Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2009

வட்டங்களுக்கு வெளியே வாழ்க்கை
மதுமிதா

கவிதையை வாசிப்பது எப்படி? ஒரு கவிதை வாசிக்கையில் புரிகிறதா? இல்லையா? கவிதை எழுதுவதென் றால் பாமரர்களுக்கும் புரியும்படி எழுதப்படவேண்டுமா?

மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனக் கவிதை, பின்நவீனத்து வம், ஹைக்கூ, சென்ரியு..... இதில் எம்முறையில் இந்தக் கவிதை எழுதப்பட்டுள்ளது?

ஒரு கவிதையை வாசிக்கும்போது இது போன்று கவிதைகள் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டும், சில கேள்விகளுக்கு பதில் சொல்லப்பட் டும், சில கேள்விகளுக்கு பதில் சொல்லப்படாமலும் காலந்தோறும் கேள்விகளும், பதில்களும் தோன்றிய வண்ணம் இருக்கின்றன.

‘பல சந்தர்ப்பங்களில் இலக்கியம் பயிலும் மாணவர்கள் முடிவாக இந்தக் கவிதை அல்லது நாடகம் என்ன சொல் கிறது என்று கேட்கும்போது அது தன் னுடைய இருப்பைத்தவிர முடிவாக எதுவும் சொல்வதில்லை என்றுதான் சொல்லத் தோன்றும். இலக்கியத்தையும் கலையை யும் அப்படிப் பார்ப்பதற்குத்தான் அவர்கள் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். பாமரர்களுக்கும் புரியவேண்டும் என்ற வாதம் பொய்யானது. ஒருமுறை ஞானக்கூத்தனிடம் உங்கள் கவிதை பாமரனுக்குப் புரியுமா என்று கேட்டபோது அவர் நானும் பாமரன்தான் என்றார். உண்மையில் பாமரனுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. அவன் புரியாத விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. புரியாமை இயல்பானது என்பதை ஏற்கிறான். அது அவனை முன்னே நகர்த்துகிறது. எளிமைப்படுத்திப் புரியவைக்க முயலும் இடைநிலை இலக்கி யவாதிகள்தான் தாங்களே உருவாக்கிக்கொண்ட வரையறை களுக்குள் செயல்படுகிறார்கள். அவை கடந்த எந்த இயக்கத்தை யும் அவர்கள் பொருட்படுத்துவதும் இல்லை, கவனப்படுத்து வதும் இல்லை. நாம் நம்முடைய கலாச்சாரச் சூழலில் நிகழும் பல விஷயங்களின் ஆழ்ந்த சரடுகளையும் நுண்மையான தொடர்புகளையும் தவற விட்டுவிடுகிறோம்.’ -வெளி ரங்கராஜன் தனது ‘சாலை விபத்துகளும், தமிழ்சினிமாவும்’ என்னும் கட்டுரையில் இப்படிச் சொல்லி இருப்பார்.

‘அந்தர மீன்’ கவிதைத்தொகுப்பு கவிதைகள் வாசிக்கும்போது தெரிந்த வட்டங்கள் கடந்து புரிதல், புரிதலின்மை எனும் இந்நினைவுச் சுழலுக்குள் விசிறி எறியப்படுதல் நிகழ்கிறது.

ஒரு கவிதையில் எழுதி முடிக்கப்படாத ஒரு உணர்வு இன்னொரு கவிதையில் தொடர்வதாய்த் தெரிகிறது. மறுபடி எழுதுகிறார். இன்னும் சொல்ல வேண்டியது இருக்கிறது, இன்னும் தொடர்கிறார். தொடர் விளைவாய் மற்றுமொரு கவிதை உருப்பெறுகிறது.

‘இருவழிப் பாதை’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை. இக்கவிதை ஒரு நிகழ்வு. இந்நிகழ்வு சொல்லப்படுகையில் ஒரு வாகன ஓட்டிக்கும் ஆட்டுக்குட்டிகளை மேய்க்கும் ஒரு சிறுவனுக்குமான உரையாடலாய் கவிதை விரிகிறது. கடைசி இருவரிகள் என்ன சொல்லவருகின் றன என்பதை கீழே காணப்படும் கவிதையில் பார்க்கலாம்.

எதிரே கண்ட இருவழிப்பாதையில் எதில் செல்வதென ஆடுமேய்க்கும் சிறுவனைக் கேட்டபோது, ஒரு பாதை தடங்கலானதால் மறுபாதையில் போக லாமென்கிறான். ஒரு எச்சரிக்கைப் பலகை தேவையெனப்பட்டது. என்றா லும் ஆடுகள் அதில் நுழைந்துவிடுவது இயல்பானது என்றவன் அந்தப் பாதையைப் புற்களும் தளிர்களும் மூடிக்கொண்டுவிட்டதாகச் சொல்கிறான்.

