Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி- மார்ச் 2009

11/26 மும்பை
எஸ்.வி.ராஜதுரை

மும்பையில் 2008 நவம்பர் 26ம் நாள் மாலையில் தொடங்கி நான்கு நாட்கள் நீடித்த பயங்கரவாதத் தாக்குதல், ஒரு முக்கியச் செய்தி அடுத்த நாள் இந்திய ஊடகங்களில் முற்றிலுமாக இருட்டடிப்புச் செய்யப் படவோ, அதிகளவு போனால் ஓரிரு நாளேடுகளில் இரண்டாம், மூன்றாம் பக்கத்தில் மிகச்சிறிய அளவில் மட்டுமே இடம் பெறவோ செய்துவிட்டன. மும்பைக்கு அருகிலுள்ள மலெகாவோனில் நடந்த குண்டுவெடிப்புப் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்பு டையவர் என பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் (Anti - Terrorist Squad) கைது செய்யப்பட்டுள்ள சுதாகர் பாண்டே என்னும் தயானந்த் பாண்டே தொடர்பான செய்திதான் அது. அவர் உறுப் பினராக இருக்கும் அபினவ் பாரத் என்னும் அமைப்பு இந்தியாவில் ஆரியவர்த்தத்தை, அதாவது இந்து ராஷ்டிரத்தை (அரசை) உருவாக்க வேலை செய்து கொண்டிருக்கிறது என்பதை போலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டபோது வெளிப்படுத்தினார்.

மும்பைக்கு அருகில் உள்ள மலெகாவோனில் 2008 செப்டம்பர் மாதம், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் வெடிகுண்டுகளை வைத்துவிட்டுச் செல்வதற்காகப் பயன்படுத்தப் பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் யார் என்பதைத் தேடுவதில் தொடங்கிய பயங்கர வாத எதிர்ப்புப் படையின் புலனாய்வு (அந்தப் படைக்குத் தலைமை தாங்கிய அதிகாரிதான் ஹேமந்த் கர்கெரெ) அந்த மோட்டர் சைக்கிள் பெண்துறவி பிரக்யாசிங் தாக்கூர் என்பவருக்குச் சொந்தமானது என்பதைக் கண்டறிந்தது. பின்னர் அந்தத் துறவிக்கும் ராம்ஜி என்பவருக்கும் நடந்த செல்பேசி உரை யாடல்களைக் கண்டறிந்தது. அந்த உரையாடலின் போது அந்தத் துறவி, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏன் அதிகமாக இல்லை என்று மலெகாவோன் தெருக்களில் குண்டுகளை வைத்து விட்டு வந்த ராம்ஜியிடம் கேட்டிருக்கிறார். இந்து தீவிரவாத அமைப்பு களை மையமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளின் தொடர் பமைப்பு பற்றி இந்திய அரசாங்கம் மேற்கொண்ட முதல் முறையான புலன் விசாரணை அதுதான். அந்தப் புலன் விசாரணையின் மூலம் இந்து தீவிரவாத அமைப்புகள் நடத்திவந்த குண்டு தயாரிக்கும் இடங்கள், இராணுவப் பயிற்சி மையங்கள் ஆகியன தெரிய வந்ததுடன்,இந்திய இராணுவத்திற்குள்ளும் இந்து பயங்கர வாதிகள் ஊடுருவியுள்ளதும் அம்பலப்படுத்தப்பட்டது. பாஜகவுடன் தொடர்புடைய இந்து தீவிர வாத அமைப்புகள் அந்த பயங்கரவாதத் தொடர்பமைப்பில் சம்பந்தப் பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. அந்தப் புலனாய்வு கண்டறிந்த முக்கியமான விஷயம், 2007 பிப்ரவரியில் லாகூருக்கும் டெல்லிக்கும் சென்று வரும் சம்ஜோதா விரைவு இரயில் வண்டியில் குண்டு வெடிப்புகளைச் செய்ய இந்திய இராணுவ அதிகாரியான லெப்டினண்ட் கேனல் புரோஹித் (மலெகாவோன் சம்பவத்திலும் தொடர்புடையவர்), அரசாங்கத்தின் இருப்புகளிலிருந்து 60கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தைத் திருடிக் கொண்டு வந்தார் என்பதாகும்.


இந்தக் கண்டுபிடிப்புகள் இந்துத்துவ பாசிச சக்திகளின் கடுமையான எதிர் வினைகளைச் சந்தித்தன: மலெகாவோன் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கைது செய்யப்பட்டவர்கள்- குறிப்பாக அந்தப் பெண்துறவி - போலிஸ் காவலில் சித்திரவதை செய்யப்பட்டனர் என்று இந்து பாசிசவாதிகள் கூறினர். அவர்கள் சித்திரவதை செய்யப்படவில்லை என்பதை மருத்துவப் பரி சோதனைகள் வெளிப்படுத்தின. கர்கரே இந்துத்துவச் சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி என்றும் அவர் தலைமையிலுள்ள பயங்கரவாத எதிர்ப்புப்படை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் இந்து பாசிசவாதிகள் கூக்குரலிட் டனர். குஜராத் முதலமைச்சரும் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைக் கொல்வதில் முக்கிய பங்கேற்றவருமான நரேந்திர மோடி, பாஜக தலைவரும் இந்தியாவின் அடுத்த பிரதமர் என அறிவிக்கப்பட்டிருப்பவருமான . அத்வானி ஆகியோர், கர்கரே ஒரு தேசதுரோகி என்று குற்றம் சாட்டினர்.

ஒரு பயங்கரவாத குண்டுவீச்சுத் தாக்குதல் தொடர்பாக பெண்துறவி பிரக்யா கைது செய்யப் பட்டபோது, அவருக்கும் தமது அமைப்புகளுக்கும் எவ்விதத் தொடர்பில்லை என முதலில் அறிவித்த (ராஜ்நாத் சிங் அந்தப் பெண்துறவி யுடன் அமர்ந்தி ருக்கும் புகைப்படமொன்று வெளியிடப்பட்ட பிறகும்கூட) சங் பரிவாரத் தலைவர்களான எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோர், சில நாட்களுக்குள் தங்களது முகமூடிகளைக் கழற்றியெறிந்தனர். சங் பரிவார அமைப்புகள் ஹேமந்த் கர்கரே மீது ஒருபுறம் அவதூறுப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட, மற்றொருபுறம் இந்திய அரசு அங்கங்களில் இந்துத்துவத் திற்குள்ள செல்வாக்கு அவர்களுக்கு இரு முக்கிய வெற்றிகளை ஈட்டித் தந்தது: ஒன்று, லெப்டினண்ட் கேனல் புரோஹித்தை போலிஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. மறுபுறம், மதச்சார்பற்ற மன்மோகன் சிங் அரசாங்கத்தின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பெண்துறவி பிரக்யா போலிஸ் காவலில் வைக்கப்பட் டிருந்த போது, போலீசாரால் (அதாவது, பயங்கரவாதத் தடுப்புப் போலீசாரால்) சித்திரவதை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக தக்க விசாரணை மேற்கொள்ளப்படும் என அத்வானியிடம் வாக்குறுதி தந்ததாகும். இந்தியாவில் பயங்கரவாத, கொலைக்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் ஒரு நபருக்காக இந்தியாவின் அடுத்த பிரதமராகப் போகிறவர் எனச் சொல்லப்படுபவர் தலையிடுவதும் அவருக்கு இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விளக்கம் கொடுப்பதும் அசாதாரணமான நிகழ்ச்சிகள் என்றோ, மன்மோகன் சிங் அரசாங்கம் இந்துத்துவ பாசிசச் சக்திகளுடன் மென்மையாக நடந்து கொண்டிருப்பதற்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு என்றோ எந்த ஊடகமும் கூறவில்லை.

சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே, மலெகாவோன் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு சட்டரீதியான உதவிகளை செய்யப் போவதாகக் கூறினார். அரசாங்கம் இந்துக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. எனவே இந்துக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளத் தொடங்கினால், அவர்கள் அவதூறு செய்யப்படுகின்றனர் என சிவசேனை கூறியது. அதாவது, இந்தியாவின் சட்டம்-ஒழுங்கு விதிகள் ஆயுதமேந்திய இந்து தீவிரவாதக் குழுக்களுக்குப் பொருந்தா என்பதுதான் இதன் பொருள்.

