Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி- மார்ச் 2009

ஹரிஜன் தினம்: தலித் அரசியல் தோல்வியை கொண்டாடிய காந்தி
கோ. ரகுபதி

உலக அளவில் கொண்டாடப்படுகின்ற குறிப்பிட்ட தினங்களுக்கும், (உழைப்பாளர் தினம் மற்றும் மகளிர் தினம்) தேசிய அளவில் கொண்டாடப்படுகின்ற, சுதந்திர தினத்திற்கும் வரலாற்றுப் பின்னணி உள்ளீடாக இருப்ப தனைக் காணலாம். வர்க்க, பாலியல், சாதிய, இன, மத வகைப்பட்ட -ஒடுக்குமுறைக்கெதிரான சம்பந்தப்பட்ட மக்கட்பிரிவினரின் உக்கிரமான போராட்டம் அதனால் கிடைக்கப் பெற்ற விடுதலை - இவ்வரலாறே அந்த உள்ளீடு. இந்தியாவில் 1930களில் ''ஹரிஜன தினம்'' கொண்டாட்டம் காந்தியால் தோற்றுவிக்கப்பட்ட ஹரி ஜன சேவா சங்கம் என்ற அமைப்பின் மூலம் தொடங்கப் பட்டிருக்கிறது; ஆனால் சிலவருடங்கள் கழிந்த பின்னர் அக்கொண்டாட்டம் காணாமல் போய்விட்டது. எனவே, ஹரிஜன் தினம் உருவான வரலாறு, அதன் அரசியல் பின்புலம், அத்தினம் கொண்டாடப்பட்ட விதம், அதற் கும் தலித்துகளுக்கும் இருந்த உறவு போன்றவற்றை கட்டுரை ஆராய்கிறது.

ஹரிஜன் தினம் உருவான பின்னணி:

ஹரிஜன் தினம் முதன்முதலாக 18 டிசம்பர் 1932ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

(*1) இதற்கு சிலமாதங்களுக்கு முன்னர், தலித்துகள் மட்டுமே வாக்களித்து தங்கள் பிரதி நிதிகளை தேர்வு செய்து கொள்வதும், மேலும் பொதுத் தொகுதியில் வாக்களிக்கும் உரிமையும் என தலித்து களுக்கு வழங்கப்பட்டிருந்த இரட்டை வாக்குரிமையை அபகரிப்பதற்கு காந்தி நடத்திய சுயவன்முறைத்தன்மை கொண்ட உண்ணாவிரதம்; அதன் விளைவால் அவ்வுரிமை பறிக்கப்பட்டது என இந்த அரசியல் பின்புலத்திலிருந்தே ஹரிஜன் தினம் உருவான சூழலினை புரிந்து கொள்ளவேண்டும். தலித்துகள் அனைவராலும் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்பேத்கரால் தலித் விடுதலைக்கு வட்டமேசை மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வயது வந்தோருக்கான வாக்குரிமை காலனிய ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டதால் அவர் ஓதனிவாக்காளர் - முறை என்ற அரசியல் கோரிக்கையினை வலியுறுத்தினார். (*2) இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு 1932ம் ஆண்டு தலித்துகளுக்கு வழங்கப்பட்டிருந்த வகுப்புவாரி அரசியல் உரிமையின்படி தலித்துகளே தலித் பிரதிநிதிகளை தேர்வுசெய்து கொள்ளலாம், மேலும் பொதுத்தொகுதியிலும் வாக்களிக்க முடியும். (*3) தலித்துகளே தலித் பிரதிநிதிகளை தெரிவு செய்துகொள்ளும் முறை எந்த அளவுக்கு அம்மக்களுக்கு சாதகமானது என்பதை அறிந்து கொள்வதற்கு சென்னை மாகாண அவைக்கு நியமனம் செய்யப்பட்ட தலித் பிரதிநிதிகளின் (இவர்கள் மேற்குறிப்பிட்ட முறையில் தேர்வு செய்யப் பட்டிருக்கவில்லை எனினும்) செயல்பாடுகளை ஊன்றி கவனித்தல் அவசியம், இதனை பின்னர் காண்போம். தலித்துகளுக்கு வழங்கப்பட்டிருந்த இந்த அரசியல் உரிமையினை தட்டிப்பறிப்பதற்கு, அம்மக்களின் எந்த விதமான கோரிக்கைக்கும் ஒருபோதும் உண்ணாவிரதம் மேற்கொண்டிராத, அவர்களுக்கென தனி அமைப்புகள் அதுவரை ஏற்படுத்தியிராத(*4) ஆனால் "தீண்டப்படாத மக்களுக்கு" அயராது உழைத்தார் என்று இன்றளவும் நம்பப்படுகின்ற காந்தி, இரட்டை வாக்குரிமை முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சுயவன்முறையை 20 செப்டம்பர் 1932ம் ஆண்டு தொடங்கினார். (*5) காந்தியின் -தன்னைத் தானே வருத்திக்கொண்டு பிறரை நிர்ப்பந் திக்கும் சுயவன்முறைத்தன்மை கொண்ட- உண்ணா விரதத்தின் விளைவால் 25 செப்டம்பர் 1932 புனா ஒப்பந்தம் உருவானது. அதன்படி மாகாண சட்டமன்றங் களில் பொதுத்தொகுதி இடங்களிலிருந்து தாழ்த்தப் பட்ட மக்களுக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான தேர்தல் கூட்டு வாக்காளர் தொகுதிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட் டது. இதில் தலித்துகளுக்கு ஒரு வாக்கு மட்டுமே வழங்கப்பட்டது. (*6) தலித்விடுதலைக்கு அம்பேத்கர் முன்வைத்த, தலித்துகள் தங்கள் பிரதிநிதிகளை தாங்களே தேர்வு செய்கிற முறை காந்தியின் நிர்ப்பந்தத்தால் ஒழிக்கப்பட்டுவிட்டதால் காந்திக்கும் காங்கிரஸூக்கும் எதிராக தலித்துகளின் பகைமை அதிகரித்தது. இச்சூழ்நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் 30ந்தேதி காந்தியின் முயற்சியால் பம்பாயில் அகில இந்திய தீண்டாமை எதிர்ப்புக் கழகம் உருவாக்கப் பட்டது. (*7) அது தீண்டப்படாதோருக்கான சேவைக்கழகம் என்று காந்தியால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது, பின் னர் ஹரிஜன சேவா சங்கம் என்று அவராலேயே மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. (*8) மேலும், ஹரிஜன் என்ற இதழும் இக்காலக்கட்டத்தில் உருவாக்கப்பட் டது. ஹரிஜன் சேவா சங்கத்தின் தோற்றத்தினை அம்பேத்கரின் மொழியில் பின்வருமாறு கூறலாம்:

