Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2007
காதல் தணியனோ! கண்டு மகிழேனோ

தேவேந்திர பூபதி

சித்தர்கள் என்றவுடனே அவர்கள் பற்றிய பிரமையும்,அதனோடு கூறி வந்துள்ள புனைகதைகளுமே நினைவுக்கு வரும். சித்தர்கள் பற்றி நாம் அறிந்ததெல்லாம்,அவர்கள் ரசவாதம் செய்வதிலே வல்லவர்கள்,சாதாரண உலோகத்தையும் தங்கமாக்கும் திறன் கொண்டவர்கள்,வைத்தியமுறைகளை தமிழுக்குக் கொணர்ந்தவர்கள்,காற்றிலும் நீரிலும் நடக்கத் தெரிந்தவர்கள் என்பவையே. உண்மையில் இதையெல்லாம் ஏன் அவர்கள் செய்தார்கள், இப்படிப்பட்ட செப்பிடு வித்தைகளை செய்ததன் நோக்கம் என்னவென்று ஆராய முற்பட்டால் அவர்களுக்கென்று ஒரு அடையாளமுமின்றி மக்கள் சேவையை குறிக்கோளாகக் கொண்ட வாழ்க்கை தெரியவரும். சித்தர்கள் பற்றி அறியும் முன்னர் சித்தர்கள் என்று தமிழுக்கு அறியப்பட்டவர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக பதினென் சித்தர்கள் என்று பதினெட்டு சித்தர்களை முதன்மைப்படுத்தி பல நூல்கள் வெளிவந்தபோதும் இவ்வெண்ணிக்கை காலத்திற்குக் காலம் வேறுபடுவதாகவே உள்ளது.

சித்தருக்கான பொருளை சில சித்தர் பாடல்களிலிருந்தே கூட அறியலாம்: “ஆத்தாளை பூசித்தோன் அவனே சித்தர்” என்று கருவூராரும், “எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி ஏகாமல்/ வாசனையை யடித்தோன் சித்தன்” என்று சட்டைமுனியும், “சிந்தை தெளிந்திருப்பவர் ஆர் அவனே சித்தன்” என்று வான்மீகரும், “யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்/ யோகச் சமாதியின் உள்ளே உளரொளி / யோகச் சமாதியின் உள்ளே உள சக்தி /யோகச் சமாதி உகந்தவர் சித்தரே” என்று திருமூலரும் விளக்கம் தருகிறார்கள். இவற்றின் மூலமே சித்தரின் குணநலன்களை அறியலாம்.

சாதி,சமயம்,உருவ வழிபாடு மறுப்பின் மூலம் சமதர்மத்தை வலியுறுத்தியவர்கள் சித்தர்கள். இயற்கை வடிவங்களான மரம்,செடி,கொடி,போன்றவைகளின் இயல்பறிந்து மனிதஉடலின் நோய்த்தடுப்பும், குணமாக்கும் விதத்தையும் அறிந்தவர்கள். நோய்த் தீர்க்கும் மருத்துவராய் மட்டுமின்றி புலனடக்கம் பற்றியும் யோகம் பற்றியும் பேசித் திரிந்ததோடல்லாமல் பின் பற்றியும் வாழ்ந்தவர்கள். மக்களின் மன இருளைப் போக்கி ஞான ஒளிபரப்பச் சிந்தனைச் செல்வத்தை வாரி வழங்கினர்.
கோள்களின் நிலை,கால மாறுபாடு, சுடர்களின் இயக்கம் பற்றியும் கூறி பல சோதிட நூல்களையும் மருத்துவ நூல்களையும் எழுதியவர்கள் சித்தர்கள்.

