Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி- மார்ச் 2009

அனோனிமா (அ) முகம் மறைத்தவள்
ரசியப்படைகளின் பெர்லின் போர்: ஒரு பெண்ணின் பதிவுகள்
தமிழில்: தேவா

பேர்லீனை நோக்கி இரசிய அமெரிக்க இங்கிலாந்துப் படைகள் முன்னேறிக் கொண்டிருந்தன. பேர்லீன் போர்த்தீவிரத்தையும் அழிவையும் பயத்தையும் மெல்ல மெல்ல உணரத் தொடங்கிய காலம்.

அவளிற்கு வயது முப்பதுகளின் ஆரம்பம், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள். அக்காலத் தில் பெண்கள் திருமணத்திற்கென்று மாத்திரம் வளர்த்தெடுக்கப்படுவார்கள். சிறந்த பாடசாலை ஒன்றில் பள்ளிப்படிப்பை முடித்தவள். பல திறமைகள் அவளிடம் இருந்ததால் அன்றைய விதிகளையும் மீறி சுதந்திரத்தை தேர்ந்தெடுக்க அவள் திறமைகள் துணை நின்றன. புகைப் படக்கலை வரைதல் என்பவற்றுடன் அய்ரோப்பா பற்றிய அவள் மேல்படிப்பும் நான்கு திசையிலும் மேற்கொண்ட பிரயாணங்கள் அவற்றினூடே பெற்ற அனுபவங்கள் படிப்பினைகள் என்பன மூன்றாவது ரைகின் குழுக்களுடன் இணைந்துகொள்ள தடையாக இருந்தன. தன் சுயவிருப்பில் பேர்லீனில் பணியில் இருந்த அவளால் பேர்லீனைப் போர் நெருங்கும்போது தப்பியோட முடியவில்லை.

குடியிருந்த வீடு சிதைந்துபோக இன்னுமொரு வீட்டில் தஞ்சம் புகுந்தாள். 20 ஏப்ரல் 1945 இலிருந்து யூன் 22 வெள்ளி 1945 வரை அவள் தஞ்சம் புகுந்த வீட்டில் இருந்தவர்களுக்கும் தனக்கும் நடந்தவைகளை பள்ளி அப்பியாசக் கொப்பிகளிலும் அவ்வப்போது கிடைத்த உதிரிக்காகிதங்களிலும் பதிவுசெய்தாள்.

பரந்த வாசினை அறிவும் எந்த நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காதவளுமான இவளது பதிவுகள் இலக்கிய நோக்கிற்காகவோ அல்லது பதிப்பிக்கும் நோக்கத்துடனுமோ எழுதப்பட்டவை அல்ல. ஆகக்கூடிய பட்சத்தில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் பிற்காலத்தில் இப்பதிவுகளை அவள் வாசிக்க அனுமதித்தாள். அக்காலத்தில் உண்மைகளை அப்படியே பதிவு செய்வது ஆபத்தானதால் சுருக்கெழுத்து, சாதாரண வாசினைநடை, சங்கேதமொழி எனக் கலவையில் குறித்து வைத்தாள். அச்சின் நடுநிலைமைத் தன்மையில் இக்குறிப்புக்கள் தார்ப்பரியங்களை இழந்தாலும் எழுதப்பட்டவை அனைத்தும் உண்மையானவை என்பதனை பலர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். கமராக் கண்கள், அபார மூளை என இலக்கிய சொல்லாடல்களுக்கெல்லாம் இங்கே வேலையில்லை. தன்னைப் பலப்படுத்திக்கொள்ள ஒரு பெண்ணின் பார்வையின் பதிவு இந்த நாட்குறிப்பு.

போரின் நியாயங்களிலும் நீதியிலும் யாரால் தனிமனித ஒழுக்கத்தைத் தேடமுடியும். மனைவி, மகளின்மீது இயந்திரத்துப்பாக்கி வைக்கப்பட்டால் கணவனோ, தகப்பனோ அவனுடன் போ என்று சொல்வதைத்தவிர என்ன செய்யமுடியும். எவன்மீதோ எவள் மீதோ இயந்திரத் துப்பாக்கி பதியாவிடின் அவர்கள் இதுபற்றி வாய்திறக்காமல் இருக்கக்கடவார்களாக. இரசியர்களின் பாலியல் சேவைகளிற்குப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட விடயம் பற்றி பேசும்போது (இப்பெண்களின் தொகை ஒருமில்லியனைவிட அதிகமாக இருக்கும் என்பது ஓர் ஊகம்) இவள் இப்படிக் குறிப்பிடு கின்றாள்: எந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் இந்நிர்ப்பந்தத்தை ஒரு முள்முடியாகச் சுமக்கத் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை இச்சம்பவம் நடந்த ஒன்றிற்கான எதிர்விளைவு என்றுதான் எடுத்துக் கொள்கின்றேன்.

1945ல் அமெரிக்காவிலும் 1955ன் நடுப்பகுதியில் இங்கிலாந்திலும் வெளியான இந்நாட்குறிப்பு சுவீடன், நோர்வே, ஒல்லாந்து, டென் மார்க், யப்பான், ஸ்பெயின், பிரான்ஸ், பின்லாந்து என அந்நாட்டு மொழிகளிலும் 1959ல் டொச்மொழியிலும் வெளிவந்தது.

