Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2007
காட்டுவாரிக் கரையிலிருந்து

தஞ்சை சாம்பான்

ஆத்தா காத்தாயி அம்மா இது மழ காலம். ஒரு பொரட்டு உட்டு புடி தாயே. கிழவி யாருக்கும் எந்த குத்தம் எகாரையும் செய்யாதவ ஒம் குஞ்சுகளே நீதான் காப்பாத்தணும் என்று கூறியவாறே தாம்பாளத் தட்டில் ஏதோ கோலம் போட்டு விபூதியை எடுத்து செங்காயி கிழவியின் நெற்றியில் தடவினார் பூசாரி. பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த தெருவாசிகள் பயபக்தியோடு சாமி இந்த மழ காலத்த தள்ளிருமா கிழவி என்று கேட்டார்கள். பூசாரி ஆடியவாறே இந்த அமாவாசி போனாதான் ஏதும் சொல்ல முடியும். அதுக்குள்ள அடிச்சா அடிச்சதுதான் என்று இருபொருள் படும்படி கூறியவாறே சாமி மலையேறியது.

செங்காயி கிழவி மரணப்படுக்கையில் படும் அவஸ்தையை கவனித்த கிழவியின் கணவர் செல்லான் கண் கலங்கியவாறே அடப்பாவி மவளே என்னை தனியா உட்டுட்டுப் போறீயே என்று சிறு பிள்ளைபோல் தேம்பித் தேம்பி அழுதார். நாங்க மலையாட்ட இருக்கோம். நீ ஏன்யா அழுவுறே என்றவாறு செல்லானின் பிள்ளைகளும் சேர்ந்து அழத் தொடங்கினர். ஏலே நிறுத்துங்கடா கிழவி உசுரு போன மாதிரி கத்துறீங்க. கிழவி மனசுல பட்டுச்சுன்னா வேதனப்படும். அந்த மனுசந்தான் ஒன்னும் மண்ணுமா பொழச்சத நெனச்சு கலங்குதுன்னா உங்களுக்கென்ன... அவள நல்லவிதமா கொசவன் கொல்லையில வைக்கப் பாருங்க என்று செங்காயி கிழவியின் வயதுடைய பெண்மணி கூறினாள்.

இவள சின்னவயசுல பார்த்தா எட்டுக் கண்ணும் உட்டெறியும். இவள வேலை தலையில பார்த்த சாமிப் பட்டிக்காரன் கட்டுனா இவளதான் கட்டுவேன்னு ஒத்த காலுல நின்னு கண்ணாலம் கட்டிக்கிட்டான். ரெண்டே வருசத்துல பாவிப்பய மவன் கண்ண மூடிட்டான் என்று கூறியதும் பெரியவரின் கண்முன்னால் தன் இளமைக் கால நினைவுகள் நிழலாடியது.

செங்கம்மாள் கட்டுக்குலையாத கறுத்த மேனியழகி. கணவன் இறந்தவுடன் போனஇடம் வாழப் பிடிக்காமல் பிறந்த இடமே வந்துவிட்டாள். காடுகரைகளில் வேலை பார்க்கும் போதெல்லாம் செங்கியையே பாடச் சொல்வார்கள். கொல்லைக்காடுகளில் ஆம்பிளைகளுக்கு நிகராக இவள் பூட்டையைப் பிடித்து நூறு குழி நிலத்துக்கு ஒருநாழியில் தண்ணீர் இறைத்தது, மானம் பார்த்த பூமியில் மட்டைச் சம்பா நெல் அறுக்கும்போது போட்டிப் போட்டு கதிர் அறுத்தது, கதிரடிக்கும்போது கதிரோடு சேர்த்து அவள் கையையும் பிடித்து இழுத்தது, இழுக்கும் போது இந்தா வெத்து வேத்தாவியாவா இருக்கேன், நாலு மனுசாள் இருக்கிறது ஒன் கண்ணுக்கு தெரியலையா என்று சிணுங்கியது, வேல கலைஞ்சி வீட்டுக்கு வரும் போது வாய்க்கால் கரைபக்கம் நின்று கையைப் பிடித்து இழுத்தபோது என்ன சொரவணம் கெட்டு அலையிறியா? எனக்கு முன்னயே கண்ணாலம் ஆயிருச்சி.

