Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2008

தீண்டப்படாதவர்களின் தீண்டப்பட்ட அறிவியல் தொழில்நுட்பம்
கோ. ரகுபதி
.

சமூகவியல் ஆய்வில் இரண்டு சமூகங்கள் குறித்த முரணான பதிவுகள் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. வரலாறு, சமூகவியல், மானிடவியல் என எந்தத் துறையினை எடுத்துக் கொண்டாலும் அத்துறைகளில் கூர்மதி படைத்தவர்கள் இந்நாட்டவராயினும் அல்லது அன்னியராயினும் முரணான பதிவை பதிவு செய்வதில் அவர்களுக்குள் முரணில்லை; விதிவிலக்காக சிலர் இருக்கலாம். இங்கே இரண்டு சமூகங்கள் என்று குறிப்பிடுவது ஒரு பிரிவினர் தலித்துகள் மற்றொரு பிரிவினர் பார்ப்பனர்கள் மற்றும் மேல்சாதியினர். முன்னவரை பண்ணையடிமைகள், உடலுழைப்பாளர்கள், கல்வி மறுக்கப்பட்டவர்கள், அறிவற்றவர்கள் என்றும் பின்னவரை வேதவிற்பன்னர்கள் என்றும் பதிவு செய்திருப்பது முரணான பதிவுகள். இம்முரணான பதிவுகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இச்சமூக அமைப்பில் அச்சமூகங்களிடம் நடைமுறையிலிருந்த/இருந்து வரும் அறிவுக்கும் திறனுக்கும் ஒவ்வாத இடங்களில் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டிருப்பதே.

அறிவற்றவர்கள், உடலுழைப்பாளர்கள் என்ற இழித்துரைக்கப்பட்ட தலித்துகள் சமூகத்தின் கீழ்த்தட்டிலும் வேதவிற்பன்னர்கள் எனப்பட்ட பார்ப்பனர்கள் உச்சத்திலும் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர். தலித்துகள் இச்சமூக அமைப்பின் கீழ்த்தட்டில் இருப்பதற்கான தகுதிதான் அவர்களிடம் இருக்கிறதா? பார்ப்பனர்கள் மேல்தட்டில் இருப்பதற்கு அவர்களிடம் அப்படி என்ன தகுதிதான் இருக்கிறது?

தலித்துகளை வெறும் உடலுழைப்பாளர்கள் என்று ஆய்வாளர்கள் அழைப்பதானது அவர்களை நவீன ஆலைத் தொழிலாளர்களுடனும் இயந்திரங்களுடனும் ஒப்பிடுவதாகும். ஒரு பொருள் எந்த அளவில், எந்த தன்மையில் இருக்கவேண்டும் என்பது ஏற்கனவே இயந்திரத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதால் அது ஆலைத்தொழிலாளியால் இயக்கப்பட்டவுடன் அப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். இயந்திரத்தை நிறுத்தினால் உற்பத்தி நிறுத்தப்படும். உற்பத்தி செய்வதற்கு பலவகையான இயந்திரங்கள் பல அறிஞர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று பல்வகையான உற்பத்தியில் ஈடுபட்ட தலித்துகளை வெறும் உடலுழைப்பாளர்கள் என்று கூறுவது அவர்கள் இயந்திரங்கள் போல் இயக்கப்பட்டார்கள் என்று கூறுவதற்கு இணையானது. அதாவது, இயந்திரங்கள் பிறரால் கண்டுபிடிக்கப்பட்டது போல், ஒரு பொருள் எந்த வடிவத்தில், எந்த தன்மையில் இருக்க வேண்டுமென ‘’தலித்துகளை பிறர் இயக்கினர்’’ என்று கூறுவதற்கு ஒப்பானது. தலித்துகள் அறிவற்றவர்கள்; உற்பத்தியில் அவர்களின் மூளை செயல்பட்டிருக்கவில்லை; அவர்கள் இயக்கப்பட்டார்கள் என்பதுதான் இதன் உள்ளார்ந்த பொருள்.

அவ்வாறென்றால் அவர்களை இயக்கிய மூளை யாருடையது? அதாவது இவ்வாறு உழவு செய்! இவ்வாறு நடவு செய்! அல்லது அவ்வாறு உழவு செய்வது தவறு! என்று அவர்களை இயக்கியது யார்? அறிவாளிகள் என்று புகழப்பட்ட பண்ணையார்களாயிருந்த பார்ப்பனர் மற்றும் மேல்சாதி இந்துக்களின் மூளையா? இந்த கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவதன் மூலம் அம்முரணான பதிவுகளை காண்பதற்கு இயலும். மேலும் எவ்விடத்தில் இருக்க யார் தகுதி பெற்றவர்கள். யாரைத் தீண்ட வேண்டும் யாரைத் தீண்டக்கூடாது என்பதையும் அறிவிக்க முடியும்.

வேதம்: யாசிப்பின் தொகுப்பு

இந்திய சாதிய சமூகத்தில் யார் யார் என்னென்ன தொழில்களைச் செய்ய வேண்டுமென்று பார்ப்பனச் சட்டங்கள் வழங்கியுள்ள இறுக்கமான வரையறைகளை மேல்சாதியினர் மீறத் துணிந்திருக்கவில்லை. காலனிய ஆட்சிக்காலத்தில் 1819ல் சென்னை மாகாண மாவட்ட ஆட்சியர்கள் பண்ணையடிமைகள் குறித்த புள்ளி விவரங்களைச் சேகரித்து அறிக்கை அளித்தபோது ஒரு மாவட்ட ஆட்சியர் இவ்வாறு கூறினார்: ‘சாதி அமைப்பு இருக்கும் வரை - பார்ப்பனர்கள் விவசாயம் செய்வதற்குத் தடையிருக்கும்வரை - பண்ணையடிமை முறை இருப்பது தவிர்க்க இயலாது’. இந்துச் சட்டங்கள் முதற்கொண்டு காலனிய ஆட்சியாளர்கள் வரை பார்ப்பனர்கள் விவசாயம் செய்யாதிருப்பதை ஆதரித்திருக்கின்றனர்; மேலும் பண்ணையடிமைகளாக்கப்பட்டிருந்த பறையர் பள்ளர் போன்றோர் விவசாயத்தில் ஈடுபடுவதைக் கட்டாயமாக்கினர். தன் நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியிலிருந்து கோயம்புத்தூர் பகுதிக்கு அறிவிக்காமல் இடம்பெயர்ந்த பள்ளர்களைக் கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொண்டது இதற்கான உதாரணமாகக் கூறலாம் (Dharma Kumar,1992;67-68).

