Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2008

பஷீர் என்றொரு மானுடன்
டி.அருள் எழிலன்

‘‘அழகான இந்தப் புவியில் எனக்கு அனுமதித்திருந்த நேரம் முழுவதும் முடிந்துவிட்டது. என்னிடம் நேரம் சிறிதுகூட இல்லை.அல்லாவின் கஜானாவில் மட்டுமே நேரம் இருக்கிறது. ஆமாம் ஒரு போதும் முடிவில்லாத நேரம் முடிவற்ற முடிவில்லாத நேரம்.

மரணம் என்னை பயப்படுத்துவதும் இல்லை பயப்படுத்தாமல் இருந்ததும் இல்லை. மரணம் ஒதுக்கி விட முடியாத ஒன்றல்லவா?அது வரும்போது வரட்டுமே பிறந்தது முதலே கொஞ்சம் அதிகமான தடவைகள் மரணத்தை தொட்டுவிட்டு வந்தவன் நான். ஒருமுறை என் இடதுகாலில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டது. அடுத்தமுறை வலதுகாலின் பாதத்தின் வழியாக ஒரு பெரிய விரியன் பாம்பு மெல்ல மிக மெல்ல ஊர்ந்து சென்றது. எங்கள் வீட்டில் மூன்று நான்கு தடவைகள் விரியன் பாம்பு நுழைந்தது. அதுவும் இரவில் கடைசி முறை நான்கு விரல்கள் இடை வெளியில்தான் மரணத்தோடு இருந்தேன். மிதித்தும் இருப்பேன்.

நான் இப்போது மரணித்துவிட்டேன். இனிமேல் யாராவது என்னை நினைப்பர்களா? என்னை யாரும் நினைக்க வேண்டாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது எதற்காக நினைக்க வேண்டும். கோடான கோடி அனந்த கோடி ஆண்களும் பெண்களும் இது வரையில் இறந்திருப்பார்கள் அல்லவா! அவர்கள் எல்லோரையும் நாம் நினைக்கிறோமா?

அப்புறம் என்னுடைய புத்தகங்கள் அவை எல்லாம் எவளவு காலத்துக்கு நிலைத்து நிற்கும்? புது உலகம் வந்தால் பழமை எல்லாம் புதுமையில் மறைய வேண்டியதுதானே? இங்கே என்னுடையது என்று கூறுவதற்கு என்ன எஞ்சி இருக்கிறது. எனக்கென ஒரு மண் துகளளவு அறிவையாவது நான் இந்த பூமிக்கு கொடையாக அளித்துள்ளேனோ? எழுத்துக்கள் வார்த்தைகள் எண்ணங்கள் இவை எல்லாவற்றையும் கோடானகோடி மனிதர்கள் பயன்படுத்தியவைதானே!

வைக்கம் முகம்மது பஷீர் மரணித்தால் செய்தி வருகிறது எப்படி செத்தார்? அப்போது ஒரு காரணம் வேணும் அவ்ச்வளவு தான். இப்போது இதோ நான் இறந்து விட்டிருக்கிறேன். போதுமான காரணங்கள் உண்டா? என்று நீங்கள்தான் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். நான்தான் முன்பே சொன்னேனே என் பக்கத்தில் முடிவில்லாத நேரம் சிறிதுமில்லை எல்லோருக்கும் சலாம் மாங்கோஸ்டைன் மரத்துக்கும் அனைத்துவகைsயான உயிர்களுக்கும் சலாம். ஏதாவது தவறு செய்திருந்தேனேயானால் அண்ட பிரபஞ்சமே மன்னியுங்கள் எல்லோருக்கும் மங்களம்.’’

