Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2009

சில கழிப்பறைக் குறிப்புகள்
பாலசுப்ரமணியன்

ஆதியிலிருந்து எல்லோரும் வீடுகளிலுள்ள கழிப்பறையில் என்னென்ன செய்வார்களோ அதைத் தான் நான்கு வருடங்களுக்கு முன்புவரை நானும் செய்துவந்தேன். பொதுக்கழிப்பிடங்களில் நடக்கும் இதர என்னவெல்லாமோ நடவடிக்கைகளில் எனக்கு எந்த அனுபவமும் இல்லை. முப்பது வருடங்களில் கழிப்பறையில் செலவழித்த நேரத்தை உத்தேசமாக யோசித்துப் பார்த்த நாளிலிருந்து கழிப்பறையை பாவிப்பதில் சிக்கு விழ ஆரம்பித்தது. கழிப்பறை நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டுமென்பதை தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், மேலாண்மை (பொன்னுசாமி அல்ல) குறித்த புத்தகங்களில் எழுதியிருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. கண்ணதாசன் பதிப்பகப் புத்தகங்களைப் படிப்பவர்களைக் கேட்டால் தெரியும். அல்லது எம்.எஸ்.உதயமூர்த்தி, சிவ் கேரா போன்றவர்களிடம் கவுன்சிலிங் செய்து கொள்ளலாம். இயற்கை மருத்துவர்கள் இந்த விசயத்தில் என்ன சொல்வார்கள் என்பதை ஆல் இன் ஆல் சுஜாதா ஆனந்த விகடனில் எழுதி வைத்திருக்கிறார். ஜக்கி, ரவிசங்கர் இன்னபிற கார்ப்பரேட் குருக்கள் சொன்ன வழி நடப்பவர்கள் (படுப்பவர்கள், உட்காருபவர்கள்) ஒவ்வொரு கணத்திலும் அந்தக் கணமாகவே வாழு என்று சொல்லலாம். தத்துவச் சிக்கல் மலச்சிக்கலை விடவும் வலியுண்டாக்குவது என்பது இரண்டையும் அனுபவித்தர்வகளுக்கு தெரிந்திருக்கும்.

நான் அந்த நாளிலிருந்து கழிப்பறையில் செலவழிக்கும் நேரத்தை உபயோகமாக உபயோகப்படுத்துவது என்கிற முடிவை நீரைத் தொட்டுத்தொட்டு சுவற்றில் படம் வரைந்து எடுத்தேன். எனது ஓவியங்கள் மறுமலர்ச்சிக்கால, நவீனத்துவ, சர்ர்ர்ரியலிச, பின்நவீனத்துவ, இம்ப்ரிஸனிச, ரியலிஸ, அப்ஸ்ட்ராக்ட் ஓவிய வகைகளில் ஏதாவது ஒன்றாக அல்லது எல்லாமாக இருந்திருக்கும். மனதில் எழுவதற்கும் விரல்களுக்குமிடையே நான் எந்தத் தடையும் வைத்ததில்லை. நீரைத் தொட்டு வரைந்ததால் சுவற்றின் சூட்டைப் பொறுத்து விரைவாகவோ, மெதுவாகவோ மறைந்துவிடும். எண்ணற்ற ஓவியங்களை உண்டு வளர்ந்த கழிப்பறையின் வெளிப்பக்கச் சுவரில், மாரிக்காலத்தில் மழை வரைந்த ஓவியங்கள் என்னுடையதின் பிரதியாகக் கூட இருக்கலாம்.

