Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி- மார்ச் 2009

செப்டம்பர் 29, 3007
புதிய மாதவி

காலில்மாவின் வலைப்பதிவுகளை வாசிக்கும் போது புதுமையாகவும் சுவையாகவும் இருக்கும். அன்றும் அப்படித்தான் சாப்பாட்டு நேரத்தில் சூப் மாத்திரை, டால் ரைஸ் மாத்திரை, டால்பின் பிரை கேப்சுயல்ஸ் என்று என் இஷ்டத்திற்கு இரண்டு இரண்டு மாத்திரைகளை வாயில் போட்டுவிட்டு வலைப்பதிவை வாசிக்க ஆரம்பித்தேன்.

செப்டம்பர் 29.. இந்தியாவின் உண்மைக்கதையா? என்று தலைப்பில் காலில்மா எழுதியிருக்கும் பக்கங்கள்: பி.பி.சி தொலைக்காட்சியிலிருந்து ஒரு டீம் மகாராஷ்டிராவில் வந்து இறங்கியது. அவர்கள் அந்த ஊரில் ஒரு சின்ன கோவிலில் நடக்கும் பூஜையை டாகுமெண்டிரி படம் எடுக்க வந்திருப்பதாகச் சொன்னார்கள். ஊரிலிருக்கும் சர்ப்பஞ்ச் வீட்டில் பவார், கலார் சமூகத்திலிருக்கும் பெரிசுகள் எல்லாம் கூடி விட்டார்கள். அது எப்படி இந்தப் பூஜையைப் படம் எடுக்கவிடலாம் என்று எல்லா பெரிசுகளும் சர்ப்பஞ்ச்சிடம் சண்டைப் போட ஆரம்பித்துவிட்டார்கள். சர்ப்பஞ்ச் எவ்வளவோ தனக்கும் அவர்கள் வருவது பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லியும் அவர்கள் யாரும் நம்பவில்லை. சர்ப்பஞ்ச் வெள்ளைக்கார டி.வி.க்காரனிடம் நிறைய 'ஜிஎன்ஆர் ' வாங்கிக்கொண்டு தங்கள் ஊரில் நடக்கும் ரகசிய பூஜையைப் பற்றி ஊரு உலகத்துக்கு எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டி ஊரையே அம்மணமாக்கிவிட்டதாக இளைஞர்களும் குதி குதி என்று குதித்தார்கள்.

இந்த டி.வி.க்காரன் எல்லாம் காமிரா வைத்துக்கொண்டு அலைந்தால் அவர்கள் யாரும் பூஜையில் பங்கெடுத்துக் கொள்ளமாட்டோம் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.

சர்ப்பஞ்ச்சுக்கு பெரிய தலைவலியாகப் போய்விட்டது. ஒரு வழியாக டி.வி.காரர்களை அழைத்துப் பேசினார். இந்தப் பூஜையில் ஆண்கள் மட்டும்தான் பங்கெடுத்துக் கொள்ளமுடியும் என்பதால் அவர்கள் டீமில் இருக்கும் பெண்கள் யாரும் வரக்கூடாது என்று சொன்னார். அது எப்படி? டைரக்ஷனிலிருந்து காமிராவரை பெண்கள் இருக்கும் டீமில் பெண்கள் வந்தால் அனுமதிக் கிடையாது என்று சொன்னால் என்ன அர்த்தம்? இந்திய அரசும் சர்ப்பஞ்ச் சொல்லியபடியே கேட்கவேண்டும் என்றும் அப்படிக் கேட்காவிட்டால் இந்தியாவில் ஆவணப்படம் தயாரிக்க கொடுக்கப்பட்டிருக்கும் உரிமையை இழக்க வேண்டிவரும் என்று சொல்லிவிட்டது. வல்லரசான இந்தியாவின் அதிகாரத்தை மீறு வதற்கு ஒருகாலத்தில் வல்லரசாக இருந்த அமெரிக்காவே அஞ்சும் போது நாமும் இந்த விசயத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போனால்தான் நல்லது என்று பிரிட்டனும் நினைத்தது. எப்போதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவை ஆண்டோம் என்பதை நினைத்துக்கொண்டே இப்போதும் பேசுவது தவறு என்பதை பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பி.பி.சிக்கு தெரிவித்தார்.