மிகுந்த பிரயத்தனத்தில் ஆசிரியையிடம் ஒப்புதல் பெறப்பட்டதை இங்கு சொல்லியாக வேண்டும். முதலில் பிரசுரத்தை மறுத்த அவர் இறுதியில் தனது பெயர் குறிப்பிப்படக் கூடாதென்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கினார். டொச்சில் அனோனிமா(அனாமதேயம்) என்ற பெயருடன் பேசிய இவள் தமிழில் முகம் மறைத்தவளாக பேச வருகிறாள்.

20 வெள்ளி சித்திரை 1945 மாலை மணி 4. பேர்லீனை நோக்கி போர் நகரத்தொடங்கிவிட்டது. நேற்றைய தொலை தூரச்சத்தம் இன்று இடையறா முழக்கமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் வெடியின் அதிர்வுகளை சுவாசிக்கத் தொடங்கினோம். கனரக ஆயுதங்களின் முழக்கம் செவிப் பறைகளை கிழித்தன, எந்தத்திசையில் என்ன நடக்கின்றது தென்ற தெளிவு தொலைந்துபோயிற்று. ஆயுதக்குழல்களின் வட்டத்தினுள் சிக்கிக்கொண்ட நாங்கள் நேரம் செல்லச் செல்ல குழல்களின்பிடி இறுகிவருவதை உணர்ந்தோம்.

போரின் அதி உச்ச முழக்கத்தின் மத்தியிலும் வசந்தகாலம் பற்றிய உணர்வு வந்துபோயிற்று. இடிபாடாகக் கிடந்தக் குடியிருப்பின் சொந்தக்காரர்களற்ற தோட்டங்களின் வாசனையும் திரையரங்கின் முன் அக்கேசியாக்கொடி பச்சைநுரையாய் பரவிக்கிடந்ததும் வசந்தத்தின் வரவை அறிவித்தன. போரின் இடையறாத அதிர்வுகளுக்கிடையிலும் கூட வீட்டுத்தோட்டம் செய்பவர்கள் நிலத்தினைக் கிளறிவிட்டிருந்தனர். பேர்லீன் வீதியில் இலைகள் நிலத்தில் கம்பளமாய் மூடியிருந்ததால் நிலம் புதிதாய் காயங்கள் எதுவும் இல்லாமல் தெரிந்தது. பறவைகள் மாத்திரம் இந்தச் சித்திரை மாதத்தை நம்பவில்லை. எங்கள் கூரைகள் பறவைகளற்று வெறுமையாய் கிடந்தன.

மூன்று மணியளவில் பத்திரிகை சுமந்த வாகனங்கள் கடை களை நோக்கி வர ஆரம்பிக்கும். மக்கள் பத்திரிகை விநியோகிப்போனைச் சூழ நின்றபோதும் கைகளில் பத்திரிகைக்கட்டுக்களுடன் அவன் கடையினுள் புகுந்துவிடுவான். கேர்தா எப்படியோ கைநிறையப் பத்திரிகைகளைக் கொண்டுவந்தாள் அதில் ஒன்று எனக்கும் கிடைத்தது. வழமையான பத்திரிகைப் போல் இல்லாது துண்டுப்பிரசுரம்போல் இருபக்கமும் அச்ச டிக்கப்பட்டு இன்னும் ஈரம் காயாமல் பிசுபிசுப்புடன் இருந்தது. உடனடியாக இராணுவ அறிக்கையைப் படிக்கத் தொடங்கினேன். முன்சன்பேர்க், சேலோ, புக்கோல்ஸ் எதுவுமே நான் கேள்விப்பட்டிராதப் பெயர்கள் ஏதோ பக்கத்தில் இருப்பது போல் தெரிந்தன. மேற்குப் போர்முனைப் பற்றிய குறிப்பை மேலோட்டமாகப் பார்த்தேன். மேற்குப் போர்முனைக்கு என்ன முக்கியத்துவம் . எங்கள் தலைவிதி கிழக்கில் இருந்தல்லவா எங்களை நோக்கி நகர்கிறது. உறைபனி பூமியை மூடியிருந்த காலம் காலநிலையை மாற்றியதுபோல், கிழக்குப் போர்தான் எங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகிறது. விடைகாண முடியாக் கேள்விகளில் மனிதன் தன்னைத்தானே ஏன் வருத்திக் கொள்கின்றான். இன்றைய நாளில் நான் செய்ய வேண்டியது என்ன என்பது மட்டுமே என் கேள்வி.

வெளிறிய முகங்களுடனும் முணுமுணுப்புக்களுடனும் கியோஸ்கைச் சுற்றி சிறுசிறு கும்பலாக மக்கள்கூட்டம். 'யார் இப்படி ஆகுமென்று நினைத்தார்கள்?' 'ஏதோ சிறிதளவு நம்பிக்கையாவது எல்லோரிடமும் இருந்தது' 'எங்களைப்பற்றி யாருக்குக் கவலை, நாங்களெல்லாம் ஒரு பொருட்டல்ல' எனவும் கிழக்கு டொச்லாண்டைப் பற்றி 'அவர்கள் பாடு கவலையில்லை தங்களை அவர்கள் காத்துக் கொண்டனர்' என்றும் பேசிக்கொண்டனர்.

