Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2008

கியூபாவில் பெண்களும், அதிகாரமும்
ஜெர்மேன் கிரியர்
தமிழில்: மலைவாசி
.

நெஞ்சம் பதைபதைக்க கியூபாவுக்கு வந்தேன். 1971ம் ஆண்டு ஜமைக்காவில் ‘மூன்றாம் உலகத்துடன்’ எனக்கு தொடர்பு ஏற்பட்டபிறகு, கியூபா ஒன்றும் ஏமாற்றோ, தோல்வியோ இல்லை என்பது வளரும் நாடுகளுக்கு எவ்வளவு எரி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நான் உணர்ந்திருந்தேன். ஆண்டுகள் கடந்து செல்லச்செல்ல நான் பம்பாயின் சேரிகளிலும், மொராக்கோ துனிஸ், யுகாடான் ஆகிய இடங்களிலுள்ள சன்னலில்லாத குடிசைகளைத்தாண்டி, உத்திர பிரதேசத்தின் தூசியின் ஊடாகவும் வடகிழக்கு பிரேஸிலின் தொற்றுநோய் மிகுந்த அழுக்குப் பிரதேசங்களிலும், போகாட்டாவிலும், குவாட்டமாலாவின் மலைப்பிரதேசங்களிலும் சுற்றித்திரிந்தேன்.

எனது ஒவ்வொரு அடியும், ஆணாதிக்கமயமான வளர்ச்சி நிதி உதவி, எந்த அளவிற்கு பயனற்றது என்பதை உணர்த்தியது. எண்பதுகளில், வளரும் நாடுகளின் வெளிநாட்டுக்கடன் அந்நாடுகளின் மீது காளான்களாக வளர்ந்து நிற்க, நிலமில்லா ஏழைகளின் எண்ணிக்கை நாள்தோறும் பல்கிப்பெருக, சரியானதொரு மாற்று கண்ணில் படாமல் நழுவுகிறது. மேற்கத்திய பெரும் தகவல் பரப்பு சாதனங்கள் எனக்கு கற்பித்ததுபோல, நிறுவன மயமாக்கப்பட்ட ஏழ்மையும், அதிகார வர்க்க சொல்லாடலும், அடக்கு முறையும் நிறைந்ததுதான் கியூபா என்பது உண்மையானால், இருள் சூழ்ந்த எதிர்காலம் விடிவதற்கு எந்த அறிகுறியும் இல்லை. கியூபாவின் புரட்சி, உண்மையில் மக்களின் புரட்சியாக இருக்குமானால், மிகப்பெரிய சக்தி கியூபா நாட்டையே கரிபிய கடலிலிருந்து தூக்கி வீசினாலும், கியூபா மக்களை ஒன்றும் செய்துவிட முடியாது.

என்னுடைய வருகை, FMC என்று சுருக்கமாக அழைக்கப்படும் கியூப பெண்கள் கூட்டமைப்பின் நான்காவது மாநாட்டுடன் ஒன்றிணைந்து போனது. ஹவானா முழுவதும் விளம்பரப் பதாகைகளும், சுவரொட்டிகளும், மாநாட்டை அறிவித்தன. ‘ஒட்டுமொத்த பெண்கள் சக்தியும் புரட்சியின் சேவைக்காக’. மாநாட்டுக்கான சின்னம், கலாஷ்னிகாவ் துப்பாக்கிகளும், மரிபோஸா அல்லி மலர்களும் இணைந்த நவீன கலவை ஓவியமாக இருந்தது. இரண்டின் பாதிப்பு குறித்து நான் அதிகம் அக்கறைப்படவில்லை. ரம்பாவில் இருந்த ஒளி பாய்ச்சப்பட்ட கண்காட்சி அரங்கம் பெண்களின் கைவசம் கொடுக்கப்பட்டிருந்தது. வரிசையாக வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளில் கீயூபப்பெண்கள் வரலாறு வண்ண வீடியோப் படங்களாக காட்டப்பட்டன. தொடர்ச்சியாக இருந்த அரங்குகள் மார்பக புற்றுநோயை கண்டறியும் சோதனை முதல் வாசனை திரவியங்கள், முடியை சுருள் முடியாக்கும் கருவிகள் வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தங்கள் பின்பாகங்கள் வெளித்தெறித்துவிடும் போன்ற டைட்டான எலாஸ்டிக் பேண்டுகளை அணிந்திருந்த பெண்கள், நான்கு அங்குல உயரமுள்ள ஹைஹீல்ஸ் காலணிகளில் இருந்து விழுந்து விடாமலிருக்க தங்கள் துணைவர்களின் தோளைப்பற்றியவாறு கண்காட்சி அரங்கினுள் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களது நகங்களும், முகங்களும் கோரமாக வண்ணம் பூசப்பட்டிருந்தன. அவர்களது கூந்தல், சுருட்டப்பட்டு, சாயம் பூசி, கருமை பூசப்பட்டிருந்தது. அவர்களது உடைகளும், உள்ளாடைகளும், 2 அல்லது 3 சைஸ் சின்னதாக இருந்ததால் சதை எல்லா இடங்களிலும் பிதங்கி வழிந்தன. பெரும்பாலோனோர், கல்வி அரங்குகளை வேகமாக தாண்டிப்போய், வண்ணம் பூசிய மூன்று ஆட்டக்காரர்கள் ஆடும் பால் இச்சை தூண்டும் ரும்பா ஆட்டத்தை ரசிக்கச்சென்றார்கள். தனியருத்தியாக நான் செல்வதைப்பார்த்தவுடன், சில ஆண்கள் என்னைப் பார்த்து, ‘ப்ஸ்ஸ்..... ப்ஸ்ஸ்.....’ என்று நாயைக் கூப்பிடுவதுபோல என்னை கூப்பிட்டார்கள்.

