Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2007
இந்திய சுற்றுப்புறச் சுழல்:வேதனையின் சுவடுகள்

ம.ராஜசேகரன்

‘உலகம் வெப்பமடைந்து வருகிறது’ என்பது ஐ.நாவின் சமீபத்திய அறிக்கை. உலகம் முழுமைக்கும் இருக்கக்கூடிய ஆளும் அதிகார அரசுகள் தமது சாதகங்களை மட்டுமே முன்னிருத்தி பெரும்பாலான காலகட்டங்களில் சுற்றுச் சூழலுக்கு எதிரான வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன. பன்னாட்டு சுற்றுச்சூழல் சட்டங்களை எந்த நாடும் குறைந்தபட்ச அக்கறையோடு அணுகுவதாகத் தெரியவில்லை. உலகம் முழுமைக்கும் சூழல் சீர்கேடுகளை விளைவித்து வரும் அமெரிக்கா சொந்த நாட்டு கடல் வளம் மட்டும் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக ஹவாய் தீவுப் பகுதியையும் அமெரிக்க கடற்பகுதியையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக (Prohibited Area) தற்போது அறிவித்து இருக்கிறது. ஆனால் இந்த ‘சூட்சுமத்தை’ வளரும் நாடுகள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றன. இந்நிலையில் கடந்தகால இந்திய,தமிழகச் சுற்றுச்சூழல்,சூழல் ஆர்வலர்களை கவலை கொள்ள வைத்திருக்கிறது.

மலைப்பகுதிகளிலும் சமவெளிப் பகுதி களிலும் சுற்றுச்சூழலுக்கு எதிராக நடைபெறும் நிகழ்வுகள் தமிழகத்தை இருண்ட உலகத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுத்து வருகின்றனர். சேது சமுத்திரத் திட்டத்திலிருந்து நொய்யலாறு பிரச்னை வரை மத்திய மாநில அரசுகள் நடந்து கொள்ளும் விதமும் அவை பின்பற்றும் நடைமுறைகளும் இந்தியாவில் சூழலியல் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றனவா? என்ற ஐயத்தை எழுப்புகின்றது. கடந்த காலங்களில் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட மக்களுக்கு எதிரான திட்டங்களும் அதில் அரசின் செயல்பாடுகளும் குறித்த இந்த ஆய்வு வரும் காலங்களில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன் வைக்கின்றது.

மி.தமிழக சுற்றுப்புறச் சூழல்: சேது சமுத்திரத் திட்டம்

பாக்.ஜால சந்தியையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் மேட்டு மணற்பகுதியான ஆதம்ஸ் பாலத்தின் குறுக்கே,வெட்டப்படும் கால்வாய்த் திட்டம் இது. தூத்துக்குடிக்கு அருகிலுள்ள வான் தீவிலிருந்து 6கி.மீ. தொலைவிலும், இராமேஸ்வரத்தின் சிங்கிலித் தீவிலிருந்து 20கி.மீ. தொலைவிலும் இக்கால்வாய் அமையும். கப்பல் செல்வதற்காக கிட்டத்தட்ட 152கி.மீ.நீளம்,300 மீட்டர் அகலம்,800அடி ஆழத்துக்கு கால்வாய் தோண்டப்படும் என்று திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அப்படித் தோண்டப்படும் பட்சத்தில் இப்பகுதியில் உள்ள 21 தேசிய கடல் பூங்காக்களும் அழியக் கூடும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கடல்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு வெறும் 36 மணி நேரம் பயணம் குறையும் என்பதற்காக, ஒட்டுமொத்த கடல் வளங்களையும்,மீனவர்களின் வாழ்க்கையையும் நாசம் செய்வது எந்தவகையில் நியாயம் என்பதே இவர்களின் கேள்வி. இவர்கள் அச்சம் ஒருபுறமிருக்க,தமிழகக் கட்சிகள் முன்வைக்கும் கப்பல் பயணத் தூரம் குறைவு,தமிழன் கால்வாய்,அன்னியச் செலவாணி ரூ.130 கோடிவரை வரவு எனும் கோஷமெல்லாம் இதனுள் ஒளிந்திருக்கும் லாப நோக்கம் கருதியே. இதில் அரசியல் இலாபம் பெறப்போவது யார்? இது உண்மையில் தமிழக மக்களுக்கு பயனுள்ள திட்டமா? என்பதெல்லாம் விவாதத்திற்குரியது.

இத்திட்டம்வழியே பல்வகையான கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்கான அபாயம் இருப்பதை அறிந்தும்,சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பது தெரிந்திருந்தும் முன்னாள் சுற்றுச் சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரான டி.ஆர். பாலுவே,கப்பல் போக்குவரத்துத் துறையை கைப்பற்றி இருப்பதும், பதவியேற்றவுடன் திட்டத்தை துவங்கியதும் அதனுள் ஒளிந்திருக்கும் லாப நோக்கம் கருதியே.

நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமும் (நீரி) விளைய இருக்கும் பிரச்னைகளை கணக்கில் கொள்ளாமல்,அரசுக்கு அடிபணிந்து நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாத ‘திட்டத்திற்கான பொருளாதார சாத்தியக்கூறு’ அறிக்கையினை தயாரித்துக் கொடுத்தது.

திட்டக் காலத்தில் கலாச்சார,தொல்லியல்ரீதியான அகழ்வாய்வுத் தடயங்கள் ஆழத்தில் கிடைக்கக்கூடும் என நீரி தனது அறிக்கையில் சந்தேகமாகக் கூறியுள்ளது. சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் கால்வாய் தோண்ட 32 அம்ச செயல்திட்டத்தை‘நீரி’குறிப்பிட்டுள்ளது. அதில் முக்கியமானது ஆதம்ஸ் பாலத்தைத் தவிர மன்னார் வளைகுடாவில் வேறு எங்கும் தோண்டக் கூடாது. மன்னார் தேசிய கடல் பூங்காவில் இருந்து 20கி.மீ. தள்ளி கால்வாய் வெட்டலாம் - தனுஷ்கோடி மீனவர்களுக்கு மாற்று வழி கூறப்பட வேண்டும் - கால்வாய் தோண்டும் பணியின்போது ஆயில்,கிரீஸ்,பெயிண்ட் போன்றவற்றைக் கசிய விடக்கூடாது. வண்டலை அப்புறப்படுத்தும் போது, மீனவர் படகுகளுக்கு இடையூறு செய்யக் கூடாது. மீனவர் நலனுக்காக, கால்வாயைக் கடப்பதற்கு உரிய நேரமும் கால்வாயின் ஒருபகுதியும் ஒதுக்கப்பட வேண்டும் - இக்கால்வாய் வழி செல்லும் கப்பல்கள் மன்னார் வளைகுடாப் பகுதியில் கழிவுகளை அகற்றுவதோ, கழிவு நீரை வெளியேற்றுவதோ கூடாது என்பது போன்ற செயல் திட்டங்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இத்திட்டங்கள் எல்லாம் கால்வாய் தோண்டும்போது பின்பற்றப்படாவிடில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.

ஸ்பிக்,ஸ்டெர்லைட்,அனல்மின் நிலையங்கள்,கூடங்குளம் அணு உலை,தாராங்க தாரா கெமிக்கல்ஸ் போன்ற ஆலைகளின் சரக்கை ஏற்றமதி, இறக்குமதி செய்யும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றியே வருகின்றன. பயணச்செலவும் கூடுதலாகிறது. திட்டம் நிறைவேறினால் குறுகியநாட்களில் கப்பல் வந்து சேரும். இதன்மூலம் ஆலை முதலாளிகளுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும். தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சியடைந்து ஏற்றுமதி இறக்குமதி அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபடும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். வருடத்திற்கு ரூ.130 கோடிக்கு மேல் அன்னியச் செலவாணி மத்திய அரசுக்குக் கிடைக்கும்
என்பதால் முதலாளிகளும்,அவர்களின் நலனுக்கான அரசும் இத்திட்டத்தை செயலாற்றி வருகின்றன.

‘நீரி’யின் அறிக்கையை முழுமையாகப் படிக்கும்போதே தெரிந்துவிடும்,திட்டம் முழுக்க முழுக்க மீனவர்களுக்குத் தான் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறது என்று. கப்பல் புகை போன்ற அசுத்தங்களால் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் உள்ள 21 தீவுகளில் வளரும் தாவரங்கள் கருகி விடும் ஆபத்து இருக்கிறது. கடலில் இயல்பான குளிர்ச்சி மாறி,வெப்பம் அதிகமாகிவிடும். கப்பல் போக்குவரத்தால் அபூர்வ உயிரினங்கள் சிக்குண்டு அழியும். உலக நாடுகளால் இன்றுவரை ‘கடல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கம்’ என்ற போற்றிப் பாதுகாக்கப்படும் மன்னார் வளைகுடா சீரழிந்து விடும்.
அபூர்வமான பவளப்பாறைகள் அழியுமாதலால் கடலரிப்பு ஏற்பட்டு, கடல் மட்டம் உயரும்.