இந்த சின்னப் பிரச்சனையை மனிதஉரிமைகளை மீறும் பிரச்சனையாக ஐந்தாம் ஐ.நா.சபைக்கு எடுத்துச் சென்றாலும் அங்கேயும் இந்தியாவின் தனிப்பட்ட அதிகாரம், செல்வாக்கு முன்னால் ஒன்றும் நடக்காது என்று அவர்களுக்குத் தெரியும். இந்தியாவில் வேலைநிமித்தமும் மேற்படிப்புக்காகவும் குடியேறி இருக்கும் அமெரிக்கர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இதனால் ஏதாவது தொந்தரவு வந்துவிடக்கூடாது என்றும் கறாராக பிரிட்டிஷ் அரசாங்கம் பி.பி.சிக்கு சொல்லிவிட்டது.

நிலவில் வாஸ்து சாஸ்திரப்படி ஒரு பெரிய இந்தியக் குடியிருப்பும் தங்கக்கோபுரங்கள் மின்ன கோவிலும் கட்டிய பிறகு அதிலேயே பல மில்லியன் ரூபாய்கள் இந்தியாவுக்கு வருமானம். ரூபாயின் மதிப்பு அதிகமாக அதிகமாக காந்திநோட் ருப்பி நிழிஸி என்று பொதுவாக எல்லோரும் இந்திய ரூபாயைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஒரு காலத்தில் இந்த நிழிஸியை மிழிஸி இந்தியன் ருப்பி என்றுதான் அழைப்பார்களாம்!

இந்தியாவின் இந்த வளர்ச்சிக்கு அப்துல்கலாம் என்ற ஒரு தனி மனிதரின் கனவுதான் காரணமாம். அவர்தான் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று ஓர் இயக்கமே ஆரம்பித்து நடத்தினாராம். அவர் காலத்திற்குப் பிறகு தான் அவருடைய கனவு நிறைவேறியது என்று சொல்கிறார்கள்.

சிலவிசயங்களில் மட்டும் இந்தியர்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை என்று இந்தியாவில் படித்துவிட்டு வந்து அமெரிக்கா வின் முன்னேற்றத்திற் காக எழுதும் சில எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். அவர்களுடைய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதுதான் ஐரோப்பிய உலகில் பொதுவாக நிலவும் ஓர் அபிப்பிராயம்.

எப்படியும் பி.பி.சி மட்டும் மகாராஷ்டிராவில் நடக்கும் இந்த வினோதமான பூஜையைப் பற்றி ஆவணப்படம் எடுத்து ஒளி பரப்பிவிட்டால் இந்திய வல்லரசின் கோணல்முகம் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற ஆசை. அதனால் ஆவணப்படம் தயாரிப்பில் ரொம்பவும் கவனமாக இருந்தார்கள்.

அந்த பூஜைநாளும் நெருங்கியது. செப்டம்பர் 29 மாலை சரியாக 5.40க்கு பூஜை ஆரம்பமாகிறது. ஒவ்வொரு ஆணும் குளித்துவிட்டு காவிக்கலர் உடை அணிந்து தயாராக இருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டுவாசலிலும் தயாராகக் காத்திருக்கும் ஆண்களை அழைத்துக் கொண்டு சர்ப்பஞ்சி தலைமையில் வீதிவீதியாக வருகிறார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலில் வரும்போதும் அந்த வீட்டுப் பெண்கள் தலையிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுதுகொண்டே சிவப்புக்கலரிலும் பச்சைக்கலரிலும் புடவைத்துணி, வளையல், பூ வைத்திருக்கும் தட்டை ஆண்களிடம் கொடுத்துவிட்டு கதவை அடைத்துக்கொள்வார்கள். வீட்டுக்குள் சென்ற பிறகும் அவர் களின் அழுகுரல் சத்தத்தை அமுக்கிக்கொண்டு டிரம் இசை ஒலிக்க ஆண்கள் வரிசையாக மாசுப்ரே கோவிலை நோக்கிப் போகிறார்கள்.