சித்தர்களின் எண்ணிக்கை:

சித்தர் மரபை நோக்குங்கால், இதுவரை கண்டுள்ள எண்ணிக்கை கட்டுக்கடங்காதது. பதினெட்டு சித்தர் என்ற மரபு பன்னெடுங்காலமாய் இருந்துகொண்டே வந்துள்ளது. நூலுக்கு நூல் எண்ணிக்கை வேறுபட்ட போதிலும் கீழ்க்கண்ட சித்தர்கள் மிக முக்கியமானவர்களாக கருதப்பட்டு அவர்களின் பாடல்கள் ஞானக்கோவையாகவும் சித்தர் பாடல்களாகவும் பல்வேறு காலங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் எல்லாம் சித்தர்களாலேயே எழுதப்பட்டதா என்ற ஐயமும் எழலாம். அவர்களாலே எழுதப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என்பதனால் அவை தொகுக்கப்பட்டவைதான் எனலாம். சித்தர்களின் எண்ணிக்கையை பதினெட்டு என்று பல சித்தர் பாடல்களே கூறுகின்றன.

“சித்தர்கள் தான் பதினென்ப ராத்தாள் சொன்ன/செயலெல்லாம் கண்டுணர்ந்து தெளிந்திட்டார்கள்” என ஞானவெட்டியான் 1500ல் பாடல் 220ம், “பாடுவார் பதிணென்பேர் நூல்கள் எல்லாம்/பாலகனே இத்தயிலம் கொண்டு சாதி” என்று அகத்தியர் பரிபாஷை 500ல் பாடல் 100ம்,“வாத நூல் ஆதீதம் பதிணென்பேர் சித்தர் வசனித்த நூல்களும் பலிதம்” என புலத்தியர் கற்பம் 300ல் பாடல்54ம் “மூலரோடு பதிணென்பேர் பரநாதாக்கள்’’ என மச்சமுனி பெருநூல் பாடல் 2ம் “துலக்கு மந்தப் பதினெட்டுச் சித்தரையா/ தொல் புவியில் சொல்லாமல் மறைத்தார்” என யாகோபு வைத்திய வாத சூத்திரம் 400ல் பாடல் 179ம் சித்தர்களின் எண்ணிக்கையை வரையறுத்து சொல்லுவதாக பாடல் பல உள்ளன. ஒவ்வொரு சித்தர்களின் காலமும் வெவ்வேறானபோது எவ்வாறு அவர்களே அவர்களின் எண்ணிக்கையை பற்றி எப்படிக் குறிப்பு எழுதி பாட இயலும் என ஐயமும் எழத்தான் செய்கிறது. இருந்தபோதும் முக்கியமாகக் கருதப்படும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டையும் தாண்டி அதிகமாக உள்ளது என்பதே உண்மை.

அபிதான சிந்தாமணியில் சித்தர்கள் பற்றிய குறிப்பில் சித்தர் ஒன்பதின்மர் என்று 1.சத்தியநாதர் 2.சதோகநாதர் 3.ஆதிநாதர் 4.அனாதிநாதர் 5.வெகுளிநாதர் 6.மாதங்க நாதர் 7.மச்சேந்திரநாதர் 8.கடேந்திரநாதர் 9.கோரக்க நாதர் ஆகிய ஒன்பதுபேரையும்,தொடர்ந்து சித்தர் பதிணென்மர் என்று அகத்தியர், போகர், கோரக்கர், கைலாச நாதர், சட்டைமுனி, திருமூலர், நந்தி, கூன் கண்ணர், கொங்கணர், மச்சமுனி, வாசமுனி, கூர்மமுனி, கமல முனி, இடைக்காடர், புண்ணக்கீசர், சுந்தரானந்தர், உரோமரிஷி, பிரமமுனி இவர்களின்றி தன்வந்திரி, புலஸ்தியர், புசுண்டர், கருவூரார், ராமதேவர், தேரையர், கபிலர் முதலியவரும் பட்டியலிடப்படுகின்றனர்.