பருவ மாற்றம் நிகழ்ந்து மழை அளவு குறையும். புயல் வீசும் அபாயம் அடிக்கடி ஏற்படும். குறிப்பாக மீனினங்களே அழிந்து வருங்காலத்தில் மீனவர்கள் தற்கொலை செய்ய நேரிடும். எனவே இப்பகுதியில் இரசாயனத் தொழிற்சாலைகள்,மின்உற்பத்தி நிலையங்கள்,கடல் பெறியியல் திட்டங்கள் எதையும் தொடங்குவது கூட ஆபத்தாகும் என்று கடல்வள ஆராய்ச்சியாளர் முனைவர் தி.சண்முகராஜா அறிக்கை மூலமாக மத்திய அரசுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கால்வாய் தோண்டும் பகுதியில் வான்தீவு, முல்லைத்தீவு, முயல்தீவு உள்ளிட்ட 21 பவளப்பாறைத் தீவுகள் உள்ளன. 160 வகையான உலகின் பவளப்பாறைகளில் இக்கடலில் மட்டும் 137 வகை உள்ளது. இலங்கைக்கும் தமிழக தென்கிழக்குக்கும் இடைப்பட்ட 623 ஹெக்டேர் பரப்பளவுள்ள மன்னார் குடாப் பகுதியில் உலகில் வேறெங்கும் காணமுடியாத அபூர்வ வகையான கடல்வாழ் உயிரிகளில் 3600 வகையினங்கள் உள்ளன. இங்கு வாழும் குட்டி போட்டு பால் கொடுக்கும் கடற்பசு மேற்கு ஆசியாவிலேயே வேறு எங்கும் இல்லை. அபூர்வமான கடல் ஆமை,டால்பின்,கடல் குதிரை போன்ற 1300க்கும் மேற்பட்ட மீனினங்களும்,பவளம்,முத்துச் சிப்பிகள்,சங்குகள், கடற்பாசிகள்,திமிங்கலம்,கடல் ஆமை,கடல் அட்டை ஆகியவையும் உலகிலேயே இப்பகுதியில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன.

தூத்துக்குடி-இராமநாதபுரம் இடையில் 21 கடற் பூங்காக்கள் உள்ளன. இப்பகுதியில் விளையும் பவளப்பாறைகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதால், மீனினப் பெருக்கத்தின் புகலிடமாக உள்ளன. அதோடு ஓராண்டுக்கு 900 மி.மீ மழையும் பெறமுடிகிறது. இக்கடலில் அடர்த்தியாக பவளப் பாறைகள் வளர்வதற்கான காரணமே கடலின் தூய்மைதான். மேலும் இக்கடலின் ஆழம் குறைவானதால்,சூரிய ஒளி,பல நுண்ணிய பவளப் பூச்சிகளின் உதவியால் இப்பாறைகள் உருவாகின்றன. இப்பவளப்பாறைகளே புயலை கரைக்கு வர விடாமல் தடுப்பதோடு,கடலரிப்பையும் தடுக்கின்றன. சுத்தமான ஆக்சிஜனை உற்பத்திசெய்து,ஓசோன் ஓட்டையை சீரமைத்து, பூமி வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது. இங்குள்ள அபூர்வமான கடல்பாசிகள்,கடலோரத்தில் வளரும் அலையாத்தி (மாங்குரோவ்) காடுகளாலும் மீன் வளம் பெருகிறது.

கால்வாய் அமையவிருக்கும் பகுதியில் ஒன்றிரண்டு வகையான பவளங்கள் காணப்படுவதாகவும், விலைமதிப்பு மிகுந்த, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்களின் பெருக்கம் குறிப்பிடத்தக்க அளவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் அரசு இதை திட்டமிட்டு மறைத்து வருகிறது.
இத்திட்டத்தால் ஆதம்ஸ் பாலப் பகுதியில் 6 சதுர கி.மீ. அளவுக்கு உயிரினங்களோ தாவரங்களோ எதுவும் இல்லாமல் முழுமையாக அகற்றப்படும். கடல்நீரின் தன்மை கலங்கலாக மாறும். அரிச்சமுனை,தனுஷ்கோடி பகுதி மீனவர்கள் இடம் பெயர வேண்டியிருக்கும். கால்வாய் தோண்டும்போது 8 மில்லியன் கன. மீட்டர் களிமண்,32.5 மில்லியன் க.மீ. வண்டல் மண்,25 மில்லியன் க.மீ.மணல் கிடைக்கும். இந்த மண்ணில் ‘நீரி’யின் 32 அம்ச செயல்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி,2 மீட்டர் ஆழமுள்ள வண்டல் மண்ணை மட்டும் பாம்பன் நிலப்பகுதியில் கொட்டுவார்கள்.

மீதமுள்ளவை கடலுக்குள்ளேயே கொட்டப்படும் பட்சத்தில்,ஏற்கனவே 11 அடி ஆழத்தில் மேடாக இருக்கும் ஆதம்ஸ் பாலம் தவிர்த்த கடல் பகுதி மேலும் மேடாகும். பாம்பன்,தங்கச்சி மடம்,தனுஷ்கோடி, இராமேஸ்வரம்,மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடி தொழிலையே இழக்க நேரிடும். திட்டத்தின் போது பிளாஸ்டிக் பைகள் கடலில் கலக்கும் வாய்ப்புள்ளது. இதனால் சுமார் 12 வகை மீன் இனங்கள் அழியும். கால்வாய் வழி செல்லும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் கடலில் மேற்பகுதியில் படியும் பிசுக்குகள், அழுக்குகள், குப்பைகளால் கடல்பகுதி மாசுபட்டு அபூர்வ கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும்.

சூயஸ், பனாமா கால்வாய் போல சேதுக் கால்வாய் திட்டத்தை ஒப்பிடுவது பெரும் தவறு. இவை வெட்டப்பட்ட பகுதி பெரும்பாலும் பாறைகளால் ஆனது. அங்கு மன்னார்குடா போன்ற மணற்பகுதிகள் அவ்வளவாகக் கிடையாது. ஒருமுறை கால்வாய் அமைத்துவிட்டால் போதும். பிறகு தூர்வாரத் தேவையில்லை. ஆனால் சேது திட்டம் அப்படிப்பட்டதல்ல.

நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியிலிருந்து கடல் நீரோட்டத்தால் அடித்து வரப்படும் மணலானது பாம்பன் கடல் பகுதியிலும்,மன்னார் வளைகுடா கடல் ஓரத்திலும் குவிகின்றன. அதைத் தவிர்க்க இயலாது. இதுபோல மணல் குவிவதால்தான் வாலிநோக்கம் துறைமுகக் கரைக்கு, இன்றும் கப்பல்களைக் கொண்டு செல்ல முடியவில்லை. அங்கு கப்பல் உடைக்கும் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கப்பல் உடைக்கும் நிறுவனம் மணல்வாரிக் கப்பல் மூலம் இம்மணலை அகற்ற தமிழக அரசைக் கோரியுள்ளது. ஆனால் அரசுக்கு அதிக லாபம் கிடைக்காது என்பதால் இத் திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சேதுத்திட்டம் முடிவடைந்தவுடன் சில ஆண்டுகளில் மீண்டும் வந்து குவியும் மணலைத் தோண்டி எடுக்க ஆண்டு தோறும் மத்திய அரசு பலகோடியை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதாவது இத்திட்டத்தால் 130 கோடி ரூபாய் வரவு என்பதற்குப் பதிலாக ரூபாய் 200 கோடி செலவு என்பதற்கே வழிவகுக்கும். அத்தோடு வளமான கடல் வளத்தை இழந்து, தற்போது கடல் உணவு ஏற்றுமதி மூலம் அரசு பெற்று வரும் பலகோடி அன்னியச் செலவாணியை இழக்க நேரிடும். மேலும் மன்னார் வளைகுடாவில் மணல் குவிந்து பல புதிய தீவுகளும் உருவாகியுள்ளதை, இக்கால்வாய் அமைக்க ஆய்வு நடத்திய ‘நீரி’ கமிட்டி கவனிக்கத் தவறிவிட்டது.

தமிழகமெங்கும் ஆழ் கடலில் அன்னிய நாட்டுக் கப்பல்கள் மீன்வளத்தைக் கொள்ளையிடுகின்றன. சுண்ணாம்பு,சிமெண்ட் தொழிற் சாலைக்கு பயன்படும் பவளப் பாறைகளும், வெளிநாட்டுக்குத் தேவைப்படும் கடலோர கார்னைட் மணலையும் கப்பல் முதலாளிகள் சூறையாடுன்றனர். அதைப் பற்றிய கவலையோ அதற்கான போராட்டமோ நடத்த முன் வராமல், பன்னாட்டு, உள் நாட்டு, முதலாளித்துவ நலனுக்காக, சேது கால்வாய் திட்டத்தை ஆதரிப்பது தான் தமிழக இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் இன்றைய நிலைப்பாடு.

2.கொள்ளை போகும் குடிநீர் :

‘முதலாளித்துவம் எதனையும் காசாக்கும் கூர் அறிவு படைத்த தாகும்’ என்று அறிஞர் மார்க்ஸ் கூறியது முழுவதும் உண்மை யான ஒன்று. இன்று அது குடிநீர்ப் பஞ்சத்தையும் காசாக்கி வருகிறது ‘மினரல் வாட்டர்’ எனும் பெயரில்.

சமீபத்தில் விஞ்ஞான மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) பாட்டில் குடிநீரை ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தது.
அதில் 21 நிறுவனங்களில் ‘பாட்டில் குடிநீரில்’ விவசாயத்திற்குப் பயன்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் 32 வகையான நஞ்சுகள் கலந்திருப்பதால் அக்கம்பெனிகளின் பாட்டில் குடிநீர் விற்பனையை தடை செய்யக் கோரியது. உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது. பிஸ்லரி, ஹிந்துஸ்தான், கோகோகோலா, சர்டி டில்க் புட், பெப்சிகோ, கோத்தாரி, வைபவா, சர்துல் மினரல், வைஷாலி மினரல் என தடை செய்யப்பட்ட கம்பெனிகள் எல்லாம் தங்களை மினரல் வாட்டர் என்று கூறிக்கொண்டவைகள். இவர்கள் பாஷையில் 32 வகையான நஞ்சைக் கலப்பதுதான் ‘மினரலோ’(?)... இருக்கலாம்.

