Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2008

குறிஞ்சியின் நிலையற்ற மணக்குடும்பம்
ஈரோடு தி.தங்கவேல்
.

(இக்கட்டுரை, கடந்த இதழில் வெளியான ‘கொப்பேரனும் குறிஞ்சிக் கட்டை விழாவும்’ என்ற கட்டுரையின் தொடர்ச்சி.)

“ஒருவனுக்கு ஆண் சந்ததி இல்லையாயின், அவனுடைய குடும்பம் காலற்றுப்போகும் ஆபத்திற்கு உள்ளாகும். இதனைத் தவிர்க்க இவர்கள் குடும்பப் பெயரை விளங்க வைத்தல் என்ற விசித்திரமான ஒரு வழக்கத்தை மேற்கொள்கின்றனர். அத்தகைய குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை அவளுடைய தாய்மாமன் மகன் உரிமை கொண்டாடி மணந்து கொள்ள முடியாது. அவளை அவள் வீட்டின் கதவு ஒன்றின் நிலவுக்கு மணம் முடித்து வைப்பார்கள். கழுத்தில் தாலி அணிவிக்கப்படுவதற்குப் பதிலாக இம்மணத்தின்போது அவள் வலக்கையில் ஒரு வெள்ளி வளையலை அணிவிப்பர். அவள் அதன்பின் அவள் சாதியைச் சார்ந்த ஆண்மகன் யாரோடு வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறாள். அவ்வகையில் அவள் ஈட்டும் வருவாய் அவள் பெற்றோரைச் சேரும். அவளே பின்னர் அவர்கள் உடமைக்கு உரிமை உடையவளாவதோடு, அவளுக்கு ஒரு மகன் பிறப்பானாகில், அவன் அவள் வழியாக அவர்களுடைய உடமைகளுக்கு உரிமையுடையவனாகிறான்.”

இது பழனிக்குன்றுகளின் சரிவுகளில் வாழும் குன்னுவ மன்னாடியார்களின் அதிசயமான ஒரு வழக்கத்தைக் குறித்து எட்கர் தர்ஸ்டன் தனது “தென்னிந்திய குலங்களும், குடிகளும்” என்ற நூலில் பதிவு செய்துள்ளார். (பக்.151 தொகுதி 4) கொடைக்கானல் வட்டத்தில், குன்னுவ மன்னாடிகள் வாழும் அனைத்துக் கிராமங்களிலும் மேற்சொன்ன நடைமுறை வழக்கம் 1960 வரை நீடித்து வந்துள்ளது என வில்பட்டி என்ற கிராமத்தின் வழக்காறு குறித்த ஆய்வில் தெரிய வந்தது. இது குறித்து எங்கள் மன்னாடி சாதி சார்ந்த சண்முகம் என்பவரை அணுகி விசாரித்தபோது, அவர் “ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு வளைபோடுதல் (வளையல் போடுதல்) என்ற சடங்கை நடத்தி, அவளுக்குp பிரியமான ஒருவரை (மணமானவர் அல்லது மணமாகாதவர்) அவள் பெற்றோரே சென்று பேசி அவளுடன் வாழ அனுமதிப்பார்கள். கடைசிவரை அவளுடன் அவரும் வாழ்வார் என்றும், பிறக்கும் குழந்தைக்கு சிறிது நிலமும் எழுதி வைப்பார்” என்று கூறி முடித்துக் கொண்டார். இது குறித்து அதிகமாகப் பேச விரும்பவில்லை எனத் தெரிந்தது.

மலை ஆசாரி குடும்பத்தைச் சார்ந்த வேலுச்சாமியிடம் ராஜதர்மன் கேட்டபொழுது, அவர் “வளையப் போட்டு விட்டுவிடுவானுக. அவள் ஊரை மேய்வாள். குழந்தைப் பிறந்தால் தொட்டவனெல்லாம் ஆளுக்கு கொஞ்சம் பணமோ நிலமோ கொடுப்பானுக. நல்லாச் சொல்லனும்னா, அவளை விபச்சாரி ஆக்கிப் போடுவானுக” என்றார். குருசாமியிடம் இது குறித்து விசாரித்ததில் “ஏதோ காரணத்தால் இந்த ஊரில் ஒருகாலத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட வெகுவாகக் குறைந்து போனது. இதனால் இவ்வழக்கம் தேவை கருதி உருவாக்கப்பட்டது. ஒருபுறம் திருமண வடிவமும், இன்னொருபுறம் வளை போடுதல் என்ற வடிவமும் ஏககாலத்தில் இருந்தது.

