Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2008

சுட்டதொரு சொல் விளைந்ததொரு கனி
(எஸ்.வி.ஆரின் மார்க்சியம் பெரியாரியம் தேசியம் நூலை முன்வைத்து)
க.சீனிவாசன்

தந்தை பெரியார் இறப்புக்குப் பின்னர் பிறந்த தலைமுறைக்கு, மார்க்சியம்-அடிப்படை உழைக்கும் வர்க்கம்-தலித்தியம் ஆகிய-சமூகம் செலுத்தப்பட வேண்டிய இந்தத் தீர்மானகரமான பாதைக்கு தமிழ்கூறும் நல்லுலகின் அனைத்துப் பிரிவினரையும் (முற்பட்ட, மத்தியம, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் சிறுபான்மையினர்) இட்டுச் சென்றவர்களில் முக்கியமானவர்களாக கோ.கேசவன், எஸ்.வி.ராஜதுரை, அ. மார்க்ஸ் இவர்களைச் சொல்லலாம்.

முன்பொரு முறை தோழர் கேசவன் குறித்த எஸ்.வி.ஆரின் விமர்சனம் ஏற்படுத்திய வருத்தத்தைப் போலவே பெ.மணியரசன் (த.தே.பொ.க) எஸ்.வி.ஆரைப் பற்றி சொன்ன சொல்லும் வேதனைப்படுத்துவதாக இருந்தது. எனினும் இதற்குப் பிரதிபலனாக நமக்குக் கிடைத்தது ‘மார்க்சியம் பெரியாரியம் தேசியம்’ குறித்து தெளிவாகப் புரிந்து கொள்வதற்கான ஆயிரம் திறப்புகள் கொண்ட சிறிய புத்தகம்.

நிகழ்ந்தது இதுதான். எஸ்.வி.ஆரின் பெரியார்:ஆகஸ்ட் 15 நூலின் இரண்டாம் பதிப்பின் வெளியீட்டு நிகழ்ச்சி 2007 பிப்ரவரி 18ம் நாள் ஈரோட்டில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டது. இதன் ஏற்புரையில் எஸ்.வி.ஆர், “தமிழகத்தைப் பொருத்தவரை நாம் தமிழ்நாடு விடுதலை அல்லது சுயநிர்ணய உரிமை வேண்டும் என்கிறபோது நம் போன்றே இந்திய பார்ப்பன, பனியா சட்டங்களால் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும், பிற தேசிய இன, மொழி பேசும் உழைக்கும் மக்கள், தலித், பெண்கள் மற்றும் சுரண்டப்படும் மக்களின் ஒத்துழைப்பு தேவை. அது நடக்கும் எனவும் நான் நினைக்கவில்லை. ஒரு மார்க்சியவாதி என்ற கண்ணோட்டத்தில் தேசிய சுயநிர்ணய உரிமை அல்லது விடுதலை என்பது ஒரு இடைக்காலப் பயணம் என்றே கருதுகிறேன் எனக் கூறுகிறார். எஸ்.வி.ஆரின் உரையைத் தொகுத்து ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 01-03-07,08-03-07 இதழ்களில் பெரியார் தி.க.வினர் வெளியிடுகிறார்கள்.

எஸ்.வி.ஆரின் உரைக்கு எதிர்வினையாற்றும் முகமாக ‘தமிழர் கண்ணோட்டம்’ ஏப்ரல்07 இதழில் பெ.மணியரசன் ‘எஸ்.வி.ராஜதுரை ஏற்கும் இந்திய தேசியமும் எதிர்க்கும் தமிழ்தேசியமும்’ என ஒரு திறனாய்வுக் கட்டுரை வரைகிறார். அதில் philistinism என்றும் utopia என்றும் எஸ்.வி.ஆரின் போக்கும் கருத்தும் என பொருள்பட குறிப்பிட்டுவிடுகிறார். இதற்கான மறுப்புரையை ‘தமிழர் கண்ணோட்டம்’ வெளியிட வேண்டுமென எஸ்.வி.ஆர் விரும்புகிறார். மறுக்கப்படுகிறது. தோழமை மறந்த திறனாய்வு என்று கவிஞர் தமிழேந்தி, பெ.ம. மீதான தமது அதிருப்தியை பு.பெ.முழக்கத்தில் பதிவு செய்கிறார்.

