Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2008

சொற்களிலிருந்து ஒலிக்கும் குரல்...
லஷ்மி சரவணக்குமார்
.

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்கிற எவ்வளவோ வளர்ச்சிக்குப் பிறகும், குறுஞ்செய்திகளாகவும், மின்னஞ்சல்களாகவும் தகவல்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கிற இன்றைய காலகட்டத்திலும் பிறரை நலம் விசாரித்து கடிதம் எழுதுவதற்கு நேரமும், அக்கறையும் கொண்ட மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர். உலகம் முழுக்கவே புகழ் பெற்றவர்களின் கடிதங்களைப் படிப்பதற்கென மிகப்பெரிய அளவில் ஒரு வாசகர் வட்டம் இருக்கவே செய்கிறது. பேசிவிட முடியாத எவ்வளவோ வார்த்தைகளை கடிதத்தில் கொட்டிவிட முடிகிறது ஒருவகையில் அலாதியான நிம்மதியே.

வெறும் வாய் வார்த்தைகளென இதனை நீங்கள் எண்ணுகிற பட்சத்தில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். என் அப்பாவிடம் நான் நேரில் பேசியிருக்கிற விஷயங்கள் கடிதத்தில் எழுதிய வார்த்தைகளில் கால்வாசி கூட இருக்காது. அப்பாவிற்கும் அதே போல்தான். காலம் காலமாக பெரிய கலைஞர்களுடையதையும், அரசியல்வாதிகளுடையதையுமே, சிறப்புமிக்க கடிதங்களாக பதிவு செய்துவந்திருக்கிற இச் சமூகத்தில், ஏதோவொரு சந்தர்ப்பத்தில், குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கிற பல்லாயிரம் சிறைக் கைதிகளின் பிரதிநிதியாய் ஒரு சிலருடைய கடிதங்களை மட்டும் இங்கு பதிவு செய்யலாமென்று இருக்கிறேன்.

அதிக பட்சம் 43 வயதிற்குள்தான் இருக்கும் ராஜா (எ) அழகர்சாமியான என் அப்பாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டபோது எனக்கு பதினாறு அதற்கு முன்பும் வெகு காலங்கள் என் அப்பாவுடன் நான் பேசியதில்லை, இன்னும் அவரைப் பார்த்ததே அரிதாகத்தான் இருக்கும். ஏனெனில், அவருக்கு இன்னொரு குடும்பம் இருந்ததும் ஓர் காரணம். சிறு வயதிலிருந்தே அம்மாவின் உழைப்பே என்னைப் படிக்க வைத்துக் கொண்டிருந்ததால், ஓரளவு நன்றாக படித்தும் கூட, டாக்டர், இன்ஜீனியர் என்று சராசரி இந்தியக் குழந்தைகளைப் போன்ற கனவுகள் எதையும் வைத்திருக்கவில்லை. அதற்கான சாத்தியங்கள் ஏதும் இல்லாத குடும்பம்தான் என்னுடையது என்பதில் ஒருவிதமான தெளிவு இருந்தது.

எனக்கு விவரம் தெரிந்து எங்கள் வீட்டிற்கு வந்த மூன்றாவது கடிதமாகவும், சிறையிலிருந்து அப்பா எழுதிய முதல் கடிதமாகவும் அது கிடைத்த நாளன்றும் கூட, அவருக்குத் தண்டனை என்பதை உணரமுடியாதவர்களாகவே இருந்தோம். பலகாலம் எங்களோடு அவர் இல்லாமலிருந்ததைப் போன்ற அதே விதமான தனிமைதான். எனினும் இது வேறு விதமாக இருந்தது. இந்த ஏழு ஆண்டுகளில் அப்பா எனக்கு எழுதிய கடிதங்கள் சராசரியாக முந்நூற்றுக்குக் குறையாது. அவற்றில் பல கடிதங்கள், பழைய புத்தகங்களை எடைக்குப் போடுகையிலும், அடுப்பெரிக்க காகிதங்கள் போதாத நாட்களில் எரித்திருந்ததும் நினைவிற்கு வருகிறது.