ஆண்வாரிசு இல்லாத குடும்பத்தில் பெண்ணுக்கு வீட்டில் வலதுபுறம் அமைந்துள்ள இரண்டு கட்டில்களுக்கு இடையே உள்ள நிலவுமரத்தாலான கட்டை முன் நிறுத்தி, யாரோ ஒருவன் (அவள் சாதி சார்ந்தவன்) அவனுக்கு வளை போட்டு பாசிகளாலான தாலி கட்டுவான். அத்தோடு சரி. அவள் தனக்குப் பிரியமான ஆண்களுடன் கூடுவாள். ஒவ்வொருவருடனும் சிலகாலம் உறவு வைப்பாள். பின்பு வேறொருவனைத் தேர்ந்தெடுப்பாள். பிறக்கும் குழந்தை யாருக்குப் பிறந்தது என்பது அவளுக்கும் அவனுக்கும் தெரியும். எனவே அவன் சிறிது நிலத்தை அவள் பெயரில் எழுதி வைப்பான் தனது குழந்தைக்காக. இதனால் எண்ணிக்கையில் அதிகமுள்ள ஆண்களின் இயற்கை உந்துதல் தணிக்கப்படுகிறது. வளை போட்டவன் அவளுக்கு எந்த இடையூறும் செய்யாமல் கடைசி வரை வளைபோட்ட கணவனாக நீடிப்பான்” என்றார்.

மணம் முடித்தவர்கள் கடைசிவரை சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்களா? என வினவியதற்கு, “அதுவும் நீடித்திருக்காது. மணமுறிவு செய்து கொள்ள பெண்ணுக்கு சுதந்திரம் இருந்தது. ஒரு காளைக் கன்றை ஊரார் முன்னிலையில் கணவனிடம் கொடுத்துவிட்டு மண முறிவு செய்துவிட்டு, வேறொருவனை மணம் முடித்து கொள்வாள்” என்றார். இவரின் விளக்கமானது எட்கர் தர்ஸ்டனின் ஆய்வை மிக நெருங்கி இருந்தது.

இரண்டு கட்டில்களும், இரண்டுக்கும் இடையே நிறுத்தி வைக்கப்பட்ட நிலவு மரத்தாலான கட்டையும் உள்ள வீடுகள் இன்று இல்லை. இரண்டு வீடுகள் மட்டுமே உள்ளன. அல்லாக்கு என்ற மூங்கில் வகை குச்சியாலும், செம்மண்ணாலும் ஆன சுவர், போதைப்புல்லால் வேய்ந்த கூரையுடைய வீட்டுக்குள் நுழைந்ததும் வலதுபுறம் இரண்டு கட்டில்களுக்கிடையே ஆறடி உயரம் இரண்டடி அகலத்தில் தூண் போன்று வேலைப்பாடுகளுடன் கூடிய கட்டை நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கட்டையில் (தூணில்) விளக்கு வைக்க மாடக்குழி செதுக்கப்பட்டு, சிறிய தீபம் வைக்கப்பட்டு, அக்கட்டையில் இன்று சாமி படங்கள் மாட்டப்பட்டுள்ளது. ஒரு கட்டிலில் தம்பதிகளும், மற்றதில் பெரியவர்களும், குழந்தைகளும் படுத்துக் கொள்கின்றனர் என்றார் குருசாமி.

சண்முகம் போல வெட்கப்படவோ, வேலுச்சாமி போல இழிவாகக் கருதவோ தேவையில்லை. சமூகத் தேவை கருதியே அவர்களின் பண்பாடு இவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. மன்னாடிகள் மட்டுமல்ல, பின்னால் வந்து சேர்ந்த பிள்ளைமார் மற்றும் ரெட்டியார்களும் இப்பண்பாட்டை சுவீகரித்துக் கொண்டனர் இவ்வூர் முன்னோர்களின் சமூகப் பொருளாதாரத்தின் மேல் கட்டுமானமாக, இயற்கையாகவே முளைத்து எழுந்தது என்பது தெரிகிறது.