இரசியர்கள் என்ற சொல்லை யாரும் உச்சரிக்கவில்லை. எவரின் உதடுகளும் அதற்குத் தயாராகவும் இருக்கவில்லை. மீண்டும் வீட்டின் கடைசி மாடிக்குப்போனேன் . இது எனது வீடு இல்லை, எனக்கு வீடென்று ஒன்றுமே இப்போது இல்லை. நிறைவான தளபாடங்களோடு கூடிய வரவேற்பறை யும் இப்போது இல்லை குண்டுகள் அதனைத் தகர்த்துவிட்டன. ஆறுவருடங்களாக என் மூச்சுக்காற்றால் நிரம்பிய இடங்கள் , எனது புத்தகங்கள், ஓவியங்கள், மனிதன் தன்னைச்சுற்றி குவித்துக்கொள்ளும் நூறு சாமான்களென நிரம்பியிருந்தது என் வீடு. நோர்டெனியில் கடந்த கோடைகாலத்தில் கண்டெடுத்த நட்சத்திரமீன், பெர்சியாவிலிருந்து என் நண்பன் கொண்டுவந்து பரிசளித்த கேலிம் துணி, நெளிந்துபோன மேசைமணிக்கூடு, புகைப்படங்கள் , பழையக்கடிதங்கள் , பன்னிரண்டு நாடு களின் நாணயங்கள், தொடங்கி முடிக்காதப் பின்னல்வேலை என என்வாழ்வின் நினைவுகளாய் எனது வாழ்வின் மகிழ்ச்சி யான காலங்களின் உணர்வுகளை தங்களுள் நிரப்பிய பொருட் களெல்லாம் குண்டுவெடிப்பில் சிதறிப்போய்விட்டன.

எல்லாம் தொலைந்துபோய் எனது உடைகள் நிரம்பிய பெட்டி மாத்திரம் மீந்திருக்க நிர்வாணமாய் தேவையற்ற சுமைகளைக் களைந்ததால் காற்றில் பறக்கக்கூடிய, எடையற்றவளாய் நிற்கின்றேன். என்னிடம் இப்போது எதுவுமே இல்லாததால் எல்லாமே எனக்குச் சொந்தமானதுதான். உதாரணமாக இந்த அன்னிய மாடிவீடு, இதனை முழுவதுமே அன்னியமான தென்று சொல்லிவிடமுடியாது. இந்த வீட்டில் வசித்தவன் எனது நண்பன்தான். அவனுக்கு இராணுவ அழைப்பாணை வருவதற்கு முன்பு விருந்தாளியாகப் பலமுறை இங்கு வந்துள்ளேன். நானும் அவனும் சிறுசிறு பண்டமாற்றுக்களைச் செய்துகொள்வோம். டென்மார்க்கிலிருந்து வரும் பதனிடப் பட்ட இறைச்சியை பிரான்சின் கோனியாக்கிற்கும், எனது பிரான்ஸ் சவர்க்காரத்துக்கு ஸ்ரொக்கிங்ஸ் என பறிமாறிக் கொள்வோம். எனது வீடு குண்டுவீச்சில் சிதறியதை அவனுக்கு அறிவித்தால் இந்தவீட்டில் இருக்க அனுமதி கிடைக்கும். கடைசியாக வியன்னாவில் இராணுவத்தின் தணிக்கைப் பகுதியில் இருப்பதாக அறிவித்தான். இப்போது அவன் எங்கே? எது எப்படியோ இப்போது வீட்டின் கடைசி மாடிக்குப் பெரிதாக மதிப்பு எதுவுமில்லை. அதைவிட மழைபெய்து கூரை ஒழுகுகிறது. மழைநீர், ஒன்றில் ஓடுகள் உடைந்ததாலோ அன்றேல் கூரையிலிருந்தோ தெறித்து விழும்.

மாடியில் என்னால் அமைதியாக இருக்கமுடியவில்லை, மூன்று அறைகளினூடும் அலைந்துகொண்டிருக்கின் றேன். வலுகவனமாக அலமாரிகள், இழுப்பறைகளென என் தேவைக்கான பொருட்கள் அதாவது சாப்பிடக் கூடிய, குடிக்கக்கூடிய, எரிக்கக்கூடியவை கிடைக்குமா எனத் தேடினேன். எதுவுமே கிடைக்கவில்லை. எனக்கு முன்பே துப்புரவுவேலைக்கு வரும் வைசர் என்ற பெண் தன் தேடுதலை முடித்துவிட்டாள். இப்போது எல்லாமே எல்லோருக்கும் சொந்தம். யாருக்கு எது விருப்பமா யிருக்கிறதோ அதனை எடுத்துக்கொள்வார்கள் அது யாருக்குச் சொந்தம் என்றெல்லாம் பார்ப்பதில்லை.

ஓர் இழுப்பறையின் இடுக்கில் வீட்டுச்சொந்தக்காரரின் முகவரியிட்ட கடிதமொன்றைப் பார்த்தேன். அதனை வாசிப்பதற்கு வெட்கப்பட்டாலும் என்னால் வாசிக்கா மல் இருக்க முடியவில்லை. முன்பு ஒரு காதல்கடிதத்தை அவன் குளியல்தொட்டியினுள் போட்டுத் தண்ணீருடன் அடித்துச் செல்லவிட்டது எனக்குத் தெரியும் (போர்க் காலமாயினும் அப்போது பலமணிநேரம் தண்ணீர் கிடைத்தது). இதயம், காதல்துயர், காதல், காமம் எவ்வ ளவு அந்நியமான சொற்கள். மென்மையான, சுவராசிய மான காதல் வாழ்வைவிட, நேரம் தவறாத போதுமான சாப்பாடு மேலானதுபோலும். ஏனென்றால் இதை பதிவு செய்யும்போதும் பசியைச் சுற்றியே எல்லாம் முக்கியத் துவம் பெற்றன. சிந்திப்பது, உணர்வது, நம்பிக்கை, விருப்பங்கள் எல்லாமே உணவில்தான் தொடங்கின.

இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்பு காஸ் இப்போதோ அப்போதோ அணைந்துபோவதுபோல் மெல்லிய சுவாலையாக எரிந்துகொண்டிருந்தது. மணிக் கணக்காக அந்தச்சுவாலையில் உருளைக்கிழங்கு இன் னும் வெந்தபாடில்லை. மதுசாரம் வடிப்பதற்கு மட்டுமே பாவிக்கும் இந்த உருளைக்கிழங்குகளில் எந்தச் சுவையு மில்லை, பசைபோல் கொளகொளவென இருக்கும். இதில் ஒன்றை அரை அவியலாக முன்னமே விழுங்கி விட்டேன். இன்று காலையிலிருந்து தேடித்தேடி வயிற் றுக்குள் திணிப்பதிலேயே கவனம் போகின்றது. நண்பன் கெயர்ட் கிறிஸ்துமஸ்க்குப் பரிசளித்த இளநீலப் பால் கூப்பனைக் கடையில் மாற்றினேன். ஏறத்தாழ கூப்பனின் காலவரை முடிவடையும் தேதி. வளைந்த பிடியுடன் கூடிய பால்பேணியிலிருந்து பாலை ஊற்றிக் கொண்டே விற்பனைப்பெண், பாலும் பேர்லீனிற்கு வருவது நின்று விட்டதென்றாள். அதன் அர்த்தம் குழந்தைகள் சாகும்.

ரோட்டிலேயே சில மிடறுகள் பால் குடித்தேன், கோதுமைக்களியால் வயிற்றை நிரப்பினேன், பின்பு பாண் கருக்கொன்றையும் வயிற்றுக்குள் அனுப்பி வைத்தேன். எவ்வளவோ காலத்திற்குப்பின் நிறைய சாப்பிட்டது உண்மைதான் ஆயினும் பசி என்னை வாட்டி எடுத்தது. சாப்பிட்டதாலேயே பசி அதிகமாக இருந்தது. இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கமும் இருக்கிறது. உணவு இரைப்பையைத் தூண்ட குடிப்பவை சாப்பிடத் தூண்டு மாம். இவை இரண்டும் சேர்ந்து நான் அனுப்பிவைத்த வற்றை சமன்பாடடையச் செய்துவிட இன்னும் வேண்டுமென்று வயிறு அலறுகிறது.

கிறாமனில் மேட்டுக்குடியினரின் புத்தகக்கடையில் (இங்குதான் நான் இப்போது எழுதும் அப்பியசக் கொப்பியையும் கண்டெடுத்தேன்) அரசபரம்பரையினர் பற்றிய நாவலொன்றைப் புரட்டிப்பார்த்தபோது அதில் இப்படியொரு வசனம் இருந்தது சுவராசியமின்றி தன் சாப்பாட்டைப் பார்த்த அவள் சாப்பிடாமலேயே எழுந்து சென்றாள். பத்துவரிகள் மேலும் வாசித்த நான் காந்தத் தால் கவரப்பட்டவள்போல் அந்த வசனத்திற்கு மீண்டும் வந்தேன். பலதடவைகளுக்குமேல் அந்த வசனத்தை திரும்பத் திரும்ப வாசித்தேன். என் நகம் அவ்வசனத்தின் எழுத்துக்களைச் சுரண்டிக் கொண்டிருந்தது. எப்படியா வது இந்தப் புனைகதைக்குள் இருந்து அவள் சாப்பிடா மல் விட்டுப்போன உணவைச் சுரண்டி எடுக்க முயன்று கொண்டிருந்தேன். நம்பமுடியவில்லை, பசியால் வரும் பைத்தியத்தின் ஆரம்பம். கம்சுனின் பசி நாவலில் இது பற்றி என்ன எழுதியிருக்கின்றது என்பதை வாசிக்க முடிய வில்லையே என மனவருத்தமாக இருந்தது. என்வீட்டில் குண்டு விழுந்தபோது அப்புத்தகம் என்னிடமிருக்க வில்லை. இப்புத்தகத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஊ -பானில் பயணம் செய்கையில் எனது பொருட்கள் இருந்த பையிலிருந்து ஒருவன் களவாடிவிட்டான். புத்தகத்தைச் சுற்றியிருந்த தாளில் மீனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. எனது பையினுள் சாப்பாட்டுச் சாமான்கள் இருப்பதாக அவன் நினைத்திருக்க வேண்டும். பாவம் அவன் ஏமாந்து போயிருப்பான். எப்படியிருப்பினும் இந்தக்கதை கம்சுனிற்குப் பிடித்திருக்கும்.

இன்றுகாலை பாண்கடையில் காதில்விழுந்த வதந்தி கள்: அவர்கள் வந்தவுடன் வீட்டில் இருக்கும் சாப்பாட்டுச் சாமான்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள், எங்களுக்கு எதையுமே தர மாட்டார்கள், எட்டுக்கிழமைகளுக்கு எங்களை பட்டினி போடுவதென்று முடிவுகட்டிவிட்டார்கள், இஸ்லீசனில் மக்கள் காடுகளில் வேர்களைத் தேடிப்போகிறார்கள், குழந்தைகள் பசியால் கதறுகின்றன, முதியோர்கள் மிருகங்களைப்போல் புல்லைத்தின்கின்றார்கள்.