சித்தரின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களைப் பற்றிய உண்மைகளைப் போலவே அவர்களின் எண்ணிக்கை குறித்தும் ஒவ்வொரு நூலிலும் முரண்களைக் காண முடிகிறது. எனினும் சித்தர் ஒன்பதின்மர் எழுதியதாக எந்த ஒரு பாடலும் நமக்குக் கிடைக்கவில்லை. மேலும் வா.சரவணமுத்து பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு B. இரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் நிறுவனத் தாரால் வெளியிடப்பட்ட பதிணென் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை என்ற நூலில் 44 சித்தர் வகை பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அவற்றில் சிவவாக்கியரின் பாடல் முதன்மைப்படுத்தப்பட்டு பட்டினத்தார், பத்திரகிரியார், திருவள்ளுவர், சட்டைமுனி, பாம் பாட்டி, இடைக்காடர், அகப்பேய்ச்சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச்சித்தர் என மூன்று பாகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

சித்தர்களின் காலமும் அவர்களின் பெயர்கள் பற்றிய உண்மையும்:

சித்தர்கள் பற்றி தெரிந்துகொள்ளும் முன் அவர்களின் காலம் பற்றி அறிய வேண்டிய கட்டாயமும் நம் முன்னே தோன்றுகின்றது. சித்தர்களில், அகத்தியரின் காலம் இன்னதென்று இதுவரை யாரும் அறுதியிட்டு கூறவில்லை. மேலும் அகத்தியர் இயற்றியதான நூல்களும், காலமும் பாடலுக்கு பாடல் வேறுபடுவதாயும் ஒருவரின் பெயரிலேயே பலர் இருந்திருக்கக்கூடும் என்ற ஐயத்தையும் எழுப்புகிறது. தொல்காப்பியரின் ஆசிரியரான அகத்தியருக்கும் அவரால் எழுதப்பட்டு கிடைக்காமல் போன “அகத்தியம்” என்ற தமிழின் மூல இலக்கண நூலும் இந்த சித்தர் பாடலோடு தொடர்புடையவை தானா என்பது ஆராயப்படவேண்டும்.

அகத்தியருக்குப் பின்னர் அறியப்பட்டதாக கூறப்படும் திருமூலரின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என கூறுவாரும் உள்ளனர். வையாரையும் சித்தராக்கி அவரது பாடல் பல ‘சித்தர்பாடல்கள் ஞானக்கோவை’யில் காணக் கிடைக்கின்றன. இடைக்காடரைப்பற்றி தேடும்போது இவர் பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த தொண்டை அல்லது சேர நாட்டவர் என்றும் குறிப்பு இருந்தபோதும் இடைக் காடர் “ஊசி முறி” என்ற நூலை எழுதியவர் என யாப்பெருங்கலக்காரிகை கூறுகிறது.

திருவள்ளுவ மாலையில் “கடுகைத் துளைத்த” எனப்பாடல் எழுதிய இடைக்காடருக்கும் இவருக்குமான தொடர்பு பற்றி எந்த குறிப்பும் இல்லை. இவர் இடையர் இனத்தை சேர்ந்தவர். போகரிடம் சித்து பயின்றவர். அதனாலேயே இவரை இடைக்காடரர் என்பவரும் உண்டு. இராமத் தேவர் என்பவர் 10ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும் பூசை விதி என்று பத்து பாடல்களை எழுதியவர் என்றும் உரோம முனியைப் பற்றி கூறுகையில் இவரின் முதல் பாடலில் வரும் ஈற்றடியை வைத்து இவரை உரோம முனி என அழைத்தனர் என்றும் நூலாசிரியர்கள் கூறுகின்றனர்.

