட முடிவில் சான்றிதழ் தரப்படும். இதற்குள் எப்படியும் செலவு ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் வரையாகிவிடும். பயிற்சி முடிய இரண்டுமாதம் இருக்கும்போதே பல முன்னணி தொழிற்சாலைகளும் அரசு நிறுவனங்களும் முனிசிபாலிடிகளும் மருத்துவமனைகளும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி பணிநியமன உத்தரவுகளை வழங்கி விடுவார்கள்.

எனவே பயிற்சி முடித்து வெட்டியாய் காலங்கழிக்கும் இக்கட்டான நிலை ஒருவருக்கும் நேர்வதில்லை. பயிற்சி முடித்தக் கையோடு வேலைக்கு எடுக்காவிடில் அவர்களுக்கு நறுமணங்களை நுகரக்கூடிய உணர்ச்சி கிளர்ந்து துர்நாற்றங்களுக்கு முகம் சுளிக்கும் கெடுமதி வந்து சேர்ந்துவிடுமானால் பின் அவர்களது பணித்திறன் பாதிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சி இந்த கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்தப்பட்டன.

பெண்களும் இக்கல்லூரிகளில் ஆர்வமாக சேரத் தொடங்கினர். அவர்களுக்கு இதே பாடத்திட்டத்துடன் தனித்துவமான வேறுசில பயிற்சிகளும் தரப்பட்டன. உதாரணத்திற்கு, போக்கிரிகள் வம்புதும்பு செய்தால் எதிர்த்துக் கேட்காதிருக்குமாறு குடும்பத்தில் சொல்லித்தரப்பட்டிருந்த அடக்கஒடுக்கத்தை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டியிருந்தது. யார் சீண்டினாலும் அந்நேரத்திற்கு கையிலுள்ள துடைப்பக்கட்டையாலோ மலக்கரண்டியாலோ பிய்த்தெறிந்துவிட வேண்டும் என்பதும், வேற்றார் தம்மை அண்டாமலிருக்குமளவுக்கு தம்மீது எப்போதும் தூர்நாற்றம் கமழுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களுக்கு உடனடி பாடமாயிருந்தது. வெற்றிலை போடுவது, புகையிலை அதக்குவது, கேன்டீனிலிருந்து வரும் மதுவகைகளை நிதானம் தப்புமளவுக்கு குடிக்கப் பழகுவதும் பாடமாயிருந்தன.

இன்னும் முதுகலைப்பட்டம் பயில விரும்புவோர் செத்த மிருகங்களின் தோல் உரித்து பதனப்படுத்துவது (ரோட்டோரம் செத்து நாறிக்கிடந்த மாட்டின் தோலை உரித்துக்கொண்டிருந்த ஐவரை கல்லால் அடித்துக் கொன்ற இந்தியக் கொடூரம் கக்காநாட்டில் நிகழாதிருக்க இப்பிரிவு மாணவர்களுக்கு 'கறுப்பு சொரிநாய்ப்படை' பாதுகாப்பு தரப்படுகிறது), தோல் தொழிற்சாலைகளில் பிராஜெக்ட் டிரெய்னியாக மூன்றுமாதம் பணியாற்றுவது, நொதித்து நாறும் தோல் கழிவுகளின் நாற்றத்திற்குப் பழகும் பொருட்டு மூக்கின் நுகரும் திறனை செயலிழக்கச் செய்யும் யோகா பயில்வது, செருப்பு தைக்கப் பழகியபின் பொதுஇடங்களில் வாடிக்கையாளரை ஈர்த்து அறுந்த செறுப்புகளைத் தைத்து பாலிஷ் போட்டு பளபளப்பாக்குவது ஆகிய பாடங்களை கூடுதலாய் கற்க வேண்டியிருந்தது. இதிலும் தேறிவிட்டால் பிறகென்ன.. ஜனாதிபதியின் சம்பளத்திற்கு மேல் ஒருரூபாய் கூடுதலாகவும் முன்சொன்ன இதர சலுகைகளையும் பெற்றுக் கொண்டு கண்ணியமாக வாழ வேண்டியது அவரவர் பொறுப்பாகி விடுகிறது.

மிகப்பெரும் வேலைவாய்ப்புச் சந்தையாக திடீரென மவுசு கண்டுவிட்ட இத்துறையில் மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்ட பிறகுதான் இத்தொழிலில் நிபுணர்களையும் 'ஆய்' வாளர்களையும் உருவாக்குவதற்காக நாடு முழுவதிலும் கே.ஐ.டி (கக்காநாடு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) என்ற பெயரில் உயர்கல்வி நிறுவனங்கள் நீண்டகாலமாக செயல்பட்டுவருவதும் அங்கு மேற்சொன்ன பாடங்களில் பட்ட மேற்படிப்புகள் இருப்பதும் தெரியவந்தது. ஒரு ரகசிய அல்லது தலைமறைவு ஸ்தாபனம்போல் செயல்பட்டு வந்த இந்த 17 கேஐடிகளுக்கும் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான கோடிகளில் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துவரும் அதிர்ச்சியான தகவலும் சமீபத்தில் தான் அம்பலமானது.

