Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2007
பிரக்ஞையற்றவர்கள் பாக்கியவான்கள்

எஸ்.காமராஜ்- ஜா மாதவராஜ்

எந்நேரமும் இரைந்து கொண்டிருக்கும் கடலுக்கு அருகில், அலைகளின் தலைமாட்டில் படுத்துறங்கும் அவர்களுக்கு அதன் ஆழமும் கோபமும் தெரியும். முழுநிலாக்காலத்தில் திமிரும் அதன் தினவு தெரியும். ஆனாலும் அதையெல்லாம் அவர்களின் அடிவயிற்று இரைச்சல் தூக்கிச் சாப்பிட்டுவிடும். சர்க்கஸ் சிங்கம் சுருட்டி வைக்கப்பட்ட சாட்டைக்கு பயப்படுகிறது என நம்பினால் நாம் அந்தச் சிங்கத்தை விட இரண்டு அறிவு குறைந்தவர்களாவோம். உலகம் பெரும்பான்மையின் கீழேதான் சிறுபான்மை இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறது. ஒடுங்கிக்கிடக்கும் மனிதர்கள் தம் கருணையினால் மட்டுமே வாழவேண்டும் என்கிற ஆதிக்க மனோபாவம் இந்தியா முழுவதும் செழித்துக் கிடக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்து அறுபதாண்டாகிறது அதோ கயர்லாஞ்சியின் பசிய வயல்வெளியெங்கும் பையாலால் போட்மாங்கே குடும்பத்து ரத்தவாடை வீசிக் கொண்டேயிருக்கிறது. வன்முறையின் கை தங்குதடையில்லாமல் நீள்கிற போதெல்லாம் பெண்கள்தான் இரட்டை இழப்புக்கு ஆளாகிறார்கள். மானமும் உயிரும் ஒருசேர இழப்பவர்கள் அவர்கள் தான். இது ஒரு விபத்துப்போலவோ, கலவரம் போலவோ எப்போதாவது நிகழ்வதல்ல.

நாள்தோறும் எங்காவதொரு மூலையில் நடந்து கொண்டேயிருக்கிறது. அது தலித்கள் மீது மட்டும் மிக இயல்பாக நடக்கிறது. அதைச்செய்பவர்கள் சட்டரீதியாகவும் மனசாட்சிப்படியும் அதற்காக வருந்துவதில்லை. மொழி மாறியிருக்கிறது, உடலின் தொலி மாறியிருக்கிறது. சாப்பாடு, பண்பாடுகூட மாறியிருக்கிறது. ஆனால் ஒடுக்கப்பட்டோர் மீதான அடக்குமுறை மட்டும் மாறவேயில்லை. வேற்றுமையிலும் ஒற்றுமை.

கடந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்த ஜக்கன் ஒரு தலித். அவரை பினாமியாக்கி மீண்டும் அதிகாரத்தையும் பொதுப்பணத்தையும் தக்க வைத்துக்கொள்ள நினைத்த அந்த ஊரின் முன்னாள் தலைவர் ஒரு உயர்சாதிக்காரர். அவர் நினைத்தது போல் ஜக்கன் தலையாட்டவில்லை. ஜக்கன் என்கிற பொம்மை அந்த ஊரின் இன்னொரு பிரமுகருக்குத் தலையாட்ட நேர்ந்தது. அதற்கு அவர்கள் தருவதாகச் சொன்ன கூலி 5ஏக்கர் நிலமும் ஒரு பம்புசெட்டும். கொஞ்சம் உயர்ந்த விலைக்குத் தலையாட்ட ஆசைப்பட்ட ஜக்கனை அதிகாலையில் நாயை அடிப்பதுபோல அடித்துக் கொன்று போட்டார் முன்னாள் தலைவர்.