சங் பரிவாரத்துடனும் சிவசேனையுடனும் சேர்ந்து, ஹேமந்த் கர்கரெவையும் கொல்லப்பட்ட மற்ற இரு அதிகாரிகளையும் அவதூறுகளைச் செய்துவந்தவர் களில் முக்கியமானவர் பதவிநீக்கம் செய்யப்பட்ட மும்பை போலிஸ் அதிகாரி யான சச்சின் வாஸெ என்பவராவர். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்று சொல்லப்படும் அவர் மீதும் அவரது சகாக்கள் மூவர் மீதும் கொலைக்குற்றம், குற்றச் சதிகள், என்கவுண்டர் ஒன்றில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் க்வாஜா யூனுஸ் என்பவரின் பிணத்தை மறைத்து வைத்திருந்த குற்றம் ஆகிய குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளன. வாஸெவும் அவரது சகாக்களும் இலஞ்சம் வாங்கியதற்காகவும், சிலரை மிரட்டிப் பணம் பறித்ததற்காகவும், நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு வைத்திருந்ததற்காகவும் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள். அவர்களைப் பதவிநீக்கம் செய்வதில் முக்கியப் பங்கேற்ற விஜய் ஸலாஸ்கர் மீது அவர்களுக்கு ஆத்திரம் இருந்து வந்தது.

ஹேமந்த் கர்கரே, இந்திய மைய அரசாங்கம், மகாராஷ்டிர அரசாங்கம் ஆகியவற்றின் விதிகளுக்குக் கட்டுப்பட்டும், அதே வேளை எந்த அரசியல் நிர்பந்தத்திற்கும் அடிபணியாமலும் பணியாற்றி வந்தவர்; அவர் மேற்கொண்ட பணிகளில் மகா ராஷ்டிர மாநிலத்தின் சந்திராபூர் மாவட்டத்திலுள்ள மாவோ யிஸ்ட் புரட்சியாளர்களை ஒடுக்கியதும், பாகிஸ்தான் உளவுப் படையான ஐ.எஸ்.ஐ.யில் ( Inter State Intelligence Service) ஏற்பட்டுள்ள பிளவுகளையும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வந்தவர்களையும் கண்டறிந்து அவர்களுடன் தொடர்புகொள்ள விடாமுயற்சி செய்ததும் அடங்கும். எனவே அவரை கடமை தவறாத காவல்துறை அதிகாரியாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, இந்துத்துவத்திற்கெதிரான அரசியல் போராளியாக அல்ல. எனினும், இந்துத்துவச் சக்திகள் அவர் மேற்கொண்ட பிற பணிகள் பற்றி அக்கறைப்படாமல், மலெகாவோன் குண்டுவெடிப்பு பற்றி மேற்கொள்ளப்பட்ட புலனாய்வுகள் மீது மட்டுமே கவனம் குவித்தனர்.

பயங்கரவாதம் என்பதற்கு இந்துக்களின் மரபணுக்களில் (Genes)இடம் கிடையாது, இந்துக்களில் ஒருவர்கூட பயங்கர வாதியாக இருக்கமாட்டார் என்றும் அது முஸ்லிம்களின் இரத்தத்திலேயே கலந்திருக்கிறது என்றும் கூறி வந்தவர் களுக்கு, கர்கரே தலைமையிலிருந்த பயங்கரவாத எதிர்ப்புப் படை புலன் விசாரணையில் கண்டறிந்த உண்மைகள், உப்புக் கண்டத்தைப் பறிகொடுத்த பாப்பாத்தியின் நிலை ஏற்பட்டு விட்டது. அதனால்தான், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் அவருக்கு இந்திய சமுதாயத்தின் அனைத்துத் தரப்பும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த நேரத்திலும்கூட, சங் பரிவாரம் அவர் மீது தனக் கிருந்த ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ளவில்லை. அவரை இனி, இந்துக்களின் விரோதி என அவதூறு செய்ய முடியாது என்பதால், அவரை வேறு ஏதோ ஒருவகையில் அவமதிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுபவரும் தினமணி நாளேட்டின் ஆசிரியருமான ஆர்.வைத்தியநாதன் அந்த நாளேட்டின் 29.11.2008 இதழில் எழுதியுள்ள தலையங்கம் கூறுகிறது: கர்கரேயும் சரி, ஏனைய காவல்துறையினரும் சரி, பயங்கரவாதக் கும்பலை எதிர் கொள்வது போலச் செயல்படாமல், ஏதோ அரசியல் கட்சி களின் ஊர்வலத்திற்கோ, போராட்டத்திற்கோ கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டதுபோல இருந்தனர் என்பதுதான் உண்மை. வைத்தியநாதன் கூறுவதற்கு மாறானதுதான் உண்மை. கர்கரே தனக்கு வந்த தகவல்களின் அடிப்படையில்தான் செயல்படத் தொடங்கினர்; குண்டு துளைக்காத மார்புக் கவசத்தை அணிந்து கொண்டு சென்றதை தொலைக்காட்சி சேனல்கள் ஒளி பரப்பிய வீடியோப் படங்கள் காட்டுகின்றன. அவரது மரணம் குறித்து முன்னுக்குப்பின் முரணான செய்திகள் போலிஸ் தரப்பிலி ருந்தே வந்திருக்கின்றன. அவர்மீது இந்துத்துவச் சக்திகள் தொடுத்துவந்த அவதூறுகளுக்குப் பரிகாரமாக, அவரது மரணம் குறித்த நேர்மையான புலன் விசாரணைக்கு உத்திரவிடும்படி மத்திய அரசாங்கத்தைக் கேட்பதுதான் வைத்தியநாதன் இப்போது செய்ய வேண்டிய தேசபக்தக் கடமையாகும். மேலும், மிகுந்த தயாரிப்புகளுடன் தாஜ் ஓட்டலுக்கும் நாரிமன் ஹவுஸுக்கும் சென்ற கமாண்டோ க் களில் சிலரும்கூட உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்களை வைத்தியநாதன் எப்படி விளக்குவார்?

தினமணி 28.11.08 ல் பொறுப்பற்றத்தனம் என்னும் முதல் பக்கக் கட்டுரையை ஆர்.வைத்தியநாதன் எழுதியுள்ளார். அதில் தாஜ்-ஒபராய் ஓட்டல்களிலிருந்தவர்களை மீட்கவும் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டவும் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அப்போதைக்கப்போது படம் பிடித்துக்காட்ட ஒன்றுக்கொன்று போட்டிபோட்ட மூன்று ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் பொறுப்பின்மை மீது தனது தார்மீக சீற்றத்தைக் காட்டுகிறார்:

..."ஹோட்டலின் உள்ளேயும், பிற மறைவிடங்களிலும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப் பார்கள் என்பது அரிச்சுவடிப் பத்திரிகை நிருபருக்குக்கூடத் தெரியும். மற்ற சேனல்களைத் தங்களது சேனல் முந்திக் கொள்ளவேண்டும் என்கிற போட்டி மனப் பான்மையில், இந்தியாவின் மூன்று பிரதான ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல்கள் மிகப்பெரிய பாதுகாப்புப் பின்னடைவுக்கு வழிகோலிய விதம் வெட்கித் தலைகுனிய வைக்கிறது." மற்ற சேனல்களை முந்திக்கொள்ள வேண்டும் என்று செயல்பட்டதில் 'ஆஜ்தக்' ஹிந்தி சேனலும் அடங்கும் என்பதையும் அது இந்துத்துவ ஆதரவாளர்களுடையது (இந்தியா டுடே பத்திரிகையின்) என்பதையும் மூத்த பத்திரிகை யாளரான வைத்தியநாதன் அறியாமலிருக்க வாய்ப்பில்லை! ...மும்பையில் நமது பத்திரிகையாளர்கள் வெறும் வியாபாரி களாகச் செயல்பட்டார்களே தவிர, பத்திரிகையாளர்களுக்கு உரித்தான பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்று நொந்து கொள்கிறார் அவர். உண்மையில் இந்த நாட்டிலுள்ள முதன்மை நீரோட்ட மின், அச்சு ஊடகங்கள் யாவும் வியாபார நோக்கத்தோடு செயல்படுபவைதான் என்பதை அவர் அறியா மலா இருப்பார்? பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இருந்தபோதுதான் நாடாளுமன்றக் கட்ட டம் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்தது. அப்போதும் கூட, சேனல்கள் ஒன்றையொன்று முந்திக்கொண்டு செயல் பட்டன; அதேபோல கந்தஹாருக்கு விமானம் மூலம் பிணைக் கைதிகள் கடத்திச் செல்லப்பட்டபோதும் தொலைக்காட்சிச் சேனல்கள் கூடுமானவரை ஒன்றையொன்று முந்திக்கொண்டு செயல்பட்டன. இதுதான் அவை அறிந்த ஒரே பத்திரிகை (வியாபார) தர்மம். தகவல் தொடர்புத்துறையில் (மின் ஊடகங்களில்) வெளிநாட்டு மூலதனம் பெருமளவு நுழைவ தற்கும் பாஜக அரசாங்கம்தான் ஊக்குவிப்புத் தந்தது - இவற் றையும் நமது மூத்த பத்திரிகையாளர் அறிந்திருப்பார்.

இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல் பாதுகாப்புப் படை களுக்கு மட்டுமே உண்டு; எனவே அரசியல்வாதிகள் அனை வரும் இடத்தைக் காலி செய்யுங்கள் என மேட்டுக்குடி மும்பை வாசிகள் கூறியதை, அவர்கள் அந்த முழக்கங்கள் உள்ள அட்டைகளைத் தூக்கிக் கொண்டிருந்ததை சேனல்கள்-குறிப்பாக என்.டி.டி.வி.-திரும்பத் திரும்ப ஒளிபரப்பின. அதேசமயம், விலாஸ்ராவ் தேஷ்முக், ஆர்.ஆர். பாட்டில் போன்ற ஆளும் கட்சித் தலைவர்களை மட்டுமின்றி, குழம்பியக்குட்டையில் மீன்பிடிக்க வந்த நரேந்திர மோடியை யும் திரும்பத் திரும்பக் காட்டி வந்தன. உனது ஆட்சியின் கீழ் இல்லாத மகாராஷ்டிராவில் உனக்கு என்ன வேலை? என்று ஒருமுறையாவது அவை நரேந்திர மோடியைக் கேட்டிருக்க வேண்டாமா? மும்பைத் தாக்குதலைச் சாக்காக வைத்து அங்கும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதலைத் தொடுக்க மும்பையிலுள்ள சங் பரிவாரத்திற்கு ஆலோசனை சொல்ல வந்தாயா? என்று கேட்கத் தவறி விட்டன. நான் ஒரு இந்தியன். எனவே, இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் செல்லவும் அங்கு பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவி செய்யவும் எனக்கு உரிமை உண்டு என அவர் சொல்லியிருந்தால், இந்தியரல்லாத முஸ்லிம்களை விட்டுத் தள்ளுங்கள். ராஜ் தாக்கரேவின் குண்டர்களால் வட இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் தாக்கப்பட்ட போது நீ ஏன் ஓடிவரவில்லை என்று கேட்டிருக்கலாம் அல்லவா? அல்லது, குஜராத்தில் நானோ கார் உற்பத்தி செய்வதற்கு டாட்டா நிறுவ னத்திற்குக் கொடுத்துள்ள அனுமதிக்கும் அதற்கு உத்திரவாத மளிக்கப்பட்டுள்ள வசதிகளுக்கும் வரிவிலக்குகளுக்கும் எந்தக் குந்தகமும் ஏற்படாது என்று தாஜ் ஓட்டல் உரிமையாளர் ரத்தன் டாட்டாவுக்கு ஆறுதல் கூற வந்தாயா? என்றாவது கேட்டிருக் கலாம். ரத்தன் டாட்டாவின் டாட்டா குரூப், எரிசக்தித் துறையில் நிறைய முதலீடு செய்து வருகிறது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மூலம் பெரும் ஆதாயம் அடையக்கூடியவர்களில் டாட்டாக்களும் அடங்குவர்.

அது மட்டுமல்ல; மோசமான அரசியலும் அரசியல்வாதிகளும் வேண்டாம் என்று கூறுவதற்கும் அரசியலே வேண்டாம், அரசியல்வாதிகளே வேண்டாம் எனக் கூறுவதற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு உள்ளது என்பதை இந்த தொலைக்காட்சி மன்னர்கள் ஏன் கூறவில்லை. பாதுகாப்புப் படையினரின் கடமை குறிப்பிட்ட செயல்பாடுகளை மட்டுமே மேற்கொள்வது தானேயன்றி நாட்டை நிர்வகிப்பதல்ல. நாட்டை நிர்வகிப்பதை, அதாவது அரசியலை அவர்களிடம் விட்டுவிட வேண்டும் என்பதுதான் என்.டி.டி.வி.யால் போற்றப்படும் மேட்டுக்குடியினரின் கருத்தா? அப்படி யானால், அவர்களும் என்.டி.டி.வியின் ப்ரோன்னோய் ராய் போன்ற தேசபக்தர்களும் இந்தநாட்டில் இராணுவ ஆட்சி வேண்டும் எனக் கருதுகிறார்களா? பொதுமக்கள் அபிப்பிரா யத்தை உடனுக்குடன் எஸ்எம்எஸ் மூலம் திரட்டுவதில் கை தேர்ந்தது என்.டி.டி.வி. இரண்டுநாட்கள் தொடர்ந்து அது ஒளி பரப்பியதும் ப்ரோன்னாய் ராயால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுமான ஒரு எஸ்எம்எஸ் இது:

ராஜ் தாக்கரேவும் அவரது வீரசேனா ஆட்களும் எங்கே போய்விட்டார்கள்? அவர் அமைதியாகத் தூங்கட்டும் என்று டெல்லியிலிருந்து 200 தேசியப் பாதுகாப்புக் கமாண்டோ க்கள் (தென், மேற்கு, கிழக்கு, வட இந்தியர்) பயங்கரவாதிகளிடம் சண்டை போடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவரிடம் சொல்லுங்கள். இந்த செய்தியை அந்தக் கோழைத் தனமான முரடனிடம் அனுப்புங்கள். கமோண்டோ க்கள் அனுப்பப்பட்டதையோ, அவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதையோ அரசியலாக்க வேண்டியதில்லை; மேலும், இந்த செய்தியை அனுப்பியவர் களும், அதைத் தம் பங்குக்குப் பிறருக்கு அனுப்பியவர்களும் ஒளிபரப்பியவர்களும் தான் கோழைகள். வட இந்தியருக்கு எதிராக ராஜ் தாக்கரேவும் அவரது குண்டர்களும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது, அவர்களைக் கோழைகள் என்று சொல்வதற்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தவர்களின் குரல் இது. மேலும், இந்த எஸ்எம்எஸ்ஸை ஏன் நீங்கள் ராஜ் தாக்கரேவுக்கு நேரடியாக அனுப்பக்கூடாது என்று ப்ரோன் னோய் ராய் அந்த மும்பைவாசிகளிடம் கேட்டிருக்கலாம்.

பாலாசாகேப் ராஜ் தாக்கரேவின் அப்பா பாபாசாகேப் பால் தாக்கரேவும் அவரது சிவசேனை குண்டர்களும் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த நான்கு நாட்களிலும் வாயைத் திறக்காமல் இருந்தார்கள்.அந்தப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானிலுள்ள லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்தவர்கள் என்னும் தகவல்கள் வெளியானவுடன் பால் தாக்கரேவின் சாம்னா ஏடு எழுதியது: பாகிஸ்தானை ஒழித்துக் கட்டுவதற்கு முன், இந்தியாவிலுள்ள குட்டி பாகிஸ்தான்களை ( Mini Pakistans) முதலில் தீர்த்துக்கட்ட வேண்டும். ii அதாவது இந்தியாவிலுள்ள முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் இந்தியாவின் பாதுகாப்பு பற்றி மற்ற எல்லோரைக் காட்டிலும் அதிகக் கவலைப்படுபவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைவிட சங் பரிவாரம்தான் ஆபத்தா னது எனக் கருதுகிறவருமான லல்லு பிரசாத் யாதவ், பால் தாக்கரேவின் இந்த வெளிப்படையான பாசிச அறை கூவலைப் பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்தியாவின் பாதுகாப்பு குறித்து மின் ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கூறிய கருத்து இது: செப் 11, 2001 (9/11) நிகழ்ச் சிக்குப் பிறகு அமெரிக்காவும், ஜுலை 7, 2007 (7/7) இலண்டன் சுரங்க ரயில் பாதையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இங்கிலாந்தும், பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் களுக்குப் பிறகு இஸ்ரேலும் மேற்கொண்ட உறுதியான பயங் கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, அந்த நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏதும் நடக்கவில்லை. இந்தியா வால் மட்டுமே பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க முடிய வில்லை. மக்களின் குரலாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மின் ஊடகவியலாளர்கள், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் எனும் பெயரால் மக்களின் குடிமை உரிமை களையும் ஜனநாயக உரிமைகளையும் பறிக்கின்ற சட்டங்கள் மேற்சொன்ன நாடுகளில் இயற்றப்பட்டன என்பதையும், முஸ்லிம்கள் அனைவரையும் அரக்கர்களாகக் காட்டும் பிரச்சா ரங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் சொல்லவில்லை. இஸ்ரேலின் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை என்பது பாலஸ்தீனர்களை ஒரு மக்கள், ஒரு தேசிய இனம் என்பதை முற்றாக மறுக்கும் கொள்கை அடிப்படையில் உருவாக்கப் பட்டதாகும் என்பதை மறைக்கிறார்கள். உலக பயங்கர வாதத்தை எதிர்த்துப் போராடுதல் எனும் பெயரால் இராக்கி லும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க, ஐரோப்பிய நேட்டோ க் கூட்டணிப் படைகள் நடத்திவரும் இனச் சுத்திகரிப்பு நடவடிக் கைகளைப் பற்றி மௌனம் சாதிக்கிறார்கள். உலகில் பயங்கர வாதத்திற்கு எதிராக போர் நடத்தும் உரிமையை மேற்சொன்ன மூன்று நாடுகளுக்கு மட்டுமே வழங்கும் இவர்கள் அந்த அச்சுநாடுகளுடன் இந்தியா சேர்ந்து கொள்ளவேண்டும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்கள். இந்த மூன்று நாடுகளின் காலனியாதிக்க வரலாற்றை மறைக்கிறார்கள்.