இன்னொரு செய்தியும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மதுரை மாவட்ட கையேட்டில் திரு.ஜெ.எச். நெல்சன் என்பவரின் குறிப்பில் ஒரு பத்துவயது சிறுவன், ஒன்றுக்கும் மேற்பட்ட அத்தை மகள்களை மணம் முடிக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறான். அவனுக்குப் பருவ வயது வரும்வரை, அவனைவிட வயதில் பெரியவர்களான அவனுடைய மனைவிகள், தன் சாதியைச் சார்ந்த யாருடனும் உறவு வைத்துக் கொள்கின்றனர். அந்த உறவின் வழி, அவனது மனைவிகள் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு, அச்சிறுவனே பெயரளவில் தந்தையாகக் கருதப்படுகிறான். ஒன்பது அல்லது பத்துவயது சிறுவன் பெயரளவில் இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகளின் தந்தையாக இருப்பான் (தென்னிந்திய குலங்களும், குடிகளும்). இது குறித்து, அக்கிராமத்தில் விசாரித்த பொழுது, இப்படிப்பட்ட பண்பாடு இல்லவே இல்லை என உறுதியாகக் கூறுகின்றனர்.

இப்பண்பாட்டின் எச்சங்கள் திருமணச் சடங்குகளில் எங்களுக்கு கிடைக்கவில்லை. பூப்பு நன்னீராட்டு விழாவில் கிடைத்தது. அவ்விழாவில் பெண்ணுக்கு சீர்வரிசை செய்யும் பொழுது, ஒரு சிறுவனுக்கு துணியை தலையில் கட்டி அப்பெண்ணின் அருகில் சடங்கு முடியும் வரை நிற்க வைத்து விடுகிறார்கள். சடங்கு முடிந்ததும் அச்சிறுவன் விளையாடச் சென்றுவிடுகிறான். இதுகுறித்து, அக் குடும்பத்தார் மட்டுமின்றி பெரியவர்களிடமும் விசாரித்த பொழுது, இதற்கான காரணத்தை அவர்களால் சொல்ல இயலவில்லை. திரு நெல்சன் காலத்திலிருந்த அந்தப் பண்பாட்டின் எச்சமே, சடங்காக (பொருள் புரியாமல்) இன்றும் நீடித்து வருகிறது. அப்பண்பாட்டு நடவடிக்கை வழக்கொழிந்து போனது.

1881-ஆம் ஆண்டு, அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.ஜே. வால் ஹவுஸ் தனது குறிப்பேட்டில் “பழனி மலைச்சரிவில் வாழும் குன்னுவ சாதியார் தம்சாதிப் பெண்கள் வெள்ளை ஆடையுடுத்த ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இதற்கான காரணத்தை விளக்குவார் யாருமில்லை. இந்த விதிக்குப் புறம்பாக நடந்த பெண்கள் உயரமாகவுள்ள பாறையிலிருந்து உருட்டப்பட்டதைப் பார்த்தவர்கள் இன்றும் வாழ்கின்றனர்” எனக் குறித்துள்ளது இன்னொரு செய்தியாகும். இச்செய்தி பற்றி கிராம மக்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. எனினும் குருசாமி, எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாக வாழ்ந்துள்ளனர் என்று கூறியது சரியே என உறுதியாகிறது. பெண்கள் குறைவாக உள்ளதால்தான் வளை போடுதலும், சுலபமான விவாக முறிவுகளும், சிறுவனுக்கு பல பெண்களை மனைவிகளாக்குவதுமான நடைமுறைகள் தேவை கருதி உருவாக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஒரு பெண் தனது கணவர் மரணத்திற்குப் பின், எந்த ஆடவரோடும் உறவு வைக்கமாட்டேன் எனக் கூறுவது, இக்கிராம சமூக வாழ்க்கைக்கு நேரெதிரான, சிக்கலான, பயனற்ற நடைமுறையாக உருவாவதை கிராமச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. விதவையால் கிராமத்திற்கு எந்தப் பலனுமில்லை. சந்ததிகளை மேலும் மேலும் உருவாக்க வேண்டிய தேவையுள்ள இக் கிராமத்தின் நலனுக்கு அவள் எதிரி மட்டுமல்ல, அவர்களின் உழைப்பால் உருவான சமூக ஆதாயங்களை விரயம் செய்பவளாகவே கருதப்பட்டிருக்கிறாள். எனவேதான், இவர்களின் சமூகத் தேவையை நிறைவேற்ற தயாரில்லாத பெண்களை, மலை உயரத்தில் இருந்து தள்ளி கொன்று விடுவது இக்கிராமத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்ட சமூக நியதியாகும்.

