Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2007
நீதித்துறை சுதந்திரம் எப்போது சாத்தியம்?

கே.ஜி.கண்ணபிரான் / தமிழில்: ந.இராதாகிருட்டிணன்

நீதிபதிகளை எவ்வாறு நியமனம் செய்வது, நீக்குவது எப்படி?
இவற்றுக்கான பதிலே நீதிபதிகள் மற்றும் நீதிதுறை அமைப்பின் பொறுப்பை வரையறை செய்வதாக இருக்கும். நாட்டின் உயர் நீதியமைப்பின் பண்பை மதிப்பீடு செய்வதற்கான இக்கேள்விகளுக்கு பதிலளிப்பது சிக்கலானது என்று பரவலாக நம்பப்படுகிறது.

நீதிமன்றங்கள், நீதித்துறை என்ற படிநிலை அமைப்பிற்கு நியமிக்கப்படும் நீதிபதிகள் அவர்தம் செயல்முறைகளின் உள்ளடக்கம், இவ்வமைப்பு செயல்படும் விதம் பற்றி குறைவாகவே மக்கள் அறிந்திருக்கின்றனர். சட்டமன்றங்கள், பாராளுமன்றங்கள், அவற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் பற்றிய அறிதலைவிட இது குறைவானது. வாக்களிக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக அறிந்துகொண்ட பிறகு நமது பிரதிநிதிகள் அவ்வாறு ஆக விரும்புவோர் பற்றி மிகுதியாக அறிந்து கொண்டுள்ளோம். இந்த வெளிப்படைத்தன்மை நமது ஜனநாயகத்தின் உள்ளடக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. கீழ்மட்டத்திலிருந்து மாவட்ட நீதிபதிகள் வரை அவர்களின் பயன்கள், குற்றவாளிகளை விசாரிப்பதற்கான அதிகார எல்லை பற்றி மக்களுக்கு ஓரளவு புரிதல் உள்ளது. படிநிலையில் மேலே செல்லும்போது நீதிபதிகளின் நியமனங்கள், நியமிப்போரின் அதிகாரங்கள், அவர்களது நடவடிக்கைகளை ஒரு மர்மம் திரையிட்டு மறைக்கிறது. இருப்பினும், நிர்வாக அமைப்பு அடிப்படை சுதந்திரங்களை ஆபத்துக்குள்ளாக்கும்போது அக, புற நெருக்கடிக் காலகட்டங்களில் உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் விவாதத்திற்குள்ளாகின்றன. அதுபோன்ற காலகட்டங்களில் நமது அரசியல் அமைப்பில் விளக்கிக் கூறியுள்ளபடி, நீதிதுறை அமைப்பே ஜனநாயக ஆட்சியின் வழிகாட்டியாக இருக்கிறதென்று நமக்கு சொல்லப்படுகிறது.

காலனிய நலன்களை நிர்வகிக்க பயிற்சியளிக்கப்பட்ட ஒரு நிர்வாகத்திடமே சுதந்திரம் பெற்றபிறகும் நாம் விடப்பட்டோம். அதேபோன்று எதிர்ப்பு, கிளர்ச்சிகளை அடக்கி காலனிய ஆட்சியைப் பாதுகாக்கும் சிறப்புச் சட்டங்களுடன் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு நீதித்துறையிடமே நாம் விடப்பட்டோம். உயர், உச்ச நீதிமன்றங்களின் அமைப்பே இந்த மரபுவழிக்குச் சான்றாகும். உண்மையில் 1950 ஜனவரி 26ல் அரசியல் சாசனம் அமுலுக்கு வந்தபிறகும் ஒன்றும் மாறிவிடவில்லை என்று உச்ச நீதிமன்றம் 1964-ல் (1986ல் மீண்டும் உறுதி கூறப்பட்டது) கருத்துத் தெரிவித்தது. மாற்றத்தை அறிவிக்கக்கூடிய எந்தப் புதிய நிறுவனமும் உருவாக்கப்படவில்லை.

ஆனால் நீதித்துறையைப் பொறுத்தவரை சில மாற்றங்களைச் செய்தோம். அதிகாரத்தை பிரிப்பது என்ற கொள்கையை முழுவதுமாக பின்பற்றவில்லையெனினும், சட்டமியற்றும் அமைப்பு தன்னிச்சையாக சட்டமியற்றுவதைத் தடுக்கவும் நிர்வாகம் தன்னிச்சையாக அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் நமக்கொரு சுதந்திரமான நீதித்துறை வேண்டும் என்ற கருத்து இருந்தது. அவை அரசியல் சாசனத்தின் பகுதி IIIல் உத்திரவாதப்படுத்தியுள்ள குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஏற்ப ‘விழிப்புடன் காவல் செய்யும்’ காவலனாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டன.

தனிநபர் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி அதன்மீது கட்டுப்பாடுகளை விதிக்கிற சொத்துரிமையைச் சுருக்குகிற நீதித்துறையின் சுதந்திரம் மீது கட்டுப்பாடுகளை விதிக்கிற சட்டங்களை அறிமுகப்படுத்திய காலகட்டத்தில் அம்மாற்றங்கள் வடிவமைக்கப்பட்டன. நீதித்துறையின் சுதந்திரம்மீது பெரிய விவாதம் நடந்து கொண்டிருந்தது அப்போது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பதை மையமாகக் கொண்டிருந்த சினமூட்டும் இவ் விவாதத்தின் போதுதான், திருமதி. இந்திராகாந்தி அடங்காப்பிடாரியான நீதித்துறை என்னும் குதிரைமீது சவாரி செய்ய முயன்றார். காலக்கிரமப்படி மிக மூத்த நீதிபதி நியமிக்கப்படவேண்டுமா? அல்லது மக்களின் தேவை களை புரிந்துகொள்கிற, அதற்கேற்ப அரசியல் சாசனத்திற்கு விளக்கமளிக்கும் திறமையுள்ள ஒரு சரியான தலைமை வழங்கப்படுவதற்காக மிக மூத்த நீதிபதி/ நீதிபதிகள் ஒதுக்கித் தள்ளிவிடப்படலாமா?

நீதித்துறை சுதந்திரம் பற்றிய இவ்விவாதம் நிர்வாகம், அதன் இயற்கையான போக்குகளோடு ஓரளவுக்கு தொடர்புடையதாக இருந்தது. மக்களின் உரிமைகள், அரசியல் சாசன முன்னுரை மிகத் தெளிவாக விளக்கியுள்ள மதிப்புகள், பகுதி IV-ல் உள்ள வழிகாட்டு நெறிகள், மனிதத்தன்மையற்ற சமூக வழக்கங்கள், இவ்வுரிமைகளை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் பயன் படுத்தக்கூடிய பிற அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியிருந்தன. இவ்விவாதங்கள் சட்டத்தின் ஆட்சி என்ற அனைத்து பிரதிநிதித்துவ நிறுவனங்கள், நீதித்துறையின் தேர்ந்தெடுக்கப்படாத நிறுவனங்களின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பெரிய தளத்தில் நடைபெற்றன.