பயங்கரவாதத்திற்கெதிராக அமெரிக்கா பிரகடனப்படுத்திய போர், உலகம் முழுவதையும் அமெரிக்காவுக்கான சண்டைக் களமாக்கியுள்ளது. இறையாண்மை கொண்டிருந்த இராக்கிய, ஆப்கானிய அரசாங்கங்களைத் தூக்கியெறிந்தது; சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் வகையில் போர்க்கைதி களைக் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாக்கியது; எல் சால்வடோ ர், கொலம்பியா போன்ற நாடுகளில் அரசியல் ஒடுக்குமுறைகளுக்கும் பொருளாதாரச் சுரண்டல்களுக்கும் எதிராகப் போராடும் சக்திகளை ஒழித்துக்கட்ட கொலைப் படைகளை (Death Squads) உருவாக்கியது. அதுமட்டுமின்றி பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடு மேற்கொள்ள வேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா.பாது காப்பு அவை நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தை துச்சமாக மதிக்கும் அமெரிக்கா, 2004 - 2008ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் அல்-கெய்தா மையங்களை வைத்தி ருப்பவை எனச் சந்தேகிக்கப்படும் நாடுகள் (சோமாலியா, கென்யா,சிரியா, பாகிஸ்தான் முதலியன) மீது தன்னிச்சையாக திடீர் விமான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்பதையும் இத்தாக்குதல்களால் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் சாதாரணக் குடிமக்களே என்பதையும் அமெரிக்காவின் ஆளும் வர்க்க நாளேடான நியூ யார்க் டைம்ஸ் 2008 நவம்பர் 10ம் தேதி வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை கூறுகிறது.வீவீவீ இரண்டாவதாக, 9/11 நிகழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக, அமெரிக்காவையும் அதன் நேசநாடுகளையும் மக்கள் பயங்கரவாதிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப் பட்டுள்ளனர் என்பது கட்டுக் கதை.

9/11 நிகழ்ச்சியை அடுத்து அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கு உள்ளே பயங் கரவாதத் தாக்குதல்கள் நடக்கவில்லை என்பது உண்மையே. ஆனால், இராக்கிலும் ஆப்கனிலும் அது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத் துவதற்குப் பதிலாக புதுப்புது பயங்கரவாதக் குழுக்களைத் தோற்றுவித்துள்ளது; அவர்களுக்கு ஆதரவு தரும் சக்திகளை ஒன்றிணைய வைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளது துருப்புகள், சிவிலியன்கள் மீது இராக்கிலும் ஆப்க னிலும், மத்திய கிழக்கிலும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன, நடந்தும் வருகின்றன.

2002ல் இந்தோனீஷியாவின் பாலித்தீவிலுள்ள இரண்டு நைட்கிளப்புகளில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் 202 பேர் மாண்டனர். அதில் தொடர்புடைய மூவர் மிக அண்மையில் மரண தண்டனை வழங்கப்பட்டனர். அவர்கள், அதற்காகக் கவலைப்படவில்லை; மாறாக, ஆப்கனிலும் பிற இடங்களிலும் அமெரிக்காவும் அதனுடைய ஐரோப்பியக் கூட்டாளிகளும் இழைத்துவரும் வன்கொடுமைகளுக்கான தண்டனையே அந்த குண்டு வெடிப்பு எனக் கூறினர். ஆனால், அந்த மூவருக்குப் பின்னால் உள்ள தீவிரவாத அமைப்பை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 2003இல் ஜாகர்தாவிலுள்ளதும் அமெரிக்கர்களுக்குச் சொந்தமானதுமான மோரியட் ஓட்டல் மீது பலத்த குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப் பட்டது. இந்தோனீஷியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்காவின் தேசியநாளான ஜூலை 4ம் தேதிக் கொண் டாட்ட ஏற்பாடுகளை அந்த ஓட்டலில் செய்து கொண்டிருந்த சமயத்தில்தான் அந்தத் தாக்குதல் நடந்தது. 2008 செப்டம்பரில் இஸ்லாமாபாத்திலுள்ள மோரியட் ஓட்டல் கிட்டத்தட்டத் தரைமட்டமாக்கப்பட்டது. ஆக, அமெரிக்கர்களுக்கு அமெரிக் காவுக்குள்ளே உள்ள பாதுகாப்பு, அமெரிக்காவுக்கு வெளியே இல்லை என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் கூட்டு சேர்பவர்களுக்கும் இதேகதிதான் என்று பயங்கரவாதி கள் எச்சரித்து வரும் அவர்கள் சொல்லளவில் நிற்காமல், சிலமாதங்களுக்கு முன் காபூலிலுள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் தொடுத்து இந்திய அதிகாரி உள்ளிட்ட பலரைக் கொன்றிருக்கின்றனர்.

என்.டி.டி.வி.தன்னை மதச்சார்பற்றதாகவும் சிவசேனா, சங் பரிவாரம் போன்றவற்றுக்கு எதிரானதாகவும் அவ்வப்போது காட்டிக்கொள்கிறது. ஆனால் அதன் முக்கிய நபரான (Anchor Person) பர்க்கா தத், பேட்டி கண்ட தேசபக்தர்களிலொருவரும் மும்பைவாசிகளின் பிரதிநிதிகளிலொருவருமான முன்னாள் நடிகை சிமி கார்வால், பாகிஸ்தான் முழுவதன் மீதும் கம்பளம் போர்த்தியது போல் விமானக் குண்டுவீச்சு (Blanket Bombing) நடத்தவேண்டும், பாகிஸ்தானை அச்சத்திலும் பீதியிலும் உறையவைக்க வேண்டும் என்று கூறினார். மும்பை பயங்கர வாதத் தாக்குதல் பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத் துவது பற்றியும் என்.டி.டி.வி. பேட்டி கண்டவர்களில் ஒருவர், மும்பையின் முன்னாள் போலிஸ் கமிஷனர் ரெபெய்ரோ. குடிசைப்பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் குடிசைப்பகுதி தாதாக்களின் உதவியுடன் அடுக்கு மாடிக் கட்டடக் காண்ட்ராக்டர்களால் வெளியேற்றப்பட்ட தற்கு சட்டரீதியாக உதவி செய்தவர் ரெபெய்ரோ. பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய மேதாவிலாசம் மிக்கக் கருத்துகளைத் தொலைக்காட்சிச் சேனல்கள் மூலம் இந்திய மக்களுக்கு அனுப்பி வந்த அரசியல்வாதிகளில் ராகுல் காந்தி யும் ஒருவர். அவரது கருத்துகள் சிலவற்றைக் காண்போம்:

(அ) அவர்கள் (பயங்கரவாதிகள்), நம்மை (இந்திய மக்களை) பிளவுபடுத்தலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதுவும்கூட நடக்கப்போவதில்லை.

ஆமாம், அந்தப் பயங்கரவாதிகளின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை.மக்களை ஏற்கனவே சாதிகள் பிரித்து வைத்தி ருப்பதுடன் மத அடிப்படையில் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, அத்வானி ஆகியோர் பிரித்து வைத்துவிட்டனர்.வீஸ் பிரதேச அடிப்படையில் பிரிக்க பால் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகி யோருக்கு உதவியாக மத்திய அரசாங்கத்திலும் மகாராஷ்டிர மாநில அரசாங்கத்திலும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டி ருக்கும் சரத் பவாரின் தேசியவாதக் காங்கிரஸும் இருக்கிறது.

