Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2009

அனோனிமா: முகம் மறைத்தவள்- பகுதி:2
தேவா

21 ஏப்ரல் 1945

சனி இரவு 2மணி.

குண்டுகள் சுவர்களை அதிர வைத்தன. பேனாவைப் பிடித்திருந்த என் விரல் கள் நடுங்கின. ஏதோ பாரமான வேலை செய்ததுபோல் வியர்வை உடலெங்கும் வழிந்தது. சிறிது நேரத் திற்கு முன்புதான் தடித்த பாண் துண்டில் பட்டர் தடவிச் சாப்பிட் டேன். முதலில் என் வீட்டில் குண்டு விழுந்தது. பின்பு மலைகளே அதிரத் தொடங்கின. அன்றிலிருந்து சாவின் பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. எப்போதும் ஒரேமாதிரியான அறிகுறி கள்; முதலில் தலை வியர்க்கும் முதுகுத்தண்டு சில்லிடும், முரசுகள் கழன்று விடுவதுபோல் நடுங்கும், இதயம் ஏறுகதியிலேயே துடித்துக் கொண்டிருக்கும், கண்கள் உருளத் தொடங்கும், மூளை தன்னைச் சுற்றியுள்ள பாய்பொருளை விராண்டும், எண்ணங்கள் சுழன்றடிக்கும்.

கட்டளையிட்டதுபோல் , காய்ச்ச லில் வியர்ப்பதுபோல் வியர்வை ஆறாக ஓடும். எல்லோரும் சிரித் தார்கள், சத்தமாகப் பேசினார்கள் (பகடிக்கதைகளை பகிர்ந்து கொண்டார்கள்). இளம்பெண் பெகம் பத்திரிகையை எடுத்து தலைவரின் பிறந்தநாளிற்கு கொயபெல்ஸ் ஆற்றிய உரையை வாசித்தாள் (இந்தத் திகதியைப் பலர் மறந்தே விட்டிருந் தனர்).வலு அழுத்தமான உச்சரிப்புட னும் குரலில் கோபம் தெறிக்க என் றுமே கேட்டிராத புதியதொரு குரலில் வாசித்தாள். 'பொன்நிறத் தானியங்கள் விளைநிலங்களில் இருந்து... சுதந்திர மாக வாழும் மக்கள்...' யோசனை யுடன் பேர்லின் வாசி ஒருவர் சொன்னார் 'முன்பு அப்படிதான் இருந்தது'. உரத்தக்குரல் யார் காதையும் சென்றடையாச் செய்தி.

இரவு மூன்று மணி. நிலவறை தூக்கத் தில் வழிந்தது. முதலில் எச்சரிக்கை பின்பு சைரன் ஒலி ஆனால் குண்டுகள் விழவில்லை. நான் எழுதத் தொடங்கி னேன். எழுதுவது எனது சூழலை மறக்கச் செய்தது. அந்த உணர்வே நிம்மதியாக இருந்தது. கெயர்ட் கட்டாயம் இதை வாசிக்க வேண்டும் அவன் திரும்பி வந்தால் - நம்பிக்கை இழக்காதே எதையும் நடக்க முதல் சபிக்கக்கூடாது.

இளைஞனைப்போல் தோற்றம் கொண்ட இளம்பெண்ணொருத்தி என் அருகே வந்து அமர்ந்தாள். நீங்கள் என்ன எழுதுகின்றீர்கள் எனக் கேட் டாள். 'பெரிதாக ஒன்றையும் எழுத வில்லை. தனிப்பட்ட எண்ணங்களை எழுதுகின்றேன். எதையாவது செய்தால் நேரம் போகுமல்லவா அதற்காகதான்.'

முதல் குண்டுவீச்சு மழைக்குப்பின் சீகிஸ் முண்ட் வந்து சேர்ந்தார். வயதா னவர் முதல் குண்டுவீச்சின் போது தனது வீட்டின் நிலவறைக்குள் ஒளிந்து இருந்துவிட்டு இப்போது வந்திருக்கவேண்டும். வெற்றி பெறு வோம் என்று அவர் எப்போ துமே சொல்வதால் அவர் பெயரே அதுவாகிவிட்டது.

எங்கள் படைகள் எங்களைக் காப்பாற் றுவார்கள், நாங்கள் இப்போரை வெல்வது உறுதி ''ஜென்னர்'' (ஹிட்ல ருக்கு நாங்கள் வைத்த புதுப்பெயர்) என்ன செய்கின்றார் என்பதை தெரிந் துதான் செய்கின்றார். ஆகவே வெற்றி எமக்குத்தான் என்று சொல்லிக் கொண்டே சுற்றி இருப்பவர்களைப் பார்த்தார். முன்பே ஒரு விவாதத்தில் அவரின் கருத்துடன் மாறுபட்டவர்கள் அவருடன் பேசுவதையே நிறுத்திவிட் டனர். பைத்தியக்காரருடன் யாராவது விவாதிப்பார்களா? போரியேஸ் பெண் மாத்திரம் தனது இறுகக் கடித்த பொய்ப் பல்லினூடு பாம்பு சீறுவதுபோல் ''ஜென்னர்'' எனக் கடூரமாக உச்சரித்தாள்.