இந்து சட்டங்கள் அவர்களை விவசாயத்தில் ஈடுபடுவதிலிருந்து தடை செய்யும் சட்டங்களை எழுதியது பார்ப்பனர்கள்தானே தவிர பிறரல்ல. அவர்கள் தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொண்ட தடை அவர்களின் புனிதத்தன்மையை (!) பாதுகாத்துக் கொள்வதற்காகவா? அல்லது அவர்களுக்கு விவசாயம் குறித்து அறிவின்மையால் அத்தடையை அறிவித்தனரா? பின்னதுதான் மிகச் சரியானதாக இருக்கமுடியும். காரணம், வேதத்தைக் கேட்டாலே கேட்பவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று அச்சுறுத்தி பிறரின் வாசிப்பிலிருந்து பாதுகாத்துக் கொண்ட வேதத்தில் அவ்வாறு என்ன ரகசியம்தான் கூறப்பட்டுள்ளது? வேதம் முழுவதையும் வாசித்தால் அதில் அறிவியல் குறித்தோ அல்லது உற்பத்தி குறித்தோ ஒரு வரியைக்கூட எங்கும் காண முடியவில்லை.

பார்ப்பனர்கள் தங்களின் உணவுக்காக இவ்வாறு வேண்டுகின்றனர்: நாங்கள் மனிதர்களைக் காண்பவனும், அனைத்தையும் அறிபவனும், இந்திரனுடைய பானமுமான உன்னைப் போற்றி, பிரசைகளையும் உணவையும் பெறுவோமாக (ரிக் வேதம், 2004; 13). அவர்கள் தங்களின் அனைத்துத் தேவைகளுக்கும் இந்திரனை, அக்கினியை இன்னும் பிற கடவுளர்களையே சார்ந்து இருந்திருக்கின்றனர். இந்தக் கடவுளர்கள் மூலம் பிறரின் செல்வங்களை தங்களுக்களிக்குமாறு இவ்வாறு கோரியுள்ளனர்: நீ செல்வங்களை தாராளமாயளிப்பவனாய் இருக்கவும். பகைவர்களை அழிப்பவனாயிருக்கவும். செல்வர்களின் செல்வங்களை எங்களுக்களிக்கவும் (ரிக்வேதம், 2004;1).

இதிலிருந்து பார்ப்பனர்கள் உற்பத்தி என்றால் என்ன? அதை எவ்வாறு செய்து கொள்வது என்பதை வேதகாலம் தொட்டு காலனியாட்சிக் காலம்வரை கிஞ்சித்தும் அறிந்திருக்கவில்லை என்பது வேதங்களிலிருந்தும் காலனிய ஆட்சியாளர்களின் ஆவணங்களிலிருந்தும் அறிந்து கொள்ள இயலும். வேதத்தை பிறரின் வாசிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு அதில் உற்பத்தி குறித்த எந்த ஒரு சூத்திரங்களும் இல்லை. இதிலிருந்து, நிலவுடைமையாளர்களாகயிருந்த பார்ப்பனர்கள் தலித்துகளின் உடலுழைப்பிற்கான மூளையாக ஒரு போதும் இருந்திருக்கவில்லை என்று உறுதிபடக்கூற முடியும். அவ்வாறென்றால் தலித்துகளின் உடலுழைப்பிற்கு மூளையாக இருந்தது யார்?

பள்ளர்களும் பறையர்களும் விவசாய பண்ணையடிமைகளாக இருந்தனர் என்று கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்பேடு, பள்ளு இலக்கியங்கள் போன்ற ஆதாரங்கள் மற்றும் காலனிய ஆட்சியாளர்களின் ஆவணங்கள் சாட்சியளிக்கின்றன (ஆ.சிவசுப்பிர மணியம்;2005). தமிழகத்தில் இச்சாதிகள் தவிர்த்து ஏன் பிற சாதியினரை பண்ணையடிமைகளாக பணியமர்த்தியிருக்கவில்லை? உண்மை என்னவென்றால், இடைநிலைச் சாதிகள் பலரும் விவசாயம் செய்வது குறித்து அறிந்திருக்கவில்லை. சிலர் இன்று விவசாயத்தில் ஈடுபடுவதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவர்களிடம் விவசாய அறிவு இருந்ததென்று கூறினால் அதனை ஏற்றுக்கொள்ள இயலாது. காரணம் அவர்கள் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்களாயிருக்க முடியாது. கற்றுக்கொண்டவர்களாகத் தான் இருக்கமுடியும்.

கள்ளரும், மறவரும், அகமுடையாரும் மெல்ல மெல்ல வெள்ளாளரானர் என்ற சொல்வழக்கிலிருந்து அவர்கள் விவசாயத்தைக் ‘கற்றுக் கொண்டனர்’ என்பதை அறிய முடிகிறது. ஆனால், மிகப் பழமையான சான்றுகள் தலித்துகளே விவசாய அடிமைகளாக்கப்பட்டனர் என்று கூறுவதன் பொருள் அவர்கள் மட்டுமே அன்று விவசாயம் செய்யும் அறிவு பெற்றிருந்தனர் என்பதாகும். தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு விபத்துகள் அவர்களை பண்ணையடிமைகளாக மாற்றியது என அறுதியுறலாம். இனி, தலித்துகள் தங்களின் அறிவியல் அறிவினைக் கொண்டு பல தொழில் நுட்பங்கள் மூலம், இவ்வுலகில் மனிதர்கள் மாண்போடு வாழ்வதற்கு இன்றியமையான உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றையும் உற்பத்தி செய்து கொடுத்தனர் என்பதையும்; உற்பத்தியில் அவர்களால் பயன்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தைக் காண்போம்.

இன்றியமையாத பொருள் உற்பத்தியில் தலித்துகள்

நாடோடிகளாய் சுற்றித் திரிந்து கொண்டு இயற்கையில் கிடைத்த காய்கனிகளையும், விலங்குகளையும் உண்டு இயங்கிக் கொண்டிருந்த மனிதக்கூட்டம் விவசாயத்தை கண்டுபிடித்ததானது வரலாற்றின் ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டமாகும். விவசாய உற்பத்தி மிக எளிதான ஒன்றல்ல; அதற்கு பலவிதமான அறிவியல் தொழில்நுட்ப அறிவு தேவை. பருவ காலங்களை கணக்கிடல், பழைய நெல்லை விதையாக மாற்றுதல், நாற்றுபாவுதல், நெல் வயலை உழவு செய்தல், அதனை உரமிட்டு வளமிக்க நிலமாக மாற்றுதல், நாற்று நடவு, களையெடுத்தல், அறுவடைக் காலத்தை கணக்கிடல், அறுவடை செய்தல், விளைந்த நெல்லையும், பதரையும் தனித்தனியாகப் பிரித்தல் என விவசாய உற்பத்தில் பல்வேறு கட்டங்கள் இருக்கிறது. இது வெறும் உடல்உழைப்பால் மட்டும் நிகழக் கூடியதல்ல; கூரறிவு கொண்ட மூளையும் உடலோடு இணைந்து உழைக்க வேண்டும்.