யோசித்துப் பார்க்கையில் அவர் எவ்வளவு கஷ்டப்படுத்தியிருந்த போதிலும் அவர் எழுதிய கடிதங்களை தவறவிட்டது ஒரு வகையில் அவருடைய உணர்வுகளை தொலைத்துவிட்டதான உணர்வுகளையே ஏற்படுத்துகிறது. மிஞ்சியிருந்த கடிதங்களைத்தான் தூக்கம் பிடிக்காத ஓர் இரவில் படிக்க நேர்ந்தபோது, அப்பா தனியானவராய்த் தெரியவில்லை. வாழ்வின் பெரும்பகுதியை இப்புறவுலகின் இயக்கத்தோடு வாழ்ந்து பழகியவர்களுக்கு, சிறையில் அடிக்கப்பட்டிருக்கிற காலங்களில் மொத்தமும் சுவடற்றுப் போய் ஏதோவொரு சில விஷயங்களுக்குள்ளாகவே முடிந்து போகிறது. இப்படி பேச முனைந்து கரைந்து போன சொற்களைத் தாங்கிய கடிதங்கள் சிலவற்றை இப்போது தொகுத்துப் பார்க்கிறேன்.

மிகக் குறைவான வருமானமே அம்மாவிற்கு வந்தபோதும் அப்பாவிற்கான செலவுகளில் குறை வைத்திருக்கவில்லை. பகுதி நேரமாகப் பார்த்துக்கொண்டிருந்த வேலையினை முழுநேரமாக்கிவிட்டு, முழு நேரமாக பள்ளிக்கூடம் சென்றதை முற்றிலும் நிறுத்திவிட்டிருந்தேன். இந்நாட்களில் அவரைப் பார்ப்பதற்கு ஜெயிலுக்குப் போனாலும் அவரோடு பேசுவதில்லை.

இங்கிருந்து பார்க்கப் போகும் போது ஜெயில் வாசல் துவங்கி கச்சேரி வரை ஆங்காங்கே இருக்கிற சில காவல் தெய்வங்களுக்கு தட்சணை வைத்தே ஆக வேண்டும். இதில் ஆண்தெய்வம், பெண்தெய்வம் என்ற பாகுபாடுகள் எதுவுமில்லை. எல்லாம் தாண்டி உள்ளே போனால் அங்கிருக்கும் கூட்டத்திற்குள் பேசிச் முடித்து வெளியே வரும்போது இரண்டு நாளைக்கு பேச முடியாத அளவிற்கு தொண்டை கட்டிப் போயிருக்கும்.

இந்தக் காலகட்டத்தில்தான் சொல்ல முடியாத கஷ்டத்தில் இருந்தோம் நானும் அம்மாவும். அம்மாவின் உடல்நிலை மோசமானதாக இருந்ததால் இரண்டு பேருமே சரியாக வேலைக்குப் போக முடியவில்லை. நம்புங்கள். நாளுக்கு இரண்டு வேளை என்பதே சிரமமாகத்தான் இருந்தது. எனினும் அவற்றையெல்லாம் வெளிக்காட்டியிருக்கவில்லை. வெறுமை ஊர்ந்த மனதோடு ஓர் பிற்பகலில் வீட்டிற்குள் நான் தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டுக்காரருக்கு சில நாட்களாகவே இருந்த சந்தேகம் என்னை கண்காணித்ததில் காப்பாற்றப்பட்டேன்.