உலக இலக்கிய வரலாற்றில் தென்கிழக்கின் கீற்றாய் சுடர்விட்ட வைக்கம் முகம்மது பஷீர் 1994 ஜுலை 5ஆம் தேதி மறைவதற்கு முந்தைய தனது மரண அறிக்கையில் இவ்விதம் வெளிப்படையாய் தன் வாழ்வு குறித்து பதிவு செய்திருக்கிறார். தான் எழுத்தாளன் என்கிற பதட்டமோ கர்வமோ அற்ற, தன் பிறந்த நாளில் திருடித் தின்ற பஷீர் அதே பஷீர். பாலியல் தொழிலாளிகளிடமும், கிஜெடாக்களிடமும், பிக்பாக்கெட்டுகளிடமும் தாராள உள்ளத்துடன் நடந்துகொண்ட அதே பஷீர். பேபூரில் உள்ள பஷீரின் ‘‘வைலாலில்’’ தரவாட்டு முற்றத்தில் மாங்கோஸ்டைன் மர நிழலில் கிராம போனில் கசியும் இசையின் வழியே கழிந்தது அவரது தனிமை. கர்வமற்ற தனிமை.

வட கேரளத்தில் தலயோலப்பறம்பு என்னும் கிராமத்தில் நசிந்து போன மரவியாபாரியின் மூத்தமகனாகப் பிறந்த கொச்சு முகம்மது நான்காம் வகுப்பு படிக்கும்போதே வைக்கம் கிளர்ச்சிக்கு ஆதரவு குரல் எழுப்ப வந்த காந்தியை தொட்டுப்பார்த்த நிகழ்ச்சியோடு துவங்குகிறது கொச்சு முகம்மதுவின் சுதந்திர வெள்ளை எதிர்ப்புணர்வு. கோழிக் கோடு கடற்கரையில் உப்புத் தாயாரித்த போதும் பின்னர் தீவிர எண்ணம் கொண்ட இளைஞர்களின் துணையோடு சுதந்திரத்துக்கு- காங்கிரஸ¤க்கு ஆதரவான ஒரு அமைப்பை துவங்கிய போதும் அவர் கொச்சு முகம்மதுதான்.

பின்னர் ‘‘உஜ்ஜீவனம்’’ என்ற பத்திரிகையில் வெள்ளையருக்கு எதிரான அனல் கக்கும் கட்டுரைகள் எழுத பிரபா என்ற பெயர் தேவைப்பட்டது கொச்சு முகம்மது அந்த பெயரில் தான் வெள்ளையருக்கு எதிரான கட்டுரைகள் எழுதினார். பின்னர் சென்னை, கண்ணூர், கோழிக்கோடு, கோட்டயம் ஜெயிலில் பலமுறை சிறைபட்டாலும் போலீஸிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாக அரசியல் பணி செய்ய கொச்சு முகம்மதுக்கு ஒரு போலி பெயர் தேவைப்பட்டது அப்படி வைக்கப்பட்ட போலியான வைக்கம் முகம்மது பஷீர்தான் தென் கிழக்கின் விடிவெள்ளியாக பிரகாசித்தது.

வீட்டுச் சூழல் கொடுத்த அலுப்பும் சுதந்திர தாகத்தின் தகிப்பும் அவரைத் துரத்த கேரளத்தில் இருந்து கிளம்பி பல தேசம் அலையும் பரதேசியைப் போல அலைந்தார் அந்த அலைச்சலும் ஒழுங்கற்ற சிதைந்த வாழ்வில் கிடைத்த தத்துவ தரிசனமுமே பஷீரின் எழுத்தரசியலை வெளிக் கொணர்ந்தது. விசாலப் பார்வையால் மனிதர்களை விழுங்கிய அந்த பஷீருக்கென்று சுதந்திரமான காலம் ஒன்று இருந்தது. அது காசியில் இந்துச் சாமியார்களோடு அலைந்த காலம், அஜ்மீரில் இஸ்லாமிய சு•பிக்களோடு சுற்றித்திரிந்த காலம், காமாடிப்புறாவில் கெஜடாக்களோடும் பாலியல் தொழிலாளிகளோடும் பழகிய காலம், இமயமலையின் அடிவாரக் காடுகளில் மௌனித்திருந்த அந்த காலம்.