ஒருமுறை மூக்குக் கண்ணாடியையும் அதற்குப் பக்கத்தில் கேள்விக்குறியை யும் வழக்கம்போல யோசனையின் றியே வரைந்தேன். அதைக் குறித்து நான் பின்பு கட்டுடைத்துப் பார்த்ததில் காந்தியைக் குறித்த ஓவியமா? கண் ணாடி அணிந்த என் எதிர்வீட்டுப் பெண்ணைக் குறித்ததா என்கிற முடி விற்கு என்னால் வெகு நேரம் வர முடியவில்லை. கண்ணாடியின் வடிவம் வட்டமாக இருந்ததால் அது காந்தியைக் குறிக்கிற ஒன்றாக இருக் கும் என்கிற முடிவை எட்டினேன். காந்தியம் கழிவறை அகிம்சை குறித்து சொல்லியிருக்கிறதா? அதிகம் முக்கி உடலை துன்புறுத்துவதே ஹிம்சை என்பது மாதிரி சொல்லி யிருக்கிறதா? அப்படியெனில் முதலில் முக்குவதை அல்ல காந்தியத்தைத் தான் கைவிட வேண்டும். என் னுடைய அல்லது இந்திய உணவுமுறையால் முக்காமல் போவதென்பது முடியாத காரியம். காந்தியம் டெல்லி செங்கோட்டையில் யூனியன் ஜாக் கொடி இறங்குவதற்கு முன்பே கைவிடப்பட்டுவிட்டது. கை விடுவது குறித்து காந்தியத் தலை முறைக்கே குற்ற உணர்வில்லாத போது எனக்கும் இந்த விசயத்தில் தமிழ்நாடு பாட (டாவதி) நூல் நிறுவனம் புத்தகங்க ளின் பின்புறம் அச்சடிக்கும் "தீண்டாமை ஒரு பாவச்செயல்" போன்றதல்ல.

காந்தியம் போலவே நான் கைவிட்ட இன்னொரு பயிற்சி வேதாத்திரி மகரிஷி உலகினுக்கீந்த காயகல்ப பயிற்சி. ஆழியாற்றில் ஆசிரமத்தில் நான் எடுத்துக் கொண்ட பயிற்சியின் படி உண்பதற்கு முன்பும், கழிப்பறை யில் காரியம் முடிந்த பின்பும் ஆசன வாயை திறந்து திறந்து மூட வேண் டும். இதன் மூலம் தாது கெட்டிப் பட்டு வீரியமடையும் என்பது ஐதீகம். இந்த ரகசியத்தை குதிரை மற்றும் மாடு கள் சாணம் கழித்த பின் அவைகளின் ஆசன வாய்களை திறந்து மூடுவதின் குறிப்பை அறிந்து அவர் இதனை உலகினுக்கீந்ததாகச் சொல்லப்பட் டது. இந்தப் பயிற்சியை நான் சில காலம் செய்து வந்த பின்பும் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. எனது நண்பனிடம் இதைச் சொன்ன போது, "ரொம்ப இந்தப் பயிற்சியை செய்யாதடா. அப்புறமா கெட்டியாகி யாகி பால்ரஸ் குண்டுகள் மாதிரி வெளிய வரப்போகுது" என்றான். நான் அன்றிலிருந்து அந்தப் பயிற்சியை நிறுத்திக் கொண்டேன்.

பிரம்மராஜ குமாரிகள் நேபாளத்தில் கிருஷ்ண பரமாத்மா ஜனித்துவிட்ட தாகவும், 2000மாம் வருடம் உலகுக்கு தன்னை தெரியப்படுத்துவார். அப் போது சத்திய யுகம் பிறக்கும் என்று பக்கத்துவீட்டு புரபஸர் வீட்டில் மாலைநேரம் எல்லோருக்கும் கற்கண்டு கொடுத்து பிரச்சாரித்துக் கொண்டிருந்தார்கள். ராஜயோகத்தின் மூலம் முக்தியடைய பல்வேறு விதி முறைகளைப் போட்டுக் கொண்டு வந்தவர்கள் திடீரென கழிப்பறையைப் பயன்படுத்தின பின் குளித்துவிட்டுத்தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்ற விதியை கட்டாயமாக்கினார்கள். எங்கள் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த கிராம நிர்வாக அதிகாரி சங்கத்தில் ஐக்கியமாகிவிட்ட எரிச்சலில் அவர் மனைவியும் அதில் சேர்ந்தார். இந்த விதிமுறைகளை பின்பற்றுவதின் மூலமே பரமாத்மாவைக் காணமுடியு மெனச் சொல்லி என்னையும் சங்கத் தில் சேர துன்புறுத்திக் கொண்டிருந் தார். காலையில் கழிப்பறையைப் பயன்படுத்திவிட்டு குளிப்பது இயல் பானது. அதை கவனித்த மற்ற குடித் தனக்காரர்கள் யாரும் அதைப் பெரி தாக எடுத்துக் கொள்வதில்லை. கோடையில் தண்ணீர்ப் பற்றாக்குறைக் காலத்தில் ஒருநாள் என்ன உண்டார் களோ வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மாறிமாறி கழிப்பறைக்கும் குளியல றைக்குமாக இருவரும் போனதில் தொட்டியில் இருந்த மொத்த நீரும் காலியான தகவலைக் கேட்டதிலி ருந்து ஒருநாளைக்கு மூன்றுமுறை கழிப்பறையைப் பயன்படுத்துகிற நான் சங்கத்திற்குப் போகிற முடிவை எடுக்காமல் விட்டேன். பரமாத்மாவை நான் காணமுடியாமல் போனதற்கு கழிப்பறைதான் காரணம். வேலையின் பொருட்டு பெங்களூரில் குடியேறிய பின் கழிப்பறையில் படிக்கிற வழக் கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