(*9) ''ஹரிஜன சேவா சங்கம் என்பது பெயரளவில்தான் ஓர் அறச்சிந்தனை அமைப்பே தவிர, மற்றபடி தீண்டப்படா தவர்களை இந்துக்களுக்கும் காங்கிரசுக்கும் பாதசேவை செய்பவர்களாக ஆக்குவதும், இந்துக்களது சமூக, சமய, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் நோக்கத்தோடு அவர்கள் தொடங்கும் எந்த இயக்கத்தையும் முளையிலேயே கிள்ளியெறிவதும்தான் சங்கத்தின் உண்மையான குறிக் கோளாகும்''. அம்பேத்கரின் இக்கூற்றுக்கு காந்தியின் செயல்பாடே ஆதாரமாக இருப்பதனைக் காணலாம்.

காந்தி இரட்டை வாக்குரிமையை மட்டுமின்றி அவர் தோற்றுவித்த ஹரிஜன் சேவா சங்கத்திலும் நிர்வாக அமைப்பில் தலித்துகளை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டதனை சோஷியல் ரிபார்மர் பத்திரிகை எழுதியுள்ளது. (*10) காந்தியின் இந்நிலைப்பாடு “சமூக சீர்திருத்தச் செயல் பாட்டிற்கே முரணானது” என்று அப்பத்திரிகை கூறியிருப்பது தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கையில் காந்தியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகிறது. (*11) காந்தி, இரட்டைவாக்குரிமையை மறுத்ததற்கும் ஹரிஜன சேவா சங்க நிர்வாகத்தில் பொறுப்பு வழங்க மறுத்ததற்கும் வேற்றுமை இல்லை; அதிகாரப் பொறுப்பில் தலித்துகள் இருப்பதை காந்தி விரும்பியிருக்கவில்லை. மாறாக, அம்பேத்கர் கூறியதுபோல் தலித்துகளை ''இந்துக்களுக் கும் காங்கிரசுக்கும் பாதசேவை செய்பவர்களாக ஆக்கு வதற்குத்தான்'' அவர் விரும்பினார் என்பதனை மெய்ப்பிப்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை.

இந்த பின்புலத்தில் ஹரிஜன் சேவா சங்கம், ஹரிஜன் பத்திரிகை, ஹரிஜன் தினம் ஆகியவற்றின் தோற்றத்தை ஆராய்கிறபொழுது அது தலித்துகளின் பாதுகாப்பிற்கு கிடைத்த இரட்டை வாக்குரிமை என்னும் அரசியல் ஆயுதம் காந்தியால் தட்டிப் பறிக்கப்பட்டதன் மேல் கட்டியெழுப்பப்பட்டிருப்பதனைக் காணமுடிகிறது. உழைப்பாளர், மகளிர் தினம்போல் ஹரிஜன் தினம் போராட்டத்தினால் விளைந்தது அல்ல. மாறாக, அது சம்பந்தப்பட்ட மக்கள் பிரிவான தலித்துகளின் அரசியல் தோல்வியை கொண்டாடுவதற்கு, அம்மக்களின் வாழ்க் கையைப் பற்றி எதனையும் தெரிந்திராத, புரிந்திராத தலித்துகளுக்கு அந்நியரான, காந்தியால் தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது. இரட்டைவாக்குரிமையை தட்டிப் பறித்த காந்தியே "ஹரிஜன் தினம்" என்று தலைப்பிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

(*12) ''தீண்டப்படாதாருக் கான சேவைக்கழகம் இந்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதியை ஹரிஜன தினமாக அறிவித்திருக்கிறது. இது, பூனா ஒப்பந்தம் என்று தவறாக அழைக்கப்படுகிற எரவாடா ஒப்பந்தத்தின் ஆண்டு விழாவாகும். இந்நாள் எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமையாகவும் இருப் பதால் மகிழ்ச்சி''. காந்தியின் “எரவாடா” சிறை/பூனா ஒப்பந்தமே தலித்துகளின் இரட்டை வாக்குரிமையை குழிதோண்டி புதைத்துவிட்டு அதனை கொண்டாடுவதற்கு ஹரிஜன் தினம் என்று பெயரிடப்பட்டதற்கு அவரே சாட்சியாயிருக்கிறார். காந்தியின் இச்செயல் எழுப்பும் கேள்விகள் இதுதான்: தலித் சுதந்திரத்திற்கு கிடைத்த அரசியல் ஆயுதமான இரட்டை வாக்குரிமை காந்தியால் தட்டிப் பறிக்கப்பட்டதால் நிச்சயமற்ற எதிர்காலம் உருவாகியிருப்பதனை உணர்ந்து பதற்ற நிலையிலிருந்த தலித்துகளிடத்தில் இனிப்பு கொடுத்து ஹரிஜன் தினம் கொண்டாடிய காந்தியை எவ்வாறு மதிப்பிடுவது? தலித் துகளின் வேதனையை, நிச்சயமற்ற நிலையினை கொண்டாடிய காந்தியின் உள்ளக்கிடக்கையை என்னவென்று கூறுவது? இதற்குப் பொருள் என்ன? மனிதநேயமா? தீண்டாமை ஒழிப்பா? இதுதான் ஹரிஜனங்களின் மீதான கரிசனமோ?