சங்கேதக்குறிகளைக் கொண்டு வெளியாகும் இந்நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விளம்பரங்களை மாயமந்திரங்கள் தொடர்பானது என்றஞ்சி கருத்தூன்றி கவனியாது விட்டதன் விளைவாக கக்காநாட்டு பெரும்பான்மை சாதியரில் ஒருவரும் கேஐடிக்குள் நுழையவேயில்லை. இங்கே யார் படிக்கிறார்கள், அவர்கள் எங்கே பணியாற்றுகின்றனர் என்பதும் எவருக்கும் தெரியாத ரகசியமாகவே இத்தனைக்காலமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கிருந்ததிய சேரிக்குள் நுழைந்தால் தீட்டு எனக்கூறி அந்தப் பக்கம் யாருமே எட்டிப்பார்க்காததால் அங்கிருந்த மாணவர்கள்தான் கேஐடிக்களை ஆக்கிரமித்திருக்கிற விசயமே வெளியில் தெரியாமல் போய்விட்டது.

மலமள்ளவும் தெருக்கூட்டவும் ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தவிர மற்றப் பொழுதுகளில் கிருந்ததியர்கள் யாரும் ஊருக்குள் நுழையக் கூடாது என்ற தடையுத்தரவு அமலில் இருந்ததால் இவ்வளவு காலமும் அவர்களது நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியாமல் போனது குறித்து பலபட்டறை சாதிகளும் தங்களுக்குள் கூடி பேசிப்பேசி மாய்ந்தனர். கேஐடியில் படித்த கிருந்ததியர்களை தூக்கிப்போக கேஐடி வளாகத்திற்குள்ளேயே பல விமானங்கள் காத்திருக்கும் விசயம் கூட எப்படி தங்களது சாதிச்சங்கத் தலைவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது என்று அவர்கள் அங்கலாய்த்துக் கிடந்தனர்.

பலபட்டறை சாதியாரும் கேஐடிக்கள் மீது கவனங் கொள்ளத் தொடங்கியதையடுத்து இவை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின: இங்கு சேர்ந்து படிப்பவர்களை மிகுந்த கௌரவத்திற்குரியவர்களாய் மதிக்கும் பண்பு மேலைநாடுகளில் வளர்ந்துவிட்டிருந்தது. இங்கே படிப்போருக்கு வெளிநாடுகளில் பல கக்கூசுகள் எப்போதும் திறந்தேயிருக்கின்றன. கீழ்நிலை படிப்பாளிகளைப் போல அவர்கள் தெருக்கூட்டுவதோ சாதாரண கக்கூசு கழுவுவதோ கிடையாது. பெரிய அரண்மனைகளின் அந்தபுரம், பிரபஞ்ச, உலக அழகிகள் மற்றும் நடிகைகளின் கிறக்கமூட்டும் கழிப்பறைகள், ஜனாதிபதி பிரதமர் அமைச்சர் போன்றோரின் அதிகாரம் பொங்கும் கழிப்பிடங்கள், போப்பாண்டவர் உள்ளிட்ட மதகுரு மார்களின் புனிதமலம் போன்றவற்றை மட்டுமே அவர்கள் கையாளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

மட/மத குரு ஒருவர் வாழையிலையில் வெளிக்கியிருந்த விசயம் (இச்சம்பவம்/ அசம்பாவிதத்திற்குப் பிறகு வாழையிலையில் சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. தலைவாழை இலையை விரித்து பரிமாறப்படும் பதார்த்தம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளின் மலம்போல வெவ்வேறு நிறத்தோடும் மணத்தோடும் தென்படத் தொடங்கி பின் குமட்டலெடுத்து இலையிலேயே வாந்தியெடுக்கும் வரை பலரது நிலையும் சிக்க லாகிவிட்டதையடுத்து கல்யாணம் காதுகுத்து எதுவாயினும் அங்கு முற்றாக வாழையிலை தடை செய்யப்பட்டு விட்டது.

வேண்டாத விருந்தாளிகளுக்கு வாழையிலையில் உணவளித்து அவமதிக்கும் குரூரம் சமூகத்தில் தலை தூக்கி வருகிறது) பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டப் பிறகுதான் மேற்சொன்ன அழகிகள், தலைவர்கள், புனிதர்களுக்கும் ஆசனவாய் இருக்கிற தென்பதையே பலரும் அறிந்துகொண்டனர். ‘எங்களுக்குத் தெரியும் தேவதைகளுக்கும் குசு வருமென்று’ என சனதருமபோதினியில் சுகன் கவிதை எழுதியபோது நம்மைப்போலவே அவர்களுக்கும் இருக்குமானால் அவர்கள் எப்படி தேவதையாக இருக்கமுடியுமென வாதிட்டு மறுத்தவர்கள் இப்போது ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

இதே காலகட்டத்தில் மேலை மதத் தலைவர் ஒருவர் சிறுநீர் பிரியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அதை ஆன்மீகத்தில் சொஸ்தப் படுத்த முடியாதென்பதால் ஆபரேசன் செய்யப்போவதாகவும் செய்தி வெளியானது. ஆக யாராயிருந்தாலும் மலஜலம் கழித்தாக வேண்டியவர்களே என்பது உலகத்துக்கே ஊர்ஜிதமானது. அதற்கப்புறமே இங்கெல்லாம் ஸ்கேவஞ்சர்களாக இருப்பவர்கள் கேஐடியில் படித்த கிருந்ததியர்கள் என்பதும் தெரியவந்தது. உலகத்தின் கழிப்பறைகளில் கணிசமானவை மக்கள் தொகையில் மிகக்குறைவேயான கிருந்ததியர் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்ற விவரத்தைக் கேட்டவுடனேயே பலருக்கும் வயிற்றைக் கலக்கியது.

