Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2008

சூறைக்காற்றில் சிக்கிய ஓர் இலை
மலையாளம் : லலிதாம்பிகா அந்தர்ஜனம்
ஆங்கிலம் வழித் தமிழில் : எஸ். நாகராஜன்.
.

அந்தக் கூட்டத்திலேயே அவள்தான் மிகவும் இளைத்துப் போன பெண்ணாயிருந்தாள். அவள்தான் மிகுந்த படபடப்புள்ளவளாயுமிருந்தாள். எல்லையின் இந்தப் புறம் சிறைப்பிடிக்கப்பட்ட ஐம்பது பெண்களை, அந்தப் பக்கத்திலிருந்து பிடிக்கப்பட்ட அதே எண்ணிக்கையுள்ள பெண்களுக்குப் பதிலாக ஒப்படைப்பது என்று ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவள் இந்தக் கூட்டத்தில் ஒருத்தி, மேற்கு பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள். பரிவர்த்தனை எல்லையில் செய்யப்பட்டது.

sசரியான உருவச் சீரில்லாமல் கருப்பு உடையணிந்து, அந்தப் பெண்கள் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம், கல்லறையிலிருந்து விடுதலை பெற்று எழுந்த பிசாசுகள் போல ஊர்ந்து சென்றார்கள். கடைசியாகச் சென்ற பெண் அவள்தான். அவளின் பெயரையோ, ஜாதியையோ சொல்ல மறுத்துவிட்டாள். அகதி முகாமிற்குப் போவதற்குக் கூடத் தயங்கியவளாய் காணப்பட்டாள். அவள் சற்றுப்பின்னின்று கேட்டாள். "நீங்கள் எங்களை ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்கு கொண்டு போகிறீர்களா, என்ன?"

ராணுவம் மற்றும் போலிஸ் துணையுடன் வண்டிகள் தயாராய் இருந்தன. சேவக் சங்கத்தின் உறுப்பினர்கள் பெண்களிடம் ஆறுதலையும் ஊக்கத்தையும் தருகிற பெருந்தன்மையான வார்த்தைகளைப் பேசினார்கள். அப்படி இருந்தும் அவள் போவதற்கு எதிர்த்தாள். அவளைக் கட்டாயப்படுத்தியே வண்டிக்குள் ஏற்ற வேண்டியதாயிற்று.

அகதிகள் முகாமில் பயங்கர இட நெருக்கடி இருந்தாலும், இந்தப் பெண்களுக்கு, அவர்கள் நினைத்ததைவிட, அதிகமான வசதிகள் செய்துதரப்பட்டன. செத்துப் பிழைத்து வந்த குழந்தைகளாக அவர்கள் கருதப்பட்டார்கள். அவர்களில் சிலருக்கு அந்தப் பகுதியில் உறவினர்கள் இருந்தார்கள். மற்றவர்கள் அவர்களின் குடும்பங்களைத் தேடிக்கொண்டு இருந்தார்கள். அவள் மட்டும் யாருடனும் பேசுவதில்லை. ஓர் மூலையில் தலை கவிழ்ந்தவாறு உட்கார்ந்திருப்பாள். பர்தாவை அகற்றுவதற்கு அவள் மறுத்துவிட்டாள். ஒரு சேவகி அவளுக்கு உணவு கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது அவள், "இந்த அழுகிப்போன ரொட்டித் துண்டுகளைத் தூக்கி எறி. எனக்கு ஒரு துப்பாக்கிக்கொடு அல்லது ஒரு கத்தியைக் கொடு, இல்லையென்றால், கொஞ்சம் விஷமாவது கொடு. அவை தாம் எனக்கு வேண்டும்." என்று கத்தினாள்.

அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டுமென்று நினைத்தார்கள். அவர்கள் அவ்விதம் நினைத்ததிலும், ஆச்சரியமில்லை. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்கள் அடைந்த காயங்களுக்குப் பின்பு இந்தப் பெண்கள் இன்னும் உயிரோடிருப்பதை வியப்பிற்குரிய விஷயம். அவர்களில் பலர் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்கள். சிலர், அவர்களின் பயங்கரமான கதைகளை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். வயதான பெண்ணொருத்தி இருந்தாள். அவளுக்கு ஒன்பது குழந்தைகளும், ஐம்பது பேரக்குழந்தைகளும் இருந்தார்கள். அவளுடைய கிராமம் முழுமைக்குமே அவள் ஒரு தாயைப்போல இருந்தாள்.

இந்து அகதிகள், முஸ்லீம் அகதிகள் என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் அவள் உணவும், இருப்பிடமும் அளித்தாள். அபாயம் காத்திருக்கிறது என்று எச்சரிக்கப்பட்ட பின்னும், அவள் குடும்பம் அங்கிருந்து நகர மறுத்துவிட்டது. அவள் பிறந்து வளர்ந்த மண்ணிலேயே விழுந்து சாகவேண்டும் என்ற பிடிவாதமான ஆசை அவளுக்கு. எல்லாக் குழந்தைகளும் இப்பொழுது இறந்துவிட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். கிழவி அவள் நேசித்த அவளுடைய வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டு, அது எரிந்து சாம்பலாவதைக் கண்டாள். இருப்பினும், அவள் இன்னும் உயிரோடிருந்தாள். உண்ணும்போதும், உறங்கும்போதும் கூட அவள் எப்பொழுதும் அழுது கொண்டிருந்தாள். ஆனால் வாழ்க்கையில் ஒரு பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசையினால் அவள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

