Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2007
தொடரும் குரூர சாஸ்திரம்: கயர்லாஞ்சி

எஸ். காமராஜ்

தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் மலைவாழ் மக்கள் மீதும் கட்டவிழ்த்துவிடுகிற கொடுமையும் சித்திரவதையும் மிகப்பழமையான இந்திய மூலக்கூறு. அந்தக் கொடுமைகள் சுதந்திரத்திற்குப் பின்னால்தான் நிறுவனப்படுத்தப்பட்டு தொடர்கிறது. சுதந்திரம் வந்தபோது தாழ்த்தப்பட்டவர்களை தீண்டாமையிலிருந்தும்,வன்கொடுமைகளிலிருந்தும் பாதுகாக்க சட்டப்பூர்வமாகவும்,அரசியல்ரீதியாகவும் சில தடுப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்களின் விழிப்புணர்வுகளால்,தாங்கள் மிதிக்கப்படுகிறோம் எனும் எண்ணம் வர ஆரம்பித்தது. அதைப் பொறுத்துக்கொள்ள இயலாத ஆதிக்கசாதியினர் வன்கொடுமைகளைக் கொண்டு பயத்தை நிலைநாட்ட ஆரம்பித்தனர்.

(ஒருங்கிணைக்கப்பட்ட சமூகச்சதி, வன்கொடுமை குறித்த விசாரணை அறிக்கை)

‘தாழ்த்தப்பட்டோர், மலைசாதியினரின் விழிப்புணர்வு அவர்களின் கல்விப்பரவலால் சாத்தியமாகிறது. அதன் மூலம் தங்களின் உரிமைகள் குறித்து புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றனர். தீண்டாமைக் கொடுமையை எதிர்க்க முயற்சி செய்கிறார்கள். அதை ஆதிக்கசாதியினர் அன்பாக ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்தபட்சக் கூலி உயர்வுக்கான சட்டப்பூர்வமான கோரிக்கை, கொத்தடிமைகளாக, நிப்பந்தக்கூலிகளாக நீடிக்க மறுக்கிற மீறல், தங்களின் சுயமரியாதையையும்,மனைவிமார் கற்பையும் பாதுகாக்க எடுக்கிற முயற்சி எல்லாவற்றையும் ஆதிக்க சாதியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை சினம் கொள்கிறார்கள்’’-வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1989 துரதிர்ஷ்டவசமாக வன்கொடுமைகள் குறித்த விசாரணை எல்லாமே இச்சமுதாயச் சதியைப் பார்க்கத் தவறுகின்றன.

எனவே அவையாவும் ஒரு குற்ற விசாரணையைப் போலவே மேற்கொள்ளப்படுகின்றன. வரலாற்றுரீதியாக அணுகப்படாத இம்மாதிரியான விசாரணைகள் ஒரு நீண்டகால நிவாரணத்தை முன்வைக்க முடிவதுமில்லை. குறைபாடுடனான விசாரணைகள் எல்லாமே மேற் சொன்ன சமுதாயக் கூட்டுச்சதியின் ஒருபகுதியாகவே மாறுகிறது. அது தொடரும் வன்முறைகளுக்கு உரமாக,ஊக்கமாக மாறுகிறது. கயர்லாஞ்சி தலித்கள் மீது நடத்தப்பட்ட கூட்டுக்கொலையும் பாலியல் வன்கொடுமையும் தேசியஅவமானத்தின் சமீபத்திய சாதனை. சார்புத் தன்மையில்லாத, விருப்புவெறுப்பற்ற முதற்கட்ட விசாரணையில் கிடைத்த ஆவணங்கள் யாவும் இது ஒருங்கிணைக்கப்பட்ட சமுதாயச்சதி என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கிறது. மாவட்ட நிர்வாகம், நீதித்துறை, மருத்துவத்துறை எல்லாமே தங்களின் கடமைகளில் இருந்து நழுவுவதால் உணர்வுப்பூர்வமாக இந்தப் படுகொலையோடு கைகோர்க்கின்றன.

சமுதாயச்சதி எப்படி ஒருங்கிணைக்கப்பட்டது என்பதிலும்,தாயும் மகளும் ஒருசேர மானபங்கப் படுத்தப்பட்ட போதும், நான்கு கொலைகள் ஒரு விஷேச வைபவம் போல ஊருக்கு நடுவில் நடந்தபோதும் தடுக்காத ஒட்டுமொத்த சமூகம் குறித்த விஷேச கவனம் செலுத்த வேண்டிய அவசியம் அரசுப் பொறுப்பாளர்களுக்கும், வழக்கமான விசாரணை நிறுவனங்களுக்கும் இருக்கிறது. ஒரு தீவிர கவனம் இல்லாதபட்சத்தில் வன்கொடுமைச் சட்டம், விசாரணை, தண்டனை அமலாக்கல் எல்லாம் கேலிக்கூத்தாக மாறிப்போகும்.

