Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி- மார்ச் 2009

பானுபாரதி கவிதைகள்

ஏய் கள்ள ஞானிகளே...

மூன்றாஞ் சாமத்து
மேற்றிசை நட்சத்திரங்கள்
என்னோடு தோழிகளாயிருந்த காலம்

சந்திரனும் சூரியனும் எனது ஊழியக்காரராயிருந்த
பதினெட்டாம் வயதின்
ஆடி மாதத்தினொரு நாலாஞ் சாமம்

என்சிறு ஊரருகில் தீர்ந்த முதல் வெடியில்
ஆடிப் பெருக்கெடுத்து
முட்டி வீங்கியது போரின் வயிறு

எந்த வகுத்தலுக்குள்ளும்
எண்ணப்படாதவொரு ஏழாஞ் சாமத்தில்
வெங்காயப்பொதிகளோடொரு பொதியாய்
ஏற்றி அனுப்பப்பட்டேன்
கூடவே எனக்கானதொரு சிலுவையுடன்

ஓலூசிப்பிசாசுகளும் அல்லேலூயாப் பேய்களும்
அசுத்த ஆவிகளும் அண்டாது அணுகாது
நித்தியம் பெறுவோம் - என்று
என் வீட்டு உத்தரிய மாதாக்கள்
மந்திரித்து சுமந்த அதே சிலுவையை
நானும் சுமந்து பயணமானேன்
ஒரு பனித்தேசத்தின்
கல்வாரிக் குன்று நோக்கி

பாரச்சிலுவையை சுமக்கவும் வேண்டும்
கல்லிலும் முள்ளிலும்
இடறல் படவும் வேண்டும்
முகம் குப்புற விழவும் வேண்டும்
கசையடி படவும் வேண்டும்
மீண்டுமெழுந்து சுமக்கவும் வேண்டும்
பனிமலையுச்சிக்கு நடக்கவும் வேண்டும்
இவையனைத்தும் தாண்டுதல்
அறையப்படுவதற்காகவே

தனக்கான சவக்குழியை
தானே வெட்டிய
சகதோழன் போல்
நானறையப்படுவதற்கான சிலுவையை
நானே சுமந்து வந்தேன்

சமூக வல்லரசின்
சட்டதிட்டங்களுக்கமையவே
அறையப்பட்டேன் சிலுவையில்

சிலுவையில்
அறையப்பட்டபடியே புணரப்பட்டேன்
நித்தியத்தின் பெயரால்
எனது ஆச்சியை, அம்மாவைப் போல
அக்காவை, சின்னக்காவைப் போல

அறையப்பட்ட பதினெட்டாஞ் சாமத்தில்
பிடுங்கியெடுக்கப்பட்ட ஆணிகளோடு
காத்திருக்கிறேன் சிலுவையினடியில்
ஆச்சியை, அம்மாவைப் போலல்லாமல்
அக்காவை, சின்னக்காவைப் போலல்லாமல்
ஆவேசத்தோடு

அறையப்பட்ட பதினெட்டாஞ் சாமத்தில்
பிடுங்கியெடுக்கப்பட்ட ஆணிகளோடு
காத்திருக்கிறேன் சிலுவையினடியில்
எனக்குமென் உத்தரிய மாதாக்களுக்கும்
நித்தியம் போதித்த கள்ள ஞானிகளை
இதே சிலுவையில்
அறைந்து செல்லும் ஆவேசத்தோடு.


ஆண்மை கொல்


எருமையின் முதுகுதோலில் துளையிட்டு
உட்புகுந்த மழைத்துளிபோல்
எனது வார்த்தைகள்
உனது ஆண்மைக்குள் புகுந்து குடைகிறதென்பதை
நீ தூக்கம் தொலைத்து
இரவுகளை
புகை வளையங்களால் நிரப்பிக் கொள்வதிலிருந்து
புரிந்துகொள்ள முடிகின்றது.
எறிகணையின் வலிமையோடு
எறியப்படும் உனதொவ்வொரு வார்த்தைகளும்
தோற்றுப்போய் விழுகின்றன
நேர்மை வயப்படாததினால்

வானம் நீலமென்கிறாய்
கடல் உப்பென்கிறாய்
முத்தம் இனிப்பென்கிறாய்
வியர்வை சூடென்கிறாய்
விந்து குளிரென்கிறாய்
ஆண்மை
அதுவே, அதற்கே அனைத்துமென்கிறாய்

நல்லது
போதனைக்கு நன்றி
ஆண்மை அரியாசனத்திலிருந்து இறங்கி வர
நீ மறுக்கும் ஒவ்வொரு கணங்களும்
கலவியின் உச்சநிலையில் சோர்ந்து சூம்பிக் கிடக்கும்
ஆண்குறியின் நிலைக்கொப்பானதாயிருக்கிறது.
வோட்கா நிரப்பப்பட்ட
உனது கண்ணாடிக் குவளையில்
எலுமிச்சை சீவல்களாய்
எனது கனவுகளோடு வாழ்வும்
கரைந்து போனதேன் என்ற
எனதொரு கேள்விக்கு
உன்னிடமும் விடையில்லை
உன்னைப் படைத்த
உன்னப்பனின் ஆண்மையிடமும்
விடையிருக்கப் போவதில்லை

அம்மிக்கல்லில் அடித்து நொறுக்கப்படும்
சிதறு தேங்காய்போல்
உனதாண்மை நொறுக்கப்படும்போது
வோட்காவிலும் பியரிலும்
கரைந்துபோன கணங்களிலிருந்து
எனக்கான பதில் கண்டடையக்கூடும்

அல்லது
இரத்தமும் வியர்வையும் தெறித்துச் சிதற
ஆண்மையை
அறுத்தெறியும் திராணியுண்டாயின்
வா பேசுவோம்
சுதந்திரமான வார்த்தைகளின் அக்களிப்போடு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com