அடுத்த நாள், வெளியுறவுத்துறையைச் சேர்ந்த எனது வழிகாட்டி என்னை, FMC மாநாட்டின் முதல் அமர்வுக்கு என்னை அழைத்துச் சென்றார். பாதுகாப்பு பலமாக இருந்தது. அரங்கத்தின் பின்னாலிருந்து செய்தியாளர் பகுதிக்கு வழி நடத்தப்பட்டேன். அங்கு உடனடி மொழிபெயர்ப்புக்கான எந்த வசதியும் இல்லை. எனது டேப் ரெக்கார்டரை கைப்பிடிச் சுவரின் மீது வைக்குமாறு ஒரு போலீஸ்காரர் பணித்தார். அதே போல் வைக்கப்பட்ட ஒரு டேப்ரிக்கார்டர் தவறி ஒரு அடி கீழே இருந்த பங்கேற்பாளர் ஒருவரின் மூளையை பதம்பார்க்க நேர்ந்ததாக பின்னால் தெரிந்து கொண்டேன். ஆனால், கியூபா தன்னைப்பற்றி கொஞ்சமே பார்க்கவும், கொஞ்சமே புரிந்துகொள்ளவும் என்னை அனுமதிக்கும் என்று புரிந்தது.

அந்த நாள் முழுவதும், மாநாட்டின் 157 அதிகாரபூர்வ அறிக்கை வாசிப்பதிலேயே கழிந்துபோனது. அறிக்கையை வாசித்தவர், கியூப பெண்கள் கூட்டமைப்பின் தலைவரும், பொலீட் பீரோவின் மாற்று உறுப்பினரும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினரும், ஃபிடலின் சகோதரரான ராவுல் காஸ்ட்ரேவின் மனைவியுமான வில்மா எஸ்பின். அவர் அறிக்கையை பிழையில்லாமல் நிதானமாக வாசித்தார். அவருடைய இப்போதைய பருத்த தோற்றம், சியாரா மாய்ஸ்டாவில் கெரில்லா வீரர்கள் மறைந்திருந்த நாட்களில், மருத்துவ உதவி குழுவை அமைத்து போராடிய ஒல்லியான பெண் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. அவர் என்றும் கவர்ந்திழுக்கக் கூடிய பேச்சாளர் இல்லை என்று நான் புகார் செய்தேன். அதற்கு பிரதிநிதிகளில் ஒருவர் பதிலளித்தார் "அவர் எங்களை கவரவேண்டிய அவசியமில்லை, எங்களுக்கு அவரைத் தெரியும், அவர் எங்கள் வில்மா".

வில்மாவுக்கு பக்கத்தில், வரிசையாக உட்கார்ந்திருந்த நிர்வாக பொறுப்பாளர்களுடன் அமர்ந்து அறிக்கையை அமைதியாக படித்துக் கொண்டிருந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. ஃபிடல் ஒரு சர்வாதிகாரத் தலைவர் போல திடீரென மேடையில் தோன்றி, அதிகார வர்க்க சொல்லாடல்களால் அமைந்த அறிக்கை ஒன்றை பேசிவிட்டு, மேலும் முக்கியமான அரசுப்பணிகளுக்காக போய்விடுவாரென நான் எதிர்பார்த்தேன். என்னை ஆச்சரியப்படுத்தும் வகையில் முழுநாளும் அவர் அங்கு அமர்ந்து, படித்துக் கொண்டும், தாடியை வருடியவாரு சிந்தித்தவாறும், பேச்சுக்களை செவிமடுத்தவாறும் இருந்தார். அடுத்த நாளும் அவர் அங்கிருந்தார்.

பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாரபட்சம் குறித்து ஒரு பங்கேற்பாளர், உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு ஆணின் குரல் குறுக்கிட்டது. ‘இதுதான் பிரட்சனையின் அடிப்படை இல்லையா? பெண்கள் வேலைக்குச் செல்வது, சன்னமான சற்றே உச்ச ஸ்தாயியில் இருந்த அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யாரெனப் பார்த்தேன். அது காஸ்ட்ரோவுடையது. சீக்கிரமே, ஒவ்வொரு கியூபன் அவரை அழைப்பதுபோலவே ஃபிடல் (காம்பனைரே ஃபிடெல்) என்று அழைக்க நான் பழகிக் கொண்டேன். வாதத்தில் பங்கேற்கும் ஆர்வத்துடன், வாதத்தை தலைமையேற்பதில் அல்ல, பங்கெடுப்பதற்கான ஆர்வத்துடன் ஃபிடெல் முன் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

விவாதம் மேலும் இயல்பானதாகவும், தன்னிச்சையானதாகவும் மாறியிருந்தது, பங்கேற்பாளர்கள் கைகளை உயர்த்தி வாய்ப்பு பெற்று, வேலைவாய்ப்பு கிடைப்பது குறித்து குறிப்பாக பேசினார்கள். பெரும்பாலும் குடும்ப பொறுப்புகள் காரணமாக, வேலையிலிருந்து நின்று விடுவதாக பெண்கள் கூறினர். கியூப குடும்ப கோட்பாட்டிற்கு தக்கவாறு, வீட்டுவேலையிலும், குழந்தை பராமரிப்பதிலும் ஆண்கள் தங்கள் பொறுப்பை இன்னமும் தட்டிக் கழித்து வருவதாக ஃபிடல் சொன்னார். வேலைக்கு மட்டம் போடும் வழக்கம், பெண் தொழிலாளர்களைவிட ஆண்கள் மத்தியில் அதிகம் இருப்பதை பெண்கள் தெரிவித்தனர். அரசுத்தலைவர், தனக்கு வாய்ப்பு வேண்டும் என கை தூக்கி கேட்டபோதும், அமர்வின் தலைவர் சில சமயங்களில் அவரை அலட்சியம் செய்தார். சில தடவை, பிரதிநிதிகள், சத்தமாக அவரை எதிர்த்து பேசினர். சிலர் ஊளையிடவும் செய்தனர்.