காலை 9 மணி (இப்போது எங்கேயாவது கடிகாரம் தென்பட்டால் நேரம் பார்ப்போம் இல்லாவிட்டால் அனுமானந்தான்). எனது மாடியறை மழை பொழிந்து கொண்டிருந்தது, மூடமாக வெளிச் சமே இல்லை, யன்னல் பலகை யில் வைத்து நின்று கொண்டே எழுதினேன். மூன்று மணிக்குச் சிறிது பிந்தி ஓர் அறிவித்தல், காஸ் நின்றுவிடும். உடைகளையும் சப்பாத்தையும் களைந்துவிட்டுப் படுக்கை யில் விழுந்தேன், ஐந்து மணிநேரம் ஆழ்ந்த தூக்கம்.

என்னிடம் எவ்வளவு பணமுள்ள தென எண்ணிப் பார்த்தேன் 452 மார்க்குகள். இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன். எங்களுக்கு, வாங்கக் கூடிய பொருட்களே மிகக்குறைவாகத் தான் கிடைத்தன. அதுவும் சில பெனிக்குகளுக்குள்ளேயே வாங்கி விட முடியும். அது மட்டு மல்லாது எனது வங்கிக்கணக்கில் வேறு ஆயிரம் மார்க்குகள் (எப்போதோ உலகைச் சுற்றிப் பார்ப்பதற்காக நான் சேமித்தது). சிலர் வங்கி திறந்திருந்தால் தங்கள் முழுப்பணத்தையும் எடுத்துவிடுவார்கள். என்ன தேவைக்கு எடுக்கின்றார் களோ? நாங்கள் அவசர அவசரமாக வங்கியை காலி செய்தால் மார்க்கின் மதிப்பு சரியாதா? பணம், காகிதப் பணம் அதற்கு கற்பனை மதிப்பே தவிர உண்மையான மதிப்பே இல்லை. ஆட்சி பறிபோனால் பணத்திற்கு என்ன மதிப்பு? பணத்தை கையில் வைத்து எந்த உணர்வுமின்றி ஒவ்வொருத் தாளாய் பார்த்தேன். ஞாபகத்தின் சாட்சியாக இப்பணம் மாறக்கூடும். கடந்தகாலத்தின் சாட்சிப்படங்கள். வெற்றிகொள்பவன் தன் பணத்தைக் கொண்டு வந்து எங்களைத் தண்டிப்பானென்றே நான் நினைக்கிறேன் அல்லது இராணுவப் பணம் புழக்கத்திற்கு வரலாம். ஒரு கரண்டி சூப்பிற்காக வேலை செய்ய சபிக்கப்பட்டவர்களாக எங்களை மாற்றாமல் விட்டால்போதும்.

மதியம் நிற்காது பெய்யும் மழை, பார்க் வீதிக்கு நடந்து சென்று இன்னு மொரு 'படம் போட்ட காகிதக் கட்டை'' பெற்றுக் கொண்டேன். பதிப்பக உரிமையாளர் எனது கடைசி மாதச்சம்பளத்தைத் தந்துவிட்டு 'விடு முறை' எனச் சொன்னார். பதிப்பகம் காற்றில் கரைந்து போயிற்று. வேலை யாட்களைத் தேடி யாரும் வேலைப் பதிவு அலுவலகங்களை அணுகுவ தில்லை. முடிவாக நாங்கள் எல்லோ ருமே அவரவர் பொறுப்பில் விடப் பட்டோம்.

