Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2008

சம்பு கவிதைகள்
.

மூன்று நகரக் குறிப்புகள்

பைத்தியமே தன் இலக்கு என்றவன்
லஜ்ஜையற்று கையேந்தி யாசிக்கும் பரவசத்தையும் கூட
தன்முனைப்பை அழித்துப்பெறும் தருணமொன்று வாய்க்குமானால்
தனது கடவுளரை வரவழைத்து
சண்டையிட்டு மல்லுக்கட்டி முதுகிலேறி சவாரி செய்வேனென்றான்

லௌகீக ஞாலம் தன் பிடிக்குள் அமிழ்த்திவிடு
மென்பதால்
பெரு நகர மருத்துவமனையன்றில் நுழைந்து கொண்டான்
கெஞ்சிக் கூத்தாடி

தினசரித் தகராறுகளில் மனமுடைந்த செவிலியர்களின்
மன்றாடலுக்கு மனமிரங்கி கடவுளும் வந்தேவிட்டார்
அவர் ஜீன்ஸ் அணிந்து வந்தும் கூட
அடையாளம் கண்டுகொண்ட நகரப் பைத்தியகாரனை
லாவகமாகத் தவிர்த்துவிட்டு உள்நுழைந்தார் மருத்துவமனைக்குள்
பதட்டமுடன் வரவேற்ற மருத்துவரைக் கையமர்த்தினார்
வருகையின் ரகஸ்யம் பேணும்படி

படுக்கையிலிருந்து எழுந்தவன் அவரைக் கண்டதும்
முகம் திருப்பி பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க மறுத்தும்
அன்றைய ரொட்டித்துண்டுகளை உண்ணாமலும் போக்குக் காட்டினான்
பத்தாயிரத்தெட்டு ஜோலிகளைப் பத்திரப்படுத்திவிட்டு
வந்திருப்பதாயும்
ஐந்து பைசா மதிப்பின்றி அவமதிக்க வேண்டாமென்றும்
தயவுசெய்து வெளியேறும்படி தாஜா செய்யவும் முயன்றார் கடவுள்

நோய்க் குறிப்பேடுகள் அவரின் பார்வைக்குட்பட்டு
அவன் பாசாங்கு செய்வதாக குற்றம் சாட்டியவர்
சபித்துவிடுவதாகவும் மிரட்டிப் பார்த்தார் அவன் மசியவில்லை
சோர்ந்து படுத்தே விட்டார் அவர்

நகரக் குறிப்பு -1

வழக்கம் போல் ஆரம்பித்திருந்தது
நகரத்தின் காலைப் போக்குவரத்து

பேருந்தில் ஏறுகிறாள் மஞ்சள் நிறத் தோல்பையுடன்
தங்கும் விடுதியின் வரவேற்புப் பெண்

குதித்தபடி சாலையைக் கடந்து போகிறான்
64வது முறை ஒரு கவிதைக்குள் தான்
அடைபடப்போகும் அபாயமறியாமல்
நகரப் பைத்தியக்காரன்.

அடையாளம் மாறிப்போய் குத்தப்பட்ட ஊசியால்
அசதிக்கு கண்ணயர்ந்த கடவுளால் விழிக்க இயலவில்லை
மயங்கிப் போனார் கண்ணீர் உகுத்தபடி

யாவரும் கடந்து போயினர் அவர் குறித்த
யாதொரு கிலேசமுமின்றி

மதிய விழிப்பில் தொண்டை கிழிய கத்தினார்
ஒரு கோப்பைத் தேநீருக்காக
பதில் ஏதுமில்லை

பயத்துடன் தப்பிக்க எழுந்தோடி கழிவறைக்குள் புகுந்தவர்
வெடித்துக் கிளம்பிய நெடியில்
வெளியே வந்து விழுந்தார் ஜன்னலைக் கிழித்தபடி