ஹரிஜன் தின கொண்டாட்டம்:

ஹரிஜன தினத்தை, காந்தியின் காலம் அவருக்குப் பிந்தைய காலம் என இரண்டு கட்டமாகவும், மேலும் அத்தினத்தின் நிகழ்ச்சி நிரல், அதனை செயல்படுத்துதல் என இரண்டுவிதமாக பாகுபடுத்தி புரிந்து கொள்வோம்.

காந்தியின் காலம்: முதன்முதலில் கொண்டாடப்பட்ட ஹரிஜன் தின நிகழ்ச்சியில் திருப்தியடையாத காந்தி அதற்குப் பின்னர் அத்தினத்தின் நிகழ்ச்சி நிரலுக்கான எல்லையினை வடிவமைத்து ஹரிஜன் இதழில் அறிவித்தார்; அது பல இதழ்களிலும் இடம் பெற்றிருப்பதால் அதனை இங்கு தொகுத்துக் கொள்வோம்; இது ஹரிஜன் தினத்தின் இலக்கினை விளங்கிக் கொள்வதற்கு உதவி புரியும். காந்தி வடிவமைத்த நிகழ்ச்சிநிரல் பின்வருமாறு:

1.ஹரிஜன் தினம் விடியற்காலை 5 மணிக்கு வழிபாட்டுடன் தொடங்கப்பட வேண்டும் மற்றும் தன்னுடைய தகுதிக்கேற்ப பணம் அல்லது ஆடை அல்லது தானியத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். ஏழ்மை நிலையிலிருக்கும் மக்கள் எவ்வித மனவருத்தமுமின்றி தன்னுடைய ஒருநேர உணவினை உண்ணாமலிருப்பதன் மூலம் அல்லது அவ்வுணவில் ஒருபகுதியை ஒதுக்குவதன் மூலம் இதனை செய்ய இயலும். நன்கொடைகள் பணமாக மாற்றப்பட வேண்டும், அது நடைபெற இயலாத இடங்களில் அப்பொருட்களை மிகவும் தேவைப்படும் ஹரிஜனங்களுக்கு கொடுக்கவும்.
2.பங்கியின்(*13) வேலையை செய்யவேண்டும், குறைந்தபட்சம் அவரோடு பங்கேற்க வேண்டும். இது பங்கி செய்யும் பணியை ஒருவர் உணர்ந்து கொள்வதற்கு உதவும், மேலும் அதுபோன்ற பணிகளைச் செய்வதற்கு ஒரு முன்னேறிய வழியை காண்பதற்கு உதவும்.
3.இவ்விரு பணிகளைச் செய்து முடித்தப் பின்னர் அத்தினத்தில் பங்கேற்பதற்கு நாம் தயாராவோம்; அது வீடுவீடாய் பணம் அல்லது பொருள் வசூலிப்பதன் மூலம் தொடங்கப்பட வேண்டும். இப்பணியை ஒருமணி நேரத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டும். இப்பணம் உள்ளூர் அமைப்பு வழியாக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். வசூலில் ஈடுபடுபவர்கள் பிரசுரங்களையும் ஹரிஜன் இதழையும் விநியோகிக்கவும்.
4.ஹரிஜன குடியிருப்புகளை பார்வையிடல், சுத்தம் செய்தல், ஹரிஜனங்களை சந்தித்தல் மற்றும் அவர்களின் தேவைகளை குறித்துக் கொள்ளுதல், தீண்டாமையை விலக்குதலில் அவர்களையும் பங்கேற்கும்படி அறிவுரை கூறல், மாமிச உணவை விட்டுவிடக் கூறுதல், ஹரிஜன குழந்தைகளை சுற்றுலா அழைத்துச்செல்லல், சுகாதாரமுறையை செயல்படுத்தல்
5.தீண்டாமையை விலக்குதல் மற்றும் கோயில் நுழை விற்கான தீர்மானத்தை ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி அதில் சவர்ணர்களும் ஹரிஜனங்களும் பங்கேற்கச் செய்து அதனை நிறைவேற்றுதல்
6.பொதுக்கருத்து சாதகமாக இருக்கும் பகுதியில் பொதுக்கிணறும் தனியார் கோவில் களும் ஹரிஜனங்களுக்கு திறந்துவிடுதல்.(*14)
7.தனிநபர் களும் சமூகமும் அவர்களின் கையிருப்பினை தீண்டா மையை விலக்குவதற்கு உதவுதல்.
8.ஹரிஜனங்களும் அவர்களின் கையிருப்பினைக் கொடுத்தல். தங்களை சுத்தப்படுத்திக் கொள்ளுதல், இதன்மூலம் இந்து மதத் தினைச் சுத்தப்படுத்துதல். (*15)மேலும், 24 செப்டம்பர் 1933 ஹரிஜன் தினம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தீண்டப்படாதோருக்கான சேவைக் கழகத்தின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இங்கே,மேலே குறிப்பிடப்படாமலிருக்கும் அறிவிப் பினை மட்டும் காண்போம்.

1.இந்த ஆண்டு செய்து முடித்த காரியங்களை பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தல்
2. ஹரிஜன மற்றும் இதர குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல், கிணறு, கோயில், சாலை இதில் எதையாவது ஒன்றினை ஹரிஜனங்களுக்கு திறந்துவிடுவதற்கு ஏற்பாடு செய்தல்.(*16)

