Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2009

இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகை
சாகிப்கிரான்

மொழி எனும் ஊடகம் கவிதையை எத்தகைய நிலைப் பாட்டில் வைத்துள்ளது? அந்த நிலையிலிருந்து கவிதை எவ்வாறு சாத்தியப்படுகிறது? இந்த இரண்டு கேள்விகள் இளங்கோ கிருஷ்ணனின் கவிதைத் தொகுப்பை வாசித்ததும் என்னுள் எழுந்தவை.

உரைநடை தனது இயல்பான கட்டமைப்பிலிருந்து விலக முயலும்போது உருவாகும் நிலையற்ற வடிவமே கவிதை. அந்த நிலையற்றத் தன்மையே கவிதையின் வீச்சாக அமை கிறது. அந்தரத்தில் மிதந்தபடியே இருக்கும் ஒரு பறவை யின் இறகைப்போல் கவிதையைப் பல சாத்தியப்பாட் டிற்குக் கொண்டு செல்கிறது. எனவே ஒரு படைப்பு எப்போதும் வாசகனுக்கு சவாலாகவே இருக்கிறது.

எனவே கவிதையின் செயல்பாடு அது கொண்டிருக்கும் மொழி என்ற ஊடகத்தைச் சாராமல் அதைத் தாண்டி மொழியைக் கண்ணுறும் அறிவு மனத்திற்கு அல்லது உணர்வு மனத்திற்கு ரோஜாப் பதியனிலிருந்து ஒரு டைய னோரையோ, மலத்திலிருந்து சுகந்தத்தையோ வரவ ழைத்து, புதிய ஒரு அனுபவத்தைத் தருவதாக அமைகிறது.

இளங்கோ கிருஷ்ணன் தனது கவிதைக்கான மொழியாக உரைநடையின் மிக நெருங்கிய ஓர் வடிவத்தை பயன்படுத்துகிறார். அவரது பெரும்பாலான கவிதைகள் நேரான ஒரு உரைநடை மொழியிலேயே சொல்லப்படு கின்றன. மிகச் சிக்கலான நுண்உணர்வுகளையும் அனுபவச் சிக்கல்களையும் மேலோங்கச் செய்யும் மிக எளிய கவிதை வடிவம் கவிஞருக்கு வாய்த்திருக்கிறது. இது அவரது கவிதைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அவரது மகாகவி என்ற கவிதையானது வரிகளை மடித்து எழுதாமல், உரைநடைபோல ஒரே நேர்க்கோட்டில் எழுதிப் பார்த்தால் வெற்று உரைநடைப் போலவே தோன்றும். உரைநடை எவ்வாறு கவிதையாக மாற்றமடைகிறது? அதைச் சாத்தியப்படுத்தும் கட்டமைப்பு எது? போன்ற கேள்விகளுக்கு இது விடையாக அமைகிறது.

காலாதீதத்தில் ஒரு பாம்பைப் போல / எங்கோ நெளிந்து கொண்டிருக்கிறது / அவன் போக வேண்டிய புகைவண்டி. இங்கே கடைசிவரியே, வழக்கமான உரைநடைக் கட்ட மைப்பை உடைத்து றிறீணீவீஸீ tமீஜ்t - யை கவிதையாக்குகிறது. அதாவது, உரைநடையில் கவிதையில் வரும் கடைசி வரி யானது முதலில் இருக்க வேண்டும். இது முதலிலிருக்கும் வரிகளை அந்தக் கடைசிவரியைச் சாராமல் பொதுமைப் படுத்துகிறது. எனவே அந்த வரிகள் தம்மளவில் சுதந்திர மாக இயங்கிக் கவிதையை கட்டற்ற தன்மையில் நிறுத்து கின்றன. கவிதையின் ஓசையும் தக்கவைக்கப்படுகிறது.

இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகளின் பாடு பொருளா னது, இத்தகைய உத்தியைப் பயன்படுத்தும் எளிய ஆனால் வலுவான ஒரு கட்டமைப்பை கொண்டிருக்கின்றன. தொகுப்பில் முதலில் காணப்படும் ‘பேனா’ பற்றிய கவிதை யானது கீழே விழுந்து அதனால் பைத்தியம் பிடித்துவிடும் பேனாவின் குறும்புகளைச் சொல்வதாக அமைகிறது.

அதைக் கொண்டு/காதலிக்குக் கடிதம் ஒன்று எழுத முயன்ற போது/அது பசியின் கொடூரத்தையும்/வறியவனின் இயலா மையையும் எழுதியது/ வசந்தத்தின் கொண்டாட்டத்தை எழுதப் பார்த்தபோது/கலவரங்களின் பீதியையும் உயிரின் வலியையும் எழுதியது- என்று நீளும் இந்தக் கவிதை மிகுந்த திகைப்பும் அதிர்ச்சியுமாய் நான் இவைகளுக்கான/தீர்வுகளை எழுத முயன்றபோது/ அது எனக்கொரு கொலை மிரட்டல் கடிதத்தை எழுதியது- என முடிகிறது.

அதுவரை உண்மையின் பக்கமிருந்த பைத்தியம் பிடித்த பேனா, கடைசியில் அந்தக் கசப்பான உண்மைகளுக்கான தீர்வை எழுதியவுடன் தனது நிலைக்கு மாறாக, தீர்வை எழுதிய கவியை கொலை செய்வதாக ஒரு மிரட்டல் கடி தத்தை எழுதுகிறது. இது மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய அபத்தமாக இருக்கும். ஆனால் பேனாவின் நிலைப் பாடு பைத்தியமற்ற நிலையும் ஒன்றாகிப் போகும். அதா வது அது தனது பைத்தியத்தன்மையை இழக்க நேரிடுகிறது. அதன் இருப்பைக் காட்டும் அடையாளத்தைத் தொலைக்க வியலாத பேனா, அதன் இருப்பை காட்டும் அடையா ளத்தைத் தொலைக்கவியலாத பேனா, கவியைக் கொல்ல முனைகிறது. இந்த நிலையே உலகின் தோற்ற மூலமாக இருக்கிறது. எல்லாமே தனது இருப்பை நிலைநாட்ட முயலும் அந்த ரகசியத்தை கடைசி மூன்று வரிகள் நம்மிடம் முணுமுணுக்க வைக்கின்றன.

மற்றொரு சாத்தியப்பாட்டில் நோக்கினால், அரசியல்வாதி கள் தனது இருப்பை நிலைநாட்டிக் கொள்ள தங்களது பகடிகளை யோசிக்கவியலாத ஒரு தொண்டர் கூட்டத்தை அந்த பகடிகளிலிருந்தே உருவாக்கும் செயலுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

ஒரு பார்வைக்குச் சாதாரணமாகத் தோன்றும் இத்தகைய கவி தைகளின் வரிசையில் பேனா-2, மிருகமொழி பேசுபவன் சரிதை, பொம்மைகள் விற்பவன், சிறுவன் ததாதிதீ, கடவுளின் பற்கள், ஹிட்லர், பாம்புகள் முதலிய கவிதைகள் மாயச்சுழல் போல பல தளங்களில் அதிர்வுருகின்றன.

தொகுப்பில் ஒட்டுமொத்தக் கவிதைகளை வாசிக்கும்போது ஒரு கவிதையே அல்லது ஒரு நிகழ்வே அல்லது ஒரு உணர்வே பல கவிதைகளில் தொடர்வதைக் காணலாம். இது தேடலின் பல்வேறு நிலைகளைக் காட்டுவனவாக இருக்கக் கூடும். அந்த வகையில், ‘ஈரசாட்சி’ கவிதையானது ‘வீடு திரும்புதல்’ கவிதையின் தொடர்ச்சியாக, அடுத்த நிலையாக இருப்பதாகத் தோன்றுகிறது. இது ஒரு வகையில் இட்டுக்கட்டலாகத் தோன்றினாலும் வாசக மனத்தை அத்தகைய ஒரு நிலைக்குக் கொண்டு செல்வதால் இது சாத்தியமே என்று எண்ணத்தோன்றுகிறது.