எம்மேல ஆசைப்பட்டின்னா ஓயி ஒப்பங்கிட்ட சொல்லி நம்மள சேர்த்து வைக்கச் சொல்லு. சேர்ந்து வாழலாம். தஞ்சை சாம்பான் இல்லேண்ணா நாலு மனுசாளு பார்த்தா காரித் துப்பிடு வாக ஆமா. இந்தப்பாரு புள்ள எனக்கு மட்டும் ஒம்மேல ஆசையில்லேன்னு நினைக்குறீயா? ஒம்மேல அம்புட்டு ஆசை வச்சிருக்கேன். அதான் நீ வேலைக்குப்போற இடமா பார்த்து நான் வேலைக்கு திலையறேன். குட்டிப் போட்ட பூனை மாதிரி உன்னையே சுத்தி சுத்தி வர்றேன். இதா இந்தாப்பாரு நீ எனக்கு அம்மான் மவன்தான். எனக்கும் உம்மேல ஆசைதான், ஒரு சொலவ கதை சொல்லுவாக “ஆத்தரத்துக்கு அவுசாரியானா கோத்தரத்துக்கு இழுக்கு” என்றவாறு கையை உதறி வாய்க்கால் கரையேறியது போன்ற சம்பவங்கள் செல்லானின் எண்ணப் பொந்துகளில் நிழலாடியது.

மனசின் இறுக்கத்தை இறக்கி வைக்கும் நிலையில் தன் தோள் துண்டால் முகத்தைத் துடைத்தவாறே சிலையென நின்றார். இரவு உணவு முடிந்ததும் செல்லான் குடிசையில் வடக்குத்தெரு ஜனங்கள் அனைவரும் கூடினர். யார் வீட்டில் எந்தக் காரியமானாலும் இவர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் கூடியிருப்பார்கள். மழையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கட்டுப்பாடற்ற காட்டாற்று வெள்ளம் கடுஞ்சீற்றத்துடன் கரையின் விளிம்பு வரை வர ஆரம்பித்தது. ஏலே செல்லா வாரி தண்ணீ தல தட்டிப் போகுது, மலே இன்னும் கூடுச்சுன்னா பெரிய மோசமாயிடும், கட்டில்ல கிழவிய வச்சு சாவடிப் பக்கம் கொண்டுப் போயிடுவோம் என்றார் பெரியவர் ஒருவர்.

மக்கள் காட்டுவாரியின் ஆங்கார ஓசையை உணர்ந்து குலதெய்வத்தை வேண்டத் தொடங்கினர். அம்மா காத்தாயி, நாங்க தாயில்லாப் பிள்ளையாட்டம் தவிக்கிறோமே ஒனக்கு கண்ணிருக்கா? எங்களுக்கு உத்த துணை நீதானே.. காட்டு வெள்ளத்த கட்டுப்படுத்து தாயே என்று ஒருசேர தெய்வத்திடம் முறையிட்டு நின்றார்கள். மழையின் வேகம் சற்று தணிந்தாலும் இடி மின்னல் தொடர்ந்தது. அப்பா செத்த பொறுங்கடா, இடி இடிக்குது, தலச்சான் பிள்ளைகளை வெளியே காட்டாதீங்க என்று பெரியவர் சொல்லும்போதே மீண்டும் பலத்த இடி. அர்ச்சுனா அர்ச்சுனா என்று உச்சரித்துக் கொண்டே கிழவியை சாவடிக்கு கொண்டு செல்லத் தயாரானார்கள். செத்தப் பொறுத்துப் பார்ப்போம். மழக்கால இடி மழேயிருக்காது. கோடைன்னா பெய்யும். மானமும் வெளிச்ச மாயிருக்கு பார்த்துக்குவோம் என்றார் பெரியவர்.