ஒரு இளம் பெண், அவள் காலை உணவுக்கென்று தரப்பட்டிருந்த, காய்ந்து போன சப்பாத்தியை வேதனையுடன் மென்று தின்று கொண்டிருந்தாள். அவள் கன்னங்களும், மார்பும் வீங்கியிருந்தன. அவள் துணிகள் கிழிந்து கந்தல் கந்தலாய்ப் போயிருந்தன. சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார வியாபாரியின் மனைவி அவள். பிரச்சினை வரப்போகிறது என்று கேள்விப்பட்டதுமே, அவள் தனது மூன்று குழந்தைகளுடன் கிளம்பி விட்டாள். ஆனால் ஆபத்து அவள் காரைவிட வேகமாய் விரைந்து வந்து, அவளைப் பற்றிக்கொண்டது. அவள் கணவன் கொல்லப்பட்டான். சிதைக்கப்sபட்ட அவன் உடலுக்கு அருகிலேயே, அவளைக் கிடத்திக் கற்பழித்தார்கள். அவர்கள் கைகளில், அவள் குழந்தைகளின் ரத்தம் படிந்திருந்தது. ஒரு ரயில்வே தண்டவாளத்தில் அவளைக் கண்டெடுத்தபோது அவளிடம் கொஞ்சம் உயிரே இருந்தது. ஆனால் அவள் இன்னும் சாகவில்லை.

ஒரு இளம் சீக்கியப்பெண் ஒரு இந்துக் குழந்தையைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். ஒரு பச்சைக் குழந்தை அழுதழுது உறங்கிப் போனது. காணாமற்போன பெற்றோரை நினைத்து சின்னஞ்சிறு குழந்தைகள் கதறி அழுதன. கொலைகாரர்களிடமிருந்த எப்படியும் தப்பித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பெண்கள் நெடுந்தூரம் ஓடியிருந்தார்கள். அதனால் அவர்கள் பாதங்கள் காயம்பட்டு ரணமாயிருந்தன. சிலரின் உடல்கள் அங்கஹீனப்படுத்தப்பட்டிருந்தன. காய்ச்சலும், தொற்றுநோய்களும் எங்கும் பரவியிருந்தன. ஆனாலும், அந்த முகாமில் இருந்தவர்கள் இந்த குறைந்தபட்ச துரதிருஷ்டங்களை எற்றுக்கொள்வதற்கு கற்றுக்கொண்டிருந்தார்கள்.

அந்த இளம் பெண் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் அழவில்லை. ஆனால் அவள் கண்களில் கண்ணீரைவிட நம்பிக்கையின்மையே நிறைந்திருந்தது. சிலசமயம் அவள் இந்த உலகத்தையே வெறுப்பது போலத் தோன்றியது. நான்கு நாட்களாக அவள் சாப்பிடவேயில்லை. அவள் வயிறு இன்னும் வீங்கிப் போயிருந்தது. அவள் கைமுஷ்டிகளை இறுக மூடிக்கொண்டு அவள் அதை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

முகாமில் இருந்த அத்தனைபேரின் கவனத்தையும் அவள் ஈர்த்திருந்தாள். அவள் சின்னஞ்சிறு உருவத்தில் மென்மையாகவும் அழகாகவும், பிறைச்சந்திரன் போல இருந்தாள். அவள் ஒரு பிரடிக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று தெரிந்தது. சந்தோஷத்தைத் தவிர வேறொன்றையும் அறியாத, போற்றுதலுக்குரிய, மகளாகவும், மனைவியாகவும் இருந்தவள் போலவும் தோன்றினாள். அவளை இன்னும் அதிக காலத்திற்கு பட்டினி இருக்கவிடக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. அவள் இன்னும் சாப்பிட மறுத்ததால், அவளைப் பார்ப்பதற்கு ஒரு டாக்டர் வரவழைக்கப்பட்டார்.

அவளைச் சமாதானப்படுத்தி அவளைக் கொஞ்சம் பாலையாவது அருந்தச் செய்துவிடவேண்டும் என்று டாக்டர் வேண்டிய அளவு முயற்சி செய்தார். "சகோதரி, தயவு செய்து இதைக் குடி, உனக்காக இல்லாவிட்டாலும், எங்களுக்காகவேனும் இதைக் குடி, நம் அன்பிற்குரிய இந்த நாடு அதில் உள்ள ஒவ்வொரு உயிரையும் மதிக்கிறது".

"உண்மையிலேயே ஒவ்வொரு உயிரையுமா?" அவள் வெடித்தாள். "இந்த இழிவான நாடு ஏற்கனவே ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொடுத்துவிட்டது. நானும் இழிவானவள்தான். அழிவு விதைகளை விதைப்பதற்காக மட்டும், நான் ஏன் தொடர்ந்து உயிர் வாழவேண்டும்?" அவள் தேம்பினாள். தொடர்ந்து பேசினாள்". "உங்களை ஒன்று கேட்க வேண்டும், டாக்டர் நாங்கள் அழிக்க விரும்புவதை அழித்துவிடுவீர்களா? அதே மாதிரி காப்பாற்ற நினைப்பதை காப்பாற்றி விடுவீர்களா? மிருக இச்சையின், அறியாமையின் விளைவாய்த் தோன்றியதை அழிப்பதன் மூலம் ஒரு உயிரைக்காத்து விட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" அவள் புருவங்களை உயர்த்தி, அவரை கவலையுடன் பார்த்தாள்.