நீதி வழங்கவும், ஆற்றும் கடமைகளுக்காக கற்பதற்கும் ஒரு நீதிபதியிடம் இருக்கவேண்டிய விரும்பத்தக்க பண்புகளை இவ்விவாதம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. ஈடுபாடு கொண்டதொரு நீதித்துறை வேண்டுமென்று விரும்பியதற்காக அழிவுக் கோட்பாட்டை முன் வைத்ததாக திருமதி. காந்தி தாக்கப்பட்டார். நீதிபதிகளை ஒதுக்கித் தள்ளுவது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல, அது அக்காலக்கட்டத்தில் நிர்வாகம், நீதித்துறைகளுக்கு இடையிலான ஒரு யுத்தத்தின் பண்பை தீர்மானிப்பதாக இருக்கிறது என்று கே.எஸ் ஹெக்டே கருதினார்.

நீதிபதிகளின் பதவி மூப்பை முந்திச் செல்வது ஒரு தனிப்பட்ட நடவடிக்கை அல்ல. அது ஒரு திட்டத்தின் பகுதி. காங்கிரசை உள்ளிருந்து கைப்பற்றுவது, அரசியல் சாசனத்தை திசைதிருப்புவது போன்ற 1964ல் மேற் கொண்ட கொள்கைகளைப் பின்பற்றும் வகையில் முக்கிய கம்யூனிஸ்டுகள் - 1969-ல் காங்கிரஸ் பிளவுண்டதிலிருந்தே அக்கட்சிக்குள் நுழைந்தனர். 1971 தேர்தல்களிலிருந்து அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் கம்யூனிஸ்டுகளால் செலுத்தப்பட்ட மிகப்பெரிய செல்வாக்கின் சான்றாக இருக்கின்றன. இ.பொ.க.வினர், காங்கிரசில் அதன் சகபயணிகள்தாம் நீதிபதிகளை ஒதுக்கித் தள்ளுவதை ஆதரித்தனர் என்பது நினைவுகூரத்தக்கதாகும். இதிலிருந்து, திருமதி.காந்தியின் ஆட்சிக்கு முன்பு ஜனநாயகத்தன்மையோடு, குடிமக்களின் மனித உரிமைகளைக் கவனத்தில் கொண்டவையாக நீதிமன்றங்கள் இருந்தன என்றோ, அதற்கு முன்பு நீதிபதிகள் ஒதுக்கப்படவே இல்லையென்றோ முடிவுக்கு வருவது தவறானதாகவே இருக்கும். உண்மையில் விவாதத்தின் போதே, நீதிபதி ஹெக்டே அவர்களே அவரது பல மூத்த நீதிபதிகளை ஒதுக்கிவிட்டே டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியானார் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

நாடு எதிர்கொண்டிருந்த நெருக்கடிக்கு புரட்சிகரமான நடவடிக்கைகள் தேவைப்பட்டன. திருமதி.காந்தி ஒரு புரட்சிகர தோற்றத்தை வழங்கினார். நீதிபதிகளும் பழமைவாத அரசியல்வாதிகளும் பீதியடைந்து, ‘யோகியும் அலைச்சலும்’ கதையில் வரும் கெட்ட கனவு காண் பவர்களாகவும் இருந்தனர்.
உள்ளதை உள்ளவாறு பாதுகாக்கும் ஒரு உறுதியான காவலனாக நீதித்துறை இருக்க வேண்டும் என்று அவர்களே விரும்பினர்.
இப்படித்தான் அவர்கள் தாராளவாத ஜனநாயகத்தை வரையறை செய்த தோடு, அரசியல் சாசனத்தின் பகுதி III முன்னுரை அங்கீகரித்துள்ள தனிநபர் சுதந்திரத்தையும், சங்கம் வைக்கும் உரிமைகளையும் புரிந்துகொண்டனர்.

அவ்விவாதம், அரசியல் சாசனத்தை ஒரு நீதி ஒழுக்கக் கண்ணோட்டத்தில் வாசிக்கக் கோரியது. வழிகாட்டு நெறியில் தெளிவுபடுத்தப்பட்ட அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும்வரை அரசை வற்புறுத்துவதைக் கோரியது. அனைத்துப் பரிமாணங்களிலும் சமத்துவத்தையும், நீதியையும் எட்டுவதைக் கோரியது. நமதைப் போன்றதொரு பன்முக சமுதாயத்தில் ஒற்றுமை, அமைதியை நிலைநிறுத்த சமத்துவமும், சகோதரத்துவமும் முக்கியமான அங்கங்கள். நிர்வாகத்திற்கு இவை அடிப்படையான கடமைகளாகும்.

வழிகாட்டு நெறிகள் மிகக் குறைந்தபட்சமானவையே. எந்தவொரு கொள்கை விளக்கமும், இந்த அரசியல் சாசன குறைந்தபட்ச திட்டத்திற்கு மேலும் கூடுதலாகவும் தொடர்புடையதாகவுமே இருக்கவேண்டும். பகுதி IVல் உள்ள இந்த அனைத்துவிதிகளும் ஒன்றாக சேர்த்து வாசிக்கப்படவில்லையெனில், இந்த அரசியல் சாசன விளக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வது சாத்திய மில்லாமல் போய்விடலாம். இந்த அரசியல் சாசன குறைந்தபட்சத்தை எந்த நிறுவனமும் நடைமுறையில் கொண்டு வருவதற்குச் செயல்பட தயாராக இல்லாமல் இருந்தது. அரசியல் சாசனத்தின் முன்னுரை எடுத்துக் காட்டுகிற விசயம் விருப்பத்தின் ஒழுக்கமாகும். இட ஒதுக்கீடுபற்றிக் கூறும் வழிகாட்டு நெறிகளில் அத்தியாயமும் பிரிவுகளும் உள்ளடக்கியுள்ள விசயம் கடமையின் ஒழுக்கமாகும். (மனசாட்சி சுதந்திரம், கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர் - தீண்டாமை ஆகியவற்றை ஒழிப்பது, காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது உள்ள உரிமை, உயிர் வாழ்வதற்கான உரிமை). எனவே அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள லட்சியங்களுக்கு நீதித்துறை பொறுப்புள்ள முறையில் இருப்பது அவசியமாகிறது.

தேவையான அளவு தொலைநோக்கற்ற நீதித்துறைக்கு கிடைத்த சுதந்திரம், துறையின் நோக்கத்தையும் தத்துவத்தையும் அரித்துவிடுவதற்கு இட்டுச் செல்வதாயிருந்தது. நியமனத்தில் நிர்வாகத்தின் தலையீடு என்பதல்ல பிரச்னை. அரசியல் சாசனத் திட்டத்தை, சட்டத்தை உருவாக்கத் தேவையான குறிக்கோளும் ஆர்வமும் உள்ள- அரசியல் சாசன முன்னுரை காட்டும் நோக்கங்களைக் காக்கும் வகையில் சட்டத்திற்கு விளக்கமளிக்கக்கூடிய, அரசியல் சாசன குழப்பங்களுக்கு தீர்வு காணக்கூடிய - ஒரு சட்டக்கொள்கையை வகுக்கும் செயல்முறையில் நபர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் பிரச்னை. நீதிமன்றங்கள் உள்ளதை உள்ளவாறு நிலை நிறுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருப்பவையல்ல.