பொருளாதாரரீதியிலும் இந்திய மக்கள் பிளவுபட் டுள்ளனர்: இந்திய மக்களில் மேல்மட்டத்திலுள்ள 10% பேர் நாட்டின் வருமானத்தில் 33% பெறுகின்றனர். வறுமைக் கோட் டிற்கு அருகிலுள்ளவர்கள் என்று அரசாங்கத்தாலேயே வரை யறுக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மக்களில் கால் வாசிப் பேர் இருக்கிறார்கள். அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்த தகவலின்படி 2004-2005ம் ஆண்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருந்தவர்கள் மக்கள்தொகையில் 27.5%. இப்பிரிவின ரின் தனிநபர் வருமானம் நாளொன்றுக்கு ரூ.20 (0.40 டாலர்). அமைப்புசாராத் தொழில்பிரிவில் உள்ள தொழிற்கூடங்களுக் கான தேசிய ஆணையம் (National Commission for Enterprises in the Unorganized Sector - NCEUS ) , 2007 இல் வெளியிட்ட அறிக்கை, இந்தியரில் 25 % ( 23.6 கோடி) நாளொன் றுக்கு ரூ.20 அல்லது அதற்கும் குறைவான வருமானத்தைக் கொண்டே உயிர் பிழைக்கிறார்கள் என்றும், அவர்களில் பெரும்பாலா னோர் வேலை, சமூகப் பாதுகாப்பு ஏதுமற்ற முறைசாராத் தொழில்களில் வேலை செய்பவர்களும் கொடிய வறுமையில் உழல்பவருமாவர் என்றும் கூறியது. உலகிலுள்ள வறியவர் களில் 33% இந்தியாவில் இருக்கிறார்கள் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியரில் 75.6% நாளொன்றுக்கு ரூ.90க்குக் (2 டாலர்) குறைவான வருமானத்தைக் கொண்டு வாழ்கிறார்கள் என்றும், சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகளில் இப்படிக் குறைவான நாள் வருமானம் கொண்டிருப்பவர்களின் விகிதம் 72.2% என்றும் உலக வங்கி கூறியுள்ளது. மேலும், இந்திய மக்களிடையே உள்ள வருமான ஏற்றத்தாழ்வு விகிதம் 1999-2000ம் ஆண்டில் 32.5%ஆக இருந்தது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சத்தூட்டக் குறைவால் அவதியுறும் 3 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள், இந்தியக் குழந்தைகளில் (2007 கணக்குப்படி) 46% ஆகும்.ஸ்

(ஆ) அவர்கள் (பயங்கரவாதிகள்) நம்மை அச்சுறுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதுவும் நடக்கப் போவதில்லை

உண்மைதான். அதனால்தான் மூன்று அல்லது ஆறு மாதங் களுக்கு முன்பே, மும்பையில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல் நடக்கப்போவதாக இந்திய உளவுத்துறைக்கு (குறிப் பாக ராவிற்கு) தகவல் வந்து சேர்ந்த பிறகும்கூட -இப்படித் தகவல் வந்து சேர்ந்ததை, இந்திய உளவுத்துறைகளுக்குத் தெரி யாத தகவல்களைக்கூடத் தெரிந்து வைத்திருக்கும் பிரவீன் சாமியும்கூட (இந்து நாளேட்டின் சிறப்பு நிருபர்) உறுதிப்படுத் தியுள்ளார்- இந்தியராகிய நாம் அச்சமின்றி இருந்திருக்கி றோம். நாம் அச்சமற்றவர்களாக இருந்ததால்தான் பத்து பயங் கரவாதிகளால் மும்பைப் பெருநகரத்தை ஏறத்தாழ 60 மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது - அது வும் அங்கும் இங்கும் நகராமல் இருந்த இடத்தில் இருந்தே.

(இ) அவர்கள் நம்மை வீட்டை விட்டே வெளியே வராத படி செய்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நாம் வீட்டைவிட்டு வெளியே வந்து, அவர் களுடன் சண்டை போட்டு அவர்களைத் தோற்கடித்து இந்தியாவின் முன்னேற்றத்தைக் கொண்டு வருவோம்.

இஸட் பிரிவு பாதுகாப்புடன் 2000 போலிசார் புடைசூழ ராகுல் காந்தி போன்ற அரசியல்வாதிகளால் மட்டும்தான் வெளியே வர முடியும் என்பதோடு விஷயம் முடிந்துவிடவில்லை. பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் என்பதை உளவுத்துறை பலமாதங்களுக்கு முன்பே அறிந்திருந்தும், மும்பைவாசிகள் அச்சம் கொள்ளக்கூடாது என்பதற்காகவே, அத்தகவலின்படி நடக்காமல் இருந்தன மத்திய, மாநில அரசாங்கங்கள். இது ஒருபுறமிருக்க, வீட்டுவேலை செய்பவர், பால்காரர், காய்கறி விற்பனையாளர் போன்ற மிகச் சாமானியர்களுக்கு வீட்டை விட்டு வெளியே போனால்தான் அன்றாடக் கஞ்சி என்பதால் அவர்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து கொண்டிருந்த எல்லாநாட்களிலும் வெளியே வந்து கொண்டுதானிருந்தனர். அவர்கள்தான் பெரும்பாலான பயங்கரவாத நிகழ்ச்சிகளில் பலியாகின்றவர்கள். மேலும்,ஏறத்தாழ நான்கு நாட்கள் மும்பை நகரத்தை சிறை பிடித்திருந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதால் மட்டும் இந்தியாவிற்கு முன்னேற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியாது. இந்தியாவின் முன்னேற்றம் என்பது, குறைந்தபட்சம் எல்லோர்க்கும் குடிநீர், மின் வசதி, கழிப்பறை ஆகியனவாவது கிடைக்கச் செய்வதுதான். தாஜ், ஒபராய் ஓட்டல்களும் லியோபோல்ட் கபேவும் மட்டும்தான் மும்பாய் அல்ல. தாராவி, சிவாஜி நகர் ஆகியவையும், அங்கு மைல் கணக்கில் குவிந்து கிடக்கும் நகர்ப்புறக் கழிவுகளும் கூட மும்பாய்தான்.

அரசியலும் வேண்டாம்,அரசியல்வாதிகளும் வேண்டாம் என்று மும்பை மக்களின் பிரதிநிதிகள் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களது உணர்வுகளை மதிக்காமலும், ராஜ் தாக்கரே வின் மராத்திய உணர்வைப் புண்படுத்தும் வகையிலும் பயங் கரவாதத் தாக்குதல் முறியடிக்கப்படுவதற்கு முன்பே வருகை தந்தவர்களிலொருவர் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அமர்சிங். ழிஷிநிக்கு உதவ அவர் அழைக்கப்பட்டிருக்கவில்லை; பயங்கர வாதத் தாக்குதலால் நிலைகுலைந்து போன மும்பை நகரில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி, ராஜ் தாக்கரேவின் மண்ணின் மைந்தர்கள், வட இந்தியர்களை வெளியேற்றி விடுவார்களோ என்னும் கவலையில் அவர் வரவில்லை. அம்பானிகள் மும்பையில்தானே இருக்கிறார்கள்!

சமாஜ்வாதிக் கட்சியின் முக்கிய தலைவர்களிலொருவரான ஜெயா பச்சனின் கணவர் அமிதாப் பச்சன் (மும்பை நிகழ்ச்சி யொன்றில் தனது மனைவி இந்தியில் பேசியதால் ராஜ் தாக்கரே வின் கோபத்துக்காளானவர். பின்னர் பால் தாக்கரேவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டவர்). ராகுல் காந்தியைப் போல இந்திய மக்கள் அனைவருக்காகவும் பேசும் தார்மீக உரிமை தனக்கு இருப்பதாக அவர் கருதவில்லை. மும்பையிலுள்ள மராத்தியர்கள் ஒருபுறமிருக்கட்டும், அங்குள்ள வட இந்தியர் பற்றிக்கூடக் கவலைப்படவில்லை. அவர் தனது சொந்த பாதுகாப்புப் பற்றி மட்டுமே கவலைப்பட்டார். அவரும் இணையதளத்தில் எழுதக்கூடியவர்தான். அவர் தனக்கென ஒரு ப்ளாக் (Blog) வைத்திருக்கிறார். அதில் அவர் எழுதுகிறார்:

இதைச் சொல்வதற்கு எனக்கு வெட்கமாக உள்ளது. எனக்கு முன்னே பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ச்சிகள் நடந்து கொண் டிருந்தபோது, முதன்முறையாக ஒரு காரியம் செய்தேன். மீண்டும் இதுபோன்ற காரியத்தைச் செய்ய வேண்டிய சந்தர்ப் பம் வரக்கூடாது என்று நம்பியபடி. அதாவது, லைஸென்ஸ் பெற்று நான் வைத்துள்ள .32 கைத்துப்பாக்கியை எடுத்து, அதில் ரவைகளை நிரப்பி, எனது தலையணைக்கடியில் வைத்துக் கொண்டேன்