அப்பாவிற்கான தண்டனை சுப்ரீக் கோர்ட்டிலும் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற நன்னடத்தை அதிகாரி லேசுப்பட்டவரில்லை. தண்டனைக் கைதிகளுக்கான பரோல் விடுமுறை வழங்குவதற்கான ஒப்புதலை இவர்தான் அளிக்க வேண்டும் என்பதால் அவரைத் தேடி வருகிற பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இவர் கொடுக்கிற தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இவருக்கு அழுவதை அழுதாலும், வீட்டிற்கு காய்கறி வாங்கி வரச் சொல்வதும், பெண்களிடம் சில்மிஷம் செய்வதம் கேட்பாரின்றி சர்வ சாதாரணமாக நடக்கும். இதையெல்லாம் எதிர்த்து அவ்வளவு எளிதில் கேள்வி கேட்கவோ, கோபப்படவோ முடியாது. ஏனெனில் அவராகப் பார்த்து சொன்னால்தான் தண்டனை முடிகிற காலத்தில் விடுதலை கூட கிடைக்கும். இதை எழுதிக்கொண்டிருக்கிற சில நாட்களுக்கு முன்பு கூட புதிதாக வந்திருந்த நன்னடத்தை அதிகாரி எங்கள் வீட்டிற்கு விசாரிக்க வந்திருந்தார், நள்ளிரவு பதிணொன்னறை மணிக்கு மேல்... இதையெல்லாம் தாண்டிதான் ஒவ்வொரு முறையும் அவரே பரோல் விடுப்பிற்கு கூட்டி வந்து கொண்டிருக்கிறேன்.

மற்ற எல்லா காலகட்டங்களை விடவும் துயரம் மிகுந்த நாட்கள் இதுதான். இந்தக் கடிதம் எழுதப்பட்ட சில நாள்களுக்கு முன்புதான் அம்மாவிற்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. பெண்கள் குழந்தைகள் இல்லாதவர்களின் சிரமம் எவ்வளவு பெரியது என்பதை ஒருமாத கால அரசு மருத்துவமனை உணரவைத்தது. அம்மா வீட்டிற்கு வந்து சற்றே நடமாடத் துவங்கிய சில நாட்களிலேயே எனக்கும், பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் இருந்த தொடர்பில் பூகம்பமே வெடித்தது.

யாரையும் முகம் கொடுத்து பார்க்க முடியாதவனாய் இருண்டாவது முறையாய் தற்கொலைக்கு முயன்று நான் தேர்ந்தெடுத்த இடம் ரயில்வே தண்டவாளம். இம்முறை காப்பாற்றியது ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிகர் ஒருவர். ஒரு தோழனைப்போல் என் உணர்வுகளை அப்பா புரிந்து கொண்டிருந்த நாட்கள் வாழ்வில் மறக்கவே முடியாதவை. அந்த சம்பவங்களை எல்லாம் இப்போது நினைக்கையில் ஒருவிதமான அருவருப்பே ஏற்படுகிறது.

யோசித்துப் பார்க்கையில் எழுதப்படிக்கத் தெரியாத அப்பாவின் சொற்களை யாரோ ஒருவர் எழுதி அனுப்புகிற நேரங்களில், பிழைகளையும், புரியாமையையும் தாண்டி ஒருவிதமான நெருக்க உணர்வை உணரவே செய்திருக்கிறேன். ஏழு ஆண்டுகளில் அவர் எழுதிய கடிதங்களையெல்லாம் மிக எளிமையாக இரண்டு, மூன்று விஷயங்களில் பிரித்து அடைத்து விடலாம். சுப்ரீம் கோர்ட்டில் தண்டனை உறுதி செய்யப்படுவதற்கு முன்புவரை அவருக்காக வழக்கறிஞர்களைப் பார்ப்பதும் அதற்கு பிறகான நாட்களில் அவருடைய விடுமுறைக்கான அத்யாவசியத்தை உணர்த்தியும், அவ்வப்போது அவர் செலவுக்கு பணம் அனுப்ப வேண்டுமென்பதையும் மையப்படுத்தியே இருந்திருக்கின்றன.