கிழவி முகத்தை உற்றுப்பார்த்த சுக்கிரன் கண்ணெல்லாம் மாசி படர்ந்திருச்சி, கைகழுவிட வேண்டியதுதான் என்றார். மழை தூறலானதும் நீரின் போக்கும் குறைந்தது. செங்காயி இறுதி பயணத்தைத் தொடங்கிவிட்டாள். கடைசியாக வந்த விக்கலோடு கிழவியின் ஆவியும் அடங்கிப்போனது. ஈரம் அதிகமில்லா இடத்தில் உடல் கிடத்தப்பட்டது. எத்தனையோ முறை இந்த மக்களின் கால்நடைகளையும் குருவியைப் போல் சிறுக சிறுக சேர்த்த தானியங்களையும் காட்டு வாரி கொள்ளை கொண்டுள்ளது. ஒவ்வொரு மழைக்காலமும் இந்த மக்களை அலைக்கழிக்கிறது. பொழுது விடிந்ததும் நாழிய கடத்தாம வெள்ளு வெடுக்குண்ணு காட்டுக்குபோயி வேலைய பாருங்கய்யா மாடா உழைச்சி ஓடா தேஞ்ச கட்ட நேரப்பட போடமுடியாது.

தூறல் நின்னுப்போச்சு, கொசவன் கொல்லையில ரெண்டு ஆளவுட்டு குழிய கிள்ள சொல்லுங்கடா என்றார் செல்லான்.
செங்காயி உடலருகே சிறுசிறு கட்டறா(மண் சட்டி) கொஞ்ச இடத்தையும் நனைத்து விடாதபடி மழை நீர் சொட்டுமிடங்களில் வைக்கப்பட்டது. சொந்த பந்தங்களுக்கு மரணத்தை அறிவிக்க இயலாத காலம், சொந்த பந்தங்கள் வந்தாலும் காட்டுவாரி கரையோரம் ஒன்றாக கூடமுடியாது. தெற்குத்தெரு பறையர்கள் செய்தியறிந்து வந்துவிட்டார்கள். வந்தவர்களில் ஒருவர் கூறினார் செல்லண்ணே சட்டுப்புட்டுனு மானத்துக்கு முன்னாடி கரைசேர்க்கப் பாருண்ணே. “மழபேறும் புள்ளபேறும் மகேசனுக்கே தெரியாதும்பாங்க” என்று கூற இனிமே தான்யா வலிவூட்டிடனும், அய்யா வூட்டுலபோய் சொல்லிட்டு ஒருபடி நெல்லும், ஒரு தேங்காயும் இப்பதான் வாங்கியாந்தேன். வலிவூட்டிட்டு செத்து போட்டு எடுத்துட வேண்டியதுதான் என்றார் செல்லான்.

கொசவன் கொல்லை சற்று பள்ளமானதால் மேடான பகுதியில் குழி தோண்டினாலும் நீரின் கசிவு சுரந்து குழியில் சேறும் நீருமாய் இருந்தது. தண்ணீர் இறைக்கப்பட்டது. சடங்குகள் முடித்து கைப்பாடையிலிருந்து இறக்கப்பட்ட செங்காயின் உடல் சகதியில் கிடத்தப்பட்டது. மண்ணைத் தள்ளும்போது காலம்பூரா மாடா ஒழச்சி எங்களை காப்பாத்துன ஒனக்கு இந்த சேத்துக்குழிதான் கிடைக்குனுமா ஆயா என்று மகன் கதறினான். மழையும் தண்ணியுமா இருக்கு. அதால இன்னிக்கே “உடன் பால” தெளிச்சிட வேண்டியதுதான். வள்ளுவர வரச்சொல்லி கருமாதிய நடத்திடலாம். 16வது நாள் கருமாதி..

இரண்டொரு நாள் கழிக்க கடும் மழையும் வெள்ளமும் குடிசைகளைப் புரட்டிப்போட்டது. கட்டுப்பாடற்ற காட்டு வெள்ளம் பல இடங்களில் கிடங்குகளாகவும், சில இடங்களில் கரையையும் மீறி குடிசைகளையும் இழுத்துச் சென்றது. அனைவரும் சாவடியில் தஞ்சம் புகுந்தனர். கொஞ்சநஞ்ச தானியங்களையும் காட்டு வெள்ளம் கொண்டு சென்றது. அன்று உணவுக்காக இருந்த அரிசியும் ஈரப்பதத்தால் ஊறியிருந்தது. ஊறிப்போன அரிசிதான் அன்றிரவு அனைவருக்கும் சாப்பாடு. சாவடியில் இவர்கள் சமைக்கவும் முடியாது. அய்யா வீடுகளில் நெருப்பும் கடன்வாங்க முடியாது. மறுநாள் அம்பலத்தின் வீட்டிலிருந்து அனைவருக்கும் கஞ்சி காய்ச்சி ஊத்தப்பட்டது. குடித்ததுபோக மிச்சத்தை மண்பாண்டங்களில் வாங்கி வைத்துக் கொண்டார்கள்.

