Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி 2006
தோழர் அன்னசாமியின் வாழ்வை முன்வைத்து..

ச.தமிழ்ச்செல்வன்

1995_97 மூன்று ஆண்டுகளும் தென் மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய மோதல்களில் இரு தரப்பிலும் எண்ணிக்கைக்காகக் கொல்லப்பட்ட அப்பாவிகள் ஏராளமான பேர் உண்டு. 1957 முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பிறகு இதுபோன்ற ‘எண்ணிக்கைப் படுகொலை’கள் எதிர்ச்சாதியானாய் இருந்தால் வெட்டு என்பதைத் தவிர வேறு எந்த தர்க்க அடிப்படையையும் (இரு தரப்பும்) கொண்டிருந்ததில்லை. எதிராளி சாதிமறுப்பாளனாக மக்கள் ஒற்றுமைக்காக நிற்பவனாகக்கூட இருக்கலாம். ஆனால் அவன் மாற்றுச்சாதியில் பிறந்துவிட்டதால் அவனைக் கொல்லு.

பல்லாயிரம் ஆண்டுகாலம் பூட்டிவைக்கப்பட்டிருந்த தலித் மக்களின் கோபமும் வேகமும் ஏதாவது ஒரு கட்டத்தில் பூமி வெடித்துக் கிளம்பித்தானே ஆகவேண்டும். அப்படிக் கிளம்பும் புதுவெள்ளம் என்ன ஏதென்று பார்க்காமல் எல்லாவற்றையும் அடித்துச் சாய்த்துக்கொண்டுதான் வரும். அதிலும் நிதானமான சரித்திரப் பார்வையைக் கொண்டிராத தலைமையின்கீழ் அவ்வெள்ளம் திசை தடுமாறுவதும் நடக்கும்.

Annasamy அப்படிக் கொல்லப்பட்ட ஒரு தோழர் அ.க.அன்னசாமியின் வாழ்க்கைக் கதையை தோழர்.பொன்னீலன் எழுதியிருக்கிறார். 3.12.1995 அன்று காலையில் தன் துணைவியார் சந்தோசியம்மாளுடன் இருந்த தோழர் அன்ன சாமியை நாலுபேர் வந்து அரிவாளால் கழுத்தில் வெட்டிக் கொன்றனர். தன் கண்முன்னாலேயே கணவர் கொல்லப்படுவதைக் கண்டு அலறிய சந்தோசியம்மாளின் குரலைக்கேட்டு தெருவில் இருந்தவர்கள் கதவுகளை அடைத்துப் பாதுகாப்பாகப் பூட்டிக்கொண்டனர். கொலைகாரர்கள் எந்தவித எதிர்ப்புமின்றி இலகுவாகத் திரும்பிச் சென்றனர். கொல்லப்பட்ட அன்னசாமிக்கு வயது 83.

1912ல் பிறந்த அன்னசாமி இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் ரயிலில் பயணிகளிடம் பலகாரம் விற்று வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தவர். இளமைக்காலத்தில் சுதந்திரப்போராட்டக் காற்றைச் சுவாசித்த அவர் நெல்லையில் கைதாகி ரயிலில் கொண்டு போகப் படும் சத்தியாக்கிரகிகளுக்கு இலவசமாகப் பலகாரங்கள் கொடுத்து உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். காந்தியின் அகிம்சை மற்றும் அன்புவழியில் ஈடுபாடு கொண்டு அதற்குத்தக தன் சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். காந்திஜியைப் பின்பற்றியவர்களில் இரண்டுரகம் உண்டல்லவா? ஒன்று காந்தி சொன்னதை அப்படியே பின்பற்றுகிற எளிய மக்கள். இரண்டாவது காந்தியின் தலைமையில் திரளும் மக்கள் சக்தியைக்காட்டி வெள்ளை அரசிடம் தமக்கு வேண்டியதைச் சாதிக்க முனைந்த சுயலாபத்துக்காகக் காந்தியாரைப் பின்பற்றிய ஒரு கூட்டம்.