ஒருவனின் மனைவியாக உள்ளவள் கணவனின் கருத்தை மீறி நடந்தாலும், கிராம முடிவை மீறி நடக்க முனைந்தாலும், அவள் கணவனால் மலை உச்சியில் இருந்து தள்ளிக் கொல்லப்படுவது 1930களில் நடந்ததாக குருசாமி தெரிவிக்கிறார். “மானுடவியல் நேரடி ஆய்வுகள், வளர்ச்சி முடங்கிய சமுதாயங்கள் இருப்பதை நமக்கு அறிவுறுத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் உற்பத்தி சக்தி வளர முடியாமற் போனால் வளர்ச்சி முடங்கிப் போகிறது. வளர்ச்சி முடக்கத்திற்கு உட் சுய தேவைப் பூர்த்தி, பூகோளரீதியாகவும், சமுதாயரீதியாகவும் ஒரு சமுதாயம் தனிமைப்பட்டிருத்தல் ஆகியவை காரணமாகும்” (பண்டைத் தமிழ்ச்சமூகம், வரலாற்றுப் புரிதலை நோக்கி... கார்த்திகேசு சிவதம்பி. பக்.31)

12-ஆம் நூற்றாண்டில் மூணாறு பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்து, பழனிக் குன்றுகளில் நிலைகொண்டு வாழ்ந்த குன்னுவ மன்னாடிகளின் கிராமச் சமுதாயம், வளர்ச்சி குன்றி 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் முடங்கிப் போன செய்தியை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது. இதன் காரணத்தை கண்டறிவது கடினமே. மருதம், முல்லை நிலங்களின் சமூக வாழ்வு குறித்து ஆய்ந்தறிந்து கொள்வது போன்று, குறிஞ்சி நிலத்தின் சமூக, பொருளாதார வாழ்வை ஆய்ந்தறிவது கடினமே என கா.சிவதம்பி தனது “திணைக் கோட்பாட்டின் சமூக அடிப்படைகள்” என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

குறிஞ்சியின் முக்கிய ஒழுக்க வடிவமானது, புணர்தலும், புணர்தல் நிமித்தமும். இனக்குழு சமூகத்தின் இவ்வகை ஒழுக்கமானது, மிகமிக மெதுவாகவே வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இச்சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது, அணுஅணுவாக மிகவும் மெதுவாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, பழனி மலைக் குன்றுகளில் வாழும் குன்னுவ மன்னாடிகளின் மேற்கண்ட பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அணுக வேண்டும்.

“ஒரு சமூகத்தின் அமைப்பு முறையை விளங்கிக் கொள்வதில் நான்கு முதன்மையான கூறுகள் உள்ளன. 1.குடிவழி 2. திருமணத்திற்குப் பின் தம்பதியர் வாழுமிடம் 3.சொத்துரிமை யாருக்கு கிடைக்கிறது 4.குடும்பத்தை நிர்வகிக்கும் அதிகாரம் யாரிடம் அமைகிறது, என்பவையே அந்த நான்குக் கூறுகள்” (தமிழர் மானுடவியல்-பக்தவச்சல பாரதி. பக்.10)

மேற்கண்ட கோட்பாடுகளைக் கொண்டு வில்பட்டியின் குன்னுவ மன்னாடி, ரெட்டியார், பிள்ளைமார்களின் மணமுறை, வளை போடல், சிறுவனுக்கு பல பெண்களை மணம் செய்வித்தல் போன்ற பண்பாட்டு நடவடிக்கைகளை அணுகலாம்.

