Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2007
தூக்கிலிடும் மனதின் துடிப்புகள்

ச.பாலமுருகன்

வாழ்க்கையில் ஓடிக் களைத்த மனிதர்கள் தம் கடந்த காலத்தை எண்ணிப்பார்க்கும்போது அது கொடுத்திருக்கும் கல்வி அபரிமிதமானது. பலரின் வாழ்வியல் அனுபவங்கள் சிறந்த இலக்கியங்களுக்கு நிகரானவை. உண்மைகள் எளிமையாகவும் பாசாங்கற்றும் வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மையுடையவை.

நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள பத்மாபுரத்தின் ஜனார்த்தன் பிள்ளை கடந்துவந்த வாழ்க்கையோ உலகில் அரிதான சிலருக்கு மட்டுமே கிடைப்பது. ஆனால் அந்த வாழ்க்கை இனிமையானதாக இல்லை. ஜனார்த்தன் பிள்ளையின் அகவுலகம் இருண்டு கிடந்தது. அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுகூட தயக்கமானதாகவே இருந்தது.

ஜனார்த்தன் பிள்ளை தன் வாழ்நாளில் 117 மனிதர்களை தூக்கில் தொங்கவிட்டவர். 1940ல் திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து அதன் பின் சுதந்திர இந்தியாவில் இறந்துபோகும் காலம்வரை தூக்கிலிடும் தொழிலை செய்து வந்தவர். பிள்ளையின் குடும்பத்தினர் பாரம்பரியமாக திருவாங்கூர் சமஸ்தானத்தில் அரசனின் கட்டளைக்கிணங்க மரண தண்டனை நிறைவேற்றுபவர்கள். அவர்களை ஆராய்ச்சர் என்றழைப்பர். மரணதண்டனை நிறைவேற்றும் பொழுது அவர்களுக்கு உதவும் உறவினர்களை அடியான் என்பர். ஜனார்த்தன் பிள்ளை தனது தந்தைக்குப்பின், குடும்பத்தில் மூத்தவரான அவரின் சகோதரர் மரண தண்டனை நிறை வேற்றும் தொழிலுக்கு வர விரும்பாத காரணத்தால் இளையவனாக இருந்தபோதும் தந்தையை பின்பற்றி இத்தொழிலில் ஈடுபட வேண்டியிருந்தது. பலசமயம் இத்தொழிலில் கிடைக்கும் வருவாய் அவரின் குடும்பத்தை நடத்த உதவியது.

தண்டனை நிறைவேற்றும் ஒவ்வொரு சமயமும் பிள்ளை ஒரு வித அச்ச உணர்வினாலும் தயக்கத்தினாலும் பாதிப்படைந்துள்ளார். மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய மனிதனின் உடல் எடை, உயரத்தைப் பொறுத்து தூக்குக்கயிற்றின் உயரம் இருக்கவேண்டும் என்பது விதி. உதாரணமாக 44 கிலோ எடையுள்ள மனிதனைச் கொல்ல அவன் 1.98 மீட்டர் உயரத்திலிருந்து தொங்கவிடப்பட வேண்டும். 44 - 57 கிலோ எடையுள்ளவனைக் கொல்ல 1.83 மீ உயரத்திலும், 57 - 70 கிலோ எடையுள்ளவனை 1.68 மீ உயரத்திலிருந்தும், 70கிலோவுக்கும் மேலுள்ளவனை1.52 மீ உயரத்திலிருந்தும் மட்டுமே தொங்கவிட வேண்டும் என்ற விதிகளை மரணதண்டனை நிறைவேற்றும் ஆராய்ச்சர் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு தூக்கிலிடும்போது மட்டுமே கழுத்துப்பகுதி எலும்பு முறிந்து உடனடியாக அவன் சாவை எதிர்கொள்வான்.

