Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2009

ஒட்டகம் இருக்குமாம் ஒம்பது மொழம்- அது பழிக்குமாம் அம்பது பேரை
தஞ்சை சாம்பான்

யாப்பா நல்லநேரத்துல பொண்ணு மாப்புளய கூட்டிக் கிட்டு ஊரு காட்டுலே போயி காலு கும்பிட்டு வாங்கப்பா. பொண்ணுத்தோழி மாப்பிள்ளேத் தோழனையும் கூப்பி டுங்கோ என்று மாப்பிள்ளையின் தகப்பனார் துரிதப்படுத்தி னார். தலித்துகள் தம் திருமணத்தின்போது ஊரிலுள்ள நாடார் எனும் சாணார் குடும்பங்களின் காலில் விழுந்து கும்பிட்டு எழவேண்டும் என்கிற கால் கும்பிடுதல் விதிதான் மாப்பிள்ளையின் தகப்பனை துரிதப்படுத்தியது. முதலில் தமது குலதெய்வமான பேச்சியம்மனை வணங்கிவிட்டு ஊர் காலில் விழச் செல்வார்கள். இது ஏதோ குறிப்பிட்ட நேரத்தில் முடியும் காரியமும் இல்லை. எப்படியும் ஊரார் அனைவரின் காலிலும் விழுந்து எழுந்து வர இரண்டு நாட் களாவது பிடிக்கும். இரவுநேரங்களில் கையில் அரிக்கன் வெளிச்சத்தில் ஒவ்வொர் வீட்டின் முன்பும் நின்று அந்தந்த குடும்பத்தாரை அழைத்து காலில் விழுந்து எழுவதற்குள் பெண்ணும் மாப்பிள்ளையும் படாத பாடுதான் படுவார்கள்.

மரமேறி சாணார்கள் மதுரைப் பகுதியிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். பார்க்கும் இடமெல்லாம் பனங்காடு கள் இருந்ததால் இங்கேயே தங்கிவிட்டவர்கள். பனைத் தொழில் முக்கியத் தொழிலாகவே அமைந்து போனது. காட்டின் மையத்தில் கடலையோ சோளமோ துவரையோ பயிரிடுவார்கள். சாரிசாரியாக துவரை விதைத்து நடுவில் கடலையையும் பயிரிட்டு பயிர்கள் பக்குவமடைந்து பார்க் கிறபோது கிராமமே கண்கொள்ளாக் காட்சியாக விளங்கும். கிணற்று நீரும் ஏரிநீரும் தான் ஆதார சுருதி. இதல்லாமல் கம்பு,கேழ்வரகு,வரகு,மட்டைநெல் போன்ற தானியங்க ளும், பருவகாலங்களில் பதநீர், கலயங்களில் கள், நுங்கும் இவர்களின் வாழ்வாதாரத்தை மிளிரச் செய்தது.

இங்குள்ள தலித்துகள் (பறையர்) செங்கோட்டைப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்களும் பிழைப்புத் தேடி வந்தவர்கள். பனைத்தொழில் தெரியாத, வானம் பார்த்த பூமியில் பயிர் செய்யும் பழக்கமுள்ள இவர்கள் தங்களின் குலதெய்வங்களை பிடி மண் தெய்வ மாக கொணர்ந்து வழிபடுகின்றனர். இந்த கிராமத்திலிருந்த நாடார்களின் ஆதிக்கத்தில் இவர்கள் பட்ட துன்ப துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