காலங்காலமாய் இத் தொழில்களில் ஈடுபட்டு பல தலைமுறைகளாக பயிற்சி பெற்று வந்திருக்கும் கிருந்ததியர்களே கேஐடியின் பெரும்பாலான இடங்களை ஆக்ரமித்திருந்தனர். எனவே புதிதாக இத்துறைக்கு படிக்கவிரும்பும் இதர சாதியைச் சார்ந்த மாணவர்களுக்கு இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாகவும் எறும்பின் மூத்திரமாகவும் அரிதாகியிருந்தது. கிருந்ததியர் ஏகபோகத்துக்கு எப்படியாவது முடிவு கட்டவேண்டுமெனப் பலபட்டறையினரும் கூடிப் பேசி கிருந்ததியரல்லாதார் கூட்டமைப்பை (•போரம் எகென்ஸ்ட் இன்ஈக்வாலிட்டி) நிறுவினர்.

கூட்டமைப்பு பலமுறை கூடிக் கலைந்தும், கலைந்து கூடியும் வெளியிட்ட கோரிக்கை சாசனம் கக்காநாட்டில் பெரும் பரபரப்பாகிவிட்டது. கிருந்ததியர் கட்டுப்பாட்டில் உலகத்தின் கழிப்பறைகள் இருப்பது நல்லதல்ல என்றும் அவர்கள் தயவில் தான் உலகத்தார் ஒன்னுக்கு கூட போகமுடியும் என்ற நிலை நீடிக்குமானால் அது கடும் அடக்குமுறைக்கு வழிவகுக்குமென்றும் அவ்வாறு அடக்கப்படும்போது மூத்திரப்பைகள் வலுவிழந்து உயிரிழப்பும்கூட ஏற்படுமெனவும் எடுத்தயெடுப்பில் எச்சரிக்கப்பட்டது.

மனிதனாய்ப் பிறந்த யாவருக்குமே எல்லா வகையான தகுதியும் திறமையும் இருக்கவே செய்கின்றன. ஒரு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் கிருந்ததியரல்லாதாரும் மலமள்ளுவது தொடர்பான வேலைகள், தோலுடன் தொடர்புடையப் பணிகள், பிணத்தோடு தொடர்புள்ளக் காரியங்கள் யாவிலும் தமது தகுதி திறமையை வெளிப்படுத்திக் காட்டுவர். ஆனால் இத்தகுதியும் திறமையும் கிருந்ததியர்களுக்கு மட்டுமே கருவிலே திருவுடையதாய் பீற்றிக் கொள்வதைக் கேட்கவே அருவருப்பாய் இருக்கிறது. முடக்கப்பட்டுள்ள எமது அறிவும் ஆற்றலும் நாட்டின் கக்கூஸ்களுக்கு பயன்படும் வகையில் திருப்பி விடப்பட வேண்டுமானால் அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கிருந்ததியரல்லாதார் அனைவருக்கும் அவரவர் சாதிக்கேற்ப பிரதிநிதித்துவம் தரவேண்டும்.

நாட்டின் மிகவுயரிய அதிகாரமும் வருமானமும் உள்ள ஸ்கேவஞ்சர் பதவிகளை தமது சாதிபலத்திற்கும் மேல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற கிருந்ததியர்கள், சாதி வாரி பிரதிநிதித்துவம் என்று நாங்கள் கேட்கும்போது, தமது சேரிக்குள் சாதி வேற்றுமையே கிடையாதென்றும் ஊருக்குள் என்ன நிலவரமிருந்தாலும் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் மழுப்பலாக பதிலளிக்கின்றனர். இது முழு பூசணிக்காயை துளி பீயில் மறைக்கிற வேலை. இந்நாடு சாதியாகத்தான் இருக்கிறது என்பது உண்மையிலேயே கிருந்ததியருக்குத் தெரியாதா? சாதியின் காரணமாகத்தான் இவர்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தோம் என்பதைக்கூட மறந்துவிட்டனரா? முன்பு முத்தல நக்கம்பட்டியிலும் மருதங்குளத்திலும் ஊராட்சித் தலை வராக இருந்த இவங்காள்களை எங்காள்கள் கொன்றது கூட சாதிவித்தியாசம் இருப்பதைத்தானே காட்டியது? ஏதோ இன்றைக்கு ஸ்கேவஞ்சர் வேலைக்கு ஒரு மரியாதை வந்துவிட்டதால் தாம் ஆதியிலிருந்தே இப்படி பெருவாழ்வு வாழ்வதாய் நினைத்துக்கொள்வதா?

சாதிவாரியாக ஸ்கேவஞ்சர் பதவி நிரப்படுமானால் பணியின் தரம் குறைந்துவிடும் என்று கிருந்ததியர் வாதிடுகின்றனர். எமக்கும் மலத்துக்கும் எந்தத் தொடர்பு மேயில்லையா? தினமும் குறைந்தது மூன்றுவேளையாவது எங்களது இடக்கை மலத்தைத் தொடத்தானே செய்கிறது? எங்களுடையது மட்டுமின்றி எமது குழந்தைகள், படுத்தப் படுக்கையாகிவிடும் எம்வீட்டு கிழடுகள் ஆகியோரின் மலஜலத்தையும் சுத்தம் செய்த அனுபவம் எங்களுக்குமிருப்பதை யாராவது மறுக்கமுடியுமா? முண்ணியத்தில் ஒருவன் வாயில் திணிக்க நாங்கள் கையால் மலத்தை எடுக்கவில்லையா?