இவ்விதிகளில் ஏதேனும் மாறுபடும் போது அல்லது தூக்குக்கயிற்றின் முடிச்சை முறையாக மரண தண்டனைக் கைதியின் வலது காது பக்கம் சரியாக இருக்குமாறு அமைக்காதபோது உடனடியாக கழுத்து எலும்பு முறிந்து மரணம் உருவாவதற்குப் பதிலாக குரல்வளை சிறுக சிறுக நசுக்கப்பட்டு துடிதுடித்தபடி சாக நேரிட்டுவிடும். தூக்குக்கயிற்றை ஒவ்வொரு கைதியின் கழுத்தில் மாட்டும் போதும் ஜனார்த்தன் பிள்ளை அவன் காதருகில் சென்று தன்னை மன்னித்துவிடும்படியும் தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அரசனின் ஆணைப்படியே செய்ய வேண்டியுள்ளதாகவும் கேட்டுக்கொள்வார். பலநேரங்களில் இறந்து போகும் மனிதனை நேருக்குநேர் பார்க்கும் சக்தியற்றவராகவே இருந்தார். மரணதண்டனை நிறைவேற்றத்தின் போது வேடிக்கை பார்க்க அரசியல் பிரமுகர்களும் அதிகாரிகளுக்கு வேண்டியவர்களும் வருவதுண்டு. பிள்ளை தமிழ் மட்டுமே அறிந்தவர்.

அவரைப்பற்றி அறிந்து கொண்டு அவரின் வாழ்க்கை அனுபவத்தை எழுதித் தரும்படி சசிவாரியார் என்ற கேரள எழுத்தாளர் தூண்டினார். முதிய காலத்தில் ஒய்வெடுத்து வரும் சமயம் அவர் தனக்கு தெரிந்த தமிழில் தன் மனதின் ஆழத்தில் கிடந்த நினைவுகளைத் தூசு தட்டி எழுப்பினார். அவை மனதில் பெரும் போராட்டத்தையும் குற்ற உணர்வையும் அதிகரிக்கச் செய்தன. குடும்பத்தைக் காக்க வேண்டி பெரும் தவறான தொழிலை தேர்ந்தெடுத்து விட்டதாகவே அவர் கருதினார். தூக்கிலிடப்பட்டவர்களின் நினைவுகள் ஒவ்வொன்றும் அவரைக் காயப்படுத்தின. சாகும் மனிதன் கடைசி நேர நிகழ்வுகள் அவரைத் தடுமாறச் செய்தன. சாகப்போகும் மனிதனின் சலனமற்று உறைந்து கிடக்கும் கண்களை எப்போதும் அவர் எதிர்கொள்ள இயலாதவராகவே இருந்துள்ளார்.

தண்டனையை நிறைவேற்றும் நேரத்தில் சிறையறையிலிருந்து வெளியே வர மறுக்கும் ஒருகைதி, நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன், நான் வாழ்வதால் யாருக்கு பாதிப்பு என முரண்டு பிடிக்கின்றான். சிறையதிகாரி அவ னோடு பேசி அவனைத் தூக்குமேடைக்கு கூட்டி வருகின்றார். அவன் கைகள் கட்டப்பட்டு தூக்குக்கயிறு மாட்டப்பட்டு, கருப்பு முகமூடியால் முகம் மறைக்கப்பட்ட நிலையில் தூக்கு மரத்தின் கைப்பிடி இழுக்கப்பட பிளந்து கொண்ட தூக்கு மேடையின் குழிக்குள் விழுந்து மறைந்துவிடுகின்றான். உயிர்த்துடிப்பு சிலகணங்கள் தொங்கும் கயிற்றை அசைக்கிறது. பின் அமைதி.

மரணதண்டனையை நிறைவேற்றியபின் ஜனார்த்தன் பிள்ளைக்கு அதற்கான தொகை கிடைக்கும். அதன்பின் சில நாட்கள் அவர் சோர்வுற்றே இருப்பார். தன் பழைய நினைவுகளை அவர் திரும்ப அசைபோடும் போது அடிக்கடி அவர் களைத்துப் போனார். தூக்குமேடையில் கைகள் கட்டப்பட்டு கயிற்றால் சுருக்கப்பட்டு முகம் மறைக்கப்பட்ட மனிதனின் முகத்தில் துருத்தி நிற்கும் முக வடிவமான மூக்கு உள்ளிட்ட அவயங்கள் மறைந்து தட்டையான கருப்பு முகமூடிக்குள் ஒரு மனிதன் நிற்பதைக் கனவு கண்டார். அவன் இருண்ட மரணக் குழிக்குள் நின்று சிரிப்பது போலவும் அக்கனவு பலநாட்கள் தொடர்ந்தது. தூக்குத்தண்டனை பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தட்டை முகத்துடன் கூடிய முகமூடிகளின் ஏளன சிரிப்பு தன்னைத் தாக்குவதாகவும் அதில் ஒருவன் தன் குரல் வளையை நசுக்குவது போன்றும் பீதியுடன் விழித்துக் கொள்கிற அலைக்கழிப்பிற்கும் அவர் ஆட்பட்டார்.