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ஏதோ பெட்ரோல், டீசல் நிலையம் திறப்பதைப் போல ‘குடிநீர்’ நிரப்பும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சாயி எண்டர்பிரைசஸ் கம்பெனியிலிருந்து 300மி.லி. ரூ.1.க்கு (பிளாஸ்டிக் கேனுடன் ரூ.25)விற்பனை செய்யப்படுகிறது. இங்கே ஒரு வியாபார மோசடியையும் நாம் கவனிக்க வேண்டும். விளம்பரம், விநியோகஸ்தர், விற்பனையாளர் எதுவுமின்றி நேரிடையாக பாட்டிலில் அடைக்கப் பட்ட குடிநீர் ஒருலிட்டர் ரூ.6 என விற்கப்படுகிறது. அதே குடிநீரை மற்ற கம்பெனிகள் வெளியில் விற்றால் 1லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.12. ஆனால் ரயில் நிலையத்திற்குள் விற்றால் ரூ.10. ஒரு லிட்டர் குடிநீருக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.4 கூடுதலாகவும், வெளியே ரூ.6 கூடுதலாகவும் என ‘ரேட்பிக்சிங்’ செய்து கொண்டு பொதுமக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்.

‘ஆசியாக் கண்டத்திலேயே சிறந்த குடிநீர்’ என்று கூறப்படும் கோவை சிறுவாணி குடிநீரைக் கூட ஒரு லிட்டர் ஒரு காசு என தமிழ்நாடு குடிநீர் வாரியம் விற்பதில்லை. ஆனால் நயா பைசா பெறாத குடிநீரை ஒரு லிட்டர் ரூ.12க்கு தனியார் கம்பெனிகள் மிஷி:14543 தர முத்திரை என்ற பெயரில் விற்பனை செய்வதை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டாமா?

சென்னையில் TEAM என்ற நிறுவனம் குடிநீரை ‘மூலிகை நீர்’(Herbal Water) என்று பெயரிட்டு ‘சருமத்திற்கு பாதுகாப்பு’ என்று கூறி 20 லிட்டர் கேனை ரூ.100க்கு விற்பனை செய்கிறது. இதேபோன்று தமிழகமெங்கும் ஆங்காங்கே போலிப் பெயர்களுடன் வாட்டர் பாட்டில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவையனைத்தும் தரச்சான்றிதழ் பெற்றவையா என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. தவிச்ச தாகத்திற்கு வாட்டர் பாக்கெட் வாங்கி அவசரத்தில் குடித்துவிடுகிறோம். எந்த தேதியில் ‘பேக்கிங்’ செய்யப்பட்டது? எந்த முறையில் சுத்தம் செய்யப்பட்டது? - எந்தத் தகவலும் இல்லாமல் இவைகள் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. தமிழகமெங்கும் ஆங்காங்கே முளைத்திருக்கும் இதுபோன்ற குடிநீர் விற்பனைக் கம்பெனிகளை அரசு கண்காணிக்கிறதா(!?) என்பதே தெரியவில்லை. இவைகள் தத்தமது போக்கில் வியாபாரங்களை நிகழ்த்தி வருகின்றன.

குடிநீர் பரிசோதனை செய்வதற்கு தமிழ்நாட்டில் கிண்டி தண்ணீர் பரிசோதனை நிலையம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய ஆய்வுக்கூடம் ஆகியவை மட்டுமே சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக உள்ளன. 1971ஆம் ஆண்டி லிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பல இடங்களில் குடிநீர் ஆய்வுக் கூடங்களை நடத்திவருகிறது. அவை அனைத்தும் தற்போது சட்டரீதியாக செல்லத்தக்கதல்ல. எனவே அவைகளுக்கு 1974 ஆம் ஆண்டு தண்ணீர்ச் சட்டத்தின் அடிப்படையில் உரிய சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு பிரிவு 12,13 ன் படி ஆவன செய்யவேண்டும். அதுவரை குடிநீர் வாரிய ஆய்வுக்கூடங்களின் பரிசோதனை முடிவை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு, மத்திய ஆய்வுக்கூடத்தின் கீழ் சட்டரீதியாக சோதனைக் உட்படுத்தவேண்டும். ஆனால் இன்றைக்கு மிஷி: 14543 ல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தரம் என்ன? என்பதை தெளிவுபடுத்த அரசுகளோ தனியார் நிறுவனங்களோ விளம்பரம் செய்வதில்லை, நாமும் நாள்பட்ட ‘பாட்டில் குடிநீரை’க் குடித்துவிட்டு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காலரா மற்றும் சீதபேதியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறோம்.

உலகெங்கிலும் சமீபகாலங்களாக தண்ணீர்ப் பிரச்சனை தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ இத்தனை நாட்களாக தண்ணீர்ப் பிரச்சனை ஏதும் இல்லாதது போன்றும் தற்போது தான் அதுபற்றி தெரியவந்துவிட்டது போன்று உலகநாடுகள் ‘பாவ்லா’ காட்ட ஆரம்பித்திருக்கின்றன. சுற்றுச்சூழல் சமச்சீர்கேட்டின் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது பனிமலைகள் தண்ணீராக உருகி ஓடுவதும், திடீர் திடீரென மழையும், புயலும், வெள்ளமும், சூறாவளியும் அதிகமாக ஏற்பட்டு, மக்களை அலைக்கழிப்பதும் சமீபகாலங்களில் அதிகரித்திருப்பதாக உலக விஞ்ஞானக் கழகம் அறிவித்துள்ளது.

இந்த பின்புலத்தில் விசுவரூபம் எடுத்திருப்பவைகள்தான் பன்னாட்டு குளிர்பானக் கம்பெனிகள். அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்ட இவைகள் உலக முழுமைக்கும் தாகம் ஏற்படுமளவுக்கு சமூக மனோபாவத் தளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. ‘கோக்கினால் நனைக்கப்பட்ட தொண்டையிலிருந்து அமெரிக்க எதிர்ப்புக் குரல் எழும்பாது’ என்பதை நிறைவேற்றும் பொருட்டு அமெரிக்க ஆசிர்வாதம் விரும்பும் உலகநாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டுத் தொண்டைகளில் விஷத்தை இறக்கி கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சூழலில் பன்னாட்டு கம்பெனிகளை ஊக்குவிக்கும், அந்நிய முதலீட்டை நேரடியாக ஊக்குவிக்கும் தாராளவாத பெருந்தகை இந்தியாவின் ‘அளப்பரிய’ செயலால் கேரளாவின் ‘பிளாச்சிமடா’, சிவகங்கை பகுதியில் வைகை ஆறு, நெல்லை கங்கை கொண்டான் பகுதி மக்கள் பலிகொடுக்கப்பட்டுள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத வறண்டுபோன சூழலில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறது அரசுகள். தண்ணீரை தனியார் மயமாக்கியும், நல்லநீர் X அசுத்தநீர் என்ற மனோபாவத்தை மேல்தட்டு, நடுத்தர மக்களிடம் விளைவித்த அரசியல்வாதிகளின், பன்னாட்டுக் கம்பெனிகளின் அட்டூழியத்தை,தோலுரித்துக் காட்டவேண்டும்.

தரமான குடிநீர் தேவையான அளவு பொதுமக்களுக்கும், உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கும் கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலானோர் அன்றாடம் உடலிற்குத் தேவைப்படும் குடிநீர்கூட உட்கொள்ளாமல் இருக்கின்றனர். வசதி படைத்தவர்கள் காசுக்கு குடிநீர் வாங்கிக் குடித்து விடுகின்றனர். சாதாரண மக்கள்...? இதனால் சாதாரண, அடித்தட்டு மக்களிடம் குடிநீர் உட்கொள்ளும் பழக்கமே மனரீதியாக குறைந்து வருகிறது. எனவே பல்வேறு வகையான உடலியல் ரீதியான நோய்களுக்கும் ஆட்பட வேண்டிய ஆபத்தும் தொடங்கிவிட்டது. இதை தடுக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் தயார் செய்து விற்பனை செய்யலாம். இதனால் இப்பிரச்னையை ஓரளவு சரிக்கட்ட இயலும். ஆனால் இது குறித்து யார் கவலைப்படப் போகிறார்கள்?