மாயையைப் புரிந்துகொள்ளுதல்:

ஒருவர் அமர்ந்துவிட்டு எழுந்த இடத் தில் அடுத்து அமர்கிறவர்கள் "ஓம் தத் ஸத்" என்று சொல்லி அமர வேண்டும் என விவேகானந்தர் எழுதி நான் படித் ததாக ஞாபகம். பேருந்தில், சினிமா அரங்குகளில், இரயில்களில், விமானத் தில், வீட்டில் எனக்கு முன்பு யாராவது உட்கார்ந்து எழுந்த இடத்தில் நான் அமரும் போது இதைச் சொல்லி அமர்ந்து வந்தேன். மாநகரில் முதலில் குடியேறிய வீட்டில் மேற்கத்திய கழிப் பறை முறை. நீங்கள் ஊகிப்பதைப் போலவேதான் நான் கழிப்பறையில் உட்காரும் போதெல்லாம் "ஓம் தத் ஸத்" சொல்லி உட்காருவேன். எப்படி அந்தப் பழக்கம் என்னை விட்டு நீங்கி யது என்பதற்கும் கழிப்பறைக்கும் தொடர்பிருந்ததாக நினைவில்லை.

வேதம், உபநிஷதம், இதிகாசம், புரா ணம் ஆகியவை பின்னணி இசை யோடு வாசிக்கப்பட்டன. துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் அஜீரணத்தில் வெளியேறின. மாயையை விளக்க விஷ்ணு நாரதரிடம் அருகிலுள்ள ஆற்றில் நீர் கொண்டுவரச் சொல்ல அவர் வெள் ளத்தில் இழுபட்டு வரும் பெண் ணைக் காப்பற்றப் போய் சம்சாரியாகி பலவருடங்கள் கழித்து அதே ஆற்று வெள்ளம் நாரதரை இழுத்து வரும். அவரை வெள்ளத்திலிருந்து காப்பாற் றும் விஷ்ணு கேட்பார், "எங்கே நாரதா இன்னுமா நீ தண்ணீர் கொண்டு வர வில்லை?". இதைவிட எளிமையாக நான் மாயையைப் புரிந்து கொண்ட சந்தர்ப்பம் இப்படி நிகழ்ந்து.

காலை ஆறரை மணிக்கு கடோபநி ஷத்தை எடுத்துக்கொண்டு கழிப்ப றைக்குச் சென்ற நான் மூன்றுநாட்கள் காத்திருந்து நசிகேதன் வாசல் திறந்து வந்து நிற்கும் எமதர்மனிடம் கேட்கிற மூன்று கேள்விகளைப் படித்ததும் அதைக் குறித்த சிந்தனை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டேன். ஏகப் பிரபஞ்சத்தின் அநேக உலகங்களில் தோன்றி மறையும் விண்மீன்களுக்கு கீழே எனது உயிர் இறப்பிற்குப்பின் என்னவாகும்?. (இறப்பதற்கு முன் உயிர் என்னவாக இருக்கிறது-துணைக் கேள்வி). இந்த ஒற்றைக் கேள்விக்கு விடைதேடி நான் தவித்துக் கொண்டி ருந்த வேளையில் கதவை பலமாகத் தட்டி "இன்னும் என்னடா செய்யற உள்ள?" என்றான் சகோதரன். வெளியே வந்து மணி பார்த்தேன். ஏழே கால். முக்கால் மணி நேரத்தில் நான் ஒரே பக்கம் தான் படித்திருக்கி றேன். காலம் தூங்கும்போது பெய்து விட்டுப் போகும் மழையைப் போல உணர்ந்து கொள்ளப்படாமலே கடந்தி ருக்கிறது. மாயை என்பதை நான் அனு பவமாக உணர்ந்த சம்பவம் இதுதான்.