மும்பை நகரவாசிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மை உணர்வை அவர் இப்படி வெளிப்படுத்துகிறாராம். இதைவிட முட்டாள்தனமான கூற்று ஏதேனும் இருக்க முடியுமா? அவருக்கு வேண்டியளவுக்குப் பாதுகாவலர்கள் இல்லையா? இப்படிக் கூறுவது, அவரைக் கடவுளாக போற்றும் பல்லா யிரக்கணக்கான ஏழை இரசிகர்களுக்கு, லைஸென்ஸ் பெற்றுக் கைத்துப்பாக்கி வைத்திருப்பதைக் கனவில்கூட நினைக்க முடி யாத இரசிகர்களுக்கு இழைக்கப்படும் அவமானம் என்று அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. யார் கொல்லப்பட்டாலும் அது வருத்தத்திற்குரியதுதான். ஆனால், சிலர் மட்டுமே மனிதகுலத்தின் குறியீடுகளாகக் காட்டப்படு வதும், வேறு சில மனிதர்கள், அதிலும் குறிப்பாக ஒரு இனத் தையோ மதத்தையோ சார்ந்தவர்கள் அனைவரும் இருத்த லுக்கே தகுதியற்றவர்களாகக் கருதப்படுவதும் நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. நாரிமன் ஹவுஸில் பயங்கரவாதி களால் கொல்லப்பட்ட ஒரு யூதத் தம்பதி, அவர்களது இரண்டு வயது மகன் ஆகியோரைப் பற்றிய செய்திகள், அந்தத் தம்பதி களின் உடல்களை எடுத்துச்சென்ற இஸ்ரேலியர்கள் (யூதர்கள்), அவர்களுக்கு இஸ்ரேலில் நடத்தப்பட்ட இறுதிச் சடங்குகள் ஆகியவை தொலைக்காட்சி சேனல்களாலும் அச்சு ஊடகங் களாலும் எண்ணற்ற முறை காட்டப்பட்டன. மும்பைத் தாக்குதல் முறியடிக்கப்பட்ட அடுத்தநாள், என்.டி.டி.வி., அந்த யூதக் குடும்பத்தின் ஆசாரங்களுக்கு ஏற்ப சிறப்பு ரொட்டி தயாரித்துக் கொடுத்த ஒரு பேக்கரி உரிமையாளரின் மகனைப் பேட்டி கண்டது: இனி யாருக்கு அந்த மாதிரி ரொட்டியைத் தயாரித்துக் கொடுக்கப் போகிறேன் என்று அவர் ஏக்கப் பெரு மூச்சு விட்டதைக் காட்டியது. நமக்கும் மனிதாபிமானம் இருப் பதால் பேக்கரி என்றதுமே 2002இல் குஜராத்தின் அஹ்மதாபாத் நகரில் பெஸ்ட் பேக்கரியில் இருந்த முஸ்லிம்கள் சங் பரிவாரத் தால் எரித்துக் கொல்லப்பட்டது உடனடியாக நினைவுக்கு வந்தது. அது மட்டுமின்றி, நாரிமன் ஹவுஸில் கொல்லப்பட்ட யூதர்கள், பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையிலும் காஸா பகுதி யிலும் இலட்சக்கணக்கான மக்கள் செத்த பிணங்களைப் போல் ஆக்கப்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதும் நினைவுக்கு வந்தது.


மேலும்,நாரிமன் ஹவுஸில் பயங்கரவாதிகளால் கொல்லப் பட்டதாகச் சொல்லப்படும் யூதர்களான ஹோல்ட்ஸ்பெர்க் தம்பதிகளின் பின்னணியை இங்கு குறிப்பிட வேண்டும். கொல்லப்பட்ட யூத மதகுரு கேப்ரியெல் ஹோல்ட்ஸ் பெர்க் கும் அவரது மனைவி ரிவ்காவும் சபாட் லுபாவிட்ச் (Chabad Lubavitch) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இஸ்ரேலிலும் உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் மத்தியிலுள்ள பல்வேறு மதக்குழுக்களில் ஒன்றாக இருந்த இந்த இயக்கம் பின்னர் யூத இன/மதவெறி ஜியோனிஸ இயக்கத்தின் செல்வாக்குக்கு உட்பட்டது. யூத இனம்தான் உலகிலேயே மிக முக்கியமான தும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டதுமான இனம் என்று கருதும் இந்த ஜியோனிஸம்தான் இன்றைய இஸ்ரேலிய அரசின் உருவாக்கத்திற்கும் பாலஸ்தீனர்கள் அகதிகளாகவும் அரசற்றவர்களாகவும் ஆக்கப்பட்டதற்கும் காரணமாக இருந்தது. மத்தியக் கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புறக்காவல் நிலையமாகச் செயல்படும் ஜியோனிஸ இஸ்ரேல், பாலஸ்தீனர்களின் உரிமைகள் குறித்து ஐ.நா. அவை இயற்றிய தீர்மானங்கள் ஒன்றைக்கூட ஏற்றுக்கொள்வதில்லை. பல் வேறு அரபுநாடுகளின் பிரதேசங்கள் சிலவற்றை ஆக்கிரமித் துள்ள இஸ்ரேல், இரண்டாண்டுகளுக்கு முன் மீண்டும் லெபனான் மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. பாலஸ்தீனர்களுக்குப் பிச்சை போட்டதுபோல் கொடுக்கப்பட் டுள்ள மேற்குக்கரை, காஸா பகுதிகளில் வலுக் கட்டாயமாக இஸ்ரேலிய யூதர்கள் குடியேற்றப்படுகின்றனர். இந்தச் சட்ட விரோதமான குடியேற்றத்திற்கு ஆதரவு திரட்டும் அமைப்புக ளிலொன்றுதான் சபாட் லுபாவிட்ச் இயக்கம். இது இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளை பரப்பி வரு கிறது. அந்தந்தப் பகுதியிலுள்ள யூதர்களுக்கு மதபோதனை செய்வதுதான் இதன் நோக்கம் என்று சொல்லப்பட்டாலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸ்ஸாட்டிற்கு இது உறு துணையாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாரிமன் ஹவுஸிலிருந்த சபாட் இல்லத்திற்கு அண்மைக்காலமாக ஏராளமான இஸ்ரேலிய யூதர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அங்கு வந்து தங்கும் யூதர்கள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை எனச் சொல்லப்படுகிறது. அண்மைக்காலமாக மும்பைக்கு இஸ்ரேலியர் வருகை அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் மும்பையில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு பைனான்ஷியல் டைம்ஸ் நாளேடு கூறியது.

இந்திய அரசு (இதில் மன்மோகன் சிங் அரசாங்கம், முதன்மை எதிர்க்கட்சி யான பாஜக ஆகியனவும் அடங்கும்) முழுவதுமே மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் லஷ்கர்-இ-தொய்பா என்னும் அமைப்பால் நடத்தப்பட்டதாகக் கருது கிறது. ஆனால் அந்தத் தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோது ஊடகங்கள் இடைவிடாது கூறிவந்ததுபோல அந்தப் பயங்கர வாதிகள் இந்தியச் சிறைகளிலுள்ள கைதிகள் சிலர் விடுவிக்கப் பட வேண்டும் என்றோ,பெரும் பிணைத்தொகை தங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றோ கோரிக்கை விடுத்ததாகத் தெரியவில்லை; எந்த நோக்கத்திற்காக அந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்பதைச் சொன்னதாகவும் தெரியவில்லை. தாக்குதல் தொடங்கப்பட்ட நாளன்று (2008 நவ 26), அவர்கள் அனுப்பியதாகச் சொல்லப்படும் மின்னஞ்சலில் தாங்கள் டெக்கான் முஜாஹெதீன் என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்திய முஸ்லிம்களுக்குக் கூடுதலான மரியாதை தரப் பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்ததாக அரசு வட்டாரச் செய்திகள் கூறின. உலகில் நடக்கும் எல்லா பயங்கரவாத நடவடிக்கைகளுமே,ஏதோவொரு செய்தி உலக மக்களின் கவனத்துக்கு எட்டும்படி செய்கின்றன.எந்தப் பிரச்சனையை முன்னிறுத்தி பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதலை நடத்தினார்கள் என்பது,இந்தியப் புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்டுள்ள விசாரணைகளின் இறுதியில் தெரிய வரும் சாத்தியப்பாடு உண்டு. பாகிஸ்தானில் இராணுவம், உளவுத் துறையான ஐஎஸ்ஐ, மதவாத சக்திகள் ஒன்றுடனொன்று பிணைந்திருந்ததைப் பலரும் அறிவர். மதச்சார்பற்ற இந்தியா வில் இராணு வத்திற்குள்ளும் சங்பரிவாரம் ஊடுருவியுள்ளதை மலெகாவோன்,சம்ஜோதா நிகழ்ச்சிகள் காட்டின. எனினும் அது தற்சமயம் ஊடகங்களால் மறக்கப்பட்டுவிட்டன. பாகிஸ் தானின் நிலை இந்தியாவுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது.