சின்னக் குழந்தைகள் அழும்போது ஏ... அப்பா அழுவாத, ராக்கப்பன் வரகு ராக்கப்பன் வந்தா கண்டந்துண்டமா வெட்டிப்புடுவாரு என பயம் காட்டுவார்கள். ராக்கப்பன் நாடார் அஞ்சாநெஞ்சம் படைத்தவர். ஆறடி உயரமும் அதற்கேற்ற கட்டுமஸ்தான உடல்வாகும் படர்ந்த முகத்தில் கடாமீசையும் கையில் வீச்சரிவாளும் ஆளுயரத் தடிக்கம்பும் தான் இவரின் அடையாளங்கள். கிராமத்தில் இவருக்குத் தெரியாமல் ஏதும் செய்துவிட முடியாது. இந்த மனிதரை கண்டவர்கள் வழிவிட்டு ஒதுங்கியே நிற்பார்கள். இவரின் தடியடிக்கு ஆளாகாதவர் யாரும் ஊருக்குள் இல்லை. வெள்ளக்கார போலிஸ்கூட இவருகிட்டே பவ்வியமாதான் பேசுவார்களாம். இவர் பறையர்கள் வசிக்கும் பகுதி பக்கம் போனால் இளம்பெண்கள் வீட்டினுள் ஓடி ஒளிந்து கொள் வார்கள். யாரும் உட்கார்ந்து இவர் பார்த்துவிட்டால் தடியடி தண்டனைதான். எனவே இவர் கண்ணுக்கெட்டாத தூரம் மறையும் வரை நின்றுகொண்டேதான் இருக்க வேண்டும்.

ஒருநாள் இவர் போவது தெரியாமல் சின்னையன் என்ப வன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து இருந்ததைப் பார்த்த உடன் அங்கேயே தண்டனையை நிறைவேற்றினார். சின்னையன் கதறல் ஊரையும் தெருவையும் கலங்கச் செய் தது. ஆனால் யாரும் வந்து தடுக்க இயலாது. ரத்தம் வடிய வடிய சின்னையன் சாய்ந்துவிட்டார். இவரும் அடியை நிறுத்திவிட்டு 'பறநாயே நாங் வர்றதுகூட தெரியலயா' என்றவாறு சென்றுவிட்டார். பிறகுதான் தெருவாசிகளும் சின்னையன் குடும்பத்தாரும் தூக்கிச் சென்று மஞ்சளும் ஒரியம்பட்டையையும் அரைத்து பத்து போட்டார்கள். தவிட்டை பழையதுணியில் சுடவைத்து ஒத்தடம் கொடுத் தார்கள். சிலநாள் கழித்து,சின்னையன் குடிமை வேலை செய்யும் வடக்கிவூட்டு நல்லியம்மன் வகையறா நாடாரி டம் கூறியபோது ஏலே, எங்களாலே ஏதும் செய்ய முடி யாது. எல்லாத்தையும், பாத்துக்கிட்டு நாமோ தலைக்கு மேலே எரிஞ்சிகிட்டு போறானே அவென்தான் அவனுக்கு கூலி கொடுப்பான் எனக் கூறி சென்றுவிட் டார்.

அடிபட்ட சின்னையன் தனக்கு ஆதரவாக யாரும் பேச மாட்டார்களா என எண்ணி ராக்கப்பன் வகையறா, கோரி வூட்டு வகையறா ஆட்களிடம் சென்றார். யப்பா இங்கே இருக்கிறே உடையார், கள்ளர் எல்லாமே அவெனே கண்டு நடுங்குது. நாங்க என்னடா செய்ய முடியும்? என்று சொல்லிவிட்டனர். சின்னையன் ஆற்றாமையை வெளிப் படுத்த குலதெய்வத்திடம் வந்து நின்று ஒண்ணுமறியாத என்னே அடிச்சவேன் மண்ணோடு மண்ணாப் போவட்டும் என்று மண்ணை வாரித் தூற்றிவிட்டுச் சென்றார்.

சின்னான் சுமாரான உயரம். இருந்தாலும் நல்ல உடற்கட்டு. இந்தப்பகுதி மக்கள் பலமுறை இவரின் தைரியத்தை வெகுவாக புகழ்ந்தே பேசுவார்கள். எந்த வம்பு வழக்கும் வைத்துக்கொள்ளமாட்டார். ஆனால் வந்த சண்டையையும் லேசில் விடமாட்டார் என்று கூறுவார்கள்.