முதல்வகை: பெண் திருமணம் முடிந்து மணமகன் வீட்டில் குடியேறுகிறாள். தந்தையின் சொத்துக்கள், இவள் வழி பிறந்த குழந்தைகளுக்கு செல்கின்றன. குடும்பத்தை நிர்வகிக்கும் அதிகாரம் தந்தையுடையது. அதாவது இது தந்தைவழிக் குடி முறையாகும். மணம் முறிந்துபோனால் குழந்தையை தந்தையிடம் கொடுத்துவிட்டு வேறுமணம் புரிந்து கொள்கிறார்.

இரண்டாம்வகை: வளைபோடுதல் என்ற மணச்சடங்கு. இதில் பெண் தாய்வீட்டில் தங்கி இருக்கிறாள். வளைபோட்ட மணமகன் இவள் வீட்டில் தங்குகிறான். பலருடன் உறவு கொண்டு பிறக்கும் குழந்தைக்கு அவனே தந்தையாகிறான். சொத்துரிமை பெண்ணுக்கு. இவனுக்குப் பின் இவள் குழந்தைகள் சொத்துக்கு உரிமையுடையவளாகிறார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் அதிகாரம் பெண்ணிடம் இருக்கிறது. எனவே இவ்வகை மணத்தை தாய்வழிக்குடி வழி முறை என மானுடவியலாளர் அடையாளப்படுத்துகிறார்கள். இம்மண முறை மட்டும் 1960 வரை நீடித்து வந்துள்ளது.

மூன்றாம் வகை: ஒரு சிறுவனுக்கு பல பெண்கள் தாலி கட்டிக்கொள்ளும் முறை. தாலி கட்டிக்கொண்ட பெண்கள் அவரவர் வீட்டில் வாழ்கின்றனர். பலரிடம் உறவு வைத்துப் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறுவனே பெயரளவில் தந்தையாக இருப்பான். உறவு கொள்ளும் ஆண்கள் தரும் சொத்துக்களுக்கு பெண் உரிமையாகிறாள். பின்னாளில் இவனது குழந்தைகள் சொத்துக்கு உரிமையாகிறார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் உரிமை பெண்களுக்கானது. இதுவும், தாய்வழிக் குடிவழி முறையின் இன்னொரு வடிவமாகும்.

எனவே வில்பட்டிக் கிராமத்தின் குடி வழி முறையானது, தாய்வழி மற்றும் தந்தைவழி குடிமுறை என்ற இரண்டு வகையான குடிவழிமுறைகளை கொண்டிருந்தது என அறிகிறோம். தந்தை வழிக்குடி வழிமுறையை மக்கட்தாயமுறை என்றும், தாய்வழி குடிவழிமுறையை மருமக்கட்தாய முறை என்றும் மானுடவியலாளர் பகுத்துள்ளனர். சங்க காலத்திலும் இவ்விருவகை குடிவழி முறைகளும் இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியத்திலும் உண்டு.

“கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே | எம்இல் அயலது ஏழில் உம்பர் | மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி” (குறுந்தொகை-138)

“அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக | பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை- | தம்இல் தமது உண்டன்ன சினைதொறும் | தீம்பழம் பலவின் | ஓங்குமலை நாடனை வரும் என்றோனே. (குறுந்தொகை-183)

சங்க நூல்களுள் பதிற்றுப்பத்து, மருமக்கள்தாய முறையை நன்கு பதிவு செய்துள்ளது. எட்டுப் பதிகங்களும் சேரர்களின் தாய்வழி குடிவழி முறையை விளக்குவதாக மு.ராகவையங்கார் குறிப்பிடுகிறார். எனவே மருமக்கட்தாய முறையைக் கொண்டிருந்த குன்னுவ மன்னாடிகள் புலம் பெயர்ந்து வந்தபோது பழனிக் குன்றுகளில் வாழ்ந்து வந்த புலையர்களின், பனியர்களின் மணமுறையானது தாய் வழி மற்றும் தந்தைவழி குடிமுறையில் நிலவி இருக்கவேண்டும். வந்தவர்களின் பண்பாடு, இருந்தவர்களின் பண்பாட்டுடன் ஒத்திசைவு கொண்டிருந்தது. பண்பாட்டுக் கலவைக்கு இது ஏதுவாகிப் போனது.