வீட்டுக்கு வந்த உறவினர்களை மோரும் பழரசமும் தந்து உபசரித்த தமிழர்கள் இன்று, நள்ளிரவில் உறங்கக்கூட முடியாமல் தண்ணீருக்காக அலைகிறார்கள். குழாயடிகளில் திடீர்ச் சண்டைகள், வெட்டு, குத்து, ‘தண்ணிக்குப் போயி சண்டையா’? என்று ‘பெரிசுகள்’ அதிர்ந்து போகிறது. தமிழக அரசு இனியாவது பன்னாட்டுக் கம்பெனிகள் பாதாளம் வரை ‘போர்’ போட்டு குடிநீரைக் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

3. கடற்கரையில் தடுப்புச் சுவர் கட்டுதல் - துரத்தப்படும் மீனவர்கள்: அவசரகதியில் அரசால் எடுக்கப்படும் பெரும்பாலான முடிவுகள் பலநேரங்களில் மக்களின் உரிமைகளை மறுப்பதாகவும் வாழ்வாதாரங்களைப் பிடுங்குவதாகவும் அமைந்து விடுகின்றன. ‘வனப்பாதுகாப்பு’ என்ற பெயரில் மலைப்பிரதேசங்களில் பழங்குடியின மக்கள் விரட்டியடிக் கப்படுவதும், கடற்கரையை அழகுபடுத்துதல் என்று இயற்கையமைப்புகளை தகர்த்து செயற்கைகளைப் புகுத்துவதும் இதன் தொடர்ச்சிதான். இதில் தற்போது புதிதாகச் சேர்ந்திருப்பது ‘கடலோரப் பகுதிகளில் 500 மீட்டருக்குள் குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்தக் கூடாது’ என்ற அரசின் அறிவிப்பு. தடுப்புச்சுவர் கட்டாததன் விளைவாகத்தான் சுனாமி ஏற்பட்டதாகவும், கடலோர வீடுகள் 500மீ. தள்ளி இருந்திருந்தால் சுனாமி நிகழ்ந்திருக்காது என்பது போன்றும் பிம்பத்தைக் கட்டமைத்து அரசின் திட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர் சிலர்.

கடலோரப் பகுதிகளில் மாங்குரோவ் (அலையாத்தி) காடுகள் அழிக்கப்பட்ட போதும், கார்னைட் மணல் திருடப்பட்ட போதும், பவளப்பாறைகள் பறிபோகுமளவிற்கு இறால் பண்ணைகள் அமைக்கப்பட்ட போதும் ‘பொருளாதார உற்பத்தி பெருகும்’ எனும் மாயை வார்த்தையைக் கேட்டு இவர்கள் ‘உச்’ கொட்டிக் கொண்டிருந்தனர்.

தமிழகத்தில் மட்டும் சுமார் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி என பெரும்பாலான கடற்கரை கிராமங்களைக் கொண்ட மாவட்டங்களும் உண்டு. தமிழகக் கடற்கரையின் நீளம் சுமார் 1076 கி.மீ. இதில் கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி, இராமேஸ்வரம் ஆகிய இடங்களை இணைக்கும் கடற்கரையின் நீளம் மட்டும் சுமார் 538 கி.மீ. இந்த கடற்கரைகளின் பாதுகாப்புக்காக தடுப்புச் சுவர் கட்டப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக உலக வங்கியிடமிருந்து கடனும் வாங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. ஏற்கனவே பாதுகாப்பு அரணாக அமைந்திருக்கும் மணல் திட்டுகள் மற்றும் பாறைப்பகுதிகளை அப்புறப்படுத்தி விட்டு ஆழமாகக் குழிதோண்டி கூம்பு வடிவில் தடுப்புச் சுவர் கட்டமுடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு சிரமமெடுத்து, பாதிக்கப்பட்டவர்களைக் கூட கண்டுகொள்ளாது உடனடியாகச் செய்ய வேண்டியதன் காரணமென்ன? உண்மையிலேயே இத்திட்டம் பயனுள்ளதா? எதற்காக இத் திட்டம் தீட்டப்படுகிறது? என்பது போன்ற கேள்விகள் பல்வேறு தரப்பினரிடமும் எழுந்த வண்ணம் உள்ளது. கடற்கரை கிராமங்களில் வசிக்கக்கூடியவர்கள் எல்லாம் கடற்கரையின் 500 மீட்டருக்குள் வசிப்பதில்லை.
கடற்கரை கிராமத்திற்குள் இடம் கிடைக்காமல், அதேநேரம் அங்குள்ள உயர்சாதி மீனவர்களால் துரத்தப்பட்ட தலித் மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எல்லாக் காலங்களிலும் அதே இடத்தில் வசிப்பதும் இல்லை. அலை கரையை நோக்கி ஆக்ரோசமாக நகர்ந்து வரும் ஆனி, ஆடி மாதங்களில் கடலை விட்டு கொஞ்சம் நகர்ந்தும் மற்ற மாதங்களில் கடலை ஒட்டி குடிசை போட்டும் வசித்து வருகின்றனர்.

சென்னை மெரீனா, சாந்தோம், பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், நீலாங்கரை தொடங்கி குமரிமுனை வரை கடலோரங்களில் 500 மீட்டருக்குள் வசிப்பவர்கள் கடற்பகுதி மீனவர்களிலேயே பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களே. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 32 கடலோர கிராமங்களில் உள்ள 14 கிராமங்களில் தலித் மக்கள் வசித்து வருகின்றார்கள். கரையோர கிராமங்களின் மீனவர்களுக்கு உதவியாக கூலிக்கு மீன் பிடிக்கச் செல்லுதல், கரைக்கு கொண்டு வரப்படும் மீன்களை கழுவுதல், அவற்றை விற்பனைக் கூடங்களுக்கு சுமந்து செல்லுதல், மீன்களை உலர வைத்தல், கருவாடு தயார் செய்தல், கருவாடுகளை விற்பனை செய்தல் உள்ளிட்ட பணிகளில் இப்பகுதிகளில் வாழும் ‘அடித்தள’ மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வீடற்றவர்களாக கடலோரத்திலேயே குடிசை போட்டுத் தங்கி வாழ்கின்றனர்.
சுனாமி தாக்குதலால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களுக்கு இதுவரை எந்த நிவாரண உதவியும் வழங்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இயல்பாகவே மீனவர்களின் அதிகமான பொழுதுகள் கடலோரங்களில்தான் கழியும். வாயில் கட்டைப் பீடியை வைத்துக் கொண்டு மீன் வலை உலர்த்துதல், கடலோரப் பாறைகளில் உட்கார்ந்து கொண்டு சீட்டாடுதல், மீன்களைச் சுட்டுச் சாப்பிடுதல், கட்டுமரங்களை சரி செய்தல் என கட்டு மரங்களோடும் அலைதொடும் கரைகளோடும் மீனவர்களின் வாழ்க்கை பின்னிப் பிணைந்திருக்கிறது. இப்படிப்பட்ட இயல்பான வாழ்க்கையில் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் நிகழ்வதென்பது சர்வசாதாரணம். சுனாமிக்குப் பயந்து கடலோரக் கிராமங்களில் வாழும் குடியிருப்பு வாசிகள் வேண்டுமானால் உயிருக்குப் பயந்து எச்சரிக்கையோடு கடலைவிட்டு இடம் பெயர்ந்து விடலாம். ஆனால் வேறு எந்தத் தொழிலும் தெரியாது கடலையே சார்ந்து வாழும் மீனவர்களின் கதி..? ஒரு சுனாமிக்குப் பிறகுதான் கடலுக்குள் புதைந்திருக்கும் கொடூரத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதே கடலுக்குள் அன்றாடம் போராடும் வாழ்க்கையைக் கொண்டவர்கள் மீனவர்கள். ‘ஆழி’ எனப் படும் பேரலைகளைக் கடந்தே ஒவ்வொருநாளும் மீனவர்கள் தொழில் செய்கிறார்கள்.

ஒவ்வொரு மீன்பிடிப் பகுதிகளிலும் ஒவ்வொரு ஆடி மாதமும் இந்த ஆழிக்கு சில மீனவர்கள் பலியாவது சகஜம்தான்’ என்கிறார் ‘ஆழிசூழ் உலகு’ நாவலின் ஆசிரியர் ஜோ.டி. குரூஸ். எனவே என்றோ ஒருநாள் நிகழப்போகும் இன்னுமொரு சுனாமிக்காக அன்றாடம் இயல்பான வாழ்க்கையை அழித்துவிட்டு தடுப்புச் சுவர்களுக்குப் பின்னால் 1 கிலோ மீட்டருக்கு அப்பால் வீட்டைக் கட்டிக் கொடுத்து கடலை வேடிக்கை பார்க்கச் சொல்வதில் என்ன அர்த்தமிருக்கிறது?

சுனாமி பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதியானது மணற்பாங்கான கடற்கரை, சேற்றாலான கடற்கரை, கற்களால் ஆன கடற்கரை என 3 நில அமைப்புகளால் ஆனது. இதில் குமரி மாவட்டத்தின் முட்டம், குளச்சல் கடற்கரைகள் கற்களால் ஆனவை. இங்குள்ள பாறைகளே கடலலைகள் நிலப்பகுதிக்கு வராதவாறு பாதுகாப்பாக அமைந்துள்ளன. சுனாமியால் இந்நிலப் பகுதிகளுக்குள் கடல் புகுந்த தற்கு ‘தூண்டில் வளைவுகள்’ சேதமடைந்திருந்தது தான் காரணம். இதுபோன்றேதான் மகாபலிபுரம் கடற்கரையும். ஆனால் இதற்கு நேர் எதிரானது கேரளா மற்றும் வளைகுடாப் பகுதிகளில் உள்ள கடற்கரைகள். இப்பகுதி சேற்றாலான கடற்கரையைச் சேர்ந்தது. இங்கு காணப்படும் மண்துகள்கள் மிகச்சிறியனவாகக் காணப்படுவதால், அவை தரையில் ஆழப் புதைந்து ‘ஹைட்ரஜன் சல்பைடு’ எனப்படும் வாயுவை உண்டாக்கும். இதனால் இப்பகுதி துர்நாற்றம் மிகுந்து கரு நிறமாகக் காணப்படுகிறது. இப்பகுதிகளில் எழுப்பப்படும் தடுப்புச் சுவர்களும் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது.