நந்தவனத்திலோர் ஆண்டி என்ற பாடலின் மூலம் அறியப்பட்ட கடுவெளிச் சித்தரின் காலம் 11ம் நூற்றாண்டு என்றும், இவரால்தான் ஆனந்தக்களிப்பு என்ற யாப்பிலக்கணம் தமிழுக்கு வந்தது என்றும் பல நூல்களின் வாயிலாக அறியமுடிகிறது. கருவூராரை போகரின் சீடர் என்றும் இவரை தஞ்சை பெரிய கோவிலின் பணியில் உடனிருந்தவர் என்றும் கூறுவதையொட்டி இவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என அறியலாம். இவரின் பெயரும் ஊரை வைத்தே அறியப்பட்டுள்ளது. காகபுசுண்டரின் பெயரும் அவரின் பாடல் 12ல் முதலடியையொட்டி அவருக்கு அப்பெயர் கிட்டியுள்ளது. இவரின் காலமும் சரியாய் அறியப்படவில்லை. குதம்பை என்ற பெண்கள் அணியும் காதணியை அணிந்திருந்ததால் அவர் குதம்பைச்சித்தர் என்றும், கொக்கை எரித்த கொங்கணவர் என்று கொங்கணரும் அறியப்படுகின்றனர்.

கொங்கணரையும், திருவள்ளுவரையும் சமகாலத்தவர் என்று கூறும் புனைகதைகள் இன்றும் உண்டு. இதனால் திருவள்ளுவர் 2000ம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பதும் எவ்வளவு உண்மையானது என ஆராயப்பட வேண்டும். ஆசையை பாம்பு என உருவகப்படுத்திய சட்டைமுனியும் பாம்பாட்டிச் சித்தரும் சம காலத்தவர் என்ற கருத்து பல நூல்களில் காணப்படுகின்றது. அதேபோல் சிவவாக்கியரும்,கொங்கணரும் சமகாலத்தவர் என்ற கதைகளையும் சிவவாக்கியர் திரு மூலரின் பாடல்களை ஒத்து பலபாடல்களை எழுதியுள் ளதையும், அவரின் பாடல்களின் மூலம் அறியலாம். மேலும் சிவவாக்கியர் என்ற பெயர் அவரின் “சொல்லுவேன் சிவவாக்கியம்” என்ற காப்புப்பாடல் மூலமே அவருக்கு கிட்டியுள்ளது. பாம்பாட்டிச் சித்தரின் காலம் 10ம் நூற்றாண்டு எனவும்,அவர் பாண்டி அல்லது தொண்டை நாட்டவர் என்ற குறிப்பும் சித்தர் பாடல்களை தொகுத்த நூல்களிலிருந்து கிடைக்கும் செய்தி. பின்னால் வந்த சித்தர்கள் என்று அறியப்படும் பட்டினத்தார் பூம்புகாரை சேர்ந்தவர் என்றும் அவரை தொடர்ந்து வந்த பத்திரகியார் துளுவநாட்டு மன்னன் என்ற செய்தியும் அவர்கள் இருவரும் 14ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.

எவ்வாறாயினும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவர் தொடர்புடையவர் என்ற செய்தியை வைத்துப் பார்க்கும் போது ஒருவரின் காலமும் அறுதியிட்டு கூறமுடியாததாகவே உள்ளது. அதேபோல அவர்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களும் காரணப்பெயர்களே அன்றி இயற்பெயர் இல்லை. அவர்கள் வசித்த இடம் பற்றிய செய்திகளும் அவ்வளவு சரியானதாக இல்லை என்பதே உண்மை. இவற்றை எல்லாம்விட பேரதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தியை தமிழ்மொழி அகராதி (நா.கதிரைவேற் பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டது) தருகிறது. அதன் பக்கம் 626ல் சித்தர்கள் அணிமா முதலியவை சித்திக்க பெற்றவர்கள் அவர்கள் எண்ணிறந்தவர்கள் இவர்கள் செய்த நூல்கள் பெரும்பாலும் இறந்தன இவர்களால் செய்யப்பட்ட நூல்கள் என்று சொல்லப்பட்டு இக்காலத்து வழங்குவன யாவரோ சாமானியர் பாடிய புரட்டுநூல்களேயாம் என்கிறது. சித்தர்களைப் போன்றே அவர்களைப்பற்றிய செய்திகளும் விளங்க முடியாதவைகளாவும் முரணானதாகவும் உள்ளன.