ஃபிடல், ஃபிடல் என எல்லோரும் ஆர்வமாக ஆர்ப்பரிப்பார்கள் என எதிர்பார்த்திருந்த நான், இதை எதிர்பார்க்கவில்லை. மார்கரெட் தாட்சர் குறித்தும், இந்திராகாந்தி குறித்தும் நினைத்துப் பார்த்தேன். இருவருக்குமே மற்றவரது கருத்தை செவிமடுப்பது என்பது அசாத்தியம். அதுவும் மாற்றுக் கருத்துடையவர் என்றால். எல்லா சமயங்களிலும், ஃபிடல் ஜோக்கடித்தார், நகைச்சுவையான ஒப்பீடுகளைச் செய்தார், பிரதிநிதிகள் பருண்மையான, யதார்த்தமான உதாரணங்களை கொடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினார். புள்ளி விவரங்கள் என்று சொல்லிட, தற்போதைய புள்ளி விவரத்தை சொல்லி அமைச்சரின் சல்ஜாப்பை அம்பலப்படுத்தினார். அமைச்சர்களைத் தவிர மற்றெல்லோரும் பெரிதும் ரசித்தனர்.

அமர்வுகள் முடிவுக்கு வந்தபோது, பெண்கள் எழுந்துநின்று, பல வண்ண நைலான் ஜார்ஜெட் கழுத்துப்பட்டைகளையும் ஒத்த நிறமுடைய ப்ளாஸ்டிக் மலர்களையும் அசைத்து, மராக்காக்களையும், மணிகளையும் வாசித்து, கைகளை தட்டி, “வேலை வாய்ப்புக்காக! கல்விக்காக! நமது விடுதலையை கட்டமைப்பதற்காக! ஃபிடலுடன் உறுதியாக, ஃபிடலுடன் உறுதியாக!”, என்று வெடிக்கும் குரலில் பாடினர். இடுப்புகள் அசைந்தன. கழுத்துப்பட்டைகள் ஒளிர்ந்தன. மலர்கள் ஆடின, ஒத்திசைந்த ஆரவாரம், அந்தப் பிருமாண்ட கட்டடத்தைச் சுற்றி அதிர்ந்தது.

ஒரு வெல்ஷ் கால்பந்து ரசிகர் பட்டாளத்தையே உறையவைக்கம் விதத்தில், பெண்கள் ஏற்படுத்திய ஆரவாரத்தைக் கேட்டு, சோர்வடைந்திருந்த தொழில்முறை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியே வந்து பார்த்தனர். ஃபிடல் குறித்தும், தங்களைப் பற்றியும் பெண் பங்கேற்பாளர்கள் அமைந்த பெருமகிழ்ச்சியை பார்த்து பிறகு, அவர்களது அடிக்கும் நிறத்திலான மோசமாக தைக்கப்பட்ட செயற்கை இழை உடைகளையும், உயரமான குதிகால் செருப்புகளையும் குறித்து நான் மறந்து போனேன். என்னுடைய உயர்வு மனப்பான்மையை விடுத்தும், அவர்களை ரசிக்க ஆரம்பித்தேன்.

நான் வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தபோதும், கியூபா குறித்து ஏதோ புதிராகவும், சிறப்பானதாகவும் என்னால் உணர முடிந்தது. வில்மாவிடமும், ஃபிடலிடமும் நாடகீயத்தன்மை இல்லாதது, அங்கு நிலவிய குழப்பமான நடத்தைகளின் ஓர் அங்கமாக இருந்தது. நுகர் கலாச்சார சமூகத்தில் உள்ளதுபோல, அங்கு மக்கள் தங்களை விற்கவில்லை. வாழ்க்கை என்பது தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்ல, அது கியூபாவில் நிஜம். ஒளிவட்டத்திற்கான போட்டியோ, மற்றவர்களை இழிவுபடுத்துவதோ அங்கே கிடையாது. வற்புறுத்துவதற்காகவோ, குழப்பத்தில் ஆழ்த்துவதற்காகவே அவர்கள் பேசினார்கள். நமக்கு இருப்பது போல, அவர்களுக்கு குடும்ப மற்றும் பாலியல் விவகாரங்களில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை.

ஃபிடெலுக்கு எத்தனை குழந்தைகள் என்பது குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஏன், வில்மா பற்றி கூட. பொதுப்பணியிலிருந்தவர்கள், அவர்களது பணியை எவ்வளவு செம்மையாக செய்கிறார்கள் என்பதை வைத்தே அளவிடப்படுகிறார்கள். மேலும், அவர்கள் தங்களது படுக்கை துணைகளை, தாம்பத்ய வாழ்க்கையின் பறை சாற்றும் வகையில் பொது இடங்களுக்கு இழுத்துக்கொண்டு வருவதில்லை. கிசுகிசு பத்திரிக்கைகளும், விளம்பரங்களும் இல்லாத வாழ்க்கை, தடங்கல்கள் இல்லாத அற்புதமானதாக இருந்தது. இளவரசி டயானாவின் சமீபத்திய உடை, எலிசபெத் டெய்லரின் சமீபத்திய திருமணம், அமெரிக்க குடியரசுத் தலைவருக்கு ஏற்பட்ட ரத்தப்போக்குகள் போன்றவற்றிற்கு நிகரான விஷயங்கள் அங்கு இல்லை.

நாளிதழ்கள், கொலை, கற்பழிப்பு குறித்து விவரிக்க வேண்டும் என்றும், (பத்தாண்டுகள் சம்பள அளவிற்கு பணம் கொடுத்து) தண்டிக்கப்பட்டவர்கள் தங்கள் செய்த குற்றத்தைப் பற்றி உணர்ச்சிகரமாக சொல்ல வைக்கவேண்டும் என்று சில கியூபன்கள் எண்ணுகிறார்கள். ஆனால், நான் சந்தித்த பெரும்பாலானோர் மியாமி தொலைக்காட்சியில் காட்டப்படும் கலாச்சாரம் குறித்து தெரிந்து வைத்திருந்தனர். அவர்கள் அதனை பைத்தியக்காரத்தானமாகவும், அருவருப்பானதாகவும் கருதினார்கள். மியாமியிலிருந்து கிடைக்கும் அமெரிக்க கலாச்சாரத்தில், பின்னிரவு ஆபாசப்படங்களும் அடக்கம். அமெரிக்காவின் மதிப்பை அதிகரிக்க அது ஒன்றும் உதவவில்லை. சில கியூபன்கள், மயிர் கூச்செரியும் முதலாளித்துவ வாழ்க்கை முறையை விரும்பலாம். ஆனால், நான் சந்தித்த அனைத்து கியூபன்களும் மைக்கேல் ஜாக்சனை விட எத்தியோப்பியா குறித்தும், குவாட்டமெலா குறிததும் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