நீண்ட நெடிய அந்த அலைதலின் சயனம் வடகிழக்கையும் தாண்டி பக்கத்து நாடுகளுக்குகூட அலைய வைத்தது. மீண்டும் கேரளாவுக்கு வந்த பிறகு தனது படைப்புகள் முழுக்க அவரின் பயண வழிகளில் சந்தித்த மனிதர்கள்தான் நிறைந்திருந்தார்கள். அவர்கள் திருடர்கள். அல்லது வாழ்வின் விளிம்பில் தள்ளப்பட்டவர்கள் என பஷீரின் மனிதர்கள் இவர்கள்தான்.

ஒருமுறை மும்பையில் கோட் சூட் அணிந்த பஷீர் ஒரு ஹோட்டலில் போய் உணவருந்தி யிருக்கிறார். பணம் கொடுக்க பர்ஸைப் பார்த்தபோது அது களவாடப்பட்டிருந்தது அல்லது தொலைந்து போயிருந்தது. ஹோட்டல் பணியாளர்கள் பஷிரின் ஆடைகளை அவிழ்க்கத் துவங்கினர். பஷீர் நான் ஜட்டி எதுவும் அணியவில்லை எனச் சொல்லியிருக்கிறார். ஆனாலும் அவர்கள் பஷீரின் ஆடைகளை கழட்டி பணம் இருக்கிறதா என்று பரிசோதிக்கிற முயற்சியிலேயே இருந்தனர்.

அப்போது ‘‘அவனை விடுங்க பணம் நான் தரலாம்’’ என்றபடி ஒரு குரல் சொன்னபடியே பணம் கொடுத்த அந்த மனிதன். பஷீரை வெளியில் அழைத்து வந்து ‘‘இதுல உங்களோட பர்ஸ் இருக்கா? பாருங்க?’’ என்றிருக்கிறார். தனது பர்ஸை எடுத்துக்கொண்ட பஷீர் பின்னாளில் ‘‘ஒரு மனிதன்’’என்றொரு கதையை அவனை முன்னிட்டே எழுதினார். அந்த பிக்பாக்கெட்டைப் பற்றி பஷீர் சொல்லும் போது, ‘‘கருணை என்பது அவன் பெயராக இருக்க வேண்டும்’’என்றார்.

பின்னாளில் பஷீர் பேபூரில் வாழ்ந்த போது பிக்பாக்கெட் தொழில் செய்யும் ஒரு திருடன் வந்து பஷீரிடம் தட்சணை பெற்றுச் செல்வானாம். அப்படி செய்தால் அவனுக்கு தொழில் நன்றாக நடக்கும் என்கிற அவனது நம்பிக்கையை குஷிப்படுத்துவதுதான் பஷீரின் குணம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எர்ணாகுளத்துக்கு வந்தார் பஷீர். இதுவரை கடந்த வெளிகளில் பஷீர் ஒரு நாடோடி, சிலநேரங்களில் ஏவல் பையன், குடிகாரன், பித்தன், திருடன், பயங்கரவாதி, பெண்மோகி... எர்ணாகுளம் வந்தபோது சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ். ஸ்போர்ட்ஸ் பொருட்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்கும் வியாபாரி. சிலநாட்களிலேயே அதுவும் உதிர்ந்துபோக என்ன செய்வதென்று தெரியாத பஷீருக்கு கிடைத்தது புது அஸ்திரம். பஷீர் இப்போது முகவடிவைப் பார்த்தும், கைரேகை பார்த்தும் காலத்தையும் நேரத்தையும் கணிக்கும் ஒரு ஜோஸ்யக்காரன். அஜ்மீரிலோ கசியிலோ கற்றுக் கொண்ட இந்த வித்தையை எர்ணாகுளத்தில் விற்க முடியவில்லை.

