Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2008

காடு கொளுத்திகள்
தஞ்சை சாம்பான்
.

அம்மா தாயே யாம் என்னே இந்த பாழும் பய செம்மத்துலே புடிச்சி போட்டே நா படும் கஸ்டத்தே பாத்துக்கிட்டே தானே இருக்கே பாழும்பய திருவுளமே நான் அரக்கப் பரக்க வேலே பாத்தாலும் நிம்மதியா உட்காந்து ஒரு ‘வா’ கஞ்சி குடிக்க முடியலே எனக்கு என்னக்கி விடி விமோசனம் கிடேக்கும். உனக்கு நாங் என்ன கொறே வெச்சேன் என்று தன் குலதெய்வமான காத்தாயி அம்மனிடம் வேண்டி நின்றார் சுக்கிரன்.

இவருக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் இப்படிதான் தன் குல தெய்வத்திடம் முறையிட்டு வேண்டி நிற்பார். அம்பலாரின் கதிரடிப்பு, போர் அடிப்பு, வைக்கோலை பெரிய போராக போட்டு தலைகூட்டுவது (மழை பெய்தாலும் நீர் தங்காமல் ஒப்பனை செய்வது) போன்ற வேலைகள் செய்து முடித்ததும் அம்பலார் தன்வீட்டு வேலைகளை செய்ய சுக்கிரனை அழைத்தபோது தான் ஆற்றாமையை குல தெய்வத்திடம் சொல்லி புலம்பி நின்றார்.

தெருவில் அநேகபேர் இருந்தாலும் சுக்கிரன் மட்டும்தான் அம்பலாரின் குடிப்பறையன். எனவே தொட்ட தொன்னூறுக்கும் சுக்கிரன்தான் சாட்சி. யோவ் நீ இங்குனேதானே நிக்கிறே அம்புலாரு வூட்டுலே இருந்து அந்த ஆளுவந்து என்னமாறி பேசிட்டு போறான். அவென் மூஞ்சியும் மொவரக்கட்டேயும். மூஞ்சுறு மாறி மொவரயே வெச்சிக்கிட்டு அவென ஒரு மனுசனாட்டம். என்னமோ கட்டுன புருசனாட்டம், அதான் சும்மாவா சொன்னாரோ கொல்லேக்காரேன் சும்மா கிடந்தாலும் சீட்டே, பொருக்கி அம்பலமுன்னு (சீட்டே சோளத்தில் ஒரு பகுதி விளைந்தும் மறுபகுதி அன்னம் பிடியாமல் இருப்பது.) (சீட்டே அன்னம் பிடிக்காத சோளக் கதிர்களை தட்டையோடு விட்டுவிடுவார்கள் அதை ஏழைகள் பயன்படுத்திக் கொள்வர்) எங்கோடி ஓம் புருசேன்னு அதட்டுறாரு. நானும் நல்லா கேட்டுப்புட்டேன் என்றார் சுக்கிரன் மனைவி.

யாம் புள்ளே அப்படி பேசுனே அவுரு போயி ஒன்னுக்கு ரெண்டா சொன்னாலும் சொல்வாரு என்றார் சுக்கிரன். அம்பலம் ஆள்விட்டும் போகாமல் இருந்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை நினைத்த மாத்திரத்தில் தன்னையறியாமலே அம்பலத்தின் வீடு நோக்கி நடந்தார். வழியில் சாண வூட்டு ஆயியிடம் ரெண்டு பொட்டி கள்ளு குடித்துவிட்டு அம்பலத்தைப் பார்த்தார்.

அம்பலம் வெளியில் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து வெற்றிலைப் பாக்கை மென்று கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் போதை உச்சத்தில் இருப்பதுபோல் தள்ளாடி தள்ளாடி சென்றார். என்னடா எப்ப வரச் சொன்னேன் இப்போ வாரே என்றார் அம்பலம். சாமி நாலு மாசமா இந்த வெக்கேலுலே கெடந்தது நஞ்சடி கொண்டாப்புலே இருந்துச்சி. மேலும் ஒரே அலுக்யா இருந்துச்சிங்கோ அதான் ஒரு பொட்டி கள்ளு குடிச்சிப்புட்டேன். யாங்க வூட்டுகாரி அய்யா ஆளுவுட்டதா சொன்னா. ஓடியாந்தேன் சாமியென்றார்.

சரிசரி போடா நாளேக்கி காலேயிலே வெள்ளன வாங்கடா நம்ளே கீலேண்ட கொல்லையில உள்ள மூங்கி குத்தெல்லாம் காஞ்சிப் போச்சி. நம்மோ பயிலுவலேயும் கூப்புட்டா. நம்மோ வலயவூட்டு பய தங்கானையும் கூட்டியாடா என்றார். நேரம் கழிச்சிப் போனதுக்கு இந்த மட்டோடு போச்சே என்ற சந்தோசத்தில் நேராக வலயவூட்டு தங்கானை போய்ப் பார்த்தார்.