உழவு செய்தலிலும் நாற்று நடவிலும் நிர்ணயிக்கப்பட்ட ஆழம்வரை உழுவதும், எவ்வித கயிறுகள் கட்டப்படாமலும் அல்லது கோடுகள் வரையாமலும் ஒரே நேர்க் கோட்டில் நாற்றுநடுவது நுட்பமான அறிவாகும். இவ்வேலைகளை பிறர் கட்டளையினை ஏற்றுக்கொண்டு உழைப்பில் ஈடுபடுபவர் செய்வது கடினமானது. வேலையில் ஈடுபடுபவரே உடலையும் மூளையையும் ஒரு சேர இயக்குவதால் இவ்விடத்தில் ‘உடலுழைப்பு’ ‘மூளையுழைப்பு’ என்று தனித்தனியாக பிரிப்பதென்பது அபத்தமானது. தலித்துகளால் செய்யப்பெற்ற விவசாய உற்பத்தியில் பல வகையான அறிவியல் குறிப்பாக மண்ணியல், இயற்பியல், வேதியியல், பருப்பொருள் அறிவியல் போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்விடத்தில் அனைத்து அறிவுப் புலத்தையும் விவரித்துக் கூறுவது இயலாதது. ஆகையால், நாம் நீர் இறைத்தலில் இயற்பியல் மற்றும் வேதியில் பயன்பாட்டினை மட்டும் இங்கு விவரிக்கலாம்.

இயற்பியலை அடிப்படையாகக் கொண்டமைந்த ‘கமலை’ என்ற தொழில்நுட்பம் கிணற்றிலிருந்து நீர் பாய்ச்சுவதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிணற்றருகே இரண்டு கற்தூண்களுக்கு நடுவே ஒரு கப்பி தொங்க விடப்பட்டிருக்கும். இக்கப்பியை மையப்புள்ளியாகக் கொண்ட நீளமான கயிற்றின் ஒருமுனையில் தோலினாலான பை அல்லது கூன் கட்டப்பட்டிருக்கும், மற்றொரு முனையில் இரண்டு மாடுகள் இணைக்கப்பட்டிருக்கும். மாடுகள் முன்னும் பின்னுமாக செல்லும்போது கூன் கிணற்றுக்குள் சென்று நீரை இறைத்து வெளியேற்றும். பள்ளி, கல்லூரி இயற்பியல் பாடத்தில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படும் நெம்புகோல் என்ற தத்துவம் கமலையில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். கமலையைப் போல் ஆளேற்றித்திலா என்றதொரு தொழில்நுட்பமும் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் மாடுகளுக்குப் பதில் மனிதர்கள் மட்டுமே ஈடுபட்டிருக்கின்றனர். இதிலும் நெம்புகோல் தத்துவம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விவசாயத்தில் வேதியியல் அறிவானது, தண்ணீரை கிணற்றிலிருந்து மேலே கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் பயன்படுத்தப்படும் தோலினாலான பையைத் தயாரிப்பதில் தோலைப் பதப்படுத்துதல் என்பது வேதியிலை அடிப்படையாகக் கொண்டதாகும். உணவு உற்பத்தி செய்யும் விவசாய அறிவியலில் தலித்துகள் பயன்படுத்திய மேலே விவரிக்கப்பட்ட அறிவியல் சான்றுகள் போதுமானது. இனி, உடை உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அறிவியல், தொழில்நுட்பத்தைக் காண்போம்.

அம்மணமாய் சுற்றித் திரிந்த மனிதக் கூட்டம் தம் அந்தரங்கங்களை மறைத்துக் கொள்ள இலைகளைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்திற்கும் பின்னர் நூலால் நெய்யப்பட்ட ஆடைகள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. துணிக்கான நூல் பருத்தியை விளைவிப்பதின் மூலமே பெறப்பட்டது. துணி உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட தறி என்ற தொழில்நுட்பத்தில் இயற்பியல் இருப்பதைக் காணலாம். துணி உற்பத்தி செய்வதற்கு தமிழ் சமூகத்தில் (தலித்தல்லாத) நெசவாளர் என்ற ஒருபிரிவு இருப்பதை மட்டுமே பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் தலித்துகளில் கோலியப் பறையர் என்ற பிரிவினர் நெசவு செய்தது குறிப்பிடத்தக்கது; ஆனால் அது குறித்து வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

ஆடையின் உபயோகமானது அதன் பயன்பாட்டைப் பொறுத்து கால அளவு வேறுபடுகிறது; அதனைக் காண்பது இங்கு முக்கியமல்ல. ஆடைக்கு சாயமிடல் (தொ.பரமசிவன், 2000;57) அழுக்கு நீக்குதல் போன்றவற்றில் பருப்பொருள் அறிவியல் மற்றும் வேதியியல் மற்றும் வெள்ளாவி என்ற தொழில்நுட்ப அறிவு இருப்பதைக் காணலாம். அழுக்கு நீக்கும் உவர் மண் கிடைக்கும் பகுதிகளைக் கண்டு அதனை அறுவடை செய்வது பருப் பொருள் அறிவியல் வகையைச் சேர்ந்ததாகும். வேதியியலை அடிப்படையாகக் கொண்டு வெள்ளாவி என்ற தொழில் நுட்பத்தால் அழுக்கு நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. துணி வெளுப்பில் காரம் என்ற பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பொருள் ‘வண்ணான் காரம்’ என்றுதான் இன்றும் அழைக்கப் பெறுகிறது.

ஒரு பொருளுக்கு சாதியர் பெயர் சூட்டியிருப்பதனாது காரத்திற்கு மட்டுமே நிகழ்ந்திருக்கும். எனவே, ஆடை தயாரிப்பில் தொடங்கி அதனை சுத்தப்படுத்தி சுழற்சியாய் உபயோகிப்பதில் விவசாயம், இயற்பியல், வேதியியல் மற்றும் பருப்பொருள் அறிவியல் அறிவினை தலித்துகள் பயன்படுத்தியிருப்பதைக் கண்டோம். இவ்விடத்தில் ஒரு நிகழ்வினை சுட்டுவது அவசியம். அனைவருக்கும் ஆடைகள் தயாரித்து அவர்களின் மானத்தைப் பாதுகாத்து வந்திருப்பினும் சாதி இந்துக்களின் கொடூர பித்து மனம் தலித்துகளை அம்மணமாக்கியதே அந்நிகழ்வு. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1930களில் ராமநாதபுரம் கள்ளர்கள் தலித் பெண்கள் மேலாடை அணியக் கூடாது, ஆண்கள் இடுப்புக்கு மேலும் முழங்காலுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்று பிரகடனம் செய்த பண்பாட்டு ஒடுக்குமுறையாகும். இனி இருப்பிடம் உருவாக்கத்தில் தலித்துகளால் பயன்படுத்தப்பட்ட அறிவியல் முறைகளைக் காண்பதற்கு நகர்ந்துவிடலாம்.