இதையெல்லாம் தொட்டக்கையால் யாருடையதை வேண்டுமானாலும் தொட்டு அள்ள முடியும்தானே...? இது என்ன பெரிய கம்பசூத்திரமா...? வீட்டுக்குள்ளேயே கக்கூசுகள் வந்த பிறகு உள்ளே வந்து கிருந்ததியர் கழுவும்பட்சம் வீடு தீட்டாகிவிடும் என்பதால் நாங்களே ஹார்பிக் மாதிரி ஏதாவதொரு கரைசலைப் பயன்படுத்தி எங்கள் வீடு களுக்குள் கழுவி சுத்தம் செய்வதில்லையா...? கறையும் அழுக்கும் இல்லாதபடி சுத்தமாக்க இந்த பிராண்ட் லிக்விட்டை பயன்படுத்துங்கள் என்று கிருந்ததியரல்லாத எத்தனையோ நடிகர்கள் கழிப்பறைத் தொட்டியை கழுவுவதைப்போல விளம்பரங்கள் வருகின்றனதானே.. என்னதான் மிக்ஸி வந்துவிட்டாலும் அம்மியில் சம்பாரம் அரைத்து குழம்புவைத்தால்தான் சுவையாக இருக்கிறது என்பதுபோல, இப்போதெல்லாம் டாய்லெட்டுகளில் ஹெல்த் வாஷ் பைப்புகள் வந்துவிட்டாலும் கையால் கழுவும் போதுதானே சுத்தமானதுபோல ஒரு திருப்தி ஏற்படுகிறது...? எனவே ஒரு கிருந்ததியனுக்கும் மலத்துக்கும் எந்தளவுக்கு தொடர்பிருக்கிறதோ அதேயளவு எங்களுக்குமுண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

சமையலறையும் பூஜையறையும் இருப்பது போலவே எங்கள் வீடுகளில் கழிப்பறையும் இருக்கிறது என்பதி லிருந்தே நாங்கள் மலத்தை எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டாமா? அந்த நேசிப்பின் வெளிப்பாட்டால்தானே நாங்கள் கக்கூசுடன் கூடிய பெட்ரூம்களை கட்டிக்கொள்கிறோம்...? அதேபோல இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த செப்டிக் டேங்கில் இறங்கி ஏறும் சாமர்த்தியம் எங்களுக்கு மட்டுமே உண்டு என்று கிருந்ததியர்கள் வாதாடிக் கொண்டிருப்பார்களோ தெரியாது. நாட்டிலிருக்கிற எல்லாநதிகளும் குளங்களும் சற்றேறக்குறைய மலக்குழிகளுக்கு நிகரான அளவுக்கு மாசடைந்து சாக்கடைகளாகத்தானே தேங்கிக் கிடக்கின்றன... அவற்றில் குளித்தால் தோஷம் நீங்கும் புண்ணியம் பெருகுமென்று கிருந்ததியரல்லாத பெரும் பான்மை மக்கள் தினமும் அவற்றில் முங்கிக் குளித்து பெற்றிருக்கும் அனுபவத்தின் காரணமாக எவ்வளவு துர்நாற்றமுள்ள செப்டிக் டேங்கிற்குள்ளும் அவர்களால் பணியாற்ற முடியும் என்று கூட்டமைப்பு சவால்விட்டு அறிவிக்கிறது. இதுவன்றி ஒவ்வொரு மனிதனும் நடமாடுமொரு செப்டிக் டேங்க்தான் என்று நம்முடைய பித்தர் மரபில் சொல்லப்பட்டுள்ள தத்துவத்தையும் இவ்விடம் நினைவுகூர்தல் வேண்டும்.

உணவுப் பழக்கத்திற்கு வந்தோமென்றால் ஆடாயிருந்தாலும் கோழியாயிருந்தாலும் அதை உயிருடனேயே துள்ளத்துடிக்க சிங்கம் புலிபோல கடித்தா தின்கிறோம்... இல்லையே. செத்தபின்தானே நாங்களும் அறுத்துத்தின்கிறோம்... எனவே செத்ததைத் தின்கிறவர்கள் தாங்கள் மட்டுமே என்று கிருந்ததியர் பீற்றிக்கொள்வதில் எந்த நேர்மையும் இல்லை. அதிலும் புல் பூண்டு போன்ற தாவரவகைகளை மட்டுமே மேய்கிற சுத்த சைவப் பிராணியான மாட்டைத் தின்கிற கிருந்ததியர்களே தாழ்த்தப்பட்டவரெனில், குப்பையையும் ஏன் மலத்தையும்கூட கிளறித் தின்கிற கோழியை கபாப் என்றும் சிக்கன் 65 என்றும் வகைவகையாய் வறுத்துத் தின்கிற எங்களை மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாக ஏன் கருதக்கூடாது என்பதற்கு தக்க விளக்கத்தைத் தருமாறு கிருந்ததியரையும் அரசையும் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. எங்களிடம் வாலாட்டிய எத்தனையோ கிருந்ததியரை பட்டப்பகலில் வெட்டிப் புதைத்தவர்கள் நாங்கள் என்பதை தெரிந்திருந்தும் எங்களுக்கு பிணத்தை அப்புறப்படுத்தவோ புதைக்கவோ தெரியாது என்று வாதிடுவதில் கிருந்ததியர்களின் அறிவீனம்தான் வெளிப்படுகிறது.