‘தார்ச்சாலையில் நகர்கிறது எனது வாகனம்/ கதவில் ஆடுகள் உரசும் சத்தம்/ சக்கரங்களுக்கடியில் தாவரச் சாறு கசியும் மணம்.’- கடைசி வரி களில் மிளிர்கிறது கவிதை. காட்சிப் படிமமாக விரிகிறது கவிதை.

நேஷனல் சர்க்கஸ் கவிதை. இதில் காட்டின் ராஜாவான சிங்கம், சர்க்கஸ் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட காரணத்தால் எஜமானனுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் விதம், அவனின் ஓங்கிய குட்டுக்கு பரிதாபமாய் நடுங்கிக் கிடக்கும் அந்த சிங்கம் இதயம் நடுங்க முனகும் காட்சியினைச் சொல் சித்திரமாய் அளித்திருக்கிறார்.

‘அவன் சிங்கத்தின் தலையில் / ஓங்கிக் குட்டும்போது/ அதன் கருமணிகள் ஒருகணம்/ வெண்மையாகி மீள்கிறது’ என ஆரம்பிக்கிறார். கடைசி வரிகளின் அழுத்தம் சொல்கிறது அது வும் மனிதனைப்போல் வயிற்றுக்காக வாழ்வதை. தலையில் குட்டி, அடித்து மிரட்டி, வளையத்தைத் தூக்கிக் காட்டுகிறான்.

‘சட்டெனத் தாவிக் கச்சிதமாக நுழைந்து எதிர் மேசையில் இடறி/ ஒருவழியாகச் சமாளித்து நிற்கிறது சிங்கம்/ வாயில் கொடுத்த இறைச்சித் துண்டுடன்/ அது திரும்பிச் செல்லும் போது / கரகோஷம் விண்ணில் எழும்புகிறது’- இதை வாசிக் கும்போது இதையட்டி மனிதருடன் சம்பந்தப் பட்ட வேறு ஏதேனும் நிகழ்வேதும் நினைவுக்கு வந்தால் இக்கவிதை எழுதியவாறே அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

எதிராளிக்குக் காட்டிக்கொடுக்கும் துரோகத்தை வரிசைப்படுத் துகிறார் ‘காட்டிக்கொடுத்தல்’ கவிதையில். இதில் நிலத்தில் உள்ள மலர்களின் பெயர்கள் முதலில் சொல்லப்படுகிறது. இதில் ஆரம்பித்து பிறகு அழகிய நீரூற்று, காய்கனி, பயிர், கலாச்சாரம், அதன் பாடல், இவை சொல்லப்படும்போது அதை ரசிப்பவர் வாழ்வின் உன்னதத்தை, அதன் அமைதி பற்றிய தத்துவத்தை தொலைதூர நிலவொளியாக அனுபவித்து மகிழலாம். பிறகு அந்த நீரூற்றினை விலைப்படுத்தியவர்கள், தானியங்களை சுவீகரித்து, உடல்களை கிடங்குகளில் சமைய வைத்தவர்கள், மலர்களைச் சொன்னவனுக்கு நோய்கள் பரிச ளித்தது, ஆடைகளைப் பறித்தவர்களை அடையாளம் காட்ட வேண்டும். அவர்களின் பாடல்களை இசைத்தட்டுகளாக்கி நடனமாடிப் பருகும் மதுவில், அவர்களின் உதிரத்தை உறிஞ்சும் நிகழ்விற்கு சாட்சியாக இல்லையென்றால் மிகக் கொடுமை; அதைவிடவும் கொடுமை ‘ஒரு தொலைதூர நிலத்தை உங்களிடம் காட்டிக்கொடுத்தது’ என முடிக்கிறார்.

‘அத்துவான வெளி’ கவிதை காட்டும் வெளி அபூர்வமானது. குதிரை வேடமிட்டுத் திரியும் பொய்க்காலுடைய கூத்துக்கார னிடமிருந்து ஆரம்பிக்கும் கவிதை வரிகள் சாமியாடிய சாமி களை சாமியாடச் செய்துவிட்டு இவ்விதம் முடிக்கிறார். ‘புள்ள வரம் கொடுத்த சாமிக்கோ/ கூத்தாடி கழட்டிவச்ச/ பொய்க் கால்கள்/ முத்துப்பேச்சிக்கும் மாரியாத்தாளுக்கும்/ டைம் கீப்பர் மட்டும்தான்.