அன்னசாமி முதல் ரகம். தான் விரும்பிய பெண்ணை மணப்பதற்காக கந்தசாமியாகிய தன்னை கிறிஸ்தவ அன்னசாமியாக மாற்றிக் கொண்டவர். காந்தி வழியில் செல்வதற்கு மனைவி மிக்கேலம்மாளையும் தயார்படுத்தினார். முதலிரவில் அதுதான் பேச்சு. எப்போதெல்லாம் காந்தி உண்ணாவிரதம் இருந்தாரோ அப்போதெல்லாம் இங்கே வீட்டில் புருசனும் பெஞ்சாதியும் உண்ணாவிரதம் இருந் தனர்.(என்ன ஒரு மனநிலை! இந்த தார்மீக மெல்லாம் இப்போது கேலிப்பொருளாகிவிட்டது எவ்வளவு பெரிய வீழ்ச்சி) காந்தியாரின் தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சாரத்தை உண்மையான ஆணையாக ஏற்றுத் தேவர் சாதியிற் பிறந்த அன்னசாமியும் மிக்கேலம்மாளும் தம்வீட்டில் தலித் மக்களைத் தம் உறவினர்போல உபசரித்து அன்பு பாராட்டுவதை இயல்பாகக் கொண்டனர். இருவரும் சேர்ந்து உள்ளூரில் (மருதன் வாழ்வு கிராமம்) ஜவகர் வாலிபர் சங்கம் ஒன்று துவங்கினர். இரவுப்பாடசாலை ஆரம்பித்து சாதி வித்தியாசமின்றி ஊர்மக்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுத்தந்தனர்.

தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு கமலம், கஸ்தூரி, சரோஜினி என்று தேசியத் தலைவர்களின் பெயர்களைச் சூட்டினர். அது ஒரு வாழ்க்கைமுறை. மறைந்துபோன நதியைப்போல அந்த வாழ்க்கைமுறை இன்று நம் நினைவுகளில்கூட இல்லாமல் போய்விட்டதே.

ஆறாவது பெண்குழந்தை பிறந்த 17வது நாள் காய்ச்சல் கண்டு மிக்கேலம்மாள் எதிர்பாராமல் மரணமடைகிறார். நாரைக்கிணறு என்கிற பக்கத்து ஊரில் சீர்திருத்தக் கிறித்தவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்துவந்த சந்தோசியம்மாள் என்கிற 21 வயதுப்பெண் இப்படி 17நாள் பச்சைக் குழந்தையுடனும் சின்னஞ்சிறு பெண்குழந்தைகள் 5பேருடனும் ஒரு குடும்பத்தில்பெண் இறந்துவிட்ட செய்தி கேள்விப்பட்டு பார்க்கப்போனார். போன இடத்தில் அங்கே தன்னுடைய சேவை அவசியம் என்று உணர்ந்து அன்னசாமியைத் திருமணம் செய்துகொண்டு அந்த வீட்டிலேயே இருந்துவிட்டார். அது அன்றைய கிறித்துவப் பெண்மனதின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும். எப்படிப்பட்ட ஒரு மன உலகம் அது!

இருவரும் தேச சேவையை விடாது தொடர்கின்றனர். அன்னசாமி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்கிறார். சாதி மத பேதமற்ற மனதுடன் அவர்கள் அந்த ஊரில் நல்லகாரியங்கள் பல செய்கின்றனர். தலித் மக்களின் உற்ற தோழனாக அன்னசாமி விளங்கினார். பல தலித் மாணவர்களை கல்லூரியில் சேர்ப்பது அவர்கள் படிப்புக்கு உதவுவது என்று அவரும் ஆஸ்பத்திரி வசதியில்லாத அச்சிற்றூரில் தலித் பெண்களுக்குப் பிரசவம் பார்க்கும் தாதியாக சந்தோசியம்மாளும் அவரவர் வழியில் கை கொடுத்து வந்தனர். தலித் இளைஞர் ஒருவர் அன்னசாமியின் உறவுக்காரப் பெண் ஒருத்தியைக் காதலித்தபோது சுற்றமும் உறவும் எதிர்த்தபோதும் அக்காதலர்களுக்கு ஆதரவாக நின்று திருமணத்தை முடித்து வைத்தவர் அன்னசாமி.