கோவில் என்று பெரிதாக கோபுரமோ பெரிய பளிங்கு கட்டிடமோ இல்லை. ஒரு சின்னக்குடிசை. அதில் இரண்டு பெண்தெய்வங்களும் இரண்டு ஆண்தெய்வங்களும். இரண்டு பெண்தெய்வங்களும் நிர்வாணமாக அலங்கோலமாக படுத்தக்கோலத்தில். ஆண் தெய்வங்களின் முகம் சிதைந்து கைகள் வெட்டப்பட்டு ஊனமாக. கோவில் பூசாரி சர்ப்பஞ்சிடம் கேட்டு யாருடைய புடவையை முதலில் பூஜைக்கு வைத்து பெண் தெய்வங்களுக்கு உடுத்த வேண்டும் என்று கேட்பார். பவார், கலார் என்று இரண்டு சமூகத்தினரும் இந்தப் பூஜையைச் செய்வதால் அவர்களுக்குள் சண்டைச் சச்சரவு வராமலிருக்க ஒவ்வொரு ஆண்டும் ஒரு சமூகத் திற்கு முதலுரிமை என்ற வழக்கம் இருந்தது. அந்த ஆண்டு கலார் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு முதலுரிமை. பச்சைக்கலர் புடவையை பெரிய தெய்வத்திற்கும் சிவப்புக்கலர் புடவையை சின்ன தெய்வத் திற்கும் அணிவித்து அதேகலரில் கண்ணாடி வளையல்கள் போட்டு காலடியில் மலர்களைத் தூவி அதுபோலவே ஆண் தெய்வங்களுக்கும் கழுத்தில் மாலை அணிவித்து கழட்டி வைத்திருக்கும் கைகளை எடுத்து ஒட்டவைத்து ஒட்டவைத்தக் கைகள் விழுந்து விடா மலிருக்க நல்லமாவுக் கட்டுகட்டி பூஜையை ஆரம்பிப்பார்கள்.

பூஜையின் உச்சக்கட்டமாக விரதமிருந்து வேண்டுதல் செய்யவிருக்கும் ஆண்களிடம் பூசாரி வருவார். விரதமிருந்த ஆண்களின் ஆடை கள் களையப்பட்டு பிறந்த மேனியாக கழுத்தில் மட்டும் ஒரு பூமாலையுடன் ஆண்கள் கண்களை மூடிக்கொண்டு நிற்பார்கள். அவர்களைச் சுற்றி மற்றவர்கள் பயபக்தியுடன் கும்பிட்டபடி. பூசாரி பளபள என்று மின்னும் கத்தியுடன் பக்கத்தில் வரும்போது "மாசுப்ரே மாதாஜிக்கு ஜே !" என்ற சத்தமும் டிரம் இசையின் சத்தமும் அந்த இருட்டைக் கிழித்துக்கொண்டு மேகத்தைக் கிழிக்கிற மாதிரி அலறும். பல நூற்றாண்டுகளைத் தோண்டி எடுக்கும் ஆவேசத் துடன் அந்தக் குடிசை அந்த இருட்டில் தன்னந்தனியாக பூமிக்கு இறங்கி வந்த எரிநட்சத்திரம் போல தகிக்கும். பூசாரி பிறந்தமேனி யாக நிற்கும் ஆணின் குறியைக் கத்தியால் வெட்டுவார். இரத்தம் பெருக்கெடுத்து ஓடும்.. பூசாரி பின்னாலேயே வரும் சின்ன பூசாரிகள் பச்சிலைகள் அடங்கிய ஈரத்துணியால் ஆண் குறியிலிருந்து பீறிட்டு வெளிவரும் ரத்தத்தை கட்டுப் படுத்தி கட்டுப் போடுவார்கள். வரிசையாக கண்களை மூடிக்கொண்டு பிறந்தமேனியாக நிற்கும் ஆண்கள் ஒவ்வொருவரிடமும் பூசாரி வருவார். சில ஆண்கள் குபீரென வெளிவரும் ரத்தத்தைக் கண்டே பயந்து மயக்கம் போட்டு விழுந்துவிடுவார்கள்.