சித்தர்களின் சமுதாய நோக்கு:

சித்தர்கள் மக்கள் அனைவரையும் சமமாகப் பாவித்தவர்கள். மதம், இனம், சாதி என்ற அமைப்புகளை வெறுத்து ஒதுக்கியவர்கள். சாதிய, மத அமைப்புகளின் வடிவங்களை எள்ளி நகையாடியவர்கள். உருவ வழிபாடு, சடங்குகள், சம்பிராதாய நெறிகளை உடைத் தெறிய சொன்னவர்கள். சித்தர்களின் பெயரும் காலமும் பல்வேறு முரண்களுக்கு உட்பட்ட போதும் அவர்கள் அனைவரின் கருத்தும் அவர்கள் கூறிய சமுதாய மற்றும் தனிமனித நெறிகளில் பேணப்படவேண்டிய மற்றும் வெறுத்தொதுக்கப்பட வேண்டியனவற்றை பட்டியலிடும்போது ஒன்றானதாகவே உள்ளது. சிவவாக்கியர் தொட்டு பத்திரகிரியார் வரையிலும் திருமூலர் முதற் தொட்டு மற்ற ஏனையோரும் சாதிய மற்றும் உருவ வழிபாட்டை கடுமையாக சாடியுள்ளனர்.

சாத்திரங்களையும் சமய நெறிகளையும் பற்றி பேசுகையில் சிவவாக்கியர் தனது யோகநிலை பாடல் 13ல் “சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே/ வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?" என்று சாத்திரங்களின் பொய்த்தன்மையையும் அது மனிதனின் வாழ்விற்கு தேவையற்றது எனவும் பாடுகிறார். மேலும் பாடல் 34ல் "கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா?/ கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!" என்று வழிபாட்டு முறையையே சாடுகிறார். பூசைமுறைகளில் எந்த உண்மையும் இல்லை என்பதை அவரே தனது பாடல் 36ன் மூலம் “பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதைகாள்/ பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்” என்று எள்ளி நகையாடுகிறார்.

உருவ வழிபாடு மந்திர வழிபாடுபற்றி பேசும்போது “நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றிவந்து முணமுணன்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ எனச் சாடுகிறார். சாதிப்பிரிவினை பற்றி பேசுகையில் மனிதப் பிறவிகளில் பேதம் ஒருபோதும் இருந்ததில்லை என்பதனை பாடல் 46ல் "சாதியாவது ஏதடா? சலம் நீரெலாம்/பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ?/ காதில் வாளி, காரை கம்பி பாடகம் பொன் ஒன்றல்லோ?/சாதி பேதம் பேசுகின்ற தன்மை என்ன தன்மையோ" எனக் குறிப்பிட்டதோடு, சாதிப்பிரிவினை பொருளாதார ஏற்ற இறக்கங்களினால் உருவானது என்பதை பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?/ இறைச்சிதோல் எலும் பினும் இலக்கமிட்டு இருக்குதோ/பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?/பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே என்று பாடுகிறார்.

தேவையற்ற சடங்குகள் செய்வதிலும் உணவின் வகை கொண்டு மனிதர்களை கீழ்நிலைப்படுத்தலையும் வன்மையாக கண்டிக்கின்றார் சிவவாக்கியர். பிறப்பு,மறு பிறப்பு என்று மனிதரை ஏமாற்றும் மதச்சம்பிரதாயங்களை சாடும் வகையிலும் பாடல் பல புனைந்துள்ளார். மேலும் மதங்கள் தான் மனிதனின் பிளவுக்குக் காரணம் என்றும்,வேதம்,ஆகமங்களும் தோன்றியதால் தான் மனிதரிடையே பிளவு ஏற்பட்டது என்பதனையும் தனது பாடல் 463ல் குறிப்பிடுகின்றார்.