இருப்பிடம் என்பது வெற்று நிலமல்ல; அது குடிசை, வீடு, அரண்மனை போன்றவற்றைக் குறிப்பதாகும். இவைகளைக் கட்டுவதில் கருங்கல், செங்கல், களிமண், சுண்ணாம்பு, காய்ச்சிய பதநீர், ஓடு, ஓலை போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பொருட்கள் தயாரிப்பில் இயற்பியல், வேதியில், பருப்பொருள் அறிவியல் மற்றும் பலவகை தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேற்கூறப்பட்ட பொருட்களில் சுண்ணாம்பு தயாரிப்பதில் மட்டும் பயன்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவினை காணலாம்.

வட்ட வடிவத்தில் கட்டப்படும் சுவரின் அடிப்பகுதி குறுகியதாகவும் மேல்பகுதி விரித்தும் அமைக்கப்பட்டிருக்கும். இதன் அடிப்பகுதியில் சுள்ளை பெட்டி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இதற்குள் ஒரு சிறிய மின்விசிறியும் இருக்கும். சுமார் 50 மீ தூரத்தில் ஒரு பெரிய சக்கரம் இரண்டு தூண்களுக்கு நடுவே இணைக்கப்பட்டிருக்கும். சிறிய, பெரிய சக்கரம் கயிற்றால் இணைக்கப்பட்டு பெரிய சக்கரம் ஒரு சுழற்றியின் மூலம் சுழற்றப்படுவதன் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படும். வட்ட வடிவச் சுவருக்குள் சுண்ணாம்புக்கல், கரி, காய்ந்த பனங்காய் போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக இடப்பட்டு கொண்டிருக்கும்போது ஆக்ஸிஜன் உருவாக்கப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும். மேற்குறிப்பிடப்பட்ட பொருட்கள் முழுவதும் இட்டு நிரப்பப்பட்ட பின்னரும் ஆக்ஸிஜன் உருவாக்குவது தொடரும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அதுவும் நிறுத்தப்படும். இறுதியாக, வட்டவடிவிலான சுவற்றின் மேற்பரப்பில் மணலால் மூடப்படும். அதற்குள் வேதிமாற்றங்கள் நிகழ்ந்து சுண்ணாம்பு உற்பத்தியாகிக் கொண்டிருக்கும். அடுத்தநாள் காலையில் வட்டவடிவிலான சுவற்றில் அமைக்கப்பட்டிருக்கும் வாசல் திறக்கப்பட்டு சுண்ணாம்பு வெளியேற்றப்பட்டு நீற்றப்பட்டால் சுண்ணாம்பு உற்பத்தி நிறைவடையும்.

இதில் சுண்ணாம்புக் கல் அறுவடை செய்வதில் தொடங்கி மேற்கூறப்பட்ட பணிகள் வரை இயற்பியல், வேதியில் மற்றும் பருப்பொருள் அறிவியல் இருக்கிறது. இவ்வாறு சுண்ணாம்பு தயாரிக்கும் முறைக்கு சுள்ளை என்று பெயர். தமிழகத்தில் தலித்துகள் மட்டுமே சுண்ணாம்பு உற்பத்தி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, தமிழ்நாட்டில் வீடுகள் தொடங்கி அரண்மனைகள் வரை தலித்துகள் உற்பத்தி செய்த சுண்ணாம்பினாலேயே கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. மனிதன் மாண்புடன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளான உணவு உடை இருப்பிடம் ஆகியவற்றில் தலித்துகள் பயன்படுத்திய அறிவியல் அறிவு குறித்து விவரிக்கப்பட்டிருக்கிற உதாரணங்களிலிருந்து, தலித்துகள் தங்களின் மூளையுழைப்பையும் உடலுழைப்பையும் ஒருசேர இயக்கி உற்பத்தி செய்திருக்கின்றனர் என்பது திண்ணம்; இனி, மனித சமூகம் பிணிகளிலிருந்து பிணங்களாய் மாறுவதைத் தடுப்பதில் தலித்துகளின் பிணிநீக்கும் அறிவியல் குறித்து காண்பது அவசியம்.

மருத்துவம்

தலித்துகளின் மாட்டுக்கறி, பன்றிக் கறி உண்ணும் வழக்கமே அவர்கள் மீதான தீண்டாமைக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வழக்கம் சமூகத்திற்கு குறிப்பிடத்தகுந்த மருத்துவ அறிவியலை வழங்கியிருக்கிறது. கோரோசனை என்ற பொருளை மாட்டிலிருந்து எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவதும், மூலநோயை குணப்படுத்தும் மருந்தாக பன்றிக்கறி உண்பதும் தலித்துகள் தங்களின் உணவுப் பழக்கத்திலிருந்து கண்டுபிடித்ததாகும். எனவே தலித்துகளின் உணவுப் பண்பாடு அவர்களின் உடலை மட்டும் பேணுவதற்காக பயன்பட்டிருக்கவில்லை, மாறாக இச் சமூகத்தின் மொத்த உறுப்பினர்களையும் உயிரிழப்பிலிருந்து காப்பாற்றுவதற்காக பயன்பட்டு வருகிறது என்பது அறுதி.

மருத்துவ வரலாற்றில் தனிச்சிறப்பான நிகழ்வினை குறிப்பிட வேண்டுமானால் அது அறுவைச் சிகிச்சையின் கண்டுபிடிப்பைக் கூறலாம். இக்கண்டுபிடிப்பிற்கு சொந்தக்காரர் யார்? தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தலித்துகளே உடலை அறுத்து அறுவை சிகிச்சை செய்யும் அறிவினைப் பெற்றுக்கொண்டனர் என்கிறார். டி.டி.கோசாம்பி, அம்பட்டர்களே அறுவைச் சிகிச்சையை கண்டுபிடித்தனர் என்கிறார். பிரசவம் பார்ப்பது தலித் பெண்களின் அறிவாகவே இருந்திருக்கிறது (Breyhealy, K. 1971). மேல்சாதியினருக்கு மருத்துவ சாதியைச் சேர்ந்த பெண்கள் பிரசவம் பார்த்திருக்கின்றனர்.