காந்தி வடிவமைத்திருக்கும் ஹரிஜன் தின நிகழ்ச்சிநிரல் தலித்துகளை இந்துமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டி ருப்பதும் அவர்களை வெறும் யாசிப்பவர்களாகவே அணுகியிருப்பதும் மிகத்தெளிவு. பங்கியோடு அவர்களு டைய வேலையை பகிர்ந்துகொள்வதன் மூலம் பங்கி யின் பணியைத் தான் உணர்ந்து கொள்வதற்கு கூறியிருக் கிறாரே தவிர பங்கிகளின் மொத்த வாழ்க்கையையும் புரிந்து கொள்வதற்காக அல்ல. பொது நீர்நிலைகள், சாலைகள், தபால் அலுவலகம், பேருந்து போன்ற வற்றை சாதி, மத, நிற வேறுபாடின்றி பயன்படுத்திக் கொள்வதற்கு 1924ம் ஆண்டு காலனிய ஆட்சியினரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.(*17) இருப்பினும், அரசாங்க சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத சாதி இந்துக்கள் பொதுச் சொத்துக்களை தலித்துகள் பயன்படுத்துவதை தடுத்து வந்தனர். காந்தி ஹரிஜன் தின கொண்டாட்ட நாளில் ''வாய்ப்பு இருக்கும் இடத்தில் மட்டும்'' பொதுச் சொத்துக்களை தலித்துகள் பயன்படுத்திக் கொள்வதற்கு திறந்துவிடுங்கள் என்று தனது ஊழியர்களுக்கு அறிவுறுத் துகிறார். இது அறிவுரை மட்டுமல்ல அதுதான் விதியாகவும் பின்வருமாறு இருந்திருக்கிறது:(*18) ''தீண்டாமையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதிலும், எல்லாப் பொதுக் கிணறுகளையும், தர்ம சத்திரங்களையும், சாலைகளையும்... தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிடுவதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதிலும் எத்தகைய நிர்ப்பந்தத்தையோ, வன்முறையையோ பயன்படுத்தக் கூடாது''. இங்கு எழுகின்ற கேள்விகள் இதுதான்: இரட்டை வாக்குரிமையை தட்டிப்பறிப்பதற்கு காந்தி செயல்படுத்திய உண்ணாவிரதம் என்ற சுயவன்முறை ஆயுதத்தை, தலித்துகள் பொதுச்சொத்துக்களை சட்டரீதி யாக பயன்படுத்திக்கொள்ள தடையாக இருந்துவரும் சாதி இந்துக்களுக்கு எதிராக அவர் செயல்படுத்தாதது ஏன்? பொதுச்சொத்துக்களை தலித்துகளுக்கு திறந்துவிடு வதில் பொதுக்கருத்து சாதகமாக இருக்கவேண்டுமென காந்தி எதிர்பார்த்தது ஏன்? இரட்டை வாக்குரிமையில் தலித்துகளின் பொதுக்கருத்து மட்டுமல்லாது பிறரது கருத்தும் அதற்கு சாதகமாக இருந்தபோது காந்தி மட்டும் அதற்கு எதிராக இருந்தது ஏன்? காந்தி வடிவமைத்த ஹரி ஜன் தின நிகழ்ச்சிநிரல் அவருக்கு தலித் ''முன்னேற்றத் திற்குக்கூட'' பாடுபட வேண்டும் என்ற உண்மையான இலக்கு இருந்திருப்பதாக தெரியவில்லை மாறாக, அதற்கு உள்நோக்கம் இருந்திருக்கிறது என்பது தெளிவு.

இனி, தலித் மாணவர்களை தங்களோடு இணைத்துக் கொண்டு ஹரிஜன ஊழியர்களால் ஹரிஜன் தின நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்பட்ட விதத்தினை பின்வருமாறு தொகுத்துக் கொள்வோம்: குழந்தைகளை விளையாட வைத்தல்; பாடல் சொல்லிக் கொடுத்தல், குழந்தைகளை வரிசையாக நிற்கவைத்து அவர்களில் மிகவும் சுத்தமான நான்குபேரை ஒரு குழந்தை மூலம் தேர்வு செய்து பின்னர் அதில் அழுக்கானவர்களை சுட்டிக்காட்டி கண், காது, பல் மற்றும் உடுப்பு இவற்றினை எவ்வாறு சுத்தமாக இருப்பது என்று பாடம் சொல்லிக் கொடுத்தல், மேலும் அருகிலுள்ள நதியில் குளிக்க வைத்தல், ஹரிஜன குடியிருப்புக்குச் சென்று சுத்தம் செய்தல், அவர்களின் தேவையைக் கேட்டறிதல், ராமனைப் புகழும் பாடலான ரகுபதி ராகவ ராஜாராம்... என்ற பாடலை பாடிய பின்னர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குதல், மகாத்மா காந்தியின் புகைப்படத்தினை பரிசளித்தல், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தல்.(*19) இச்செயல்பாட்டினை காந்தி வடிவமைத்த ஹரிஜன் தின நிகழ்ச்சிநிரலோடு ஒப்பீடு செய்தால் அது முழுமையாக செயல்படுத்தப்பட் டிருக்கவில்லை என்பதைக் காணமுடியும், அதில் கவ னம் செலுத்துவது தேவையற்றது. தலித்துகள் மீது சாதி இந்துக்கள் கடைபிடித்துவரும் தீண்டாமையை ஒழிப்ப தற்கு காந்தி குறிப்பிடும்படியான செயல்வடிவம் கொடுத் திருக்கவில்லை; தலித்துகளுக்கு எது அத்தியாவசியமான தேவையோ அதனை காந்தி செய்வதற்கு முற்பட்டிருக்க வில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். இத்தினம் தலித்துகளால் தொடங்கப்பட்டிருக்கவில்லை, காந்தி யால் உருவாக்கப்பட்ட அத்தினத்தில் தலித்துகள் ஆர்வ முடன் பங்கேற்றிருக்கவில்லை என்பது காந்தியின் ஹரிஜன் தினத்திற்கு உள்நோக்கம் இருந்திருப்பதையே உணர்த்துகிறது. மேலே விவரிக்கப்பட்டிருக்கிற ஹரிஜன் தினத்தின் உள்ளீடு மற்றும் அதன் செயல்பாடு இவற்றை நோக்கும் பொழுது அது தலித்துகளின் அரசியல் தோல்வியை கொண்டாடுவதற்கும் தலித் விடுதலையை முடக்குவதற்கும் அம்பேத்கரின் தலைமையை முறிய டிப்பதற்கும் காந்தியால் உருவாக்கப்பட்டதே ஹரிஜன் தினம் என்று கூறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருக்கி றது. 1932-33 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஹரிஜன் தினத்தை அடிப்படையாகக் கொண்டே விவாதம் மேலே முன்வைக்கப்பட்டது. ஆனால் காந்தியின் காலத்தில் ஹரிஜன் தினம் 1935 வரை நடைபெற்றிருப்பதனைக் காணமுடிகிறது அது மேலே விவரித்ததிலிருந்து மாறுபட் டிருக்கவில்லை, மேலும் குறிப்பிட்டுக் கூறுமளவிற்கு முற்போக்கான வடிவமும் உருவாகியிருக்கவில்லை(*20) ஆதலால் இனி காந்தியின் காலத்திற்குப் பின்னர் நடைபெற்ற ஹரிஜன் தினம் குறித்து காண்போம்.