மரணதண்டனையின் கொடூரத்தையும் அது மனிதத்தை காயப் படுத்தும் வலியையும் பிள்ளை தன்வாழ்வில் எதிர்கொண்ட பிரத்யேகமான அனுபவத்தின் வழியே உணர்ந்தார். தூக்கிலிடப்பட வேண்டியவனை கொல்லக்கூடாது என்று பலநேரங்களில் எண்ணினார். தூக்குக்கயிற்றை எதிர்கொள்ளும் பலர் மேல்முறையீடு செய்ய இயலாதவர்கள். திருவாங்கூர் சமஸ்தான அரசனின் பணியானது சூரியோதயத்திற்குப் பிறகு தொடங்கி அஸ்தமனத்துக்குப் பின் முடிந்துவிடும். மரண தண்டனைக் கைதிகளின் கருணைமனுக்கள் தண்டனைக்கு ஒரு சில நாட்கள் முன்தான் அரசனின் பார்வைக்கு வரும். மனுக்களுக்கு அரசன் பெரும்பாலும் மன்னிப்பு வழங்கிவிடுவார்.

ஆனால் சமஸ்தான ஊழியர்களும் சூரியன் மறைந்த பின் பணி புரிவதில்லையாதலால் மறுநாள் காலையில்தான் அரசனின் மன்னிப்பு உத்தரவைத் தெரிவிக்க சிறைக்கு வருவார்கள். ஆனால் அதிகாலையிலேயே தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் . ஒரு சில சமயம் தூக்குத்தண்டனையை காண வேண்டியும் கருணைமனுவை ஏற்றுக்கொண்ட உத்திரவு சமஸ்தான ஊழியர்களால் காட்டப்படாமல் போவதும் உண்டு. மரணதண்டனை வடிவம் மனித உயிரின் மகத்துவம், வெறும் காலம், கையெழுத்து உத்திரவு என்ற எல்லைக்குள் சுருங்கும் கொடூரத்தை ஜனார்த்தன் பிள்ளை தன் பல அனுபவங்களில் கண்டுணர்ந்துள்ளார்.

உலகின் இருளைப் போக்கி வெளிச்சம் உருவாகக் காரணமாக இருந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் பணத்திற்காக அமெரிக்க அரசுக்கு மின்சார நாற்காலியை உருவாக்கித் தந்தார். 1890ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி முதன் முதலாக வில்லியம் கெம்லர் என்ற மரணதண்டனைக் கைதி அந்த மின்சார நாற்காலியில் அமர்த்தப்பட்டான். கைதிகள் பலரும் அதனை வேடிக்கை பார்த்தனர். மின்சாரம் பாய்ச்சப்பட்டபோது கைதியின் உடல் வெந்தது. பலமுறை அவன் இரத்தம் கக்கினான். கருகிய மனிதனின் வாடை வேடிக்கை பார்த்தவர்களின் மூக்கைத் தொட்டது. அந்த வாடை வாழ்நாள் முழுவதும் தங்கள் மூக்கிலேயே இருப்பதாக பலரும் கூறினர். தாமஸ் ஆல்வா எடிசனுடன் மின்சார நாற்காலி அமைக்கப் போட்டியிட்ட மற்றொரு விஞ்ஞானி வாஷிங்டன் ஹவுஸ் என்பவர் அந்த மரணதண்டனையைப் பார்த்துவிட்டு இந்த மின்சார நாற்காலி தண்டனைக்குப் பதிலாக கைதியின் தலையை வெட்டி தண்டனை தருவதுகூட மனிதாபிமான மிக்கதாக இருக்கும் என்றார். ஜனார்த்தன் பிள்ளை இத்தகைய உணர்வுகளில் பலநேரங்களில் ஆட்பட்டார்.