அவர் முகம் வெளிறிப்போனது. அவள் கேள்வி அவரைச் சங்கடத்துக்குள்ளாக்கியது. அவர் அகிம்சா மூர்த்தி மகாத்மா காந்தியின் சீடர். அவர் ஒரு பாதுகாப்பான, அதிகம் சம்பாதிக்கக்கூடிய உத்தியோகத்தை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறார். அவள் என்ன சொல்கிறாள் என்பதை அவர் தெரிந்து கொண்டார். அவரிடம் ஒரு தீர்வு இருந்தது. அதற்கான கருவிகளையும் அவர் வைத்திருந்தார். ஆனால் அவள் கேட்பதைச் செய்து கொடுப்பது சரியான செயலாக இருக்குமா? ஒரு பெரிய பயம் அவரைத் தொற்றிக்கொண்டது. ஒரு முட்டையைப் போட்டு உடைத்தாலும், ஒருவரின் கழுத்தை நெரித்தாலும், அது ஒரு உயிரைப் போக்கத்தான் போகிறது என்றும் கொல்வதற்கு எத்தனையோ வேவ்வேறான வழிகள் இருக்கின்றன என்றும் அவர் அறிவார்.

அவர், ஒரு பக்குவமடைந்த தத்துவ ஞானியின் உணர்வோடு, அவளிடம் கூறினான், "சகோதரி, விதியின் மாற்றமுடியாத ஆணைகளுக்கு எதிராக நாம் போராட முடியாது. டாக்டர் என்ற முறையில் எனக்குக் காப்பதற்குத்தான் உரிமை இருக்கிறது. அழிப்பதற்காக அல்ல. இந்த முகாமில் இருக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களைப் பார். இதைப்போன்ற பல முகாம்கள் உள்ளன. ஒரு பயங்கரமான சூறைக்காற்று எல்லா திசைகளிலிருந்தும் நமது துரதிருஷ்டமான தாய்நாடு முழுவதிலும் வீசிக்கொண்டிருக்கிறது. ஆனால் பாரத தேசம் நீடித்து நிலைப்பது திண்ணம், நீ அதன் புதல்வி இல்லையா? இப்பொழுது வா, வந்து இந்தப் பாலைக்குடி."

இந்த நீண்ட போதனைக்கு அவள் பதிலேதும் பேசவில்லை. ஆனால் அவள் பாலைக்குடித்தாள். டாக்டரின் வார்த்தைகள் அவளை நெகிழ வைத்துவிட்டன. அவள் ஏமாற்றத்தின் எல்லைக்கே சென்று விட்டதால் இப்பொழுத வாழ விரும்பினாள். அதன் பின்பு அவள் ஒழுங்காகச் சாப்பிடத் தொடங்கினாள்.

முகாம் பதிவேட்டில் அவள் பெயர் "ஜோதி" என்று எழுதப்பட்டது. அவள் கிராமத்தைச் சேர்ந்த சீக்கியப் பெண்ணொருத்தி, அவளின் முழுப்பெயர் ஜோதிர்மயி தேவ்பால் என்று சொன்னாள். ஜோதி வளர்ந்து வரும் காலத்தில் பர்தா அணிவதற்கு எவ்விதம் மறுத்தாள் என்பதையும், ஒரு ஜமீன்தாரிடமிருந்து வந்த திருமண அழைப்பை அவள் எவ்விதம் நிராகரித்தாள் என்பதையும் அந்தப் பெண் விவரித்தாள். அவள் நடந்து கொண்டதைப் பார்த்து, கிராமத்துப் பெண்கள் அதிர்ச்சியடைந்தனராம். அவள் அகம்பாவத்திற்காகத்தான் அவள் இப்பொழுது தண்டிக்கப்படுகிறாள் என்று அந்த சீக்கியப் பெண் கூறினாள்.

அகதி முகாமில், கூட்டம் படிப்படியாகக் கூடிக்கொண்டே வந்தது. வெவ்வேறு விதமாய் உடையணிபவர்களும், வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களும் அங்கிருந்தார்கள். பச்சைக் குழந்தையிலிருந்து தொண்டு கிழம் வரை ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, அவர்களைப் பற்றிப் பேசுவதற்கு நிறையக் கதைகள் கிடைத்தன. எங்கு பார்த்தாலும், கூச்சலும் குழப்பமுச்ச்மாய் இருந்தது. இப்போதெல்லாம், யாரும் ஜோதி மீது குறிப்பாக கவனம் செலுத்துவதில்லை. பெரும் மக்கள் வெள்ளத்தில் ஒரு அலைபோல அவள் ஒன்று கலந்துவிட்டாள். எண்ணிறந்த பிறப்புகளையும், இறப்புகளையும், வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்ட பல சம்பவங்களையும் அவள் நேரில் கண்டாள்.

ஒவ்வொரு மாலை நேரத்திலும் மேற்கு வானத்தில் சூரியன் மறைந்தவுடன் முகாமில் மரத்தடியில் மக்கள் கூடுவார்கள். அவர்களில் பலர் கிராமத்து மனிதர்கள். அவர்களால் தேசியப் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாது. நிலத்தை வளம்கொழிக்க செய்துகொண்டு இருக்கும் ஐந்து பெரிய நதிகளும், இனிய புல்வெளிகளும் அமைந்த நாட்டைச் சேர்ந்த இந்த நேசிப்பிற்குரிய குழந்தைகள் அங்கே மேய்ந்துக்கொண்டிருக்கும் எருமைகளைப்பற்றியும் காற்றில் அசைந்து சிரித்துக்கொண்டிருக்கும் கோதுமை பயிர்கள் நிறைந்த வயல்வெளிகளைப்பற்றியும் கிராமங்களுக்கு ஊடே மெதுவாக நகர்ச்ந்து கொண்டிருக்கும் ஒட்டகக் கூட்டங்களைப்பற்றியும் இன்னும் கனவு கண்டுகொண்டிருந்தார்கள்.