-இப்படித்தான் பொதுமக்களின் பேச்சும் எண்ணங் களும். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. மக்களின் குரல் என்ற பத்திரிகை என் வாசற்படிக்கு வருவதில்லை. திருமதி வைசரும் இப்போதெல்லாம் முன்புபோல் எழுபது வயது மூதாட்டி மானபங்கப்படுத்தப்பட்டாள், கத்தோலிக்க கன்னியாஸ்திரி இருபத்திநான்கு தடவை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டாள் (இதை யெல்லாம் அருகிலிருந்து யார்தான் எண்ணுகிறார் களோ?), என்றெல்லாம் காலைச்சாப்பாட்டின்போது வாசிப்பதுமில்லை. இவைதான் முன்னையத் தலைப்புச் செய்திகள். இச்செய்திகளை பிரசுரிப்பதன் மூலம்தான் பேர்லின் ஆண்கள் பெண்களை காப்பாற்றச் சீறி எழுவார் களென்று அப்பத்திரிகை நினைக்கின்றதா? பத்திரிகைச் செய்திகள் ஆயிரக்கணக்கான பெண்களையும் குழந்தை களையும் பயத்தால் இருக்கும் பாதுகாப்பையும் உதறி விட்டு அனாதைகளாய் ஏற்கனவே அனாதைகள் குழு மிய நகரின் மேற்குப்புறத்திற்கு விரட்டியடிக்கின்றது. இந்தச் செய்திகளை வாசிக்கும்போதெல்லாம் திருமதி வைசருக்கு ஒரு நிறைவு , கண்கள் பளபளக்கும், அவளின் சந்தோசத்தில் எங்கோ குரூரமும் ஒட்டியிருக்கும் அல்லது தன்னையறியாமலே இந்நிலை தனக்கு வந்து விடுமென்ற பயமாகவும் இருக்கலாம். பயம் அவளிடம் இருந்தது.நேற்றைக்கு முன்னைய நாளிலிருந்து அவள் காணாமல் போயிருந்தாள்.

வானொலிப்பெட்டி நான்கு நாட்களுக்குமுன்பே செத்து விட்டது. தொழில்நுட்பம் என்ற பெயரில் எதிலும் பெரி தாக நம்பிக்கை வைத்துவிடமுடியாது. அவற்றிற்கு பெறு மதி என்று தனியாக எதுவும் கிடையாது. எங்காவது மின்சாரத்தில் செருகினால்தான் தொழில்நுட்பத்திற்கே பெறுமதி வருகிறது. பாண் முழுமையானது. கோவா முழுமையானது. பவுண் பவுண்தான். அது ரோமிலாகட் டும் பெருவிலாகட்டும் அன்றேல் பிரேசிலாகட்டும் பவுணின் மதிப்புக்குறையாது. ஆனால் ரேடியோ, காஸ் அடுப்பு, கணப்புக்கள், மின்னடுப்புக்கள் என்று நவீனத் தின் அலறல்கள் எல்லாமே வெற்றுக் கூக்குரல்கள்தான். காஸ், மின்சாரமையங்கள் தொழில்படாவிடில் இவற்றி னால் எந்தப்பயனுமில்லை. இப்போது நாங்கள் போன நூற்றாண்டை நோக்கி திரும்பி நடக்கத் தொடங்கி விட்டோ ம். குகைவாழ் மனிதர்கள்.

வெள்ளி ஏறத்தாழ மாலை 7 மணி, ட்றாமில் பயணம். உறுமலும் முழக்கமுமாக இடைவிடாத குண்டுமழை. வண்டியின் பெண்நடத்துனர் குண்டுவீச்சை திட்டிக் கொண்டிருந்தாள். என்னைச் சுற்றியிருந்தவர்களின் முகங்களைக் கவனமாகப் பார்த்தேன்.யாரும் யாருட னும் பேசவில்லை, அவர்கள் முகத்தில் எல்லாமே தெளி வாகத் தெரிந்தது. நிலவறைகளில் நம்பிக்கை உள்ளவர் களோடு மாத்திரம் பேசிக்கொண்டும் வெளியில் யாருட னும் பேசாது ஊமையாகிவிட்டோ ம். இனி எப்போது மீண்டும் ட்றாமில் பயணம் ? அல்லது இனி எப்போதா வது ட்றாம் ஓடுமா ? பத்திரிகையில் பயணச்சீட்டுவகை ஒன்று, இரண்டு நாளையிலிருந்து பாவனை மதிப்பை இழக்கின்றது என அறிவித்திருக்கின்றார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்நடைமுறையே ஆரம்ப மானது. இப்போது வகை மூன்று மட்டும்தான் செல்லு படியாகுமாம். நானூறில் ஒருவருக்கு இந்த அனுமதி இருக்குமா? அன்றேல் யாருக்குமில்லையா? ட்றாம் வண்டி இனி ஓடாது.

