Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2008

நிலம் வெறும் மண்ணல்ல
தஞ்சை சாம்பான்

விவசாயத்திற்கு உபயோகமாக உள்ள அரசு புறம்போக்கை தலித்துகளுக்கு கொடுக்கலாம் என்று 1956 ஆம் வருடம் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தாழ்த்தப்பட்டோர் லீக்கை சார்ந்தவர்களும் (காங்கிரஸ் அரிசன பிரிவு) தலைவர்களும் கலந்துகொண்ட கூட்டம் தெருவின் மையப்பகுதியில் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசு அறிவிப்பை அறிவித்தார்கள். எனவே தலித்துகள் புறம்போக்கு நிலத்தில் ஏர் கட்டுவதென அப்பாவித்தனமாக முடிவுசெய்தனர். இதையறிந்த மேல்சாதியினர் சும்மா இருப்பார்களா? இந்த செய்தியைச் சுற்றி ஓர் சூழ்ச்சி வலை பின்னினார்கள்.

பெரும்பகுதியாக வசிக்கும் முத்தரையர் (வலையர்) சமூகத்தின் ஒரு சிலரது கையில் கொஞ்சம் புறம்போக்கு நிலம் உள்ளதை பறையர்கள் எடுக்கப் போவதாக ஒரு புரளியை ஊதி, எங்கும் பரவச் செய்தார்கள். இதில் பெரும் பகுதி நிலம் மேல்சாதியார் என்று சொல்லக்கூடிய கள்ளர் சமூகத்திடம்தான் இருந்தது. கள்ளர்கள் கையில் இருப்பதை மறைக்கவே இந்த தந்திரத்தை கையாண்டனர்.

புறம்போக்கு எது பட்டா எதுவென அறிந்திருந்த தலித்துகள் தான். ஒரு மிராசுதார் அனுபோகத்திலிருந்த நிலத்தில் இறங்கினர். மிராசுதார் தடுக்கவில்லை என்றாலும் முத்தரையர் சமூகத்தவ ரும் மேல்சாதியினரும் கைகோர்த்து தடுத்தனர். மீறி நிலத்தில் இறங்கிய சில தலித்துகள்மீது தாக்குதல் தொடங்கியது. கரையில் நின்றிருந்த தலித்துகள் ஓட்டம் பிடித்தனர். மிதியுண்டவர்கள் அய்யோ சாமி, ஏதோ அரசாங்கம் சொன்னிச்சின்னு சொன்னாவோ, அதனாலே இறங்கிப்புட்டோம் சாமி. இனிமே யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் உட்டுருங்கோ சாமியென்று ஓடத் தொடங்கினர். எந்த நிலத்தை புறம்போக்கு என்று அறிவித்து தலித்துகள் இறங்கினரோ அதை அந்த மிராசுதார் மணியக்காரரிடம் ஒப்படைத்துவிட்டார்.

இந்தசமயத்தில் ஈச்சங்கோட்டை பால்பண்ணை விழாவிற்கு வந்த மாவட்ட ஆட்சியர் இங்கும் வந்தார். ஒட்டிய வயிறும் மழிக்கப்படாத முகமும், செம்மண் அழுக்கோடு முழங்கால் அளவில் கட்டிய வேட்டியோடும் கையில் வெள்ளைக் கடுதாசியோடும் ஒருகூட்டம் ரோட்டோரத்தில் நிற்பதை கவனித்த அவர், காரை நிறுத்தி மனுவைப் பெற்றுக்கொண்டார். பின் ஆவாரங்காட்டுப் பகுதியை விவசாயத்திற்கு உகந்ததாக பண்படுத்தியுள்ளதையும் நிலத் ற்கு பட்டா கேட்டு மனு செய்திருப்பதையும் நேரில் ஆய்ந்து 40 ஏக்கர் நிலத்தை பங்கிட்டு பட்டா வழங்கினார். இதோடு நில்லாது பட்டுப்பூச்சி வளர்ப்புத் திட்டம் தொடங்கி ஆழ்குழாய்க் கிணறு தோண்டி மின் இணைப்பும் கொடுத்தார்.