10.11.06 அன்று சம்பவம் குறித்த இடைக்கால அறிக்கை ஒன்று மராட்டிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பயண எல்லைவரையான நேரடி விசாரணை,பார்வை எல்லைவரையான பொதுச்சமூக விசாரம் இவற்றோடு ஒரு நெடிய அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அது தொடரும் வன்கொடுமைகளை உடனே மறிக்கிற உத்திகளோடும், வளரவே விடாமல் வேரறுக்கிற நீண்டகாலத் திட்டத்தோடும் இருக்கிறது. படிக்கிறவர்களை உலுக்கும் நிகழ்வுகள் வரிசைப் படுத்தப்பட்டிருக்கின்றன. மனித இனத்தின் மீதும் மனிதாபிமானத்தின் மீதும் விழுந்த பழியைத் துடைக்க அது உதவும் என்ற நம்பிக்கையோடு கயர்லாஞ்சிக்கு வழி கேட்போம். வன்கொடுமை தடுப்புச்சட்டம் 1989ன் கீழ் ஆணையிடப்பட்ட விசாரணைக்குழு 03.11.06 முதல் 9.11.06வரை நடத்திய விசாரணை: சம்பவத்தோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய 28 பேர் விசாரிக்கப்பட்டனர். பேட்டிகளின் ஒளி, ஒலி ஆவணங்கள்-12, மாவட்ட நிர்வாகம் குறித்த ஆவணம்- 15, வருவாய்த் துறை ஆவணங்கள்-35, காவல்துறை ஆவணங்கள்- 31, ஆவணங்களை ஆராய்ந்து மதிப்புரை வழங்கிய நான்கு பேரடங்கிய வல்லுநர் குழுவின் கருத்து ஆகியவற்றின் சுருக்கப்பட்ட சாராம்சம் இந்த விசாரணை அறிக்கை.

கயர்லாஞ்சி
மொஹாதி தாலுகா
பண்டாரா மாவட்டம்
மஹாராஷ்ட்ரா மாநிலம்

இந்திய வரைபடத்தில் ஒரு சிறுபுள்ளியினும் தெரிகிறது அதோ சிறிய அந்த ஊர். உலக சரித்திரத்தில் ஒரு அழிக்க முடியாத கரும்புள்ளியாக மாறிப்போனது. தீவிரவாதம் சூழ்ந்திருக்கும் நாக்பூர், சந்தர்ப்பூர், கட்ச்ரோலி ஆகிய மாவட்டங்கள் சூழ்ந்திருக்கும் ஒரு குக்கிராமம். மத்தியப் பிரதேச எல்லைக்கருகிலுள்ள அங்கு கோதுமை, நெல், கிழங்குவகைகளோடு பாரதிய ஜனதாக் கட்சியின் செல்வாக்கும் செழித்திருந்தது. பயிர்களுக்கான நீராதாரம் பெஞ்ச் கால்வாயிலிருந்து கிடைத்தது. பொருளாதாரம் முப்போகம் விளையும் பயிர்களாலும் பண்ணையடிமைகளாலும் பெருத்திருந்தது. ஒழுங்காக திட்டமிடப்பட்ட தெருக்கள், திண்ணமுறக் கட்டிய வீடுகள், வீட்டு முகப்புகளில் கணவன் மனைவி இருவர் பெயரும் தாங்கித் தொங்கும் பெயர்ப்பலகைகள், தூய்மையும் வசதியும் நிறைந்த அந்த ஊரின் மொத்த மக்கள் தொகை 800. களர்,குனாபி,திவாரி,தெளி, லோதி,வதை எனும் பிற்படுத்தப்பட்ட மக்கள் 750 பேரும், அவர்களுக்கு அடிபணிந்து தொண்டு செய்ய 30 மலைசாதியினரும் 20 மஹர்சாதி தாழ்த்தப்பட்டவர்களும் சபிக்கப் பட்டிருந்தார்கள்.

பையாலால் போட்மாங்கே (வயது 55)
சாதி- தாழ்த்தப்பட்டவர்- மஹர்,
கல்வி- நடுநிலைக்கல்வி
உடமைகள்- சர்வே எண் 277 ல் 2 ஹெக்.வயல்,
ஒரு பஞ்சாயத்து கச்சாவீடு.

குடும்பத்தினர்:
சுரேகா போட்மாங்கே (மனைவி) வயது 45,
சுதிர் போட்மாங்கே (மகன்) வயது 25,
பிரியங்கா போட்மாங்கே (மகள்) வயது17,
ரோசன் போட்மாங்கே (மகன்) வயது 14.

அம்பாகத் கிராமத்திலிருந்து குடிபெயர்ந்து வந்த போட்மாங்கேவுக்கு அவரது தாய்மாமனின் இரண்டு ஹெக்டேர் விவசாய நிலம் தானமாகக் கிடைத்திருந்தது. அந்த நிலத்தில் கிணறு தோண்டி விவசாயம் செய்தார்கள். விவசாயத்தில் கிடைத்த வருமானமும்,குடும்பமே பீடி சுற்றிக் கிடைத்த காசும் சேர்ந்து போட்மாங்கேயின் குடும்பத்தை ஒரு தன்னிறைவான குடும்பமாக மாற்றியிருந்தது. எனவே அடிமை வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லாமலிருந்தது. முன்னதாக அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின் சொந்தக்காரன் செய்த சில்மிசங்களும் அட்டகாசங்களும் ரொம்பவும் விரசமானவை.