எலே, சின்னாங், சின்னாங் என்று தனது குடும்பத்திற்கு வேலை பார்க்கும் சின்னானை அழைத்தார் ராக்கப்பன். என்னங்கய்யா என்றவாறே ஓடிவந்தார் சின்னான். என்னடா நான் இவ்வளவு சத்தமா கூப்புடுறேன், காதுல விழாத மாரி இருக்கே என்றவுடன், சின்னான் அதெல்லாம் இல்லேங்க ஒங்க குரே கேட்டதும்தான் ஓடியாறேன் என் றார். ஏலே ஏரிகரே பக்கம் உள்ள கொல்லே காட்டே பாக்கச் சொன்னனே போயி பாத்தியா. வரவுப்பயிருக்கு களே எடுக்கச் சொன்னனே, யாண்டா எடுக்கலே? என்று ராக்கப் பன் கேட்டார். அய்யா போனவாரம் ரெண்டு நா நானும் யம் பொஞ்சாதியும் போயி வேல பாத்தோம். மறுநா எங்கவூட்டு வேலையாப் போயிட் டோம்.வூட்டுலே ஒருபுடி தானியம்கூட இல்லே. புள்ளக்குட்டியளே பசி யோடே பாக்க சகிக்கலே. அதாங்க ரெண்ட நா வேலக்கிப் போனோம். அதுதான் சாப்பாட்டுக்கு ஆச்சு. நாளான்னைக்கு வந்து வேலையெல்லாம் பாத்துடுறோம் கொஞ்சம் வுட்டுப் புடிங்கய்யா என் றார். எலே ஓம் புள்ளங்க பசியாலே கிடக்கிறதே பாக்க சகிக்காது யாம் வூட்டு தோட்டப்பயிரு எப்படியானாலும் ஆவட்டுங்கறியா என்றார் ராக்கப்பன். அப்படி இல்லேங்க இந்த வெயிலுலே கெடந்து தவிச்ச வாய்க்கு உடையான் ஏரித்தண்ணியைத் தவிர எங்களுக்கு என்ன வழி இருக்குது? அதாங்க நாலுநா வேலே பாத்து அதுலே கிடைக்கிற அரிசியோ தவசியோ (தவசியோ- மற்ற தானியங்களோ) வாங்கி வச்சிட்டு வரலாமுனுதாங்க வேலெக்கிப் போறோம் என்றார் சின்னான்.

ஓகோ உங்களுக்கு வூட்டுலே ஆண்ட பண்டம் அறுவது இருந்தாத்தான் யாம் வூட்டு வேலே பாப்பியோ போலே இருக்கு. இல்லாட்டி பாக்கமாட்டியளோ என்று சற்று கோபத்தோடு ராக்கப்பன் கேட்க சின்னானும், யாய்யா ஓம் வூட்டு வேலைய நாங்க பசியும் பட்டினியுமா கெடந்து பாக்கணும்னு சொல்லுறீயளா என்று சற்று கோபமாகவே கேட்டார். இதை எதிர்பாராத ராக்கப்பன், எலே என்னடா திமிராப் பேசுறே? என்னே எதித்து பேசிய யாரையும் நான் உட்டது இல்லே. நான் யாருன்னு தெரிஞ்சு தானே பேசுறே என்றார். நல்லா தெரிஞ்சுதாங்க பேசுறேன். நான் கோரிவூட்டுவகையறா ராக்கப்பன்கிட்டே தான் பேசுறேன். இத்துனே வருசமா வேலே பாத்தோமே நாங்க எங்க கூலியா கேட்டோம்? அப்போவெல்லாம் நீங்க சொல்லியா நாங்க வேலே பாத்தோம்? போங்க நாளைய மறுநா வந்து வேலே பாக்கிறோம் என்றார். சின்னான் சிலம்பாட்டத்திலும் கை தேர்ந்தவர் என்பதால், இவனை இங்கு எது செய்தாலும் எதிர்த்து மல்லுக் கட்டுவான் என அறிந்த ராக்கப்பன் கோபத்தை அடக்கிக்கொண்டே சரிடா நீ எப்போ வாரீயோ அப்போ வாடா என்று கூறிச் சென்றார்- இவனை தனியாக விட்டு ஒருகை பார்த்து விடுவது என்ற முடிவோடு.