‘விடு திரும்புதல்’ கவிதையில் மனிதனால் அழிக்கப்பட்டு விட்ட இயற்கையானது தனது ஈகை குணத்தை தொலைத்து விடுகிறது. எனவே இயற்கையைச் சார்ந்த விலங்குகள் அழிந்துவரும் நிலையில் வேட்டைக்குச் செல்பவன் வெறுங்கையுடன் திரும்புகிறான். அந்தக் கவிதை,

எதிர்ப்பார்பு வளர்த்துக் காத்திருக்கிறார்கள்/உங்களின் முதிர்ந்த பெற்றோரும்/மனைவியும் குழந்தைகளும்/தொலைவில் தெரிகிறது உங்களின் வீடு/இருள் வலுத்துக் கொண்டிருக்கிறது மெல்ல- என்று முடிகிறது.ஆனால் ‘ஈர சாட்சி’ கவிதையோ, பெய்து கொண்டிருந்த மழையானது/தாய்மையின் பிரவா கம்/மதர்த்த அந்நிசியில்/ஈரசாட்சியாய் சன்னல் வழி/பார்த்துக் கொண்டிருந்தது/ தூக்கு மாட்டும் ஒருவனை- என்று ஒரு அதிர்ச்சியைத் தருகிறது.

வாழ்வில் தோற்றுப்போன ஒருவன் திட்டமான முடி வொன்றை செய்துகொண்டிருப்பதாக இரு கவிதைகளை யும் இணைத்துப் பார்க்கும் வாசிப்பு மனமானது ஏதோ ஒரு கணத்தில் நினைத்துக் கொள்கிறது. ஒரு பார்வையில் இது கவிஞனுக்குக் கிடைத்த வெற்றியென்றாலும் கவியின் பார்வை வீச்சைக் குலைப்பதற்கும் இடமளித்து விடுகிறது.

இந்த விபத்து கவிதைகளை தொகுக்கும்போது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்றாகும். கவிதைகள், எண்ணத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், எண்ணத்தின் முதிர்ச்சியாக அமைதல் வேண்டும். இது மொழியின் மிகத் தட்டையான உரைநடையைப் பயன்படுத்தும் முனைப்பால் எளிதில் நிகழ்ந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் வாசிப்பு அயற்சியைக் கூடத் தோற்றுவிக்கக் கூடும்.ஒருவேளை இது புனைவின் மூலம் தவிர்க்கப்படலாம். புனைவே கவிதையையும் அதன் கட்டமைப்பையும் இத்தகைய நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றுகிறது.தொகுப்பின் தலைப்பாக கொண்டிருக்கும் ‘காயசண்டிகை’ கவிதை அத்தகைய ஒரு தப்பித்தலைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

உன்மத்தம் முற்றிய ஒரு பௌர்ணமியில்/ தன் பிச்சைப் பாத்திரத்தை/ நீர்த்தொட்டியில் அமிழ்த்தெடுக்கிறாள்/ ஒரு பைத்தியம்/ அப்போது அது /அட்சயபாத்திரமாகியது/ இந்தாருங்கள் அமிழ்தென/திசையெங்கும் அள்ளித் தெளிக் கிறாள்/இறைக்க இறைக்க கண்ணீர்போல/சுரந்து கொண்டேயிருக்கிறது அப்பாத்திரம்/கோருவதற்கு யாரும் வராத அவ்விரவில்/சிமெண்ட் தரையில் சிந்திய நீரில்/இறங்கி அதைப் பருகிக்கொண்டிருக்கிறது/முழு நிலா.