19-ஆம் நூற்றாண்டில் வில்பட்டியின் கிராம சமுதாய வளர்ச்சிக்கு பெண்களின் எண்ணிக்கைக் குறைவு, பெரும் தடைக்கல்லாக இருந்துள்ளது. முழுமையான ஆண் ஆதிக்க சமுதாயத்தை நோக்கி, சமூகம் நகர்ந்து செல்வதையே மேலே கண்ட மூன்று வடிவங்களும் குறிப்பிடுகிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொத்துரிமை இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர் வரவுக்கு முன்பு நில உரிமையைக் குறிப்பதற்கு, வில்பட்டி மக்கள், மேல்மந்தை, கீழ்மந்தை, இன்னும் சில இடங்களில் உள்ள கற்களில், நில விற்பனை குறித்து கல்வெட்டு மூலம் உறுதி செய்துள்ளது தெரிகிறது.

“புல்லன் திண்ணி மன்னாடிக்கு கிரய *“(பெருக்கல் குறி பதிவு அலுவலகத்தின் ரப்பர் ஸ்டாம்பு போல் பயன்பட்டுள்ளது) என்ற கல்வெட்டு பன்னிரண்டு சாமியாகும் பட்டியலில் உள்ள கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது. இது ஆணுக்கான நிலஉரிமை குறித்த சான்று. இது மிகவும் பழையது. மற்றொன்று ஆங்கிலேயர் ஆட்சியின்போது வில்பட்டி பழனி வட்டத்துடன் இணைந்திருந்தபோது அதாவது 1897ஆம் ஆண்டு வில்பட்டியின் குப்பம்மாள் என்ற பெண்ணுக்கு பழனி கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் நாலணா (இன்றைய 25காசு) கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக் கடன் 1967ல் ரத்து செய்யப்பட்ட பொழுது வட்டியும் அசலுமாக ரூ.1,25,000 (ஒரு லட்சத்து இருபத்தையாயிரம்) ஆகியிருந்தது. இந்த விபரத்தை அளித்தவர் வில்பட்டி கிராம முன்சீப்பாக இருந்து ஓய்வு பெற்ற முதியவர் திரு.குருசாமி ஆவார்.

ஆண்களும், பெண்களும் சமமாக உள்ள சமூகத்தில்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை நிறுவ இயலும். வெகுவாக பெண்கள் குறைந்துபோன சமுதாயத்தில், அதிகமான ஆண்கள் இருப்பதால் அவர்களின் ஆதிக்கம் இருக்கும் ஆனால் அதற்கான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க இயலாது. எனவேதான் ஆண்களின் முடிவாக மேற்கண்ட மூன்று மண வடிவங்களை உருவாக்கி அதன் மூலம் இனத்தை குறிப்பாக பெண்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முனைந்துள்ளனர் எனத் தெரிகிறது.

கட்டைத் திருவிழாவிலும், ஒவ்வொரு ஆண்டும் பங்குனியில் கொண்டாடும், பன்னிரண்டு நோன்பிலும் கொப்பேரன் என்ற சாமி குறித்து சென்ற கட்டுரையில் விவாதித்துள்ளோம் (புதுவிசை-19). கொப்பேரன் பண்பாட்டுக் கலவையின் சின்னமாக கட்டமைக்கப்பட்டுள்ளான். கொப்பேரனாக ஆடும் மருளாடியின் மீது சிறுசிறு தெய்வங்கள் மட்டுமல்ல, இறந்தவர்களின் ஆவியையும் வரவழைத்து உறவினர்கள் அழுவதையும் பார்த்தோம். மறைந்துவிட்ட சட்டப்பன்களின், தேராடிகளின் ஆவிகளையும் வரவழைத்து உரையாடியதையும் குறிப்பிட்டுள்ளோம். இறந்து போன தேராடி, சட்டப்பன்கள் தவிர்த்து இதர ஆவிகள் குறித்து, கவனிக்கும்பொழுது, இவர்களில் பெரும்பகுதியினர் மலையுச்சியிலிருந்தும், அருவிகளிலிருந்தும் விழுந்து இறந்தவர்களாகவே உள்ளனர்.