இந்த வளிமண்டலம் முழுதும் நீக்கமற நிரம்பியிருக்கும் ஆதிக்கச் சாதி கருத்தியல் சூழலில் இங்கு தமிழ்த்தேசம் என்பது எந்த தமிழருக்கான தேசமென வினா எழுப்புகிறார். இந்நூலின் ஆதாரமான கேள்வியாக இது இருப்பதோடு மட்டுமல்லாமல், எஸ்.வி.ஆரின் அரசியல் நிலைப்பாட்டையும் இதுவே தீர்மானிக்கிறதென கருதலாம். பறையர் பட்டம் ஒழியாமல் சூத்திரர் பட்டம் ஒழியாது என்றவர் பெரியார். அதுபோலத்தான் தாழ்த்தப்பட்ட தீண்டப்படாத மக்களை விடுதலை செய்யாமல் உன் விடுதலையை கனவால் கூட பார்க்கமுடியாது என அவர் கூறியதை காரல் மார்க்ஸின் ‘மனிதகுலம் முழுவதையும் விடுவிக்காமல் பாட்டாளி வர்க்கம் தன்னைத்தானே விடுதலை செய்யமுடியாது’ எனும் பிரகடனத்தோடு ஒப்புமை செய்வதிலும், புரட்சிகர கம்யூனிஸ்ட்டுகள் எனச் சொல்லப்படுபவர்கள் உளப்பூர்வமாக பெரியாரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக ஆளும் அரசு அடக்குமுறை இயந்திரத்திற்கெதிராக அளப்பரிய தியாகங்கள் புரிந்து போராடிவரும் மாவோவியர்கள் சாதியப் புரட்சியையும் வர்க்கப் புரட்சியையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கவேண்டும் என்ற சரியான நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதை சொல்வதிலும் (காசு - கண்ணன் - பத்திரிகை காந்தியின் பிம்பத்தை தூக்கிக் கொண்டலையும் கோதாவில் போராளிகளை இழிவுபடுத்தி கட்டுரைகள் வெளியிடுவதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்) ‘என்னைப் பொறுத்தவரை பெரியாரிடமிருந்து நான் எடுத்துக் கொண்டவை சாதி ஒழிப்புத் தத்துவமும், பெண் விடுதலை தத்துவமும், பகுத்தறிவு பார்வையும்தான்’ எனக்கூறுவதிலும் முடிவாக தமிழ்த்தேசியம் பேசுவதற்கு ஆயிரம்பேர் வரலாம் ஆனால் சாதியொழிப்புக்கும், பெண் அடிமைத்தனம் ஒழிவதற்கும் வழிகாட்டக்கூடியவை பெரியார், அம்பேத்கர், ஃபுலே ஆகியோரின் சிந்தனைகளும் புரட்சிகர மார்க்ஸியக் கோட்பாடுகளும் மட்டுமே எனத் தெளிவுபடுத்துவதிலும் உணரமுடிகிறது.

இந்நூலை வாசித்து முடிக்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான முழு விடுதலைக்கு எது சாத்தியமான வழி என்பது புரிபடுகிறது. நூல் நெடுகிலும் தோழர் பெ.ம.குறித்த எஸ்.வி.ஆரின் எள்ளல் எங்கும் தனிமனித வன்மம் ஆகிவிடாமல், ஆரோக்கியமான விவாதங்களைத் துவக்குவதற்கான புள்ளிகளைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. போகிறபோக்கில் பெ.ம. சொல்லிவிடுகிறார். ‘எஸ்.வி.ஆர் மார்க்ஸியத்தை வளர்க்க உருப்படியாக எதுவும் செய்யவில்லை’ என்று, வந்ததே கோபம். எஸ்.வி.ஆரின் ஒட்டுமொத்த புத்தகங்களின் பட்டியல் தயார். வெளியான ஆண்டு, பதிப்பக விபரங்களுடன். தமிழில் நூல்களும் கட்டுரைத் தொகுப்புகளுமாக 22. தோழர்களோடு இணைந்து எழுதியவை 5. ஆங்கிலத்தில் எழுதியது 4. மொழி பெயர்ப்பு நூல்கள் (ஆங்கிலத்திலிருந்து) 9. மொழிபெயர்ப்பு நூல்கள் (தோழர்களோடு இணைந்து) 10. ஓய்வு ஒழிச்சலற்ற இவரது எழுத்துழைப்புக்கும், உடல் நலம் குன்றிய நிலையிலும் இவர் கொண்டுள்ள உத்வேகத்திற்கும் பதிலாக நாம் ஒன்றை மட்டும் சொல்லலாம். அவை வியர்த்தமாகாது.

பெ. மணியரசனும் தன் பங்கிற்கு சொல்லத்தான் செய்கிறார் எஸ்.வி.ஆரை நேரடியாக குறைத்துப் பேசவில்லை என்று. அதாவது ‘அற்பர்’ என்று சொல்லவில்லை, ‘அற்பவாதம்’ என்று தான் சொன்னேனென்று. ஆனால் இவர்தான் விடுகிறவராயில்லை philistinism, utopia எனும் இரு சொற்களையும் அதன் ஆதாரபூர்வமான விளக்கங்கள் கொடுத்தபின்தான் ஓய்கிறார். இப்போது சொற்கள் நம்மை நோக்கி நிற்கின்றன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com