மிக நீளமான கடற்கரைகளைக் கொண்ட இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுப்பது மிகக் கடினமான காரியம் என்று கூறும் ஆய்வாளர்கள்தான் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்குபொடா போன்ற சட்டங்கள் வேண்டும் என வலி யுறுத்துகின்றனர். பாஜக தலைவர்களைப் போல பொடா போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என உரத்தக் குரல் எழுப்பி வருகிறார் ஜெயலலிதா. பயங்கரவாதக் குற்றங் களைச் செய்தார் அல்லது அவற்றைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்றோ குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு மட்டுமே பொடா போன்ற சட்டங்கள் பிரயோகப்படுத்தப்படும் என்பதும் மும்பையைத் தாக்கிய பயங்கரவாதிகளைப் போல கடல் கடந்து வந்து பயங்கரவாதத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்துபவர்களை எந்த சட்டமும் பாதிக்காது என்பதும் அத்வானி,ஜெயலலிதா போன்றோர் அறியாதவையல்ல. அரசியல் எதிரிகள், மதச் சிறுபான்மையினர், உழைக்கும் மக்களுக்காகப் போராடுகிறவர்கள் ஆகியோரை ஒடுக்க இத்தகைய சட்டங்கள் பயன்படும் என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.

இந்திய உளவு/புலனாய்வுத் துறையினருடன் சேர்ந்து, அமெரிக்காவின் எப்.பி.ஐயும் மும்பைத் தாக்குதல் பற்றிய புலனாய்வில் ஈடுபட்டுள்ளதையும் இஸ்ரேலிய உளவு நிறுவனங்களின் ஒத்துழைப்பு நிராகரிக்கப்பட்டுவிட்ட தாகவும் இந்திய அரசாங்கமே கூறுகிறது. தனது கடைசி நாட்களில் இருக்கும் ஜார்ஜ் புஷ் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் கோண்டலீஸா ரைஸ், மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள் என்பதை மட்டும் கொண்டு அந்த நாட்டுடன் போர் தொடுப்பதில் இறங் காமல், தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது பற்றிய ஒளிவு மறைவற்ற முழுமையான புலனாய்வை மேற்கொள்ளுமாறு ரைஸ் இந்தியாவுக்கு அறிவுரை கூறினார். 9/11 நிகழ்ச்சி தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட புலனாய்வு எப்படி ஒளிவுமறைவற்றதாகவும் முழுமையாக வும் இருந்தது என்பதைப் பார்ப்போம்.

உலக வர்த்தக மையத்தையும் பெண்டகன் கட்டடத்தையும் தகர்க்கப் பயன்படுத்தப்பட்ட நான்கு விமானங்களும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவை என்ற ஒரே காரணத்திற்காக, எந்த விதமான விசாரணையுமின்றி அமெரிக்கா அங்கிருந்த சவூதி அரேபியர்களையும் பின்லேடன் குடும்பத்தாரையும் உடனடி யாக அந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பியது; அத்தாக்குதலுக்கு ஆப்கன் தலிபான் அரசாங்கத்திற்கும் பொறுப்புள்ளது என்று (கடுகளவும் ஆதாரமின்றி) குற்றம் சுமத்தி அந்த நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமித்துக் கொண்டது. சில மாதங் களுக்குப் பிறகு, பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் வைத்தி ருப்பதாகக் குற்றம் சாட்டி இராக் மீது படையெடுத்து அதையும் ஆக்கிரமித்துக் கொண்டது.

ஜார்ஜ் புஷ்-செனிய் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக உள்ள ரைஸ் இவற்றைத்தான் ஒளிவுமறைவற்ற புலனாய்வு எனக் கூறுகிறார். இந்தியாவிலாவது மும்பை நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தத் தவறியதற்கு தார்மீகரீதியான பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் சிவ்ராஜ் பாட்டில்,மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ், துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர் பதவி விலகினர்/விலக்கப்பட்டனர்.ஆனால், 9/11 நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தத் தவறியதற்கான பொறுப் பேற்று ஜார்ஜ் புஷ்ஷோ, துணைக் குடியரசுத் தலைவர் டிக் செனியோ,வேறு அமைச்சர்களோ, உயர் அதிகாரிகளோ பதவி விலகவில்லை. ஆக, அமெரிக்காவுக்கு ஒரு நியதி; இந்தியா வுக்கும் பிறநாடுகளுக்கும் வேறொரு நியதி!

2008 டிச 3அன்று இந்தியா வந்த ரைஸ்,மும்பை தாக்குத லுக்கும் அல்-கெய்தாவுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறினார்: இது தெளிவாக அல்-கெய்தா பங்கேற்கும் பயங்கரவாத வகையைப் போன்றதுதான். இந்திய அரசாங்கமே விரும்பாத அந்தக் கருத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதும்கூட, இந்தியாவின் வர்த்தக மைய மான மும்பையைத் தாக்கியவர்களும் நியூயார்க்கில் 2001இல் பயங்கரவாதத் தாக்குதலை நடத் தியவர்களும் ஒரேவட்டத்தில் தான் இயங்குகின்றனர் என்று கூறினார். உண்மையில் 11/26 மும்பாய் நிகழ்ச்சிக்கும் 9/11 நியூயார்க் நிகழ்ச்சிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்றால், அந்தத் தொடர்பை 9/11 நிகழ்ச்சிக்கு அமெரிக்க அரசாங்கம் தந்த எதிர்வினைகளி லொன்றில்தான் காணவேண்டும். உலக வர்த்தக மையத்தின் மீதும் பெண்டகன் கட்டடத்தின் மீதும் பயங்கரவாத விமானத் தாக்குதல்கள் நடந்து ஏழுமாதங்களுக்குப் பின், அந்தத் துயர மிக்க நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசுகையில் ரைஸ் கூறினார்; அந்த நிகழ்ச்சி உலகில் புதிய அதிகார பலாபலத்தை உருவாக்கு வதற்கான மாபெரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானையும் இராக்கையும் ஆக்கிரமிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கின. இந்தியாவில் தற்போது ஏற்பட் டுள்ள இரத்த வெள்ளத்தில் நீச்சலடித்து தென்னாசியாவில் தன் மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது அமெரிக்கா.

2008 டிச 3 ஆம் நாள் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பெயர் குறிப்பிடப் படாத சில இந்திய உயர் அதிகாரிகள் கூறியதாக ஒரு தகவலை வெளியிட்டது: அதாவது, மும்பைத் தாக்குதலைத் திட்டமிட்ட வர் யூஸுப் முஸாம்மில் என்று இந்திய அரசாங்கம் கண்டறிந் துள்ளது என்பதுதான் அத்தகவல். அதேநாளில் இந்து நாளேட் டில் வெளிவந்த ஒரு கட்டுரை, மும்பைத் தாக்குதலில் பாகிஸ் தானின் ஐஎஸ்ஐ சம்பந்தப்பட்டிருப்பதற்கான மறுக்க முடியாத சான்றுகளை இந்தியா வைத்திருக்கிறது என்று கூறியது. பெயர் சொல்லப்படாத ஒரு முன்னாள் அமெரிக்க அதிகாரி பாகிஸ் தான் இராணுவம், அதன் பலம்மிக்க உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ ஆகியவற்றின் முன்னாள் அதிகாரிகள் சிலர்தான் மும்பைத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி கொடுத்தனர் என்று கூறியதாக 2008 டிச 4ஆம் நாள் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஸர்தாரி கீழ்க்கண்டவற்றைக் கூறினார்: மும்பையில் பிடிபட்ட அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் இல்லை; பாகிஸ்தானிலுள்ள அரசுசாரா நபர்கள்தாம் (Non State Actors) தென்னாசியப் பிராந்தியத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள் கின்றனர்; பாகிஸ்தானுமே பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உள்ளாகிவருகிறது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து பாகிஸ்தான் போராடி வருகிறது.