பிரபலங்களின் கக்கூஸ் அனுபவங்கள்:

சலுகைக் கட்டணத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் உறுப்பினராகி எடுத்து வந்து சில பக்கங்கள் மட்டுமே படித்து திருப்பியளித்த புத்தகங்களில் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர் காலத்திய பிரபலங்களின் கனவுகள் எப்படியிருக் கும் என எழுதிய புத்தகமும் ஒன்று. நான் ஸ்டாலின் கனவைக் குறித்து படித்தபோது கழிப்பறையில் எனக்கு அஸ்ர் முறை. படிக்க ஆரம்பித்து கொஞ்ச நிமிடங்களில் ரஸ்ஸலின் புத்தகத்தில் வரிகள் மறைந்து பக்கங் கள் மூளியாகின. இன்னும் சில பக்கங் களைத் திருப்பித் தேட தமிழ் வரிகள் மின்னி மின்னி உருவடைந்தன. கீழ்க் காணும் வரிகளை நான் 116ம் பக்கத்தில் படித்தேன்.

தமிழ்நாட்டுக் கற்பனைகள்: 116

1.நாதபிரம்மத்திற்கு இராகம், தாள மாகப் போயிருக்கும். கழிப்பறையில் தட்டுவதற்கு புட்டத்தைத்தான் உபயோகித்திருப்பார்.

2. சூப்பர் ஸ்டார் ஒரு தடவைதான் போவார், அது நூறு தடவை போனது மாதிரி இருக்கும். சுத்தம் செய்ய மூன்று நாட்களாகும்.

3. நடிகர் திலகத்திற்கு நடிக்கும்போது முக்குகிற முக்குக்கெல்லாம் பலமுறை ஆடையிலேயே போயிருக்கும்.

4. மக்கள் திலகம் தங்கபஸ்பம் தின்றவ ரென்பதால் கட்டிகட்டியாக வெளி யேறி சுரங்கம் தோண்டி எடுப்பது போன்ற சிரமத்திற்கு ஆளாகியிருப்பார்.

5. பேரறிஞர் "ஏதேன்சு நகரத்திலே சாக்ரடீசு சீசரின் மாளிகையிலே" என "தம்பி"க்கு கடிதம் பலதை கழிப்பறை யில் எழுதியிருக்கலாம். கடிதத்தை வாசிப்பவர்கள் அதனை முகர்ந்தும் பார்க்க வேண்டும்.

6. மு.ரா.தே**, க****, ஜெ**** இவர்களைக் குறித்து எழுத எனக்குப் பயமாக இருக்கிறது. பொலிவியாவில் கண்ணியில் சிக்குண்டுவிட்ட சேகுவேராவைக் காப்பாற்ற சார்த்தரின் ஆதரவுடன் நிதி திரட்டி தாரிக் அலி மற்றும் சிலரை அனுப்ப தைரியம் இருந்த எனக்கு இவர்களைப் பற்றி எழுத பயமாகத் தான் இருக்கி றது என்பதை அறிவுலக நேர்மையுடன் ஒப்புக்கொள்கிறேன். அப்படியும் துணிந்து எழுதினால் மதுரைக்குக் கீழே என்னை எதிர்த்து பஸ் கண்ணாடிகள் உடையும். ரஸ்ஸல் வாலைத்தான் ஆட்டினார் தலையை ஆட்டியிருந்தால் தெரிந்திருக்கும் சேதி என கடிதம் எழுதப் படும். என் சுருக்கு விழுந்த முகத்தில் திராவகம் வீசப்படும்.

தத்துவஞானி என்றழைக்கப்படும் நான் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது சமூகத்தின் அதிகார மையங்களாக விளங்கும் இவர்களைப் பற்றின இக்கற்பனையை தமிழக சுற்றுப்பயணம் எனக்கு ஏற்படுத்தின நாசியா உணர்வு இம்முதுமையில் எனக்கு இருக்கும் பல்வேறு தொந்தரவுகளுக்கு மத்தியில் புதுத் தொந்தரவாக மூன்றுநாட்களை என்னை மருத்துவமனையில் செலவழிக்க வைத்த கோபத்தில் இதனை எழுதியிருக்கிறேன்.