மணிமேகலை யார்? காயசண்டிகை யார்?. ஒரு முனிவரின் சாபத்தால் காயசண்டிகையும் அவளது கணவனும் தீராப் பசிக்கு ஆட்படும் ஒரு சாபத்தைப் பெற்றுவிடுகின்றனர். அவ்வேளையில் மணிமேகலை தனது அட்சயப் பாத்திரத் தால் பசியெனும் கொடியநோய்க்கு மருந்தாக உணவை அள்ளியள்ளி வழங்கிக் கொண்டிருப்பதைக் கேள்விப்படுகி றாள். அந்த அட்சய பாத்திர உணவை மணிமேகலையின் கைகளில் வாங்கி உண்டவுடன் காயசண்டிகையின் சாபம் நீங்கிவிடுகிறது. சாபம் நீங்கிய களிப்பில் ஒரு மலைக்குச் சென்றுவிடும் நிலையும் ஏற்படுகிறது. அங்கே ஒரு பூதம் அவளைத் தின்றும் விடுகிறது. இது தெரியாத அவளது கணவன் அவளைத் தேடி அலைகிறான். இந்த நிலைகள் யாவும் மணிமேகலைக்குத் தெரியவர, தானே காயசண்டி கையாக உருமாறிவிடுகிறாள். தொடர்ந்து அட்சயப் பாத்திர அன்னதானத்தையும் வழங்கிவருகிறாள். இந்த உருமாற்றம் மணிமேகலைக்கு ஒருவிதத்தில், காதல் கதைகள் பேசி தன்னைத் துறவறத்திலிருந்து மீட்கும் உதயனனிடமிருந்து மறைந்து வாழ ஒரு வழியாக அமைந்துவிடுகிறது.

இங்கே காயசண்டிகை ஒரு பலியாடு. நாம் பசியை காமமாக புனைந்து கொண்டால், அட்சயப் பாத்திரமான பௌத்தமே அதற்கான மருந்தாகக் கருதவேண்டும். காமம் அவளை விட்டு நீங்கியவுடன் அவள் மாண்ட பிண்டமாக ஒரு பூதத் திற்கு உணவாகிவிடுகிறாள். எனவே காமமே உயிர் வாழ்த லின் கடப்பாடாகிவிடுகிறது. காமமற்ற எதுவுமே இயற்கை விதியின் படி அழியக் கடவது.

ஒரு பெண் பைத்தியமாவது அவளின் அந்தரங்க உண்மைக ளின் அடியில் கிடக்கின்றது. இவை பாலுறவு சார்ந்த காரணி களாலேயே கட்டமைக்கப்படுகின்றன. எனவே பலியா டான காயசண்டிகை, காயசண்டிகையாக மட்டுமில்லாது மணிமேகலையாகவும் இருக்கிறாள். காமமும் துறவறமும் ஒன்றாகவே நிகழ்கின்றன. இதுவே அவளைப் பைத்திய மாகக் காட்டுகிறது. இந்த நிலையிலிருந்தே இன்று நம்மி டையே வாழ்ந்துவரும் ஒரு சாலையோர பிச்சைக்கார பைத்தியக்காரி தனது பிச்சைப் பாத்திரத்தால் இரு சாரார்க் கும் அது தீர்க்கும் மருந்தாக வாரி வாரி இறைக்கிறாள். அமிழ்தைப் பருக யாருமில்லாத நிறைமதி பொழுது, ஏனென்றால் எல்லோரும் காமத்துடனே இருக்க விழை கின்றனர். அதுவே மனித வாழ்வுத் தொடர்ச்சியைக் அறுந்துவிடாமல் கொண்டு செல்கிறது.

கடைசி மூன்று வரிகளே புனைவின் உச்சமாக இருக்கின் றன. வாழ்வில் சீரழிக்கப்பட்ட நம்மிடையே வாழும் ஒரு அபலைப்பெண், தன்னிலையிலிருந்து இந்த சீரழிவிற்கு ஒரு தீர்வை வழங்குகிறாள், ஆனால் பெறுவதற்கு யாரும் தயாராக இல்லை. எனவே இது தீர்க்க முடியாத ஒன்றாக மாற முயலுவதை கவிஞன் விரும்ப வில்லை. காமத்தீக்குக் காரணமாக அல்லது அதை உன்மத்த வெறியாக தொன்று தொட்டு மாற்றிவரும் அந்த நிலவையே இறங்கிவந்து உண்ண வைக்கிறார். காமமே காமத்தை, துறவறமே துற வறத்தை தோற்றுவிக்க இயலும். இப்பொழுது அமிழ்து பருகிய நிலவு, இந்த இரண்டுமில்லாததால் நிலவேயில் லாமல் போய்விடுகிறது. இந்த வகையில் ஒரு கட்டமைப்பு குலைக்கப்படுகிறது.