அதை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யவும் அரசின் கவனத்தைத் திருப்பவும் கொலையாளியை உடனடியாக கைது செய்யவும் ஒரு அரசியல் கட்சியும் சில ஜாதி அமைப்புக்களும் போராட நேர்ந்தது. இவைகளை ஆவணப்படுத்த எங்கள் படப்பிடிப்புக்குழு சம்பவம் நடந்த நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா நக்கலமுத்தன்பட்டிக்குப் போனது.

கொலை செய்யப்பட்ட ஜக்கனின் குடும்பத்தை அங்கு காண வில்லை. வெறும் பத்துக்கும் குறைவான தலித் வீடுகள் மட்டும் இருக்கும் அங்கு இனிமேலும் உயிரோடு வாழ்வது உசிதமில்லை என ஜக்கன் மனைவி பாப்பா தனது அண்ணன் ஆறுமுகம் வீடு இருக்கும் வேலாயுதபுரத்துக்குப் போய்விட்ட தறிந்து அங்கே போனோம். புலியூருக்குப் பயந்து எலியூர் போனால் எலியூரும் புலியூராகியிருந்த கதைதான் வேலாயுதபுரத்தின் கதை.

அங்கே 400க்கு மேல் இருக்கும் உயர்சாதியாரின் வீடுகளிலும் வயல்களிலும் வேலை செய்ய, பிணம் எரிக்க 40க்கும் குறைவான வீட்டு தலித்கள் நேர்ந்து விடப்பட்டிருந்தனர். உயர் சாதிக் கிழவர்களின் செல்லாத அதிகாரத்தை செல்லுபடியாக் கவும், வளர்ந்துவரும் வாலிபர்களின் வீரத்தைச் சோதிக்கிற மணல் மூட்டையாகவும் அக்குடும்பங்கள் இருந்தன. அவர் களுக்குச் செரிமானம் ஆகாதிருக்கும் பொழுதுபோகாத நேரங்களில் அந்த வழியாகப் போகிற தலித் இளைஞர்களின் முழுக்கால் சராயும் நடையும்கூட பஞ்சாயத்தாரின் முன்னிலையில் பிராதாக வரும். தீர்ப்பு வழங்குகிற மனுவின் பேரர்கள் ஒட்டு மொத்த தலித் குடியிருப்பையும் வரவழைப்பார்கள். சுகவீன மாகி யாராவது ஒருவர் வராமல் போனாலும் வழக்கு மறு நாளைக்கு ஒத்திவைக்கப்படும்.

ஏனென்றுகேட்க இயலாத அந்தக்கூட்டம் தொடர்ந்து பத்துநாள்வரைக்கும் வேலை வெட்டிக்குப் போகவிடாமல் அலைக்கழிக்கப்படும்.

யாராவது ஒரு உயர்சாதி இளைஞன் தலித் கூட்டத்தில் இருக்கும் ஒருநபரை அடித்தால் நாட்டாமை அதைப் பார்த்துப் பூரித்துப்போவார். இதுபோலொரு பிராதில் சிக்கிக்கொண்ட சுப்ரமணியன் என்ற நாற்பத்தைந்து வயது நிறைந்த தலித் பெரியவரை 2வாலிபர்கள் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய் ஊர்க்கல்யாண மண்டபத்தில் வைத்து ஆசைதீர அடித்திருக்கி றார்கள். தெருவில் நடந்துபோன குற்றத்துக்காக இளைஞர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஓரளவு கல்வியும், கொஞ்சம் உலக ஞானமும் தெரிந்த அந்த ஊர் இளைஞர்கள் போலீசில் புகார் செய்திருக்கிறார்கள். அது பெரும் குற்றமாகி இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அமெரிக்கா தன் ஆதிக்கத்திற்கு அடிபணியாத நாடுகளின் மேல் போர்தொடுக்கும். முடியாவிடில் பொருளாதாரத்தடை விதிக்கும். அதுபோலவே ஆதிக்க விரும்பிகள் தங்களை அண்டி வாழ்ந்த அந்த 40 வீடுகளில் சொல்லமுடியாத அடக்குமுறைகளைப் பிரயோகித்தனர்.

