Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2007
சதாம் உசேன்- அமெரிக்காவின் அவசரம்

எஸ்.வி.ராஜதுரை

அமெரிக்க ஆங்கிலோ ஏகாதிபத்தியத்தின் கடுமையான நிர்பந்தத்திற்கு அடிபணிந்து, இராக் பொம்மை அரசாங்கம், சதாம் உசேனை அவசர அவசரமாக 30.12.2006 அன்று இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்குத் தூக்கிலிட்டுக் கொன்று விட்டது. 23ஆண்டுகாலம் இராக்கில் மிருகத்தனமான கொடுங்கோலாட்சி நடத்தியவர் சதாம் என பி.பி.சி., சி.என்.என்.,போன்ற ஏகாதிபத்திய ஊடகங்கள் மணிக்கணக்கில் செய்துவரும் வர்ணனைகள் இந்தக் கொடிய சர்வதேசக் குற்றத்தை நியாயப்படுத்த முனைகின்றன. ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ இழைத்ததாக சதாம் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவற்றிலொன்றுதான், 1982 இல் டுஜைய்ல் என்னும் இராக்கிய கிராமத்தில் 148 ஷியா முஸ்லிம்களைக் கொலை செய்ய அவரும் குற்றம் சாட்டப்பட்ட பிறரும் உத்தர விட்டனர் என்பதாகும். தாவா என்னும் ஷியா அமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் சதாமைக் கொல்ல முயற்சி செய்ததற்கான எதிர்வினைதான் இந்த உத்தரவு என சதாம் தரப்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்வது என்னும் பெயரால் 11 மாதங்கள் நடைபெற்ற கேலிக்கூத்து, 2006 நவம்பர் 5இல் முடிவு பெற்றது. சதாமுக்கும், அவரது ஒன்றுவிட்ட சகோதரர், சதாம் ஆட்சிக்காலத்தில் இருந்த இராக்கியத் தலைமை நீதிபதி ஆகியோருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் ஆய்வு செய்யும் என்றும், மறுவிசாரணை செய்யத் தேவையில்லை என அது முடிவு செய்துவிட்டால், 30 நாட்களுக்குள் சதாமும் பிற இருவரும் தூக்கிலிடப்படுவர் என்றும் அந்த நீதிமன்றம் அறிவித்தது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் பி.பி.சி. தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இராக் பிரதமர் நூரு கமால் அல்-மாலிக்கி, 2006ஆம் ஆண்டு முடிவதற்குள் சதாம் தூக்கிலிடப்படுவார் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆக, இராக் மேல் முறையீட்டு நீதிமன்றம் யாவரும் எதிர்பார்த்தபடியே சதாமின் தூக்குத் தண்டனையை 2006 நவம்பர் 26இல் உறுதி செய்தது. புஷ் அரசாங்க உயரதிகாரி ஸ்காட் ஸ்டென்ஸெல்,‘கொடுங்கோலனின் ஆட்சிக்கு மாற்றீடாக சட்டத்தின் ஆட்சியைக் கொண்டு வருவதில் இது ஒரு முக்கிய மைல்கல்‘ என வர்ணித்தார்.