சுரேகா குளிக்கிற வேளைகளில் அத்துமீறி குளியலறைக்குள் நுழைவானாம். எனவே அவர்கள் சொந்தமாக ஒரு வீடுகட்டிக்கொள்ள ஆசைப்பட்டனர். ஆனால் கிராம நிர்வாகம் அனுமதி மறுத்தது. பின்னர் பஞ்சாயத்தில் தலித்துகளுக்காகக் கட்டப்பட்ட கச்சா வீட்டில் குடியேறினர். அங்கும் அவர்களுக்கு மின்சார இணைப்பு மறுக்கப்பட்டது. ஓரளவு படித்திருந்த போட்மாங்கேயும் சுரேகாவும் தங்கள் பிள்ளைகளை உயர்ந்தபட்சக் கல்வி கற்கவைக்க கனவு கண்டார்கள். பிரியங்கா அப்போது மேனிலை 2ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். மகன்களில் ஒருவன் கணினி படித்துக் கொண்டிருந்தான். ஊராரின் பொறாமை கிசுகிசுப்பாக மாறியிருந்த போதும் பிரியங்காவை மொஹாதிக்கு படிக்க அனுப்புவதில் அவர்களுக்குத் தயக்கம் ஏதும் இல்லை.

அவளுக்கு இரு சக்கர வாகனம்கூட வாங்கிக் கொடுத்திருந்தனர். பிரியங்காவும் மின்சாரம் இல்லாத அந்த வீட்டின் மண்ணெண்ணெய் விளக்கின் மூலம் தன்னைச் சூழ்ந்திருக்கும் இருளை வெற்றி கொண்டாள். அவளே எல்லா வகுப்புகளிலும் முதலாவதாக இருந்தாள். ஒரு ராணுவ உயர் அதிகாரியாகிற கனவுகளோடு படித்தாள். கடின உழைப்பாளியான தாய் சுரேகாதான் அந்த வீட்டின் மையப்புள்ளி. கறார்ப்பேச்சு, எதிர்த்துப் பேசும் துணிச்சல் எல்லாம் சேர்ந்து அவளுக்கு ஒரு தனித்த அடையாளத்தை உண்டாக்கியிருந்தது. துஸ்ஸாலாவில் வசித்துவரும் போட்மாங்கேயின் உறவினர் சித்தார்த் காஜ்பயி ஒரு கிராமக் காவலர். பௌத்தம் தழுவிய அக்குடும்பத்தோடு ஆதரவையும் நட்பையும் பொருள்களோடும்,சந்தோசத்தோடும் பரிமாறிக் கொண்டார்கள். இவ்வளவு விஷயங்கள் உயர்சாதி மக்களின் பொறாமையைத் தூண்டிவிடப் போதுமானதாக இருந்தன. அதில் உண்டான கோபத்தால் அந்தக் குடும்பம் பரிகாசத்திற்கும்,அவதூறுகளுக்கும் ஆளாகியது.

நிலத்தால் வந்த பிரச்சினை: சர்வே எண் 277ல் போட்மாங்கேவுக்கு இருந்த 2 ஹெக்டேர் நிலத்தால் வந்த சுயமரியாதையை பறிக்க எண்ணிய ஊர் அவரிடம் இருந்து கைப்பற்ற பல உபாயங்களைக் கையாண்டது. ஊருக்கான பொதுப்பாதை,போட்மாங்கே நிலத்தில் இருந்துதான் தரவேண்டும் என்று வருவாய்த்துறை நீதி மன்றத்தில் ஊர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தாவாவுக்குட்பட்ட நிலத்தை நேரில் பார்க்காமலும்,ஆவணங்களை பரிசீலனை செய்யாமலும் 30.6.2004ல் தாசில்தார் வழங்கியத் தீர்ப்பு போட்மாங்கேவுக்கு எதிராக அமைந்தது. ஊராரின் சாதிச் செல்வாக்கால் தாசில்தாரின் தீர்ப்பை அவர்கள் பக்கம் திருப்பிக்கொள்ள முடிந்தது. பாதிக்கப்பட்ட போட்மாங்கே,சித்தார்த்தின் உதவியோடு, மொஹாதி மாவட்ட நில அளவை அதிகாரியிடம் மேல் முறையீடு செய்தார். 24.7.2004 அன்று நில அளவையில் தேவையான திருத்தம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. தங்களின் திட்டம் முறியடிக்கப்பட்ட கோபம் முழுக்க வெறியாக மாறி அது போட்மாங்கே மீதும்,சித்தார்த் மீதும் திரும்பியது.