இன்றைய மகப்பேறு நிபுணர்களோடு ஒப்பிடுகையில் தலித் பெண்களே மிகச்சிறந்த மகப்பேறு நிபுணர்கள் எனலாம். கருப்பையிலிருக்கும் குழந்தை பொதுவான இயல்புநிலைக்கு மாறாக இருந்தால் முதலில் அதனை தங்கள் ‘கைகளாலேயே’ இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்து பின்னர் பிரசவம் பார்த்திருக்கின்றனர். இப்பணியை இன்றைய மகப்பேறு மருத்துவர்களுடன் ஒப்பீடு செய்தால் தலித் பெண்கள் மகப்பேறு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தது புலப்படும். தமிழ்ச் சமூகத்தில் சிறப்பிடம் பெற்றிருக்கின்ற சித்த மருத்துவத்தில் தலித்துகளின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கது. சித்த மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பலவகைத் தாவரங்களும் தலித்துகளாலேயே சேகரிக்கப்பட்டு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், தலித்துகளில் பலரும் சித்த மருத்துவர்களாக இருந்திருக்கிறார்கள். மருத்துவ இதழ்கள் வெளியிடப்படுவதற்கு முன்னர் அயோத்திதாசரிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்ற வழக்கம் இருந்திருப்பதை அறிய முடிகிறது, இது தலித்துகளின் மருத்துவ நிபுணத்துவத்திற்கு ஆதாரம்.

மருத்துவத்தில் மனோவியல் துறை சமீபத்திய வளர்ச்சியாகும், ஆனால் இதற்கு முன்னரே தமிழகத்தில் மனோவியல் மருத்துவர்கள் இருந்திருக்கின்றனர் என்பதற்கு ‘’நோய்க்கும் பார் பேய்க்கும் பார்’’ என்ற பழமொழி சாட்சி. நோயை குணப்படுத்தும் மருத்துவர்கள் குறித்து ஏற்கனவே கூறியிருக்கிறோம். கெட்ட ஆவி இருக்கிறது என்பதை நம்புவர்கள் சிலர் மன நோயினால் அவதியுறும்போது அது பேய் பிசாசு தாக்குதலின் விளைவு என்று நம்புகின்றனர். இத்தாக்குதலிலிருந்து விடுபடவேண்டுமானால் மருத்துவரை அணுகாமல் பேய் பிசாசை விரட்டுபவர்களிடம் செல்ல வேண்டும் என்ற நம்பிக்கை இன்றும் இருந்து வருவதைக் காணமுடியும். புதிரை வண்ணார் எனப்படும் சாதியினர் இன்றளவும் பேய் விரட்டும் தொழிலை செய்துவருகின்றனர். தான் பேயினால்தான் தாக்குதலுக்குள்ளானேன் என்று நம்புவர்கள் பேய் விரட்டும் நிகழ்ச்சி செய்தவுடன் அந்நோயிலிருந்து குணமடைந்ததாக உணருகின்றனர். இது அறிவியலா அல்லது மூடநம்பிக்கையா என்பது இவ்விடத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பேய்விரட்டப்பட்டதால் நோய் ஒழிந்துவிட்டதாக உணருகின்ற காரணத்தினால் பேய்விரட்டும் புதிரை வண்ணார் இவ்விடத்தில் மனோவியல் மருத்துவராக செயல்படுவதைக் காணமுடிகிறது.

கொண்டாட்டம்

ஆட்டமும் பாட்டமும் சமூக வாழ்க்கையில் உற்பத்தியோடு இணைந்தும், சில சமயங்களில் தனித்தும் நிகழ்த்தப்படும் கலை. தமிழ்ச் சமூகத்தில் பாடகர்களாய், இசை அமைப்பாளர்களாய், இசைக்கருவிகளான பறை, மேளம், புல்லாங்குழல் போன்றவற்றை உற்பத்தி செய்பவர்களாய் விளங்கியது தலித்துகளே. இக்கருவியின் உற்பத்தியில் கருவிகள் தயாரிப்பதில், இயற்பியல், பருப்பொருள் மற்றும் வேதியியல் இருப்பதைக் காணலாம். இன்றும் இசைக் கருவிகள் தலித்துகளாலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. எனவே, முற்பகுதியில் நாம் மேற்கொண்ட விவாதத்தின் அடிப்படையில் தலித்துகள் மனித சமூகம் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை தங்களின் ‘சொந்த அறிவாலும் உழைப்பாலும்’ உற்பத்தி செய்துள்ளனர்; அவர்கள் யாரிடமும் யாசித்திருக்கவில்லை என்பது திண்ணம்.

காலனியமும் பார்ப்பனியமும்: அழிவு சக்திகள்

இப்பகுதியில் தலித்துகளின் அறிவியல் அறிவு அழிவிற்கான அடிப்படைக் காரணங்களாயிருந்தது பார்ப்பனியமும், மேற்கத்தியமயமாக்கப்பட்ட முதலாளிய உற்பத்தி முறையும் என்று வாதிக்கப்படுகிறது. வரலாற்றில் வானுயர புகழப்படும் வேதங்களில் பார்ப்பனர்கள் தங்களின் அனைத்துத் தேவைகளுக்கும் கடவுளர்களிடம் மன்றாடியுள்ளதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதோடு மட்டுமல்ல உற்பத்திக்குத் தேவையான அறிவியலை தேடுவதற்குப் பதிலாக அவற்றைப் புறக்கணித்து இழிவுபடுத்தியிருக்கின்றனர். மநு (அ)தர்மம் உணவு உற்பத்தியின் அறிவியலான விவசாயத்தை ‘இழிவானது’ என்று முத்திரை குத்தியது (அயோத்திதாசர் சிந்தனைகள், 1999; 930). பல இந்துச் சட்டங்கள் பார்ப்பனர்களும் இதர மேல்சாதியினரும் தங்கள் புனிதத்தன்மையை பாதுகாத்துக் கொள்வதற்கு மருத்துவத்தை புறக்கணிக்குமாறு கட்டளையிட்டுள்ளது. மேலும், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களிடமிருந்து உணவுப் பொருட்களை வாங்கி உண்ணக்கூடாதென கட்டளையிடும் அச்சட்டங்கள் மருத்துவர்களை ‘விபச்சாரிகளை விடவும் கேவலமானவர்களாக’ மதிப்பிட்டுள்ளது (Debiprasad Chattopadhyaya, 1978).