தூக்குத்தண்டனை நிறைவேற்றும் பணியை ஒரு கலை என்று சிலர் குறிப்பிட்டுச் சொன்னபோது அவர் மறுத்தார். கொலை ஒரு கலையாக இருக்காது என்றார். தூக்கிலிடப்படும் மனிதனை தொங்கவிடப்படும்போது சிறு அசைவில் கழுத்து முறிவதற்கு தூக்குக்கயிற்றின் முடிச்சு வைக்கப்படும் பகுதி முக்கியமானது. ஆனால் அந்த அனுபவத்தையும் அதுபற்றிய விபரத்தையும் சொல்ல எந்த அனுபவசாலியும் கிடையாது. தன் சகோதரனைப்போல தைரியத்துடன் தானும் இந்த மரண தண்டனை நிறைவேற்றும் தொழிலுக்கு வராமல் இருந்திருக்க வேண்டும் என்று கடவுளிடம் முறையிட்டார்.

தான் அவ்வாறு மறுக்காமல் இத்தொழிலை ஏற்றுக் கொண்டதற்காக கடவுளிடம் மன்னிப்புக் கோரினார். தான் செய்யும் மரணதண்டனை என்ற கொலை அரசனின் நாமத்தால் செய்யப்படுகிறது. அரசன் மரணதண்டனைக்கான உத்திரவை எதுவும் பேசாத கடவுளின் நாமத்தால் இடுகின்றான். நம் நாட்டில் அரசன் முட்டாளாகவும், ஆங்கிலேயர் காழ்ப்புணர்வு கொண்டவர்களாக சட்டமியற்றியதாலும், மக்கள் அறிவிலிகளாகவும் இருப்பதால் மரணதண்டனை அந்நாட்களில் தொடர்ந்தது என்கிறார் பிள்ளை. அவர் திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து விடுதலைக்குப்பின் நம் இந்திய அரசிலும் பல தூக்குத் தண்டனைகளை நிறைவேற்றினார். அவர் அன்றைய கால கட்டத்தில் மரணதண்டனை தொடர்வது குறித்து தெரிவித்த கருத்து இன்றுவரை பரிசீலிக்கத்தக்கதுதான்.

மரணதண்டனையின் பல்வேறு வடிவங்கள், அதன் குரூரத் தன்மை குறித்து ஜனார்த்தன் பிள்ளையின் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. மார்க்கோபோலா நம்நாட்டிற்கு வந்த போது யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்லும் முறை இருந்துள்ளது. நம் புராணங்களில் குருவைப் பகைத்த சிஷ்யனுக்கு தண்டனையாக குரு அவனை எரியும் நெருப்பில் வீழ்ந்து வலியுடன் சாக உத்திரவிடுகின்றார். அரசுக்கு தண்டிக்கும் அதிகாரம் உண்டெனினும் அது மிகுந்த வலியையும் உயிரையும் பறிப்பதாக இருப்பது நியதி அல்ல எனவும், ஆனால் அதிகாரம் வலியை உருவாக்குவதாகவும், அது சமூகத்தில் பிரச்னையை உருவாக்கும் தன்மையில் அடங்கியுள்ளது எனவும், நிராயுதபாணியை கொல்வது கோழைத்தனம் என்றும், ஒரு உண்மையான வீரன் இதனைச் செய்யமாட்டான் எனவும் அரசையும் நீதிமுறையையும் பிள்ளை சாடுகிறார்.

தூக்கிலிடப்படுவதற்கு சிலநொடிகளுக்கு முன் ஒரு கைதி எதிரிலிருந்த சிறைச்சுவரையே நிலைக்குத்தி பார்த்ததைக் கண்டார். ஒருவேளை சிறைச்சுவர் அவனுக்கு மரணவலியை குறைத்துவிடுமாவென தனக்குள் வினவிக் கொண்டேயிருந்தார். ஜனார்த்தன் பிள்ளை தன் நினைவுகளை எழுதத் துவங்கியதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் தன்னை எழுதத் தூண்டிய சசிவாரியாரிடம் கடைசிகாலத்தில் கோபித்துக்கொண்டு கடுமையாகத் திட்டி திருப்பியனுப்பிவிட்டார். ஆனால் அதற்காக மனம் வருந்தி அவரை மீண்டும் சந்திக்க விரும்பினார். தான் புத்தகத்தை முடித்துவிட்டதாக திருப்தியடைந்த ஒருநாள் காலைப்பொழுதில் அவர் இறந்துபோனார்.