2006 நவம்பரில் நடந்த அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே சதாம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சி விரும்பியது. இராக்கில் ‘ஜனநாய கத்தை நிறுவும்’ தனது முயற்சியில் ஒரு கட்டமாகவே சதாம் என்னும் கொடிய சர்வாதிகாரி தண்டிக்கப்பட்டதாகப் பிரச்சாரம் செய்து அமெரிக்க வாக்காளர்களின் ஆதரவைத் திரட்ட புஷ் முயற்சித்தார். இராக்கில் நடக்கும் போருக்கு எதிர்ப்பும் அதிருப்தியும் தெரிவித்த அமெரிக்க வாக்காளர்கள் புஷ்ஷின் கட்சிக்குப் படுதோல்வியை ஏற்படுத்தினர் என்றாலும், வென்ற ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களைக் காப்பதில் குடியரசுக் கட்சியினருக்குத் தாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதைத் தொடக்கம் முதற் கொண்டே வெளிப்படுத்தி வந்தனர். ஜனநாயகக் கட்சியின் தேசியக்குழுத் தலைவர் ஹொவார்ட் டீன், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹில்லாரி கிளிண்டன் போன்றோர்,‘ஒரு கொடிய, தீய கொடுங்கோலனுக்கு நீதி வழங்கப்பட்டு விட்டதாக’ குதூகலித்தனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியக் கருத்துநிலைக் காவலனான ‘நியூ யார்க் டைம்ஸ்’, விசாரணை நடத்தப்பட்ட முறையில் சில ‘குறைபாடுகள்’ இருந்தபோதிலும், சதாமுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு,‘சட்டத்தின் ஆட்சிக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு’ என வர்ணித்தது. விசாரணையின் முடிவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் சில சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் தொடக்கம் முதற்கொண்டே தலையிட்டு வந்ததாகவும், விசாரணை நடந்து வருகையில், சில விஷயங்களில் பாரபட்சமின்றித் தீர்ப்புகள் வழங்க நீதிபதிகள் அனுமதிக்கப்படவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்களுக்கு போதுமான பாதுகாப்பும் அவர்களுக்குத் தேவையான ஆவணங்களும் தரப்படவில்லை என்றும் கூறி, தனது ‘ஜனநாயக உணர்வை’ வெளிப்படுத்திய ‘நியூயார்க் டைம்ஸ்’, இயற்கை நீதி, சர்வதேசச் சட்டங்கள், சர்வதேச நீதி விசாரணை முறைகள் ஆகிய அனைத்தையும் துச்சமெனத் தூக்கியெறிந்துவிட்ட அந்த ‘நீதிமன்றம்’ நடத்திய ஒரு கொடூரமான கேலிக்கூத்தே என்பதயும் அது முழுக்க முழுக்க அமெரிக்க-ஆங்கிலோ ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட நாடகமே என்பதையும் மூடிமறைத்தது.

‘நவீனகாலத்தைச் சேர்ந்த பிற கொடுங்கோலர்களைப் போலன்றி சதாம் தனது சொந்தநாட்டிலேயே விசாரணை செய்யப்பட்டு, தனது சொந்த நாட்டு மக்களாலேயே தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டார்’ என்றும் ‘இது இராக்கில் முளைப் பருவத்தில் இருக்கும் ஜனநாயகத்திற்கு ஊக்கம் தரும் சாதனையாகும்’ என்றும் ‘சிக்காகோ டிரிப்யூன்’ எழுதியது!

சதாமுக்கும் அவருடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் சார்பாக வழக்காடிய சர்வதேச வழக்கறிஞர்கள் குழாமின் தலைவராக இருந்தவர் அமெரிக்காவின் முன்னாள் தலைமை அரசு வழக்குரைஞர் ராம்சே கிளார்க். அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கிலும் மரணதண்டனை முறை ஒழிக்கப்படுவதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இவர், சதாம் மீதான தீர்ப்பு வழங்கப்பட்ட அன்று அந்த நீதிமன்றத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். அவர் கூறிய சில கருத்துகள் இராக்கிய மக்களைப் புண்படுத்திவிட்டாதாகவும் எனவே அவர்மீது அமெரிக்க பார் கவுன்சிலில் புகார் செய்யப் போவதாகவும் இராக்கிய பொம்மை அரசாங்கத்தின் தலைமை வழக்குரைஞர் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையில் இருந்த ‘சிற்சில குறைபாடுகள்’ என ‘நியூயார்க் டைம்ஸ்’ கூறியது இது மட்டுமல்ல. வேறு ‘குறைபாடுகளையும்’ ‘ஊக்குவிப்புகளையும் நாம் சற்று விரிவாகக் காணவேண்டும். இராக் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப் பட்டபின் 2003 டிசம்பர் 13இல் ஒரு பதுங்கு குழியிலிருந்து கைது செய்யப்பட்ட சதாம் ஏறத்தாழ 2ஆண்டுகாலம் ஆக்கிரமிப்புப் படைகளின் சிறப்புபாதுகாப்பில் இருந்தார். அவர்மீது உடனடியாகக் குற்றம் ஏதும் சுமத்தப்படவில்லை. ஆனால் அவர் பிடிபட்ட ஒருவாரத்திற்குள், அதுவரை இராக்கில் இருந்திராத ஒரு உயர் குற்றவியல் நீதிமன்றம் திடீரென முளைத்தது.