பார்ப்பனர்கள் உற்பத்தியையும் அதற்குத் தேவையான அறிவியலையும் இழிவாகக் கருதியதானது அவர்கள் அறிவியலை மறுப்பதற்கு இணையானதாகக் கூறுகிறார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா. அவர் இவ்வாறு கூறுகிறார்: ‘வைதீகர் தூய ஆன்மாவைத் தேடியதால் உடம்பின் மீது கவனம் செலுத்தவில்லை. பிணங்களை வைத்து கீழ்சாதியாரே அறுத்து ஆராய்ந்தார்கள். இதை மேல் சாதியார் தீட்டாக கருதியதால் ஒதுங்கினார்கள்... இன்றும்கூட பிணத்தைத் தொட மேல்சாதியார் மறுப்பதால் அறிவியலை மறுக்கிறார்கள்’ (1999; 81). பார்ப்பனரின் இந்துமதச் சட்டங்கள் உற்பத்தியையும் அறிவியலையும் இழிவுமயமாக்கியதால் அது படுபயங்கர ஆபத்தை விளைவித்துள்ளது.

விவசாயத்திற்கு ஏற்பட்ட கேடுகள் என அயோத்திதாசர் பல காரணங்களை முன்வைக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: ‘மனுதர்ம சாஸ்திரத்தில் பயிரிடுந்தொழில் இழிந்த தொழிலென்று வரைந்துள்ளது விவசாய விருத்திக்கு முதல் கேடும், வேளாளத் தொழிலாளருள் தானிய முதலீவோரெல்லாம் முதலியாரென்னும் வேறு சாதியாக பிரிந்துவிட்டது விவசாய விருத்திக்கு இரண்டாம் கேடும், பூமியை உழுது பண்படுத்தி விடா முயிற்சியில் தானிய விருத்தி செய்யும் உழைப்பாளிகள் யாவரையுந் தாழ்ந்த சாதிகளென வகுத்தது... மூன்றாவது கேடு’. மேலும் விவசாய உற்பத்தியாளர்களான தலித்துகளை இழிவுபடுத்தி அவர்கள் மீது பல்வேறு கொடூரமான அடக்குமுறைகளை செலுத்தியதால் தலித்துகள் தங்கள் தொழிலை விட்டுவிட்டு இடம் பெயர்ந்துவிட்டதாக பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.

அயோத்திதாசர் அதனை பின்வருமாறு கூறியுள்ளார்: கீழ்ச்சாதி மேற்சாதியென்று அமைத்து வைத்துள்ள சாஸ்திரத்தை மெய்யென்று நம்பியுள்ள யாவரும் அதில் உரைத்துள்ள பயிரிடுந்தொழில் இழிந்தத் தொழிலென எண்ணி விவசாயத் தொழிலை விட்டுப் பாழடைந்து போனார்கள்’. தொழில்கள் மீது இழிவினை கற்பித்ததன் விளைவினை அம்பேத்கரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்; அவர் அயோத்திதாசரின் கருத்திலிருந்து வேறுபட்டிருக்கவில்லை என்பது இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது. அம்பேத்கர் இவ்வாறு கூறியுள்ளார்: அநேக தொழில்களை இந்துக்கள் இழிவானதென்று கருதுவதால் அத்தொழில்களைச் செய்வோருக்கு அத்தொழிலின் மீது வெறுப்பை வளர்க்கிறது. இந்த இழிவைக் கருதி, அத் தொழிலைச் செய்யாமல் தட்டிக் கழிக்கவும், தப்பித்துக் கொள்ளவும் தூண்டுகிறது. (அம்பேத்கர், நூல் தொகுப்பு, 1993;68).

மிகச்சரியாகவே பார்ப்பனியத்தின் பயங்கர விளைவினை கணித்திருக்கிறார்கள் அயோத்திதாசரும் அம்பேத்கரும். தீண்டாமைக் கொடூரங்களுக்குள்ளான சாதிகள் தம் மீதான தீண்டாமைக்குக் காரணம் தாங்கள் செய்து வரும் தொழில் என்பதை புரிந்ததன் விளைவாக அவர்கள் அத்தொழிலை விட்டொழித்தனர். இதனால் விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியை இங்கு பதிவு செய்யவில்லை; இது குறித்த ஆய்வு அத்தியாவசியமானதொன்று. இனி மேற்கத்தியமயமாக்கப்பட்ட முதலாளியம் ஏற்படுத்திய தாக்கத்தினைக் காண்போம்.

காலனிய ஆட்சியாளர்கள் இந்தியாவில் மண்சார்ந்த மரபுரீதியான உற்பத்தி முறையை விரிவாக்குவதற்குப் பதிலாக மேற்கத்திய உற்பத்தி முறையை திணித்தனர். விவசாயத்தை பொறுத்தமட்டிலும் நீர் இறைப்பதில் எந்திரங்களைப் புகுத்தியதன் விளைவு தலித்துகளால் செய்யப்பட்டு வந்த கமலை என்ற தொழில் நுட்பம் தாக்குதலுக்குள்ளானது. இதனால் பாதிப்புக்குள்ளான தலித்துகள் காலனிய ஆட்சியாளர்கள் அறிமுகம் செய்த தேயிலைத் தோட்டத்தில் இலை பறித்தல் உட்பட பல பணிகளுக்குச் செல்லத் தொடங்கினர். இவ்விடத்தில் நாம் கவனிக்க வேண்டியதானது, தமது சொந்த அறிவின் மூலம் ‘உற்பத்தியாளராயிருந்த’ தலித்துகளை, மேற்கத்திய முதலாளியத்தின் தாக்கம் ‘தொழிலாளர்களாக’ மாற்றிவிட்டது. காலனி ஆட்சியால் விளைந்த இத்தாக்கத்தினை எதிர்த்து தலித்துகள் ஏன் கிளர்ச்சி செய்திருக்கவில்லை?

தீண்டாமைக் கொடுமைக்குள்ளான தலித்துகளுக்கு காலனி ஆட்சியாளர்கள் வழங்கிய பணிகள் ஒருவிதத்தில் அவர்களை ‘பார்ப்பனீய ஒடுக்குமுறையிலிருந்து’ விடுவித்த காரணத்தினால் மட்டுமே அதனை விரும்பி ஏற்றுக்கொண்டனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தலித்துகளின் சுண்ணாம்பு உற்பத்தி மற்றும் மருத்துவ அறிவியல் காலனி ஆட்சியால் பாதிப்புக்குள்ளானது மற்றொரு பெருந்தாக்கம். காலனிய ஆட்சி அறிமுகம் செய்த மேற்கத்திய முதலாளிய உற்பத்திமுறை பல புதிய நோய்களையும் உருவாக்கியதால் அதனைக் குணப்படுத்தத் தேவையான மருத்துவ முறையையும், அதற்கான மருத்துவர்களையும் உருவாக்குவதென்பது அவசியமானதால் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கினர். அதேசமயம் ஏற்கனவே இங்கிருந்த பாரம்பரியமான மருத்துவர்களை ‘திறமையற்றவர்கள்’ என்றே வகைப்படுத்தினர்.