அரச நிர்வாகமெல்லாம் குழப்பமற்ற காலங்களில் மாத்திரம் தான் நடை முறையில் இருக்கும் போலும். குண்டுகள் வெடிக்கத் தொடங்கிய துமே எல்லா அரச அலுவலகங்களும் காணாமல் போய்விட்டன (இன்று அமைதியாகதான் இருக்கின்றது பயமுறுத்தும் அமைதி). எங்களை யாரும் இப்போது ஆளவில்லை. ஆனால் ஏதோ ஒரு வகை ஒழுங்கு எல்லாவிடத்திலும் எல்லா நிலவறைகளிலும் தானா கவே உருவாகியிருந்தது. குண்டுவீச்சில் காயமுற்றோர், வீடு இழந்தோர், அதிர்ச்சிக்கு உள்ளானோர் எல்லோருமே ஓர் ஒழுங்குடன் அந்த இடத்தை விட்டு அகன்று போனார் கள் என்பதை நான் அனுபவத் திலேயே பார்த்தேன். எங்கள் நிலவறையில்கூட கட்டளைகள், அதன்படி நடப் போரென்ற அதிகாரத் தின் ஆன்மா உயிருடன்தான் இருக் கிறது. மனிதரி னுள் இந்தக்குணம் இருக்கின்றது போலும். கற்காலத்திலேயே மனித இனம் இவ்வாறுதான் வாழ்ந்ததோ! கூட்டமாக வாழும் மிருகங்களின் உய்த்துணர்வு போன்ற மனோநிலை, கூட்டத்தலைவன் ஆணாக இருக்கவேண்டும். ஆனால் எங்கள் நிலவறையில் பெண்கள் வழிநடத்துபவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். செல்வி பேகன் அப்படி யான பெண். நான் அவ்வா றான பெண் அல்ல. கம்பேர்க் பெண் அமைதியானவள். இதுவும் எனது பழைய நிலவறை அல்லவே. பழைய நிலவறையில் உறுமிக் கொண்டே தன் பகுதியை ஆள்கின்ற ஒரு மேஜர் இருந்தார். அவர் ஆணையோ பெண்ணையோ தன் பக்கம் வரவிடு வதில்லை. இவரிடமிருந்து தப்ப நான் ஒரு மூலையை தெரிந்தெடுத்து அங்கேயே முடங்கிக் கிடப்பேன். ஆனால் தலைவன் ஆணைனயிட்டால் மறுப்பேதுமின்றி அதனை நிறைவேற்றுவேன்.

சம்பளம் வாங்கிக்கொண்டு திரும்பி வரும்போது பொதுப் போக்குவரத்து நிறுத்தம் பக்கமாக நடந்து வந்தேன். வண்டியில் நான் ஏறமுடியாது என்னி டம் தான் அந்த மூன்றாம் வகைப் பயணச்சீட்டு இல்லையே. வண்டி ஏறத் தாழ வெறுமையாகவே போனது. வண்டிக்குள் இருப்பவர்களை நான் எண்ணிப்பாத்தேன். நூற்றுக்கணக்கான வர்கள் மழையில் நனைந்து கொண்டே நடந்துகொண்டிருந்தனர். வண்டி ஓடு கிறது எங்களை ஏற்றிச்செல்லலாம் . இல்லை சட்ட ஒழுங்கு நிலை நிறுத்தப்பட வேண்டும். எங்களினுள் அது ஆழமாகவே பதிந்துள்ளது. நங்கள் அதன்படி ஒழுகுகின்றோம்.

பேக்கரியில் பாண் வாங்கினேன். இது வரை பாண் ஒழுங்கா கவே கிடைக்கிறது. இன்னும் பயத்தில் மக்கள் பாண்களை வாங்கிக் குவிக்க வில்லை. பின் அனு மதி அட்டையுடன் பொருள் வாங்கும் கடைக்குச் சென்றேன். இன் றைய தினம் எனக்கு வழங்கப்பட்ட எழுத்திற்கு வாங்கும் நாள். எனது அட்டையில் 75-77 இடை வெளிகளை நான் பதிவுசெய்து வாங்க வேண்டும். ஆச்சரி யம் வெகுவிரைவாகவே என்னால் அலுவலை முடிக்க முடிந்தது. வழமையாக அட் டையைப் பார்க்க பலர் இருப் பார்கள். இன்று இரண்டுபேர் மட்டுமே. எனது அட்டையை அவர்கள் பார்க்கவே இல்லை, இயந்திரத்தினுள் அட்டையைச் செலுத்தி பதிவு செய்து தந்தார்கள். அதுசரி இந்தப் பதிவெல்லாம் எதற்கு? யாருக்குமே தெரியாது ஆனால் எல்லோரும் போவோம் பதிவு செய்வோம் ஏதோ இதில் பெரிய முக்கியத்துவம் இருப்பதுபோல் செய்து கொள்வோம். வெளியே இருந்த அறிவிப்பின்படி 28 ஏப்ரலில் எக்ஸ்-ஸ்சற் வரை விநியோகிக்கப்படும் அதன் பின்பு கடையை மூடிவிடுவார்கள்.

மழையில் ஊறிய வாகனங்கள், முழுதும் நனைந்துபோன கூடாரச் சீலைகள், தாடிகள் நரைத்த, உடை யெல்லாம் அழுக்காகிய முன்ன ரங்கு இராணுவம் நகரத்தின் மையத்தை நோக்கி நகர்ந்துகொண் டிருந்தது. எல்லோருமே வயது முதிர்ந்தவர்கள், இவர்களை முதல்முதலில் இப்போது தான் பார்க்கின்றேன். மின்னல் படை யணி மாதிரி இவர்கள் எனக்குத் தெரியவில்லை.