வன்கொடுமைக்கான உடனடிக் காரணங்கள்: 03.9.2006 அன்று பிரியங்கா,சுரேகா முன்னிலையில் சித்தார்த் தாக்கப்படுகிறார். அதற்கு உப்புச்சப்பில்லாத கூலிப்பிரச்சினை காரணமாக்கப்படுகிறது. மிக மோசமாகத் தாக்கப்பட்ட சித்தார்த், நாக்பூர் மாவட்டம் கம்டீ நகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். காயங்கள் பயங்கரமாக இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் கம்டீ காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்லிவிடுகிறது. பதிமூன்று நாட்கள் கழித்து 16.9.06 அன்று வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழ் புகார் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் 15 பேர்மேல் FIR பதிவாகும்போது சாதாரண அடிதடி மற்றும் PCR வழக்கு மட்டும் தான் பதிவாகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த சுரேகா சாட்சியாக நியமிக்கப்படுகிறார். அவசியமின்றி உதவி அரசு வழக்குரைஞர் திருமதி.மீனா காஜ்பயிடம் கருத்து கேட்கப்படுகிறது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கான அத்தனை அம்சங்களும் இருந்தபோதும் வேண்டுமென்றே ஒரு குழப்பமான கடிதம் கொடுக்கிறார். 29.9.06 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்ட 15 பேரில் 12பேர் கைதாகி அன்றே பிணையில் விடுவிக்கப் படுகிறார்கள். சுமார் 16நாட்கள் தொடர்ந்த இப்பதற்ற நிகழ்வுகளால் ஊரின் கொதிப்பும் கோபமும் போட் மாங்கே குடும்பத்தை நோக்கிக் கூர்மையடைகிறது. ஒரு கொலைவெறித் தாக்குதலுக்கான சூழலும் சதித் திட்டமும் தயாரிக்கப்படுகிறது. சதியாலோசனை பற்றிய செய்தி கசிந்து ஊர்ப் பொதுக்கிணற்றுக்குத் தெரியவருகிறது. அப்படியே போட்மாங்கேயின் வீட்டுக்கும் அது தெரியவருகிறது.

பிணையில் விடுவிக்கப்பட்ட 12பேர் ஊருக்குள் வரும் முன்னரே சித்தார்த்தின் தம்பி ராஜன் காஜ்பயி (பௌத்த அமைப்பின் தீவிர உறுப்பினர்) ஒரு கும்பலோடு அவர்களைத் தாக்கத் தயாராக இருப்பதாக வதந்தி பரப்பி விடப்படுகிறது. ஊருக்குள் வரும் கைதிகளின் கோபம் உச்சநிலைக்குப் போகிறது. ஒரு கொலைவெறிக் கும்பல் டிராக்டரை அமர்த்திக்கொண்டு ஆயுதங்களோடு துஸ் ஸாலா நோக்கிப் புறப்படுகிறது. பிரியங்காவும் போட் மாங்கேயும் இருசக்கர வாகனத்தில் முந்திப்போய் தகவல் சொல்லிவிடுவதால் டிராக்டரில் போன கும்பல் ராஜனைக் காணாமல் கயர்லாஞ்சி திரும்புகிறது.

அப்போது மாலை ஆறு மணி. வெறிகொண்ட கும்பல் அப்படியே போட்மாங்கேயின் வீட்டுக்கு வருகிறது. போட்மாங்கே வயலுக்குப் போய்விட்டதால்,மீதமுள்ள நான்குபேரையும் தாக்க ஆரம்பிக்கிறது. சுரேகாவும், பிரியங்காவும் அருகிலுள்ள மாட்டுக்கொட்டிலுக்கு அடித்து இழுத்துச் செல்லப்படுகிறார்கள். ஆடைகளும் மானமும் ஊராரின் வெறிக்குப் பங்குபோடப்படுகிறது. மனிதாபிமானம்,ஆறாம் அறிவு,அவர்கள் பின்பற்றும் சமயநெறி எல்லாம் நாடு கடத்தப்படுகிறது. இந்த உலகம் கற்பனை செய்யமுடியாத,கேள்விப்பட்டிராதவன் புணர்ச்சியை,குழுக்கற்பழிப்பை மனிதர்கள் என அறியப்பட்டவர்களே நடத்தினர். சுதிரும்,ரோஷனும் கொடூரமாகத் தாக்கப்பட்டு, மாட்டுக் கொட்டடிக்கு இழுத்து வரப்படுகிறார்கள். பிரியங்காவைக் கற்பழிக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். மறுத்த அவர்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு சாகடிக்கப்படுகிறார்கள்.

வீடு திரும்புகிற போட்மாங்கே பேதலித்துப்போய், செய்வதறியாது துஸ்ஸாலாவை நோக்கி ஓடுகிறார். அங்கு ராஜனிடம் முறையிடுகிறார். முன்னதாக சுமார் 6.20 மணிக்கு சுரேகாவும் செல்போனில் உதவி கேட்கிறார். ராஜன் கயர்லாஞ்சி வரும்போது சுமார் 60 லிருந்து 70 பேர் சேர்ந்து போட்மாங்கேயைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உயிருக்குப் பயந்து ராஜனும் துஸ்ஸாலாவுக்குத் தப்பித்து ஓடிப்போகிறார். நடமாட முடியாமலிருக்கும் சித்தார்த் துஸ்ஸாலாவில் இருந்தபடியே அந்தல்கவூன் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லுகிறார். ஆனால் போலீஸ் வரவில்லை. இதற்கிடையில் நான்கு அப்பாவிகளும் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் ஒரு மாட்டுவண்டியில் ஏற்றப்பட்டு பிரதான தெருவழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பெஞ்ச் கால்வாயில் மூழ்கடிக்கப்படுகிறது.