சமயங்களின் தீமையைப் பற்றி கூறுவதற்காக அகப் பேய்ச் சித்தர் தனது பாடலில் சமய மாறுமடி அகப்பேய்/தம்மாலே வந்தவடி அமைய நின்றவிடம் அகப்பேய்/ஆராய்ந்து சொல்வாயே ஆறாறு மாகுமடி அகப்பேய்/ஆகாது சொன்னேனே வேறேயுண்டானால் அகப்பேய்/மெய்யது சொல்வாயே உன்னையறிந்தக் கால் அகப் பேய்/ஒன்றையும் சேராயே என்று சமயங்களின் சுய நலத்தினையும் அவற்றிலிருந்து மனிதன் விலக வேண்டிய அவசியத்தையும் கூறுகின்றனர். மேலும் அவரே சாதி பேதமில்லை அகப்பேய் தானாகி நின்றவருக்கு/ஓதி உணர்ந்தாலும் அகப்பேய் ஒன்றுதான் இல்லையடி என்ற கடவுள் மறுப்புக் கொள்கையையும் முன் வைக்கின்றார்.

மேலும், மந்திரமில்லையடி அகப்பேய் வாதனை இல்லையடி/ தந்திரமில்லையடி அகப்பேய் சமயம் அழிந்ததடி- என்று தேவையற்ற சடங்குகளை ஒழித்தால் மனிதனின் சங்கடங்கள் குறையும் என்றும் அதேபோல் சமயங்கள் யாவும் சடங்குகளினால்தான் நிலைத்து நிற்கின்றன என்ற உண்மையை தர்க்கரீதியாக விளக்குகிறார். இதையே குதம்பைச்சித்தர் வாழ வழியுமன்றி அவதிப்படுவோர் மேலும் மதம் என்ற பெயராலே ஏன் வாடி வதங்க வேண்டும் என பொருள்பட, தாவாரமில்லை தனக்கொரு வீடில்லை/ தேவாரமேதுக்கடி குதம்பாய் தேவாரமேதுக்கடி- எனப்பாடுகிறார். கடுவெளிச் சித்தர் மதங்களைப்பற்றி கூறுகையில்,பொய்வேதந் தன்னை பாராதே - அந்த/ போதகர் சொற்பத்தி போதவோரதே என்று மதத்தினை பரப்புவோரும் சமயங்களும் தேவையற்றது என்கிறார்.

சித்தர்கள் மதத்திற்கு எதிரானவர்களா? அவர்களின் பாடல்களிலிருந்து அறியப்படுபவை யாதெனின், மனித நலத்திற்கு எதிரான அனைத்திற்கும் சாதி,சம்பிரதாய வழக்கங்கள்,மதம் அவர்கள் எதிரிகளே. எதையும் தன்னுள் வைத்து ஜீரணித்துக் கொள்ளும் சனாதன தர்மம் என்னும் இந்து மதம் அவர்களையும் தன் அங்கமாகப் பாவித்து அவர்களுக்கும் காவியுடையும், உத்திராட்சமும் அளித்து அவர்களையும் சாமியார்களின் வரிசையில் அமர வைத்ததுதான் சித்தர்களுக்கு நேர்ந்த அவலம்.

சித்தர்கள் பெண்களுக்கு எதிரானவர்களா?