சிலியிலிருந்து வெளியேறி கியூபாவில் வாழும் ஒரு பெண் என்னிடம் சொன்னார், ‘நான் மேற்கு ஜெர்மனியில் இருந்திருக்கலாம். எனக்கு அவர்கள் நிறைய சம்பளம் கொடுத்தார்கள். ஆனால், அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? ஏதாவதொன்றில் முதலீடு செய்வதா? பணம் கொஞ்சமாக இருந்தாலும், வாழ்க்கை இங்கே கியூபாவில் பரபரப்பாக இருக்கிறது. எப்பொழுதும் இங்கு ஏதாவது செய்ய இருக்கிறது. மக்கள், தங்கள் எதிர்காலத்தை தாங்களே உருவாக்குகிறார்கள். ஜெர்மனியில் எனக்கு உடம்பு சரியில்லாமல் போனால், நான் தனியே படுத்து அழிய வேண்டியதுதான். இங்கே, என் உணவுப் பங்கீட்டை வாங்க தியெண்டாவிற்கு ஒருநாள் போகவில்லையென்றால் கூட, மக்கள் உடனே உதவிக்கு வந்து விடுகிறார்கள்.

அவளது குளியலறையில், கழிவறை கோப்பையில் நீர் எப்பொழுதும் நிரம்பட வைக்கப்பட்டிருக்கும். ஏனென்றால், ஹவானாவில் தீவிர நீர்ப் பற்றாக்குறை இருக்கிறது. பெண்கள் எதிர் கொள்ளவேண்டிய பல்வேறு சிறு அசௌகரியங்களலி இதுவும் ஒன்று. ஆனால் எலிசபெத் கியூபா மீது கொண்டுள்ள வெறித்தனமான பற்றை அது கொஞ்சமும் குறைக்கவில்லை. அவளது குட்டி பால்கனியில் உட்கார்ந்து கொண்டு ‘அனெஜோ சோப்ரை லாரொகாஸை’ குடித்துக் கொண்டிருந்தோம். மேலேயும், கீழேயும் இருந்த சின்ன சின்ன வீடுகளிலிருந்து மக்கள் வெளியேயும், உள்ளேயும் போய் வந்து கொண்டிருந்தார்கள். கீழே, சாலையில் குவாகுவா என்று செல்லமாக அழைக்கப்படும் பழைய சிவப்பு நிற பேருந்துகளிலிருந்து, தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். எலிசபெத் சொன்னார், இது கடினமான வாழ்க்கை, ஆனால் நல்ல வாழ்க்கை.

பாலுறவு, வேகம், பரபரப்பு இவை அளிப்பதைவிட மிகப்பெரியதொரு சாகசத்தில் ககியூப மக்கள் ஈடுபட்டிருந்தனர். சில சமயங்களில் அவர்களது ஆற்றல் வேகம் குறைந்துபோனாலும், மனோதைரியம் எப்பொழுதும் மேலோங்கியிருந்தது.

கரும்பு மாத்திரமே பயிரிடப்படும் ஒரு பயிர்ப் பொருளாதாரம் உடைய ஒரு ஏழைநாட்டில், அதுவும் மற்ற பொருட்கள் அனைத்தையும் நாட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும் அமெரிக்க தடை உள்ள நாட்டில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே கஷ்டமாயிருக்கும் நிலையில் மனோதைரியமே அவர்களை காப்பாற்றி வருகிறது. குறைந்த வளர்ச்சி என்பது, பொருளாதாரத்தைப் போலவே, மனசையும் மூளையும் சார்ந்த விஷயம் என ஒவ்வொரு கியூபனும் சொல்லுவார்கள். அடிப்படை கட்டுமான வசதிகளையும், தகவல் தொடர்வு சாதனங்களையும் உருவாக்கும் போராட்டத்தில், கியூப மக்கள் ரிசையில் நின்றால் இரண்டு மணிநேரத்திற்கு ஆகுமென்பதால், பிரயாணத்துக்கு பெட்டிகளை அடுக்க நேரம் இருக்காது என நான் பயந்தேன். இருந்தாலும், கடைசியில் யார்? என்று கேட்டுவிட்டு, என் வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்.

நான் கீழே இறங்கி வந்தபோது, தேன் நிலவுத் தம்பதிகள், என்னை என் இடத்திற்கு அழைத்தார்கள். அப்பொழுது வரிசையில் எனக்கு முன்பாக நான்கு பேரே இருந்தனர். கொஞ்சநேரம் முன்பு, முன்பாக நான்கு பேரே இருந்தனர். கொஞ்ச நேரம் முன்பு, ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் அவர்களது திறமையின்மை குறித்து சத்தம் போட்டபோது, அவர்கள் தங்களது வேலை முறையை ஆதரித்துப்பேசினர். ஆனால், இப்பொழுது நான் வெட்கம் அடைந்தேன்.

கியூபப் பெண்கள் மற்றும் அரசியல் அதிகாரத்துக்கும் இவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போலத்தோன்றும். உண்மையில், இவை அவற்றுடன் முழுக்க முழுக்க தொடர்புடையவைதான். மக்கள் தினசரி எரிச்சல்களை, அமைதியாகவும், ஒத்துழைப்புடன் எதிர்கொள்கிறார்கள். ஏனென்றால், இந்தப்பிரச்சனைக்கு காரணம், ஒரு தனித்த ஆளும்வர்க்கத்தின் திறமையின்மையோ, பேராசையோ அல்லது ஊழலோ என்று அவர்கள் எண்ணவில்லை. பல்லாண்டுகால அறியாமை, நோய், ஏழ்மை பாரம்பரியம் உள்ள இருபத்தைந்து ஆண்டுகால தேசத்தை பீடித்துள்ள பல பிரச்சனைகளில் ஒன்றாகத்தான் இதைப் பார்க்கிறார்கள்.