வழியில் பேராசிரியர் கே.யின் சிதறிய வீட்டின் எச்சம் ஒருபக்கம் குவிந்தி ருக்க கைவிடப்பட்ட அவர் தோட்டத் தினுள் சென்று பூக்களைப் பறித்துக் கொண்டேன். எனது முன்னைய வீட்டு அயலவரான திருமதி கொல்ஸ் சிற்கும் பூக்களின் ஒரு பகுதியை கையில் எடுத்துக் கொண்டேன். நானும் கொல்ஸ்சும் எதிரெதிராக இருந்து கதைத்தோம். கதைத்தோம் என்றால் கத்தினோம் என்றுதான் அர்த்தம். புதிதாகத் தொடங்கிய வேட்டுக்களிற்கு மேலே கத்தா விட்டால் ஒருவர் சொல்வது மற்றவ ருக்கு விளங்காது. உடைந்தக் குரலில் கொல்ஸ் 'பூக்கள் அழகியப் பூக்கள் என்று சொன்னதுமே அவளின் கன்னத்தில் கண்ணீர் வழிய ஆரம்பித் தது, என்மனதும் கலங்கியது. இப்போ தெல்லாம் அழகு மகிழ்வையன்றி வருத்தத்தையே கிளறிவிடுகிறது. மரணம் எங்களைச்சுற்றி எல்லா இடங்களிலும்.

இன்று காலை யோசித்துப் பார்த்தேன் இதுவரை எத்தனை சாவுகளை நான் பார்த்திருப்பேன். முதலில் திரு.ஸ்சேர்மான், அப்போது எனக்கு வயது 5 அவரின் வயது 70. வெண் பட்டின் மேல் வெள்ளித் தலைமுடி யுடன் வளர்த்தப்பட்டிருந்தார். மெழுகுத்திரிகள் எரிய மனித மரியாதையுடனான சூழல். இறப்பு அழகாகத்தான் தெரிந்தது. 1928, கில்டே, கேற்றே என்ற இரு சகோதரிகள் ஒருநாள் முன் இறந்த தங்களது அண்ணன் ஹான்சின் உடலைக் காட்டினார்கள். துணி மூட்டைபோல் சோபாவில் கிடந்தது, துணியால் தாடையைச்சுற்றி தலை யில் கட்டு, முழங்கால்கள் மடிந்து பார்க்க முடியாது. பரிதாபமான அந்த இறப்பு அழகானதாக இருக்கவில்லை. பிறகு இறப்பு வேறொன்றாகத் தெரிந் தது மலர்களுக்கும் செபமாலைக்கும் இடையே நீலம்பாய்ந்த நகங்களாக, பரிசில் வாகனம் மேலேறி இரத்தச் சகதியான கூழாக, மொஸ்கோவில் பனியில் விறைத்துப்போய்.

இறந்தவர்களைக் கண்டுள்ளேன், இறப்பை நான் இதுவரைப் பார்க்க வில்லை. இப்போது செத்து விடுவதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் அது என்னை வீழ்த்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை அவ்வளவாக இல்லை. மயிரிழையில் பல தடவை மரணத்தி டமிருந்து வழுக்கி வந்திருக்கின் றேன். அதனாலேயே மரணம் என்னைச் சிறிது தள்ளி வைத்துள்ளது என்றும் நம்புகின்றேன். அதிகமானோர் மனதில் இந்தமாதிரி உணர்வு இருக்குமென நான் நினைக்கின்றேன். இல்லாவிடில் இவ்வளவு தொகை மரணங்கள் இருந்தும் இவர்கள் எப்படித் தப்பியிருப்பார்கள். மரணத் தின் அச்சுறுத்தலில்தான் வாழ வேண்டுமென்ற உணர்வு வீறு கொள் ளும். குண்டுவீச்சின் சுவாலைகளை விட என் மனதில் வாழ்விற்கானத் தீ பெரிதாகவே எரிகிறது. நான் வாழும் ஒவ்வொரு நாளும் மரணத்தை வெற்றி கொண்ட நாள். இன்னுமொரு தடவை உயிர் தப்பிவிட்டது. விழுந்த வன் எழுந்து நேராக நின்று நிலத்தில் அழுத்தமாகக் காலை ஊன்றுகின்றான். முதலாம் தடவை குண்டுகள் விழுந்த அன்று அறைச்சுவரில் பென்சிலால் லத்தீனில் கிறுக்கி வைத்தேன்.

அப்போது வெளிநாட்டுக்குக் கடிதப் போக்குவரத்து சீராக இருந்தது. ஸ்ரொக்கோமிலிருந்த நண்பனுக்குத் தைரியமூட்டவும் என்னை நானே தயார்படுத்திக் கொள்ளவும் இதை அவனுக்கு எழுதினேன். மேலே கூறிய லத்தின் வரிகள் எங்கள் பிரச்சினையின் தீவிரத்தையும் வெகு ஆழமாகப் பிரதி பலித்தன. இதை எழுதிய பின் சிறு குற்ற உணர்வும் என்னிடம் இருந்தது. நான் ஒரு வளர்ந்தப் பெண், வாழ்க்கையின் கடிவாளங்களைப் பிடிக்கும் வயது, ஒரு சிறுமியைப் போல் இந்த வரிகளில் எல்லாமும் அடங்கிவிட்ட தென சொன்னது வெட்கமாக இருந்தது.