இந்த வழக்கு மன்றத்தையும் சதாம் மீதான விசாரணையையும் நடத்த அமெரிக்க நாடாளுமன்றம் 138 மில்லியன் டாலர்கள் வழங்கியது. வெள்ளை மாளிகையில் ‘ஆட்சியிலிருப்போர் இழைக்கும் குற்றங்கள் பிரிவு’ (Regime Crimes Unit) என்னும் பிரிவில் பணியாற்றும் அமெரிக்க அதிகாரிகளின் கட்டுப் பாட்டில்தான் இந்த வழக்குமன்றம் செயல்பட்டு வந்தது. இவர்கள் பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதராலயத்திலிருந்து செயல்பட்டுவந்தனர்.

அமெரிக்க,பிரிட்டிஷ் அரசாங்கங்கள், இந்த வழக்கு மன்றத்துக்கான நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தன. வழக்கை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான பயிற்சி பெற இந்த நீதிபதிகள் இலண்டனுக்கு அனுப்பப்பட்டனர்; பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஒத்திகை பார்ப்பதற்காக இத்தாலிக்கு அனுப்பப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டனர். சதாம் விசாரணை விஷயத்தில் ‘சற்று தாராளமாக நடந்து கொண்டதற்காக’ இந்த நீதிபதிகளில் ஒருவர் கழித்துக் கட்டப்பட்டார். சிலர் தாமாகவே பதவி விலகினர். சதாமுக்காக வழக்காடி வந்த மூன்று வழக்குரைஞர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். சதாம் தரப்பின் முக்கிய சாட்சிகளிலொருவரும் இதேபோலக் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
2006 நவம்பர் 5ஆம் தேதியன்று சதாம் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு மரணதண்டனை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தீர்ப்பு முழுமையாக எழுதி முடிக்கப்பட்டிருக்கவில்லை. 300 பக்கத் தீர்ப்பின் நகல் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர்களுக்கு நவம்பர் 22ஆம் தேதிதான் தரப்பட்டது.
அதாவது மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு 2 வாரத்துக்கும் குறைவான கால அவகாசமே தரப்பட்டது. மேலும், அவர்கள் எழுத்து மூலமாகவும் வாய்மொழியாகவும் தம் ஆட்சேபணைகளைத் தெரிவிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் வாய்ப்புத் தரவில்லை. இன்றைய இராக்கின் அரசியல் சாசனப்படி ஒருவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டால், அதனை நிறைவேற்றும் முன், அந்த நாட்டின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஆனால் குடியரசுத் தலைவர் தலாபானியின் ஒப்புதல் இல்லாமலேயே மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதுதான் அமெரிக்கக் கூட்டுப் படைகள் அங்கு நிறுவியுள்ள ‘ஜனநாயகம்’.

‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ அல்லது ‘போர்க் குற்றங்களை’ விசாரணை செய்வதற்கான வழிகாட்டு நெறிகளை ஜெனீவா ஒப்பந்தம் கொண்டிருக்கிறது. இத்தகைய குற்றங்களை விசாரணை செய்வதற்கென்றே நெதர்லாந்தின் ‘திஹேக்’ நகரில் சர்வதேசக் குற்ற நீதிமன்றம் (International Criminal Court) உள்ளது. சர்வதேச நீதிபரிபாலன நீதிமன்றத் (International court of Justice) தீர்ப்புகள் இத்தகைய விசாரணைகளுக்கு வழிகாட்டியாகவும் உள்ளன. ருவாண்டாவில் டுட்சி இன மக்களை இனப்படுகொலை செய்தவர்கள், செர்பிய முன்னாள் அதிபர் ஸ்லோபோடல் மிலோஸோவிச் ஆகியோர் சர்வதேசக் குற்ற நீதிமன்றத்தால்தான் விசாரணை செய்யப்பட்டனர். ஆனால், ஐ.நா.அவையால் அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றங்களுக்கோ, ஜெனீவா ஒப்பந்தத்திற்கோ அமெரிக்க அரசாங்கம் இதுவரை அங்கீகாரம் தரவேயில்லை; சர்வதேச நியதிகளுக்கும் சட்டங்களுக்கும் கட்டுப்பட மறுக்கும் அமெரிக்காதான் உலகில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதைப் பற்றிப் பேசுகிறது. தன்னுடைய உலகளாவிய ஆதிக்கத்திற்கு இவை தடையாக இருப்பதாகக் கருதுகின்றது.

முறியடிக்கப்பட்டு மண்டியிட வைக்கப்பட்ட ஒரு கொடுங் கோலன் தூக்கிலிடப்பட்டதற்காகக் குதூகலிப்பவர்கள் வெற்றி பெற்ற கொடுங்கோலர்களும் அவர்களது கைக்கூலிகளுமேயாவர். சொல்லப்போனால், 148 ஷியா முஸ்லிம்களைக் கொன்றதாகச் சொல்லப்படும் குற்றத்தைவிட மிகப்பெரும் குற்றங்களை சதாம் இழைத்திருக்கிறார். இவை தொடர்பான குற்றச்சாட்டுகளும் அவர்மீதும் அவரது சகாக்கள்மீதும் இராக் வழக்கு மன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ளன. இவை நிரூபிக்கப்பட்டால், அவற்றுக்கும் மரணதண்டனைதான் வழங்கப்படவேண்டும். ஆனால், அவற்றை விசாரணை செய்வதற்கு முன்பே 148 ஷியாக்கள் கொல்லப்பட்ட வழக்கை முதலில் விசாரணை செய்யவேண்டும் என்றும் இக் குற்றத்துக்காக சதாம் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் விரும்பியதற்கு என்ன காரணம்?

முதலாவதாக, இந்த சம்பவத்துக்கும் அமெரிக்காவுக்கும் நேரடியான சம்பந்தம் இருக்கவில்லை. இரண்டாவதாக, இன்றைய இராக்கிய பொம்மை அரசாங்கத்தின் பிரதமராக உள்ள அல்-மாலிக்கி, தாவா என்னும் ஷியா அமைப்பைச் சேர்ந்தவர். அவரையும் அமெரிக்காவை ஆதரிக்கும் ஷியா குழுக்களையும் திருப்திப்படுத்த இந்த வழக்குக்கு முன்னுரிமை தந்தது அமெரிக்கா.

கொடிய குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என வழக்காடுபவர்களைப் பொறுத்தவரை, தூக்கில் தொங்கவிடப் பொருத்தமானவர்களிலொருவர் சதாம் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகள் இராக்கிய நகரங்களான அபு காரிப்,பல்லுஜா முதலியவற்றில் இராக் கைதிகள் மீதும் அப்பாவிப் பொதுமக்கள் மீதும் இழைத்த சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் பற்றிய செய்திகளை இன்று உலகம் முழுவதும் அறியும். இராக்கில் மிகக் கொடிய சித்ரவதைகளுக்குப் பெயர் போனது அபுகாரிப் சிறையாகும்.
சதாமின் பாத் கட்சியை எதிர்த்தவர்கள் பலர் மரணதண்டனை வழங்கப்பட்டு அச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

சதாம் ஆட்சிக் காலத்தில் அந்தச் சிறையில் மரணதண்டனைக் கைதிகளைத் தூக்கில் போடுவதில் தேர்ச்சி பெற்றிருந்தவராக இருந்த அபு வாஹித் என்பவன், அவர்களில் யாரேனும் ஒருவர் சதாமின் கட்சியை விமர்சித்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும், தனது கையில் எப்போதும் வைத்திருந்த கோடரியால் அவரது தலையில் ஒரு போடு போடுவானாம். அத்தகைய கொடூரமான மனிதனும்கூட 1985இல் ஒருநாள் அதே சிறையில் தூக்கில் தொங்கவிடப்பட்டான்.