கியூபப் புரட்சியின் முதல் குறிக்கோள், எழுத்தறிவின்மை, நோய், சத்துணவுக் குறைபாடு ஆகியவற்றை எதிர்த்தொழித்து, கியூப மக்களை மக்களாட்சிக்கு தேவையான கடமைகளை செய்யும் வகையில் உருவாக்குவதே. பாதுகாப்பு அரண்களை தொடர்ந்து நிலை நிறுத்துவதிலேயே அவர்களது மனித வளமும் பிற வளங்களும் தீர்ந்து போய் விடுகிற போதிலும், தன்னார்வ உழைப்பின் பயனால், இந்த அடிப்படை குறிக்கோள்களை அடைந்துள்ளனர். உலக அளவில் சர்க்கரைப் பொருளாதாரத்தை லாபமயமாக்குவதற்கான கடும் போராட்டம், அமெரிக்க பொருளாதாரத் தடையினால் ஏற்பட்ட விளைவுகள். இவற்றை எதிர்கொண்டே இந்த மாபெரும் சாதனை நிகழ்ந்திருக்கிறது.

உடல்நலம் மற்றும் கல்வி குறித்த கியூபாவின் கூற்றுகள் உண்மைதானா என்பதை ஆராய்வதே என் முதல் பணியாக இருந்தது. எனவே, ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, கிராமப்புறத்திற்கு நழுவினேன். ஒவ்வொரு ஊர், ஊராக சென்று அங்கிருந்த ‘பாலிகிளினிகோ’ எனப்படும் பல்சேவை மருத்துவமனை, நீர் வழங்குதல், மின்சாரம், ஊர் மக்களின் உடல் நலத்தின் தரம், தொழிற்துறை மற்றும் வேளாண்மையின் உற்பத்தித்திறன் ஆகியவற்றை தெரிந்து கொண்டேன். பின்புறத் தெருக்கள் வழியாகச் சென்று நான், சர்க்கரை ஆலைகளுக்கும், தொழிற்சாலை வாயில்களுக்கும் சென்றேன்.

ராணுவ பயிற்சிகளை பார்த்தேன். தன்னார்வத் தொண்டர் படை பூண்டு அறுவடை செய்வதையும், தக்காளிகளை அட்டைப்பெட்டிகளில் அடைப்பதையும் பார்வையிட்டேன். யாரும் என்னை வெறித்துப் பார்க்கவில்லை. பிச்சை கேட்கவும் இல்லை. ஆனால், காரில் ஏறிக்கொள்ளச் சொன்னால் மகிழ்ச்சியுடன் ஏறிக்கொண்டார்கள் (‘லா குவாகுவா எஸ்தா மால்’) பேருந்து வேலை செய்யவில்லை என்பதே வழக்கமான விளக்கம். நான் பார்த்த ஒவ்வொருவரும் நல்ல உடல் நலத்துடன், சுறுசுறுப்பாக, அமைதியான மன உறுதியுடன் இருந்தார்கள்.

சில சமயங்களில் நான் எதிர்கொண்ட மகிழ்ச்சியற்ற மனிதர்கள் என்னை யதார்த்தத்திற்கு கொண்டு வந்தார்கள். தன்னுடைய மனோவியல் நிபுணர் அம்மாவுடன் வாரவிடுமுறை நாட்களை கழித்துவிட்டு, வார நாட்களை தன்னுடன் கழிக்க வரும் பத்து வயது மகளின் அப்பா (அவர் விடுதிப்பள்ளி ஒன்றில் சமையல்காரர்) சொன்னார். ‘நான் என் மகள் ஒரு கறுப்பனை கல்யாணம் செய்துகொள்ள அனுமதிக்க மாட்டேன்’. அப்பாவின் முட்டாள்தனத்தை பார்து, ‘ஓ, போப்பா’ என்று தலையை வேகமாக ஆட்டினாள் பத்துவயது மகள்.

மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி குறித்து எல்லோருக்கும் அக்கறை இருந்தது. சர்க்கரை உற்பத்தியை யந்திரமயமாக்குவதில் உள்ள கஷ்டங்களை அவர்கள் என்னிடம் விளக்கினர். ‘வேலையை மனதிமயமாக்குவது’ என்று அதை அழைத்தார்கள். தாவர மரபணுவியல், விலங்கு நோய்கள் குறித்த கேள்விகளுக்கு பெற்றோரை விடவும் பிள்ளைகள் புத்திசாலித்தனமான பதில்களை சொன்னார்கள்.

கியூபாவின் அனைத்துப் போராட்டங்களிலும், பெண்கள் முன்னணியில் இருக்கின்றனர். தலைமறைவு போராட்டத்தின்போது, பெண்கள் மருந்துகளை விநியோகிக்கிற, அடிபட்டவர்களை குணப்படுத்துகிற வேலைகளையும், சியர்ரா மாஸ்ட்ராவில் பள்ளிகளில் பாடம் நடத்துவதையும் மேற்கொண்டிருக்கிறார்கள். ஐம்பதுகளில் கொரில்லாகளுக்கு தேவையான பொருள்களை வழங்கும், அவர்களை அரசுப்பொருப்பிலிருந்து பாதுகாக்கும் தலை மறைவு நிர்வாகம் பெண்கள் உதவி இல்லாமல் உருவாகியிருக்க முடியாது என்று ஃபிடல் எப்பொழுதும் பதிவு செய்து வந்துள்ளார்.

போராளிகளின் முயற்சிகளுக்கு பெருந்துணையாக இருந்த பெண்கள் தொடரமைப்பு, 1960 ஆகஸ்டு 23ம் நாள் ‘கியூபப்பெண்கள் கூட்டமைப்பாக’ அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. நாட்டுப்புறங்களுக்கு பரவிச்சென்று, எதிலும் பங்கேற்காத, பயப்படுகின்ற மக்களை மனம்மாற்றி, அவர்களையும் புதிய சமூகம் அமைப்பதில் பங்கேற்க செய்ய முடியும் என உணரவைக்கும் பணியில் பெண்கள் கூட்டமைப்பினர் ஈடுபட்டனர். இது புரட்சியை வலுப்படுத்தும்.