கல்லூரிகளுக்குச் செல்வதற்கு சமூக உரிமையிருந்த மேல்சாதியினர் மருத்துவம் கற்றுக் கொண்டு மருத்துவர்களாயினர், தலித்துகளோ கல்லூரிக்குள் செல்ல முடியாமற் போனது. எனவே, காலனிய ஆட்சியினால் உண்மையில் பயனடைந்தது பார்ப்பனர்கள் உட்பட இதர மேல்சாதியினர் எனலாம். இப் பிரிவினர் இதனை சாதிப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. காலனிய ஆட்சியாளர் அறிமுகம் செய்த கல்விமுறை பார்ப்பனியத்தோடு ஒத்திருந்தது, ஆனால் தலித்துகளின் கற்கும் முறையோடு முரண்பட்டிருந்தது. வேதங்களை மனப்பாடம் செய்வது பார்ப்பனர்களின் பணி; இதற்கு நேரெதிரானது உற்பத்தி செய்வதற்கான தலித்துகளின் கற்றல் முறை. முதலில், தலித்துகளிடம் விவசாயம், இயற்பியல், வேதியில், பருப்பொருள் என பல வகைப்பட்ட அறிவியலும் ஒருங்கிணைந்து இருந்ததை மேற்கத்திய கல்விமுறை தனித்தனியான பாடப் பிரிவுகளாக மாற்றியது.

இவர்களிடத்தில் கற்றல் என்பது முதலில் ஒரு பொருளின் உற்பத்தி குறித்து படித்து விட்டு அதன் பின்னர் அப்பணியில் ஈடுபடுவதற்கு மாறாக, அப்பொருளின் உற்பத்தி குறித்தான அறிவினை செய்முறையிலிருந்தே கற்றுக் கொள்வதற்குத் தொடங்குகின்றனர். அதாவது தலித்துகள் கற்றலையும் செய்முறையையும் ஒருசேர செய்து வந்தனர்; இவ்விரண்டும் ஒன்றுபட்ட நிகழ்வே என்பது இதன் பொருளாகும். எனவே தலித்துகளுக்கு கற்றலை மட்டும் செய்வது புதியதானது; கடினமானதும் கூட. ஆனால் வேதங்களை மனப்பாடம் மட்டுமே செய்துவந்த பார்ப்பனர்களுக்கு மேற்கத்திய கல்வியைக் கற்பது பழமையானது; எளிதானதும்கூட. மேலும் பார்ப்பனர்களும் மேல்சாதியினரும் சமூகத்தின் மேல்தட்டில் இருந்த காரணத்தினாலும் காலனிய ஆட்சி உருவாக்கியிருந்த கல்லூரிகளில் நுழைவது மிக எளிதாயிருந்தது. இதனால் அரசின் பல்வேறு அச்சாணிப் பதவிகளை அவர்கள் ஆக்ரமிக்கத் தொடங்கினர்.

காலனிய ஆட்சியாளர்கள் பார்ப்பனர்கள் மற்றும் மேல்சாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காங்கிரசிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சென்றபின்னர் பார்ப்பனர், மேல்சாதி இந்துக்கள் ஆளும் வர்க்கமாகினர். காந்தி மூச்சுக்கு மூச்சு கைத்தறியை மட்டும் பாதுகாப்பது குறித்து பேசியதன் பொருள் உள்நாட்டு தொழில்களைப் பாதுகாத்தலாகும். ஆனால் ஆட்சி பீடத்திலேறிய காங்கிரசு காலனிய ஆட்சி புகுத்திய மேற்கத்திய முதலாளிய உற்பத்தி முறையையே தொடர்ந்து பின்பற்றியது. காலனியாட்சியாளர்களின் நகல்தான் காங்கிரசு என்றால் அது மிகையானதல்ல. இவர்கள் தலித்துகளால் உருவாக்கப்பட்டிருந்த மண்சார்ந்த உற்பத்தி முறைக்கு திரும்பியிருக்கவில்லை; மேற்கத்திய கல்விமுறையையும் மாற்றியிருக்கவில்லை என்பதே அவர்கள் காலனி ஆட்சியாளர்களின் நகல் என்று கூறுவதற்கு ஆதாரம்.

வரலாற்றில் தலித்துகளின் மண்சார்ந்த அறிவியலுக்கும் உற்பத்தி முறைக்கும் எதிரானவர்களாக இருந்த வந்திருக்கின்ற இப்பிரிவினர் மண்சார்ந்த அறிவியலை பாதுகாப்பதற்குப் பதிலாக அதனை அழிக்கும் முயற்சியைத் தொடங்கினர். இவர்களால் புகுத்தப்பட்ட வெண்மை மற்றும் பசுமைப் ‘புரட்சி’ மரபுவழிபட்ட அறிவியலை அழித்தொழித்து வருகின்றன. இவற்றுக்கு அடிப்படைக் காரணம், சமத்துவத்தின் எதிரிகளென அம்பேத்கரால் சுட்டிக்காட்டப்பட்ட பார்ப்பனீயத்தையும் மேற்கத்தியமயத்தையும் ஆளும் வர்க்கமான பார்ப்பனர்கள், மேல்சாதி இந்துக்கள் ஒருங்கே பெற்றுள்ளனர். இதன் விளைவு, மேற்கூறப்பட்ட புரட்சியினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உண்பதால் இந்தியர்களின் வாழ்நாள் குறைந்து வருவது நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

முடிவுரை

தலித்துகள் பண்ணையடிமைகளாக்கப்பட்டது ஒரு அரசியல் பொருளாதார விபத்து; இதுவே அவர்களின் எதார்த்த அறிவியல் அறிவுக்கும் உற்பத்தித்திறனுக்கு சற்றும் பொருத்தமற்ற இடத்தில் அவர்களை வைத்து விட்டது. இதில் சமூகவியல், பண்பாட்டு காரணங்களும் உண்டு என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்களை கல்வி மறுக்கப்பட்டவர்கள் அறிவற்றவர்கள் என்று கூறுவது அச்சமூகம் குறித்த எதார்த்தத்திற்கு முரணானது என்பதை மேலே விவரிக்கப்பட்டிருக்கிற தலித்துகளின் அறிவியல் அறிவு தெளிவாக்குகிறது. அதே சமயம் அறிவியலை அறிந்திராத அதனை புறக்கணித்த பார்ப்பனர்கள் பண்ணையார்களாக மாறியதில் சமூகவியல் மற்றும் பண்பாட்டு காரணிகள் உண்டு. ஆனால் அவர்களை அறிவாளிகள், மேலானோர் என்று கூறுவது அவர்களின் சமூக எதார்த்தத்திற்கு முரணானது. அவர்கள் அறிவியல் மற்றும் உற்பத்தி குறித்த பாடம் இல்லாத வேதத்தை படித்தது, மேற்கத்திய கல்வி முறையில் (குறிப்பாக ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்., ஏ.ஐ.ஐ.எம்.எஸ்.) ஆதிக்கம் செலுத்திவருவது, அறிவாளி என்ற வகைக்குள் அடக்க முடியாததா?அது மேலானது இல்லையா? என்ற கேள்விகள் எழுப்பலாம்.