குளிரான மாலை, தண்ணீர் வராத பைப், இப்போதோ அப்போதோ எரிவதை நிறுத்திவிடுவேன் என்று கீற்றாக எரியும் நெருப்பில் உருளைக்கிழங்கு இன்னும் அவிந்து கொண்டிருக்கின்றது. நான் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டும் பச்சைக்கடலை, மா, பார்லிஅரிசி, கோப்பித்தூள் என சிறு பைகளுக்குள் போட்டு ஒரு கடதாசிப் பெட்டிக்குள் அடுக்கி வைத்துக் கொண்டேன். நிலவறைக்குக் கொண்டுபோக இன்னும் ஒரு பெட்டி. எல்லாவற்றையும் நூலால் கட்டிய பின்புதான் உப்பை மறந்தது ஞாபகம் வந்தது. உப்பில்லாமல் உடம்பு சரியாக இயங்காது. சிறிதுகாலத்திற்கு ஒருமுறையாவது உப்பு கட்டாயம் தேவை. நீண்டகாலம் நிலவறை வாழ்க்கைக்கு நாங்கள் எங்களை ஆயத்தப்படுத்தியே ஆகவேண்டும்.

வெள்ளி இரவு 11 மணி, நிலவறை, பெற்றோமக்ஸ் வெளிச்சம். என் அப்பியாசக்கொப்பி மடியில் 10 மணிய ளவில் மூன்றோ நான்கோ குண்டுகள் அடுத்தடுத்து விழுந் தன. அதேவேளை சைரனும் அலறியது. இனி மின் சாரம் நின்றுவிடும். செவ்வாய்க்கிழமை போல் இருளின் ஆதிக்கம் இரவைப்பயங்கரமாக்கும். இருளில் தட்டுத் தடுமாறி தடுக்கி விழுந்து நகரவேண்டும். எங்கோ ஒரு கையால் சுற்றும் சிறிய டைனமோ உறுமியது, அதன் மங்கியவெளிச்சம் படிக்கட்டுச்சுவரில் பெரியபெரிய நிழல்களை வீசிவிட்டிருந்தது. உடைந்த ஜன்னல் கண் ணாடிகளூடே வீசிய காற்று பிளாஸ்டிக் கருமைத் திரையின் சட்டங்களூடே புகுந்து கலகலத்தது. கால்கள் பெட்டியின் மூலைகளுடன் மோதின. லூட்ஸ்லேமான் அம்மா என அலறினாள். வழி, வீட்டின் பக்கவாட்டுக் கதவுவரை போகும். சிறிது மேலே ஏறினால் வீடுகளுக்கிடையிலான சதுரமான பொதுநிலம், மேலே வானம், நட்சத்திரங்கள், குண்டுவிமானங்கள் தாழப் பறக்கும் இரைச்சல் இன்னும் சிறிது மேலே ஏறினால் பாதுகாப்பரண் நடைபாதை, கடைசியாக கனமான இரும்பாலான கதவு, அதன் ஓரங் களில் இரப்பர் பதித்திருக்கும் திறந்து பூட்டிக் கொள்ள இரு கைபிடிகள். எங்கள் நிலவறை, அரசமொழியில் பாதுகாப்பறை, நாங்கள் அதை நரகம், பாதாள உலகம், பொதுச்சவக்குழி என்றெல்லாம் சொல்லுவோம்.

வெட்டிய மரங்களின் அடிக்குத்திகளை கூரையைத் தாங்க நட்டுவைத்திருந்தார்கள். ஏற்கனவே அடை பட்டுக் கிடக்கும் காற்றில் மரக்குத்திகளின் நாற்றமும் சேர மூக்கையடைக்கும் நாற்றம். இதைக்கட்டியவர் எங்களுடன் இருந்தால் இந்நிலவறை பொறிந்து விழுந் தால் அவருக்குத் தன் முட்டாள்தனம் அப்போதாவது புரியும். ஆனால் அவர் பாட்எம்சிற்கு இடமாறிப்போய் இப்போது அமெரிக்கப் பிரசையும் ஆகிவிட்டார். இந் நிலவறையைப் பகிர்ந்துகொள்பவர்கள் தங்கள் குகை பாதுகாப்பானது என்று நம்பினார்கள். மூன்று மாதங் களாக நான் இந்த நிலவறைக் குடிகளில் ஒருத்தி, இருந் தும் நான் அன்னியவளாகவே இருக்கின்றேன். ஒவ்வொரு நிலவறைக்கும் விதம்விதமான குணங்களி ருக்கும், நம்பிக்கைகளிருக்கும். எனது பழையக் குகையில் நெருப்பை அணைப்பதற்காக ஆங்காங்கே வாளிகளில், தகரப்பேனிகளில், பாத்திரங்களில், பீப்பாய்களில் தண்ணீர் வைத்திருந்தார்கள். அப்படி யிருந்தும் ஒரு பந்தம் எரிந்து முடிவதுபோல் நிலவறை எரிந்துபோனது. அணைக்க வைத்திருந்த தண்ணீர் அந்நெருப்பில் ஒருவன் துப்பினால் எந்தப்பாதிப்பை ஏற்படுத்துமோ அதுபோல்தான்.