மிருகப் பெரும்பான்மையாயிருந்த அந்த ஊரில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும், இக்கொடூரச் சம்பவத்தைத் தடுக்க முயன்று முடியாமல் திரும்பிவிடுகிறார்கள். மிச்ச எண்ணிக்கைகள் வேடிக்கை ஜந்துக்களாகி ரசித்திருக்கிறார்கள். எல்லாம் ஆடி அடங்கிய பின், இரவு சுமார் எட்டுணிக்கு மேஸ்ரம் என்ற காவலர் ஊருக்குள் வரும்போது 'நிலைமை கட்டுக்குள் இருக்கிறது,பதற்றம் இல்லை' என அந்தல்கவூனில் உள்ள தன் உயரதிகாரிகளுக்குத் தகவல் அனுப்புகிறார். ஆனால் சடலங்களைத் தேடும் முயற்சி ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

வன்கொலை நடந்த மறுநாள் 30.9.06 காலை 8 மணிக்கு அந்தல்கவூன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போட்மாங்கேவை மிரட்டி காணாமல் போனவர்களைத் தேடச் சொல்லி திருப்பியனுப்புகிறது காவல்துறை. அந்த அப்பாவி, தனது மாமியார்,மைத்துனர்,உறவினர் வீடுகளில் தீவிரமாகத் தேடுகிறார். அன்று மாலை கண்டெடுக்கப்பட்ட உடல்கள் சுரேகாவின் சகோதரி மகன் ராஷ்ற்றபாலினால் அடையாளம் காட்டப்பட்டு மொஹாதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பணியில் உள்ள மூத்த மருத்துவ அதிகாரி திருமதி.பாண்டேவுக்கு வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து அவர் விடுப்பில் செல்கிறார். அனுபவமில்லாத புதிய உதவி மருத்துவர் திரு.அண்டே பிரேதப் பரிசோதனை செய்கிறார்.

அரசியல் சமூக எதிர்வினைகள்: நீண்டுகொண்டு போகிற இக்கொடுர நிகழ்வுகள் உலகுக்குச் சொல்கிற செய்தி,அரசும் அரசு எந்திரமும் நீதித்துறை உள்ளிட்ட யாவும் உயர்சாதி ஆதிக்க மனோபாவத்தால் நடை முறைப்படுத்தப்படுகிறது என்பதுதான். அதைத்தான் திரு ரத்னாகர் கெய்க்வாட் (முதல்வர்,அம்பேத்கர் பல்கலைக் கழகம்,விசாரணை அதிகாரி,வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்) தலைமையில் நடத்திய விசாரணை அறிக்கை நமக்கு உணர்த்துகிறது.

நூறுகோடிக்கு மேல் உள்ள இந்தியப் பெருந்தொகையில் மிகச் சொற்ப அளவில் மட்டுமே மனிதர்களும், மனிதாபிமானிகளும் தென்படுகிறார்கள். அவர்கள் மட்டுமே பொதுநீதிக்காகவும், சமூகநீதிக்காகவும் குரல் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். 01.10.06ல் தேசொன்னாட்டி (Desonnati) எனும் நாக்பூர் தினப்பத்திரிகைதான் முதன் முதலில் செய்தி வெளியிட்டது. சிறிது அவகாசத்திற்குப் பிறகு இத்தகவலை உலகுக்கு உரக்கச் சொன்னார் இடது சாரிச் சிந்தனையாளரும், பெண்ணியவாதியுமான அனைத்திந்திய மாதர்சங்கத் தலைவி பிருந்தாகாரத். இந்த இரண்டு வெளிப்பாடுகளையும் தொடர்ந்து பத்திரிகை,தொலைக்காட்சி ஊடகங்கள் பரந்துபட்ட விளம்பரத்தைக் கொடுத்தன.

சமூக,அரசியல்,அரங்கில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் குறிப்பாக ஆளும் மாநில காங்கிரஸ் கூட்டணி,தொண்டு நிறுவனங்கள்,சமூக ஆர்வலர்கள்,தலித்,பௌத்த அமைப்புகளை எதிர்வினையாற்ற முடுக்கிவிட்ட பெருமை ஊடகங்களைத்தான் சேரும். மாநில முதல்வர் திரு.விலாஷ்ராவ் தேஸ்முக், துணைமுதல்வர் திரு.R.R.பாட்டீல் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். போட்மாங்கே குடும்பத்துக்கு நிவார ணம் அறிவிக்கப்பட்டது. அதை அவர் ஏற்க மறுத்து விட்டார். மனித உரிமை ஆணையம் நேரில் சென்றது. விதர்பா முழுவதும் தீவிர ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் உக்கிரமாக நடந்தன. அவற்றில் பல வன்முறையில் முடிந்தன. அமராவதியில் நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டதால் அதில் ஈடுபட்டவர்கள் கைதானார்கள். இந்தத் தீவிர எதிர்வினையால் தேசியத்தலைவர்கள் கருத்துச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள்.