விவசாயப் பெண்ணான நதிவிதாத் பெதான்போர்ட் மார்த்தேன் தன்னைப் போன்ற பெண்களை அவரது வட்டாரம் முழுதிலும் கிராமம் கிராமமாக சென்று சந்தித்து அரசியல் மயப்படுத்தினார். கூட்டமைப்பு கியூபாவில் எழுத்தறிவை விரிவுபடுத்தியது. நாட்டின் குறுக்கு நெடுக்கில், விவசாயக் குடிசைகளில் தன்னார்வ ஆசிரியர்களாக அவர்கள் பணிபுரிந்தார்கள். மேலும், பல தன்னார்வ ஆசிரியர்களை உருவாக்கினார்கள். ‘ஆறாம் வகுப்புக்கான போர்’, அவர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அந்தப்போரை வென்று பிறகு, அனைத்து மக்களும் ஒன்பதாவது வகுப்பு வரை படிப்பதற்கான போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.

அமெரிக்க தடை என்ற பேரழிவை, பொதுமக்களின் தாக்குப்பிடிப்பாலும், முன் முயற்சியாலும் ஒரு நல்வாழ்த்தாக மாற்றியிருக்கிறார்கள். இல்லையென்றால், கியூபா மற்றுமொரு வளமிழந்த நுகர்பொருள் கலாச்சார நாடாகப் போயிருக்கும். கியூபாவால் விக்டோரியா தெ கிரோன் என்றும், அமெரிக்கர்களால் பன்றிகள் வளைகுடா வீழ்ச்சி என்றும் அழைக்கப்படும் அமெரிக்காவின் அர்த்தமற்ற ஊடுருவல் முயற்சி, கியூபர்களிடையே வெளிநாட்டு அச்சுறுத்தல் மற்றும் தேசிய பெருமிதம் குறித்த உணர்வை ஏற்படுத்தியது.

1981ல் ஹவானா வட்டாரத்தில், சாதாரணமாக ஆசியாவில் காணப்படும் ரத்தப்பெருக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் பயங்கர தொற்று நோயாகப் பரவியது. ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களே தனியாகப் பிரித்து குணப்படுத்துவதற்காக, அனைத்து வகை பொதுக் கட்டடங்களிலும் தற்காலிக மருத்துவமனைகள் பொதுமக்கள் அமைப்புகளைத் திரட்டி அமைக்கப்பட்டன. ‘கிருமிப்போர்’ என்ற கருதுகோள் வெளிப்படையாகத் தெரிந்தது. இது அமெரிக்க உளவுநிறுவனம் சி.அய்.ஏ.வின் திருட்டுப் பணித்துறையின் மற்றொரு அன்பளிப்பா என்றெல்லாம் ஆராய்நது கொண்டிருக்காமல் கியூபர்கள் வேலையில் இறங்கினர். இதுபோன்ற தொற்றுநோய்களை எதிர்கொள்ள தங்களுக்கு இருக்கும் தயார்நிலை மற்றும் திறமை குறித்தே அவர்களுக்கு ஆர்வம் அதிகமிருந்தது. வந்த வேகத்திலேயே, டெங்கு காய்ச்சல் கியூபாவை விட்டு பறந்தோடியது.

பெண்களை, வளர்ச்சிக்கான பாதையில் முழுமையாக ஈடுபடத்துவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று கற்பனை செய்வது தவறானது. நல்ல வாழ்க்கை என்பது பலருக்கு முதலாளித்துவ வாழ்க்கை முறை என்ற புரிதலே இருந்தது. மேலும், கடந்த காலம் என்பது, கரும்பு வெட்டும் வேலை என்பதாகவே இருந்தது. அந்த மாதங்களில் பெண்கள் வீட்டுவேலை செய்தும், புகையிலைத் தொழிற்சாலைகளில் வேலை செய்தும், பாலியல் தொழில் செய்தும் குடும்பத்தை நடத்தினர். அடிமைப்பெண்களுக்கு கடுமையான உடலுழைப்பிலிருந்து பாதுகாப்பு இல்லை. எனவே, உடலுழைப்புக்கான உரிமை என்பது குறித்து கியூபப்பெண்களுக்கு பெரிய விருப்பம் ஒன்றுமில்லை. சியெர்ராவில் பெண்கள் இருப்பதற்கு எதிர்ப்புகள் இருந்தன.

ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக, ஒரு வேளை மெல்பா ஹெர்ணாண்டைஸ் மற்றம் செலியா சாஞ்செஸ் மீது அவருக்கிருந்த சார்பினால் ஃபிடல் விடுதலைப் போராட்டத்திலும், அதன் வெற்றியிலும், அதன் புகழ் ஒளியிலும் பெண்களின் முழு பங்கேற்பு இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார். 1965ல், பெண்களின் விடுதலையை, ‘புரட்சிசிக்குள் ஒரு புரட்சி’ அவர் வரையறுத்திருந்தார். ‘பெண்களின் உரிமைகளை கீழ்த்தரமாக மறுத்தலுக்கு எதிராகவும், பால்களுக்கிடையிலான சமத்துவத்திற்குமான’ மார்க்ஸ் மற்றும் லெனினின் எழுத்துக்களே, பெண்ணின் பங்கு குறித்த கியூப புரட்சிகர கருத்தாக்கத்தின் அடிப்படை என பெரும்பாலும் கருதப்படுகிறது. கருக்கலைப்பு, கருத்தடை, புதிய மால்தூசியக் கோட்பாடு, வேலையிடத்தில் பெண்கள், மணவிலக்கு, குழந்தைப் பாதுகாப்பு, பேறுகால விடுப்பு- இவை அனைத்திலும் கியூபா, ரஷ்யாவைப் பின்பற்றுகிறது. ஆனால், கியூபாவின் பாலியல் அரசியல் தனித்த கியூபத்தன்மை வாய்ந்தது. அதற்கும் ரஷ்ய கோட்பாடுகளுக்கும் சம்மந்தமில்லை.