அம்பலம் சொன்ன விசயங்களைக் கூறியதும், ஆமடா ஒனக்கும் வேலே இல்ல, ஓம் அய்யாவுக்கும் வேலே இல்லே. நம்மோ என்ன மனுசனா இல்ல மாடா, செத்தநேரம் உஸ்ன்னு உக்கார முடியலே. போயி நான் ஊர்ல இல்லேன்னு சொல்லிப்புடுடா என்றார். ஒருசில வலையர்களும் அம்பலாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் பறையரை போல் அல்ல, சில சுதந்திரம் இவர்களுக்கு உண்டு. சில நேரங்களில் அம்பலத்திற்கு ஆலோசனையும் சொல்வதுண்டு.

யாவ் ஊரிலே இல்லேன்னா எந்த ஊரு போயிருக்கான் போயி கூட்டியாடான்னு சொன்னாலும் சொல்வாரு. நாளேக்கி வெள்ளானா காலேயிலே போய்டுவோம் என்றார் சுக்கிரன். போகும்போது இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பொட்டி கள்ளு குடித்துவிட்டு பிரிந்து சென்றார்கள்.

சுக்கிரன் போதையில் தள்ளாடியபடி எப்போதோ கேட்ட ஒரு நாடகப் பாட்டை பாடிக்கொண்டே சென்றார், சோத்துல கல்லு கிடந்தா சொந்த பொண்டாட்டியை உதைப்போம், கள்ளுல வண்டு கிடந்தா தள்ளிபுட்டு குடிப்போம்... இதைப் பார்த்த தெருப்பெண் ஏ இவளே இங்கேருடி ஓம் புருசே தலே மாண்டு தண்ணீ குடிச்சு தள்ளாடிகிட்டு பாட்டு பாடிக்கிட்டே வர்றதே என்றார். சுக்கிரன் மனைவி வாசல் பக்கம் வரவும் பாடி முடிக்கவும் சரியாக இருந்தது.

யோவ் என்ன பாட்டு பாடிக்கிட்டு வந்தே, சோத்துல வண்டு கிடந்தா சொந்த பொண்டாட்டியே உதைப்பியா.. யாங்கையியென்ன பூ பறிக்கவா போச்சி என்றார்.

சுக்கிரன் சும்மா புள்ளே ஒரு கிண்டலுக்குதான் பாடினேன் என்றார்.

நீ யாய்யா பாடமாட்டே, இதுவும் பாடுவே இதுக்கு மேலேயும் பாடுவே என்று கூறிகொண்டே தன் வேலைகளை பார்க்கத் தொடங்கினார்.

மறுநாள் காலை தங்கானும் சுக்கிரன் ஏனையோரும் அம்பலத்தை வீட்டில் போய் பார்த்தார்கள்.

ஏலே தங்கான் நேத்தே வரச் சொன்னேன், இன்னேக்கி வர்றியே என்றார். இல்லேங்கோ ஊரிலே இருந்து இப்போதான் வந்தம், சுக்கிரன் சொன்னதும் வந்தேன் என்றார்.

எலே நீ மட்டும் வந்தியா என அம்பலம் கேட்டதும் இல்லேங்க தலக்கட்டுக்கு ஒரு ஆளு வந்துருக்கோம் என்றார் சுக்கிரன். நம்மோ கீழாண்ட உள்ள முள் குத்தெல்லாம் காஞ்சிப் போச்சிடா எல்லாத்தையும் வெட்டி எடுத்துடுங்கோ. ஏ தங்கான் நீ அவங்களுக்கு ரெண்டு கஞ்சி வாங்கி ஊத்திப்புட்டு நீயும் அவெங்களோடு நின்னு வெட்டி எடுத்துடுங்கோடா என்றார்.

அதற்குள் அம்பலத்தின் பங்காளி கிட்டு வந்ததும் இந்தேய்யா அப்புறம் போலாம். செத்தே நின்னு நாங்கோ வெட்டின மரத்தே ஆளும் பேருமா நின்னு இழுத்துப்புடலாம் என்றார் தங்கான்.

எலே பாதி மரம் வரைக்கும் உள்ள முள்ளுவளே கழிச்சிப்புட்டிங்கன்னா அப்புறம் லேசா இழுத்துப்புடலாம் என்றார் கிட்டு.

அதாய்யா செத்தே நேரம் நில்லு இந்த ஒரு மரத்தையாவுது இழுத்துப்புட்டு போய்யா என்றார் தங்கான். வெட்டிய மரத்தே இழுக்கவே முடியாத நிலையில் கிட்டு கூறினார், மரத்தே முனிவரையும் கழிச்சிப்புட்டு வெட்டி வுட்டிங்கன்னா தானே வரும் என்றார். தங்கான் அரிவாளைக் கொடுத்து நீ ஏறி கழிச்சி உடுய்யா என்றார். கிட்டு உடனே ஏது வெகுதூரம் வந்திட்டியோ போலிருக்கே. வெட்டுனா வெட்டுங்க இல்லாட்டி போங்டா என்றவாறு பாத்திரத்தோடு புறப்பட்டார்.