தங்கள் தெருவழியாக நடக்க ஆண்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் தலித் தெருவுக்குள் எந்நேரமும் காரணமில்லாமல் நடமாடலாம், ஏனென்று கேட்கத் தடையிருந்தது. அடிபட்ட சுப்ரமணியனின் பிராதை கேட்க வந்த காவல்துறை அதிகாரிகளிடம் துணிந்து சாட்சி சொன்ன ஒரே காரணத்துக்காக 17வயது சுபா என்ற இளம் பெண் துன்புறுத்தப்பட்டாள். காவல்துறையினரையும், தொண்டு நிறுவன ஊழியர்களையும் வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தி, தனியாக செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து இம்சை செய்தனர் என்பதை மொத்த கிராமமும் ஒத்துக்கொள்கிறது. பாதுகாப்புக்கு ஆளில்லாத, சுபா பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானாள். இறுதியில் ஒரு நாள் கயர்லாஞ்சி போலொரு கொடுமை நடந்துவிடும் பயத்தில் இனி இந்த உலகில் தன்மானத்தோடு வாழமுடியாது என்னும் பிரக்ஞை வந்தது சுபாவுக்கு. ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டுக்கொண்டாள்.

அது, அழிந்துபோன சமநீதி, செத்துப்போன மனிதாபிமானம், அழுகிப்போன நியாயம் குறித்த லட்சோப லட்சம் மரண சாசனங்களில் ஒன்றாகும். அதன்பிறகு பரிதாபமும் கழிவிரக்கமும் வருவதற்குப்பதில் அந்த ஊர் ஆண்டைகளுக்கு அகங் காரம் மட்டுமே மேலேறித் தாண்டவமாடியது. மரணத்திற்குக் காரணமானவர்களின் கைது ஊரின் கோபத்தில் சாதீயத் தீயை ஏற்றி வைத்திருக்கிறது. ஊர்கூடித் தீர்மானம் போட்டு காலனியைச் சுற்றியுள்ள நிலங்களின் வரப்பில் கம்பி வேலி பாய்ச்சியது. சொற்பத் தன்மானத்தின்மேல் அதிகாரத்தைப் பாய்ச்சியது.

இப்போது அந்த காலனி முழுக்க சிறைப் பிடிக்கப்பட்ட ஒரு தீவாகிப் போயிருக்கிறது. கூலிவேலைகள் மறுக்கப்பட்டது. ஊர்க்கடைகளில் பொருள் வாங்கத் தடை. அதுவரை கொடுக்கப்பட்டிருந்த கேபிள் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மொத்தக்காலனியும் மிரட்சியில் இருக்கிறது.
பகல்பொழுதுகளில் ஒய்யாரமாக வரும் உயர்சாதி இளங் காளைகள் வீடுவீடாய் எட்டிப்பார்த்து ‘முதலாளி வணக்கம்’ என்று சொல்லிப் போவார்களாம். ஊர்ச்சாவடியில் போய் உட்கார்ந்து என்ன சொல்லி சிரிப்பார்களோ தெரியாது.

ஓரளவு படித்த இளைஞர் யாரும் இப்போது அங்கில்லை. தம் பெற்றோராலேயே நாடு கடத்தப்பட்டுள்ளனர். சிபிஐ-எம், மனிதஉரிமைகள் அமைப்பு, அருந்ததியர் அமைப்பு, ஓரிரு ஊடக நண்பர்கள் வருகை, சில போராட்டங்களின் அழுத்தத்தால் காவல்துறை உயரதிகாரியும், ஆட்சியரும், அந்த உள் நாட்டு செல்லுலார் சிறையைப் பார்த்துப் போயிருக்கின்றனர்.
உள்ளூர்க்காரர்களைக் கண்டு பயந்து போயிருக்கிற அவ்வூர் வெளியாட்கள் வரும்போது ஏதாவது ஆறுதல் கிடைக்காதா எனும் ஏக்கத்தில் காத்திருக்கிறது. ‘பகல் பொழுதை எப்படியாச்சும் தள்ளிர்றோம். ராத்திரிதான் திக்குத்திக்குன்னு இருக்கு, பொழப்பே கெஜ இருட்டார்க்கு சாமி’’ என்கிற அந்த நடு வயது பெண்மணியின் கண்களில் திரண்டுவரும் கண்ணீர் பட்டால் இரும்பு கூட கரைந்து போகும்.