இதேபோன்று, ஆனால் பல்வேறு கனிமப் பொருட்கள் காணப்படுவது மணற்பாங்கான கடற்கரைகள். நெல்லை மாவட்டக் கடற்கரையோரம் கிடைக்கும் கார்னைட் தாதுக்கள் இதற்கு உதாரணம். இப்பகுதிகளில் தொடர்ச்சியாக கார்னைட், மோனசைட், டைட்டானியம் போன்ற ‘அருமணல்கள்’ லாரி லாரியாகக் கடத்தப்படுகின்றன. இதனால் கடலரிப்பும் அலை நிலப்பரப்புக்குள் நுழையும் பேராபத்துக்களும் தொடர்ச்சியாக இம்மாவட்டத்திற்கு காத்திருக்கின்றன.

இதுவரை சுனாமி தாக்கிய எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு தொகை ஒதுக்கி தடுப்புச் சுவர் கட்டப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மரங்களை வளர்ப்பதே இதற்கான ஒட்டுமொத்த தீர்வு என்கின்றன சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகள். அடர்த்தியாக மரங்கள் காணப்படும் பிச்சாவரம், கேணியக்கரை பகுதிகள் சுனாமியின் பாதிப்பிலிருந்து தப்பியதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.

மக்களின் மீது அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் இதே மத்திய மாநில அரசுகள்தான் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு (சுனாமிக்குப்பின்) ரஷ்யாவிலிருந்து அணு உலைகளைக் கொண்டு வரச் செய்து அப்பகுதி மக்களின் உயிருக்கே உலை வைத்திருக்கின்றன. கடற்கரைப் பகுதிகளில் ‘ஸ்டெர் லைட்’ கம்பெனிகளையும் அமைத்திருக்கின்றன.

‘குடியிருப்புகள் கடற்கரையிலிருந்து 500மீ. தூரத்தில்தான் கட்டப்பட வேண்டும்’ என்ற 1991ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற ஆணையை இவ்வளவு நாள் பின்பற்றாமல் தற்போது அறிவித்திருப்பதன் வழியே மிரண்டு கிடக்கும் மீனவர்களின் பயத்தைப் பயன்படுத்தி குடிசைகளை அகற்றிவிட்டு தனியார் நிறுவனங்களிடம் லாபம் பார்க்க அரசு நினைப்பது மட்டும் தற்போதைக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

‘அரசின் முடிவு தேவையற்றது. பெரிய அளவில் பயன் இருக்காது. 10 அடி உயரத்தில் சுவர் அமைக்கலாம். ஆனால் 20 அடி உயரத்தில் அலை வந்தால் என்ன செய்வது? மேலும் சுவர் கட்டினால் படகு, கட்டுமரம் ஆகியவற்றை கரையோரத்தில் நிறுத்தமுடியாது. வலை காயப்போட இயலாது. இதனால் மீனவர்களுக்கு பாதிப்புதான் ஏற்படும். எனவே தடுப்புச்சுவர் எழுப்புவது பற்றி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்கிறார் மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பாத்திமா பாபு. இது தவிர மீனவர்களை ‘கடல்வாழ் தாழ்த்தப்பட்டவர்கள்’ என்ற புதிய பட்டியலில் சேர்க்க வேண்டும். கடற்கரையை மீனவர்களுக்குச் சொந்தமானதாக அறிவிக்க வேண்டும். வனத்துறையின் தலையீட்டை குறைக்க வேண்டும் என்பன போன்ற மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்.

மீனவர்களை கரையோரத்தில் இருந்து விரட்டிவிட்டு அங்கு ரிசார்ட்ஸ் கட்டவும், தொழில் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கவும் திட்டமிட்டுத்தான் மீனவர்களின் குடியிருப்புகளில் அக்கறை காட்டுகிறார்கள். தடுப்புச்சுவர் கட்டுவதால் மீனவர்களுக்கு ஒரு பலனும் இருக்காது. இதுவரை கடலுக்கும் மீனவர்களுக்குமான உறவை இந்தச் சுவர் பிரிக்கும் அபாயம் இருக்கிறது.

தடுப்புச்சுவர் கட்ட திட்டம் தீட்டிய அரசு மீனவர்களின் எதிர்ப்புகளையும் கவனத்தில் கொண்டு மீனவர் கூட்டமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இத்துடன் கடலோர மக்களின் மரபு, பாரம்பரியம், வாழுமிடங்கள், சுற்றுச்சூழல் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டு, மீனவர்களின் மறு வாழ்வுக்கான திட்டங்கள் தீட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்துடன் சுனாமியின் போது பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை அவர்களின் சொந்த இடத்திலிருந்து அன்னியப்படுத்தாமல் பாதுகாத்திடுவதற்கான வழி முறைகளையும் அரசு யோசிக்க வேண்டும்.

4. நான்கு வழிச்சாலை அபாயங்கள்: ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று சொல்லிக்கொண்டு சென்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2000ஆம் ஆண்டில் கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றுதான் பிரதான் மந்திரி கிராம சதக்யோஜனா (பி.எம்.ஜி.எஸ்.ஒய்) எனப்படும் கிராமப்புற சாலைத் திட்டம் மற்றும் தங்க நாற்கர சாலைத் திட்டம்.

இத்திட்டங்களில் கிராமப்புற சாலைத்திட்டம் கிராமங்களைச் சென்றடைந்ததால் பரவலான வரவேற்பைப் பெற்றது.
அதனால்தான் தே.ஜ.கூ தோற்று ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சியைப் பிடித்தவுடன் ‘எல்லாக் கிராமங்களுக்கும் சாலைத் திட்டம்’ என அறிவித்தது. தொடர்ந்து தே.ஜ. கூட்டணியால் அறிமுகப்படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலைத் திட்டத்தையும் இந்த அரசு கையிலெடுத்தது. ஆனால் கிராமப்புற சாலைத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பு நான்குவழிச் சாலைக்கு கிடைக்கவில்லை. இது அரசை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இருப்பினும் மும்பை - சென்னை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது போன்று தற்போது இது தமிழகத்திற்குள்ளும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தங்க நாற்கர சாலைத் திட்டமானது ‘மெட்ரோ பாலிட்டன்’ நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நான்கையும் இணைப்பதற்கே. இதற்கான சாலைகளின் மொத்த நீளம் 16,000 கி.மீ. ஏற்கனவே முடிந்த சாலைப் பணி போக மீதமுள்ள சாலைகளை 2009ம் ஆண்டிற்குள் முடித்து விடவும் அரசு திட்டம் தீட்டியுள்ளது.

தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலமாக மட்டும் அரசுக்கு ரூ.2000 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக (என்.எச்.டி.பி), நேஷனல் ஹைவேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா வானது ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து (ஏ.டி.பி) 200 மில்லியன் டாலர்களும் உலக வங்கியிடமிருந்து 400 மில்லியன் டாலர்களும் கடனாக வாங்கியிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 1,200 கி.மீ. தொலைவுக்கு (10 தேசிய நெடுஞ்சாலை) தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிப் பாதையாக பிஒடி முறையில் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.1.72 லட்சம் கோடி முதலீடு செய்ய அரசு பரிசீலித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மத்திய நெடுஞ்சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர்.

தற்போது அறிவித்துள்ளபடி திருவனந்தபுரம் - கன்னியா குமாரி,புதுவை-திண்டிவனம், திண்டிவனம்-திருச்சி, திண்டுக்கல்-திருச்சி, நாகப்பட்டினம்-தஞ்சாவூர்-திருச்சி, திருச்சி-கரூர் (திருச்சி புறவழிச்சாலை உள்பட) சேலம்-உளுந்தூர் பேட்டை, மதுரை- தூத்துக்குடி, கிருஷ்ணகிரி-திண்டிவனம், திருப்பதி-திருத்தணி-சென்னை ஆகிய நெடுஞ்சாலைகள் 4 வழிப் பாதையாக மாற்றப் பட இருக்கின்றன. இத்துடன் துறைமுகங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வழித் திட்டத்தின் அடிப்படையில் சென்னை போர் நினைவுச்சின்ன வாயிலில் இருந்து மதுரவாயல் வரை எக்ஸ்பிரஸ் வழித்தடம் அமைய இருக்கிறது.

சென்னை-கொல்கத்தா நான்கு வழிப்பாதைப் பணி 82% முடிவடைந்து விட்டதாகவும் தற்போது அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் எல்லா மாநிலங்களுக்கும் கட்டாயமானது. விரைவான போக்குவரத்திற்கு உதவும் என்ற பொதுக்கருத்தை உண்டாக்கவே இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடிகிறது.

இத்திட்டத்திற்கான நிலம் வருவாய்த்துறை மூலம் கையகப் படுத்தப்பட்டு, சப் ரெஜிஸ்ட்ரர் வழியே அந்தந்த நிலத்திற்கான உள்ளூர் மதிப்பு கணக்கிடப்பட்டு, நேரடி பேச்சு வார்த்தை மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு, மாநில அரசால் ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டும். உடனே அந்த இடம் அரசுக்கான சொத்தாகவும் பதிவு செய்யப்படும். இதுதான் இன்றுவரைக்குமான நடைமுறை.