காந்திக்குப் பின்:

தலித்துகளை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அம்மக்களுக்காக மாகாண ஹரிஜன நலக்குழு 1947ம் ஆண்டு இறுதியில் அமைக்கப்பட் டது.(*21) அக்குழு தனது பல்வேறு திட்டங்களில் ஒன்றாக ஹரிஜன் தினம் மீண்டும் கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானித்தது. இதுகுறித்து சென்னை மாகாண அவையில் 25 செப் 1948 அன்று, அத்தினம் எந்தநாள் கொண்டாடப்படவேண்டும்? அத்தினம் கொண்டாடப் படுவதின் அவசியம் என்ன? போன்றவை குறித்து விவா திக்கப்பட்டது. ஹரிஜன நலக்குழு பல்வேறு திட்டங் களை தலித் முன்னேற்றத்திற்கு வகுத்திருந்த போதிலும் அவை அரசாங்கத்தால் செயல்படுத்தப்படாதிருக்கும் சூழலில், ஹரிஜன் தினம் கொண்டாடுவதில் என்ன தேவை இருக்கிறதென்ற, தலித் உறுப்பினர் வி.ஐ. முனுசாமி பிள்ளையின், கேள்விக்கு அலுவலர்களை விடவும் தலித்துகளுக்கு அறிவு புகட்டுவதே அத்தினத்தின் தேவை என்று பதிலளிக்கப்பட்டது.(*22) பி.எஸ்.மூர்த்தி என்ற உறுப்பினர் காந்தி பிறந்ததினமான அக்டோ பர் 2ந் தேதியை ஹரிஜன் தினமாக கொண்டாட வேண்டுமென வலியுறுத்தினார். இத்தினம் சேரியில் மட்டுமல்லாது கிராமம்தோறும் கொண்டாடப்பட வேண்டுமென வலி யுறுத்தியிருக்கிறார் காங்கிரஸ் உறுப்பினர் பி.கக்கன். ஹரிஜன் தினக் கொண்டாட்டத்தினால் நன்மையிருப்பதாக கூறப்பட்டாலும் அதுகுறித்த விவரங்களைக் கொடுப்பதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டதன் காரணம் தெரியவில்லை.(*23) இந்தகாலங்களில் ஹரிஜன் தினத்தை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று தெளிவான நிகழ்ச்சிநிரல் இருந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், 1953ம் ஆண்டு அதற்கான ஒரு திட்டம் இருந்திருக்கிறது. சேரிகளை சுத்தப்படுத்தல், காந்தியின் புகைப் படத்துடன் ஊர்வலம் செல்லுதல், கோயில் நுழைவு, விளையாட்டுப்போட்டி நடத்துதல், இனிப்பு வழங்கு தல், சுகாதாரம் குறித்து கூறுதல், ஹரிஜனங்களிடம் இருக்கும் தாழ்வுமனப்பான்மையைப் போக்கக் கூறுதல், சலுகைகளை பயன்படுத்த ஆலோசனை கூறுதல், கோயில் நுழைவு மற்றும் சமூக இயலாமை ஒழிப்புச் சட்டங்கள் குறித்து ஹரிஜனங்களுக்கு கூறுதல், சாதி இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தல், வாய்ப்பு இருந்தால் உணவு அருந்த ஏற்பாடு செய்தல் போன்ற வையே அத்திட்டம். மேலும் இத்தினம் 25 செப்டம்பர் மாதம் நடத்துவதற்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் 30-ந்தேதி கொண்டாடப்பட்டிருக்கிறது.(*24) இதில் சிலபகுதி களில் பத்துக்கும் குறைவான நபர்களே பங்கேற்றிருக் கின்றனர்.(*25) சிலபகுதிகளில் அத்தினம் கொண்டாடப் படாமலேயே இருந்திருக்கிறது.(*26) இதற்கான செலவினங் களுக்கு அரசாங்கம் பணம் ஒதுக்கியிருக்கவில்லை, ஆனால் வசூல் செய்து கொள்ளும்படியும் அதற்கு ஹரி ஜன முன்னேற்றத்தில் ஆர்வமுள்ளவர்களை இணைத்துக் கொண்டு அத்தினத்தினை கொண்டாடும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட்டனர்.(*27)