நிலமற்றுக் கிடந்த தலித்துகள் வாழ்வில் நிலம் பெரும் மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் தந்தது. பசியும் பட்டினியும் கிடந்து நிலத்தைக் காத்து வேலி கட்டினர். பட்டுச்செடி வளர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டனர். இதில் கிடைத்தப் பட்டு, முதல்தரமானது எனப் பெயரெடுத்தது. அந்த ஆட்சியரின் பெயர் தெரியாது என்றாலும் அந்த மவராசன் எங்கு இருந்தாலும் நல்லா இருக்கணும் என வேண்டிக் கொள்வார்கள். அவர் திரு.முருகராஜ் என்று நினைவு.

ஆதிக்கச்சாதியினர் ஆத்திரம் கொண்டனர். இவனுவோ வெள்ளாமே செய்தானுவோன்னா நம்மை மதிக்கமாட்டானுவோ என வெளிப்படையாகவே பேசிக் கொண்டனர். எனவே வேலிகளை பிடிங்கியெறிந்தனர். அரும்பாடுபட்டு வளர்த்த செடி, மாடுகளுக்கு தீனியாகிப் போனது. ட்ரான்ஸ்பாரமும் மின் வயர்களும் களவாடப்பட்டன. ஆழ்குழாய்க் கிணற்றில் இருந்த நீர்மூழ்கி மோட்டாரும் காணாமல் போனது. கடைசியாக கிணற்றில் கல்லும் மண்ணும் அள்ளிப்போட்டு தூர்த்தனர். இது சம்பந்தமாக கொடுக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மானாவாரிப் பயிர்களையும் ஆடுமாடுகள் மேய்ந்து சென்றன. தலித்துகளால் எதுவும் செய்ய இயலாத நிலையில், சில வருடங்களில் தரிசாகிப் போனது.

தலித்துகளின் வாழ்வாதாரத்தை அழித்ததோடு அவர்களின் குடியிருப்புப் பகுதியை அப்புறப்படுத்தும் முயற்சியும் நடந்தது. எல்லா கிராமங்களிலும் சேரித்தெரு ஊரின் ஒதுக்குப்புறம் இருக்கும். ஆனால் இந்த ஊரில் சேரித்தெரு ஊரின் முகப்பிலேயே இருந்தது. அது ஆதிக்கச் சாதியினருக்கு உறுத்தலாயிருந்தது. தெருவின் மேல்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று கட்டப்பட்டது. ஏற்கனவே இருந்த பட்டுப் பண்ணை காலாவதியாகிப் போன இடம் வனசரகத்தோடு சேர்ந்தது. புழங்கவும் வெயில் காலங் களில் உறங்கவும், தெரு வாண்டுகள் ஓடியாடி விளையாடவும் இடமும் தலித்துகளுக்கென்று இருந்த இந்த மணல்காடுகளைச் சுற்றி வேலி எழுப்பப்பட்டது. சேரித் தெருவை நடுவில் வைத்து சுற்றிலும் வேலி கட்டினார்கள்.

இதை தலித்துகள் எதிர்க்காமலிருக்க மேல்சாதியார் நய வஞ்சகமாக ஊர்க்கூட்டம் போட்டனர். யாம் புள்ளே குட்டி ஓடியாட ஒரு சாண் இடமில்லே. இப்புடி உசிர வெச்சி ஊனத்தே வடிக்கிறீயளே சாமி ஒங்களுக்கே நல்லாயிருக்கா என்று தலித்துகள் புலம்பினர். எலே யாண்டா கத்துறீங்க, நாங்கோ என்னா சொந்தத்துக்கா வேலி வெக்கிறோம்? பள்ளிக்கொடத்துக்குத்தானே. இதுலே எங்க புள்ளேங்க மட்டுமா படிக்கப்போவுது? நீங்க சரின்னா ஆவாரங்காட்டு பக்கம் வூடு கட்டி கொடுக்கிறோம். ஆத்துக்கு கீழேண்ட இருக்குற புறம்போக்கேயும் தர்றோம். நல்லா ஓசனே பண்ணி சொல்லுங்கோ. ஆனா ஒன்னு வேலி வெச்சது வெச்சதுதான் அதே எடுக்குற பேச்சிக்கே இடம் இல்லே என்று கறாராக பேசினார்கள்.