நாம எத்தனை காலந்தான் இந்த காட்டுவாரி கரையிலே இருக்கிறது? பேசாம (சர்க்காரன் காடு) ஆவாரங்காட்டுப் பக்கம் போயிட்டா நம்ம புள்ளகுட்டிகளாவுது பயம் இல்லாமே இருக்கும் என்றான் ஒருத்தன். ஏலே செத்தே வாயே மூடுடா ஆரு காதுலயாவது உழப்போவுது. மணியாரையும், கணக்குப்புள்ளயவும் கேக்காம போன மேலுதோலு உறிஞ்சிப் போயிடும், பேசாம கண்ணசருங்க. விடிஞ்சாப்புலே ஓசன பண்ணிக்குவோம் என்றார்.

கடுங்குளிரும் சாரலும் வாட்டி வதைக்க கிழிந்துபோன சாக்குகளை இறுகப் போர்த்திக் கொண்டே உறங்கிப் போனார்கள். வாரிக்கரை வெள்ளம் கனவில் வந்து மூழ்கடித்தது.

சிலமாதங்கள் கழித்து ஒருநாள் இரவு அம்பலத்தின் பங்காளி வகையைச் சேர்ந்த ஒருவரின் மாடு காணாமல் போனது. அக்காலங்களில் மாடு காணாமல் போனால், அடி பார்க்கும் பழக்கம் இருந்தது. சில மாடுகள் அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அடி பார்ப்பவர் வந்து மாட்டுக்குளம்பு தெரியும் பாதையில் சென்று கொண்டிருந்தபோதுதான் மாடு உயிருடன் தோல் உரிக்கப்பட்டு குற்றுயிரும் குலையியுருமாய் கிடந்ததைப் பார்த்தனர்.

கடைசியில் வடக்குத்தெரு பறையன்தான் இதைச் செய்திருப்பான் என்று முடிவானது. வடக்குத் தெரு வாரிக்கரை குடிசைகள் பிய்த்தெறியப்பட்டன. கண்ணில் பட்டவரையெல்லாம் மிருகத்தை அடிப்பதுபோல் அடித்தனர். பெண்டு பிள்ளைகள் அனைவரும் தாக்கப்பட்டனர். அடி பொறுக்கமுடியாது மக்கள் நாலாப்பக்கமும் தெறித்து ஓடினர். அடிப்பவர்களுக்குத்தான் தெரியும் என்ன குற்றமென்று, அடிபட்ட இந்த அப்பாவிகளுக்கு நாம் ஏன் அடிபடுகிறோமென்று தெரியாது. எந்த காலத்திலும் பறையன்களுக்குத்தான் எந்த தண்டனையும் கிடைக்கும். பறைச்சிகளுக்கு அவ்வளவாக இருக்காது. ஆனால் இப்பொழுது யாரும் தப்பவில்லை. நடப்பது ஏனென்றே தெரியவில்லை.

மறுநாள் கோயில் வாசலில் ஊர்கூட்டம். வடக்குத்தெரு பறையர்கள் துண்டை கக்கத்தில் இடுக்கிக் கொண்டே அடிபட்ட துயரத்தை நினைத்ததும் இவர்களையறியாமல் ஏற்பட்ட நடுக்கத்துடன் நின்றிருந்தனர். கூட்டம் தொடங்கியவுடன் பறையர்கள் ஒருசேர இரண்டு கையும் குவித்தவாறே நெடுஞ்சாண்கிடையாக குப்புற கவிழ்ந்தனர். அம்பலம் பேசத் தொடங்கினார். ஏலே சன்னாசி மவனே மாடு தோல உரிச்சது யாருன்னு சொல்லிப்புடு, இல்லாட்டி கட்டி வெச்சு ஒம்தோலை உரிச்சுப்புடுவேன் என்றார்.