அப்போது தான் ஜெயகேசரி என்னும் இதழில் வேலை கேட்டுப் போன பஷீரிடம் அதன் ஆசிரியர் உங்களுக்கு கதை எழுதத் தெரியுமா? எனக் கேட்க பஷீர் எழுதத் தொடங்கினார். பிரபுக்களையும் சீமான்களையும் பற்றி எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு பிச்சைக்காரர் பற்றிய தனது முதல் கதையான ‘‘தங்கம்’’ என்கிற கதையை பஷீர் எழுதினார்.

1887 ல் அப்பு நெடுங்காடி என்கிற எழுத்தாளர் ‘‘குந்தலதா’’ என்கிற நாவலை எழுதியதன் மூலம் மலையாள நாவல் உலகம் பிரசவிக்கிறது. பின்னர் நீதிபதியாக இருந்த சந்து மேனன் எழுதிய ‘‘இந்துலேகா’’நாவலும் அதனைத் தொடர்ந்த முயற்சிகளும்கூட பரம்பரை எழுத்துக்கள் எனத் தான் கொள்ளப்பட வேண்டும். ராஜாமார்களையும் சீமான்களையும் குஷிப்படுத்தும் அந்த போக்கிலிருந்து மலையாள கதையாடலில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. உரூப், பொற்றேக்கோட், தகழி, கேசவமேனன், பஷீர் என அந்த பட்டியல் திடகாத்திரமான ஒருவெளியில் பயணிக்கத் துவங்கியது எனலாம்.

தகழியும்,கேசவமேனனும் புரட்சியின் பாதையில் பயணித்தபோது பஷீரும் உரூப்பும் மனித மனங் களின் ஆழத்தை ஊடுருவி சென்றார்கள். மனித உறவு களுக்குள் ஏற்படும் நெருடல்களும் மனிதர்கள் நிகழ்த்தும் விசித்திரமான ஆட்டங்களையும் பஷீர் கதையாடினார். மலையாள மொழியின் கட்டற்ற ஒரு எள்ளல் வடிவத்தை உருவாக்கியதில் இன்றளவும் தத்துவார்த்தரீதியில் பஷீரை மீறிச் செல்ல ஒருவரும் இல்லை. டாக்டர் வந்துதான் தனக்கு பிரசவம் நடக்க வேண்டும் என மெனக்கெடுகிற ஐசுக்குட்டி யின் வாழ்வில் பஷீரின் குடும்பத்தை நாம் தரிசித்துவிட முடியும். நாம் காணச்சகிக்காத உண்மையை அதன் இருட்டின் பக்கங்களில் இருந்து தேடுபவர் பஷீர். தனது பிறந்தநாள் அன்று பக்கத்து அறை நண்பனின் உணவை திருடித் தின்கிற அனுபவம் பஷீருக்கு நேருகிறபோது அதை பிறந்தநாள் என்னும் கதையாக பதிவு செய்யும் எள்ளல் மனம் வாய்ப்பது அரிதல்லவா?

பஷீரின் ‘‘பால்ய சகி’’ நாவல் வெளியானபோது, Knut Hamsel எழுதிய விக்டோரியா நாவலின் அப்பட்டமான காப்பி என ஒரு எழுத்தாளர் விமர்சித்தார். இந்த தாக்குதல் பல பத்தாண்டுகள் தொடர்ந்தது. பின்னர் விக்டோரியா நாவல் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட போது பஷீரை விமர்சித்தவரே பஷீரின் வீட்டுக்குப்போய் ‘‘பஷீர் தலைசிறந்த எழுத்தாளர்’’ எனச் சொல்லி தான் பேசியவற்றை எல்லாம் வாபஸ் வாங்கிவிட்டு வந்தார். அப்படி அந்த விமர்சகர் வீட்டுக்கு வந்தபோது அவரை பஷீர் வரவேற்றார். ஆனால் பஷீரின் மனைவி பாஃபிக்கு அந்த விமர்சகர் மீது கோபம், போய் குசினிக்குள் இருந்து கொண்டார். நீ வந்து அவரை பார்த்து காப்பி கொடுத்து விட்டுப்போ, ஏனென்றால் வீட்டுக்கு வந்தவங்களை நாம வரவேற்கணும்’’ என்று பஷீர் நிர்பந்திக்க வந்த பாஃபி அந்த விமர்சகரிடம் ‘‘நீங்க தொடர்ந்து விமர்சனம் பண்ணி எழுதிய தால் புக் நன்றாக விற்றுது’’ என்று சிரித்த முகத்தோடு கடுப்பைக் காட்டிச் சென்றாராம் பாஃபி.