ஞாயிறு 22 ஏப்ரல் 1945

இரவு ஒரு மணி

கட்டிலில் படுத்திருந்தேன். உடைந்த சன்னல் வழி காற்று மென்மையாக வீசிக்கொண்டிருந்தது. இரவு 8 மணி யளவில் திருமதி லேமான் கதவைத் தட்டினாள்.

''கீழே வாருங்களேன் குண்டு வீச்சிற்கான முன் அறிவிப்போ சைரன் அபாய அறிவிப்போ இல்லைத்தானே எல்லோரும் கீழேதான் இருக்கின்றோம் வாருங்கள்''

அடர்ந்த இருள் படர்ந்த மாடிப்படி, மரண பயம் வேறு. தட்டுத் தடுமாறி ஒருமுறை எனது சப்பாத்தின் குதிப் பகுதி மட்டும் படியில் சிக்கி நிலைகுலைந்து இதயம் அடிக்க கைப்பிடி பலகையை கையால் தடவித் தடவி கால்கள் நடுக்கத்துடன் நில வறைக் கதவருகே வந்து நின்றேன்.

நிலவறையில் கலவரம் வேறு. யார் யாரிடம் என்னென்ன இருக்கின்றதோ போர்வைகள், மெத்தைகள், சாய்வு நாற்காலிகள், தலையணைகள் என பரப்பி நித்திரைக்கு இடம்பிடித்து வைத்திருந்தனர். இவைகளைக் கடந்து என் மூலைக்குள் போவதற்குள் நான் களைத்தே போய்விட்டேன். விமான நிலையத்திலிருந்து சிக்னல் கிடைக் காததால் ரேடியோவிற்கு உயிரில்லை, பெற்றோல்விளக்கு மின்னி மின்னி எரிந்தது, எக்கச்சக்கமான குண்டுகள் விழுந்தன பின்பு அமைதி. சீகிஸ்ட் முண்ட் எப்போதும்போல் தேசியக் கொடியை வாயால் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். கார்டின்சிமித் பேர்ன விலும் சோசனிலும் இரசியர்கள் வந்திருக்கலாமென முணுமுணுத்தார். சீகிஸ்ட்முண்ட் அதை மறுத்து வெகு விரைவில் போரின் திசை திரும்பு மென்றார். மணிக்கணக்காக நாங்கள் நிலவறைக்குள் அடைபட்டுக் கிடந் தோம். வெளியே ஆட்லறிகள் தீவிர மான குண்டெறி விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றின் அதிரும் சத்தம் அண்மை யிலும் தூரத்திலும் மாறிமாறிக் கேட்டது. ''உங்களது நான்காவது மாடிக்குப் போகவேண்டாம் என பார்மசிஸ்டின் மனைவி என்னை எச்சரித்தாள். தனது முதலாவது மாடி வீட்டில் நான் இளைப்பாற இடம் தரு வதாகவும் சொன்னாள். பின்கட்டுப் படியால் மேலேறி வந்தோம் ( முன்பு வீட்டுப் பணியாளர் பொருட்களை விநியோகிப்போருக் கான மாடிப்படி ) இப்படிக்கட்டுகள் மிகவும் குறுகிய தாகவும் வளைந்து வளைந்தும் போகும். உடைந்த கண்ணாடித் துண்டுகள் பரவிக் கிடந் தன, ஓட்டை களூடு காற்று விசில் அடித்தது. சமையலறைக்குப் பக்கத் தில் இரண்டுமணி நேர நித்திரை. நள்ளிர வில் மீண்டும் குண்டுமழை. மீண்டும் நிலவறைக்குத் தப்பி ஓட்டம். நேரம் நகர மறுத்த இரவு. இதனைத் தொடர்ந்து எழுத முடியாதளவு களைப்பு...

காலை 10மணிக்கு மீண்டும் எனது மாடி அறையில். அதிகாலை நான்கு மணிவரை நிலவறையில் அடை பட்டுக்கிடந்த நான் தனியே மீண்டும் என் வீட்டிற்கு வந்தேன். எப்போது அணைந்துபோகுமென்று தெரியாத காஸ் அடுப்பில் சூப்பைச் சூடாக்கி உருளைக்கிழங்கைச் சீவி கடைசி முட் டையையும் அவித்தேன். இப்போது திரவச்சாப்பாட்டைத்தான் அதிகம் சாப்பிடுகின்றேன். மிகுதியாக இருந்த கொலோனைத் தெளித்துக் கொண் டேன். எவ்வளவு விடயங்களை கடைசிமுறையாகச் செய்வது என்பது வினோதமானது. கடைசிமுறை என்பது காலவரையறை, நீண்ட காலம், எல்லையில்லாத என்றெல் லாம் பொருள்படும். எங்கிருந்து எனக்கு இன்னொரு முட்டை கிடைக்கப்போகிறது? எங்கிருந்து கொலோன்? முன்பெல் லாம் இவை சாதாரண சவுகரியங்கள். வாழ்வின் யின் சுகங்கள். களைப்பில் உடுப்பு டனே படுக்கையில் விழுந்தேன். அமைதியின்றி கனவுகளுடன் புரண்டு விட்டு சாப்பாட்டிற்கு ஏதாகுதல் கிடைக்கின்றதா எனத் தேடப் போனேன்...