மரணதண்டனை வழங்கப்பட்ட ஒருகைதிக்குப் பதிலாக மன்னிப்பு வழங்கப்பட்ட ஒரு கைதியைத் தூக்கிலிட்டுவிட்டான் - கையூட்டுப் பெற்றுக் கொண்டு என்னும் குற்றச்சாட்டின் பேரில். சதாமுக்கு இன்று நேர்ந்ததை இந்த சம்பவத்தோடு ஒப்பிடுகின்றனர் சிலர். ஆனால், இவர்கள் தார்மீகரீதியில் சதாமைவிட உயர்ந்தவர்கள் என உரிமை பாராட்டிக் கொள்வதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனெனில், இவர்கள் அனைவருமே, ஜார்ஜ் புஷ் போன்ற அமெரிக்க ஆட்சியாளர்களைப் போல, ஒரு காலத்தில் சதாமின் நண்பர்களாக இருந்தவர்கள்தான்.

அவர்கள் இப்போது மகிழ்ச்சியடையக் காரணம், சதாமை உடனடியாகத் தூக்கில் போட்டுவிட்டதன் மூலம், அவர்மீது சுமத்தப்பட்ட பிற வழக்குகள் விசாரணைக்கு வராமல் தடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான். அவை விசாரணைக்கு வந்து அப்போது சதாம் உயிரோடு இருந்திருப்பாரேயானால், அவரது கொடுங்குற்றங்கள் சிலவற்றுக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு துணை புரிந்திருக்கிறது என்பதை அவர் அம்பலப்படுத்தியிருப்பார். விஷவாயுவைப் பயன்படுத்தி, இராக்கில் ஆயிரக்கணக்கான குர்துக்களை சதாம் உசேன் கொன்றார் என்பது அவர் மீதான மற்றொரு குற்றச்சாட்டு. மனித குலத்திற்கு எதிரான இந்தக் கொடுங்குற்றத்தை அவர் இழைத்ததாக 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகே பதைபதைத்தனர் பிரிட்டிஷ், அமெரிக்க ஆட்சியாளர்கள்.

ஆப்கனிலும் மத்தியக் கிழக்கிலும் அமெரிக்கா இழைத்து வரும் கொடுங்குற்றங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ராபர்ட் பிஸ்க் சில உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். 10ஆண்டுகள் நீடித்த இராக்-ஈரான் போரில் சதாமுக்குப் பக்கபலமாக இருந்தது அமெரிக்கா. 1991இல் குவைத் மீது படை யெடுக்கும் வரை அமெரிக்காவின், சிஐஏவின் நண்பராக இருந்தவர்தான் சதாம்.

அமெரிக்கா குத்தகைக்கு எடுத்துக் கொண்ட குவைத்தை சதாமிடமிருந்து ‘காப்பாற்ற வேண்டிய’ தேவை ஏற்பட்ட பிறகே, சில உண்மைகளை வெளியிட வேண்டிய கட்டாயம் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. ‘வங்கித்தொழில், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்களுக்கான அமெரிக்க செனட் குழு’ `1994 மே மாதம் வெளியிட்ட அறிக்கை, பாரசீக வளைகுடாவில் பயன் படுத்தப்படுவதற்காக இரசாயன, உயிரியல் ஆயுதங்களை இராக்குக்குக் கப்பல்களில் ஏற்றிச் செல்ல அமெரிக்க வணிகக் கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் 1985ஆம் ஆண்டிலும் அதற்கு முன்பும் அனுமதி வழங்கியதாக அந்த அறிக்கை கூறியது.