நலம் விசாரித்தல் மட்டும் மாறாமல் தொடர்கிற ஒன்று. ஜெயிலுக்குள் இருப்பவருக்கு என்ன செலவு? என உங்களுக்குத் தோன்றுமானால் சொல்கிறேன். அதுவொரு தனி உலகம். வெளிப்பார்வைக்குள் வளாகத்தினுள் தடை செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் உள்ளே எல்லாம் கிடைக்கும். ஒரு தீப்பெட்டி 5 ரூபாய், ஒரு துண்டு பீடி 3 ரூபாய், கணேஷ் புகையிலை, ஒரு பாக்கெட் 30 ரூபாய், இது ஆச்சர்யமாக உங்களுக்குத் தோன்றுமாயின் இன்னொன்றையும் சொல்கிறேன். தேவைகளைப் பொறுத்து இங்கிருக்கிற வசதியான கைதிகளும், ஒரு சில காவல் தெய்வங்களும் அதிக வட்டிக்கு (ஜெட் வட்டி?) பணம் கொடுப்பதுண்டு. இந்தக் கடிதங்கள் கூட இலவசமாய் வழங்கப்படுபவை அல்ல. இரு இன்லேண்ட் கவர் 6 ரூபாய், போஸ்ட் கார்டு 4 ரூபாய், எல்லாம் வியாபாரம்தான்.

எனக்கு விவரம் தெரிந்து அதிக நாட்கள் அப்பா என்னோட இருந்ததில்லை. வழக்கு முடிந்து தண்டனை வழங்கப்பட்ட பிறகுதான் நானும், அம்மாவும் தேவைப்பட்டவர்களாக இருக்கிறோம். ஒருவேளை தீர்ப்பு சாதகமாக அமைந்திருந்தால் ஒன்று மட்டும் உறுதி, அதற்குப் பிறகு அவர் எங்களோடு இருந்திருக்க மாட்டார்.

சிறைக்கடிதங்கள்

டிசம்பர் 24 - 2002 அன்று அப்பா எழுதிய ஓர் கடிதம்........

அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த மனைவி லட்சுமிக்கு உன் பிரியமுள்ள கணவர் ராஜா என்கிற அழகர்சாமி எழுதும் கடிதம். நலம். அதுபோல் மகன் சரவணகுமார் நலமும் உன் நலமும் அறிய ஆவல். மகன் போட்ட கடிதம் கிடைத்தது. அதிலுள்ள விபரம் அறிந்தேன். யாருடனும் சேர்க்கை சேரக்கூடாது. ஒழுங்காய் அம்மா சொல்லைக்கேட்டு நல்ல முறையில் வேலை பார்த்து வரவும். என்னவென்றால் ஜட்ச்மென்ட்க் காப்பி வாங்கி வைத்திருக்கிறீர்கள். கேஸ்கட்டையும் வாங்கி வைக்கவும். மதுரையில் ஐகோர்ட் 4-வது மாதம் திறப்பதாக சொல்கிறார்கள். ஆகையால் இங்கு அப்பீல் செய்து பார்த்துக்கிடலாம். உசிலம்பட்டிக்குப் போக வேண்டாம். இக்கடிதத்தை சேகர் வசம் காண்பிக்கவும். நீ வாங்கி வந்த துண்டு இடுப்பிற்கு பத்தவில்லை சிறியதாக இருக்கிறது.

வரும்போது பெரிய துண்டு வாங்கி வரவும். நான் எழுதிய லெட்டர் ஓனர் லட்சுமணன் அவருக்கு கிடைத்த பின் என்ன விபரம் சொன்னார்? சரவணன் பெட்ரோல் பங்க்கில் வேலைக்குச் சொல்லியிருந்தேன் லெட்டரில் எழுதியிருந்தேன் அந்த விசயம் சொன்னாரா? கடிதம் கண்டவுடன் பதில் போடவும். இல்லையென்றால் நேரில் மனுவுக்கு வரவும். அப்படி இல்லையென்றால் சேகரிடம் சொல்லிவிடவும்.
இப்படிக்கு
சிறி3782 க்ஷ¢.ராஜா என்ற அழகர்சாமி.

பிப்ரவரி 2-2005 அன்று அப்பா எழுதிய கடிதம்.....