சித்தர்கள் பற்றி பேசும் போதெல்லாம் அவர்களை பற்றிய குற்றச்சாட்டு அவர்கள் பெண்களைத் தவிர்க்கச் சொன்னவர்கள் பெண்களை மாயை என்னும் தீமை என்றும் தூற்றியவர்கள் அதிலும் குறிப்பாக, பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியாரின் தனிப்பாடல்கள் பல பெண்களின் உடல் உறுப்புகளை கேலி பேசி அவ மானப்படுத்துகின்றன என்பதுதான். இதைப்பற்றி ஆராய கையில் நமக்கு தெளிவாகப் புலப்படக்கூடிய விசயம் ஒன்றுதான். அது, அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் இல்லை, நாம் பெண்கள் மேல் வைத்துள்ள, பெண்ணை உடல்சார்ந்த ஒரு பொருளாகவே கருதுகின்ற மேல்தட்டு மனப்பான்மைக்கு எதிரானவர்கள். பெண்ணை எப்படிப் பாவிக்க வேண்டுமென்று கற்றுக் கொடுப்பதற்காகவே அவர்கள் பல்வேறு பாடல்களை பாடி உள்ளனர். பட்டினத்தார் தனது தனிப்பாடலில் “வாய்நாறும் ஊழல்,மயிர்ச்சிக்கு நாறிடும்,மையிடுங்கண்/ பீநாறும், அங்கம் பிணை வெடிநாறும்,பெருங்குழி வாய்ச்/ சீ நாறும் யோனி அழல் நாறும் இந்திரியச் சேறுசிந்திப்/ பாய்நாறும் மங்கையர்க்கோ இங்ஙனே மனம் பற்றியதே”(119) என பெண்ணைப் பாடியதோடே தனது மற்றொரு பாடலில்,பேய் போல்திரிந்து பிணம் போல் கிடந்திட்ட பிச்சை எல்லாம்/ நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்/ தாய்போல் கருதித் தமர்போல் அனைவருக்கும் தாழ்மைசொல்லிச்/சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே (122)- பெண்களை எவ்வாறு அணுகவேண்டும் என்று பாடுகிறார். சித்தர்கள் பெண்ணை தாய்மையின் வடிவாகக் கண்டவர்கள். பெண்ணினத்தை உடல் சார்ந்து நோக்கும், நவீனத்துவ நோக்கு என்னும் சீர்கேட்டை அந்த உடல் சார்ந்த மொழியாலேயே வன்மையாகக் கண்டித்தவர்கள்.

இதையே சிவவாக்கியரும் தனது பாடல் 57ல் “மையடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே/ ஐயிறந்து கொண்டு நீங்கள் அல்லல் அற்றிருப்பீர்கள்/ மெய்யடர்ந்த சிந்தையால் விளங்குஞான மெய்தினால்/ உய்யடர்ந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே” - எனப் பெண்ணை ஒரு போகப்பொருளாக பாவிப்பதைக் கண்டிக்கிறார். கொங்கணர் “கற்புள்ள மாதர்குலம் வாழ்க நின்ற/ கற்பை யளித்தவரே வாழ்க” என்று பாடல் 46ல் பெண்மையை உயர்த்திப் பாடுகின்றார். மேலும் ஒவ்வொரு பாடலிலும் வாலைப்பெண்ணே என்று பாடல் முடிவினை பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு செய்தியையும் கூறுகின்றார். குதம்பைச் சித்தரும் குதம்பாய் என்று பாடல் முடிவினை பெண்ணுக்குச் சொல்வதுபோல் சொல்வதிலிருந்தே அவர்கள் பெண்கள் பால் கொண்டிருந்த மதிப்பையும் பெண்களின் பெருமையை போற்றியவர்கள் என்பதனையும் அறியலாம்.

சித்தர்களின் வாழ்வுநெறி

சித்தர்கள் தம்வாழ்வை எவ்வித வெற்று ஆடம்பரங்களுக்கோ தேவைகளுக்கோ உட்படுத்தாமல் இயற்கையோடு இயைந்த பெருவாழ்வை வாழ்ந்துள்ளனர். எதைப் பற்றியும் கவலைப்படாது, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்த சித்தர்கள், ஏன் மக்களிடம் அவர்களுக்கே உடன்பாடில்லாத சித்துவேலைகளை செய்தனர்? இன்று மதமாற்றத்திற்காக மிஷனரிகள் செய்யும் சேவையை பாமரர் நலனுக்காக உண்மையான முறையில் அன்றைக்கே செய்தவர்கள் சித்தர்கள். மக்களின் நம்பிக்கையை பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து வெளிக்கொணரவும், தெய்வங்கள் பற்றிய தேவையற்ற பயத்தை போக்கவுமே விண்ணில் பறப்பது, இரும்பைத் தங்கமாக்குவது போன்ற இரசவாத வேலைகள் செய்து சித்தர்பால் மக்களுக்குள்ள பயங்களை போக்கியும், தம் கருத்துக்களை மக்கள்முன் வைத்து செயல்பட்டுள்ளனர்.