கியூபாவின் பாலியல் அரசியல் சிக்கலானது. கியூப ஆண் ஓர் காதல் மன்னன் அல்லது தீவிரமான காதல் மன்னன் என்று சொன்னால் கூடப்போதாது. கியூப ஆண் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவனது ஆளுமை உருவாக்கத்தில் அப்பாவை விட அம்மாவின் பங்கே அதிகமானதாக இருக்கிறது. இந்தப் புதிரை, கியூப இளம்பெண்கள் இதழ் ஒன்றில் வந்த நகைச்சுவை ஒன்று தெளிவாகச் சொல்கிறது. ஒரு பெண் சொல்கிறாள் இன்னொருத்தியிடம் "உன் ஆண் நண்பன் ஒரு பெரிய காதல் மன்னன்." அதற்கு அவள், "ஆமாம். நான் அதிர்ஷ்டசாலிதானே?" என்கிறாள். கியூபாவின் சமூகவியல், அன்றாட வாழ்வின் மனநோய் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டதல்ல. எனவே, வெளியிலிருந்து வரும் ஒருவருக்கு ஆண்-பெண் உறவாடல்களின் உடல் மொழியை தெளிவாக புரிந்து கொள்வது கடினம்.

அதிகாரபூர்வமாக கியூபா ஒரு எதிர் பால் இணைகளை கொண்ட நாடு. இங்கு ஓரினத் தம்பதிகள் கிடையாது. ஒற்றையர்களாக வாழ்பவர்களும் இல்லை. ஒற்றைப் பெற்றோர்களும் இல்லை. இந்த அசாத்தியமான யதார்த்தத்தை புரிந்துகொளள் எந்த பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களும் இல்லை. அதுபோலவே, பெண்களுக்கு எதிரான கற்பழிப்புகள், குற்றங்கள், பாலியல் வன்முறைகள் தொடர்பான புள்ளி விவரங்களும் இல்லை. வேலை முடிந்தவுடன் ஹவானாவின் தெருக்களில் கைகோர்த்துக்கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும், சிரித்துக்கொண்டும், ஐஸ்கிரீம் மட்டுமே விற்கும் கொப்பெலியர் வளாகத்தினுள் திரிந்து கொண்டும் இருக்கும் ஜோடிகளை நிச்சயமாக நீங்கள் பார்க்கலாம். அப்படி இல்லையென்றால், அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, இலக்கிய நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் என சோசலிசம் அனுமதிக்கும் இலவச கேளிக்கைகளில் பங்கேற்பதை நீங்கள் பார்க்கலாம்.

இந்த நிலைமை, தீவிரமான குடியிருப்புப் பற்றாக்குறையினால் குழப்பமாயிருக்கிறது. ஆனால், அதற்கு கியூபா தனக்கே உரித்தான ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளது. உடலுறவில் ஈடுபடுவதற்கான அந்தரங்கமான இடத்தை வேண்டுபவர்கள், அதற்காகவே உள்ள பல பொஸாடாக்களில் ஒன்றுக்குச் சென்று நியாயமான விலைக்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். மணி நேர வாடகைக்கு படுக்கையையும், போர்வைகளையும் எடுத்துக்கொள்ளலாம். அறைக்கே மதுபானங்களையும், உணவையும் வரவழைக்கலாம். ஜோடிகளைப்பற்றி எவரும் கேள்விகள் கேட்பதில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் மணமுடித்தவர்களாக இருக்கலாம். மற்றவர்களுடன் மணமானவர்களாக இருக்கலாம். மணமாகாதவர்களாக இருக்கலாம். ஒரு மணிநேர உறவாக இருக்கலாம்.

ஒரே சங்கடம் என்னவென்றால், கியூபாவில் எல்லாவற்றிற்கும் காத்திருப்பதைப்போல இதற்கும் மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்த கிடைட்ட இடம் காலியாகும் வரை, ஜோடிகள் புகை பிடித்துக்கொண்டும், கட்டிப்பிடித்துக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் காத்திருப்பார்கள். சுதந்திர பாலியல் உரிமையை, பெண்ணியல்வாதிகளான இனெஸ்ஸா அர்மாண்டும், அலெக்ஸாண்ரா கொலாந்தாயும் கோரியபோது, லெனின் அதை வெறுப்புடன் புறந்தள்ளியதை நினைத்துப் பார்ப்பவர்களுக்கு இந்த விஷயத்திலாவது கியூபர்கள் தனித்த வழியில் பயணித்திருப்பது புலப்படும்.

பிறன்மனை புகுவது என்பது கியூபர்கள் தேசிய விளையாட்டாக ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆண்கள் அது குறித்து தம்பட்டம் அடித்தார்கள். மற்றவகையில் புத்திசாலியாக, நாகரிகமானவராக, நியாயமானவராக இருக்கம் ஓர் ஆண், அவருக்கு கீழே, அருகேயே ஓர் அழகிய பெண் வேலை செய்தால் அவளுடன் எவ்வளவு நேரம் கழிக்க முடியுமோ, அவ்வளவு நேரம் கழிக்க விரும்புவதாக உங்களிடம் கூறுவாள். அதே சமயம், தனது மனைவிக்கு அளிக்கும் கவனமும் வழக்கமான அளவில் தொடரும். இருவரையும் அவரால் திருப்திப்படுத்த முடிகிறது என்றால், தனது வீரிய கலையைக்கொண்டு மகிழ்ச்சியை அவரால் பரப்பமுடிகிறது என்றால் அதற்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும் என்பதே அதன் உள்ளர்த்தம்.

ஆண்கள் இந்த கனவுலகில் கட்டுண்டார்கள். மணமாகாத பெண்களை, நாய்க்குட்டிகளை அழைப்பது போல தங்கள் பக்கம் அழைப்பது இதனால்தான். ஹவானாவில் தனித்திருக்கும் ஒரு வெளிநாட்டுப் பெண், ஆண்களின் முறைப்பையும், சைகைகளையும் பெண்களுக்கு எதிரான அடக்கு முறை, எதிர்புணர்வு மற்றும் கீழ்மையான மதிப்பீட்டின் வெளிப்பாடாகத்தான் புரிந்து கொள்ளுவர். குறிப்பாக, அவர் வட அமெரிக்காவிலும், வட அய்ரோப்பாவிலும் நிலவும் விசிலடிக்கும், கிறீச்சிடும், பாலியல் கிண்டலடிக்கும் அனுபவங்களை பெற்றிருந்தால், கியூபா நிலைமையை மோசமானதாகவே உணர்வர்.