தொலைநோக்கின்றிருக்கும் ஒரு நிறுவனத்தில் உள்ள நீதிபதிகள் தமது செல்வம் மங்காத தனிச்சிறப்புரிமைகள், ஊதியத்திற்கு அப்பாற்பட்ட பல்வேறு வசதிகள், ஓய்வுக் குப்பிறகு கருவூலச் சொத்தில் வாழ்வதற்கான திட்டம் இவற்றிற்கு மட்டுமே பொறுப்பானவர்களாக இருக்கிறார்கள். அரசியல் சாசனப்படி, நாட்டின் விவகாரங்களில் எந்தப் பாத்திரத்தையும் வகிப்பதற்கில்லாமல் செய்யக் கூடிய நீதிமன்ற அலுவலர் நியமன முறையே நிலைமையை கிட்டத்தட்ட குலைத்துவிட்டது. ஒருவரது சொந்த வாழ்வின் உயர்வில் பற்றிக் கொண்டுவிடுகிற இந்த நிலைமையே நமது சமுதாயத்தில் உள்ள உயர் மதிப்பீடுகளை தொடர்ந்து படிப்படியாக அழித்துக் கொண்டுவருகிறது.

குஜராத் நீதிமன்றத்தில் பெஸ்ட் பேக்கரி வழக்கு விசாரணையில் ஏற்பட்ட பாதை விலகலுக்கு எதிர் வினையாக, விசாரணையை அண்டை மாநிலத்திற்கு மாற்றியது உச்சநீதிமன்றம். குஜராத்தில் விசாரணையின்றி மூடப்பட்டுவிட்ட ஏறத்தாழ 200 வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் உத்தரவிட்டது. முந்தைய தமிழக முதல்வர் போல நீதி நிர்வாகத்தை கால் மிதியடியாக பயன்படுத்துவதால் ‘சட்டத்தின் ஆட்சி’யை பாதுகாப்போர் வழக்குகள் ‘நியாயமான’ விசாரணைக்காக அண்டை மாநிலங்களுக்கு ஓடிப் போவதும்கூட (சட்டத்தின் பாதுகாவலர்களின் வரிசை ஐயத்துக்குரியது) நீதித்துறையின் இந்த படிப்படியான அழிவின் வெளிப்பாடுகளே. ஓய்வுபெறும் ஒவ்வொரு தலைமை நீதிபதியும் நீதித்துறையைச் சூழ்ந்துவரும் ஊழலைப்பற்றிக் கூச்சலிடுகிறார்.

மதிப்பீடுகள் ஏதுமற்ற நிலை, அதன் விளைவான குறுகிய பார்வை கொண்ட ஒரு தொழில். தளராத உழைப்புடன் கவனிக்கவேண்டிய பொறுப்புகள் ஏதுமில்லை என்பது உறுதியாவதால் இந்த சுதந்திரத்தை அத்தொழில் புரிவோர் அனுபவிக்கச் செய்கிறது. நிறுவனப் பொறுப்புகளால் கடிவாளமிடப்படாத/ அரசியல் சாசன ஒழுக்கத்திற்குப் பொறுப்பான பார்வையற்ற, நடைமுறையில் ஒழுக்கத்தைக் கடைபிடிக்காமலிருக்க உரிமம் வழங்கப்பட்டுள்ள ஒரே தொழிலாக அது தொடர்கிறது. இத்தகைய சூழலில் முடிவு எடுக்கும் நடைமுறையில் ஊழல் மற்றும் தொழில்முறைத் தலைவர்களின் பொருட் குவிப்பு தவிர்க்க முடியாததாகத் தோன்றுகிறது.
தனிப்பட்ட ஊழல், முடிவு எடுக்கும் நடைமுறையில் தலையிடுகிறது. இவ்வாறு மிகவும் பேசப்படுகிற சுதந்திரம் அது நடைமுறைப்படுத்தப்படுவதை விட மிக வேகமாக அழிந்துவருகிறது. மேலும் அதனால்தான் நீதித்துறை நியமன விதமும் முறைமையும் ஒவ்வொரு மட்டத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அரசியல் சாசனப்பிரிவு 124(2) உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தைப் பற்றியும் பிரிவு 147(1) உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தைப் பற்றியும் பகுத்தளிக்கிறது. இந்த நீதிபதிகளை குடியரசுத்தலைவர் நியமிப்பார். குடியரசுத் தலைவர் தேவை என்று கருதினால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கலந்தாலோசித்த பிறகு உச்ச, உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர்த்த பிற நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எப்போதும் கலந்தாலோசிக்கப்படுவார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அந்தந்த மாநிலத்தின் ஆளுநர், தலைமை நீதிபதி தவிர்த்த பிற நீதிபதிகள் பதவிக்கு அந்தந்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியும் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படுவார். ஒரு நீதிபதியை பரிந்துரை செய்வதற்கு தேவையான அறிவார்ந்த பண்பாற்றலோ அறிவார்ந்த அனுபவமோ எந்த இடத்திலும் தேவைப்படுவதில்லை. நீதிபதியாக நியமிக்கப்படுவதற்குத் தேவையான ஒரு வழக்கறிஞரின் பண்புகள், தகுதிகள் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

உச்ச/உயர் நீதிமன்றத்திற்கு ஒரு நீதிபதி சந்தேகத்திற்கிடமின்றி அரசியல் சாசனப்படி நியமிக்கப்படுபவர் தான். அவருக்கு விமர்சனத்துக்கிடமின்றி பயன்படுத்தக் கூடிய ஏராளமான அதிகாரங்கள் உள்ளன. அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள விளக்கமளிக்கும் அதிகாரம் அழிவு தரக்கூடிய உள்ளாற்றல் கொண்டதாகும். அரசியல் சாசன நிறுவனங்களுக்கான நியமனம் பற்றி கவனம் செலுத்தத் தவறுவது நீதித்துறையின் சுதந்திரத்தை ஒருபோதும் உறுதிப்படுத்தாது. பண்பாடற்றவர்களும் ஊழல்வாதி களும் நேர்மையற்ற செயல்களை வளர்த்துக்கொள்ள ஒரு கேடயமாக மட்டும் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். ஒருசில கருப்பு ஆடுகள் ஒரு நிறுவனத்தை செயலிழக்கச் செய்யமுடியாது என்று பல சமயங்களில் சொல்லப்பட்டு வருகிறது. இது உண்மையல்ல, அமைதியான ஆடுதான் ஒரு நிறுவனத்தைச் செயலிழக்கச் செய்கிறது.

நீதிபதிகள் நடத்தைப்பற்றி காது கொடுத்துக் கேட்க முடியாத பல்லாண்டுகால விமர்சனத்திற்குப் பிறகு 1992 செப்-18,19 ல் டெல்லியில் நடந்த தலைமை நீதிபதிகள் மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகெங்கும் நீதித்துறை வாழ்வின் உயர் மதிப்புகளாக பிரதிபலிக்கும் விதிமுறைகள் வழிகாட்டுதல்கள் மரபுகள் பின்பற்றப்படவேண்டும் என மீண்டும் எடுத்துக் கூறத் தீர்மானிக்கப்பட்டது. பதவியிலோ தனிவாழ்விலோ நடத்தைக்கு வழிகாட்டும் மதிப்பீடுகளை மறுவார்ப்பு செய்யும் ஒரு வரைவினை சமர்ப்பிக்க இந்திய தலைமை நீதிபதியால் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அவ்வரைவு விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் முழு நீதிமன்றத்தாலும் அங்கீகரிக்கப்பட்டு அவ்வறிக்கை நீதிபதிகளைக் கட்டுப்படுத்தக் கூடியதாக ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்விதிகளை மீறி தவறிழைக்கும் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியத் தலைமை நீதிபதிக்கு அத்தீர்மானம் அதிகாரம் வழங்கியது.

“உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமது தலைமை நீதிபதியிடம், தமது பெயரிலும் தமது துணைவியார் பெயரிலுமுள்ள சொத்துக்கள் பற்றி அறிவிக்கவேண்டும். தலைமை நீதிபதியும் அதுபோன்றதொரு அறிவிப்பை பதிவு செய்து கொள்வதற்காக அளிப்பார். அவ்வறிவிப்புகள் ரகசிய மானவையாக வைத்துக் கொள்ளப்படும். எந்தவொரு நீதிபதியும் கேளிக்கை சங்கத்திலோ, பிற சங்கத்திலோ எப்பதவிக்காகவும் போட்டியிடக்கூடாது. வழக்கறிஞர் சங்க உறுப்பினர்களுடன் குறிப்பாக அதே நீதிமன்றத்தில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.

வழக்கறிஞர் தொழிலில் இருக்கும் அவரது குடும்பத்தினர்/நெருங்கிய உறவினர்களோ யாரானாலும் அவரால் தலைமை தாங்கப்படும் நீதிமன்றத்தில் அவருக்கு முன்பாக வழக் காடக்கூடாது. அவரால் நடத்தப்படக்கூடிய எந்தவொரு விசயத்தோடும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது. எந்தவொரு நீதிபதியும் தனது குடும்பமோ/ நெருங்கிய உறவினரோ அக்கறை அல்லது ஈடுபாடு கொண்டுள்ள வழக்கை விசாரிக்கக்கூடாது. அரசியல் விவகாரங்கள்/ நீதித்துறை தீர்மானிக்க வேண்டிய/ எழப்போகும்/ நிலு வையிலுள்ள விவகாரங்கள் பற்றி, பொதுவிவாதத்தில் கலந்துகொள்வதோ பகிரங்கமாக தனது கருத்துக்களை தெரிவிப்பதோ கூடாது.

ஒரு நீதிபதி தமது தீர்ப்புக்களே கருத்துக்களை தெரிவிக்கக் கூடியனவாக இருக்கும்படி செய்யவேண்டும். தீர்ப்புக்களின் சரியான தன்மையை மின்னணு, இதர ஊடகங்களில் பிரச்சாரம் செய்யக்கூடாது. தன் குடும்பம், நெருங்கிய உறவினர், நண்பர்களைத் தவிர பிறரிடமிருந்து விருந்தோம்பல், பரிசுகளை ஏற்கக்கூடாது. தான் பங்கு வைத்திருக்கும் கம்பெனி வழக்குகளை விசாரிப் பதோ, தீர்ப்பு வழங்குவதோ கூடாது. அக்கம்பெனியில் தனது நலன்களை வெளிப்படையாகத் தெரிவித்து, ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கப்படவில்லையெனில் அந்த வழக்கை அவர் விசாரிப்பதைத் தொடரலாம்.

ஒரு நீதிபதி பங்கு வர்த்தக யூகவணிகத்தில் ஈடுபடக் கூடாது. தானோ பிறருடன் கூட்டாகச் சேர்ந்தோ எந்த வாங்கல், விற்றலிலோ வணிகத்திலோ ஈடுபடக் கூடாது. எந்த நோக்கத்திற்காகவும் பணம் திரட்டும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. இதில் பங்களிப்புகளை ஏற்றுக்கொள்ளுதலும் அடங்கும். பதவியோடு தொடர்புள்ள ஊதியத்திற்கப்பாற்பட்ட வசதி/சலுகை வடிவத்தில் எந்த பொருளாதார பலனையும் ஒளிவு மறைவின்றிக் கிடைக்கக்கூடியதாக இருந்தாலல்லாது நாடக்கூடாது. இதில் ஐயம் இருப்பின் இந்தியத் தலைமை நீதிபதி தெளிவுபடுத்த வேண்டும். தொடர்ந்து மக்கள் பார்வையில் பணியாற்றுகிறோம் என்பதை ஒரு நீதிபதி உணர்ந்திருக்க வேண்டும். மக்களிடம் உயர் மதிப்பைப் பெற்றுள்ள உயர்ந்த பதவி வகிக்கும் அவர் அப்பதவிக்கு அவப் பெயரைத் தரும் எந்தவொரு செயலையும் செய்வதோ, அப்பெயரைப் காக்கும் செயல்களைச் செய்யத் தவறுதலோ கூடாது. அதனால்தான் பதவியின் அந்தஸ்தோடு இணைந்துள்ள ஒரு அளவானதான தனித்திருத்தலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.”

இது ஷேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’டில் வரும் பொலோனியஸை எனக்கு நினைவூட்டுகிறது. இந்திய தலைமை நீதிபதி தமக்குத்தாமே பேசும் ஒரு வசனம். இவை வெறும் ஒழுக்க மூதுரைகளாக, ஒருசிலர் வாயளவில் மட்டுமே பேசக்கூடியவையாக இருந்து வருகின்றன. ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு சாதாரண நீதிபதியை விட உயர்ந்தவரல்லர். அவர் சமமானவர்களில் ஒருவர் மட்டுமே. உயர்நீதிமன்றம் நிர்வாக வகையில் உச்ச நீதிமன்றத்திற்குக் கீழ்ப்பட்டதல்ல. ஒருவரிடம் காணக் கூடிய வெளிப்படையான பகட்டுவேஷம் வாழ்வில் நடப்பதைக் காட்டுகிறது. ஒருவரிடம் வெளிப்படையாகத் தெரியும் கீழ்ப்படிதல் என்பது ஆதாயம் பயக்கும் ஒன்றுக்காகச் செய்யக்கூடியதே. உயர் அரசியல் சாசன நியமனப் பதவிகளை வகிப்போர் பொறுப்புகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட நீதித்துறை மதிப்பீடுகளின் மறுவார்ப்பு அறிக்கை என்பதே வீழ்ந்து வரும் தரங்களை அங்கீகரிக்கக் கூடியதாக இருக்கிறது.

தரங்குறைந்து வருவதற்கும் போட்டி அரசியலுக்கும் தொடர்பில்லையெனினும் அதேநிலையில்தான் இருக்கிறோம். உயர்மட்ட நீதித்துறை நியமனமுறை பற்றியதே அது. சொல்லளவில் இல்லாத உண்மையான பொருளில் நீதித்துறை சுதந்திரம் பற்றியதாகும். நீதித்துறையில் சுதந்திரம் மூடக்கொள்கையாகக் குறுக்கப்பட்டுவிட்டது. இச்சுதந்திரத்தை நீதிமன்றச் சுவர்களுக்கு வெளியே பாதுகாப்பது தன்னிச்சையாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிற நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தில் இருக்கிறது. இரண்டாவது நீதிபதிகள் வழக்கில், ஏழு நீதிபதிகள் அமர்வு ஆட்சியதிகார நிர்வாக இடையூறுகளிலிருந்து நீதி மன்றத்தை விடுவித்தது. ஆட்சியதிகார நிர்வாகத்திடம் அரசியல் சாசன நோக்கையும் தத்துவத்தையும் புரிந்து கொண்டிருக்கக் கூடியவர்களை நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான அமைப்புமுறை எதுவும் கிடையாது.