சிலநாட்கள் கழித்து வந்த சசிவாரியாரிடம் ஜனார்த்தன் பிள்ளையின் குறிப்புகள் அடங்கிய நோட்டுகள் தரப்பட்டன. அதிலிருந்த ஒரு கடிதம்: “நான் எதையோ செய்து முடித்து விட்டேன். ஒரு புத்தகத்தை எழுதுவேன் என்று ஒருபோதும் நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. நீங்கள் எழுதக் கொடுத்த பேனாவையும் நோட்டையும் தங்களிடமே ஒப்படைக்கிறேன். இனி எப்போதும் அது எனக்குத் தேவைப்படாது. இப் புத்தகத்தை எழுத கேட்டுக்கொண்டபோது பணம் தருவதாகக் கூறினீர்கள். என்வாழ்வில் இதன்பின் எப்போதும் எனக்குப் பணம் தேவைப்படாது. என் மனைவி செல்லம்மாளுக்கும் அது தேவையில்லை. என்னை எழுத வைக்கும் நோக்கில் நீங்கள் நாகர்கோவில் வந்து அறை எடுத்துத் தங்கி என்னைச் சந்திக்க சிரமப்பட்டீர்கள். நான் உங்களுக்கு சிரமம் கூட கொடுத்திருக்கலாம்.

நீங்கள் பார்க்கும் இப்புத்தகம் முடிந்துவிடவில்லை. அதை எப்படி முடிப்பது என்றும் தெரியவில்லை. நீங்களே முடித்துக்கொள்ள அனுமதிக்கிறேன். எனக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு இப்புத்தகத்தினூடே விடைகாண முடியாமல் தவிக்கின்றேன். யாரேனும் கேள்வி கேட்டாலும் என்னிடம் பதில் இல்லை. இப்புத்தகத்தை எழுதும்போது பெருத்த வலியையும் குழப்பத்தையும் உணர்ந்தேன். என்னுள் புதைந்த பல நினைவுகளைத் தோண்டி எடுத்தேன். அதனைக் கொட்டித் தீர்த்தபின் எனக்குள் அமைதியை உணர்கிறேன். இப்புத்தகத்தை (ஆங்கிலத்தில்) வெளியிட்டபின் அதனை தமிழாக்கம் செய்து எனக்கு வாசிக்கத் தருவீர்களென நம்புகிறேன். நான் இப்படி அடிக்கடி வினோதமாகவே யோசிக்கிறேன். இப்புத்த கம் என்னுடையது என்பதுபோல உங்களுடையதுமாகும். நீங்கள் என்னை எழுத வைத்து வெற்றி பெற்றுள்ளீர்கள்.

தங்களுக்கு என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நமக்குள் சண்டைகள் கோபங்கள் ஏற்பட்டபோதும் உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என் வயதில் பாதிகூட இல்லாத வெறும் புத்தகப்புழு என்று எண்ணிய உங்களிடமிருந்து நான் சிலவற்றை கற்றுக்கொண்டேன்.” -இப்படிக்கு, உங்கள் நண்பன், பேதை எழுத்தாளன், ஜனார்த்தன் பிள்ளை, ஆராய்ச்சர். பிள்ளை தமிழில் காண ஆசைப்பட்ட அவரின் புத்தகம் இது வரை வெளிவரவில்லை. சசிவாரியார் அதை ஆங்கிலத்தில் Hangman’s journal என 2000 ஆண்டில் வெளியிட்டார்.

மரணதண்டனை கொடுமையான சித்ரவதை வடிவம் என்பதற்கு அதன் வாசனையையும் உயிரின் கடைசித் துடிப்பையும் மௌனச்சாட்சியாக அறிந்த ஜனார்த்தன் பிள்ளை தன் வாழ்வனுபவம் மூலம் கூறும் நிகழ்வுகள் மிக முக்கியமானவை. மரணதண்டனையை நீக்கக்கோரி ஜனநாயக சக்திகள் அரசை வலியுறுத்திவரும் சூழலில் அத்தண்டனையை நிறைவேற்றியவர் அதற்கெதிராக தன்னையே சாட்சியாகப் பதிந்துள்ளதை அறிந்தாவது இச்சமூக அதிகார மையத்தின் மனசாட்சி விழிப்படைய வேண்டும்.

Hangman’s Journal, by Shashi Warrier , 239 pp, Rs.295
Viking, 11 Community centre Panchseel Park ,New Delhi -110017


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com