சுடுகாட்டில் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு பிணங்களை எரிக்கிற இவர்கள் ஒரேநேரத்தில் விண்மணியில் 44 பேரை எரித்த செழித்த அனுபவம் கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து பிணம் எரிக்கத் தெரியுமா உங்களுக்கு என்று கேட்கிறார்கள். இப்படி வேண்டு மென்றே எங்களை ஆத்திரமூட்டி, எரிப்பதிலும் புதைப்பதிலும் எமக்கு நீண்டகாலமாக இருக்கும் அனுபவத்தை யெல்லாம் எங்கள் வாயாலேயே சொல்லவைத்து, பின் அதையே ஒப்புதல் வாக்குமூலமாக்கி கொலைக்கேசில் சிக்கவைக்கப் பார்க்கும் கிருந்ததியரின் பாசிச சூழ்ச்சியை முறியடிக்க கூட்டமைப்பு உறுதி கொண்டுள்ளது.

மணியாட்டும் கைக்கு மலக்கரண்டி பிடிக்கத் தெரியாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள். கண் பார்த்தால் கை செய்யும் என்பது முன்னோர் வாக்கு. அப்படியிருக்கும் போது கிருந்ததியருக்கு ஆதரவான பத்திரிகையொன்று, உச்சந்தலையில் டும்மியும் தார்ப் பாய்ச்சி வேட்டியும் கட்டிக்கொண்டு கோயிலில் மணி யாட்டிக் கொண்டிருக்கும் ஒருவரை, ‘அந்த மணியை கர்ப்பஸ்தானத்தில் வீசியெறிந்துவிட்டு இங்கே வாரும், உமக்கு கேஐடியில் இடம் கிடைச்சிருக்கு’ என்று கூட்ட மைப்பினர் கூப்பிடுவதைப்போல கேலிச்சித்திரம் வெளியிட்டிருப்பதை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக் கிறது.

அதேபோல தப்பித்தவறி கிருந்ததியரல்லாத மாணவருக்கு கேஐடியில் இடம் கிடைத்து சேர்ந்து விட்டால் அவர்கள் மிகுந்த இளக்காரமாக நடத்தப்படுகின்றனர். சிறுசிறு தவறுகளுக்கும்கூட பொறுமையிழக்கும் பேராசிரியர்கள், ‘மக்கு.. மக்கு... நீயெல்லாம் மலமள்ள வரலேன்னு எவன் அழுதான்... உனக்கு சுட்டுப் போட்டாலும் பிணம் எரிக்க வராது. நீயெல்லாம் உன் குலத்தொழிலுக்குத்தான் லாயக்கு... இங்க வந்து ஏன் எங்க உயிரை எடுக்கிறே...’ என்று திட்டுவது வாடிக்கை யாக உள்ளது. இந்த அவமானம் தாங்காத கிருந்ததியரல் லாத குடும்பப் பிள்ளைகள் கேஐடியிலிருந்து தப்பித்து கள்ளத்தனமாய் ரயிலேறி பட்டணம் போய் இன்றைக்கு அமைச்சர்களாகவும் வியாபாரிகளாகவும் கோயில் குருக் களாகவும் வெறும் ஐநூறு ஏக்கர் கொண்ட பண்ணையாராகவும் காலந்தள்ள வேண்டிய இழி நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதெற்கெல்லாம் காரணம், கேஐடி பேராசிரியர்களில் பெரும்பாலோர் கிருந்ததிய ராய் இருப்பதே. எனவே பேராசிரியர் பதவியிலும் எமக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறோம்.

ஸ்கேவஞ்சர் படிப்பு மற்றும் வேலை மட்டுமல்லாது பறையடிப்பதிலும் எமக்கு இடஒதுக்கீடு தேவை என்று இப்போதே வலியுறுத்துகிறோம். தோலாலான பறையை நீங்கள் தொடக்கூடாது, தீட்டாகிவிடுவீர்கள் என்று எம்மை மிரட்டி தடுக்கப் பார்க்கின்றனர். தீட்டுப்படாத சாதி என்ற வெற்று கௌரவத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன விரல் சூப்புவதா அல்லது வேறேதையாவது சூப்புவதா? எமக்கும் ஆடுமாடுகளின் தோல்களுக்கும் எந்தத் தொடர்புமே இல்லையா? காலணிகள், இடுப்பு பெல்ட், கடிகார வார், பிரயாணப் பை என்று எங்களிடம் இல்லாத தோல் பொருட்களா? அவற்றையெல்லாம் நாங்கள் தொட்டு பயன்படுத்தவில்லையா....?

அவ்வளவு ஏன்? எமது கடவுள்களும் முனிபுங்கவர்களும் ரிஷிகளும்கூட மான்தோலின் மீதமர்ந்து தவம் செய்வதை காலண்டர்களில் கண்டதில்லையா...? நாங்கள் மிகவும் விரும்பி வாசிக்கும் மிருதங்கத்திலும் தவிலிலும்கூட தோல் இருக்கிறதே? அதையெல்லாம் நாங்கள் தொட்டு அடித்ததால் இசை எழும்பாமல் போய்விட்டதா என்ன? மிருதங்கத்தை இப்படி வாசிக்க வேண்டுமானால் பறையை அப்படி வாசிக்கவேண்டும். வேண்டுமானால் யார் வீட்டு சாவிலும் நாங்கள் அடித்து ஆடி எங்கள் தகுதி, திறமையை நிரூபிக்கத் தயாராயிருக்கிறோம்.