மேல்சாதியார் உத்தரவு வரும் வரை நிமிர்ந்து பதில் சொல்லக்கூடாது என்பதால் படுத்துக் கொண்டே அய்யோ சாமி, சாமி சத்தியமா எனக்குத் தெரியாது என்றார் சன்னாசி மகன். ஏலே என்னடா படுத்துக்கிட்டே பதிலா சொல்றே, எந்திருச்சி சொல்லுடா என்று பிணம் போல் புரட்டப்பட்டார். அடி தாங்கமுடியாத சன்னாசி மகன் அருங்குல நாயகி அம்மா நான் ஒரு குத்தமும் செய்யலியே உனக்கு கண்ணிருக்கா? என்று கதறி யழுதார். ஏலே சாமி பேரச் சொல்லி வசாப்பாவுடறே என்றவாறே தடிக்குச்சியால் தாக்கியதில் நெட்டை மரம்போல் சாய்ந்தார்.

சன்னாசி மகனுக்கு அடிபட்ட இடம் ரணமாக மாறி தழும்பாக வாழ்நாள் முழுமையும் நினைவுகூரும் எச்சமாக மாறிப்போனது. தோலுக்காக பறையர்கள் மாட்டை உரித்திருக்கலாம் என்ற உறுத்தல்தான் மேல் சாதிக்காரர்களுக்கு. எனவே உண்மையை வெளிக் கொணரும் வகையில் சேரியிலுள்ள சோத்துப்பானை முதற்கொண்டு கால்நடை வரை சாவடிக்குக் கொண்டு போகப்பட்டன. மேல்சாதியாருக்கான வேலைக்காலங்கள் போக மற்றகாலங்களில் இவர்களின் குலத்தொழிலான பாய் பின்னுவதும் முடக்கப்பட்டது. அச்சு முதற் கொண்டு பாய் பின்னும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. யாருக்கும் வேலை கொடுக்கக்கூடாது என்று பதினெட்டு கிராமத்திற்கும் ஊர்க்கட்டுப்பாடு.

வேலை ஏதுமற்ற நிலையில் ஒரு கவளம் சோற்றுக்கு அலைந்து திரிந்தனர். ஈச்சங்குட்டி கிழங்கையும் குப்பைகளில் விளையும் குப்பைக் கீரைகளையும் உணவாகக் கொண்டு உயிர் வாழ்ந்தனர். ஒருவாரம் கழித்து மணியார் வீட்டில் ஊர்க்கூட்டம். பண்ட பாத்திரங்களும், பாய் நெய்யும் அச்சும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இவர்கள் ஊர்க்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏலே மாட்ட கொன்னவன் யாருன்னு தெரிஞ்சுதா? என்றார் மணியார். சாமி எங்களுக்கு இது சம்பந்தமா எந்த விவரமும் கிடைக்கலன்னு திரும்பத் திரும்ப கூறினர். முத்த மவனே ஒனக்கு பக்கத்து கிராமத்துல ஒறவு இருக்கில்ல. ஆமா, சாமி எனக்கு பொண்ணெடுத்ததும், சொந்த பந்தமும் அங்கதான் இருக்கு. அவங்கள வெச்சுதான் மாட்டுத் தோல உரிச்சதா ஒரு தகவல் இருக்கு. நீ என்ன சொல்றே என்றார் மணியார்.

ஏதுமறியாத முத்தமவன் துடித்துப் போனான். எவ்வளவோ மன்றாடியும் முத்தமவன்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதே ஊர் முடிவானது. இதற்கு அபராதமாக அவனுக்கு சொந்தமான காட்டை ஏலம் விட்டு வரும் பணத்தில் மாட்டின் கிரயத்தைக் கொடுத்துவிட்டு மீதியை கோவிலோடு சேர்த்துக் கொள்வது என்று முடிவானது. இதை மனப்பூர்வமா முத்த மவன் ஒத்துக்கிட்டா சாவடியிலுள்ள அவனவன் சாமான்களை எடுத்துக்கலாம், இல்லேன்னா சட்டிப் பானைத் தவிர ஆடு, மாடு எதுவும் கிடையாது என்று தீர்ப்பானது. தீர்ப்புக் கூறிய மணியார் காலில் விழுந்து கோவென்று கதறினான். ஐயா சாமி, நான் புள்ளக்குட்டிக்காரங்க, அதில வர்ற சோளம், கம்பு, கேப்பைய வச்சுதான் எம் புள்ளக்குட்டிகள காப்பாத்துறேன். இதுவும் போச்சுன்னா எங்கய்யா போவேன் என்று அழுது புரண்டார். இது ஊர் முடிவு என்று மணியார் உதறவே கூட்டம் கலைந்தது.