கூட்டத்தில் இருந்த சின்னான் மகன், பள்ளிக்கொடத்துக்கு எடம் வேணுமுன்னா பொறவாலே எம்புட்டு இடம் கெடக்குது, அதே எடுக்காமே எங்க வூட்டு வாசலுலே வந்து வேலி வெக்கிறீயளே இது ஞாயமா சாமி. எங்க புள்ளேங்களும் படிக்கப் போவுதுங்கீறீங்க. கேக்கவே சந்தோசமா இருக்குது. ஆனா, மொளச்சி மூனு இலே வுடுறதுக்குள்ளே அதுகள ஒங்க ஆடுமாடு மேய்க்கத்தானே கூப்புடுறீங்கோ. மீறி பள்ளிக்கொடம் போனா பறச்சியார் படிச்சியென்னடா பண்ணப்போறீயோ ஊரு வேலயே யாரு பாக்குறதுன்னு விறட்டியடிக்கிறீயோ. எங்க புள்ளே குட்டியளை எங்கசாமி படிக்க வுடுறீயோ? வேலி வையுங்கோ வாண்டாமுங்கலே தெருவே உட்டு தள்ளி வைங்கோ என்றார்.

எலே, வேலி வெச்சது சரியா தப்பான்னு கேக்கலே. இடத்தே காலி பண்ண முடியுமா முடியாதா? நீங்களே காலி செஞ்சா வேற இடம் தர்றோம். இல்லேன்னா ஒங்கப் பிரியம். ஆனாவொன்னு ரோட்டவுட்டு கீழே இறங்கப் படாது. எல்லாம் பட்டா நிலம் ஞாபகத்துல வெச்சிக் கோங்கோ. இது ஊர் முடிவு என்றார் மணியக்காரர். சின்னான் மகன், எங்க வாசப்படியில வந்து வேலி வெச்சா லும் சரி, இங்கினே இருந்து போவமாட்டோம். இந்த கிராமத்துலே உங்களுக்கு எம்புட்டு பாத்தியதை இருக்கோ அதேபோல எங்களுக்கும் இருக்கு என்றார். மேல்சாதியார் கோபம் எல்லையைக் கடந்தது.

அன்றிரவு சேரியில் தெருக்கூட்டம் நடந்தது. ஒரு அடிகூட வேலி வைப்பதை அனுமதிக்கக் கூடாது, மேல்சாதியாரின் ஆசை வார்த்தைக்கு அடிமையாயிடக்கூடாது என்று தீர்மானமானது. மறுநாள் இளைஞர்கள் குழு ஒன்று சத்திரம் (ஒரத்த நாடு) சென்றது. குழுவிலிருந்த இளைஞர் ஒருவருக்கு (வெளியூரில் வேலை பார்ப்பவர்) ஏற்கனவே அறிமுகமாயிருந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரைப் பார்த்து உதவி கேட்டனர். அவர் போலிசாரிடம் முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

மறுநாள் காலை, வேலி வைக்க வந்தவர்களை தடுப்பதில் பெண்களே முன்னணியில் நின்றனர். அவர்களோடு அந்த இளைஞரும் இருந்தார். உங்களாலே ஆனதே பாருங்கடா என்றனர் மேல்சாதியினர். எங்கள உசுரோடே வெச்சி புதைச்சி அதுமேலே வேலியே வைச்சாலும் இந்த இடத்த விடமுடியாது என்றவாறு அந்த இளைஞர் குழிக்குள் விழுந்து படுத்து மறித்தார். ஆவேசத்தோடு மற்றவர்களும் இறங்கினர். இதை எதிர்பாராத மேல்சாதியார், எலே என்னடா தாட்சண பாக்குறீங்க, அவங்க மேலயே மண்ணே இழுத்து வுடுங்கடா என்று மிரட்டியபோதும் எழவே இல்லை. 11 மணியளவில் போலிசும் அதிகாரிகளும் வந்து உத்தரவாதம் தந்த பிறகே எழுந்தனர்.

வேலி கட்டப்படுவதன் உள்நோக்கையும் சாதி வெறியையும் அறிந்த உயரதிகாரிகள், வேலி கட்டக்கூடாது என்றும் வைத்த வேலிகளை பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தனர். வைத்த வேலியை பிடுங்க முடியாது என்று வீரவசனம் பேசியவர்கள், அதன்பிறகு அந்தப்பக்கம் வரவேயில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com