சின்னான் மனைவி என்னங்க அந்தய்யாக்கிட்டே அப்படி பேசிப்புட்டிங்க. ஏதாவது செஞ்சா என்ன செய்யுறது என் றார். என்னடி செஞ்சிப்புடுவான் அதையும்தான் பாப்போம் என்றார். இவனைத் தேடித்தேடி வெள்ளகாரே போலிஸ் வரும்போது இந்த வீரரு காட்டுக்குள்ளே ஓடிப் போயி ஒளிஞ்சிக்கிறான். ஒரு போலிஸ் இரண்டு போலிஸ் வந்தா மட்டும் தாக்கல் சொல்ல வாராரு. நாடாரூட்டம்மா நல்ல மனுசி. இவனே இந்த ஆண்டவன்தான் அடக்கணும்னு அந்த ஆயி பேசுது. உறவுமுறே யாரும் எங்கவூட்டு பக்கம் வர்றதே கிடையாது, இந்த பாவிப் பய என்னக்கி மாக்குன்னு போவான்னு வாசாப்பு வுடுது. குடும்பத்தே நல்ல செய்முறையேலே செய்ய முடியலே இவனுக்கெல் லாம் ஒரு மீசை? ஊரை வேணும்னா மிரட்டலாம் உருட்டலாம், யாங்கிட்டே வரட்டும் பாத்துகிறேன். இங்குனே வந்து கைநீட்டியிருந்தா நானும் மல்லுகட்டி, அவன் மானம் மரியாதையே குலச்சிருப்பேன். அப்படி செஞ்சா ஒரு நாய்கூட இவனை மதிக்காது என்றார்.

சின்னானின் வார்த்தைகளை தாங்கிக் கொள்ளாமல் அவதி யுற்ற ராக்கப்பன் சின்னானுக்கு ஒரு முடிவுகட்ட நினைத் தார். இதை கொஞ்சநாளில் மறந்துபோன சின்னான் பக்கத் தில் இருந்த சொந்தபந்தங்களை பார்த்துவிட்டு பொழுது சாயும் நேரம் கள்ளுக்கடையில் வயிறு முட்டக் குடித்து விட்டு காட்டுவழியே வந்து கொண்டிருந்தார். சமயத்தை எதிர்பார்த்திருந்த ராக்கப்பன் சின்னா னுக்கு முடிவு கட்டும் தருணம் என்று சின்னானை நெருங்கினார். சின்னான் எதார்த்தமாக அய்யா கும்புடுறேங்க என்று தலைகுனிய, ராக்கப்பன் கையில் வைத்திருந்த தடியால் தாக்கினார். அடி பட்ட சின்னானுக்கு போதை இருந்த இடம் தெரியாமல் பறந்தோடியது. சுதாரிக்க முடியவில்லை. சின்னானின் துண்டையும் வேட்டியையும் உருவிய ராக்கப்பன், மல்லு கட்டி அவரை பாதையோர பனைமரத்தில் கட்டிவிட்டார். பக்கத்தில் கிடந்த செத்தை சருகுகளை பனந்தூரில் (மரத்தின் அடிபாகம்) போட்டு கொளுத்திவிட்டு, பறநாயே என்னே எதித்தாப் பேசுறே, இதோட தொலைஞ்சிப் போடா என்று எரியும் சருகுகளை அள்ளி சின்னான் தலையில் போட்ட வுடன் எழுந்த சின்னானின் அலறலில் உசனியையா காடே ( உசேன் என்ற மகமதியரின் காடு) எதிரொலித்து அச்சத்தை உண்டாக்கவே யார் கண்ணிலும் படாமல் ஓடிவிட்டார் .