நகரக் குறிப்பு - 2

வரிசையாகக் காய்களை சீவத் துவங்குகிறான்
சாலை முனையில் இளநீர் விற்பவன்

யாருமற்ற சாலையின் மதியப்பொழுதில்
யாசித்துக் கிடக்கிறான் நோய்முற்றிய பிச்சைக்காரன்

பெரிய பன்றியைத் தொடர்ந்து
உரசியபடியோடுகின்றன குட்டிப்பன்றிகள்

மருத்துவமனை விட்டகன்றவன் ஒளிவட்டம் உறுதியானபின்பு
கணினியின் முன்னமர்ந்தான் தலையைத் தடவியபடி
சிறிய குவளைகளில் அடைந்திருக்கும் திருடப்பட்ட
உறக்கவில்லைகளின் ஆறுதலில் விரல் பதிக்கிறான்
கீ போர்டில்
‘நீண்டு பரந்த சமவெளிப் பிரதேசத்தின் கிளைத்துப் பரவும்
விருட்சங்களென’ திரும்பவும்
யோனி மயிர் குறித்தே எழுத்துக்கள் பரவ
சட்டையைக் கிழித்தபடி மானிட்டரை உடைக்கிறான்

நகரக்குறிப்பு - 3

மரக்கிளையில் தாவும் அணில்கள் குறித்த
அக்கறையற்று
ஆஞ்சநேயர் படத்துடன் முதல் பிச்சைக்கு
தயாராகிறாள் எட்டுவயதுச் சிறுமி

பறந்து போகும் கிங்ஃபிஷரின் கார்கோவில்
பதுங்கியிருக்கும் கடவுளை அறியாமல்
கையசைத்து சீட்டியடிக்கிறான் பைத்தியக்காரன்.


வறண்ட கருணை

புன்னகைகளால் நிரம்பி நகரும் அவளுள்
ரகஸ்யங்கள் எதுவுமில்லையென தனது நாட்குறிப்பைத்
திறந்தே வைத்திருந்தாள்

உரையாடல்கள் யாவற்றிலும் வலியுறுத்தியபடியிருந்தாள்
முகமூடிகள் ஒது போதும் தனக்குத் தேவையில்லையென

பெயர் அறியா நெடிய மரத்தினடியில் முதல் காதல்
கிழிந்து தொங்குகையில் தனது
குழந்தைமை அகலா விழிகளில்
எல்லையற்றுச் சுரக்கும் அன்பினால் சமநிலைப்பட முனைந்தாள்

விரல் கோர்த்து அழுந்தாத உரையாடல்களையும்
தூங்கும் பாவனையிலாவது விரல்படா பிரயாணங்களையும்
போங் காலத்தின் வறண்ட கருணையென
தனது குறிப்பேடுகளிலிருந்து விலக்கி வைத்திருந்தாள்

நகரத்தின் சீதோஷ்ணம் குளிர்மைப்படுகையில்
அளவிறந்த வெப்பமூட்டும் கரங்களையும் வலிந்து
உருவாக்கியபடி இருந்தாள்

எனினும் தன் குறிப்பேட்டின் 120ஆம் பக்கத்தில்
‘ஒளிரும் முகங்களுடன் அறிமுகமாகுபவர்கள்
மாயப்பொடியை தங்களது மேனியில் அப்பிக்கொண்டிருக்கிறார்களென’
எழுத முற்படும்போது
நகரின் ஆகாயம் உடைந்து விழுந்தது
அவள் தலை மீது

இடையறாது யோனியுமிழும் சுழற்சிக் குருதி வெப்பம்
இந் நகரை அழித்தொழிக்கும் சாபமொன்றுடன்
நகர்ந்து போகும் அவளுள்
மர்மங்கள் எதுவுமில்லையெனவும் உள்ளங்கைகள் விரிக்கிறாள்

விரல் பிரிந்து பிரிந்து குவிகையில்
மாயத்திரை யொன்றைப் போர்த்துகிற அவள்முகம்
27 வது முறையாக....


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com