ஆனாலும் என்ன? அவர் கொல்லப்பட்டார். தலித் மக்களாலேயே. தேவர்களும் தலித்துகளும் மோதிக்கொண்ட அந்த ஆண்டில் இந்தப் பக்கம் நாலு கொலை விழுந்தால் அந்தப்பக்கமும் நாலு விழுந்தாக வேண்டும் என்கிற கணக்கில் அன்னசாமி வீழ்த்தப்பட்டார். பொன்னீலன் எழுதுவதுபோல இக்கொலையை நாம் எப்படிப்புரிந்து கொள்வது என்கிற குழப்பம் அன்று இங்கிருந்த எங்கள் எல்லோருக்குமே ஏற்பட்டது.

இதில் இன்னொரு முக்கியமான தகவல் என்னவெனில் அன்னசாமியின் ஒரு மகளான ரஞ்சிதம் அவர்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் திருமணம் செய்துகொண்டார் என்பது தான். அன்னசாமி அவர்கள் கொலை செய்யப்பட்டுக்கிடந்த நேரத்தில் கொதி நிலை அடைந்திருந்த தன்சுற்றம் அத்தனைபேரையும் நெறிப்படுத்தி யாரையும் ஆத்திரப்பட விடாது ஆற்றுப்படுத்தினார் தோழர்.நல்லகண்ணு. “புதுவெள்ளம் வரும் போது குப்பை கூளத்தையெல்லாம் அடித்துவருமே அதுபோல தலித் மக்களின் இந்தப் புதுவேகம் தவறான வழிகாட்டுதலாலும் பல்லாண்டு காலமாகப் பதுங்கியிருந்த கோபங்களின் வெளிப்பாடாகவும் வந்துள்ளது. தாம் செய்வது இன்னதென்று அறியாத ஒரு கோபத்தில் நிகழ்ந்துவிட்ட சம்பவம்தான் இது. இதைப் பெரிதுபடுத்தாதீர்கள். தலித் மக்களுடனான நமது தோழமை தொடர வேண்டும்” என்று வாசலில் அன்னசாமியின் சடலத்தைக் கிடத்திய நிமிடத்திலும் தோழர் நல்லகண்ணு அவர்கள் காட்டிய நிதானமும் பக்குவமும் அரசியல் முதிர்ச்சியும் இன்றைய அரசியல் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் உடையது.

மடைமாற்றம் செய்யப்படவேண்டிய தலித் மக்களின் இத்தகைய கோபங்களை நாம் மறந்தும் கொச்சைப்படுத்திவிடக்கூடாது. அதே சமயம் அன்னசாமி போன்ற அற்புதமான மனிதர்களின் படுகொலையை எவ்விதத்திலும் யாரும் நியாயப்படுத்திவிடவும் முடியாது. ஆதிக்க சாதிகளுக்கு எதிராக தலித் மக்கள் ஒருகட்டத்தில் அரிவாளைத் தூக்கியது நாம் விரும்பாவிட்டாலும் சரித்திரரீதியாக அவசியமானதாக இருந்தது என்றுதான் எனக்குப் பார்க்கத் தோன்றுகிறது. ஆனால் அதுமட்டும் தீர்வாகாது என்பதையும் அடுத்த வாக்கியமாகவே சொல்லிவிடவும் வேண்டும்.