ஆனால் சிலவேளைகளில் நிலத்திற்கான மதிப்பீடு செய்யப் படும்போது, உள்ளூர் மதிப்பைக் கணக்கில் கொள்ளாமல் அரசு மதிப்பின்படி பணம் வழங்கப்படுவதால் அப்பகுதி மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. 1 லட்சம் ரூபாய் பெறுமான நிலம் இம்முறையினால் சிலவேளைகளில் ரூ.30,000 லிருந்து 40,000 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் பெரும்பாலானோர் பாதிப்படைகின்றனர். எக்ஸ்பிரஸ் வழித்தடத்தின் அருகில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள், சுற்றுலா விடுதிகள், அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகள் நீண்டகாலத்திற்கு இயல்பான இப்பகுதிச் சூழலை மீட்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும் அபாயமிருக்கிறது.

சரக்குகளை எடுத்துச் செல்வதற்கும் ஆலைகளுக்கு தேவையான கச்சா மற்றும் உதிரிப்பாகங்களைக் கொண்டு வருவதற்கும் பொருளாதார உற்பத்தியைப் பெருக்குவதற்கும்தான் என்பதே இச்சாலை அமைவதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் இத்தகைய சாலை அமைப்பதற்கு ஆகும் செலவு ஒரு கிலோ மீட்டருக்கு 47,00,000 ரூபாயைத் தாண்டும் எனத் தெரிகிறது.

இது ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் உலக வங்கி கடனால் மேற்கொள்ளப்படுவதால் திட்டத்திற்கு ஆகும் நேரடிச் செலவும் விபத்துச் செலவும் எவ்வளவு என்பது குறித்து இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நெடுஞ்சாலைத் துறையானது சாதகமாகப் பல செலவுக் கணக்குகளைக் கூட்டிக் கழித்து ஒதுக்கியிருக்கிறது. கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விடப்பட்டுள்ள பாதிப்புகளும் அதற்கான செலவுகளும் ஒருபுறமிருக்க ஆய்வில் எடுத்துக் கொண்டதாக கூறப்படும் பாதிப்புகளும் மேம்போக்கான கணிப்புகளாகவே உள்ளன. அரசின் தரப்பிலிருந்து சில மரங்கள் மட்டும் வெட்டப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன எனச் சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பெங்களூர் - புனே தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிப் பாதையாக மாற்றும்போது நிலமங்களா - டோப்ஸ்பட் (தும்கூர் ரோடு) கிராமங்களுக்கிடையேயான 40கி.மீ. தொலைவுக்குள் மட்டும் சுமார் 800 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதற்காக 1கி.மீ.க்கு ரூ.55,000 வீதம் ஒப்பந்தக்காரர்கள் வனத்துறைக்கு கட்டியுள்ளனர். இதை வாங்கிக் கொண்டு அதிகாரிகளும் கைகட்டி, வாய் பொத்தி நின்றது தற்போது தெரியவந்துள்ளது.
(நன்றி - தி ஹிந்து) மேலும் திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக மண்டல மாநாட்டின் போதும் மாநாட்டு வரவேற்புக்கு இடைஞ்சலாகக் கருதப்பட்டு திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சில மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், வனப்பாதுகாப்பு அமைச்சரும் திமுக என்பது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது.
ஏறக்குறைய 15கி.மீ. இடைவெளியில் அமைந்திருக்கும் இரண்டு கிராமங்களுக்கு இடையில் மணிக்கு 100 கி.மீ. வேகத்திற்கும் அதிகமாகச் செல்லும் வாகனங்களால் ஏற்படப்போகும் பாதிப்புகள் கணக்கிலடங்காதவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கட்டு மானப் பணிக்காக ஆயிரக் கணக்கான மரங்கள் வெட்டப்படும் ஆபத்தும் காத்திருக்கின்றன. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நான்கு வழிச் சாலையை ஒட்டியுள்ள நிலப்பகுதிகள் சுற்றுலா சார்ந்த விடுதி மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக அதிக விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. இப்பகுதிகளில் நிலத்தின் விலை கடந்த இரண்டாண்டுகளில் 10 மடங்காக அதிகரித்துள்ளது. இப் பகுதியைச் சார்ந்த படித்த இளைஞர்கள் பலர் தரகர்களாகவும் மாறியிருக்கின்றனர். மதுரை-தூத்துக்குடி, கன்னியாகுமரி-திருவனந்தபுரம், நாகப்பட்டினம்-தஞ்சாவூர்-திருச்சி போன்ற பகுதிகளின் தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச் சாலை களாக மாற்றப்படும் பட்சத்தில் பாதிப்புகளின் அளவு இரு மடங்காக இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனெனில் மற்ற பகுதிகளைவிட இப்பகுதி பல மடங்கு விவசாய நிலம் சார்ந்தது.

1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி தமிழக அரசிற்கு கிழக்கு கடற்கரைச் சாலை சம்பந்தமாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் சில பரிந்துரைகளை அளித்தது. அதன்படி இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர, புதிதாக அமைக்கப்படும் சாலையின் தார்ப்பரப்பு 7.5மீட்டரும், இரு புறமும் மண் பரப்பு 1.5 மீட்டரும் ஆக 10.5 மீட்டர் அகலமே இருக்க வேண்டும். மரங்கள் வெட்டப்படக் கூடாது. சாலையின் போக்கை நேர்படுத்துவதற்காக மக்களை இடமாற்றம் செய்யக்கூடாது. சாலை மறுஒழுங்கிற்காக வீடுசூழ் பண்ணைகளைக் கையகப்படுத்தக் கூடாது. மண்ணை வளப்படுத்தும் நோக்கில் மரங்கள் திட்டக்காலம் முழுவதும் நடப்பட வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனைகள். ஆனால் குத்தகைக்காரர்கள் இதற்கு உட்படாமல் தொடர்ந்து விதியை மீறியதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்தை அணுகினார்கள். இதனால் வெறுப்படைந்த குத்தகைக்காரர்கள் சூழல் காப்பாளர்களை கடுமையாகத் தாக்கினார்கள். இதுதான் அன்றைக்கு நிகழ்ந்தது. அதேபோன்ற நிகழ்வுக்கு மீண்டும் ஒருமுறை அரசு நான்குவழிச்சாலை திட்டத்தின் மூலம் வழி வகுத்திருக்கிறது.

நான்குவழிச்சாலைத் திட்டத்தினால் பயனடையப் போவது துறைமுகங்கள், பெரும் வணிகக் கப்பல் முதலாளிகள், சிமெண்ட் தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், அணுமின் நிலையங்கள் போன்றவைதான். இவைகள் எந்த வகையிலும் ஊசிமுனையளவு கூட ஏழை, எளிய மக்களுக்கு பயன் அளிக்கப் போவதில்லை. இத்திட்டத்திற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளிவந்த உடன், ‘கூடங்குளத்தில் மேலும் இரு அணு உலைகள் அமைக்கப்படும்’ என அணு உலை செயல் இயக்குனர் தெரிவித்தார். (23-4-05) இதிலிருந்தே அவர்களுடைய உள்நோக்கம் எது என்பது தெளிவாகத் தெரிந்துவிடுகிறது.

ஏற்கனவே இலங்கையைச் சுற்றி வருவதால் நேர இழப்பு நேரிடுகிறது என்று சொல்லி மீனவர் வயிற்றில் மண்ணை அள்ளிப் போட சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வருவதுபோல இப்போது நான்குவழித் திட்டத்தை கையிலெடுத்திருக்கிறார்கள். இனி எவரும் இச்சாலைகள் வழியே மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டோ, இருசக்கர வாகனத்திலோ மெதுவாகச் செல்லமுடியாது. அதற்கும் டிராபிக் கான்ஸ்டபிள்கள் தண்டனை கொடுப்பார்கள். இதுதான் எக்ஸ்பிரஸ் ஹைவேயாச்சே? இதனால் ஊரெங்கும் சாலை, ஆனால் ஓட்டிச் செல்ல ஆளில்லை என்கிற நிலை தான் ஏற்படும்.

5. திருப்பூர் நொய்யலாற்றுக் கழிவுகள்: தற்போதைய நீதிமன்ற உத்தரவு ஒன்று திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவால் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர் சாயப்பட்டறை உரிமையாளர்கள். தீர்ப்பு இதுதான்- ‘சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றும் கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்கான நிலையங்களை அமைக்க முயற்சி எடுக்காத (25% முன் பணம் செலுத்தாத) 660 ஆலைகளை மூட வேண்டும்’ என்பது.

சுதாரித்துக் கொண்ட ஆலை அதிபர்கள் 25% முன் பணத்தை 10 சதமாக குறைக்க வேண்டும் என்றும் ‘ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ முறையில் கழிவுநீரை வெளியேற்ற தற்போது 10% முன் பணத்தை செலுத்துவதாகவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்ட 660 சாயப்பட்டறைகளில் 149 சாயப் பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வழக்கு விசாரணையில் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் காலங்காலமாக இருந்து வரும் இப்பிரச்சினையைத் தீர்க்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை ‘ஒன்றுமே இல்லை’ என்பதுதான்.

ஐ.மு.கூட்டணியின் நிதியமைச்சராக மகுடம் சூட்டிய ப.சிதம்பரம் 2000 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்பதற்காக ‘பின்னலாடைப் பூங்கா’வை ஆரம்பித்து வைத்ததோடு சரி, அங்கிருக்கக் கூடிய பிரச்சினைகளைப் பற்றி வாயே திறக்கவில்லை. பனியன் தொழிலின் முக்கியப் பொருளான சாயங்களைத் தயாரிக்கும் சாயப்பட்டறைத் தொழிலில் நேரடி யாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 10 லட்சம் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாதது வேதனை அளிக்கிறது என்கிறார் தொழிலாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர். பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில அரசால் உருப்படியான ஒரு அறிக்கையைக் கூட தாக்கல் செய்ய முடியவில்லை.