எனினும்,அமெரிக்க ஊடகங்களில் வெளிவரும் செய்திகள், குறிப்பாக அமெரிக்க அதிகாரிகளால் அவற்றுக்குத் தரப்படும் செய்திகள்,பாகிஸ்தான் அரசாங்கம் தரும் தகவல்களை மறுக்கும் வகையிலும் கடந்தகாலத்தில் பல்வேறு இஸ்லா மிய தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவு தந்து வந்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள், ஐஎஸ்ஐ அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகை யிலும் அமைந்துள்ளன. அதனால்தான் கோண்டலீஸா ரைஸ், பாகிஸ்தான் அரசாங்கம் பயங்கரவாதிகளை வேரறுப்பதிலும், இந்த (மும்பை) தாக்குதலை நடத்தியவர்கள் அதை எங்கிருந்து நடத்தியிருந்தாலும்,அவர்கள் யாராக இருந்தாலும் அவர் களைக் கைது செய்வதிலும் முனைப்புடன் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் இரண்டையும் தழுவக்கூடிய இன்னும் பெரிய போருக்கு அமெரிக்கா ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மையமுனையாக இருப்பது ஆப்கானிஸ் தானும் பாகிஸ்தானிலுள்ள எல்லை பிரதேசங்களும் ஆகும் என்று ஒபாமா பேசிவருகிறார். 2008டிசம்பர்8 அன்று அமெரிக் காவின் தொலைக்காட்சி சேனல் நடத்தும் பத்திரிகையாளரு டன் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, மத்திய ஆசியா வில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளப் போகும் பரந்த திட்டமொன்றை விளக்கினார். ஆப்கனை நாம் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அது பாகிஸ்தானை உள்ளடக்கிய, இந்தியாவை, காஷ்மீரை, ஈரானை உள்ளடக்கிய ஒரு பிரதேசத் தின் பகுதியாகவே ஆப்கானிஸ்தானைப் பார்க்க வேண்டும். அமெரிக்காவின் வல்லமையின் அனைத்துக் கூறுகளையும் பயன்படுத்துகின்ற ஒரு புதிய தேசியப் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க நான் விரும்புகிறேன்ஸ்வீவீவீ என்றும் அவர் கூறினார்.

மும்பைத் தாக்குதலையொட்டி இந்தியா மீது அமெரிக்கா காட்டி வரும் கரிசனம் முற்றிலும் அதனுடைய புவிசார்-அரசியல், பொருளாதார, இராணுவ நலன்களுக்கானதுதான். அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்புத் திட்டம், ஆப்கானிஸ்தானை மட்டுமின்றி, பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர்,ஈரான் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று ஒபாமா கூறியதை நாம் மேலே கண்டோ ம். ஒபாமா பதவி ஏற்றுக்கொண்ட பின்னரும்கூட அமெரிக்காவின் இராணுவ, வெளியுறவுக் கொள்கைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது அவர் தனது நிர்வாகத்திற்குத் தேர்ந்தெடுத்து வரும் நபர்களிலிருந்தே தெரிய வருகின்றது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கருத்துநிலைப் பிரச்சாரகர்களி லொருவரும், ஜார்ஜ் புஷ் அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புடையவருமான அமெரிக்க வரலாற்றாய்வாளர் ராபர்ட் ககான் வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டில் 2.12.2008 எழுதியுள்ள கட்டுரைவீஜ் கூர்ந்து கவனிக்கத்தக்கது.இராக்கின் மீது நடந்த ஆக்கிரமிப்புப் போரைத் தீவிரமாக ஆதரித்தவர்களிலொருவரான ககான், காஷ்மீரிலும் பாகிஸ் தானிலுள்ள பழங்குடி மக்கள் பகுதிகளிலும் உள்ள பயங்கர வாதிகளின் முகாம்களை வேரோடு கெல்லியெறிய ஒரு சர்வ தேசப் படையை உருவாக்கி பாகிஸ்தான் மீது படையெடுக்க வேண்டும் என்னும் கோரிக்கையை அமெரிக்க அரசாங்கத்திற்கு விடுத்துள்ளார். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானும் பிற அரசுகளும் தங்களுக்குள்ள இறையாண்மை என்பது தாங்கள் இயல்பாகப் பெற்ற உரிமை என்று நினைக்கக்கூடாது, 21ம் நூற்றாண்டில் இறையாண்மை உரிமைகள் என்பன பாடு பட்டுப் பெற வேண்டியவையாகும் என்னும் கோட்பாட்டை நிறுவத்தொடங்குவது அமெரிக்கா, ஐரோப்பா, பிறதேசங்கள் ஆகியவற்றுக்குப் பயனுள்ளதாகும். மேலும், மும்பைத் தாக்குதலை சர்வதேச அளவில் எதிர்கொள்வது இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியான இராணுவத் தாக்குதல்களை நடத்தாமல் தடுக்கும் அனுகூலத்தைக் கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார்.

இந்திய மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நம்மீதே விழுந்த தாக்குதல் என்று காத்திரமாக அமெரிக்கா எடுத்துக் கொள்கிறது என்பதை இந்திய மக்களுக்கு மெய்ப்பித்துக்காட்ட வேண்டிய கடமை அமெரிக்காவுக்கு உள்ளதால் பாகிஸ்தானில் சர்வதேசப் படைகளின் இராணுவத் தலையீடு அவசியமாகிறது என்றும் அவர் எழுதியுள்ளார். 9/11 நிகழ்ச்சியைக் காரணம் காட்டி ஆப்கானிஸ்தான் மீது படை யெடுத்ததைப் போலவே, தற்போது மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி அமெரிக்கா, அதன் நீண்டகால இராணுவ, பொருளாதார, அரசியல் தலையீடுகள் மூலமாக நிலை குலைந்து போயுள்ள பாகிஸ்தான் மீதும் படையெடுக்க வேண்டும் என்பதுதான் ககானின் ஆலோசனை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடியான இராணுவ மோதல் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என அவர் கூறுவது, இந்திய, பாகிஸ்தான் மக்களின் மீதுள்ள கரிசனத்தால் அல்ல; மாறாக, அப்படி ஒரு போர் மூளுமானால், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாநிலத்திலும் பிற எல்லைப் பகுதிகளிலும் தாலிபான் ஆதரவாளர்களுக்கு எதிராகப் போர் புரிந்து வருவதை விட்டு விட்டு இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு பாகிஸ்தானியத் துருப்புகளைக் கொண்டுவர வேண்டியிருக்கும் என்னும் எண்ணத்தினால்தான். ஜனநாயகத்திலும் உலக சமாதானத்தி லும் அண்டை நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளிலும் அக்கறை கொண்டுள்ள இந்திய மக்கள், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் மூள்வதை விரும்ப மாட்டார்கள். அது இரு நாட்டு மக்களுக்கும் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்தும் அணு ஆயுத யுத்தமாகக் கூட மாறும் அபாயம் உள்ளது.இரண்டு நாடுகளில் எந்தவொன்றும் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாமலிருந்தாலும்கூட, அணு ஆயுதங்கள் அல்லாத பிற நவீன ஆயுதங்களும்கூட பேரழிவை உண்டாக்கும்.தென்னாசியப் பகுதியில் அமெரிக்கா இன்னுமொரு இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளுமே யானால், அது இந்தப் பிரதேசம் முழுவதையும் நிலை குலையச் செய்யுமென்பதில் சந்தேகமில்லை.

மேற்கோள்கள்:

I. Farzana Versey. Mumbai blasts...... and careless Whispers, Beams, and columns, 27.11.08 http://farzanaversey.blogspot.com
II. K.Ratnayake and Peter Seymonds, US backing for India fuels tension with Pakistan, world Socialist website, 5 Dec 2008
III. Bill Van Auken Washington secretly authorizes military raids in 20 countries since 2004. World socialist website, 11 nov 2008.
IV. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர்கள் சிலர் ஆகியோரின் முஸ்லிம்,சீக்கிய விரோதக் கொள்கைகள், சங் பரிவாரத்துடனுடம் சிவ சேனையுடனும் அவர்களுக்கு இருந்த தொடர்பு, சோனியா காந்தியின் இந்துத்துவம் ஆகியனவை கீழ்க்காணும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன: எஸ்.வி.ராஜதுரை, இந்து இந்தியா: அக்ரனி முதல் அத்வானி வரை, அடையாளம், டிசம்பர் 2003 (இந்த நூலின் 4ஆம் அத்தியாயம் பார்க்க)
V. Poverty in India (Wikipedia, accessed on 10.12.2008)
VI. Amresh mishra, op.cited
VII. K.Ratnayake and Peter Seymonds, op.cited
VIII. Ibid
IX. Robert Kagan, The Sovereignity Dodge: What Pakistan won’t to Do, the world should, Washington Post online, December 2, 2008.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com