ஆக எப்படிப் பார்த்தாலும் கிருந்ததியருக்கும் அவரொத்த சாதியனருக்கும் மேலாக நாங்கள் யாரும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு அவர்கள் செய்கிற எல்லாத் தொழில்களிலும் அதற்கான படிப்புகளிலும் எமக்கு இடஒதுக்கீடு தேவையென அரசையும் சொச்ச நீதிமன்றத்தையும் வலியுறுத்துகிறோம். ஓட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்திலிருக்கும் கட்சியினர் இவ்விசயத்தில் பாராமுகமாய் இருக்கக் கூடும் என்பதால் நாங்கள் சொச்சநீதிமன்றத்தையே பெரிதும் நம்பியிருக்கிறோம். தாங்கள் வகிக்கும் பதவி, அதற்குரிய மாண்புகள் என்றெல்லாம் மயங்கி ஒருபால் கோடாமையோடு நீதிவழங்கவேண்டும் என்று அவர்கள் துணிந்துவிடக்கூடாது. துலாக்கோலை சற்றே தாழ்த்திப் பிடித்து சுயசாதிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கவேண்டும் என்று பணிந்து வேண்டுகிறோம்....

‘நீதிமன்றம் திடீரென பிரம்மாண்டமான கழிப்பறையாகி விடுகிறது. ஆர்டர் ஆர்டர் என்று மேசையைத் தட்டும் சுத்தி ஒரு மலக்கரண்டியாக மாறிவிடுகிறது. தனக்குத் தானே துக்கம் அனுஷ்டிப்பதுபோல இவ்வளவுகாலமும் உடுத்தியிருந்த கருப்பு அங்கியை உதறிவிட்டு காக்கி யுடுப்பு அணிந்து கனகம்பீரமாக நீதிபதி மலமள்ளும் அழகை நீதிதேவதையானவள் கண்ணைக் கட்டியுள்ள கறுந்துணியவிழ்த்து பொறாமையோடு ரசிக்கிறாள். பின் தன் கையிலிருக்கும் தராசுத்தட்டை வாகாகப் பிடித்து அதில் அவளும் மலமள்ளத் தொடங்குகிறாள்’ - இப்படி தகுதிக்கு மீறி கனவுகண்ட குற்றத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த பதினாறு நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்திலிருந்தனர் நீதிபதிகள்.

கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஒரு ஸ்கேவஞ்சர் வரும்போது டவாலி ஒருத்தன் சைலன்ஸ் என்று அறிவித்தவுடன் யாராயிருந்தாலும் எழுந்துநின்று முகமன் கூறி ஸ்கேவஞ் சரை வரவேற்பதைப் போலவே நீதிமன்றத்துக்குள் நுழையும்போது தங்களையும் அவ்வாறு வரவேற்க வேண்டும் என்று கடந்தமாதம் அவர்கள் நடத்தியப் போராட்டம் பிசுபிசுத்துப் போனது. ‘நீங்க என்ன ஸ்கேவஞ்சரோ, இல்ல ஸ்வீப்பரா... ஆ•ப்டர் ஆல் ஒரு ஜட்ஜ்தானே... உங்களுக்கு எதுக்கு மரியாதை தரணும்?’ என்று அரசு மறுத்துவிட்டது. ஸ்கேவஞ்சர்கள்மீது காழ்ப்பிலும் பொறாமையிலும் மேலங்கி இன்னும் கருக்குமளவுக்கு பொங்கிக்கொண்டிருந்த நீதிபதிகள் ஸ்கேவஞ்சருக்கு இணையான சம்பளம் சலுகைகள், மரியாதை மானம் ரோஷம், கோடைவிடுமுறை, மூன்று தலைமுறையாக நீதிபதியாக இருந்தவரின் குடும்பத்தை கண்ணியமான மாற்றுத்தொழிலில் ஈடுபடுத்தும் வகையில் அவரது வாரீசுகளில் ஒருவருக்கு ஸ்கேவஞ்சர் வேலை, நீதிபதிகளுக்கும் காக்கிச் சீருடை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர்.

தம் வாரீசுகளுக்காவது காக்கியுடை அணியும் கௌரவம் கிடைக்குமா அல்லது அவர்களும் தங்களைப்போலவே காலகாலத்துக்கும் நீதிபதிகளாகவே இருந்து இப்படி கருப்பு உடைக்குள் புழுங்கிச் சாக நேரிடுமோ என்ற கவலையும் அவர்களை பீடித்துக்கொண்டது. எனவே போராட்டத்தை அவசரஅவசரமாக முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பினர். கூட்டமைப்பிலிருந்த தமது சொந்தபந்தம் சிலரைத் தூண்டிவிட்டு பொதுநல வழக்கு தொடுக்கவைத்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். ஆனால் கட்டிங், குவார்ட்டர், ஆ•ப், •புல் என்று எந்த சைஸ் பெஞ்சில் ஏறி நின்று விவாதித்தாலும் தூய்மைப் பணியாளர் நியமனத் திட்டத்தில் நீதிமன்றம் கை வைக்கவே முடியாதபடி அது அரசியல் சட்டத்தால் காப்பு செய்யப்பட்டிருப்பது அவர்களுக்குப் புரிந்தது.