தென்மாவட்டங்களில் தலித் மக்களின் கோபங்களுக்குத் தலைமை ஏற்க நேர்ந்த ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்ற ஆரம்ப காலத் தலைவர்கள் பிற்பட்ட சாதியின் சிலருக்குச் சமமான தாதா அந்தஸ்தையே லட்சியமாகக் கொண்டிருந்தனர். ஆனால் தலித் மக்களின் ஏக்கமும் அபிலாஷையுமாக இருந்தது அதுவல்லவே. அடுத்த கட்டத்தில் தேவேந்திர குல வேளாளர்களை அணிதிரட்டிய டாக்டர் கிருஷ்ணசாமி தலித் மக்களின் அடிப்படை ஜனநாயகக் கோரிக்கைகளின் அடிப்படையில் மக்களை அணி திரட்டுவார் என்கிற நம்பிக்கை ஆரம்பத்தில் எனக்கிருந்தது. துவக்கம் அப்படியான சில கூறுகளைக் கொண்டிருக்கவே செய்தது. ஆனாலும் முதலாளித்துவம் எல்லா எழுச்சிமிக்க சக்திகளையும் தனக்குள் உள்ளிழுத்து நீர்த்துப் போகவைத்து வழக்கமான ‘தலைவர்களாக’ மாற்றிவிடும் வல்லமைமிக்கதாக இருக்கிறது என்பதைத்தான் தெற்கிலும் வடக்கிலும் நாம் பார்க்க நேர்ந்தது. அடங்க மறுப்போம் என்கிற ஒரு முக்கியமான உணர்வை தலித் மக்கள் மனங்களில் ஏற்படுத்திய அளவுக்கு இத்தலைவர்களுக்கு சரித்திரத்தில் இடம் உண்டு. அதற்குமேல் இவர்களைக் கடந்து முன்னேறிச் செல்ல ஆளும் வர்க்கம் அனுமதிக்கவில்லை. உடைத்துச் செல்லும் யுத்த தந்திரமும் இத்தலைவர்களிடம் இல்லை என்று படுகிறது.

இந்தப் பின்னணியில் அன்னசாமி போன்ற தோழர்களின் வாழ்வும் மரணமும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இடதுசாரி இயக்கங்கள் தலித் மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபடுவதும் அதன் பின்னணியில் தலித் மக்கள் இடதுசாரி இயக்கங்களில் அணிதிரள்வதும் நடக்காத வெற்றிடத்தில் சரித்திரம் இதுபோன்ற படுகொலைகளை நிகழ்த்தியபடிதான் இருக்கும். ஒரு அவசரம் நம்மிடம் தொற்றியாக வேண்டும்.

இப்புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் அன்னசாமி அவர்களைவிட அவருடைய துணைவியார் சந்தோசியம்மாள் என் மனதை ஆக்கிரமிக்கத் துவங்கினார். சந்தோசியம்மாளின் சரித்திரம்தான் முதலில் எழுதப்பட வேண்டும் என்று தோன்றியது. அவருடைய சரித்திரத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக தோழர் அன்னசாமி வரவேண்டும் என்று தோன்றியது.

ஏற்கனவே ஆறு பெண்குழந்தைகள், அப்புறம் அவர் பெற்ற குழந்தைகள் என்று இடுப்பு கழண்டுப்போகும் சுமை இருந்தபோதும் ஒருநாள் ஊர்க் கடைசியில் வேலிப்புதருக்குள் ஒரு அனாதைக்குழந்தை கத்திக்கொண்டு கிடப்பதாக செய்தி கேள்விப்பட்டு வேலைகளை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் அக்குழந்தையைத் தூக்கிவந்து சீராட்டிப் பாராட்டி பிரபாகரன் என்று பெயரிட்டு வளர்க்கிறார் சந்தோசியம்மாள். “ஒரே நேரத்தில் அந்த வீட்டில் மூன்று தொட்டில்களை சந்தோசியம்மாள் ஆட்டிக்கொண்டிருப்பார். ஒன்று அவர்பெற்ற பிள்ளைக்கான தொட்டில். இன்னொன்றில் எங்கள் பிள்ளை. மூன்றாவதில் பிரபாகரன்” என்று அந்தநாட்களை தோழர். நல்லகண்ணு அவர்கள் நேர்ப்பேச்சில் நினைவு கூர்ந்தார். எல்லாப் பிள்ளைகளையும் தான் பெற்ற பிள்ளைகளாகவே உணர்ந்த சந்தோசியம்மள் தலித் மக்களுக்குப் பிரசவம் பார்த்து அங்கு பிறக்கும் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாகவே கருதி உச்சி மோந்து மனம் நெகிழும் தாயுள்ளமாக வாழ்ந்தார். இன்றும் அப்படியே வாழ்கிறார்.