அந்தப் பூஜை முடிந்த மறுநாள் பெண்கள் எல்லோரும் வரிசையாகக் காத்திருந்து பெண்தெய்வத்தைக் கும்பிட்டு விட்டுப் போவார்கள். திருமணம் ஆனவர்கள் பச்சைக்கலர் புடவை கட்டிய பெரிய பெண் தெய்வத்தையும் திருமணமாகாதப் பெண்கள் சிவப்புக்கலர் புடவைக் கட்டிய சின்ன பெண்தெய்வத்தையும் கும்பிட்டால் நல்லது என்று சர்ப்பஞ்ச் டி.வி.காரர்களிடம் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல நன்கு படிக்க வேண்டும் என்று வேண்டி வலப்பக்கமிருக்கும் ஆண் தெய்வத்தையும் உடல் நலம் வேண்டியும் உடலில் ஊனமிருந்தால் குணப்படுத்த வேண்டியும் இடப்பக்க மிருக்கும் ஆண்தெய்வத்தையும் கும்பிடுவது வழக்கம் என்றும் சொன்னார்.

அந்த ஒருநாள் மட்டும் அந்தக் குடிசையிலிருக்கும் தெய்வ தரிசனத் திற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அதற்கு அடுத்தநாள் விடிவதற் குள் இரண்டு பெண் தெய்வங்கள் மீதும் போர்த்தப்பட்டிருந்த உடைகள் களையப்பட்டு மீண்டும் பழைய நிர்வாணக்கோலத்தி லும் ஆண் தெய்வங்களுக்கு ஒட்டப்பட்ட கைகள் பிய்க்கப்பட்டு மீண்டும் ஊனமாக. அதன் பின் யாரும் அந்தக் குடிசைப்பக்கம் வருவதோ கும்பிடுவதோ கிடையாது.

எவ்வளவு வருடங்களாக இந்தப் பூஜை நடக்கிறது? ஏன்? எதுவுமே யாருக்கும் தெரியவில்லை. எப்படியாவது ஏதாவது க்குளு கிடைக்காதா என்று ஊரிலுள்ள வயதானவர்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார்கள். ஊரிலேயே வயதானப் பெரியவர் வயது 300க்கு மேலிருக்கும்.. ஒரு கதைச் சொல்ல ஆரம்பித்தார்.

அந்த ஊரில் பவார், கலார் இரண்டு சமூகத்திலும் பெண்களுக்குத் திருமணம் ஆனவுடன் பைத்தியம் பிடிக்குமாம். ஆண்கள் தொட வந்தாலே கத்தி ரகளைப் பண்ணுவார்களாம். மற்றநேரங்களில் எல்லாம் காதலுடன் பேசிச் சிரித்து சல்லாபம் செய்து சரியாக உச்சக் கட்டத்தில் .. அந்த நேரம் பார்த்து.. வெறிபிடித்ததுபோல ஆணைப் பிடித்து தள்ளி வெளியில் ஓடிவந்துவிடுவார்களாம்!

ஒரு குடும்பத்தில் மட்டும் இப்படி நடந்தால் பரவா யில்லை. அந்த ஊரைச் சார்ந்தவர்கள் அந்த ஊரைவிட்டு எந்த தேசத்திற்கு போனாலும் சரி இந்த பூசை செய்யாட்டா அந்த வீட்டில் பிறந்த பெண்களுக்கும் வாழ வந்தப் பெண்களுக்கும் இந்த வியாதி வந்துவிடுமாம். எந்த டாக்டரும் எந்த உளவியலும் இதற்கு காரணமும் சொல்ல முடியலையாம். கடைசியில் அந்த ஊருக்கு வந்த ஒரு சாமியார்தான் இந்தக் குடிசையில் இப்படி ஒரு பூஜை செய்யனும்னு சொல்லிட்டு அந்தக் குடிசையில் இந்தத் தெய்வங்களை மண்ணால் செய்து வழிபட ஆரம்பித்தாராம். அதன் பிறகுதான் இந்த வியாதி தீர்ந்ததுனு சொல்றாங்க..