சென்னை சிறைவாசம் கொடுத்த அனுபவத்தில் கிடைத்தது தான் புகழ்பெற்ற ‘‘மதிலுகள்’’ கதை பின்னாளில் அடூர் அதை திரைப்படமாக எடுத்து அது சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டது. பஷீரின் பார்கவி நிலையம், பால்யகால சகி, பிரேமலேகனம், முச்சீட்டுக் களிக்காடன்டெ மகள் என சில பஷீரின் கதைகள் திரைப்படங்கள் ஆனாலும் மதிலுகளும் பார்கவி நிலையமும் தான் கவனிக்கப்பட்டன.

சித்தம் கலங்கிய காலத்தில் மனநலக் காப்பகத்தில் பஷீர் இருந்தபோதும் அவர் எழுத்தை கைவிடவில்லை. அப்போது ‘‘பைத்தியங்களின் உலகம்’’ என்றொரு நாவல் எழுதியதாகவும் அது பைத்தியக்காரத்தனமாக இருந்ததால் அதை கிழித்துப் போட்டுவிட்டதாகவும் பஷீரே சொல்லியிருக்கிறார். ஆனால் அவரது ஆகச்சிறந்த படைப்புகளுள் ஒன்றான ‘‘பாத்தும்மாயுடே ஆடு’’ பைத்தியங்களின் உலகத்தில் எழுதப்பட்டதுதான். பாத்துமாயுடே ஆடு நூலின் முன்னுரை யில், ‘‘நாலு பக்கங்களிலும் இருபது முப்பது பைத்தியக்காரர் கள் சூழ்ந்து கொண்டிருந்தார்கள்.

கைகளில் விலங்கு பூட்டியவர்களும், கால்கள் தளைகளால் பிணைக்கப்பட்டவர்களுமாகப் பலவிதமான மனிதர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தார்கள். பாத்துமாயுடே ஆடு ஒரு ஹாஸ்யக்கதை. ஆனால் நான் இதை எழுதுகையில் என்னுள்ளே ஒரு நெருப்பு எரிந்து கொண்டிருந்தது’’ என்று எழுதுகிறார். ஆனால் எடின்பரோ பல்கலைக்கழகம் அந்த நூலை நோபல் பரிசுக்காக பரிந்துரைத்தது. வேறெந்த இந்திய எழுத்தாளருக்கும் கிடைக்காத அங்கீகாரம் அது.

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது நாவல் வெளியான போது பஷீர் தனது சொந்த சமூகத்துக்கு துரோகம் செய்த தாக விமர்சிக்கப்பட்டார். இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சர்க்கார் கேரளத்தில் நிர்மாணிக்கப்பட்டபோது 1958ல் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த ஜோசப் முண்டச் சேரி என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது நூலை பள்ளிப் பாடத்திடத்தில் வைத்தார். உண்மையில் பஷீருக்கு ஏதாவது உதவும் நோக்கிலேயே ஜோசப் இதை செய்தார். கேரள அறிவு இலக்கிய வட்டாரத்திலும் அரசியல் மட்டத்திலும் கேரள அரசின் இந்த முடிவு பெரும் கொந்தளிப்பை உருவாக்கினாலும் பஷீர் இதுபற்றி கருத்து எதுவும் கொண்டிருக்கவில்லை. அவருக்கு ராயல்டி கிடைத்தால் பிள்ளைகளுக்கு உதவும் என்கிற பலவீனங்களோடு மட்டுமே அதை அணுகினார்.