ஆனால் திட்டமிடப்பட்ட ஆதரவு மற்றும் அமைதி முயற்சி ஏதும் அரசுத்தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படவில்லை என்பதும், பாதிக்கப்பட்ட பகுதியினரோடோ, கலவரக்காரர்களோடோ அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை என்பதும் கண்டனத்துக்குரிய மெத்தனப்போக்கு என்று ரத்னாகர் கெய்க்வாட் அறிக்கை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. புதைக்கப்பட்ட மனிதாபிமானத்தையும் பிரேதங்களையும் மீளத் தோண்டியது, கடமை தவறிய அதிகாரிகளை இடைநீக்கம் செய்தது, வழக்கை மத்திய புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தது எல்லாமே அரசியல்,சமூக ஆர்ப்பாட்டங்களின் கூடுதல் அழுத்தத்தால் ஏற்பட்ட நிர்ப்பந்தத்தால் மட்டுமே நிகழ்ந்தன.

கூட்டுக்கொலைச்சதி,வன்கொடுமை நிகழ்வுகள் குறித்த பார்வை: போட்மாங்கே குடும்பத்துக்கு முன்னாலேயே, கயர்லாஞ்சியில் கொபர்கேட் என்ற இன்னொரு தலித் குடும்பமும் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறது. இன்றுவரை அது குறித்த எந்த தகவலும் பதிவு செய்யப்படவில்லை. அதைத் தொடர்ந்து போட்மாங்கேயின் குடும்பமும் நீண்டகாலமாக தீண்டாமைக் கொடுமையையும் சித்திரவதையையும் சகித்துக்கொண்டே காலம் கடத்தியிருக்கிறது. வெறும் மூன்று குடும்பங்கள் அடங்கிய சிறுபான்மை தலித்கள் குறித்த சிறப்புக்கவனம் செலுத்தப்படவில்லை. சித்தார்த் காஜ்பயி தாக்கப்பட்ட சம்பவம் ஒரு மிகச்சரியான சித்திரவதை மற்றும் வன்கொடுமை நிகழ்வாகும். எனவே அதைத்தொடர்ந்து வன்முறைகள் நிகழும் வாய்ப்பிருந்ததை மாவட்ட நிர்வாகம் கணக்கிலெடுக்கவில்லை.

உள்ளூர் சாட்சியங்களின்படி,சில இந்து அடிப்படைவாதிகள், உயர்சாதி அமைப்புகள் சம்பவத்துக்கு ஒரு மாதத்திற்கு முன்னாலிருந்தே கயர்லாஞ்சியை மையமிட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. அதுகுறித்த ஆழமான விசாரணையும் புலனாய்வும் இல்லாத அந்தந்த துறைகளின் உள்நோக்கம் குறித்த சந்தேகம் வலுக்கிறது. கலவர நெருப்பில் குளிர்காய்கிறவர்களும், அழிவில் ஆதாயம் தேடுகிறவர்களும் ஒருபோதும் அதனுடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை என்பது இந்தியப் பொதுஅனுபவமாக இருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும்,மராட்டியர்களுக்கும்,மஹர்களுக்கும் இடையே முரண்பாடு உருவாக்குவதும்,அதன்மூலம் பற்றிக்கொள்ளும் பதற்றத்தை அணையவிடாமல் பாதுகாப்பதும் பிரித்தாளும் சூழ்ச்சிக்குச் சொந்தமான உற்பத்திக் கேந்திரத்தின் லட்சியமாகும்.

காவல்துறையின் அலட்சியம்: கயர்லாஞ்சியிலிருந்து அந்தல்கவூன் காவல் நிலையம் வெறும் 8கி.மீ. தூரத்தில் தான் இருக்கிறது. நடந்தே வந்தால்கூட முக்கால் மணி நேரத்துக்குள் வந்துவிட முடிகிற தூரம். இப்போதிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியில் 8கி.மீ. என்பது வெறும் 10 நிமிட நேரத்தில் எட்ட முடிகிற தூரம்தான். சுமார் ஒரு மணி 15நிமிடங்கள் நீடித்த வெறியாட்டத்தின் துவக்கத்திலேயே துஸ்ஸாலாவிலிருந்து சித்தார்த்தின் மூலம் அவசர உதவி கேட்கப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு பாரா காவலர் கயர்லாஞ்சி வந்து சேரும்போது 8மணிக்கு மேலாகிவிட்டது. சடலங்கள் மீட்கப்பட்ட பின்னும் உதவி ஆய்வாளர்,உதவி கண்காணிப்பாளர் யாரும் வரவில்லை. பாலியல் வன்முறை குறித்த ரீதியில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. தடய அறிவியலுக்கான மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை. பிரேதம் அழுகுவதற்கு முன்னரே புகைப்படம் கூட எடுக்கப்படவில்லை. சித்திரவதைகளுக்கெதிரான சிறப்புக் காவல் உயர் அதிகாரி,காவல்துறை இயக்குனர் போன்றவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