ஊரின் முடிவை முத்தமவன் மீறவும் முடியாது. நிலத்தை விடவும் முடியாது. நிலத்தை விட்டால் குழந்தைகளை காப்பாற்றுவது என்பதை முடியாத விசயமாகவே முத்த மவன் கருதினார். இரவு முழுவதும் முத்தமவன் குடிசை சோகநிழல் படிந்துள்ள சூழலில் ஏதோ கெட்ட காரியங்கள் நடந்ததைபோல் சோகமே குடிகொண்டிருந்தது. வடக்குத்தெரு பறையர்களும் இப்படி நடந்திருக்குமா? இல்லையா? என்ற கேள்வியோடு அவரவர் குடிசையில் முடங்கிப் போனார்கள். முத்தமவன் ஒரு முடிவோடு விடியலை எதிர்கொண்டார். ஊரின் முடிவை மீறுவ தென்றும், அதை ஊராரின் முன்னிலையிலே செய்வதென்றும் முடிவோடு விடிந்ததும் நேராக அம்பலக்காரர் வீடு நோக்கி நடந்தார்.

அம்பலம், என்னடா காலையிலே வந்திருக்க, ஏதாச்சும் சொல்றியா? என்றார். சாமி உங்களதான் பாக்க வந்தேன். எம்பாட்டன் காலத்து சொத்து. இதவச்சு என் குடும்பத்தே காப்பாத்துனேன். இதுவும் போகப்போவுது. நிலத்த நானே கிரயம் பண்ணி கொடுத்திடறேன். அப்படிக் கொடுத்தாலும் நான்தான் செஞ்சேங்கிற பழி பாவம் என்னவுடாது. இதுநாள் வரை தம்பிரான் குளத்து கரையைத் தவிர அது கங்குலகூட இறங்குனது கிடையாது. அருங்குலநாயகியம்மன் வாசலவுட்டு கோவில் படி கூட ஏறியது கிடையாது. சாமி நான் குத்தமத்தவன்னு ஊருக்கு சொன்னா மாத்திரம் போதாது. தெய்வத்துக்கும் தெரியனும். நாளைக்கு ஊருகூட்டம் கூடுறத்துக்கு முன்னால தம்பிரான் குளத்துல இறங்கி ஈரத்தலையோட கோவில் படியேறி பணத்தை கட்டுறேன். மாட்ட நான் கொன்னிருந்தா என்குடும்பம் குட்டிச்சுவரா போகட்டும்.

இல்லேன்னா என்மேல் வர்ற பழி பாவம் யாரு இத செஞ்சாங்களோ அவங்க பக்கம் போவட்டும் என்றார். அம்பலம் ஒருகணம் திகைத்துப் போனார். ஏலே அவுசாரி மவனே ஏண்டா இத கூட்டத்துலேயே சொல்லல... ஏழ சொல்லு அம்பலம் ஏறுமா சாமி, மணியார் கால்ல உழுந்து கரடியா கத்துனேன். கேக்கலேயே சாமி என்று அழுதார். ஏலே, இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போவல. அருங்குலநாயகியம்மன் பொல்லாப்பய தெய்வம் எங்கிட்ட சொன்ன அதே வார்த்தைய மணியார்கிட்டப் போய் சொல்லு, நான் சொன்னா அம்பலக்காரர் குடி பறையனுக்காக கால்வாங்குறான்னு சொல்வான். நீயே போய் சொல்லு. மத்ததை நான் பாத்துக்குறேன் என்றார்.

மணியாரை சந்தித்த முத்தமவன் அதே செய்தியை கூற மணியாரும் திடுக்கிட்டுப்போனார். இவனோ வடக்குத் தெரு பறையன்களோ செய்திருந்தால் சக்தி வாய்ந்த சந்நிதியில் படியேறி பணத்தை கட்டுவேன் என்று இவனால் கூறமுடியாது. ஆக இந்த விசயத்தில் நமது ஊர் பறையன்களுக்கு தொடர்பில்லை என்று முடிவு செய்தார். ஏலே அம்பலக்காரர்கிட்ட சொன்னியா? சொல்லல சாமி சொன்னா அடிப்பாங்கன்னு ஒங்ககிட்டே வந்தேன் சாமி. மணியார் இந்த செய்தியை நம்பாமல் இருக்க முடியாது. காலங்காலமாக குளத்தில் இறங்காதவர்கள் கோயில் படி ஏறாதவர்கள் ஏறி பணத்தை வைப்பேன் என்பது அனைவரையுமே சிந்திக்க வைத்தது.