தோளில் கலப்பையை சுமந்துகொண்டு தங்களுக்குள் பாடல்களை முணுமுணுத்துக்கொண்டு தலைமுறை தலைமுறையாய் அவர்களுக்கு சொந்தமாய் இருக்கிற அவர்களுக்குப் பின் அவர்களது குழந்தைகள் அடையப் போகிற வீடுகளை நோக்கிச் சென்ற பல மாலை நேரங்களை அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். அவர்கள் அந்த வீடுகளை விட்டு தெரு நாய்களைப் போல விரட்டி அடிக்கப்பட்டு காட்டுக்கோழிகளைப் போல வேட்டையாடப்பட்டார்கள். ஏன் யாருடைய தவறு அது?

அகதிகள் நாட்டின் பிரபலத்தலைவர்களை அடிக்கடி இகழ்ந்தார்கள். பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு அவர்களை பழிவாங்கத் துடித்தார்கள். துறவி என்று சொல்லப்பட்ட அந்த "பல்லில்லாத கிழவனைத்" தூற்றினார்கள். அந்த ஏழை மக்கள் அதிகமான கஷ்டங்களை அனுபவித்தார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்கள் மீது கஷ்டங்களை சுமத்தவில்லை. எல்லைக்கப்பால் முகாம்களில் இருக்கும் மக்களும் இதே மாதிரிதான் உணர்கிறார்களா?

ஜோதி ஒவ்வொரு சொல்லையும் கேட்டுக்கொண்டாள். ஆனால் அவள் ரகசியத்தை தனக்குள்ளே வைத்துக்கொண்டாள். வீங்கிப்போன தனது வயிறை சேலை மடிப்புகளுக்குள் மறைப்பதற்கு முயற்சி செய்தாள். தற்போது தான் சமூகத்தினால் பாதுகாக்கப்படும் ஒரு திருமணமாகாத கற்பிணி பெண் எனும் ரகசியத்தை குறைந்த பட்ச மனிதர்கள் தெரிந்து கொள்வதையே அவள் விரும்பினாள். அவள் சுமை நாளுக்கு நாள் கணத்துக்கொண்டே போனது. கண்ணுக்குப் புலப்படாத அதிர்வுகள் சின்னச்சின்ன அலைகள் போல அவளுள் சுருண்டு சுருண்டு பின் மூச்சுத்திணற வைக்கும் அசைவு வெள்ளமாய் உருவெடுத்து அவள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஆதிக்கம் செலுத்தின.

அவை அவள் மீது செலுத்திய வெற்றிகரமான அதிகாரத்தை பிரகடனம் செய்தன. மனித ஆன்மாவின் - பெண்மையையும், மனிதகுலத்தையும், நற்செயல்கள் மீதான நம்பிக்கையையும், வெறுக்கக்கூடிய மக்களின் இகழத்தக்கத் தன்மையின் மொத்த உருவங்கள்தான் அவை. அந்த உருவம் இப்பொழுது அவளுக்குள்ளே வளர்ந்துக்கொண்டு வந்தது. அவளோ அல்லது வேறு யாரோ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவளுடைய அவமானம் உருப்பெற்று ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். அதனிடமிருந்து தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை.

எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வயிற்றைத் தரையில் அழுத்தியபடி அவள் குப்புறப்படுத்துக் கிடந்தாள். அவள் செய்யக்கூடியது என்று எதுவும் இல்லை.

ஒருநாள் ஓர் அசாதாரணமான நிகழ்ச்சி நடந்தது. புதிதாய் பிறந்த குழந்தையின் உடல் ஒன்று முகாம் கழிப்பறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு அழகான கொழுகொழுவென்று இருந்த குழந்தை. உறைந்து போன ரத்தம்போல வளவளவென்று இருந்தது. எல்லைப்புற மக்களுடையது மாதிரி அதனுடைய தோல் வெள்ளைவெளேரென்று இருந்தது. அதன் தலைமுடி கருகருவென்று இருந்தது. இன்னமும் வெதுவெதுப்பாய் இருந்த அதன் உடலை துப்புறவுப் பணியாளர்கள் தூக்கிச் சென்றனர். பெண்களில் யாரும் அழவில்லை. யாரும் குற்றம் சாட்டப்படவில்லை.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஜோதி உதட்டை பல்லால் கடித்துக் கொண்டாள். இந்தப் பெண்களை கோழைகள் என்றும், அடிமைகள் என்றும், அடிக்கடி அழைத்தாலும் அவர்கள் குறிப்பிடத்தகுந்த விதத்தில் துணிச்சலும் நடைமுறை அனுபவமும் உள்ளவர்களாய் இருப்பதை அவள் உணர்ந்தாள். அவர்கள் ஒரு முறை மனதளவில் முடிவெடுத்துவிட்டாள் தயங்குவதில்லை. தடுமாறுவதில்லை. அவர்கள் யாரிடமும் ஆலோசிப்பதில்லை. எத்தகைய தடைகளை எதிர்கொண்டாலும் அவற்றை அவர்கள் வெற்றிகொண்டு தங்கள் இலக்கை நோக்கி முன்னேரினார்கள்.