ஏழு ஏர்களில் பதினான்கு மாடுகளைப் பூட்டி ஏழு சகோதரர்கள் வயலை உழுதுகொண்டிருந்தபோது, அவர்களின் ஒரே சகோதரி இவர்களிடம் சென்றாள். பின்பு எட்டுபேரும், தமது பதினான்கு காளைமாடுகளையும் உயரமான அருவியில் தள்ளி விட்டு அவர்களும் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தி, கொப்பேரனின் மருளாட்டம் மூலம் தெரியவந்தது. கொப்பேரன் இந்த எட்டுபேர்களின் ஆவியை வரவழைக்கிறார். குறிப்பிட்ட குலத்தைச் சார்ந்தவர்கள் வந்து தேராடி காலில் விழுந்து அந்த ஆவிகளிடம் நல்ல வாக்கு கேட்கிறார்கள். அச்சமயம் கண்ணீர்விட்டு அழுகின்றனர். செவலை, காரி, மயிலை என இறந்து போன மாடுகளின் ஆவியும் வரவழைக்கப்படுகிறது. இது குறித்து அறிய வில்பட்டியின் முதியோர்களை அணுகினோம்.

“தகாத நடத்தையால் தான் கர்ப்பம் தரித்ததை, நிலம் உழுது கொண்டிருந்த அண்ணன்களிடம் சொல்ல, மானம் போய்விட்டதாகக் கருதி அவர்கள் எல்லோரும் தற்கொலை செய்த கொண்டனர்” என்றார் ஒருவர். மற்றொருவர் “அந்தப்பெண் கற்பழிக்கப்பட்டு விட்டாள். இதனால் தற்கொலை செய்து கொண்டனர்” என்றார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறினார்கள். இவர்களின் தற்கொலைக்கு, கிராம சமுதாயமே காரணமாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதலாம். மேலே கண்ட தாய்வழிக் குடிவழிப் பண்பாட்டிற்கு அப்பெண் இணங்காது போகையால், அவள்மேல் அண்ணன்கள் வைத்திருந்த அன்பின் காரணமாக, செய்வதறியாது இத்தற்கொலையை மேற்கொண்டுள்ளனர். எனவேதான் இவர்களின் நினைவாக இக்கிராம மக்கள் கொப்பேரனின் மூலமாக, வழிவழியாக வணங்கி வருகிறார்கள். இதுமட்டுமல்ல, கொப்பேரன் மூலம் வரவழைக்கப்படும் ஆவிகள் குறிப்பாக பெண் ஆவிகளின் வரலாறு அனைத்தும் மலையுச்சியில் இருந்து விழுந்து அல்லது விழவைத்து இறந்தவர்களாக இருக்கிறது. எனவே சமுதாயத்தை எதிர்த்தவர்களின் முடிவு இப்படிப் பட்டதாகவே இருக்கிறது. இது ஆண் ஆதிக்க சமுதாய உருவாக்கத்திற்கான நடவடிக்கையாகும்.

இன்னொன்று, கொப்பேரன் ஆவி வரவழைத்து ஆடும்பொழுது, பச்சப் புள்ளே பாப்பாரப்புள்ளே... எனக் கூவியழைத்து, மருன்காயால் செய்யப்பட்ட பூணூல் அணிந்து ஆடுவது குறித்து குறிப்பிட்டிருந்தோம். ஒரு பார்ப்பனப் பெண் இப்படிப்பட்ட சூழலில் சிக்கி அருவியில் விழுந்து இறந்திருக்க வாய்ப்புள்ளது. அவளது நினைவாக அவளுடைய ஆவியும் வரவழைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. எனவே கொப்பேரன் என்ற கட்டமைப்பில், பொருளாதார அடிப்படை மட்டுமின்றி அகவாழ்வின் விளைவுகளும் செறிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

“குழுமணக் குடும்பத்திற்கும், தந்தை தலைமைக் குடும்பத்திற்கும் இடைப்பட்ட நிலையைக் கொண்டதே நிலையற்ற மணக்குடும்பம் ஆகும். இவ் வகைக் குடும்பத்தில் ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு ஒருவரை ஒருவர் நிலையாக இணைந்து வாழாமல் நினைத்தபோது மணவுறவைத் துண்டித்துக் கொண்டோ, பிற துணையுடன் சேர்ந்தோ வாழ்வர். எவ்வகையான துணையுடன் உறவு கொண்டு வாழும் போதும் அவர்களுக்கிடையே மிகுந்த பிணைப்பு இருப்பதில்லை” (மானுடவியல் கோட்பாடுகள் - பக்தவச்சலபாரதி - பக்-93)