அவருடைய கண் முன்னாலேயே கணவர் கொல்லப்படுகிறார். சூழ்நிலை மோசமாகி வருகிறது. காற்றில் பகை நெருப்பு பரவி வருகிறது. ஆகவே எல்லோரையும்போல நீங்களும் பாதுகாப்பான இடத்துக்குப் போய் விடுங்கள் என்று கட்சித்தோழர்கள் எச்சரித்தபோது “என்னுடைய மக்களைவிட்டு விலகிப்போக என்னால் முடியாது. என்னை யாரு வெட்டப்போறா?” என்று மறுத்தவர் தோழர் அன்னசாமி. அந்த நம்பிக்கை வெட்டப்பட்டது.

அவரது சடலம் மறுநாள் தெருவில் கிடத்தப்பட்டிருந்தபோது கூட்டத்தோடு தலித் இளைஞர் ஒருவரும் இருந்தார். அன்னசாமி சந்தோசியம்மாள் தம்பதியினரால் அன்பு பாராட்டப்பட்ட அந்த இளைஞனும்கூட சந்தோசியம்மாளின் அலறலைக் கேட்டு ஓடிவரவில்லை. அவருடைய வீட்டார் அவரை உள்ளே இழுத்துக் கதவை அடைத்துவிட்டனர். அந்த இஞைனைப் பார்த்துக் கோபத்தோடு சந்தோசியம்மாள் இப்ப எதுக்கடா வந்தே என்று கதறுகிறார். அந்த இளைஞன் ஓடிவந்து அவருடைய கால்களைக் கட்டிக்கொண்டு ‘அம்மா’என்று கதறி அழுகிறான். “அப்பாவைப் பறி கொடுத்திட்டமேடா மகனே” என்று அவனைச் சேர்த்து அணைத்துக்கொண்டு அழுகிறார் சந்தோசியம்மாள்.

வீறுகொண்டு எழுகிற நமது விடுதலை இயக்கங்கள் சந்தோசியம்மாள் போன்ற அன்னசாமி போன்ற மனிதர்களை சேர்த்து அணைத்துக் கொள்கிற மனதையும் அவர்களுக்கான இடத்தை அளிக்கத் தயங்காத மனவிசாலத்தையும் கொண்டிருக்க வேண்டாமா? நம் அன்புத்தந்தை அண்ணல் அம்பேத்கார் சொன்ன கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்கிற முழக்கத்தில் உள்ள ஒன்றுசேர் என்பதற்கு இவர்களைப் போன்ற இடதுசாரி உள்ளங்களோடு ஒன்றுசேர் என்பதாக இன்று நாம் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாம் சொன்னால் யாரும் கோபப்படமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இன்னும் கட்டிறுக்கமான வடிவத்தில் இப்புத்தகம் வந்திருக்க முடியும் என்றாலும் தோழர் பொன்னீலன் அவர்களின் இம்முயற்சி பாராட்ட வேண்டிய வரவேற்க வேண்டிய ஒன்று. மாநில அளவில் இயங்கிய தலைவர்களைப் பற்றி மட்டுமே புத்தகங்கள் எழுதும் நம் மரபை உடைத்து இப்படிக் கீழ்(!)மட்டத்தில் பணியாற்றிய ஒரு தோழரைப்பற்றி எழுதிட மூத்த படைப்பாளியான பொன்னீலன் வழி வகுத்துக் கொடுத்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

ஓர் அன்னப்பறவை_ மருதன்வாழ்வு அ.க.அன்னச்சாமி வாழ்க்கை
_ பொன்னீலன்
மக்கள் வெளியீடு
49, உனீசு அலி சாகிப் தெரு, எல்லீசு சாலை
சென்னை_ விலை ரூ.60நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com