வாஸ்துவும் கழிப்பறையும்:

புளியமரத்துப் பாளையம் கிராமத் திலே பாதி இளைஞர்கள் சிலிக்கான் பள்ளத்தாக்கிலே வேலை செய்கிறார் கள். வாரத்திற்கு ஒருமுறை மிச்சமி ருக்கும் கிழடுகளுக்கு போன் போட்டு "பாகுண்டேரா" எனக் கேட்பார்கள். என்னோடு படித்த சேகரின் வீட்டில் கழிப்பறை இப்படி இருந்தது, அவன் பெங்களூருக்கு வேலைக்குப் போவதற்கு முன்பாக. படம் 1.

அவன் ஊர்க்காரர்கள் வெளிநாடு களுக்கு வேலைக்குப் போகத் துவங்கி பல நாட்கள் ஆகியும் இவனுக்கு பல முறை முயற்சித் தும் வேலை கிடைக் காததால் "வேல்சா" என விளிக்கப் படும் வேலுச்சாமி நாயுடு, வாஸ்து நிபுணர் ஒருவரை அழைத்து வந்து வீட்டைக் காட்டினார். பழைய தொட்டிகட்டு வீடு. வந்த நிபுணர் அதை மாற்று இதை மாற்று எனச் சொன்னவர் கொல்லையில் இருந்த கழிப்பறை யையும் பார்வையிட்டு "மேக்கபாத்து உக்காந்து வீட்ல இருக்கறவங்க வெளிக்கி போறதுனாலத் தான் உங்க மகனுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கமாட்டேன்குது" என்றார். கழிப்பறையை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டுப் போனார் ஊருக்குள் முதன்முறை வந்த வாஸ்து நிபுணர். அதன் பின் கழிப்பறை இப்படி மாற்றி அமைக்கப்பட்டது. படம் 2.

மாற்றி அமைத்து மூன்று மாதங்களுக் குள் அவனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததும் ஊரின் எல்லா வீட்டு கழிப்பறைகளும் வாஸ்து நிபுணரின் வாக்கின்படி மாற்றி அமைக்கப்பட்டன. தமிழக கிராமம் ஒன்றில் நிகழ்ந்த ஒட்டுமொத்த ஊரே கழிப்பறைகளை மாற்றி அமைத்த புரட்சியை தமிழகத்தின் அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும் முதன் முறையாக ஒளிபரப்பின. இப்படி ஒரு புரட்சியை துவக்கிவைத்த பெருமைக் குரிய வேல்சா பலமாதங்கள் பின்பு கலிபோர்னியாவில் திசை தெரிந்து கொள்ளாமல் கழிப்பறைக்குள் போக மாட்டேன் எனச் சொல்ல சேகர் திசை காட்டும் கருவி ஒன்றை வாங்கி வந்து பார்த்ததில் கழிப்பறையின் வாசல் மேற்கு பார்த்து இருந்தது.

உதிரிப் புரட்சி:

மத இலக்கியங்களில் தீவிர ஆர்வமு டைய நான் விவிலியத்தையோ, குரானையோ ஆறுமாதங்கள் முன்பு வரை வாசித்ததில்லை. பைபிள் சொசைட்டியில் நிறைவாழ்வு என்கிற பெந்தகோஸ்தே வழிபாட்டுக்காரர்கள் சிலர் ஆய்ந்து எழுதிய வேதாகமத்தை 500 ரூபாய் விலை கொடுத்து வாங்கினேன். தினம் ஒரு அதிகாரமாகப் படித்தால் இரண்டு வருடங்களில் படித்து முடித்துவிடலாம் என்கிற திட்டம் அதில் சொல்லப்பட்டிருக்கி றது. காந்தியடிகள் பகவத்கீதையை அவர் பல்துலக்கும் நேரத்தில் தினசரி வாசித்ததாக ஒரு துணுக்கை நான் முன்பு எப்போதோ பிரபலமான செய்தித்தாளின் ஞாயிறுமலரில் படித்த தாக ஞாபகம் வர நான் கழிப்பறையில் தினம் ஒரு அதிகாரம் விவிலியத்திலி ருந்து வாசித்து வந்தேன். இலவசமாக குரானின் பிரதியன்று எனக்கு கிடைத்து அதை நான் கழிப்பறையில் விவிலியத்திற்குப் பதிலாக படிக்கத் துவங்குவதற்கு முன்தினம் இஸ்ர வேலர் மோசேயிடம் "எகிப்திலே கழிப்பறைகள் இல்லையென்றா எங்களை வனாந்திரத்திலே போகும் படி அழைத்து வந்தீர்" எனக் குறை பட்டுக் கொண்டிருந்தார்கள். குரான் ஓதுவதற்கு முன்பாக "அவூது பில்லாஹி மினஷ் ஷெய்த்தானிர்ரஜீம்" என்று ஓதிவிட்டு வாசித்தேன். "ஓம் தத் ஸத்" இப்போது மதம் மாறிப் போய்விட்டது.