பூச்சிக்கொல்லி மருந்துத் தொழிற்சாலை களை நிறுவுவது என்னும் பெயரில் போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படக்கூடிய இரசாயன, உயிரியல் பொருட்களைத் தயாரிக்க இராக்கிய அரசாங்கத்திற்குத் தேவையான பொருட்களை அனுப்ப அமெரிக்க அரசாங்கம் உரிமம் வழங்கியதாகவும் அந்த அறிக்கை கூறியது. ஒஸாமா பின்லேடனின் அல்-கொய்தா அமைப்பினர் வைத்திருப்பதாக இப்போது அமெரிக்காவால் சொல்லப்படும் ‘ஆந்த்ராக்ஸ்’ என்னும் கொடிய நச்சுப்பொருளைத் தயாரிக்க உதவும் உயிரியல்-இரசாயனப் பொருளான பேசில்லஸ் ஆந்தராஸிஸ் (bacillus anthracis) என்பதும் இவற்றில் அடங்கும்.

ஈரானியப் படை மீதும் குர்துகள் மீதும் சதாமின் இராணுவம் பயன்படுத்திய கடுகு வாயுவைத் (mustard gas) தயாரிப்பதற்கு வேண்டிய இரு முக்கிய மூலப்பொருட்களிலொன்றான தியோடிக்லைக்கோல் (thiodiglycol) 1988,1989 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து இராக்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு 250000 பவுண்டுகள். 1988இல் 26000 பவுண்டுகள் மதிப்புடைய தியோனில் குளோரட் என்னும் இரசாயனப் பொருளும் இராக்குக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்தது. இது பால் பாயிண்ட் பேனாவுக்குத் தேவையான மசியைத் தயாரிக்க உதவும் பொருள் என்றாலும் இதை நச்சு ஆயுதமாகவும் பயன்படுத்த முடியும். ஆனால், இத்தகைய நச்சுப் பொருட்களை ஏற்றுமதி செய்த அமெரிக்கா 1991 வளைகுடாப் போருக்குப் பின், இராக்மீது பொருளாதாரத் தடைகள் விதித்தது. டிப்தீரியா நோயால் ஆயிரக்கணக்கான இராக்கியக் குழந்தைகள் மடிந்து கொண்டிருந்தபோது, தடுப்பு ஊசி மருந்தை இராக்கிற்கு ஏற்றுமதி செய்யத் தடை செய்தது. அந்த மருந்து ‘பேரழிவு உண்டாக்கும் ஆயுதங்களைத்’ (weapons of mass destruction) தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகக் கூறியது அமெரிக்கா!

1987,1988ல் சதாம் நடத்திய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் 180,000 குர்துக்கள் கொல்லப்பட்டனர். அப்போது அவர் அமெரிக்காவின், சிஐ.ஏவின் நண்பர். எனவே, மத்தியக் கிழக்குநாடுகளில் இருந்த அமெரிக்க அரசு தூதர்களிடம் சிஐஏ, குர்துகள் மீது நச்சு வாயுவைப் பயன்படுத்தியது ஈரானியர்கள் தானேயன்றி சதாமின் இராணுவத்தினரல்லர் என்னும் பச்சைப் பொய்யைக் கூறியது.