நீதித்துறை சுதந்திரத்திற்கான முந்தைய போராட்டம் சொத்து, வணிகநலன்களை வெளிப்படையாகவே பாதுகாப்பதாக இருந்தது. ஏழைகள், சமூக, பொருளாதார ரீதியாக இழப்புக்குள்ளானோர் வாழ்வுரிமையைக் காக்க நீதித்துறையின் சுதந்திரத்திற்காக ஒரு போராட்டத்தைத் தொடங்க வேண்டிய தேவை இருக்கிறது. இப்போராட்டம் வெளிப்படுமானால் அந்நிறுவனம் ஜனநாயக ரீதியானதாக இருக்கிறது என்று சொல்லப்பட முடியும். அமைப்பு வடிவத்தில் அது காலனியப் பாரம்பரியத்தின் வாரிசாகவே இருக்கிறது. உயர்ஜாதி மேலாதிக்கக் கலாச்சாரத்தால் மேலிருந்து திணிக்கப் பட்டதாகவே இருக்கிறது.

புகழ்பெற்ற இவ்வழக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் தனிப்பட்ட குணநலன் விவாதிக்கப்படவோ கருத்தில் கொள்ளப்படவோ இல்லை. விளக்கமளித்து ஆட்சேபிக்க முடியாதவாறு அனைத்து அதிகாரங்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளது. இவ்வழக்கில் ஏதாவதொரு வடிவத்தில் ஆட்சியதிகார நிர்வாகமே நீதிமன்றங்களில் தனிப்பெரும் கட்சிக்காரராக இருக்கிறது என்கிறனர். இக் கண்ணோட்டத்தில் நீதித்துறை, மக்களுக்கும் அதிகார நிர்வாகத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் அமைப்பாக இருக்கிறது. இவ்வழக்கின் சர்ச்சை, ஆட்சியதிகாரத்திற்கும் நீதித்துறைக்கும் இடையேயான உறவில் ஏற்படும் நெருக்கடி தொடர்பானதாக இருக்கிறது.
நீதித்துறை சுதந்திரத்தைப் படிப்படியாய் அழிக்கிற உடனடி நிலைமையோ முயற்சியோ அப்போது இல்லை. அபரிமிதமான முன்னெச்சரிக்கை காரணமாகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்திய தலைமை நீதிபதி இந்திய நீதித்துறைக் குடும்பத்தின் தந்தையாக இருக்கிறார் என்கிறார்கள். இன்னொரு வழக்கில் உச்சநீதிமன்றம் வாடிகன் போலவும் தலைமை நீதிபதி போப் போலவும் கூறப்பட்டார். அவரே அந்நிறுவனத்தின் நேர்மையையும் சுதந்திரத்தையும் காப்பவராக இருக்கிறார். அத்தகுதியில்தான் நியமிக்கப்படும் ஆண்/ எப்போதாவது நியமிக்கப்படும் பெண் நீதிபதியின் சட்டத்திறமையின் தகுதியை மதிப்பிட்டு கருத்து தெரிவிக்கிறார். அக்கருத்தைக் கேள்விக்குள்ளாக்குவதோ பரிந்துரையை புலன் விசாரணை செய்வதோ நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடுவதாக இருக்கும். நியமிக்கப்படுவோர் பற்றி அறியவும், தகுதி, பொருத்தப்பாட்டை மதிப்பீடு செய்யவும் உயர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதி பதிகளுக்கு வழிவகையுண்டு. இவ்வழிமுறை அரசியல் செல்வாக்கை ஒதுக்கித் தள்ளுவதற்காகத்தான் இருக்கிறது.
ஏனெனில் அரசியல் செல்வாக்கு நீதித்துறை சுதந்திரத்தை அதன் தொடக்கத்திலேயே களங்கப்படுத்தி விடக்கூடும்.

இவ்வணுகுமுறையில், நீதித்துறையின் சுதந்திம், அதை எப்படி வளர்ப்பது, அதன் படிப்படியான அழிவை எப்படித் தடுப்பது என்று பேசுவதற்கு தாம் மட்டுமே தகுதியானவர்கள் என்று அவர்கள் கருதிக் கொண்டனர். வழக்கறிஞர்களிடையேயிருந்து தகுதி வாய்ந்தவர்களை நீதிபதியாக எப்படித் தேர்ந்தெடுப்பது என்று தாம் மட்டுமே அறிவோம் என்று அவர்கள் கருதிக் கொள்கின்றனர்.
ஆட்சியதிகார நிர்வாகம் மட்டுமே நீதித் துறை சுதந்திரத்தை அழிப்பதில் அக்கறை கொண்டுள்ளது என்ற தவறான எண்ணத்தில் நீண்டநாட்களாக இருந்தனர். சாதி, மத உணர்ச்சியாளர்களைத் தூண்டி வழக்காட வந்தவர்கள் நீதித்துறை சுதந்திரத்தை அழிப்பது பற்றி அவர்கள் இன்னும் கண்டுணரவில்லை. அப்பட்டமான ஊழல் நீதிவழங்கலை ஒரு வியாபாரப் பண்டமாக ஆக்குவதும் நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகும். இக்காரணங்கள் சட்டத்தின் ஆட்சியை அகதியாக்கி விட்டன. அது உச்ச நீதிமன்றத்தின் இரக்கத்துடனான தலையீட்டில் அண்டை மாநில நீதிமன்றங்களுக்குச் சென்று புகலிடம் தேட வேண்டியுள்ளது.

தமது நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் பற்றிய உயர் நீதி மன்ற நீதிபதிகளின் கருத்தின்படி அல்லது நீதிபதியாக்க வேண்டிய வழக்கறிஞர்களை ஆளுங்கட்சி தேர்ந்தெடுப்பதன்படி உயர் நீதிமன்றத்திற்கு பதவியமர்த்தும் முறை இருந்தது. இந்த நடைமுறை ஆட்சியாளர்களுக்கும் நீதித்துறைக்கும் இடையில் பண்டமாற்று வணிகத்தைப் பிரதிபலித்தது. நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் ஆளுங்கட்சி சிபாரிசு செய்தவர்களும் பதவியமர்த்தப்பட்டனர். திருமதி.காந்தி தனது ஆதரவாளர்களால் நீதித்துறை முழுவதையும் நிரப்ப விரும்பியது வரை இந்த ஒருமித்த கருத்து நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவ்வமைப்பின் தடங்கலற்ற செயல்பாடு, ஆட்சியாளர் தமது நியமனத்தை வலியுறுத்திய போதும் அல்லது ஒரு பிடிவாதமான நீதிபதி ஆட்சியதிகாரத்தின் சதிவேலைகளுக்கு அடிபணிந்து போகாத போதும் சீர் குலைந்தது.