மாலை இரண்டிற்கு மீண்டும் வீடு. வெளியே இடைவிடாத குண்டுமழை. பத்திரிகை வரவில்லை. பத்திரிகை வராவிட்டாலும் நேரம் தவறாது மக்கள் கடை வாசல்களில் கூடுவார் கள். ஒருபக்கப் பத்திரிகைத் துண்டுப் பிரசுரமாவது கிடைக்குமா என்ற நப்பாசை. எதுவும் இல்லை. வாய் மொழிச் செய்திதான் கிடைக்கும். எல்லோரும் தங்கள் பங்கிற்கு கதைத்து விட்டுப் போவார்கள்.

குறிப்பிட்ட நாட்களுக்கான உணவை முன்கூட்டியேத் தருவதாக அறிவித்தி ருந்தார்கள். இறைச்சி, பதனிட்ட இறைச்சி, சமையல்சாமான்கள், சீனி, ரின்னில் அடைத்த உணவுகள், கோப்பி எனப் பட்டியல். நீண்ட வரிசையில் நுழைந்து இரண்டுமணி நேரம் மழையில் நனைந்ததற்கு 250 கிராம் தானியம், 250கிராம் உலர்ந்த ஓட்ஸ், 2 இராத்தல் சீனி,100கிராம் சிக்கரிக் கோப்பி, ஒரு ரின் மரக்கறி கிடைத்தது. இன்னும் இறைச்சி, பதனிட்ட இறைச்சி, கோப்பிக் கொட்டை வாங்கியாக வேண்டும். இறைச்சிக்கடையில் ஒரே சனக்கூட்டம். கடையின் இரு பக்கங்களிலும் நான்கு வரிசைகள், இடைவிடாத மழை வேறு. எனது வரிசையில் பரபரப்புச் செய்திகள் பரிமாறப்பட்டன. கொப்பனிக்கை எங்கள் இராணுவம் விட்டுக்கொடுத்துவிட்டதாம். வ்வுன்ஸ்டநூர்வ் எதிரியின் வசம். இரசியமொழியில் ரேடியோச் செய்திகள்.

இந்தச் செய்தி வாசிப்பில் சொல்லி வைத்தாற்போல் பெண்கள் பங்கெடுக்கவில்லை.

பொது இடங்களில் இப்படியான செய்திகளை பேசுவதன்மூலம் செய்தி யின் உள்ளடக்கம், சொல்லும் முறை என்பனவற்றில் பொதுமக்களின் உணர்வில் தாங்கள் பெரியவர்களாகத் தெரியவேண்டும் என்ற அடிப்படை யில்தான் பேசுவார்கள். இதற்கு எதி ராக வாதாட நான் விரும்பவில்லை. பொதுமக்களின் மனநிலை, செயல் கள் எப்படி இருக்கின்றதென்பதை அறியும் விருப்பம், இதனை எதிர்த்துப் பேசின் நிறைவேறாது போய்விடும் என்பது என் முடிவு. தனிப்பட்ட வாழ்க்கையில் நான் துணிச்சலானவள், பொதுப்புத்தியை எதிர்ப்பது என்னில் ஒருபகுதி மற்றையது மக்களின் மனோ நிலை, பேச்சு, செயல் ஆகியவற்றை நேரடியாகவே அனுபவத்தில் அறிந்து கொள்ளும் ஆர்வம்.

இதற்கு எதிராக நான் எதைச் செய்து விடமுடியும்? பொறுத்திருக்கத்தான் முடியும். குண்டுவீச்சு விமானங்களும் ஆட்லறிகளும்தானே எங்கள் நாளாந்த வாழ்வை நிர்ணயிக்கின்றன. சில வேளைகளில் எல்லாமே முடிவுக்கு வந்தால் நலமாக இருக்குமென நினைப்பேன். அதன் பின்பு வருவது விசேட காலம். சரித்திரத்தை நாங்கள் வாழ்ந்தோம் எனச்சொல்லும் காலம், பாடல்களாலும் எழுத்தாலும் சொல் லும் காலம். ஆனால் இன்றையச் சூழல் பயமுறுத்துகின்றது. நெஞ்சை அழுத்துகின்றது. சரித்திரம் நச்சரிப்பான ஒரு விடயம்.