சொல்றது ரொம்ப சுருக்கனா சொல்லிப்புடலாம் செஞ்சிப் பாத்தா தானே தெரியும் என்றார் தங்கான். கிட்டு சுக்கிரன் மனைவியிடம் காட்டிய வீராப்பை தங்கானிடம் காட்ட இயலவில்லை.

ஒரு பொழுது வேலை பார்த்தும் இரண்டு மூன்று மரங்களைத் தவிர வெட்டி இழுக்க இயலவில்லை. பொழுது சாய்ந்த நேரத்தில் கிட்டுவும் அம்பலமும் பார்த்துவிட்டு என்னடா பத்துமரம் கூடவா வெட்ட முடியலே என்றதும், அய்யா இது நல்லா காஞ்சி போச்சி வெட்டவும் முடியலே முள்ள அறுக்கவும் முடியலே அதான் சன்னமா வெட்டி இழுக்குறோம் என்றார் சுக்கிரன். சரிசரி முள்ளேயெல்லாம் வறும்பு புடிக்கனும் வேலியும் வெக்கனும் பெரும்கொண்ட முள்ளேயெல்லாம் கழிச்சி தனியா போடுங்கோ என்றார் கிட்டு. தங்கான் ஆவேசங் கொண்டவனாய் கிட்டுவைப் பார்த்தார். சரி நாளேக்கி வெயிலுக்கு முன்னோடி வேலேயே தொடங்குங்கடா என்றவாறு அம்பலம் நடந்தார்.

வேலையை முடித்துப் போகும்போது சுக்கிரன் கூறினார் ஆத்துல தண்ணீ வந்ததுலேருந்து இம்புட்டு வேலே பாத்தோம். மரத்தே வெட்டி இழுத்தது ரெண்டு தோலுபட்டெயும் நோவுது இந்தய்யா கிட்டுக்கு என்னா வந்தது அம்புலாரு சும்மா இருந்தாலும் இந்தய்யா காலேடுத்து கொடுக்குறாரு.

ஏலே அப்பதான்டா அம்புலாரு வூட்லே தனக்கு வேண்டியதே செஞ்சிக்லாம். வெயில் படாமே வயகாட்டுலே இறங்காமே எல்லா காரியமும் நடக்குதுல்லே. சரிடா நாமோ என்ன செஞ்சாலும் என்னா கெடெக்கும் நமக்கு.

பேசாமே எனக்கொரு ஓசனே வருது அதே செஞ்சுப்புடலாம் என்று சுக்கிரன் கூறினார். ஒன்னுமில்லே நீ போயி களத்துக்காட்டுலே கெடக்கிற வெக்கோலே ஒரு கொடங்கே கொண்டாடா. நான் போயி நெருப்பு கொண்டாரேன். பாதி சோத்தியத்திலே (நடுஇரவு) வந்து நெருப்பே பத்தே வச்சிவுட்டாக்க இந்த முள்ளு எல்லாம் எரிஞ்சிப் போயிடும். நாமளும் கஸ்டமில்லாமே மரத்தே வெட்டிப்புடலாம் என்றார்.

யாங்க இதுக்கு பாதி சோத்தியத்துலே எதுக்கு வரணும் கருக்கல்லுலே வந்தா என்னா என்றார். யாருடா இவன் மூங்கி முள்ளே படலு கட்டணும் வறும்பு புடிக்கணும் வேலி வைக்கோனும்னு சொன்னதே, இதேல்லாம் ஆருவந்து செய்வா எல்லாம் நம்மோ தலயிலே தான் விடியும். பேசாமே இப்படியே செஞ்சிப்புடுவோம் என்றார்.

இருவரும் தம் திட்டங்களோடு கொல்லையில் கூடினார்கள். வைக்கோலை மூங்கி முள் அடர்ந்த பகுதிக்குள் திணித்து நெருப்பை பற்ற வைத்தார்கள். தீ மளமளவென்று பிடித்து எரியத் தொடங்கியது. பட்ட மூங்கில் பட்டாசு போன்ற ஓசையோடு வெடிக்கத் தொடங்கியது. கொல்லைக்காடு பூராவும் ஒரே வெளிச்சம். பக்கத்தில் மூங்கில் குத்துகளும் பிடிக்கத் தொடங்கியது. இதை எதிர்பாராத தங்கானும் சுக்கிரனும் வெளிச்சம் தெறித்த எதிர் திசையை நோக்கி ஓடினார்கள். மூங்கில் வெடித்த சத்தமும் நெருப்பின் வெளிச்சமும் உறக்கத்தில் இருந்த ஊரை உசுப்பி எழுப்பியது. ஊரே ஒன்று கூடியது. தீயின் ஜீவாலை யாரையும் நெருங்கவிடவில்லை. தங்கானும் சுக்கிரனும் காத்தாயி அம்மன் சன்னதியில் நின்று ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில்லை என்று சத்தியம் செய்து கொண்டார்கள்.

அம்பலத்தின் மறைவுக்குப் பிறகு சில காலம் இவர்களுக்கு காடு கொளுத்தி என்ற பெயர் இருந்ததாக பேசிக் கொள்வார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com