குழந்தைகளுக்கும் இரயிலுக்குமான நேசம் எல்லைகளைக் கடந்தது. இரயில் பெட்டிகளை எண்ணுதல், நாணயங்களை தண்டவாளத்தில் வைத்து இரயில் வந்து செல்லும்வரை காத்தி ருத்தல், கையசைத்தல் என எந்தக் குழந்தைக்குமே ஏதோ ஒரு தொடர்பு இரயிலோடு இருந்துகொண்டுதான் இருக்கும். இதைத் தொடர்புபடுத்திவரும் கவிதையில் தடம் புரண்டு எனும் இரயில் விபத்துக்கே உரித்தான சொல்லை குழந்தை களின் வாழ்க்கை தடம்புரள்வதோடு தொடர்புபடுத்தித் தருகி றார். ‘நெடுந்தூரங்களைக் கடக்கவும் / சுமைகளைச் சுமக்கவும் பழகும் அவர்கள் / தடம்புரண்டு விழும்போது/ கைகாட்டி மரங்கள் மௌனமடைகின்றன / காலம் தன் கைகளை அசைக் கிறது’- ‘கைகாட்டி மரங்கள்’ குழந்தைக்கும் இரயிலுக்குமான நேசம் குறித்த சிறந்த கவிதை.

‘ஆதிமூலம்’ கவிதையில் கதைசொல்லி, கவிஞர், எழுத்தாளர் என குறிப்பிட்டு தகழி, சீத்தலைச் சாத்தனார், வள்ளத்தோள் எழுத்தச்சன், வள்ளுவர், தொல்கப்பியன் என சொல்லிக் கொண்டு வந்து ஒவ்வொரு எழுத்தாளரின் பெயர்களாய் நினைவுகூர்கிறார். என் வரலாறு எங்கே பொருந்துகிறது என்ப தோடு தொடர்ந்து நான் எந்த இனக்குழு, எந்த அரசியல் பேசு வது, யாரோடு இணைவது, எனக்கு என்ன உறவு முறை என தொடர்கேள்விகள் அவருள் எழுகிறது. முடிக்கையில் எந்த வகுப்பு நான், எனது பிள்ளைக்காலம் போயிற்று என சொல்லி வருகையில் கடைசிவரிகள் கவித்துவத்துடன் ‘எனது பிள்ளை யின் காலத்தில் ஒரு தந்தையை எங்ஙனம் சொல்லிக் காட்டு வான்.’ என பல கேள்விகளை உள்ளடக்கி வெளிப்படுகிறது.

அரசுப்பணிபுரிவோருக்கு நிரந்திரமாக ஒரே இடத்தில் வசிக் கும் வாய்ப்பு கிடைப்பதேயில்லை. பணிமாற்றம் 3 அல்லது 5 வருடங்களுக்கு ஒருமுறையோ அல்லது ஒரு வருடத் தில் இட மாற்றம் செல்லவிருக்கும் ஏதேனும் ஒரு பணியில் இருப்பவ ருக்கென பிரத்யேக சிரமங்கள் இருக்கும். பணி புரியும் இடத்து மக்களை விட்டுச்செல்லுதல், பழக்கமான இடம்விட்டு செல் கையில் வீட்டுச்சாமான்கள் அனைத்தையும் காலி செய்து அடுக்கி எடுத்துச் சென்று, சென்று சேர்ந்தவுடன் மறுபடியும் பிரித்து அடுக்கி புதுவீட்டினை தங்கும் நிலைக்கு கொண்டு வர வேண்டும். சுற்றிலும் உள்ள மக்களுடன் ஒத்துப்போகும் சூழல் அமையவேண்டும். இதில் முக்கியம் குழந்தைகள் இருந்தால் பள்ளியில் சேர்ப்பது மிகவும் சிரமம் தரும் காரியம். அதிலும் முக்கியம் குழந்தைகளின் மனநலனைப் பேணிக் காப்பது. இதோ வீடுமாற்றல் நிகழ்ச்சியைக் கவிதைப் படுத்தியவர் சொல்கிறார் தமது ‘இடம் மாறும் பறவைகள்’ கவிதையில் மனைவி பற்றற்றவள் போல் சாமான்களை மூட்டை கட்டு கிறாள்; குழந்தை அவள் கைகளுக்குள் ஒடுங்கிக் கொள்கிறான்; அவனறிந்த வெளி, பள்ளி நண்பர்கள், வாகன ஓட்டிகள், தோட்டத்து அணில்கள் இவற்றுடனான பரிச்சயம் விடுத்து. இதுவே அவருக்கு முக்கிய விஷயமாகப்படுகிறது.