மருத்துவத்துறையின் ஊனக்கண்: பிரேத பரிசோதனை செய்த இளநிலை மருத்துவர் அண்டேவுக்கு மாவட்ட மருத்துவ அதிகாரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அந்த அழைப்பினைத் தொடர்ந்து ஒரு சாதாரண இயற்கை மரணத்தை அணுகுவது மாதிரி பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. பிறப்புறுப்புகள் சேதப்படுத்தப்பட்டிருப்பது குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எதுவும் இடம் பெறவில்லை. பிரேதப் பரிசோதனை நடக்கிற அந்த பகல்பொழுது முழுக்க,சம்பவ இடத்துக்கு நேரில் வராத அத்தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மொஹாதியில் முகாமிட்டிருக்கிறார். நீண்ட ஆர்ப்பாட்டம்,சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளைத் தொடர்ந்து புதைக்கப்பட்ட சடலங்கள் 05.10.06 அன்று மீளத் தோண்டியெடுக்கப்படுகின்றன. மூன்று சிறப்பு மருத்துவர்கள் மூலம் பிரேத மறுபரிசோதனை நடத்தப்படுகிறது. அதுமாதிரியான பரிசோதனைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படாத டாக்டர்கள் B.K. மேஷ்ரம்,நிஷா பவுஸர்,வான்கடே ஆகிய மூவர் குழு 06.10.2006 அன்று ஒரு அறிக்கை தருகிறது.

அதுவரையிலும் (30.9.2006ல் நடத்தப்பட்ட) முதல் பிரேதப் பரிசோதனை அறிக்கை நிலுவையில் வைக்கப்பட்டு இரண்டையும் ஒரேதேதியில் 6.10.2006 அன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிடுகிறது. இரண்டு அறிக்கைகளும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக எதையும் குறிப்பிடவில்லை.

ஒரு தேசிய அவமானம்,மிருகத்தை வெட்கப்பட வைக்கும் பாலியல் பலாத்காரம் நடந்து முடிந்திருக்கிறது. சட்டப்படி அதன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு நிர்வாகம், காவல்துறை ஒரு சராசரி மனிதனுக்கும் கீழாகப்போய் அலட்சியமாக இருந்திருக்கிறது. குற்றத்தை உற்சாகப்படுத்துகிற மாதிரி தடயங்களையும்,சாட்சிகளையும் அழிக்கிற சக்திகளின் கூட்டணியில் ஆழவேர்விட்ட சமூகச் சதியும் சாதீய மேலாதிக்கமும் பின்னிக் கிடக்கிறது.

பரிந்துரைகள்: பாதிக்கப்பட்ட போட்மாங்கே, சித்தார்த், கயர்லாஞ்சியிலுள்ள இதர தலித் குடும்பங்களுக்கு தேவையான காவல்துறைப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பணியிலிருந்த வருவாய்த்துறை,காவல்துறை,மருத்துவத்துறை பொறுப்பாளர்கள்,அவர்களின் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட வேண்டும். அதன் மூலம்தான் அதிகாரிகளின் மீதான மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன் படி இரண்டு குற்றங்களும் வழக்குகளாக்கப்பட வேண்டும். நடப்பிலுள்ள மனித உரிமைச் சட்டங்கள் மாற்றியமைக்கபட்டு மீறுவோருக்கு கடும் தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்.

வன்கொடுமை நடக்கிற பகுதியில் உள்ள கிராமப் பஞ்சாயத்து முதல் மாவட்ட நிர்வாகம் வரையிலான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதை பத்திரிகை மூலம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டிருப்பதால் வன்கொடுமைச் சம்பவங்களை தீவிரவாத ஒழிப்புக்கு இணையாகப் பாவித்து உரிய சட்டம் இயற்றப்படவேண்டும். வன்கொடுமை நடக்கிற இடங்களுக்கு அவசர உதவிக்கென பாதுகாப்பு மற்றும் உயிர்மீட்பு நவீன சாதனங்கள் பொருத்தப்பட்ட விரைவுப்படை அமைக்க வேண்டும். சிறப்பு விழிப்புணர்வுக் குழு அமைத்து தலையீடு, தடுப்பு நடவடிக்கை உறுதிசெய்யப்பட வேண்டும். அவசர காலங்களில் தலித் கிராமங்கள் மாவட்ட மாநில நிர்வாகத்தோடு உடனடித் தொடர்பு கொள்வதற்கு வசதி செய்ய வேண்டும்.