இதற்கு முன் 2002 ஆம் ஆண்டு மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவின் பேரில் கரூரில் மட்டும் சுமார் 110 சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. இவற்றைத் திறக்கக் கோரி 2003 ஜனவரி மாதத்தில் அங்குள்ள 600 பட்டறைகள் வேலை நிறுத்தம் செய்தன. அதன் பின்னர் என்ன நடந்ததுவென்றே தெரியவில்லை. மீண்டும் 110 சாயப்பட்டறைகளும் திறக்கப்பட்டு வேறுவேறு பெயர்களில் வேறுவேறு இடங்களில் தொழிலை ஆரம்பித்துவிட்டன.

‘சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிப்பதற்கு 10% முன்பணம் மட்டுமே தங்களால் செலுத்த முடியும், இந்த ‘ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ தொழில்நுட்பம் முழுமையான பலன் கொடுக்குமா என்றும் தெரியவில்லை. எனவே அரசு இது குறித்து விளக்கவேண்டும்’ என்று ஆலை அதிபர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு தரப்பிலிருந்து இவர்களின் கோரிக்கைக்கு உரிய விளக்கம் அளிக்காதது பிரச்னையை மேலும் பெரிதுபடுத்தியுள்ளது.

‘டெங்கு’ விஷக்காய்ச்சலுக்கு 12 வயது பள்ளி மாணவியும் 4 வயது சிறுவன் ஒருவனும் பலியாகியிருக்கின்றனர். இது மீடியாக்களால் வெளியுலகிற்கு கொண்டு வரப்பட்ட செய்திகள். வெளிவராமலே தினம் தினம் பல்வேறு விதமான தொற்றுநோய்களுக்கு ஆளாகி பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். திருப்பூரில் 1000க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளும் பிளீச்சிங் தொழிற்சாலைகளும் உள்ளன. சாயப்பட்டறைகளால் நிலத்தடி நீர் 1200அடி வரை உபயோகப்படுத்த முடியாததாகிவிட்டது. சாயப்பட்டறைகளின் தேவைகளுக்காக சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஒரு நாளைக்கு எடுத்துச் செல்லப்படும் நீரின் அளவு 12,000,00 லி (12லட்சம் லிட்டர்). 1997ல் நிரம்பி வழிந்த ஒரத்துப்பாளையம் அணையின் நீரைக் குடித்த ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்துவிட்டன.

தமிழகக் கிராமங்களிலும் காவிரி டெல்டா பகுதியிலும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வறட்சியின் விளைவாக பல தரப்பட்ட மக்களும் குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் திருப்பூரை நோக்கி படையெடுப்பதால் தண்ணீர்ப் பிரச்னை மேலும் விசுவரூபம் எடுத்துள்ளது. பயன்படுத்த முடியாத அளவுக்கு நச்சுத்தன்மை ஏறியுள்ள நீரையே வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி வந்திருக்கும் பலரும் பயன் படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையேயும் திருப்பூரிலும் அதனைச் சுற்றியுள்ள சாயப்பட்டறைகளுக்கும் பிளீச்சிங் தொழிற்சாலைகளுக்கும் தினந்தோறும் 12 லட்சம் லிட்டர் தண்ணீர் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து கொண்டு வரப்படுகிறது.
இதன் விளைவாகக் கிராமங்களின் நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது.

இதனால் விவசாயத்திற்கு கிடைத்து வந்த நிலத்தடி நீரும் வேகமாகக் குறைவதோடு 12 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் மீதமிருக்கின்ற நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளது. நொய்யலாற்றுப் படுகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அவற்றின் இருபுறமும் அமைந்துள்ள கிராமங்களின் நிலத்தடி நீர், 300 அடி வரை உபயோகப்படுத்த முடியாததாகி விட்டது என்று கூறுகிறது.

நிலைமை தினமும் மோசமாகிக் கொண்டே போகிறது. தொழிற்சாலைகளுக்காக தண்ணீர் எடுக்க வரும் லாரிகளைச் சிறைபிடிப்பதும் பல கிராமங்களில் தண்ணீர் லாரிகளை எதிர்த்து விவசாயிகள் முற்றுகைகளில் ஈடுபடுவதும் தொடர் கதையாகிக் கொண்டே போகிறது. விவசாயக் கூட்டமைப்பு ஒன்று இந்தப் பிரச்னையை உயர்நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக தற்போது பலன் கிடைத்தது.

உயர் நீதிமன்றமும் 19-6-05லிருந்து வாரத்தின் கடைசி நாட்களான சனி,ஞாயிறு கிழமைகளில் சாயப்பட்டறைகள் மூடப் பட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் 20 கோடி லிட்டர் சாயக்கழிவு நீர் வெளியேறுவது தவிர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி சிறிது ஆறுதல் அளித்தாலும் இதை கண்காணிக்க குழு எதுவும் அமைக்கப்படாததால் இதுவும் சோடை போக வாய்ப்பிருக்கிறது.

அவ்வப்போது இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்படுவதும் சாயப்பட்டறைகள் மூடப்படுவதும் மீண்டும் திறக்கப்படுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் உருப்படியாக ஒன்றும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இதைத் தவிர்க்க வேண்டுமெனில் உப்புக்குச் சப்பாக இருக்கும் சுற்றுச்சூழல் சட்டங்களை கடுமையாக்குவதும் திருப்பூர் சாயப்பட்டறைகளை முறைப்படுத்துவதற்கு அவசர சட்டங்களைப் பிறப்பிக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

இந்தியச் சூழலியல்

6.நர்மதை அணைத் திட்டம்: “நாட்டுக்காக ஒரு கிராமத்தை பலியிடுவது பாவமல்ல” - ஆட்சியாளர்களின் தீர்ப்பு காலந்தோறும் இப்படித்தான் இருக்கிறது. அவர்களின் உபதேசம் வழியே ஒரு கிராமம் பலியிடப்பட்டால் கூட பரவாயில்லை, 193க்கும் மேற்பட்ட கிரா மங்களையே மூழ்கடிப்பதென்றால் குறைந்தபட்சம் உபதேசத்தை எதிர்ப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்யமுடியும்? அந்த மூழ்கடிக்கும் வேலை யைத்தான் குஜராத், ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன. ஏறக்குறைய 3 லட்சம் பேர் வீடு, வாசல், நிலம் எல்லாவற்றையும் இழந்து தெருவில் நிற்கிறார்கள். இதில் 9,456 குடும்பங்கள் குஜராத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத், ம.பி.யிலும் பல்நோக்குத் திட்டங்களின் பெயரால் நதிகளில் அணைகளைக் கட்டி மக்கள் அந்தந்த வாழ்வாதாரப் பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். குஜராத்தில் தப்தி ஆற்றில் செயல்படுத்தப்படும் சுக்ரபாரா திட்டம், உகாய் மின் திட்டம், மாஹி, சர்தார் சரோவர் திட்டம் ,ம.பி.யில் சோன் ஆற்றில் செயல்படுத்தப்படும் பானாசாகர், பெட்வா ஆற்றில் மாட்டாடில்லா பல்நோக்குத் திட்டம், கோபா, சாத்பூரா, தவா ஆற்றில் செயல்படுத்தப்படும் தவா திட்டம் போன்றவையும் இங்கு குறிப்பிடத்தக்கவை.

கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மிகப் பெரிய ஆறான நர்மதையின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணைவழியே மக்களை கொல்லும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது குஜராத் அரசு. அரபிக்கடலில் போய் கலக்கும் உபரிநீரை ‘சேமிக்கிறேன் பேர்வழி’ என்று சொல்லிக்கொண்டு 1961ல் அன்றைய பிரதமர் நேருவால் துவங்கப்பட்ட இத்திட்டம் இன்றுவரைக்கும் இப்பகுதி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்நிலையில் அணையின் உயரத்தை 110 மீட்டரிலிருந்து 121.92ஆக உயர்த்தப்போவதாக நர்மதை பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் தெரிவித்திருக்கிறது. இதை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார் நர்மதா பச்சோ அந்தோலன் தலைவரும் சமூக சேவகியுமான மேதா பட்கர். 1985லிருந்து அணையின் உயரத்தை படிப்படியாக உயர்த்தி வருகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி எதுவும் தரப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கும் வரை திட்டப்பணிகளை நிறுத்தக் கோரி வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.

இந்த தொடர் பிரச்னைகள், அறிக்கைகள், நிபுணர் குழு ஆய்வுகள்,கட்சிகளின் நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் ஒருசேர கவனித்த பின் ஒரு முழுமையான முடிவுக்கு இலகுவாக வர முடிந்திருக்கிறது. எல்லா அரசுகளும் ஏழைகளை இயன்றவரையில் நசுக்குவதில் ஆனந்தம் கொள்கின்றன என்பதுதான் அது. ‘வளர்ச்சி’ எனும் மாயபோதை லட்சக்கணக்கான பூர்வகுடிகளின் மரணங்களில்தான் என்பதை நினைத்து கொஞ்சமும் கவலைப்படுவதாகவோ, அது குறித்தான குறைந்தபட்ச அனு தாபம் அரசியல் கட்சிகளுக்கு இருப்பதாகவோ தெரிய வில்லை. சமீபத்திய நிகழ்வுகள் அதை ஊர்ஜிதமாகவும் ஆக்கியுள்ளன.