ஏனெனில் துவக்கத்திலிருந்தே நீதிபதி களைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு வெளிப்படையான நிலை இல்லாதிருந்ததுதான். மேலும் நீதிபதிகள் பதவியமர்த்தப்பட்ட விதம் ஒருபோதும் ஜனநாயகரீதியில் இல்லை. நியமனமுறை முற்றிலும் தன்னிச்சையானதாக இருந்தது. அது ஒரு சிறிய ஆளும் வர்க்க அதிகாரக் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க, உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்த்த குடியரசுத் தலைவர் இந்திய தலைமை நீதிபதியையும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளையும் கலந்தாலோசிப்பார். அரசியல் சாசனக் கடமைகளை ஆற்றத் தகுதி வாய்ந்தோரை நீதிபதிகளாக நியமிப்பதற்கான வழி காட்டுதல்களை வழங்க அரசியல் நிர்ணய சபை எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை.

ஒரு வழக்கறிஞராக மட்டுமல்லாமல் அரசியல் சாசனத்தை முழுவதுமாக தத்துவார்த்த அடிப்படையில் புரிந்துகொண்டு சமூக மாற்றத்தைக் கொண்டுவர பொறுப்புடன் இருப்பதும் (அதற்கு தமது நீதிவழங்கும், சட்டத்திற்கு விளக்கமளிக்கும் திறமையைப் பயன் படுத்தி) கோரப்படுகிறது. விரிவான பங்கேற்புக்கு இட்டுச்செல்லும் ஜனநாயக நிறுவனங்களைக் கட்டிய மைப்பதில் முதன்மையான கவனத்தைக் கோருகிறது. இதுவே ஒரு தடுப்புக்குழுவை உருவாக்கிவிடும். ஜன நாயகப்படுத்தலை அர்த்தமுள்ளதாக்க ஜனநாயக நிறுவனங்களை மாற்றியமைக்கும் தேவை வரும். வாக்களித்து தேர்ந்தெடுத்து நியமிக்கையில் தேர்தல் அல்லது சட்டமியற்றும் முறையில் மாற்றியமைக்க முடியும். நீதிபதி, நீதிமன்றங்கள் போன்ற பிற அரசியல் சாசன நியமனங்களை மாற்றியமைப்பது மிகமிக தடங்கல்கள் நிறைந்தது. பலசமயங்களில் அறிவுணர்ச்சிக்குட்படாத, அதன் நிலப் பிரபுத்துவ சூழ்ச்சிகளை விட்டுவிட விரும்பாத பிரிட்டிசாரிடமிருந்து மரபாகக் பெறப்பட்ட திரைமறைவான செயல்பாடுகளாகவும் இருக்கிறது.

தம் ஆட்சியின் கீழிருந்த மக்களுடன் எந்த நியமனம் பற்றியும் பகிரவேண்டிய கடமை எதுவும் இருக்காத பிரிட்டிஷ் முறையில் நியமனத்தில் திரைமறைவு தன்மை இருந்தது. ஆனால் அம்முறை வாக்குரிமை உட்பட அடிப்படை உரிமைகளைக் கொண்ட பலகோடி மக்கள் கொண்ட ஒரு ஜனநாயகத்திற்கு சிறிதும் பொருந்தாது. அதனால்தான் டாரன்டார்சிப், நிறுவன உருவாக்கம் முதலில் கோட்பாடுகள் அடிப்படையில் தொடங்கப்பட வேண்டும் என்கிறார். “நிச்சயமற்ற ஒரு உலகில் ஜனநாயகம் என்பது முன்னேற்றத்தை நாடுவதாகும். அதன் அரசியல் சாசனம் மாற்றத்தை சாத்தியமானதாகக் செய்ய வேண்டும், ஆனால் அதனை ஒரு சிலரின் தன்னிச்சையான செயல்களிலிருந்து விலக்கிவைக்க வேண்டும். இதன்பொருள் அது முன்முயற்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்கவேண்டும், ஆனால் கட்டுப்பாட்டுக்கு, குடி மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களுடன் தொடர்பு படுத்தப்பட்டிருக்க வேண்டும்”.

இவையாவற்றையும் எதேச்சாதிகாரத் தலையீடு, கட்டுப் பாட்டிலிருந்து விடுவித்தபிறகு, உண்மையான பிரச்னை இந்நிறுவனங்களின் செயல்பாட்டில் ஒருவரது முன் முயற்சியை ஊக்குவிப்பதும் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதும் எவ்வாறு என்பதுமாக இருக்கிறது. அரசியல் சாசன மதிப்பீடுகள், அம்மதிப்பீடுகளை முன்னெடுக்கும் விதத்தில் இயற்றப்படும் சட்டங்கள் பற்றிய குறிப்புகளோ கூட இல்லாமல் மக்களுக்கு தமது கருத்துக்கள் நன்மை பயக்கும் என்று உணர்வோர் கூட இந்த நிறுவனங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இத்தகைய நபர்கள் அரசியல் சாசனத்தில் பிரதிபலிக்கும் கூட்டு ஞானத்திற்கு ஆட்படாமல் போகலாம்.

இவ்விதமாக, பெண்கள் மீதான வன்முறை, தலித்கள், பழங்குடிகள் தொடர்பான சட்டங்களுக்கு விளக்கமளிக்கும் போது, அல்லது ஏ.கே.கோபாலன் வழக்குக்குப் பிந்தைய அடுத்தடுத்த பத்தாண்டுகளில் சுதந்திரத்திற்கான விளக்கம், 1984ல் சீக்கியரும், 1992ல் மும்பையில் முசுலிம்களும் தாக்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் உட்பட ஏதும் செய்யவியலாத நீதிமன்றங்கள், குஜராத்தில் பெஸ்ட் பேக்கரி மற்றும் தொடர்புடைய பிற வழக்குகள், ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் அரசுத் தரப்பின் இயலாமை (வேறு மாநிலத்திற்கு கடத்தப்பட வேண்டியது இவர்தானே அன்றி சட்டத்தின் ஆட்சி அல்ல) ஆகியவை மூலம் அரசியல் சாசனத்தின் பலவீனத்தை ஒருவர் காணமுடியும். சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகமும் நிலைத்திருக்கும் என்று மக்களுக்கு உறுதியளிக்கும் நிவாரணங்களைக் கண்டுபிடிக்கத் தவறியதன் மூலம் இந்த சக்தியற்ற நிலை வெளிப்படுத்தப்படுகிறது.

அப்படியானால் தவறிழைக்கும் நீதிபதிகளை என்ன செய்வது? இதை விவாதிப்பது இந்நிறுவனத்தின் பெருமிதத்தை குலைத்து, அதன் அரசியல் சாசனக் கடமைகளை சரியான முறையில் செய்வதற்கில்லாமல் முடக்கி விடும் என்ற மிகத் தவறான அனுமானத்தின் பேரில், பிரச்னையை எதிர்கொள்வதை இந்நிறுவனம் தவிர்த்துக் கொண்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நியமனதாரர் அரசியல் சாசனத்தின் பிரிவு 124(4)ன் படி குற்றஞ் சாட்டி மட்டுமே பதவியிலிருந்து நீக்கப்பட முடியும். தவறான நடத்தைக்காகக் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி தகுதி நீக்கம் செய்யப்பட, பாராளுமன்ற இரு சபைகளிலும் உரையாற்றி வாக்கெடுப்பு நடத்திச் செய்யப்பட வேண்டிய சிக்கலான ஒரு செயல்பாடாகும். உயர் அரசியல் சாசன நியமனங்களுக்கு எதிராக, உயர் நீதி மன்றத் தீர்ப்பு பாரபட்சமானதாக இருக்குமானால் பாராளுமன்றத்தில் கட்சிக் கொறடா முடிவைக் கட்டுப் படுத்துகிறார். தமிழ்நாடு நீதிபதி ராமசாமிக்கு எதிரான குற்றச்சாட்டு நடவடிக்கையில் இந்தக் காட்சியை கண்டிருக்கிறோம்.