சின்னான் சமயோசிதமாக, எரிந்து கொண்டிருந்த சருகு களில் படும்படி சிறுநீர் கழித்தார். சிறுநீர் பட்ட இட மெல்லாம் நெருப்பு அணைந்தது. தலையில் பட்ட நெருப்பு தலைமுடி பாதியை பொசுக்கியது. சின்னானின் நீளமான தலைமுடி ஒருபகுதி எரிந்தும் மறுபகுதி நீளமாகவே இருக்க மீசையும் ஒருபக்கம் பொசுங்கிவிட்டது. கட்டிவைத்த வேட்டியில் நெருப்புப் பட்ட பகுதியை கிழித்துக்கொண்டு பலம் முழுதும் திரட்டி முண்டியடித்து தன்னை விடுவித்துக் கொண்டு காட்டின் குறுக்குப்பாதையில் வீடு நோக்கி வேகமாக ஓடினார்.

சின்னானின் அலங்கோலம் கண்டு மக்கள் அலறித் துடித்து நெருப்புக்காயங்களுக்கு வாழைச்சாறை பிழிந்துவிட்டார்கள். கூக் குரலிட்டவர்களை அமைதிப்படுத்தி னார். சத்தம் கேட்டு ராக்கப்பன் வந்து விட்டாலும் அவனை எதிர்த்துப் போரா டும் தெம்பு இப்ப எனக்கு இல்லை. நான் செத்துப்போயிட்டதாகவே ராக்கப்பன் நினைத்துக் கொள்ளட்டும் எனக் கருதினார் சின்னான். அன்றிரவு முழுக்க பறத்தெரு மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து குசுகுசுவென்று பேசிக்கொண்டே இருந்தார்கள்.

இவர்களுக்கு சாதகமானவர்களான நல் லியம்மன் வகையறாவிடம் சின்னானை அழைத்துக்கொண்டு தெரு பெரியவர்களும் மற்றவர்களும் போனார்கள். சின்னானின் கோலத்தைப் பார்த்து பெரியவர்கள் பதறிப்போய், எப்பா என்னடாச்சி என்ற பதட்டத்தோடு கேட்டார்கள். விசயம் தெரிந்தவுடன் சரி, இனி இவனுக்கு நீங்கதான் துணிஞ்சி முடிவுகட்டணும், எதுவந்தாலும் நாங்கோ பாத்துக்கிறோம். ஆளே கொன்னுப் புடாமே அவன் கையி காலே உடச்சிப் புடுங்கோ. எந்தக் கேசு வந்தாலும் பக்கபலமா இருக்கிறோம் என்றார்கள்.

சின்னான் செத்துப்போயிடுவான், அந்த சமயத் துல நாமோ ஊரில் இல்லை என்று காட்டிக் கொள்ள அன்றிரவே வெளி யூர் சென்ற ராக்கப்பன், இரண்டு மூன்று நாள் கழித்து ஏதா கிலும் சேதி தெரிந்துகொள்ளும் ஆவலோடு ஊர் வந்தார். ராக்கப்பன் வந்துவிட்டார் என்றதும் சின்னான் உஷாரா னார். ஏற்கனவே அடிஉதைப்பட்ட சீரங்கன், ரெங்கன், பாலா, சின்னான் மற்ற சில இளைஞர்களும் சேர்ந்து ராக்கப்பன் செல்லும் வழியை எதிர்நோக்கியிருந்தார்கள். ராக்கப்பன் ஏதுமறியாதவர் போல சின்னானை கட்டிப்போட்ட இடத்தைப் பார்த்தார். பனைமரத்தின் அடிப்பகுதியில் எரிந்துபோன சருகுகளின் தடயங்களைத் தவிர வேறு ஏதும் தெரியவில்லை என்றதும் கள்ளுகுடிக்க காட்டுவழிப் பாதையில் நடந்தார். துவரங்கொல்லைகளை கடந்துதான் கள்ளுக்கடை.