சங்க காலத்தில், தாய்வழிச் சமூகத்தின் பண்பாடான குழுமணம் அல்லது அகமணம் குறித்த பதிவுகளும் உண்டு. “சிறுவர்தாயே பேரிற்பெண்டே” (புறம்.270) “முனரி மருங்கின் முதியோன் சிறுவன்” (புறம்278) போன்ற பாடல்கள் தாய்த்தலைமையைக் குறிக்கும் பாடலாகும். பின்பு குழுமணம் தடை செய்யப்பட்டு புறமணத்தை நோக்கி சமூகம் நகர்ந்து செல்வதையும் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.

“யாயும் யாயும் யாராகியரோ| எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்| யானும் நீயும் எவ்வழியறிதும் செம்புலப் பெயனீர் போல| அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (குறு) - தனி உடைமையின் தோற்றமானது, மேற்குறித்த பாடலில் பொருள் பொதிந்த காதல் வாழ்வை நிர்மூலமாக்கிவிட்டது. சங்ககாலம் கனவாக மாறிப்போனது.

கொப்பேரன் காளை மாடுகளின் கொம்பையும், கொப்பையும் உருவகப்படுத்தியது தெரியும். மானுடவியலார் கொம்பு என்பது வளத்தை, வளர்ச்சியைக் குறிக்கும் என்பர். எட்கர் தர்ஸ்டன் அவர்களும், வளப்பன் என்ற தெய்வத்தை குன்னுவ மன்னாடிகள் வணங்கினர், அவர்கள் சைவர்கள் என்கிறார். வளப்பன் என்ற தெய்வம் குறித்து எந்தத் தடயத்தையும் இன்று காண இயலவில்லை. கொப்பேரனின் அன்றைய மறுபெயராகக் கூட கொள்ள இடமுண்டு. இன்றும் கொப்பேரனுக்கு பன்னிரண்டுசாமி என்ற இன்னொரு பெயரும் உண்டு. பிள்ளைமார்களும், ரெட்டியார்களும் இப்பண்பாட்டில் இரண்டறக் கலந்துவிட்டமையால், இக்கொப்பேரன் இக்கிராமத்தில் பிற்காலத்தில் குடியேறிய அனைத்து சாதியினரின் நம்பிக்கைக்கு உகந்த தெய்வமாக இருக்கின்றான்.

பிற்காலத்தில் குடியேறிய குடும்பங்களில் உள்ள ஒருநபர் இம்மூன்று சாதியினருடன் கலப்பு (புணர்ச்சி) கொண்டால், அவர்களை உறவு கூறி அழைக்கும் முறை இன்றும் உண்டு. இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் என அனைத்து மதத்தினரும், அனைத்து சாதியினரும் கொப்பேரன் காலில் விழுந்து ஆசி பெற்றுச் செல்லும் வழக்கம் இன்றும் உள்ளது.

புணர்தலும், புணர்தல் நிமித்தமும் என்பதை சங்க இலக்கிய மரபு குறிஞ்சியின் உரிப்பொருளாக, இலக்கணப்படுத்தியது. இன்றும் இக்கிராமம் அதன் கூறுகளைக் கொண்டதாகவே இருக்கிறது. புணர்ச்சி நடத்தையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வீழ்ந்து விட்ட உற்பத்தி சக்தியை உசுப்பி விட முனைந்து செயலாற்றியதே நிலையற்ற மணக்குடும்பத்தின் சாரமாகும். பண்பாடு என்ற இந்த மேல்கட்டுமானம் இக்கிராமத்தில், பொருளாதார அடிப்படையை அதாவது ஆண் ஆதிக்க சமூகத்திற்கு பொருத்தமான பொருளாதார அடிப்படையை வளர்த்தெடுக்க செயலாற்றுகிறது.

தாய்வழிச் சமூகத்திலிருந்து, தந்தை வழிச் சமூகமாக மாறும் இடைக் கட்டங்களில் பெண்கள் கொடுந் துன்பத்திற்கும் எல்லையற்ற கொடுமைகளுக்கும் ஆளாகியுள்ளனர் என்ற உலக வரலாற்றோடு வில்பட்டியின் வரலாறும் பொருந்தி நிற்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com