வைசரின் நிலவறையில் சுவாசப்பையைப் பாதுகாத்தல் முதன்மை பெற்றிருந்தது. முதல் குண்டு விழுந்ததுமே முன் உடம்பை வளைத்துத் தலையைக்குனிந்து உதடு களைக் கையால் அழுத்தி அதிகுறைந்தளவு சுவாசிப்பார் களாம். அப்படிச்செய்தால் சுவாசப்பை பாதுகாப்பாக இருக்குமென்று அவர்களுக்கு யாரோ சொல்லியிருக்கின் றார். நான் இருக்கும் இப்போதைய நிலவறையில் வேறொரு சடங்கு. எல்லோரும் சுவருடன் சாய்ந்து வரிசையாக உட்கார்ந்து கொள்வார்கள், காற்றோட் டைக்குக்கீழ் இடைவெளிவிட்டு திரும்ப வரிசை தொடங்கும். ஒரு துணியால் மூக்கையும் வாயையும் மூடி பின்புறத்தில் முடிச்சுப் போட்டுக்கொள்வார்கள். இதை நான் எந்த நிலவறையிலும் பார்க்கவில்லை. இந்தத் துணிக்கட்டு குண்டு வெடித்தால் எதைக் காப்பாற்றப் போகின்றது? அவர்களுக்கு அதிலொரு நிம்மதி! மற்றபடி நிலவறைகளும் குடிகளும் அங்கிருக்கும் கதிரைகளும் ஒரேமாதிரித்தான். சமையலறைக் கதிரையிலிருந்து பழைய கதிரைகள் விற்கும் கடையிலுள்ள கதிரை வரை எல்லா வகைகளும் கலந்திருக்கும். மேட்டுக்குடியிலி ருந்து நடுத்தரம், தொழிலாளர்கள் வரை எல்லோருமே இருப்பார்கள். நான் கவனித்துக் குறிப்பு எடுப்பேன்.

முதலில் பேக்கரிப்பெண்; பெரிய சிவந்த கன்னங்களை ஆட்டுரோமக்கொலரினுள் மறைத்தபடி. பார்மசிஸ்டின் விதவை; முதலுதவிப்பயிற்சி முடித்தவர், சிலவேளை களில் மற்றப்பெண்களுடன் கூடி இருகதிரைகளைச் சேர்த்து வைத்து தாரொட் சீட்டுக்களில் சாத்திரம் பார்ப் பாள். திருமதி லேமான்; கணவன் கிழக்குப் பேர்லீனில் காணாமல் போய்விட்டார். இவளுக்கு இரு குழந்தை கள். மூத்தவள் லூட்ஸ்க்கு நான்கு வயது எப்போதும் அம்மாவின் மடியிலேயே படுத்திருப்பாள். இரண்டா வது குழந்தையை தலையணை உறையுள் சுற்றி வைத்தி ருப்பாள். கண்ணாடியுடன் சாம்பல் நிறக்காற்சட்டை போட்ட இளைஞன்; இளம் பெண்களைக் கண்டால் கோமாளியாகிவிடுவான்.

வயது முதிர்ந்த மூன்று தையல்காரிகள்; ஒரு மூலையில் ஆடாது அசையாது உட்கார்ந்திருப்பார்கள். கோனிக்ஸ் பேர்க்கிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்; மூட்டை முடிச்சுக்களுடன். தோட்ட மேற்பார்வையாளர்; தோட் டம் குண்டுவீச்சில் சிதைந்து போனதால் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டவர், வயதானவராயினும் எந்நேரமும் ஓயாது பேசிக்கொண்டிருப்பார். புத்தக வியாபாரத் தம்பதிகள்; முன்பு பாரிசில் பலவருடங்கள் வாழ்ந்த வர்கள், தங்களுக்குள் அடிக்கடி பிரான்சிய மொழியில் பேசிக்கொள்வார்கள்.

ஆல்டஸ்கோவ்விலிருந்து, குண்டு விழுந்து வீட்டை இழந்தபெண்; இருக்க இடம் தேடித் தன் தாய்வீடு வந்தவள், குண்டு விழுந்த கதையை சொல்லியபோது நான் கேட்டவை; நிலத்தடியில் புதைத்த குண்டு வெடித்ததில் பக்கத்து வீட்டுக்காரனின் தோட்டமும் எனது வீடும் சிதலமாகின. அதீத கொழுப்பிற்கு சாப்பாடு போட்டு வளர்த்த பன்றியை கூரைமுகட்டில் செருகி விட்டது அந்தப்பெரிய குண்டு. அதை சாப்பிடக்கூட முடியவில்லை தோட்டமும் வீடும் சிதறிக் கும்பலாகக் கிடந்தது. பன்றியைத் தேடியவர்கள் கண்டது பக்கத்து வீட்டுத் தம்பதியினரின் சிதறிய உடல்களைத்தான். அவர் களின் இறுதிச்சடங்கும் புதைத்தலும் மிக அழகாக நடந்தது. ஆண்பாடகர் குழாம் கல்லறையில் பாடினார் கள். சைரன் அலறியது கடவுளின் அறிவுறுத்தலாக. அவசர அவசரமாக சவப்பெட்டிகள் குழியினுள் இறக்கப்பட் டன. சவப்பெட்டி குலுங்கியதில் உள்ளிருந்த சிதறிய உடல்கள் முட்டிமோதும் சத்தம். ஆனால் முடிவில் எல்லோரும் சிதறி ஓடினோம். இவள் சொன்னவற்றை மற்றவர்கள் நம்பவில்லை. பின்பு இன்னுமொரு கதை யும் சொன்னாள். மூன்று நாட்களின் பின் இறந்த தம்பதி யினரின் மகள் தோட்டத்தின் சிதறல்கள் மத்தியில் தேவையானது ஏதாவது கிடைக்குமா எனத்தேடியபோது அவள் கண்டெடுத்தது இறந்த தந்தையின் ஒரு கை. பக்கத்து வீட்டுக்காரனின் கை புதைக்கப்பட்டதா? என்ற கேள்விக்குச் சிலர் சிரித்தனர் பலர் மவுனமாகவே இருந்தார்கள்.