நாளை கோவா விளையும் பகுதிக்குப் போய் வாங்கி வரவேண்டும். முன் கூட்டிய கொள்வனவுகள்தான் பட்டி னிக்கு இப்போதையப் பரிகாரம். பணக்காரர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. அவர்கள் பணம் குண்டுவீச்சில் தொலைந்துபோகலாம், களவாடப்படலாம், ஒளித்து வைத் தால் எலிகள் தின்றுவிடலாம், எதிரி களும் கொள்ளையடித்துக் கொண்டு போகலாம். எனது உடமைகள் எல்லாம் ஒரு காட்போட் பெட்டிக்குள் அடங்கிவிடுகிறது. என் சொத்தை யெல்லாம் இலகுவாக மாடியிலிருந்து நிலவறைக்கும் நிலவறையிலிருந்து மாடிக்கும் எடுத்துச்செல்வதில் எந்த சங்கடமும் இல்லை.

மாலை ஒளி மங்கும் நேரத்தில் திருமதி கொல்ஸ்சை மீண்டும் சந்தித்தேன். அவளின் கணவரும் அங்குதான் இருந்தார். அவர்களது அறை குளிராக, பொருட்கள் எல்லாம் தாறுமாறாகக் கிடந்தது. இரண்டுபேருமே சோம்பி கவலையாக இருந்தனர். வெகுவாகக் குழம்பிப்போய் என்ன நடக்கின்ற தென்றே புரியாது கலங்கியிருந்தார் கள். எங்கள் சந்திப்பில் நாங்கள் பேச வேயில்லை என்றுகூடச் சொல்ல லாம். வெளியே சடசடக்கும் வெடிச் சத்தம் இடையிடையே குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதல். பூமிக்கும் வானத்திற்குமிடையில் இடைவிடாத வெடிச்சிதறல்கள்.

கட்டிடங்கள் வெடிப்பின் அகோரச் சத்தங்களை எதிரொலித்தன. முதல் முறையாக 'பீரங்கி முழக்கம்' என்ற சொல்லின் தாத்பரியம் பிடி பட்டது. முன்பெல்லாம் சிங்கத்தின் வீரம் அல்லது ''வீரநெஞ்சம்'' என்ற சொற்கள்தான் பரவலாகப் பேசப்பட்டன. பீரங்கி முழக்கம் உண்மையிலேயே பொருத்தமான சொல்தான்.

வெளியே மழை பொழிந்து கொண்டி ருந்தது, காற்றின் வேகமும் அதிகள வில். இராணுவத்தினர் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். தளர்ந்த நடை, சிலர் நொண்டிக்கொண்டு, மிடுக்கோ உற்சாகமோ யாரிடமும் இன்றி, ஒவ்வொருவரும் மற்றையவ ருடன் தொடர்பு இல்லாதது போல் நகர்மையத்தை நோக்கிப் போனார்கள். முகங்கள் சவரமின்றி முள்ளுத் தாடியுடனும் கனத்தப் பைகளை முதுகில் சுமந்தும் சென்றனர். 'என்ன நடக்கின்றது' , 'போர் நிலவரம் எப்படி' சத்தமாக அவர்களிடம் கேட்டேன். முதலில் பதில் சொல்ல வில்லை. ஒருவர் விளங்காதவாறு ஏதோ முணுமுணுத்தார் அதைத் தொடர்ந்து இன்னொருவர் '' தலைவரின் கட்டளை '' எதிரிகள் அழியும் வரைவிடாது போராடுவோம்.

அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இராணுவ ஆண்களுக்கான மிடுக்கோ தன்னம்பிக்கையோ கம்பீரமோ இன்றி அவர்களிடம் நாம் வெல்லுவோம் என்ற நம்பிக்கையை விட வேறு எதையும் எதிர்பார்க்க முடி யாது என்ற உணர்வே மேலோங்கி யது. தோற்றுப்போனவர்கள் போல் இராணுவத்தினர் அல்லாது கைதிகள் போல் இருந்தார்கள். வாசல்களில் நின்ற எங்களை அவர்கள் எந்த உணர்வுமின்றி கடந்து போனார்கள். மக்களாகவோ சிவிலியன்களாகவோ அன்றேல் பேர்லீன் நகர மக்களாகவோ அல்லது எதுவாகத்தான் இருக்கட்டும் நாங்கள் எல்லோரும் அவர்களுக்கு பெறுமதியற்ற ஜென்மங்கள். அவர் களைச் சீண்டி விடுகின்றவர்கள் தங்க ளின் நிலைகுறித்து வெட்கமாயிருக் குமா என்பதிலும் எனக்கு நம்பிக்கை யில்லை. களைப்பும் ஈடுபாடின்மை யும் அவர்களை உணர்வற்றவர்களாக மாற்றியிருந்தது. அவர்களைத் தொடர்ந்து பார்க்க என்னால் முடியவில்லை.