அன்புள்ள மனைவி லட்சுமிக்கு உன் கணவர் ராஜா எழுதும் கடிதம் என்னவென்றால் நான் நலம். அதுபோல் உங்கள் நலம் அறிய ஆவல். மனைவி லட்சுமி அறிவது நான் சிறையிலிருந்து நம் மகன் சரவணக்குமார் படிப்பு விசயமாக பெட்டிசன் கொடுத்துள்ளேன். படிக்கத்தான் ஏற்பாடு செய்துள்ளேன். அதன்படி ஆட்கள் வந்து நம் வீட்டிலும், பள்ளியிலும் விசாரிப்பார்கள். அப்படி வந்து விசாரித்தால் எந்த தங்கு தடையின்றியும் மகனை அனுப்பி படிக்க வைக்கவும். இந்த லெட்டர் கிடைத்தவுடன் செவ்வாய்க்கிழமை சரவணக்குமாரை மட்டும் கூட மனுக்கு அனுப்பி வைக்கவும்.

மனுவுக்கு வரும்போது வக்கீலிடம் போன் செய்து கேட்டு வரவும். வக்கிலுக்கும் நானும் லெட்டர் போட்டு உள்ளேன். அது பற்றி எதுவும் சொன்னாலும் அந்த விபரத்தையும் தெரிந்து என்னிடம் வந்து சொல் இரு வக்கிலிடமும் பேசிவிட்டு என்னை வந்து பார்க்கவும். இந்த லெட்டரை கொண்டு போய் சேகரிடம் கொடுத்து சேகரையே போன் செய்து கேட்க சொல்லி சேகரையும் கூப்பிட்டு கொண்டு மனுவுக்கு வந்து விபரம் சொல்லவும். வேறு வக்கீல் எதுவும் விபரம் சொன்னால் வக்கிலையும் மனுவுக்கு வரச் சொல். அவர் வந்தால் நான் நேரடியாக பேசி விடுவேன். வக்கிலும் என் லெட்டரை பார்த்து மனுவுக்கு வருவார். ஆகவே வக்கீலை பார்த்து பேசி விட்டு சரவணக்குமாரும் சேகரும் செவ்வாய்கிழமை மனுவுக்கு வரவும். மற்றவை நேரில் சொல்கிறேன்.

இப்படிக்கு
அழகர்சாமி.

டிசம்பர் 12-2005 அன்று அப்பா எழுதிய கடிதம்....

அன்பு மனைவி லட்சுமிக்கு உன் பிரியமுள்ள கணவர் ராஜா எழுதம் லெட்டர். நலம். அங்கு உன் சுகமும், மகன் சரவணக்குமார் மற்றும் உறவினர், நண்பர்கள் ஆகிய அனைவரின் நலமும், சுகமும் அறிய ஆவலாக உள்ளேன். மனைவி லட்சுமி அறிவது. எனக்கு சென்னை ஹை கோர்ட்டில் எனத வழக்கு முடிந்து எனது ஆயுள் தண்டனை உறுதியாகிவிட்டது. எனவே என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் நல்ல முறையில் இருக்கவும். மற்றபடி இனிமேல் போலீஸ் எஸ்கார்ட் இல்லாமல் பலமுறை லீவில் வந்து சொல்லலாம். எனவே லீவு எடுப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அதன்படி நீங்கள் செய்தால் நான் லீவில் வரலாம். அதாவது உனக்கு உடல்நலம் சரியில்லை என்று டாக்டரிடம் சர்ட்டிபிகேட் வாங்கினால் போதும். அந்த சர்ட்டிபிகேட்டை ஜெராக்ஸ் எடுத்து, அந்த ஜெராக்ஸ் காப்பியை உசிலம்பட்டியில் நன்னடத்தை அலுவலர் இருக்கிறார் அவரிடம் கொடுத்து எனது கணவர் விடுப்பில் வருவதற்கு சிபாரிசு செய்யுங்கள் என்று சொன்னால் சிபாரிசு செய்துவிடுவார். நான் லீவில் வந்துவிடுவேன். பின்பு ஒருமாதம் லீவு கிடைக்கும். எனவே இந்த லெட்டரில் பின்பக்கம் ஆங்கிலத்தில் எழுதி உள்ளதை டாக்டரிடம் காண்பித்து அதைப்போல எழுதி வாங்கி மனுவுக்கு கொண்டு வரவும். இந்த லெட்டரை சேகரிடம் கொடுத்து சேகரை அழைத்துக் கொண்டு சர்ட்டிபிகேட் வாங்கவும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com