நடுநிலை நிறுவனத்தின் உதவியோடு மாநிலத்தில் உள்ள கிராமங்கள் முழுமைக்குமான வன்கொடுமை குறித்த கணக்கெடுப்பு நடத்தவேண்டும். சிறுபான்மை குடியிருப்புகளைக் கண்டறிந்து அந்த மக்களை நகர்ப் பகுதியில் குடியமர்த்த வேண்டும். அவர்களுக்கு சுகாதாரம்,பொருளாதாரம்,கல்வி, அடிப்படைவசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வன்கொடுமைத் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்புடைய அதிகாரிகள்,ஊழியர்கள் அனைவருக்கும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கவேண்டும்,மனதளவில் அதை ஏற்றுக்கொள்கிற பக்குவத்தையும் உருவாக்க வேண்டும். வன்கொடுமைக்கெதிரான மாநிலம்தழுவிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பிரச்சாரங்கள் மூலம் ஆதிக்கப்பகுதியில் தண்டனை குறித்த எச்சரிக்கையும்,பாதிக்கப்பட்ட பகுதியில் சட்ட ரீதியான பாதுகாப்பு குறித்த அறிவும் உறுதி செய்யப்படுதல் வேண்டும். வன்கொடுமை குறித்த அறிமுகமும்,வரலாறும்,பொறுப்பும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

கயர்லாஞ்சியிலேயே இதற்கு முன்னால் கோபர்கேட் என்பவரின் குடும்பமும் இதேபோல சித்திரவதைக் கொலைக்கு ஆளாகியிருப்பதை கொலைசெய்தவர்களின் பகுதியிலிருந்து பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் உறுதிசெய்கின்றன. கணினிமயமாக்கப்பட்ட இந்த கிராதக யுகத்திலே இப்படியென்றால் கற்பனை செய்ய முடியாத எண்ணிக்கையிலான எத்தனை தலித்துகளும் அவர்களின் வரலாறும் புதையுண்டு போனதோ? புதையுண்டு போனது கரப்பான்பூச்சிகளை விடக் கேவலமானதாகக் கருதப்பட்டால்கூட அதுகுறித்து சிந்திக்கத் திராணியற்றுக் கிடக்கிற சமூகம் மிகக்கேவலமானது. மரம் செடி கொடிகளோடு ஜீவிக்கும் நுண்ணுயிர்கள் குறித்தும்,அழியும் காடுகள்,அதில் வாழும் விலங்கும் பூச்சி பொட்டுகள் அழிவது குறித்தும் விசனப்பட இயக்கங்கள் உள்ள இந்த தேசம்,மானைக் கொன்ற பிரபலத்தைச் சிறையிலடைத்த இந்த நீதி,அதோடு கூட்டுச்சேர்ந்து அரசதிகாரம் நடப்பதெல்லாம் இந்த தேசத்தில்தான்.

காவல் ராணுவம் புலனாய்வு உளவு என விரிகிற இந்தியக் கட்டமைப்பு சாதாரணமானது அல்ல. கண்ணெதிரே தன் ஆளுகைக்குட்பட்ட சொந்த தேச மக்கள் நிராயுதபாணிகளாய் நசுக்கப்படுவதைக் கண்டும் காணாமல் கடந்து போகிற அதன்போக்கு கேவலமான வார்த்தைகளுக்கு உகந்தது. இவை எல்லாவற்றையும் இந்த மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளிருக்கும் தலித்துகளும் ஆதரவாளர்களான மனிதாபிமானிகளும் நிறையக் கேள்விகளை வைத்திருக்கிறார்கள்:

கன்றினை இழந்த பசுவுக்கு நீதிவழங்கிய தேசம்
புண்படுத்தப்பட்ட புறாவுக்கு
தொடைக்கறி கொடுத்த வம்சம்
முல்லைக்கும் மயிலுக்கும் மனமிறங்கிய நேசம்
இப்படி இதிகாசம் முழுவதும்
இரக்கம் நிறைந்து கிடக்கிற வாசகம் நிஜமா?
தேசம்முழுக்க உறைந்துகிடக்கும்
ஒடுக்கப்பட்ட மக்களின் குருதி நிஜமா?
எனும் கேள்வியோடே மறக்கப்படுகிறது
நாளிதழின் மூலைமுடுக்கெல்லாம்
ஒட்டிக் கொண்டிருக்கும்
தாழ்த்தப்பட்ட மக்களின் ரத்தச்சேதி.
அரண்களெல்லாம், இற்று விழும் சுவர்களாகின்றன
பாதுகாவல் எல்லாமே
வேலியாகி பின்னர் சிறைகளாகிறது
உறங்கிக்கிடந்த அறியாமை மீதிலெல்லாம்
கேள்வி வெளிச்சம் படருகிறது
அதோ அறிவொளியைத் தாங்கியபடி
தூரத்திலொரு கூட்டம் தெரிகிறது

வெரசா நட...
WWW.yashda.org இணையதளத்தில் வெளியான பந்தாரா அறிக்கையைத் தழுவி எழுதப்பட்டது.


விசாரணைக்குழு

திரு.புருஷோத்தம் பட்டொடேக்கர்
(உதவி இயக்குனர்,யசாதா) தலைவர்,விசாரணைக்குழு
திருமதி.லதா சோனேவானே,கருத்தாளர்,யசாதா
திரு.ரவிகாந்த் கோடிச்சோர்,ஆராய்ச்சி அதிகாரி,யசாதா
திருமதி.ப்ரீத்தி கர்மார்க்கர்,ஆராய்ச்சி அதிகாரி,யசாதா
திரு.பபன் ஜோக்தன்,உதவி வெளியீட்டு அதிகாரி,யசாதா
டாக்டர். R.J. தோரட், மருத்துவ அதிகாரி, புனே நகராட்சி மருத்துவமனை .



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com