வெறுமனே கக்காநாட்டு சட்டப் புத்தகங்களுக்குள் உலும்பிக் கொண்டிருக்காமல் இதுபோன்ற பிரச்னைகளுக்கு பல்வேறு உலகநாடுகளின் நீதிமன்றங்களும் எவ்வாறு தீர்வுகண்டன என்பதை ஆராய்வதன் மூலம் கக்காநாட்டில் கிருந்ததியர் ஏகபோகத்திற்கு முடிவுகட்டி யாவரும் ஸ்கேவஞ்சராகவும் ஸ்வீப்பராகவும் மேன்மை யடையும் வழியை கண்டடைய முடியும் என்ற நம்பினர். இவர்கள் பெரிதும் நம்பியிருந்த- இடஒதுக்கீடு விசயத்தால் பரபரப்புக்கும் கலவரங்களுக்கும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் பிரசித்திப் பெற்ற-அண்டைநாடான லிபரல் பாளையத்திலிருந்து அவர்களுக்கு விரும்பத்தக்க தகவல் எதுவும் கிடைக்கவில்லை. தொடங்கிய காலந்தொட்டு தொடர்ந்து இடஒதுக்கீட்டிற்கு எதிராகவே இயங்கி வரும் லிபரல்பாளைய நீதிமன்றங்களை இவ்விசயத்தில் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

கருப்பு அங்கி அணிந்திருந்ததால் பெரியாரின் சீடர்களாயிருக்கக்கூடும் என்று நம்பி இந்த நீதிபதிகளிடம் ஆலோசனை கேட்க கள்ளத்தோணி ஏறி வந்த தமது மதியீனத்தை எண்ணி வெட்கப்பட்டனர் கக்காநாட்டு நீதிபதிகளும் •போரம் எகைன்ஸ்ட் இன்ஈக் வாலிட்டி அமைப்பினரும். ஆனால் இதனாலெல்லாம் அவர்கள் சோர்வடைந்து விடவில்லை. இறுதியில் தமக் கான நற்செய்தியை அவர்கள் இந்தியாவுக்குள்ளிருந்து கண்டெடுத்தனர்.

Mari Marcel Thekaekara எழுதிய Endless Filth என்ற புத்தகம், பலபட்டறை சாதி யினருக்கு போட்டியில்லாத ஒரு புதிய வேலைவாய்ப்புச் சந்தையை திறந்துகாட்டியது: பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது அறிமுகமாகி நடைமுறையிலிருந்து பின் கைவிடப்பட்டத் தொழில் ஒன்றைப் பற்றிய குறிப்பு அப் புத்தகத்திலிருந்தது- மலம் கழித்தப்பின் கழுவிக் கொள்வதற்கு பதிலாக டிஷ்யூ காகிதத்தால் துடைத்துக் கொள்வதை வழக்கமாய்க் கொண்டிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், அந்த காகிதத்தை இங்கிலாந்திலிருந்து பெருஞ்செலவில் இறக்குமதி செய்ய வேண்டியிருந்ததாம்.

கொள்ளையடிக்கும் காசில் பெரும்பகுதியை இப்படி குண்டி துடைக்கவே செல விட்டால் கஜானா திவாலாகிவிடும் என்ற கவலை பீடித்ததாம் பிரிட்டிஷ் விசுவாசிகளுக்கு. பிரபு, இனி மேல் நீங்கள் பேப்பர் வாங்க வேண்டாம்... அதற்கு பதிலாக துண்டுத்துண்டாக கிழிக்கப்பட்டிருக்கும் இந்தத் துணியிலேயே துடைத்துக் கொள்ளுங்கள். தினமும் துணியை சுத்தமாகத் துவைத்து டெட்டாலில் அலசி காய வைத்து பக்குவப்படுத்தித் தர ஆட்களை நியமித்துவிட்டால் செலவு குறையும் என்று ஆலோசனை கூறினராம். மலம் துடைத்தத் துணியை யாராவது துவைப்பார்களா என்று பிரிட்டிஷ்காரர்கள் ஆச்சர்யமாய் கேட்க, இந்த மாதிரியான வேலைகளைச் செய்வதற்காகத்தான் எங்கள் நாட்டில் ஒரு சாதியையே வைத்திருக்கிறோம் என்று கூறி அருந்ததியர்களை மிரட்டி துவைக்கவைத்தனராம்.

இந்தியாவில் வழக்கொழிந்துவிட்ட ‘துணியால் துடைத்துக்கொள்ளும்’ அந்த தொழில்நுட்பம் ‘துதுது- துணியால் துடைத்து தூய்மைப்படுத்திக் கொள்ளும் திட்டம்’ என்ற புதுப்பெயரில் கிருந்ததியரல்லாதாரால் கக்காநாட்டில் பிரபல்யமாக்கப்பட்டது. என்ட்லெஸ் •பில்த் புத்தகத்தைப் படித்து ரகசியமாக இதற்கென பயிற்சி எடுத்திருந்ததால் அத்துணிகளை வெளுக்கும் புதிய வேலைவாய்ப்பு முழுவதையும் கிருந்ததியரல்லா தாரே கைப்பற்றிக் கொண்டனர்.