1955ம் ஆண்டில் ஹரிஜன் தினம் எவ்வாறு எங்கெங்கு கொண்டாடப்பட வேண்டும் என்று ஒரு தெளிவான நிகழ்ச்சிநிரல் ''ஹரிஜன் தின கொண்டாட்டத்திற்கான திட்டம்'' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.(*28) இதில் காந்தி மற்றும் அவருக்குப் பின் நடைபெற்ற (மேலே குறிப்பிடப்பட்டிருக்கிற) நிகழ்ச்சிநிரலோடு பின்வருவனவும் கூடுதலாக இணைக்கப்பட்டிருந்தன:
1.சாதிஇந்துக்களிடம் ஹரிஜனங்கள்பாலுள்ள போக் கினை மாற்றுதல்
2. உணவு விருந்திற்கு ஏற்பாடு செய்து அதில் ஹரிஜனங்கள் பரிமாறுதல் பிறரோடு இணைத்து அவர்களுக்கும் உணவு பரிமாறுதல்
3.சென்னையில் தொழிலாளர் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் தலைமை ஆசிரியை மற்றும் பள்ளிக் குழந்தைககளை உள்ளடக்கி பாட்டுப் பாடி ஊர்வலம் செல்லுதல். சாதி இந்துக்களின் மனப்போக்கினை மாற்றுதல் என்ற போக்கு குறிப்பிடத்தக்க மாற்றம் எனினும் அது எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டது, அதன் விளைவு என்ன என்பது குறித்த விபரம் இல்லை. இந்த ஆண்டில் நடை பெற்ற மற்றொரு மாற்றம் என்னவென்றால் அத்தினத்தை சாதி வேறுபாடு அதிகமாக இருக்கின்ற கிராமங்களை தேர்வு செய்து அங்கு நடத்துதல் என்ற முடிவாகும்.(*29) மேலும், ஹரிஜன் தினம் சிலபகுதிகளில் நடத்தப்பட வில்லை ஆதலால் அங்கு நடத்தப்படவேண்டும் என்றும், அத்தினத்திற்கு அப்பகுதியிலுள்ள முக்கியமான தலித் தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், ஆலயப் பிரவேசம், குடிதண்ணீர் கிணற்றுப் பிரவேசம், ஹோட்டல் பிரவேசம் போன்றவற்றை ஹரிஜன் தினத் தன்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை களை தலித் உறுப்பினர்களான ஆறுமுகம், முத்து, ஐயனார் போன்றோர் வலியுறுத்தினர். ஹரிஜன் தினத்திற் கென அரசாங்கம் தனியாக நிதி ஒதுக்கீடு செய்திடாத காரணத்தினால் பொதுமக்களிடம் வசூல் செய்த பணத் தினை அதிகாரிகள் ஹரிஜன் தினம் கொண்டாடப்பட்டதாக பொய்க்கணக்குக் காட்டி பணம் கையாடல் செய்தது குறித்த குற்றச்சாட்டும் கூறப்பட்டது. (*30)

காந்தியின் காலம் மற்றும் அவருக்குப் பின்னர் நடை பெற்ற ஹரிஜன் தினம் இவை இரண்டுக்கும் இடையே ஏற்பட்டிருந்த மாற்றத்தினை புரிந்து கொள்வதற்கு அவை இரண்டையும் ஒப்பீடு செய்வது அவசியம். காந்தியின் காலத்தில் அத்தினம் கொண்டாடப்பட வேண்டிய நாள், அதன் நிகழ்ச்சிநிரல், எல்லை, செலவினங்களுக்குப் பணம் வசூலித்தல், அதனை சங்கத்திடம் ஒப்படைத்தல், அதுகுறித்து ஹரிஜன் இதழில் அறிவித்தில் என ஹரிஜன் தினம் தொடர்பான சகலத்தையும் தீர்மானித்தார் காந்தி; இதில் தலித்துகளின் பங்கு துளியும் இருந்திருக்க வில்லை. எனவே, காந்தியின் ஹரிஜன் தினத்தில் ஜன நாயகத்திற்கான இடம் இருந்திருக்கவில்லை. காந்தியின் எதேச்சதிகாரப் போக்கினால் உருவாக்கப்பட்டு தலித்து கள் மீது திணிக்கப்பட்டதே ஹரிஜன் தினம் என்பது திண்ணம். ஆனால், காந்திக்குப் பின்னர் மீண்டும் கொண்டாடப்பட்ட ஹரிஜன் தினத்தில் சில மாறுதல்கள் உண்டாயின. முதலில், தலித்துகளின் அரசியல் தோல்வி நிகழ்ந்த நாளில் மட்டுமே ஹரிஜன் தினம் நடைபெற வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருக்கவில்லை. இரண்டாவது, அத்தினம் குறித்து சென்னை மாகாண அவையில் விவாதம் நடைபெற்றிருப்பதானது காந்தியின் எதேச்சதிகார திணிப்பிலிருந்து விடுபட்டு தலித்துகளுக் கும் அத்தினத்தின் மீது கருத்து கூறுவதற்கு வாய்ப்பு கிட்டியது; அவர்களின் கருத்து முற்பகுதியில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. காந்திக்குப் பின்னர் நடைபெற்ற ஹரிஜன் தினம் காந்தி வடிவமைத்திருந்த நிகழ்ச்சி நிரலிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை எனினும், வாய்ப்பு இருக்கும் பகுதிகளில் மட்டுமே பொதுச்சொத்துக்களை தலித்துகளுக்கு திறந்துவிடவேண்டும் என்ற காந்தியின் திட்டத்திற்குப் பதிலாக ''பிரவேசிக்க வேண்டும்'' என்று உள்ளீட்டில் மாற்றத்தினை வலியுறுத்துவதற்கு தலித்துகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ''நிர்ப்பந்தம் செய்தல்'' என்ற இக்கோரிக்கை ஏற்கனவே அம்பேத்கரால் முன்வைக்கப்பட்டு காந்தியால் புறக்கணிக்கப்பட்டதைத் தான் தலித் உறுப்பினர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். தலித் உறுப்பினர்களின் இச்செயல்பாடு, அத்தினத்தில் தலித்துகளின் பங்கேற்பு உண்மையிலேயே முதன் முதலில் காந்திக்குப் பின்னரே நடைபெற்றிருப்பதனை எடுத்துரைக்கிறது. அதுமட்டுமல்ல, ஹரிஜன் தினத்தில் ஏதாவது ஒருபகுதியில் தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்பதிலும் தலித் உறுப்பினர்கள் ஈடுபாட்டுடன் இருந்திருக்கின்றனர் என்பதும் தெளிவு. காந்திக்குப் பிந்தைய ஹரிஜன் தினமே, அது ஆளும் வர்க்கத்தால் வழங்கப்பட்டிருந்த போதிலும்கூட, தீண்டாமையை உண்மையாக ஒழிக்கவேண்டும் என்ற திசையில் பயணிக்க முயற்சித்திருக்கிறது. தீண்டாமை ஒழியும் வரை ஹரிஜன் தினம் இருக்குமென ஹரிஜன் தினம் உருவான செப்டம்பர் மாதத்தில் கூறப்பட்டாலும்(*31) அதுகுறித்த விவாதம் பின்னர் குறிப்பிட்டுக் கூறும்படி நடைபெற்றிருக்கவில்லை; தலித் உறுப்பினர்களும் கேள்வி எழுப்பியிருக்கவில்லை.