அயோத்திதாசர் ஒரு இடத்தில் இவ்வாறு கூறியுள்ளார்: பி.ஏ., எம்.ஏ. பட்ட விருத்தி தங்கள் பெண்டு பிள்ளைகளை மட்டிலுங் காப்பாற்றக் கூடியதும், பூமியின் விருத்தியும் வித்தியாவிருத்தியும் சகலசீவர்களையும் காப்பாற்றக் கூடியதாகும். சகல சீவங்களையும் காப்பாற்றக் கூடியதும் தேச சிறப்படையக் கூடியதுமாகிய செயல்கள் மேலாயதா, பெண்டுபிள்ளைகளை மட்டிலுங் காப்பாற்றக் கூடியச் செயல்கள் மேலாயதா என்று ஆராயுங்கால் தேசச்சிறப்பும் குடிகள் சுகமும் விருத்தியடையக் கூடியச் செயல்களே மேலாயதாகும். அயோத்திதாசரின் இவ்வரிகளின் மூலம் பார்ப்பனர் (மற்றும் மேல்சாதிகளின்) ‘படிப்பாளித்தனம்’ மேலானதல்ல என்பதைப் புரிந்து கொள்ள இயலும். அதேசமயம் இன்றைய படிப்பாளி வர்க்கங்களுக்கும் இது பொருந்தக் கூடியதே.

உற்பத்தியற்ற இக்கல்வி முறை பட்டங்கள் மட்டும் பெறும் நபர்கள் வாழ்வதற்கு நன்மை பயப்பதாகும். ஆனால் சமூகம் இவர்களால் என்ன நன்மை அடைந்தது என்ற கேள்வி ஆய்வுக்குரியது. மேற்கத்திய கல்விமுறை பயின்ற சிலர் இன்று பாரம்பரிய அறிவியல் குறித்து பேசத் தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் ஒருங்கிணைந்த துறை குறித்தும் பேசத் தொடங்கியிருக்கின்றனர். (அவர்களின் மொழியில் அதன் பெயர் Inter disciplinery) அதாவது, இயற்பியிலும் வேதியியலும், விவசாயமும் வேதியியலும், சமூகவியலும் வரலாறும், வரலாறும் இனவரைவியலும் என்று ஆய்வினை மேற்கொள்வது குறித்து பேசுகின்றனர்.

இந்த ‘அறிவாளிகள்’ பேசத்தொடங்குவதற்கு முன்னரே பல நுற்றாண்டுகளாய் ஒவ்வொரு உற்பத்தியிலும் தலித்துகள் இயற்பியல், வேதியில், பருப்பொருள் போன்ற அறிவியலை ஒருங்கே பயன்படுத்தினர். தலித்துகளின் அறிவியல் அறிவு கோட்பாடு (theory) சார்ந்தது அல்ல; அது நடைமுறைப் பயன்பாடு சார்ந்தது (applied science). எனவே, இந்தியாவின் பயன்பாட்டு அறிவியலின் முன்னோடிகள் தலித்துகளே; அவர்களை அறிவியலின் பெற்றோர் என்று ஏன் அழைக்கக்கூடாது? ஒருங்கிணைந்த துறை, மண்ணின் அறிவியல் என்றெல்லாம் பேசி அதனை தீண்டத் தொடங்கியிருப்பதானது தீண்டாமைக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட தலித்துகளின் பயன்பாட்டு அறிவியல் அறிவை தீண்டத் தொடங்கியிருப்பதையே சுட்டுகிறது. இதில் முன்னோக்கிச் செல்ல வேண்டியது தவிர்க்கவியலாத தேவையாயிருக்கிறது.

இந்தப் பாதையில் நுழைய வேண்டுமானால் முதலில் பார்ப்பனீயத்தையும் மேற்கத்தியமயத்தையும் நீக்குவது தொடங்கப்பட வேண்டும். இது செய்யப்படவில்லை என்றால் தலித்துகளின் மண்சார்ந்த பயன்பாட்டு அறிவியலை கனவிலும் கற்க இயலாது. காலனிய ஆட்சிக் காலத்தில் கிடைத்த சிறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தலித்துகள் அரசியல் விபத்திலிருந்து மீண்டெழுந்துள்ளனர். அதேசமயம் பல நூற்றாண்டுகாலம் இயற்கையோடு நடத்திய போராட்டத்தினால் கண்டு பிடித்த அறிவியல் அறிவை இழந்துள்ளனர். இந்த இழப்பு அவர்களுக்கு மட்டுமானதல்ல; இச்சமூகம் முழுமைக்கான இழப்பு.

ஆதாரங்கள்

அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 1 (புது டில்லி: இந்திய அரசு, 1993).
அய்லய்யா, காஞ்சா. நான் ஏன் இந்து அல்ல (புத்தாநத்தம்: அடையாளம், 2001).
சட்டோபாத்தியாயா, தேவி பிரசாத். உலகாயதம்: பண்டைய இந்தியப் பொருள் முதல் வாதம்-ஓர் ஆய்வு (சென்னை: சவுத் விஷன், 1999).
சிவசுப்பிரமணியம், ஆ. தமிழகத்தில் அடிமைமுறை (நாகர்கோவில்: காலச்சுவடு, 2005).
பரமசிவன், தொ. அறியப்படாத தமிழகம் (நாகர்கோவில்: காலச்சுவடு, 2000).
ஞான. அலாய்சியஸ், அயோத்திதாசர் சிந்தனைகள் (பாளையங்கோட்டை: FRRC, 1999).
ரிக் வேதம், தமிழ்-ஆங்கிலம் தொகுதி-3 (சென்னை: அலைகள், 2004).
Banerji, D. ‘Social and Cultural Foundations of Health Services Systems’, Economic and Political Weekly, Vol.IX (1974).
Breyhealy, K. ‘The Missing Midwife: Why a Training Programme Failed’, South Asian Review, Vol.5, No.1 (1971).
Chattopadhyaya, Debiprasad, ‘Science, Philosopy and Society’, Social Scientist, Vol6, No.9 (1978).
Kumar, Dharma. Land and Caste in South India (New Delhi: Manohar, 1992).

குறிப்பு: இக்கட்டுரை சென்னையில் 8-10 பிப்ரவரி 2008 அன்று நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பு மற்றும் தலித் ஓவியங்கள் கண்காட்சி மாநாட்டில் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com