1968 நீதிபதிகள் (விசாரணை) சட்டப்படி, பாராளுமன்ற விசாரணைக்கு அழைக்கும் முன்பு ஒரு புலன் விசாரணை நடத்தப்படவேண்டும். இரு அவைகளிலும் வருகை புரியும் உறுப்பினர்களில் ஓட்டளிக்கும் 2/3 பங்கு பெரும்பான்மையின் மொத்தப் பெரும்பான்மை ஆதரவுடன் இம்முன்மொழிவு கொண்டுவரப்பட வேண்டும். ஒரு நீதிபதி தவறான நடத்தைக்காக விசாரணைக்குள்ளாக்கப்பட முடியும் என்பதால் பதவிக்காலம் நன்னடத்தைக் காலமாகவே இருக்கமுடியும். துரதிர்ஷ்டமாக சிக்கலான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை, தவறான நடத்தை நிருபிக்கப்பட்டால் தான் முடியும். தவறான நடத்தை என்பது புரிந்துகொள்ளவியலாத, வரையறுக்கவும்படாத ஒரு கூற்று. இது படிநிலைகளிலான, தொடர்ந்த, தவறான நடத்தைக்கு உரிமம் வழங்கி, இந்நிறுவனத்தை படிப்படியாக அழிக்க இட்டுச் செல்லுகின்றன.

அந்த நபர்களின் பதவிக்காலத்தில் நன்னடத்தைக்குட்பட்டு அவர்களது நீட்டிக்கப்பட்ட காலம்வரை நீடிக்கிறது.

தவறான நடத்தை பதவி நீக்கத்தில் முடிவடைகிறது. அவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பதையும்விட முழுமையாக பதவிக்காலம் பாதுகாக்கப்பட்டுள்ளதை நீதிபதிகளே அறியமாட்டார்கள். தம் மீதான குற்றச் சாட்டின் மீது எடுக்கப்படும் சிக்கலான மிக நீண்ட நடவடிக்கை முறையே அவர்களது பதவிக்காலத்தை பாதுகாப்பதாகாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பதவி நீட்டிப்புக் காலத்திற்கு அப்பாற்பட்டு நன்னடத்தையை நிபந்தனையாகக் கொண்டே அவர்களது பதவிக்காலம் அமைகிறது. அதிகரித்துக்கொண்டே வரும் தவறான நடத்தையைக் குற்றம் சாட்டுதல் குறைந்து வருவதை எப்படி தடுப்பது?

இதற்கு உச்சநீதிமன்றம் கண்டுபிடித்த ஒரேவழி இத்தகைய விரும்பத்தகாத நீதிபதிகளை ஒரு உயர்நீதி மன்றத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றவதுதான். இம்மாறுதல்களுக்கு எந்தக் களங்கமும் இருப்பதாக பொதுமக்கள் அறியாதவாறு பார்த்துக் கொள்ளப்பட வேண்டும். மக்களின் நூறு பிரதிநிதிகளிடம் குற்றச் சாட்டுக்களுக்கு ஆதரவாக கையெழுத்துப் பெற முயற்சிப்பதுகூட ஒரு அவமதிப்பாகக் கருதமுடியும். அவமதிப்புக் குற்றம் கூறுபவருக்கு எதிராக மிகுதியான எண்ணிக்கையிலான நீதிபதி கொண்ட நீதிமன்றத்தை அமைப்பதன் மூலம் மக்களை அச்சுறுத்துவது ஒரு செயல் தந்திரமாகும். இது எவ்விதத்திலும் பிரச்னையைத் தீர்க்க உதவப் போவதில்லை. இது பதவிக்கு வருவோர் மேலும் மேலும் வீம்பான எதிர்வினை புரிய இட்டுச் செல்வதாக அமையும். இது அந்த நிறுவனத்தை புரையோடியிருப்பதிலிருந்து அழுகிப் போகச் செய்துவிடும். நீதித் துறையின் சுதந்திரத்தை நிலைநிறுத்த மக்கள் மிகப் பெரியதொரு விலை கொடுத்து வருகிறார்கள். ஆனால் அந்த நிறுவனமோ அதைத் தூய்மைப்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் தடுப்பதன் மூலம் புரையோடிப் போகச் செய்கிறது.

தவறான நடத்தைக்காகக் குற்றம் சாட்டப்படுவது உண்மையில் ஒரு செயல்முறையே. அது கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையில் சாதிப்பதற்கு சாத்தியமற்றதாக, நினைத்துப் பார்க்கவியலாத ஒரு தீர்வாகத் தோன்றுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து (அய்க்கிய அரசு) நாடுகளின் அரசியல் சாசன வரலாற்றின் ஆரம்பகாலங்களில் ஒரு நீதிபதியின் பதவிக்காலம் ஆளுவோர் விரும்பும் வரையாக இருந்தது. பதவிநீக்கம் செய்வதிலும் எந்தப் பிரச்னையுமில்லை.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்ட போது இங்கிலாந்துச் சட்டம், “Writ scire facias” என்ற மனு மூலமாக அதிகாரத்தைப் பறிக்கும் நடைமுறையை வழங்கியது. writ-ன் வரலாறு, பயன்களை பரிசீலிப்பதன் மூலம் அதனைப் போன்றதொரு writ-ஐ உருவாக்கி நீதித்துறையின் தனித் தன்மையான, மோசமான நடத்தையை தடுக்கமுடியும். இத்தீர்வு அரசமுறை நியமனத்தில் நன்னடத்தைக் காலத்தில் தன்னிச்சையாகப் பதவியை விட்டு விலக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டது. அதிலிருந்து இங்கிலாந்தில் தவறான நடத்தைக்காக நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கு writ scire facias கிடைத்தது.

பாராளுமன்ற, குடியரசுத் தலைவர் ஆட்சிமுறையில் தவறான நடத்தைக்காகப் பதவிநீக்கம் செய்வது, கட்டுப்படுத்தவும் சமநிலையில் வைப்பதற்கும் ஒரு கருவியாக இருக்கலாம். ஆனால் நிறுவனங்களில் நிர்வாகத்தைத் தூய்மைப்படுத்த குடிமகனுக்கும் அடிப்படை உரிமை இருக்கிறது. இந்நிறுவனங்களைச் சரிசெய்ய ஆட்சியதிகாரத்தின் தலையீட்டைக் கோராத ஒரு புதியவகை மாற்றுத் தீர்வு தேவை. அதன்மூலம் நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாப்பது அவசியம். “நீதித்துறையின் சுதந்திரத்தை” மறுவரையறை செய்வதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியதற்கான நேரம் இது.