"இது எப்போ ஆரம்பிச்சதுனு தெரியுமா?"

-அதெல்லாம் எனக்குத் தெரியாது.. எங்க பாட்டி தாத்தா சொன்னதுதான்..

"இப்போ எந்தப் பெண்களுக்காவது இந்த மாதிரி வியாதி வருதா?"

-அப்படினு சொல்றதுக்கில்லே..

"பின்னே ஏன் இந்த மாதிரி ஒரு வினோதமான பூஜையைச் செய்யனும்?"

-எல்லாம் ஒரு நம்பிக்கைதாங்க..

இந்திய வல்லரசின் இன்னொரு முகம் என்ற தலைப்பில் இந்த ஆவணப்படம் வெளிவந்த பின் இந்திய தொலைக் காட்சியினர் மகாராஷ்டிரா விலிருக்கும் அந்தக் கிராமத்திற்கு வந்த வண்ணமாக இருக்கிறார்கள். அந்தக் கிராமத்திற்கு ஒரு ஸ்டார் வேல்யு கிடைத்து விட்டது. அந்த ஊர் ஆண்களுக்கு மட்டும் கல்லூரியில் ஆபிஸில் கொஞ்சம் இதைப் பற்றி யாராவது 'என்னப்பா நீயும் அந்தப் பூஜை செய்திருக்கியா ? என்று கேட்கும் போது சங்கடமாக இருக்கிறது.

அதன் பின் இது குறித்து நிறைய ஆய்வுகள் வெளிவந்த வண்ணமிருக் கின்றன. அண்மையில் இக்கதையை மையமாக வைத்துக்கொண்டு தயாரிக்கப்பட்ட பாலிவுட் திரைப்படத்தை இந்தியாவின் அந்தக் கோவிலில் படமெடுக்க முயற்சி செய்தவரை எதிர்த்து கலகம் வெடித்தது. பாதியிலேயே சூட்டிங்கை முடித்துக் கொண்டு இந்தியக் கதையைப் படமாக்க வெளிநாட்டில் வாழும் இந்தியரான எனக்கு உரிமை இல்லையா என்று அவர் ஒரு பெரிய புத்தகம் போட்டிருக்கிறாராம். "இது ஓர் உண்மைக் கதை. சுரேகா என்ற பெண்ணும் அவள் மகள் ப்ரியங்கா, மகன்கள் ரோஷன், சுதிர் என்ற இருவரும் ஊர் நடுவில் இழுத்து வரப்பட்டு நிர்வாணமாக்கப் பட்டு பெண்கள் இருவரும் பலாத்காரம் செய்யப்பட்டு வன்முறையில் இனக்கலவரத்தில் கொல்லப்பட்டார்கள் என்றும் அந்த ஊரின் ஒவ்வொரு ஆணும் அந்தப் பெண்களை இறந்தப் பிறகும் புணர்ந்ததையும் அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் மனதில் அதுவே மிகப்பெரிய உளவியல் சிக்கலாக மாறி இருக்கலாம் என்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இந்தச் செய்தியை பி.பி.சி. ஆவணப்படமாக்கி இருக்கிறது என்பதற்கு தன்னிடம் தக்க ஆதாரமிருப்பதாகவும் சொன்னார் "இன்னொரு பிரஞ்சு டைரக்டர். சுரேகா, ப்ரியங்கா என்பதுதான் சுப்ரேவாக மாறி இருக்க வாய்ப்புகள் உள்ளன என்றும் விளக்கம் சொன்னார்.