‘அவனது பரிச்சயத்தை வேரோடு அகற்றி/ நான் இடம் மாறும் போது / அவனது கனவுகளில் / உறைந்திருக்கும் ஓவியம் எவ்வாறு/ வண்ணமிழந்து கசியும் என்பதுதான் திடுக்கிடலாய் இருக்கிறது’- இடமாற்றப் பணிகளுக்கிடையேயான மகனின் மீதான தந்தையின் அக்கறை வெளிப்படும் நேர்த்தி இது.

உயர்பள்ளிக் கல்வியில் கணித பாடத்திட்டத்தில் மாடுமேயும் பரப்பு எப்படி கணக்கிடப்படவேண்டும் என்பது ஒரு பாடமாக இருக்கும். ஒரு பெரிய மைதானத்தில் ஓரிடத்தில் கயிற்றால் கட்டப்பட்டு இருக்கும் மாடு எந்த இடத்திலிருந்து எந்த இடம் வரை புல் மேயும். அந்த கயிற்றின் ஆரம், மைதானத்தின் விட்டம், என அளவுகள் கணக்கிடப்பட்டு அந்த மாடு மேயும் அளவின் பரப்பு கணக்கிடப்படும். ‘மாடுமேயும் பரப்பு’ கவிதையில் பல வட்டங்கள் குறித்த குறிப்பினை எடுத்து வைக்கும் கவிஞர் மாடு வட்டமாய் புல்மேய்வது,

வட்டத்திற்கு வெளியே பசியினை மறந்தது, புற்களின் எளிமை அதன் வட்டம், மாட்டின் வால் வரைந்தவட்டம், அதன் கண்களில் அகப்பட்ட வட்டம் என வட்டங்களாக முதலில் சொல்கிறார். தொடர்ந்து அது வெளியினை எவ்வாறு கடக் கிறது என்பதை எடுத்துத்துரைத்து இவ்வரிகளில் முடிக்கிறார்,

‘மாடு வெளி நோக்கி அவிழ்த்துக்கொண்டது/ மையமும் அதன் கயிறும் கிடக்கிறது/ இடையே ஒரு வாழ்வு அல்லது ஒரு பசி/ அல்லது ஒரு கழிவு அல்லது ஒரு உற்பத்தி/ அல்லது ஒரு விலங்கு/ செயல் மையமாகும்போது/ எல்லாம் நடக்கிறது/ வெளியை மாடு கடக்கிறது’ -வட்டங்களுக்கு வெளியேயான வாழ்க்கையை மொத்த உயிர்களுக்கும் பொதுவாக்கிப் பார்க்கும் பரப்பினை இக்கவிதை அளிக்கிறது.

இத்தொகுப்பில் தேவேந்திரபூபதியின் கவிதைகளில் சொற்கள் நடனமாடுகின்றன; கவிதைகள் நுண்ணிய உணர்வுகளை முன் னெடுத்துவைக்கின்றன; தொடர்ச்சியோடும் தொடர்ச்சியின்றி யும் கருத்துகள் முன்பின்னாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன; கட்டுகள் உடைக்கப்பட்டும் மறைபொருளாகவும் கோர்க்கப் பட்டுள்ளன; பிரகடனமாகச் சொல்லப்படாது நேரடியாகச் சொல்லப்படுகையிலேயே சொற்களுக்கிடையே பொருள் கொள்ளுமாறும் சொல்லப்பட்டிருக்கின்றன; வரிகளுக்கிடை யில் எதையோ நினைவுகூறச் செய்கிறார்; நிகழ்வுகளின் கதையை ஒரு குடுவைக்குள் இருவிதமாக இணைத்துப் போட்டு குலுக்கி எடுத்து தேர்ந்ததொரு வரிசையில் அள்ளி அடுக்கித் தருகிறார்; எதையோ தேடச்செய்கிறார்; கவிதை நெய்கிறார், அல்லது கவிதை செய்கிறார் என்பது தெரிகிறது.

சில கவிதைகளுக்கிடையில் சிலவரிகள் கவித்துவமாக முன் வந்து நிற்கின்றன. நூலின் தலைப்பாகவே வந்த அந்தரமீன் கவிதையைப் பார்க்கலாம். காட்சிப்படுத்துகிறார். பல கவிதை களில் காட்சிப்படுத்தும் பாணி தனித்துவமாகத் தெரிகிறது.