1989ல் நர்மதை அணைப் பகுதிகளில் ஆய்வு செய்யச் சென்ற மேதா பட்கர் அங்கே ஆதிவாசிளுக்கு எதிராக நிகழும் ‘இடம் விட்டு துரத்தலை’ முடிவுக்கு கொண்டு வர நினைத்து, தன்னை அவர்களுடனான வாழ்வோடு இணைத்துக் கொண்டார்.
அந்தளவிற்கு தொடர்ச்சியாக அப்பகுதி மக்களுக்கு எதிரான அநீதி நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. 1979ல் திட்ட முதலீடாக இருந்த ரூ.2100 கோடி இன்று ரூ.27,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு, ஏற்படப்போகும் விளைவுகளை யோசிக்காத மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் குறித்து நீண்ட மௌனம் சாதித்து வருகின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் யாவும் தரப்பட்டு விட்டன என்ற மாநில அரசுகளின் அறிக்கை பொய் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ‘திட்டபணிகளால் எத்தனை ஆதிவாசிகள், தலித்துகள் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த விபரங்களைக்கூட மாநில அரசால் சரிவரத் தர முடியவில்லை’ என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் குற்றம் சாட்டியிருக்கிறார். அணையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு தர குடும்பம் ஒன்றிற்கு ரூ.10 லட்சம் செலவிடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற வழி காட்டல் நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்த மறுவாழ்வுச் செலவு ரூ.4000 கோடி என்று அரசால் கணக்கிடப்பட்டுள்ளது.

இழந்த நிலத்தைப் பணத்தால் ஈடுசெய்ய முடியாது என்று பணத்தை ஏற்க மறுத்த மக்களை வலியுறுத்தி, ‘அப்பகுதி யிலிருந்து வெளியேற்ற வேண்டும்’ என்ற ஒரே காரணத்திற்காக இழப்பீடு தருவதாக அறிவித்தன மாநில அரசுகள். “ரூ.10 இலட்சம் இழப்பீடு என்றனர். அதில் 1 லட்சத்தை வருமான வரி என பிடித்துக்கொண்டனர். அதையும் பல தவணைகளில் தந்தனர்.
ஒவ்வொருமுறையும் ரூ.20,000 தரவேண்டும் என்று இழவு வீட்டிலும் பிடுங்கிக் கொண்டனர் அரசு அதிகாரிகள்” என்கிறார் பாதிக்கப்பட்ட ஆதிவாசி இளைஞர் மோகன்லால். 2004ம் ஆண்டுக்கான ம.பி அரசின் தணிக்கைத்துறை அறிக்கையில் ரூ.15.78 கோடி அளவில் போலியான பெயர்களுக்கு மறு வாழ்வு உதவிகள் வழங்கப்பட்டது தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வெகுஜன மக்கள் நலன்’ என்ற காரணத்தை முன்னிட்டே காலங்காலமாக இதுபோன்று நடந்துவரும் மலைவாழ் ஆதிவாசிகள் மீதான இந்த நெருக்குதல்கள் கடந்த 50 ஆண்டுகளில் விசுவரூபம் எடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி குறித்த இவர்களின் மனோபாவத்தில் ஏற்பட்டுள்ள புரிதல் சிக்கல்களும் ‘அடுத்தவன் குடியைக் கெடுத்தாவது தான் மட்டும் சுகபோகமாக வாழும்’சுயநல மனோபாவமும் சமூகவியலாளர்களை கவலை கொள்ள வைத்துள்ளது.

‘சிறுகக் கட்டிப் பெருக வாழ்’ எனும் உயரிய கிராமத் தத்துவத்தை ஆட்சியாளர்கள் ஒருபோதும் உணர்வதாகத் தெரியவில்லை. “காடுகளை மூழ்கடித்து, வாழ்விடங்களை அழித்து, மக்களை வருத்திக் கட்டப்படும், பெரிய அணைகளை விடவும் ஏரி, குளங்களை மேம்படுத்துவதே சிக்கனமான, நிலைத்த நன்மை தருவது” என்கிறார் நீரியல் நிபுணர் சாண்ட்ரா போஸ்டல். பிரதமர் மன்மோகன்சிங், இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் கருத்தரங்கில் தெரிவித்துள்ள கருத்துக்கள் சற்று ஆறுதல் தருபவையாக உள்ளன:

“சுற்றச்சூழலைப் பாதிக்காத வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு ஏற்ற நம்பகமான அமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டிய கட்டாயச்சூழலில் இருக்கிறோம். மேம்பாட்டுப் பணிகளில் வழிவழியாய் தாங்கள் வாழ்ந்து வந்த இடத்திலிருந்து மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படுகிறது. அடிக்கடி இத்தகைய பிரச்னைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ச்சிப் பணிகள் இருக்கக்கூடாது. திட்டப் பணிகளால் கிடைக்கும் வளர்ச்சி, அதனால் மக்கள் இடம் பெயரும் நிலை, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பிரச்னைகளை விவாதிக்க நேரம் வந்துவிட்டது.
வளர்ச்சித் திட்டங்களை அமல் செய்யும்போதே திட்டத்தால் இடம்பெயரும் மக்களின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும்” எனும் பேச்சு கடந்தகாலப் பிரதமர்களின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த மனோபாவத்திலிருந்து சற்றே மாறுபட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தமைக்காக இந்தி நடிகர் அமீர்கான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் நடித்த விளம்பரப் பொருட்களை உடைப்பதும் உருவ பொம்மைக்கு தீயிட்டுக் கொளுத்துவதிலும் மோடி ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். இதே நிலைதான் எழுத்தாளர் அருந்ததிராய்க்கும் ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயக சமூகத்தில் சகிப்புத் தன்மையற்ற போக்கின் நீட்சியாகவே இதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

இத்தகைய சர்ச்சைகளுக்குப்பின் திட்டப்பணியை பார்வையிட்ட ஐ.நா.சபையின் 3 பேர் கொண்ட மனித உரிமை நிபுணர் குழு “பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வரை சர்தார் சரோவர் அணை மட்டத்தை உயர்த்தும் பணியை நிறுத்திவைக்கலாம்” என்று பரிந்துரைத்துள்ளது. ஆனால் மோடி அரசு காதில் போட்டுக் கொள்வதாகவே இல்லை.

சர்தார் சரோவர் மட்டுமல்லாது 30 பெரிய, 135 நடுத்தர, 3000 சிறிய அணைகள் நர்மதை நதியின் குறுக்கே தற்போது கட்டப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குரல் களையோ அப்பகுதி மக்களின் குறைந்தபட்ச கோரிக்கை களையோ அரசுகள் செவி மடுப்பதாகத் தெரியவில்லை. ம.பி. இதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள காரணம் அணை மூலம் அதிக மின்சாரம் கிடைக்கும் என்பதற்காகத் தான். ஆனால் நடப்பதோ தலைகீழாக இருக்கிறது. 2005ல் ம.பி.க்கு சர்தார் சரோவர் அணை மின்நிலையம் 370மெகாவாட் மின்சாரம் தரும் என்று எதிர்பார்க்கப்பட, கிடைத்ததோ 85 மொகாவாட் தான். குறைந்தளவு மின்சாரம் கிடைப்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியான இழப்பீடுகள் தராமல் எந்த வளர்ச்சிப் பணியையும் தொடரக்கூடாது என்பது நீதிமன்றத் தீர்ப்பு. 4000 பேருக்கு நிலம் தந்ததாகக் காட்டப்பட்ட ம.பி.அரசுக் கணக்கும் பொய்யானதாக இருந்தது. நிலத்தைச் சார்ந்தே வாழும் விவசாயிகளுக்கு 25% நிலமாவது பாசனம் உள்ளதாகத் தரவேண்டும். குறைந்தபட்சமாக 2 ஹெக்டேர் நிலமாவது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தரப்பட வேண்டும் என்ற நீதிமன்ற வழிகாட்டுதலை அரசுகள் மதிக்கவில்லை.

அணைகள், ஆலைகள், அணுஉலைகள், சுரங்கங்கள் என வளர்ச்சி முகமூடி போட்டு வரும் ஒவ்வொன்றும் மக்கள் வாழ்விடத்தை, விளைநிலத்தை, குடிநீரை, இயற்கையை பலிவாங்கிக் கொண்டுதான் உள்ளது. இது குறித்து ஆட்சி யாளர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. அணை உயரத்தை 110 மீட்டராக நிறுத்திவிட்டாலே, பாதிக்கப்படும் மக்களில் 80% பேர் மாற்றிடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்காது என்பதையும் நர்மதை அணை எதிர்ப்பு இயக்கத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு மறைமுகமாக உதவும் இதுபோன்ற மெகா அணைத் திட்டங்கள் சமீபகாலங்களாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இது ஆரோக்கியமான நிலையல்ல. இத்தகைய மெகா திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்னதாக அந்தந்தப் பகுதி மக்களின் நலனை முன்னிறுத்திச் செய்ய வேண்டியது மிக அவசியம். தண்ணீரைத் தேக்கி வைக்க அணைகள் தேவைதான்.
அதேநேரம் அது மக்களின் வாழ்க்கையை மூழ்கடித்து சாக வைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையெனில் அடுத்து வரும் சந்ததியினர் சென்ற தலைமுறை ஆட்சியாளர்களை ‘கொடுங்கோலர்கள்’ என்று சித்தரிப்பதை தவிர வேறொன்றும் நிகழாது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com