148 ஷியா முஸ்லிம்கள் சதாமால் கொல்லப்பட்டது குறித்து இரத்தக்கண்ணீர் வடிக்கும் புஷ்ஷும் பிளேயரும், சதாமின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஷியா,குர்துகள் நடத்திய நூற்றுக்கணக்கான போராட்டங்களை-இதில் அவர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். பிரிட்டிஷ் அரசாங்க ஆவணங்கள், ‘சதாம் ஆட்சிக்கு எதிரான கலவரங்கள்’ என்றே வகைப்படுத்தின. அப்போது ஷியா,குர்துக்களுக்கு உதவ எந்த வெள்ளைதுரையும் வரவில்லை. ஹாலாப்ஜா நகரில் 5000 குர்துக்கள் இந்த நச்சுவாயுவால் கொல்லப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான ஈரானியப் படைவீரர்களின் உடல்களில் இந்த நச்சுவாயு ஆறாத இரணங்களை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல. 1991-2003 வரை இராக்மீது விதித்த பொருளாதாரத் தடைகளால், 10இலட்சம் இராக்கியர் பட்டினியாலும் நோயாலும் மடிந்தனர். 5,00,000 இராக்கியக் குழந்தைகள் மடிந்ததற்கு இப்பொருளாதாரத் தடைகள்தானே காரணம் என அமெரிக்கத் தொலைக்காட்சியொன்று எழுப்பிய கேள்விக்கு அன்றைய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மேடலைன் அல்பிரைட், இராக்கில் ஜனநாயகத்தையும் அமைதியையும் நிலைநாட்டத் தரவேண்டிய விலைதான் இது எனப் பதிலளித்தார்.

2003 இல் இராக் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு, 2006 அக்டோபர் வரை, ஏறத்தாழ 655000 இராக்கியர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அரசாங்கம்தான் பொறுப்பு என அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த முக்கியமான ஆய்வுகளுக்கு அமெரிக்க ஊடகங்கள் எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. கொலை செய்யப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குற்றத்தின்,அதுவும் மனித குலத்துக்கு எதிரான குற்றத்தின் அளவு தீர்மானிக்கப்படுமேயானால், உலகின் முதல் குற்றவாளிகளாகக் கருதப்பட வேண்டியவர்கள் புஷ்ஷும் பிளேயரும்தான். இந்தக் குற்றவாளிகள் தான் ஷியாக்களுக்கும் குர்துக்களுக்கும் விடுதலை வழங்குவார்கள் என்று அந்த மக்களை நம்பச் செய்துகொண்டிருக்கும் ஷியா, குர்து தலைவர்களுக்கும் சதாமிற்கு ஏற்பட்ட கதி நிச்சயம்.

சதாம் எத்தனையோ குற்றங்களை இழைத்திருந்த போதிலும், அவரது ஆட்சியின்போதுதான், பெண்கள் கல்வி வளர்ச்சியும் பல்வேறு உரிமைகளும் பெற்றனர். இராக் ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தது. ஒஸாமா பின்லேடன் போன்ற அடிப்படை வாதிகளுக்கு அங்கு இடம் இருக்கவில்லை. நாடு தொழில் வளர்ச்சி கண்டது. ஆனால், அமெரிக்கக் கூட்டுப்படைகளின் ஆக்கிரமிப்பு ஷியா, ஸன்னி, குர்து மக்களுக்கிடையிலிருந்த பிளவுகளை மிகவும் ஆழப்படுத்தியுள்ளது. மத, இன அடிப்படையில் நாடு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்கி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை பலி வாங்குகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தற்போக்கான, சர்வாதிகார நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்கும் தேச அரசுகள் இன்று ஏதும் இல்லை. தங்கள் நாடுகளில் மரணதண்டனை முறையை ஒழித்துக் கட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சதாமின் மரணதண்டனை பற்றி வாய் திறக்கவில்லை சீனா, ரஷ்யா முதலியனவும் வாய் பொத்தி நிற்கின்றன. உலகில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான திட்டமொன்றுக்கு ஜார்ஜ் புஷ்ஷுடன் ஒரு ஒப்பந்தம் செய்கொண்டிருக்கும் இந்திய அரசாங்கம், சதாம் தூக்கிலிடப்பட்டதற்கு ‘வருத்தம்’’ தெரிவித்திருக்கிறது. முன் எப்போதுமில்லாத இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுள்ள உலக மக்களுக்கு எதிர்காலம் ஒரு விடுதலைப் பாதையைத் திறந்துவிடக்கூடும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com