படையினர் எங்கே ஒன்றுகூட வேண்டுமென்று சுவர்களில் எழுதியவை மழையில் கரைந்து வடிந்தது. எதிரே மரத்தில் காட்போட்டில் தொங்கிய இரண்டு துண்டுப்பிரசுரங்கள் அச்சு போல் கையெழுத்தில் ஒன்று நீலநிறப் பேனாவினாலும் மற்றையது சிவப்பிலும் 'ஹிட்லர்', 'கோய பெல்ஸ்' என்ற சொற்களின்கீழ் கோடிட்டும் தொங்கியது. முதலாவதில் சரணடைந்தால் தூக்கிலிடல் அன்றேல் சுட்டுக்கொலை செய்யப்படும் என எச்சரிக்கை செய்தும் இரண்டாவதில் ''பேர்லீன் மக்களுக்கு வேண்டுகோள்'' என இரந்து, வெளிநாட்டவர்கள் பற்றி எச்சரிக்கை செய்து எல்லா ஆண்களை யும் போராட அழைப்புவிட்டிருந்தது. கையெழுத்து நோட்டீசுகள் பரிதாப மாகவும் எவ்வித தீவிரத்தன்மை யுமின்றி மிகத்தாழ்ந்த குரலில் முணுமுணுப்பாய் தெரிந்தது.

ஆம் தொழில்நுட்பம் எங்களை கெடுத்துவிட்டது. அச்சியந்திரமோ ஒலிபெருக்கியோ ஒரு விடயத்தைக் கூறாவிடில் எங்கள் மேல் சொல்லும் விடயத்தின் பாதிப்பு கம்மிதான். கையால் எழுதுவது, வாயால் சொல்வது '' இதெல்லாம் என்ன?'' எங்கள் தொழில்நுட்பம் பேச்சோ எழுத்தோ அதற்கென்று ஒரு தனி மதிப்பை உரு வாக்கிவிட்டது. வுற்றன் பேர்க்கில் தேவாலயத்தில் எழுதி வைத்த கையெழுத்து நோட்டீசில் உள்ள 90 விடயங்கள் அந்தக்காலத்தில் மக்கள் எழுச்சிக்கே காரணமாய் இருந்தன. ஆனால் இப்போது கருவி களின் துணையுடன் பலமடங்காக்கி பெறுமதியைக் கூட்டாவிட்டால் விடயத்தின் தீவிரத்தன்மை இல்லாது போய்விடுகிறது. கையெழுத்து நோட்டீசைப் பார்த்த பெண் ணொருத்தி ''இதைப் பார்த்தாலே தெரிகிறதே இவர்களின் நிலை''.

இரவுச்சாப்பாட்டிற்கு சூப் குடித்தபின் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு பத்து மணிக்கு நிலவறைக்குப் போனேன். இதுவரை குண்டுவீச்சுக் குறைவாகவே இருந்தது. போகப்போக குண்டுகள் விழலாம் விமானத்தாக்குதலும் இது வரை இல்லை. எல்லோரிடத்திலும் பரபரப்பு, விதவிதமான போர்க் கதைகள். திருமதி டபிள்யூ யாருக்கோ உரத்தக்குரலில் ''அமெரிக்கனின் சிந்த னையை தலையில் சுமப்பதைவிட இரசியனின் குழந்தையை வயிற்றில் சுமக்க நான் தயார்''. பகடி, ஆனா லும் அவளின் ஆற்றாமை அதில் வெளிப் பட்டது. செல்வி பெகன் முழுநில வறைக்கும் கேட்பதுபோல் '' சரி உண்மையை பேசுவோமா- எங்களில் யார் இன்றுவரை கன்னியாக இருக் கிறா? அவளின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. உண்மை தான், பொர்ரியேஸ் சகோதரிகளில் பதினாறு வயதுடையவளை அவளின் மூத்த சகோதரி முன்னும் பின்னும் காவல் காக்கின்றாளே அவள் இன்னும் கன்னியாக இருக்கலாம். ஆண்போல் தோற்றமளிக்கும் இன்னுமொரு பெண்ணும் கன்னியாக இருக்கலாம். இவையெல்லாம் விதி விலக்குத்தான்.

புதிதாக இன்னுமொரு பெண் நிலவறைக்கு வந்தாள். இடதுபக்க கன்னத்தில் எக்சிமாப்புண் சிதழ்கூட்டி இருந்தது. அவள் யாருடனும் பேசாது தனியாக ஒரு மூலையில் ஒடுங்கி யிருந்தாள். வீட்டிலும் அவள் தனியாகத்தான் சீவிக்கின்றாள். அவள் விதவையா, விவாகரத்துப் பெற்ற வளா, கணவன் விட்டுவிட்டுப் போய் விட்டானா எதுவுமே யாருக்கும் தெரியாது. தனது திருமண மோதிரத்தை ஆணுறையில் சுற்றி பெண்குறிக்குள் ஒழித்து வைத்திருப்ப தாக அவள் சொன்னதாக கதை ஒன்றும் நிலவறைக்குடிகளிடையே உண்டு. ''முதல் வன்புணர்வு வரை தான் மோதிரத்துக்குப் பாதுகாப்பு'' அவள் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். அவளின் முகத்தில் இருக்கும் எக்சிமாப்புண் கூட அவளைக் காப்பாற்றலாம். இன்றைய நிலையில் அதுகூட பெறுமதியானதுதான்.

...தொடரும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com