மாட்டின் சொந்தக்காரரிடம் அம்பலக்காரரும், மணியாரும் முத்தமவன் கூறிய அனைத்துச் செய்தியையும் கூறினார்கள். மாட்டின் சொந்தக்காரருக்கு உள்ளூர பயம் பிடிக்கலாயிற்று. ஒருக்கால் இவனுவ இதச் செய்யலின்னா தெய்வக்குத்தம் தனது குடும்பத்தையே பழிதீர்த்து விடுமே என்ற பீதி இவரை ஆட்கொள்ளவே சரி மாமா கோயில் படியேறி பணங்கட்றேன்னு சொன்னான்னா நாம யோசனை செய்ய வேண்டியதுதான். இத இதோடு வுட்டுறலாம். அவனுங்க சாமான் சட்டுகளை எடுத்துக்கச் சொல்ல வேண்டியதுதான். சாவடியிலுள்ள பொருட்கள் அனைத்தும் சேரி குடிசைப் பகுதியை நோக்கிப் போயின.

மறுநாள் வடக்குத்தெரு சேரிமக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருந்தனர். அடிபட்ட வேதனையின் ஆற்றாமையால் சன்னாசிமவன் கூறினார்: “காலம்பூரா ஒழச்சி ஒழச்சி நாம என்னத்த கண்டோம். மாடா ஒழச்சி ஓடா தேஞ்சாலும் இந்த ஊரு கள்ளனுவளுக்கு கொஞ்ச மாலும் விசுவாசமில்லாமப் போச்சு. செய்யாத குத்தத்துக் கெல்லாம் கட்டி வச்சி அடிக்கிறதும், வண்டி ஆரக்கால்ல கட்டி உருட்டறதுதான் நாம கண்ட பலன். இனி இவிங்க கிட்ட இருந்து நாம வெட்டிம வேல பாக்கமுடியாது. ஓடுருக்கு, ஊரூருக்கு ஓடிப்போயி பொழச்சிக்கலாம்.”

ஏலே யாருடா இவன் பொரியரிசிக்காக வக்கெப்போர கொளுத்துன கதையாட்டம் பேசுறான், நம்ம பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து வச்சிருக்கிற துண்டு துக்கானி நெலத்தையெல்லாம் நம்மமேல குத்தஞ்சொல்லி அவராதம் போட்டு அவிங்களே அனுவச்சிருக்கிறாங்க, போதும்டா, குட்ட குட்ட குனியறவனும், குனிய குனிய குட்டுறவனும் முட்டாளும்பாங்க. இனி நாம குனியறதுக்கு இந்த பூமாதேவி கூட எடங்கொடுக்காது. இனி அரைநாழிகூட இந்த கரையில குடியிருக்கக்கூடாது. ஆருவூட்டு எல்ல கொல்லயிலேயும் இருக்கவேண்டாம். அம்பலாரும் மணியாரும் வந்து கேட்டாங்கன்னா “நாங்க எல்லாரும் செத்தாலும் சாவோமே தவிர இனி அந்த வாரிக்கரை எங்களுக்கு வேண்டாம்னு சொல்லிடு வோம்” என்று முத்தமவன் கூறினார்.

வாரிக்கரையிலுள்ள குடிசைகளை பிரித்துக்கொண்டு எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்வதென்ற நிலையோடு ஆவாரங்காட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து போனார்கள். சன்னாசிமவன் அடிப்பட்ட காலம் முதல் அவர் சாகும்வரை ஒரு முரட்டுத்தனமான எதிர்ப்பிலே மறைந்து போனார்.

மாட்டின் சொந்தக்காரருக்கு விரோதிகளான உள்ளூர் மிராசுகளே வேற்றூர் பறையனை வைத்து இக் காரியத்தை நடத்தியதாக ஒரு பேச்சுண்டு. பேச்சு இருந்துவிட்டுப் போகட்டும். அந்த காட்டுவாரியை விட்டு வெளியேறி தப்பிக்க அதுவும் ஒரு தோதாச்சு தானே...


தகவலாளிகள்: சா.ராசு, செ.ரெங்கன், பா.பெரியசாமி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com