சுற்றியிருக்கிற உலகம் இக்கொடுமையின் பிரக்ஞையற்று டி.வி.யில் நடக்கிற மாமியார் கொடுமைக்கு விசனப்பட்டுக் கொண்டிருந்தது. பெரியார் அணையின் நீர்மட்டம் உயர்த்தக் கோரி கட்சிகள் போராடிக் கொண்டிருந்தன. பத்திரிகைகள் மற்றுமொரு செரீனாவையும் ஜெயலட்சுமியையும் தேடிக் கொண்டிருந்தன. ஒருசெய்தி மாநிலத்தின் எப்பகுதியில் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் என்றெல்லாம் துல்லியமாகக் கணக் கெடுக்கும் திறனும் தொழில்நுட்பமும் தெரிந்த ஊடகங்கள் அந்த அருந்ததிய சாதியை செய்திகளில் அடங்காத கீழுக்கும் கீழான புறசாதியாக்கி மனுவுக்கு அஞ்சலி செலுத்துகின்றன.

நாங்கள் கிளம்பும்போது வந்த சுப்ரமணியன் சொன்னவை எல்லாம் கண்ணீரணைகளை உடைப்பெடுக்கச் செய்யும் வல்லமை கொண்டவை. இப்பரபரப்புக்குப் பிறகு ஒருவரைக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயற்சி நடந்திருக்கிறது. தன் வாழ்நாளில் கொஞ்சம் தன்மானத்தோடு பேசிய சிலபேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்ற அந்தப் பாமர வார்த்தை களில் ஒரு கடலைக் குடிக்கிற கவிதை இருக்கிறது. ரணமும் வலியும் நிறைந்த கவிதை. உடன் பம்பரம் விளையாடிய உயர் சாதிப்பையனின் நெற்றியில் பம்பரம் பட்டதால் அவனை ஊர்க்கூடி கொலைவெறியோடு விரட்டியது. எங்கள் தெருவிலிருந்து யாரும் காப்பாற்றத் துணியவில்லை. அந்த இளைஞன் ஓடியதை ஒரு உயரமான இடத்திலிருந்து பார்த்தேன்.

உயிர்பயத்தில் ஓடிய அந்த மாமா இன்னும் என் கண்ணுக் குள்ளே இருக்கார். 40 வருடம் கடந்து ஓடிவிட்டது. விரண்டு ஓடிய அவர் பற்றிய சுவடு மண் மூடிப்போய்விட்டது என்ற போது திகிலும் கண்ணீரும் கலந்த ஒரு கொடுமையின் சரித்திரம் விரிந்து வந்தது. ‘இப்ப அந்த மாமன் கெழடாகிச் செத்துக் கூடப் போயிருப்பார். ஆனா அவர் ஓடுனது இன்னும் அப்படியே பச்சையாத் தெரியுது, அது இப்பயும் ஏங் கண்ணுக்குள்ளே இருக்கு’. அடிமைப்பட்டிருப்பதை உணர ஆரம்பித்த எல்லா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இதுதான் கதி. பிரக்ஞை வருகிறபோதுதான் பிரச்னையும் வருகிறது. இந்தச்சேதி குறித்த பிரக்ஞை ஏதுமில்லையென்றால் சத்தியமாக நீங்கள் பாக்கியவான்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com