தவறான நடத்தையை வரையறை செய்ய நன்னடத்தையின் எல்லைக்கோடுகளை உருவாக்க ஒரு சட்டரீதியான அமைப்புமுறை இருக்கவேண்டும். இந்த வரையறை பதவி நீக்கத்திற்கான காரணத்தை உள்ளடக்கிய விசயம் எது என்று ஒவ்வொரு நீதிபதிக்கும் தெரிவிக்கும். ரௌல் பர்கர் சுட்டிக்காட்டும் அத்தகைய வரையரையில் நீதிபதிகளைப் பதவி நீக்குவது மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கும் என்பதால் அந்த வரையறை இறுக்கமாகவும் தெளிவுபடுத்தும் வகையிலும் வைப்பது பயனுள்ளதாக இருக்கலாம். மேலும் அதை நீதிபதவிகள் அடங்கிய ஒரு குழுவைக் கொண்ட சிறப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கலாம்.

2002 மார்ச் 31ந் தேதியிட்ட அரசியல் சாசன மறுபரி சீலனைக் குழு அறிக்கையின் 7வது அத்தியாயம் நீதிபதிகள் பதவிநீக்கம் பற்றி கூறுகிறது. தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றை நிறுவ அது பரிந்துரைக்கிறது. இந்தியத் தலைமை நீதிபதி, மிக மூத்த நீதிபதிகள் இருவர் கொண்ட ஒரு குழு, புகார்களின் மீது விசாரணை நடத்தி குடியரசுத் தலைவருக்கு கருத்துக்களைத் தெரி விக்கும். அவர் அவ்வறிக்கை அடிப்படையில் புகாரின் மீது ஒரு விளக்கமான விசாரணையை நடத்தி அதை ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணைக்காகவும் தீர்ப்புக்காகவும் அனுப்பி வைப்பார். தேசிய நலன் பாதிக்கும் கடுமையான தன்மை கொண்ட தவறான நடத்தைக்கு மட்டும் பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டுவதை வைத்துக் கொள்ளலாம்.

புலன் விசாரணை, நீதிமன்ற விசாரணை, தீர்ப்புக்கு முற்றிலும் தொடர்பில்லாத வகையில் இருக்க வேண்டும். தவறிழைக்கும் நீதிபதியை நீதிபதிகளே விசாரிப்பது நீதித்துறை சுதந்திரத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். வழி தவறிச் செல்லும் நடத்தைக் குற்றம் புரிந்த நீதிபதி வேறொரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு பதவியில் நீடிப்பது நெறிமுறைகளுக்கு மாறானது. ஆட்சேபத்துக்குரியது. வேறொரு மாநிலத்தின் வழக்கு மன்றத்துக்கு நீதி வேண்டி வருவோர் மீது அவரை வஞ்சகமாய்ச் சுமத்துவது எப்படிச் சரியாகும்? பதவி விலகுவதைத் தவிர வேறு மாற்று எதுவும் இல்லை.

நீதிபதியை எப்படித் தேர்ந்தெடுப்பது? அரசியல் சாசன (98வது) திருத்த மசோதா 2003ன் கீழ் தேசிய நீதித்துறை ஆணையத்தை உருவாக்க விரிவான பிரச்சாரம் நடை பெறுகிறது. அம்மசோதா, தேசிய நீதித்துறை ஆணையத்தில் (அ) இந்தியத் தலைமை நீதிபதி (ஆ) அடுத்த உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் இருவர் (இ) சட்டம், நீதித் துறை மத்திய அமைச்சர், பிரதமரின் ஆலோசனைப்படி குடியரசுத் தலைவர் நியமிக்கும் ஒரு மிகச் சிறந்த குடிமகன் ஆகியோரை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று ஆலோசனை கூறுகிறது.

கடைசியில் உள்ளது ஜனநாயகத்திற்கு மதிப்புக் கொடுப்பதாகும். டெல்லியின் முன்னணி வழக்கறிஞர்கள், அரசியல் சாசன நிபுணர்கள் அடங்கிய நீதித்துறை பொறுப்புக் குழுவானது, தேசிய நீதித்துறை ஆணையத்திற்கு கீழ்கண்டவர்களை பரிந்துரைத்துள்ளது. (அ) உச்ச நீதிமன்ற அனைத்து நீதிபதிகளும் அடங்கிய ஒரு குழுவால் தலைவர் நியமிக்கப்பட வேண்டும். (ஆ) ஒரு உறுப்பினர் உயர் நீதிமன்றங்கள் அனைத்தின் தலைமை நீதிபதிகள் அடங்கிய குழுவாலும் (இ) ஒரு உறுப்பினர் மத்திய அமைச்சரவையாலும் (ஈ) இருசபைகளின் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கலந்தாலோசித்து எதிர்கட்சித் தலைவரால் ஒரு உறுப்பினரும் (உ) ஒரு உறுப்பினர் இந்திய வழக்கறிஞர் பேரவை உறுப்பினர்கள் அனை வரையும் கொண்ட ஒரு குழுவாலும் நியமிக்கப்பட வேண்டும்.

உண்மையில் அரசாங்கம் அதனால் பரிந்துரைக்கப்பட்ட பிரதிநிதித்துவ அமைப்பைப்பற்றி கவலைப்படவில்லை. கீழ்மட்ட அளவில் நடுவர் தொடங்கி, மாவட்ட, உயர், உச்ச நீதிமன்றம் வரை பல்வேறு மட்டங்களில் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடத்தை நிரப்புவதற்கு பெரும் எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் உள்ளனர். 10லட்சத்திற்கும் மேலுள்ள இந்த எண்ணிக்கைக்கு ஆலோசனை தெரிவிக்கும் அந்தஸ்துகூட வழங்காதது முரணானதாகும். வழக்கறிஞர் சங்கங்களின் உறுப்பினர்கள் மூலைமுடுக்குகளிலும் எங்கெல்லாம் சட்ட ரீதியான பணி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் தொழில்முறையாளர்களாக பணியாற்றுகின்றனர்.

உயர் மட்ட நீதித்துறைக்கு நியமனம் செய்யும் விசயத்தில் ஒரு ஆலோசனை அந்தஸ்து வழங்குவது பற்றி திட்டம் தீட்டுவது கடினமான ஒன்றல்ல. கீழ்மட்டங்களில் தகுதியை பரிசோதிக்க முறைகள் உள்ளன. உயர்மட்டங்களில் அது போன்ற பரிசோதனை முறை இல்லை. காணத்தவறும் குற்றத்தினூடே கூட நாம் தகுதி வாய்ந்த நபர்களை பெறுகிறோம். பொறுப்பை ஒப்படைப்பது தொழிலில் ஒரு ஒழுக்கத்தை ஏற்படுத்தும். அவர்களது சுதந்திரத்திற்கு ஒரு அர்த்தத்தையும் நோக்கையும் வழங்கும். நீதிபதிகள் பதவிகளுக்கான போட்டியாளர்களின் பெயர்களை அறிவிக்க முயற்சி எடுக்கவேண்டும். நியமனம் என்பது மறைபொருளாக மூடி இருக்க வேண்டியதில்லை.
வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். நீதிபதிகள் குழுவில் பதவியை பயன்படுத்தி காரியம் சாதிக்கும் நபர்கள் பெருகிவிடக்கூடாது.

கட்டுரையாளர்:

மூத்த வழக்கறிஞர், பி.யூ.சி.எல் தேசியக் குழுத் தலைவர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com