சென்னை மாகாண அவையில் ஹரிஜன் தினம் குறித்து 1955ம் ஆண்டுக்குப் பின்னர் கேள்வி எழுப்பாமைக்கு காந்தியின் சுயவன்முறையால் உருவான பூனா/எரவாடா சிறை ஒப்பந்தமே ஒரு அடிப்படைக் காரணமாக இருக்கி றது. தலித்துகளுக்கு வழங்கப்பட்ட இரட்டை வாக்குரி மையில் தலித்துகளே தங்களின் தலித் பிரதிநிதியை தேர்வு செய்கின்ற முறை தலித் விடுதலைக்கான ஒரு கூர்மையான ஆயுதம். இந்தவகைத் தேர்வுமுறை காந்தி யால் அபகரிக்கப்பட்டதன் விளைவு தலித் உறுப்பினர் களை கேள்வி கேட்பதிலிருந்து தடுத்திருக்கிறது; இன்றும் தடுத்துவருகிறது. இதுகுறித்து மிகச் சுருக்கமாகக் காண்பது அவசியம்.

புனா ஒப்பந்தமே இன்றைய ஒதுக்கப்பட்ட தொகுதிக் கான அடிப்படை. அனைத்துச் சாதியினராலும் ஒதுக்கப் பட்டத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்படும் தலித் உறுப்பினர்கள்மைய நீரோட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்; இவர்கள் முதலில் தலித்துகளைவிடவும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு விசுவாசமானவர்களாகவும், அக்கட்சியின் செயல்திட்டத்தினை நிறைவேற்றுபவர்களாகவும், அக்கட்சித் திட்டத்தின் விதி, ஆணைகளுக் கிணங்க தலித் பிரச்சினைகளை அணுகுகின்றனர், தலித்துகளின் எதார்த்தப் பிரச்சினையை முற்றிலுமாக புறக்கணித்துவிடுகின்றனர். ஹரிஜன் தினம் இவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்று வலியுறுத்திய மேலே கூறப்பட்ட தலித் உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், அவர்கள் காந்தியின் ஹரிஜன் தின நிகழ்ச்சிநிரலின் உள்ளீட்டினை மாற்றுவதற்கு முயற் சிக்கிற பொழுது அதனை காங்கிரஸ் கட்சி எவ்வாறு அனுமதிக்கும்?
ஆரம்பகாலங்களில் வி.ஐ.முனுசாமி பிள்ளை, ஆர்.எஸ்.ஆறுமுகம், இளையபெருமாள், சத்தியவாணி முத்து போன்றோர் தலித்துகளுக்காக குரல் கொடுத்தி ருப்பினும் பின்னர் அதுவும் இல்லாமற் போனது. பல பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் மருத்துவர். கிருஷ்ணசாமி தலித்துகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார். ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மையநீரோட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிக்குக் கட்டுப்பட்டு அவர்களுக்கே விசுவாசமாக இருந்துகொண்டு தங்களுடைய சுயதேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த உறுப்பினர்களுக்கு நேர்மாறாக, சென்னை மாகாண அவைக்கு நியமிக்கப்பட்ட தலித் உறுப்பினர்களின் செயல்பாடு தலித்துகளுக்கானதாக இருந்திருக்கிறது. இவர்கள் தலித்துகளால் தேர்வு செய்யப்பட்டிருக்க வில்லை எனினும் காலனியாட்சியில் சென்னை மாகாண அவைக்கு தலித்துகளுக்காக நியமிக்கப்பட்டவர்கள். இது அம்பேத்கர் முன்வைத்த இரட்டை வாக்குரிமை முறையில் தலித்துகளை தலித்துகளே தேர்வு செய்யும் முறைக்கு ஒப்பானது. தலித்துகளுக்காக நியமிக்கப்பட்ட தலித் உறுப்பினர்களான இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா உட்பட பல தலித் உறுப்பினர்கள் தீண்டாமைக்கு எதிரான சட்டம் கொண்டு வருதல், அதனை அமுல்படுத்தல், தீண்டாமைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக குரல் கொடுத்தல், சம்பந்தப்பட்ட சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுத்தல், தலித் மாணவர்கள் முன்னே றுவதற்கான திட்டங்களை ஏற்படுத்தி அமுல்படுத்தக் கூறுதல், நிலம் கேட்டல் என அவர்களின் போராட்டம் சென்னை மாகாண அவைக்குள் நிகழ்ந்திருக்கிறது.

நியமிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட தலித் உறுப்பினர்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டு நோக்கினால் முன்னவர்கள் தலித்துகளுக்கான போராளிகளாகவும், பின்னவர்கள் கட்சி விசுவாசிகளாகவும் சுயநலவாதிகளாகவும் இருக்கின்றனர் என்பது விளங்கும்.(*32) இதனை இவ்வாறு கூறலாம்: காந்தியின் பூனா ஒப்பந்தம் சாதியின் பெயரால் தலித்து களுக்கு துரோகமிழைக்கும் சுயநலமான தலித் உறுப்பி னர்களை உருவாக்கியது.அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமையோ, அது காந்தியால் பறித்தெடுக்கப்பட்ட போதிலும், தலித்துகளுக்காக குரல் கொடுக்கும் தலித் போராளிகளை உருவாக்கும் தன்மை கொண்டிருந்தது என்பதை தலித்துகளுக்காக நியமிக்கப்பட்ட தலித் பிரதிநிதிகளின் செயல்பாட்டிலிருந்து உறுதிபடக் கூறலாம்.