மீண்டும் நிலவறைக்கு வருவோம், எனக்கு முன்னால் போர்வையால் மூடியபடி காய்ச்சலும் வியர்வையுமாக ஒரு முதியவர்; தொழிலால் சிறு வியாபாரி, அவர் பக்கத் தில் மனைவி எஸ் எழுத்தை அழுத்தி உச்சரிக்கும் கம்பேர்க்காரி, பதினெட்டு வயதான அவர்களின் மகள் , அடுத்து புதிதாக வந்த செம்பட்டை மயிர்க்காரி அவளின் ஆண் நன்பர்கள் இருவரையும் யாருக்கும் தெரியாது. எப்போதும் சிடுசிடுக்கும் போஸ்ட்மாஸ்டர் அவர் கையிடுக்கில் கால் இழந்தவர்களுக்கான ஓர் ஊன்று கோல், கலைவடிவோடு நிக்கல், மரம், தோல் கொண்டு செய்யப்பட்டது. கால் இழந்த அவரின் மகன் எங்கோ இருக்கின்றானா? இல்லையா? என்று கூட யாருக்கும் தெரியாது.

முதுகு சற்று கூனிய இரசாயனப்பட்டதாரி எப்போதும் கதிரையினுள்ளே முடங்கிக் கிடப்பார். பக்கத்திலுள்ள சோடாக்கொம்பனியில் அவருக்கு வேலை. அதற்கு அடுத்தது போர்ரியேஸ் குடும்பம்; தாய், இருபெண்கள், தகப்பனில்லாத பேரக்குழந்தை ஒன்று. ஏர்னா, கென்னி இருவரும் பேக்கரிக்கடையிலிருந்து தங்கள் வீடு களுக்குச் செல்ல முடியாததால் கடை முதலாளி வீட்டில் இருப்பவர்கள். கறுத்த சுருள் முடியுடனான பெல்ஜிய நாட்டு அந்தனி; பேக்கரியில்தான் வேலை செய்கின்றார். கென்னிக்கும் அவருக்குமிடையில் ஓர் ஈர்ப்பு. கணவன் இறந்ததால் ரெஸ்ரரோன்ரினை நடாத்தும் பெண்; நிலவறைக்குரிய சகல விதிகளையும் மீறி தனது வயதுபோன வொக்ஸ்ரெரியர் நாயை அணைத்தபடிதான் நிலவறைக்குள் வருவாள். நான் வெளிறிய செம்பட்டை தலைமயிர்க்காரி, சந்தர்ப்பவசமாக குண்டுவீச்சில் சிக்காது தப்பிய குளிர்காலகோட் அணிந்திருப்பேன். ஒரு பதிப்பகத்தில் வேலை பார்த்தேன். மூன்று வாரங்களுக்கு முன் காலவறையற்ற விடுமுறை அறிவிப்புடன் பதிப்ப கத்தை மூடிவிட்டார்கள். அத்துடன் இன்னும் சிலர். பேக்கரி மாஸ்டர் இப்போது எங்களுடன் இல்லை. எங்களில் பிரயாணச்சீட்டான மூன்றாம் வகை சிவப்புச் சீட்டை வைத்திருந்த ஒரே நபர் அவர்தான். விலை யுயர்ந்த வெள்ளிச்சாமான்களைப் புதைப்பதற்காக தனது வீட்டுக்குப் போயுள்ளார்.தபால்துறை ஊழியரான இளம் பெண் பெகனும் எங்களுடன் இல்லை. இன்று குண்டு கள் விழாததால் பத்திரிகை வாங்க போய்விட்டாள். இன்னுமொரு பெண்ணும் எங்களுடன் இல்லை. போஸ்டாமில் நடந்த பெருந்தாக்குதலில் இறந்த தனது குடும்பத்தவர்களை புதைப்பதற்காகப் போய்விட்டாள். மூன்றாவது மாடியில் இருந்த எஞ்ஞினியர், அவர் மனைவி, மகன் இவர்களும் இங்கில்லை. பணிப்புரை கிடைத்ததால் ஆயுதம் உற்பத்தி செய்ய ஒரு கிழமைக்கு முன்பே கால்வாய் சரக்குக்கப்பலில் தன் தளபாடங் களுடன் பிரவுன்ஸ்சுவைக்குக்கு புறப்பட்டுவிட்டார். அங்கே எல்லா மனித வளங்களும் மத்தியில் குவிய மனித நெரிசல் அதிகரித்துவிட்டது. அங்கும் அமெரிக்கர் கள் வந்துவிட்டார்களோ யாருக்குத் தெரியும்.

இரவு மின்சாரம் இல்லை, கூரையில் பெற்றோமக்ஸ் வெளிச்சம். வெளியே உறுமல் சத்தம் உரக்கின்றது. துணி கட்டும் சடங்கு ஆரம்பமாயிற்று. எல்லோரும் மூக்கை யும் வாயையும் மறைத்துக் கட்டிக்கொண்டனர். சாவு முகமூடி அணிந்த மனிதர்கள், கண்கள் மட்டும் உயிரின் அசைவுடன்.

.... தொடரும்

(மொழிபெயர்ப்பாளர் தேவா: சைனா கெய்ட்றஸியின் குழந்தைப்போராளி நூலை மொழிபெயர்த்தவர். தற்போது ஸ்விட்சர்லாந்தில் துணைவியாருடன் வாழ்கிறார்.)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com