Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2008

மீண்டும் நான் எழுகிறேன்
மாயா ஆஞ்சலூ

தமிழில் : அருணன்@சென்னை
.

வரலாற்றில் நீங்கள் என்னை மலினப்படுத்தலாம்
உங்கள் ஊசிப்போன, திரிக்கப்பட்ட பொய்களால்,
நீங்கள் என்னை புழுதியில் போட்டு மிதிக்கலாம்
ஆனால், புழுதியைப்போல, நான் மீண்டும் எழுகிறேன்.

என் திமிர்த்தனம் உங்களை வருத்துகிறதா?
ஏன் சோகத்தில் மூழ்கியுள்ளீர்கள்?
ஏனென்றால்,
நான் என் வீட்டு முன்னறையில் எண்ணெய்க்கிணறுகள்
இருப்பது போல அலட்சியமாக நடந்து செல்கிறேன்.

சந்திர சூரியன்களைப்போல,
அலைகளின் ஏற்ற இறக்க நிச்சயம் போல,
நம்பிக்கைகள் ஊற்றெடுப்பது போல
நான் மீண்டும் எழுகிறேன்.

என் உயிர்த்துடிப்பான அழுகைகளால் பலவீனமாகி
நான் உடைந்து போவதை பார்க்க விரும்புகிறீர்களா?
வணங்கிய தலையும் தாழ்ந்த கண்களும்,
கண்ணீர்த்துளிகள் போல் கீழிறங்கிய தோள்களோடும்?

என் இறுமாப்பு உங்களை புண்படுத்துகிறதா?
அதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா?
ஏனென்றால், என் கொல்லைப்புறத்தில்
தங்கச்சுரங்கங்கள் இருப்பது போல் நான் சிரிக்கிறேன்.

உங்கள் வார்த்தைகளால் என்னைச்சுடலாம்,
உங்கள் கண்களால் என்னை அறுக்கலாம்,
உங்கள் வெறுப்பால் என்னைக்கொல்லலாம்,
ஆனால் மீண்டும், காற்றைப்போல், நான் எழுகிறேன்.

என் பால் வனப்பு உஙகளுக்கு வெறுப்பேற்றுகிறதா?
என் தொடைகள் இணையுமிடத்தில்
வைரங்கள் இருப்பதுபோல் நான் நடனமாடுவது
உங்களுக்கு ஆச்சரியமளிக்கிறதா?

சரித்திரத்தின் வெட்கக்கூரைகளிலிருந்து
நான் எழுகிறேன்
வலியில் வேர் புதைந்திருக்கும் நேற்றிலிருந்து
நான் எழுகிறேன்
மேலெழும்பித் தாழும்
நான் ஒரு கறுப்புக்கடல்
வடிந்தும், பெருத்தும் ஓதத்தைப் பொறுக்கிறேன்.

பீதியும் பயமுமான இரவுகளை புறந்தள்ளி
நான் எழுகிறேன்
அழகான தெளிவான விடியலுக்குள்
நான் எழுகிறேன்
என் மூதாதையர் எமக்களித்த பரிசுகளுடன் வரும்
நானே அடிமையின் கனவும் நம்பிக்கையும்.
நான் எழுகிறேன்
நான் எழுகிறேன்
நான் எழுகிறேன்.

மாயா ஆஞ்சலூ குறித்து :

கறுப்பு அமெரிக்க கவிஞரான மாயா ஆஞ்சலூ பல்பரிமாணங்கள் உடைய ஒருவராக விளங்குகிறார். ஒரு எழுத்தாளராக, ஒரு கவிஞராக, வரலாற்றாசிரியராக, பாடலாசிரியராக, நாடகாசிரியராக, நடனக் கலைஞராக, நாடக, திரைப்படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, நிகழ்த்து கலைஞராக, பாடகராக, மனித உரிமைச் செயலாளியாக அவர் இருக்கிறார். மார்ட்டின் லூதர் கிங் ஜுனியருடன் இணைந்து பணியாற்றியுள்ள மாயா ஆஞ்சலூ பத்திரிகையாளராக எகிப்திலும், கானா நாட்டிலும் இருந்துள்ளார்.

மாயா ஆஞ்சலூ, 1928ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி அமெரிக்காவின் மிசூரி மாநிலத்திலுள்ள செயிந்த் லூயி நகரில் மார்கரைட் ஜான்சனாக பிறந்தார். அவர் செயிந்த் லூயியிலும், அர்க்கன்ஸாஸ் மாநிலம் ஸ்டாம்ப்ஸிலும் வளர்ந்தார்.

அவருடைய தன் வரலாற்று நூல்களுக்காக அவர் பெரிதும் அறியப்படுகிறார். கடவுளின் எல்லா குழந்தைகளுக்கும் பயணக்காலணிகள் தேவைப்படுகின்றன(1986), ஒரு பெண்ணின் இதயம் (1981), கிறிஸ்துமஸ் போல பாடி, ஆடி மகிழ்வோம் (1976), என் பெயரால் சேர்வோம் (1974), கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத்தெரியும் (1969) ஆகியவை அவரது புகழ்பெற்ற நாவல்கள்.

ஒரு தைரியமான, அதிர்ச்சியூட்டும் உண்மை (1995); இப்பொழுது என் பயணத்திற்கு தடை ஏதும் இல்லை (1993); இப்பொழுது ஷீபா பாடலை பாடுகிறாள் (1987); என்னை அசைக்க முடியாது (1990); ஷகெர், ஏன் நீ பாடவில்லை? (1983); ஓ எனது இறக்கைகள் எனக்கு சரியாக பொருந்த வேண்டும் என்று இறைஞ்சுங்கள் (1975); நான் சாகும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுங்கள் போதும் (1971)ஆகியவை மாயா ஞ்சலூவின் கவிதை தொகுப்புகள்.

மாயா ஆஞ்சலூ ஹாலிவுட்டின் முதல் கறுப்பு பெண் இயக்குநர். 1971-ல் வெளியான ‘ஜார்ஜியா! ஜார்ஜியா!’ என்ற திரைப்படத்திற்கு திரைக்கதையையும், இசையையும் எழுதியுள்ளார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com