மலம் துடைத்தத் துணியை கையால் துப்புரவாக கசக்கித் துவைக்கும் அவர்களிடமே தமது கக்கூசை கழுவும் பணியையும் ஒப்படைக்கும் வாடிக்கையாளர்கள் பெருகத் தொடங்கினர். கிருந்ததியர்களைப் பார்த்து பொறாமையில் வெந்துகொண்டிருந்த பல்வேறு தரப்பினரும் புதிதாக களமிறங்கியுள்ள கிருந்ததியரல்லாதாருக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். பிரிட்டிஷாருக்குப் போலவே கக்காநாட்டு மேட்டுக்குடியினருக்காக டிஷ்யூ தாள் இறக்குமதி செய்துவந்த வகையில் இதுகாறும் விரயமாகிக் கொண்டிருந்த அன்னியச் செலாவணி இனி மிச்சமாகப் போவதனாலும், மலம் துடைப்பதற்கென்று ஒவ்வொருவரும் துணி வாங்கியாக வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், நலிவடைந்து கிடக்கும் ஜவுளித் தொழில் புத்துணர்ச்சி பெறும் என்பதாலும் கக்காநாட்டு அரசாங்கமும் இந்த ‘துதுது’ தொழில்நுட்பத்திற்கு சாதகமாக நடந்துகொள்ளத் தொடங்கியது. நீராதாரம் சேதார மாவது தடுக்கப்படுவதாலும் டிஷ்யூ பேப்பர் பயன்பாடு முற்றாக ஒழிக்கப்படுவதால் காகிதக்கூழ் தயாரிக்க மரங்கள் வெட்டப்படுவது குறையுமென்பதாலும் இத்திட்டத் திற்கு சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

ஆண்டொன்றுக்கு சராசரியாக 5.7பில்லியன் டாலர் அளவுக்கு கழிவறைத்தாளுக்காக அமெரிக்கா செலவழிக்கிறது என்று இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியுடன் யுஎஸ் அதிபரை கிருந்ததியரல்லாதார் கூட்டமைப்பினர் சந்தித்தனர். இத் தொகையில் பாதியளவுக்கு கொடுத்தாலும்கூட தங்களது சாதிகளைச் சார்ந்த இளைஞர்கள் 'துதுது' தொழில்நுட்பத் தோடு அமெரிக்கா வந்து பணியாற்றத் தயாராயிருப்ப தாக தெரிவித்தனர். தங்கள் சேவையால் மிச்சமாகும் காசைக் கொண்டு இன்னும் நாலு குண்டு செய்து ஈராக்மீது வீசலாமே என்று அவர்கள் கொடுத்த ஐடியாவால் குஷி கண்டுவிட்ட புஷ் உடனடியாக 'துதுது'வுக்கு ஒப்புதல் அளித்தார்.

அதன்படி கக்காநாட்டு கிருந்ததியரல்லாதார் அமெரிக்க கக்கூசுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். வாடிக்கையாளரை கவர்வதற்காக, மலம் கழிக்கும் வரை கக்கூசுக்கு வெளியே காத்திருந்து மணிச்சத்தம் கேட்டதும் உள்ளேபோய் ஆசனவாயை இவர்களே துடைத்து விடுவது, மலம் கழிக்கிறவருக்கு போரடிக்காமலிருக்க செய்தித்தாள் வாசித்துக் காட்டுவது போன்ற புதிய உத்திகளைக் கையாண்டனர். சுத்தம் செய்கிற சாக்கில் அமெரிக்கர்களின் விதவிதமான பிருஷ்டங்களையும் குறிகளையும் காணும் வாய்ப்பினைப் பெற்ற இந்த பலபட்டறைச் சாதி இளைஞர்கள் எப்போதும் கிளுகிளுப் பான மனநிலையுடன் பணியாற்றிய விதம் அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

‘கையால் தொட்டுத் துடைக்கும் இன்பத்தை அனுபவியுங்கள்...’,‘கிருந்ததியரல்லதார் கக்கூசுகளைக் கழுவும் உரிமை கிருந்ததியரல்லாதாருக்கே’, ‘மரபுக்குத் திரும்பு வோம்... துதுது- வை விரும்புவோம்’, ‘தண்ணீர் மிச்சம்... தாளும் மிச்சம்’, ‘காலமெல்லாம் கிருந்தியர் கழுவிய உங்கள் கழிப்பறைகளைக் காண அலுப்பாயிருக்கிறதா...? நீங்கள் அணுகவேண்டிய முகவரி- கிருந்ததி யரல்லாதார் கூட்டமைப்பு’ என்பது போன்ற விளம்பரங் களால் கிருந்ததியர் நிலைகுலைந்துப் போயினர். உள் நாட்டில் எழுந்தப் போட்டியை சமாளிக்கமுடியாத அவர்கள் தமது பாரம்பர்யத் தொழில்களில் நீடிக்க முடியாமல் வேறுவேலைகளைத் தேடி அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளுக்கு செல்லத்தொடங்கினர். மலத்துணி கசக்கும் நுணுக்கமறிந்த கிருந்ததியரல்லாதார் தலைமுறை தலை முறையாக செய்துவந்த அர்ச்சகர், நீதிபதி, மருத்துவர், அரசு ஊழியர் போன்ற இழிதொழில்களிலிருந்து விடுபட்டு படிப்படியாக கக்காநாட்டிலும் அமெரிக்காவிலும் ஸ்கேவஞ்சர்களாகவும் ஸ்வீப்பர்களாகவும் மேன்மை அடையும் காலம் கனிந்துவிட்டது.

சுபம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com