இந்திய வல்லரசு அந்தத் திரைப்படத்தை இந்தியாவில் திரையிட அனுமதி மறுத்தது. பெண்கள் இந்திய மண்ணில் எவ்வளவு போற்றப்பட்டார்கள் என்று 10000 வருட இந்திய வரலாற்றைச் சொல்லியது. இந்தியாவில் இப்படி எல்லாம் நடந்திருக்க முடியுமா? இந்திய வல்லரசின் பெருமையை பொறுத்துக் கொள்ளாத ஐரோப்பிய அரசுகளின் சதித்திட்டமாகவே இம்மாதிரியான ஆய்வுகள் இருக்க முடியும் என்று இந்தியர்கள் நம்பினார்கள்.

இந்த ஆவணப்படத்தை முன்னிலைப் படுத்தி "செப்டம்பர் 29" என்று ஒரு பிரஞ்சு திரைப்படம் வந்திருக்கிறது. அந்தத் திரைப் படத்தை வெளிநாடுகளுக்கு பிக்னிக் போகும் போது மறக்காமல் பாருங்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய சமுதாயம் எப்படி இருந்தது என்று செட் போட்டு க்ராபிக்ஸ் வித்தையில் காட்டியிருப்பதை ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்க்க வேண்டும். 2000 லிருந்து 2020க்குள் இக்கதைச் சம்பவம் நடந்ததாக சொல்கிறார்கள். இது நடந்ததோ நடக்கவில்லையோ .. 2000 முதல் 2050வரை இந்தியா என்ற ஏழைநாடு வல்லரசு பாதையை நோக்கி பயணம் செய்த பொற்காலம் என்று நம் வரலாறு சொல்கிறதே.

அக்காலத்து மக்கள், அவர்கள் உடைகள், கார்கள், ரயில்கள் என்றழைக்கப்படும் இரும்பு தண்டவாளங்களில் செல்லும் வாகனம், வீடுகள், அரசியல் கட்சிகள், பெண்கள் அவர்களின் உடை அலங்காரங்கள் இப்படி நிறைய விஷயங்களை ரொம்பவும் கவனமாக டிசைன் செய்து அப்படியே காட்டி இருக்கிறார்களாம். ஜப்பானில் நடக்க இருக்கும் 'மட்சன்ஷோக்கி ஒனே' உலகத் திரைப்படங்களின் அவார்ட் பங்கஷனில் கட்டாயமாக அவார்டைத் தட்டிச்செல்லும் படமாக 'செப்டம்பர் 29 ' இருக்கும் என்று சொல்கிறார்கள். அவார்ட் வாங்கிய பிறகாவது இந்திய வல்லரசு இப்படத்திற்கு விதித்திருக்கும் தடையை அகற்ற வேண்டும்.

பல்லாயிரம் ஆண்டு மனிதப் பண்பாட்டின் சிகரமாக விளங்கும் இந்திய மண் இதைப் போன்ற கட்டுக்கதைகளுக்கெல்லாம் ஏன் அச்சப்பட வேண்டும் என்பது என் கருத்து. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்னுடைய இந்த வலைப்பதிவை வாசிக்கும் பூமிவாழ் இந்தியர்களும் மற்ற கிரகங்களில் வாழும் இந்தியர்களும் உங்கள் கருத்துகளை அவரவர்க்குத் தெரிந்த மொழியில் கீழ்க்கண்ட வாசகர் கருத்துக் களத்தில் இடவும்.

****

குறிப்பு:
* சர்ப்பஞ்சி : ஒரு காலத்தில் இந்திய கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரைக் குறிக்கும் சொல் தற்போது அந்த வட்டத்தின் அரசு அதிகாரியைக் குறிக்கும்.

*மட்சன்ஷோக்கி ஒனே : ஜப்பானின் முதல் திரைப்பட நாயகன். 1000 (1909 முதல் 1926 வரை) குறும்படங்களில் நடித்திருக்கிறார். அவர் பெயரால்தான் உலகத் திரைப் படங்களில் மிகச் சிறந்த திரைப்படத்திற்கு வழங்கும் விருது வழங்கப்படுகிறது. ( Japan's First Star was Matsunosuke Onoe kabuki actor who appeared in over 1000 films mostly shorts between 1909 to 1926).


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com