சின்னானும் ஏனேயோரும் துவரங்காட்டில் மறைந்திருந் தார்கள். ராக்கப்பன் கடக்கும் போது ஆவேசங் கொண்ட சின்னான் வேங்கைப்புலி இரையைப் பிடிக்கும் ஆசேவத் தோடு பாய்ந்து ராக்கப்பனின் கால்களைத் தட்டிவிட்டார். சற்றும் எதிர்பாராத ராக்கப்பன் நிலை தடுமாறி கீழே சாய்ந் தார். ராக்கப்பனின் உடல் மீது சின்னான் ஏறி எழுந்து விடா மல் அமுக்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரும் செயல்படவே ராக்கப்பனால் சுதாரிக்க இயலவில்லை. ராக்கப்பனின் கை கால்கள் கட்டப்பட்டன. சின்னான் ஆவேசம் தீருமட்டும் மாறிமாறி அடித்தார். யாண்டா என்னே போயி பறநாயே செத்துப்போன்னு சொன்னியே, பறையனை, சக்கிலியனை தொட்டாத்தான் தீட்டு, சாணானே பாத்தாவே தீட்டுன்னு அப்போ உள்ளவுக சொல்லுவாங்களாம். எங்கள போலே தீட்டுக்கு உரியவன்தாண்டா நீயும். ஒட்டகம் இருக்குமாம் ஒம்போது மொழம் அது பலிக்குமாம் அம்பது பேரே. இதோடே நீ தொலைஞ்சே போடா என்று அடித்தே இழுத்துக்கொண்டு வந்தார்கள். மாரியம் மன் சன்னதியின் எதிர்ப்புறம் உள்ள மைல்கல்லில் கட்டி வைத்தார்கள். தன்னை விட்டுவிடும்படியும் இனி யாருக்கும் எந்த தீங்கும் செய்யமாட் டேன் என்றும் ராக்கப்பன் மன்றாடினார். ஏற்கனவே அடிபட்டதில் இரண்டு கை களும் உடைந்துபோனது. மைல் கல்லில் கட்டி வைத்து தலித்துகள் ஆவேசமாக தாக்கியதில் கால்களும் உடைந்து போயின. ஊரில் யாரும் ஏன் என்று கேட்பாரில்லை. கோரி வூட்டு வகையறா ஆட்கள், எங்க வகையறா பேரையே கெடுத்தப்பயே செத்துத் தொலையட்டும் என்றே இருந்து விட்டார்கள். ராக்கப்பனின் குடும்பங்கூட கண்டு கொள்ள வில்லை. ராக்கப்பனின் அலறலால் ஊரே அமைதியாக உறங்கிப் போனது. அலறல் சத்தம் தாங்க முடியாமல் கெவர் மண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்த மறுநாள் இறந்து போனார்.

சீரங்கன், பாலன் ரெங்கன், சின்னான் மீது கொலை வழக்கு. நால்வரும் ஊரைவிட்டே ஓடிப் போனார்கள். இவர்களது குடும்பங்களை பாதுகாத்து, ஆதரவாக சாட்சியம் சொல்லி வழக்கை தள்ளுபடி செய்ய வைத்தவர்களும் இந்த வடக்கீ வூட்டு நல்லியம்மன் வகையாறாதான் என்றும் நன்றிப் பெருக்கோடு கூறி கொள்கிறார்கள். இதன் பிறகுதான் தீண்டாமைக் கொடுமை சற்று குறைந்திருப்பதாக இந்த மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

தகவலாளிகள்- சீரங்கள் மகன் வடிவேல் - வயது 70, கோவிந்தன் மகன் செயராமன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com