மேலும் எந்தவொரு இடத்திலும் சித்தர்கள் தங்களது பணியினை சிறப்பானதென்றோ, தங்களால் மட்டுமே மக்களை கடைத்தேற்றமுடியும் என்ற பின்னாளில் வந்த சமயக் கோட்பாட்டாளர்களின் பிரச்சார வழியையோ ஒரு போதும் கையாளவில்லை என்பதினின்றே அவர்களின் மாண்பினை உணரலாம். அதுபோன்றே மதப்பிரச்சாரங்கள் பின்னாளில் நிகழக்கூடும் என்பதனையும் அவர்கள் உணர்ந்தே செயல்பட்டவர்கள் என்பதனை கொங்கணச் சித்தர் எழுதிய இப்பாடலின் மூலமாக அறியலாம்:

“எல்லாமறிந்தவ ரென்று சொல்லி யிந்தப்
பூமியிலே முழு ஞானியென்றே
உல்லாசமாகவே வயிறு பிழைக்கவே
ஓடித்திரிகிறார் வாலைப் பெண்ணே

-இது தான் சித்தர்கள் நமக்கு விட்டுச் சென்ற செய்தி.

சித்தர்களும் அவர்களோடு தொடர்புடையதாக கூறப்படும் இடங்களும்

அகத்தியர் - அனந்த சயனம்,அகப்பேய்ச்சித்தர் - அழகர்மலை
அழகண்ணார் - அழகர்மலை,இடைக்காடர் - திரு அண்ணாமலை
கமலமுனி - திரு ஆரூர்,கருவூரார் - கருவூர்
காளங்கிநாதர் - காஞ்சிபுரம்,குதம்பைச்சித்தர் - மயிலாடுதுறை
கொங்கணர் - திருப்பதி,கோரக்கர் - பேரூர்
சட்டநாதர் - திருவரங்கம், சுந்தரானந்தர் - மதுரை
தன்வந்தரி - வைத்தீசுவரன்கோவில்,
திருமூலர் - தில்லைச் சிதம்பரம், தேரையர் - தென்பொதிகை
நந்தி - காசி, பதஞ்சலி - இராமேசுவரம்
பாம்பாட்டிச்சித்தர் - விருத்தாசலம்,புண்ணக்கீசர் - நாங்குநேரி
புலஸ்தியர் - யாழ்ப்பாணம், பூனைக்கண்ணனார் - எகிப்து
போகர் - பழநி, மச்சமுனி - திருப்பரங்குன்றம்
வாமதேவர் - அழகர் மலை,வால்மீகி - எட்டுக்குடி


உதவிய நூல்கள்:

1.பெரிய ஞானக்கோவை - வா.சரவணமுத்துப்பிள்ளை. வெளியீடு - இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ் - சென்னை

2.சித்தர் பாடல்கள் - மணிவாசகர் பதிப்பகம்

3.சித்தர் பாடல்கள் தொகுப்பாசிரியர்-ஞா.மாணிக்கவாசன், உமா பதிப்பகம் - சென்னை

4.பதினெட்டு சித்தர்கள் வாழ்க்கை வரலாறு - சி.எஸ்.முருகேசன்

5.ஞானக்கோவை என்கிற சித்தர் பாடல்கள் - - ஸ்ரீ செண்பகா நிலையம்



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com