அவள் வயிற்றினுள் ஏற்படும் அதிர்வுகளைவிட ஜோதியின் இதயம் வேகமாக துடித்தது. ஒரு சிறு விளைவையும் ஏற்படுத்தாத வகையில் மிகவும் எளிதாக செய்த முடிக்கக்கூடிய காரியம்தான் அது. ஒரு புல்லைப் பிடிங்கி எறியும் நேரத்தைவிட குறைவாகவே அநேகமாய் அரைவினாடி அல்லது அதிகபட்சம் ஒருநிமிட நேரம்தான் அதற்கு ஆகும். இரவின் இருளிள் கரையை தொடைத்து எறிந்துவிட்டு நம்பிக்கை நிறைந்த புதியதோர் உலகிற்குள் அவள் நுழையலாம்.

அவள் நாளெல்லாம் முகாமிற்குள் வெளியே அலைந்து திரிந்து விட்டு, இரவில் ஒரு தனிமையான மூலைக்குப் போய் தன்னைக் முடக்கிக் கொள்வாள். ஒரு நாள் அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவள் முதுகு பயங்கரமாய் வலிக்க ஆரம்பித்தது. அவள் தலை சுழலத் தொடங்கியது. அவள் பயந்து போனாள். என்னவாக இருக்கும்? நடக்க இருக்கும் பெரிய நிகழ்வுக்கு இதுதான் முன்னோடியா? ஐயோ பிறகு...

ஆனால், எதுவும் நிகழவில்லை, யாரும் எதையும் சந்தேகிக்கவில்லை. முகாமில் மயங்கிவிழுவது சகஜம். வாரங்கள் கடந்தன.

ஒரு முக்கிய, எல்லோருக்கும் நன்கு அறிமுகமான விருந்தாளி ஒருவர் முகாமிற்கு வந்தார். மகாத்மாவிடமிருந்து ஒரு செய்தியுடன் அவர் அனுப்பப்பட்டிருந்தார். மரத்தடியில் கூடியிருந்த மக்களிடம் அவர் பேசினார். இளைஞர்கள், கற்பழிக்கப்பட்டப் பெண்களை, அவர்களது தாய்களாகவும், சகோதரிகளாகவும், ஏன் மனைவிகளாகவும் கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் அவர்களிடம் கூறினார். ஜோதி அவர் சொல்வதை உன்னிப்பாய்க் கவனித்தாள். "அவர்கள் பெறப்போகும் குழந்தைகள் பாரதத்தின் குடிமக்கள் சுதந்திர இந்தியாவின் புதிய புதல்வர்கள்". என்று அவர் தொடர்ந்து சொன்னார்.

ஜோதியின் முகம் கொழுந்துவிட்டெறியும் தீப்பிழம்பாய் மாறியது. என்ன முரண் இது. இத்தகைய குழந்தைகள் , பாரதத்தின் குடிமக்களாக மட்டும் எப்படி இருக்க முடியும்? அவர்கள் வளர்ந்த பின், அவர்களின் மென்மையான மனங்கள் உண்மையை உள்வாங்கத் தொடங்கும். அவர்கள் நாடி நரம்புகளில் ஓடும் ரத்தம் வெறுப்பினால் ஏற்பட்டது. காதலினால் உண்டானதல்ல என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள். பிறகு பழிவாங்கும் வெறி அவர்களை ஆட்கொண்டுவிடாதா? பழிதீர்த்துக் கொள்வதற்காக அவர்கள் நாட்டின் எல்லைகளை சிதறடித்துவிடமாட்டார்களா?

எதிர்காலத்தைப் பற்றிய பயங்கரக் கற்பனைகளிலிருந்து விடுபட்டு எழுந்தபோது, அவள் மட்டும் தனியாக இருந்தாள். விருந்தாளி போய்விட்டார். எல்லோரும் அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றுவிட்டனர். இரவு கருமையும், குளிருமாக மாறிவிட்டிருந்தது. முகாமுக்குத் திரும்பிச் செல்வதற்கு எழுந்தாள். ஆனால் அவளால் நகரக்கூட முடியவில்லை. அவள் உடல் நடுங்கியது. அவள் நிராதரவாய் உணர்ந்தாள். ஓர் கடுமையான வலி அவள் உடல்முழுவதும் மின்னலின் வேகத்தோடு பரவியது. இதுதான் படைப்பின் வலியா? அவள் மரத்தின் கீழ்க்கிளை ஒன்றைப் பற்றிக் கொண்டு வேதனையைத்தாங்கிக் கொள்ள முயன்றாள்.

எவ்வளவு நேரம் அவள் அப்படியே நின்றிருந்தாள் என்று அவருக்குத் தெரியவில்லை. தெளிவற்ற நினைவுகள் அவள் மனதில் எழுந்தன. தூரத்துப் பஞ்சாபின் செல்வம் மிக்க கிராமம் ஒன்றில் இருந்த ஒரு செல்வந்தரின் வீட்டைப்பற்றி அவள் நினைத்தாள். டாக்டர்களும், நர்சுகளும் சூழ, ஒரு பெண் கடும்வேதனையில் கிடந்தாள். அவள் உறவினர்களும், சிநேகிதிகளும் அவளைப் பற்றிய கவலையில் இருந்தார்கள். அவளுடைய கணவன் கடிகாரத்தின் முட்கள் நகர்வதைப் பார்த்துக்கொண்டு நின்றான். அந்தப் பெண்ணுக்கு நடந்த நீண்ட சிகிச்சையின் முடிவு பற்றியும், அவள் குழந்தை பெறவேண்டும் என்பதற்காக நடந்த எண்ணிறந்த சடங்குகளின் முடிவு பற்றியும் தெரிந்து கொள்வதற்கு எல்லோரும் ஆவலுடன் பொறுமையிழந்து இருந்தனர்.

அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளுடைய முழுக்குடம்பமும், முழுக்கிராமமும் அந்த மகிழ்ச்சியான சின்னஞ்சிறு குழந்தையைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடின. யாரும் அவளிடம் ஒரு கடுஞ்சொல்கூட சொன்னதில்லை. அவள் வளர்ந்த பெரிவளான உடன், அவள் பெற்றோர் அவளைக் கல்லூரிக்கு அனுப்புவதற்குத் தயங்கினர். ஆனால் அவள் அவர்களை வசியம் செய்து தன்னைக் கல்லூரிக்கு அனுப்பும்படிச் செய்தாள். அவள் பர்தாவைப் புறக்கணித்தபோது, அவள் குடும்பத்தினர் கவலைப்பட்டார்கள். ஆனால் அவர்கள் அவள் செய்கையை எதிர்க்கவில்லை.

அவள் கல்யாணப் பேச்சை உதறித்தள்ளினாள். ஏனெனில் அவள் சுதந்திரமாய் இருக்க விரும்பினாள். சுதந்திரத்தைத் தனது பிரத்யேக உரிமையாக அவள் என்றும் நினைத்ததில்லை. ஆனால் அவள், அவளுடைய சமூகத்தையும், நாட்டையும் பிணித்திருந்த அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்துவிட்டு, தாழ்த்தப்பட்ட மனிதச் சமூகத்தை விடுவிக்கவேண்டும் என்று ஏங்கினாள். தங்களுக்காக அவர்கள் செயல்படுவதற்கு தேவையான மனத்திண்மையை அவர்களுக்கு அளிப்பதற்கு அவள் விரும்பினாள். எல்லா மக்களையும் எல்லா பொருட்களையும், அன்பு வலையின் கீழ் ஒன்று படுத்தி இணைக்கிற ஆசை அவள் மனதை ஆக்கிரமித்திருந்தது.

அழகியாகவும், பணக்காரியாகவும், எல்லோராலும் கொண்டாடப்பட்டவளுமாகிய அவள், தேசீய இயக்கத்தில் சேர்ந்து சிறை சென்றாள். சரியான உணவு, உறக்கமின்றி அயராது பணியாற்றினாள். பிரச்சனை எதிர்பார்க்கப்பட்டபோது, அவளை எச்சரிக்கை செய்தார்கள். ஆனால் அவள் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்குமான பணியை தொடர்ந்து செய்தாள். அவள் எப்பொழுதும் உரத்துக்கூறுவது, "நான் என் சகோதரர்களை நம்புகிறேன்" என்பதுதான். ஆனால் முடிவு...

"அம்மா" வலி மீண்டும் மீண்டும் உடலைத்தாக்க, அவள் நிலத்தில் சரிந்தாள். வியர்வையில் அவள் உடல் முழுவதும் நனைந்தது. வாய் குமட்டிக்கொண்டு வந்து மூச்சுத்திணறினாள். களைத்துப்போய், அவள் மீண்டும், எழுந்து மரத்தின் மீது சாய்ந்து கொண்டாள்.

அச்சுறுத்தும் நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவள் மனத்திற்குள் மோதின.

பர்தா அணிந்த பதினைந்து பெண்கள் அவள் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டிற்குள் ஒளிந்து கொண்டனர். வீட்டின் சொந்தக்காரர் காசி, அவள் தந்தையின் நெருங்கிய நண்பர். அவர் மகள் ஆயிஷா அவளின் பிரியத்திற்குரிய நெடுநாளைய தோழி, ஆயிஷாவின் அண்ணன் அலி, "இந்துக்களின் ரத்தத்தால் இந்த மண்ணை நனைக்காவிட்டால், அதில் பொன் விளையாது" என்று அடிக்கடி வலியுறுத்துவான். இருப்பினும், அவள் தன்தோழிகளைத் தன் வீட்டில் ஒளித்து வைத்தாள்.

அவள் அண்ணன் எதையும் சந்தேகித்து விடக்கூடாது என்பதற்காக ஆயிஷா மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டாள். அவள் தந்தையின் வண்டி வழக்கமாய் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு நகரத்துக்குச் செல்லும். எல்லைக்கு அப்பால் ஒரு அகதி முகாம் இருந்தது. காசிம் சாகிபின் வண்டி ஐம்பது ஆண்டுகளாய் அந்த வழியாகத்தான் சென்று கொண்டிருந்தது. யாரும் அதை வழியில் மறிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருந்தார்கள்.