பிறகு இந்த கவிதை ஒரு பின் நவீனத்துவ தன்மையையும் அடைகிறது. தொகுப்பு மிக நீண்ட உரையாடலைக் கொண் டிருக்கிறது. ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் விரிந்து தன்னை முன்னிருத்த முயலுகின்றன. ஆனால் ஒரு விமர்சக னின் வேலை அதுவல்ல. கவிதை சார்ந்து முன்மொழியப் படும் குறைந்தபட்ச ஒரு அளவீட்டுடன் கவிதைகளின் மூல மாக நாம் இந்தக் கவிஞனை வரையறுக்க முயலுகிறோம். ஆனால் அவன் வரையறைகளைத் தாண்டி பயணப் பட்டுக் கொண்டேயிருக்கிறான். இதுவே மொழியின் ஆகச்சிறந்த வடிவமாக, கவிதைக் கொண்டாடப்பட காரணமாகிறது.

இளங்கோ கிருஷ்ணன் மிகத் தட்டையான உரை நடையின் மூலம் கவிதையில் தனது சாத்தியப் பாட்டை முன்னெடுக்கிறார். இது அவர் காட்சிக ளின் வழியே தனது உரையாடலை நிகழ்த்த துணை செய்கிறது.உணர்வுகளின் வீரியத்தை அடக்கி தொடர்ந்தக் காட்சிப்படிமங்களின் வழியாக அல்லது கதை சொல்லல் முறையிலான உத்தியானது சில கவிதைகளில் மேலோட்டமான ஒரு அதிர்வையே தருகின்றன. வாசகனுக்கான குறைந்தபட்ச தகவலா வது கிடைக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்க வேண்டும். வாசகனை எல்லாவற்றையும் வெளியிலி ருந்து கொண்டுவரக் கட்டாயப்படுத்த முடியாது.

அவரது கவிதைகளானவை, வாழ்வின் நிச்சயமின் மையையும், அபத்தத்தையும் இவை கொண்டுவரும் வேலையின்மை, சிற்பியை அம்மி கொத்தச் செய்யும் வேலை நிர்பந்தங்கள், சுரண்டல், இயற் கையை அழிக்கும் சுயநலம், உலகமயமாக்கல், இனப்படுகொலைகள், தீவிரவாதம், கலாச்சாரங் களைத் தாரைவார்க்கும் தயாளம், காலம் பற்றிய தீராத கவனம் என தற்கால சீண்டலுக்கான அத்தனை எதிர்வினைகளையும் கவிதைகளில் கொண்டிருந்தா லும், கவிதையின் ஆன்மா சார்ந்து அதன் கட்ட மைப்பு சில கவிதைகளில் பொருந்தி வராமலிருக் கின்றன. சில கவிதைகள் வார்த்தைச் சிக்கனமின்றி தனது சிறந்த வடிவ ஒழுங்கை இழந்திருக்கின்றன.

ஆனால் தொலைந்த தனது மரப்பாச்சி பொம் மையைத் தேடிக்கொண்டிருக்கிறார், இளங்கோ கிருஷ்ணன். எதற்காக? திடீரென காணாமல் போவது எப்படியென ஒரு கேள்வியைக் கேட்கத்தான் என்று தன் ‘மரப்பாச்சி’ கவிதையில் தன்னை முன் மொழியும் இவரது குரல் நாம் தொலைத்துவிடக் கூடாத ஒரு நவீன கவியின் குரல்.

காயசண்டிகை
இளங்கோ கிருஷ்ணன் கவிதைத்தொகுப்பு
விலை:ரூ.45
வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்
669,கே.பி.சாலை, நாகர்கோவில்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com