‘வெளியும் காலமும் அதிர / நீருக்கு வெளியே துள்ளியது மீன்

நாயை அழைத்துச் சென்றவன்/ பனியில் உறைந்து தூங்கும் மீன்களை வியக்கிறான்/.... காற்று விளையாடும் தூரம்/ துள்ளியமீன் அந்தரத்தில்/ வாழ்கிறது’ (அந்தர மீன்)

‘பறவைக்குக் காத்திருந்தேன்/காதலியின் சொல் ஒலிக்கும் /

புல்வெளியில் ஒரு செல்போன்/அதன் திரையில்/மஞ்சள் நிற வண்ணத்திகள்’ (புல்வெளியில் ஒரு செல்போன்)-

‘இதற்கு முன் என் காதலை/ பத்திரப்படுத்தியவளிடம்/ எனது கபடமின்மையைச் சேகரித்தவளிடம்/மந்திரவாதி யின் உயிர் இருக்கும்/ கிளிக்குஞ்சைப் போல் /எனது அன்பை விட்டிருக்கிறேன்’ (பறவைகளின் பாடலுக்குத் திரும்புவது)

‘மந்திரவாதியின் உயிர் இருக்கும்/ கிளிக்குஞ்சைப் போல்/ எனது அன்பை விட்டிருக்கிறேன்’

தொலைபேசியில்லாமல் வாழ்க்கையில்லை என்பதைக் கடந்து செல் இல்லாமல் வாழ்க்கை இல்லை எனும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இதில் ஓய்வு இடைவெளியில்லாத தொடர் தொந்தரவு வேறு.

‘எதிரே உருவமற்று என்னை ஆணையிடும்/குரல்களுக்கு முன்னால் எனது எண்/ வெளிகளின் இணைப்பற்ற இடைவெளிகளில்/ மௌனமாய் பதுங்குகிறது’ (எண் உடல்) - எண்களாலான உடலாகத் தன்னைப்பார்க்கும் போது, டவர் எட்டாத வெளிகளில் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கும்போது மட்டுமே ஓய்வு கிடைக்கு மென்பதை ‘வெளிகளின் இணைப்பற்ற இடைவெளி களில் மௌனமாய் பதுங்குகிறது’ என சொல்லியிருக்க வேண்டும்.

மீதி இருக்கும் அத்தனை காதல்கவிதைகளிலும் முத்த மும், தொலைபேசியும், கவிதைப் பரிமாறலுக்கான காத்திருப்பும் என காதல், காத்திருத்தலின் அவஸ்தை, இணைந்திருத்தலின் அவசியம் என காதலுக்கான இலக்கணங்கள் தவறாது பதிவு செய்திருக்கிறார்.

வெயிலின் உக்கிரம், அதன் தீர்க்கத்தின் வெளிப் பாடினூடாக நிதர்சனத்தை முன்வைக்கிறார். இதுவும் ஒரு பயணக்கவிதையே. காட்சிப்படுத்துதலும் குறும் படம் காணும் மனநிலையைத் தருகிறது.

‘இந்தக் கோடையில் / வாசல் வாழைகளை /எருமைக் கன்றுகள் / தாகத்திற்காகக் கடிக்கின்றன/..../வறண்ட நீர்நிலைகளுக்கு அப்பால் /புறநகர்ப் புல்வெளிகளில்/ விட்டில் கொத்தும் நாரைகள்/எனது தலைமுறையின் கோடை /முன்னெப்போதையும்விட வீரியமானது/அது கடவுள்களைக் கொன்றுவிட்டு/ நம்பிக்கைகளைப் பெரிதும் அகலமாக்கி யிருக்கிறது/ எனது குடிநீரை / பத்திரப்படுத்திக்கொண்டு கோடையின் ஊடாக/ பயணித்துக்கொண்டிருக்கிறேன்.’ (எனது தலைமுறையின் கோடை).

சில கவிதைகள் புரிந்ததுபோல் இருக்கின்றன. சில புரியாததுபோல் இருக்கின்றன. இன்னும் சில புரிந்தும் புரியாததுபோல் இருக்கின்றன. புரிதல், புரிதலின்மை எனும் வட்டங்களுக்கு வெளியே பயணிக்கிறது இவரது கவிதைகள்.

அந்தரமீன்
தேவேந்திர பூபதியின் கவிதைத் தொகுப்பு
வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்
669,கே.பி.சாலை, நாகர்கோவில்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com