முடிவாக, தலித்துகளின் விடுதலைக்காக ஒருபோதும் உண்ணாவிரதம் இருந்திருக்காத காந்தி தலித்துகளுக்கு வழங்கப்பட்டிருந்த இரட்டை வாக்குரிமையை உண்ணா விரதம் என்ற சுயவன்முறையினால் தலித் அரசியல் உரிமையை அபகரித்த நாளையே ஹரிஜன் தினமாகக் கொண்டாடியிருக்கிறார்; அதனை தலித்துகள் மீதும் எதேச்சதிகாரமாய் திணித்திருக்கிறார். தலித்துகளை இந்துமயமாக்குதலும், அவர்களை இரந்து நிற்ப்பவர் களாக வைத்திருப்பதும் அத்தினத்தின் உள்ளீடு. அவரு டைய தலித்துகளை “சுத்தமாக்கும்” செயல் மிகவும் வேடிக்கையானது. பள்ளிகளில் ஹரிஜன் தினம் கொண்டாடும் பொழுது ஏழை மேல்ஜாதி மாணவர்கள் தலித் மாணவர்களை குளிக்க வைப்பது காந்தியின் சுத்தப்படுத்தும் திட்டம். திருநெல்வேலி மாவட்டம் சண்முகரெங்கபுரம் பள்ளியில் தலித் மாணவர் ஒருவர் இவ்வாறு கேட்டிருக்கிறார்: நான் தினமும் குளித்துவிட்டுதானே வருகிறேன் இன்று ஏன் என்னை குளிப்பாட்டி விடுகிறீர்கள்?(*33) தலித் வாழ்க்கை குறித்தும் அவர்களின் விடுதலை குறித்தும் சிறிதும் புரிந்திருக்காத காந்தியின் ஹரிஜன் தின திட்டத்தின் விளைவினை உணர்த்துவதற்கு மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டே போதுமானது.

இவருக்குப் பின்னர் அரசாங்கம் முன்னின்று நடத்திய ஹரிஜன் தினத்தில் ஜனநாயகத்தன்மை தோன்றுவதற்கான வாய்ப்பு உருவாகியிருந்த போதிலும் உள்ளீட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்க வில்லை. தலித் உறுப்பினர்கள் சிலர் உள்ளீட்டில் மாற்றத்திற்கான கோரிக்கையை முன்வைத்த காலத்தில் அத்தினம் குறித்து விவாதமே சட்டமன்றத்தில் நடை பெறாமல் போனது. காந்தியால் உருவாக்கப்பட்ட எரவாடா/பூனா ஒப்பந்தமே ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட தலித் உறுப்பினர்கள் தலித்துகளுக்காக குரல்கொடுக்காமல் இருப்பதற்கான மூலக் காரணம். இந்த துரோக ஒப்பந்தம்மே தலித்துகளின் எந்த பிரச்சினையையும்-அது முதுகுளத்தூர், உஞ்சனை, தோட்டக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மொத்தப் படு கொலைகளாக இருந்தாலும், அல்லது சங்கனாங்குளம் போன்ற வன்புணர்ச்சியாய் இருந்தாலும், அல்லது இதர தீண்டாமை-ஒடுக்குமுறையாக இருந்தாலும்- ஒதுக்கப் பட்ட தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்படும் மைய நீரோட்ட அரசியல் கட்சிகளுக்கும் சாதி இந்துக்களுக்குமான கைப்பாவை தலித் பிரநிதிகள் ஒருபோதும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்திருக்கவில்லை. தலித் விடுதலையின் மிகப்பெரும் முட்டுக்கட்டை என்றால் அது காந்தி உருவாக்கிய எரவாடா/பூனா ஒப்பந்தமே; அது உருவாக்கப்பட்ட தினத்தை தோற்கடிக்கப்பட்ட தலித்துகளின் முற்றத்திலேயே அத்தோல்வியைக் கொண்டாடிய காந்தி யாருக்கானவர்? காந்தியின் ஹரி ஜன சேவா சங்கத்தின் செயல்பாடுகள் அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமையோடு சமன்படுத்திவிட முடியுமா?
***

ஆதாரமும் குறிப்பும் :

(*1) Harijan, Vol I, No.10 (April 15: 1933), p. 3.
(*2) Eleanor Zelliot, 'Gandhi and Ambedkar - A Study in Leadership', in J.Michael Mahar (ed.), The Untouchables in Contemporary India (New Delhi: Rawat Publications, 1998), p.84
(*3) Dr.Ambedkar - Writings and Speeches Vol.15 (Tamil), (New Delhi; Government of India, 1999), p.669
(*4) See. Dr. Ambedkar-writings and Speeches Vol.16 (Tamil), (New Delhi: Government of India, 1999), pp. 383-98
(*5) Eleanor Zelliot, 'Gandhi and Ambedkar' - A Study in Leadership', p.85
(*6) Dr.Ambedkar - Writings and Speeches Vol.15, pp.978-9
(*7) Ibid., Vol 16, p.209
(*8) Ibid., ஆரம்பக் காலகட்டத்தில் அம்பேத்கர், சீனிவாசன், எம்.சி.ராசா ஆகியோர் அவ்வமைப்பின் மத்தியக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். ஆனால் அம்பேத்கர் அவ்வமைப்பிலிருந்து விலகிய பின்னர் மற்ற இருவரும் விலகிவிட்டனர்.
(*9) Dr.Ambedkar - Writings and Speeches Vol.16, p.239
(*10) Ibid, Vol
(*11)
(*12)
(*13)
(*14)
(*15)
(*16)
(*17)
(*18)
(*19)
(*20)
(*21)
(*22)
(*23)
(*24)
(*25)
(*26)
(*27)
(*28)
(*29)
(*30)
(*31)
(*32)
(*33)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com