பஷீரின் திருமண வாழ்க்கையிலும் சுவராஸ்யமானதும் துக்கமானதுமாய் சில நினைவுகள் இருக்கிறது. பஷீருக்கு பெண் பார்த்தபோது பா•பியிடம் பஷீரின் புகைப்படத்தைக் காட்டியிருக்கிறார்கள். ‘‘இந்த ஆள் இன்னும் உயிரோடத்தான் இருக்காரா, இவரோட கதைகளை நான் படிச்சிருக்கேன். தம்பிக்கும் ஸ்கூலில் இந்த ஆளோட கதை பாடத்தில் இருக்கு’’ என்று பஷீரின் ஒவ்வாத வயதை காமெடியாக சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனாலும் பாத்திமா என்ற பெயருடைய பாஃபியும் பஷீரும் சேர்ந்து பேபூரில் ‘‘வைலாலில்’’ வீட்டில் வாழ்ந்த 36 வருடங்களில் ஒரு பாசமுள்ள தகப்பனாக, தாத்தனாக வாழ்ந்திருக்கிறார்.

அவருக்கு ஷாபினா பஷீர், அனீஷ் பஷீர் என பெண்ணும் ஆணுமாய் இரண்டு குழந்தைகள். அவரை தாத்தா என்று தான் அழைப்பார்களாம். பாஃபியோ அவரை தா என்று மட்டுமே செல்லமாக அழைப்பாராம்.

அதிரடியாக பல சகாக்களோடு வீட்டுக்கு வந்து உடனே அனைவருக்கும் சாப்பாடு கொடுக்கச் சொல்வதுதான் பஷீரின் ஸ்டைல். எல்லாநேரமும் ஒருபோலல்லாமல் பாஃபி சிலநேரம் ‘‘இது என்ன ஹோட்டலா? என்று கேட்டதுண்டாம் ஆனால் அதெல்லாம் சமைத்து பரிமாறிய பின்புதான்.

பேபூரின் வீட்டின் நிற்கும் மாங்கோஸ்டைன் மர நிழலில் தனக்கு பரிசாக கிடைத்த கிராமபோனில் எம்.எஸ்சின் குரல் கசிய அல்லது பங்கஜ்மாலிக், கே.எல்.சேகைய்ல் என ப்ரியப்பட்டவர்களோடு லயித்து மோனத்தில் ஆழ்ந்திருந்த காலம் கழிய அவர் வாழ்க்கை முடிந்து போனது.

இந்த பேபூர் சுல்தான் தன் எழுத்துக்கள் பற்றியோ மனிதர்கள் பற்றியோ மொழி பற்றியோ கர்வம் கொண்டிருக்கவில்லை. எப்போதும் அவர் கலாச்சாராவாதிகளை எள்ளியபடியே பதிவு செய்திருக்கிறார் அப்படியே வாழ்ந்திருக்கிறார். இன்று பஷீரின் நினைவை மீட்ட நம்மிடம் இருப்பதெல்லாம் அவரது எழுத்துக்களும் சில கிராமபோன் ரிக்கார்டர்களும் தான். வல்லப்புழை மனநல மருத்துவமனை கொடுத்த ‘‘பாத்துமாயுடே ஆடு’’ இன்னும் பலரது மனங்களில் மேய்ந்து கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் அறம் சார்ந்த வீழ்ச்சிகள் எதையும் அறியாத பஷீர் பேபூரில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் தட்சணை பெறும் பிக்பாக்கெட்காரனுக்கு தட்சணை தர கைராசி பஷீர் இப்போது இல்லை. ஒருவேளை பஷீரைப் போல அவனும் தன்னை இடமாற்றிக் கொண்டிருக்கக் கூடும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com