உச்சப் புரட்சி:

நேற்று கழிப்பறையிலிருந்து வெளியே வந்தவன் எப்போதும் போல சோப்பு போட்டு கைகழுவியதைப் பார்த்த என்னுடைய எழுத்தாள நண்பர், "இது பார்ப்பனீயம்" என்றார்.

"நீங்கள் இடது கையை உண்பதற்கு பயன்படுத்துவீர் களா?".

"இல்லை".

"அதுவும் கூட பார்ப்பனீயம்தான்" என்றேன்.

இன்று கழிப்பறையில் இதைக் குறித்து யோசித்தவன் உடலை புரட்சியின் வெளியாக மாற்றி மனதிலிருந்து பார்ப்பனீயத்தை என்றென்றுமாக ஒழித்துக்கட்ட வலதுகையால் கழுவினேன்.

***

பின்குறிப்புகள்:

1. இப்போது படிக்கையில் எரிச்சல் தரும் நான்-லீனியர் கதைகளை எழுதியிருக்கும் சாரு நிவேதிதாவிற்கு இக்கதை சமர்ப்பணம்.

2. இக்கதையில் தகவல் பிழைகள் கண்டுபிடிப்போர் மூளையின் ஞாபகத் திறனைக் குறித்து தங்களுக்கு இருக்கும் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ளவும்.

3. தத்துவ விமர்சனம் எதையாவது இக்கதையில் நீங்கள் கண்டுபிடித்தால் நீங்கள் என்னுடைய தத்துவத்தையும் விமர்சிக்கலாம். என்னுடைய தத்து வம் என்னவென்பதை அஞ்சல்வழிக் கல்வியின் மூலம் காசு சம்பாதிக்கும் மூன்றாம்தர தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களான பெரியார், அண்ணா, பாரதி, பாரதிதாசன், மெட்ராஸ், தநா' திறந்தவெளி பல்'கழகம், அண்ணா மலை இதில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து படிக்கவும்.

4. கழிப்பறையில் புனித நூல்களைப் படிப்பது குறித்து கோபங்கொள்ளும் மத அடிப்படைவாதிகள், பழமை வாதிகள், நம்பிக்கையாளர்கள் இந்த சிறுவனின் பிழையை பொருத்துக் கொள்ளும்படி அல்லாவிடமோ, கர்த்தரிடமோ வேண்டிக் கொள்ளவும். இந்து மதத்தில் மன்னிக்கிற தெய்வங்கள் உண்டா?

5. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ் ணன், சாரு நிவேதிதா ஆகியோர் தங்கள் இணையப் பக்கத்தில் இக்கதை குறித்து எழுத வேண்டாம். இவர்கள் விமர்சிக்கிற விசயங்களைக் குறித்துப் படிக்க இன்னும் சிலர் தேடி சிரமப் படக்கூடும். உலக எழுத்தாளர்களில் யாரைவிடவும் தன்னுடைய சொந்த இணையப் பக்கத்தில் அதிகம் எழுதும் "எழுத்தியந்திரம்" ஜெயமோகன் இக்கதை குறித்து எழுதி அவருடைய நேரத்தை விரயமாக்க வேண்டாம். கீதோபதேசம், இந்துத் தத்துவம், முக்தி நெறி என எழுதி தன்னுடைய இணைய பஜனையைத் தொடரவும்.

6. இக்கதை யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. கருத்தியல் விமர்சனங்கள் மாத்திரமே.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com