ஜோதி, அந்த பயங்கரமான பயணத்தைப் பற்றி நினைத்தாள். உலோகக் கூண்டில், மூச்சுத்திணறும் இருளில் இருந்தபடி அவர்களால் கோஷங்களின் கூச்சலையும், சிக்குண்டவர்களின் அழுகுரலையும் கேட்கமுடிந்தது. அவர்கள் உடல் கருகும் வாசனையை முகர்ந்தார்கள். கொழுந்து விட்டு எரியும் தீப்பிழம்புகளின் உஷ்ணத்தை உணர்ந்தார்கள். காசிம் சாகீப், "பாகிஸ்தான் ஜிந்தாபாத் அல்லா ஹோ அக்பர்" என்று கூச்சலிட்டார், அந்தக் கூச்சல் அவர்களைக் காக்கும் என்று அவர் நம்புவதைப் போல அபாயம் கடந்து சென்றுவிட்டது என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள்.

திடீரென்று குழப்பம் ஏற்பட்டது. வண்டி நின்றுவிட்டது. சாகிபின் உறுதி மொழிகளும், எதிர்ப்புக்குரல்களும் புறக்கணிகப்பட்டன. வைக்கோல் கட்டுகளி கீழே இழுத்துத்தள்ளப்பட்டன. கரகரத்தத் தொண்டைகளில் இருந்த சிரிப்புச் சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து வேதனை மிகுந்த அழுகுரல்கள் கேட்டன. மென்மையான, கள்ளங்கபடற்ற பதினைந்து இளம் பெண்கள் ஒருவர்பின் ஒருவராகத் தரையில் கிடத்தப்பட்டார்கள்.

ஐயோ, வலி அவளை மூச்சுத்திணறச் செய்கிற மாதிரி அவள் உணர்ந்தாள். இது பிறப்பின் வலியா? அல்லது இறப்பின் வலியா? அவள் தாய் அவளருகே வந்து, "நான் இநத் வலியைத் தாங்கிக் கொண்டேன். என் தாயும் அவளுக்கு முன் அவள் தாயும் இதைப் பொறுத்துக் sகொண்டார்கள். எல்லா தாய்மார்களும் இந்த வலியைப் பொறுதுதுத்தான் தீரவேண்டும்" என்று சொல்கிறமாதிரி அவளுக்குத் தோன்றியது.

அவள் சுயநினைவின்றி கிடந்த சிறையை நினைத்துப் பார்த்தாள், எண்ணற்ற ஆண்கள் அந்த அறையினுள் நுழைந்தனர். பேய்த்தனமான மதவெறியும், வெறுப்பும் கலந்து பித்துப்பிடித்து சிவப்பேறிய அவர்களின் முகங்களை அவள் நினைத்துப் பார்த்தாள். அவற்றில் எது அவள் குழந்தையின் முகம் மாதிரி இருக்கும்?.

அவள் நடுங்கினாள். அவள் உடல் கொதித்தது. நாக்கு வறண்டுபோய் தாகமாயிருந்தது. அவள் விட்ட ஒவ்வொரு மூச்சிலும், வலியின் பதைபதைப்பு இருந்தது.

ஆ.... கடைசியில் எல்லாம் முடிந்தது. உண்மையிலேயே முடிந்துவிட்டதா? முகாமில் உள்ள ஷெட்டுகளில் விளக்குகள் எரிந்தன. நோயாளிகள் முனகினர். குழந்தைகள் வீறிட்டு அழுதன. யாருக்கும் அவளுக்கு என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை.

வெற்றிபெற்ற கதாநாயகன் போர்க்களத்தில் களைத்து விழுந்து கிடந்ததைப்போல, அவள் புல்வெளியில் படுத்துக் கிடந்தாள். நட்சத்திரங்கள் மங்கத் தொடங்கின. மரத்தில் இருந்த பறவைக் குஞ்சு தன் இறக்கையைப் 'படபட'வென அடித்துக்கொண்டு, கீச்சிட்டது. அவள் என்ன செய்வது?

அவள் கண்களை இறுக மூடிக்கொண்டு, இருளில் துழாவி, அதைக் கண்டுபிடித்து, அதை நசுக்கிச் சாகடித்துவிடமுடியும். பிறகு அவள் இத்தனை நாள் அனுபவித்த வலியையும், அவமானத்தையும் அதன் உடலோடு சேர்த்து மரங்களுக்குடியில் குழி தோண்டிப் புதைத்துவிடலாம். ஒரு துப்புரவுத் தொழிலாளி அதைத் "தரதர"வென்று தரையில் இழுத்துக் கொண்டு போய் புதைத்து விடுவதற்கு அவள் விரும்பவில்லை. இது அவளுடைய பிரச்சினை. இதனை அவள்தான் பெற்றெடுத்தாள். ஆகவே அவளே இதைப் புதைக்க வேண்டும்.

ஆந்தைகள் பொறுமையின்றி அலறின. இதுதான் நேரம், இதுதான் நேரம். அவள் மெதுவாய் எழுந்து, கையை நீட்டி, அசைந்து கொண்டிருந்த சதைப்பிண்டத்தைத் தொட்டாள். அதன் உடல் எவ்வளவு உஷ்ணமாய் இருந்தது? இந்த வெப்பத்தை அது அவள் உடலிலிருந்து எடுத்துக் கொண்டதா? அது அநேகமாய் அவளைப் போலவே இருந்தது. பூப்போன்ற அதன் விழிகளைத் திறந்து, அவற்றை அவள் பார்த்தாலென்ன? ஒரே ஒருமுறை அவற்றைப் பார்க்க அவள் ஏங்கினாள்.

"உற்னா............... னா................"

அது கைகளையும், கால்களையும் உதறிக் கொண்டு, அதற்குப் பாதுகாப்பு கோருவதைப் போலத் தோன்றியது. அதன் குரல் அவள் குரல் மாதிரி இல்லை. அவளறிந்த அல்லது அவள் இதற்கு முன்பு கேட்ட குரலாகவும் அது இல்லை. அதன் குரல் படிப்படியாக உயர்ந்தது. ஆதிகாலந் தொட்டே மனிதத் தேவைகளுக்காக இயற்கையிடமிருந்து அதிகாரத் தோரணையுடன் கோரும் குரல் அது. "உற்னா......... னா............."

அந்த ஒலி முகாமில் உள்ள அனைவரையும் எழுப்பிவிடும் என்று அவள் நினைத்தாள். உலகம் முழுவதும், உயிருள்ள, உயிரற்ற ஜடப்பொருட்கள், பறவைகள், மிருகங்கள், ஏன் அசையாமல் இருக்கும் பூமி அனைத்துமே அந்த அழுகை ஒலியில் ஒன்று கலந்து எழுந்துவிடுவது போலத் தோன்றியது. ஏனெனில் அது மிக சக்தி வாய்ந்ததாகவும், அதே சமயத்தில் மிக மென்மையானதாகவும் இருந்தது.

ஒலியை அடக்குவதற்கு அதன் பிரிந்த உதடுகள் மேல் அவள் கைவைத்தாள். அவை ஒரு இலையின் நுட்பமான மெண்மையானதாய் இருந்தது. அவள் உணர்ந்து பயந்தான், பாசமல்ல என்பதை அவள் தெரிந்து கொண்டாள். யாரோ அவள் பக்கத்தில் இருந்ததைப் போலவும், யாரோ அவளிடம் அந்த அழுகையைக் கட்டுப் படுத்த வேண்டாமென்று கட்டளையிட்டதைப் போலவும், யாரோ அவளிடம் அது ஒரு குழந்தையின் அழுகுரலன்று அது பிரபஞ்சத்தின் அழுகுரலாகும் என்று கூறுவது போலவும் தோன்றியது.

ஜோதி திடுக்கிட்டு பின்னகர்ந்தாள். என்ன செய்வதென்று அவளுக்கு நிச்சயமாய்த் தெரியவில்லை. அவள் உணர்ந்த முரணான உணர்ச்சிகளிடமிருந்து தப்பிக்க விரும்பினாள். அவளுள் பயமும் சந்தேகமும் நிரம்பியிருந்தன. அவள் எங்கேயேனும் உலகத்தின் எல்லைகளுக்கு அப்பால், பாதாள லோகத்தில், ஒளிய முடியுமானால், இந்த அழுகுரல் அவளை அங்கேயும் பின் தொடருமா,

குழந்தை அங்கேயே புல்தரையில் விட்டு விடலாமா என்று அவள் யோசித்தாள். தாயினால் கைவிடப்பட்டக் குழந்தையை கடவுள்கள் எப்போதும் கவனித்துக்கொள்வார்கள் என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். காலையில் யாரேனும், அநேகமாய் குழந்தையில்லாத ஒரு தாய் அதைக் கண்டெடுக்கலாம். அவளுக்கு இப்பொழுது ஒரு குழந்தை, அவளுடைய சொந்தக் குழந்தையே இருக்கிறது என்கிற உண்மை அவளுக்குத் திடீரென உறைத்தது.

கசப்பும் இனிப்பும் உள்ள ஏதோ ஒன்றை அவள் கடித்துக் குழம்பிவிட்டதாக அவள் உணர்ந்தாள். இல்லை, பிரிக்க முடியாத அளவுக்குத் தன் வாழ்வோடுப் பின்னிப் பிணைந்துவிட்ட ஓர் பந்தத்தை அது அவளுக்கு நிறைந்த வருத்தத்தைக்கொண்டு வந்திருந்தாலுமே, நிராகரிக்க அவளால் இயலாது என்று அவள் நினைத்தாள். அதை ஏற்றுக்கொள்ள அவள் மறுத்தால், ஒரு நிரந்தரமான காயத்தை, புரையோடி வாழ் நாளெல்லாம் வலியையும் வேதனையையும் தருகிற ஒரு காயத்தை அவள் தன்மேல் ஏற்படுத்திக் கொண்டவளாகிவிடுவாள். ஜோதி குழந்தையை நோக்கி மெதுவாகச் சென்றாள். அதன் குரல் இப்பொழுது தேய்ந்து கொண்டே வந்தது. அதன் அங்கங்கள் பெரிதும் பலவீனமடைந்து விட்டாற்போலத் தோன்றியது. அவள் இன்னும் அதிகநேரம் காத்திருந்தால் ஒரு முடிவு எடுப்பதற்கான அவசியம் இருக்காது.

அந்த இளந்தாய் அவள் மகனைக் கைகளில் அள்ளி அணைத்துக் கொண்டாள். அவனது குளிர்ந்து போன நெற்றியை, அது வெதுவெதுப்படைகிற வரை, திரும்பத் திரும்ப முத்தமிட்டாள். அவள் உடலின் ரத்தம் பாலாய்ப் பிரவகித்துக் குழந்தைக்குச் சென்றது.

தாய், அவளின் பச்சிளம் குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு, முகாமை நோக்கி நடந்தாள். ஒரு சிக்கலானப் பிரச்சினைக்கான விடையைக் கண்டுபிடித்துவிட்டாற்போல, நட்சத்திரங்கள் கீழே அவளை நோக்கிப் புன்னகை புரிந்தன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com