பெண்களுக்கு சமத்துவம் அளித்துள்ளோம் எனப்பறை சாற்றும் கியூபாவின் முன்னேற்றம், இருட்டான திரை அரங்குகளில் நான் தனியே அமர்ந்திருந்த போதும், விடுதியில் லிப்டுக்காக காத்திருந்தபோதும் ஆண்கள் செய்த இடையூறுகளினால் தோல்வியடைந்ததாகவே எனக்குத் தோன்றியது. ஆனால், சில நாட்களில், ஆண் அடக்குமுறை வேறு விதமானது என்பதை உணர ஆரம்பித்தேன் (எனது விருப்பமின்யையோ, ஆர்வமின்மையையோ அவர்களது பாலியல் முன்னோட்டத்தின் மீது) வெளிப்படையாக காட்டியவுடன் ஆண்கள் அதிர்ச்சியுற்றவர்களாக, அவமானமடைந்தவர்களாக தோன்றினார்கள். ஏன் அந்த இடத்தை விட்டு ஓடிவிடவும் செய்தார்கள். இதுபோன்ற பாலியல் அணுகுமுறைகளை கியூபப் பெண்கள் மிகவும் அனுபவிப்பதாகவும், பாலுணர்வைத்தூண்டும் வகையில் பெண்கள் நடந்து கொள்வதாகவும் ஆண்கள் கூறினர்.

அது போன்ற சாம்பவங்களை நானும் பார்த்தேன். திரையரங்கில் தொந்தரவு செய்யப்பட்டபோது, எதிர்த்துக் கத்தியிருந்தால், சுற்றியிருப்பவர்கள் என் உதவிக்கு வந்திருப்பார்கள் என பெண்கள் கூறினர். தொந்தரவு செய்தவர்களில் ஒருவனாவது பொதுமக்கள் கைதுக்கு உள்ளாகி, பதினைந்து வருடங்கள் உழைப்பு தண்டனைக்கு ஆட்பட்டிருப்பான் என்றார்கள், இதற்காகவே, கூக்குரல் போடாமல் இருக்கவேண்டும். இதே இங்கிலாந்து என்றால், நான் நரம்பு தளர்ச்சியினால் கத்துகிறேன் என்றும், எனது கத்தல் தவிர அந்த ஆனின் மீது வேறு ஆதாரம் இல்லை என்றும் மக்கள், பிரச்சினையை அலட்சியம் செய்திருப்பார்கள்.

எந்த ஒரு பெண்ணும், புரட்சிகர ஆயுதப் படையில் பயிற்சி பெற்ற, சம்பளம் வாங்கும் அதிகாரியாக இருக்கலாம் என்ற யதார்த்த புரிதல், பெண்கள் மீதான ஆண் அடக்குமுறையை மாற்றுகிறது என்பது உண்மையே. பெரும்பாலான பெண்கள் ஆயுதப்படையில் பயிற்சி பெற்று, புரட்சியை பாதுகாக்கும் குழுவில் கண்கானிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நான் வளர்ந்த சமூகத்தைவிட, கியூப சமூகத்தில் ஆண்-பெண் உறவுகள் மாறுபட்டவை. ஏனெனில் கியூப சமூகம், ஆப்பிரிக்க லத்தீன் பண்பாட்டுக்கூறுகளை கலந்து உருவாகியது. ஆப்பிரிக்காவிலிருந்து கப்பலில் அடிமைகளாக வந்தவர்கள், பெண்வழியில் கூடப்பிறந்தவர்கள், ஒன்று விட்டுப் பிறந்தவர்கள் உள்ளடங்கிய மிக நுணுக்கமான குடும்ப அமைப்பை விட்டுச்சென்றிருக்கிறார்கள். இதுவே, ஆண்வழி உறவுகளுக்கு நிகரானவை. எல்லா மனித உறவுகளிலும், தாய்-சேய் உறவு மிக இறுக்கமானதாகவும், நிண்ட நாள் நிலைத்து நிற்பதாகவும் இருக்கிறது.

அடிமைச் சமூகத்தில், ஆண்களும், பெண்களும் கால்நடைகள் போல் வாங்கி விற்கப்பட்டனர். பெண்கள் போல் பயன்படுத்தப்பட்டனர். தங்களுடைய விருப்பத்திற்குரிய ஆண் துணையினால் அல்லாமல், தங்கள் முதலாளிகளால் சிணைப்படுத்தப்பட்டனர். இதனால், அவர்களால் இயல்பான சட்டபூர்வமான குடும்ப அமைப்புகளை உருவாக்க முடியாமல் இந்தப் பாரம்பரியம் எல்லா ஆப்ரிக்க- அமெரிக்க சமூகங்களிலும் தொடர்கிறது. முதல் குழந்தை மிக இளம் வயதிலேயே பிறந்துவிடுகிறது, திருமண உறவுகள் மிகவும் நலிந்துபோய் இருப்பதால், குழந்தையின் அனுபவத்தில் அம்மா, அம்மாவின் அம்மா ஆகியோரே ஒரே நீடித்த உணர்வாக உள்ளனர். இரண்டே வார அனுபவத்தில் இத்தகைய முடிவுகளுக்கு என்னால் எப்படி வரமுடிகிறது என்று தீவிர பெண்ணியவாதிகள் கோபப்படலாம். ஆனால், வடக்கு அய்ரோப்பாவுடன் ஒப்பிடுகையில் கியூபாவில் ஆண்-பெண் உறவுகளில் அத்தகைய விரோத மனப்பான்மை இல்லை என்றே சொல்லலாம்.

இதை கியூபப் பெண்கள் ஒப்புக் கொள்வார்கள். ஆண்-பெண் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட பாலியல் அரசியல் கருத்தாக்கத்தை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. பெண்கள் சமநிலை அடைவதற்கு அவர்கள் காலங்காலமாக செய்து வந்த வேலைகளை செய்ய ஆண்கள் மறுப்பதே மிகப்பெரிய தடை என்று தோழர் ஃபிடெல் சொல்லும்போதுகூட அவர்கள் பருண்மையான காரணங்களையே வலியுறுத்த விரும்பினார்கள். அவர்களது ஜொள்ளு குணத்துடனேயே கியூப ஆண்கள் பெண்களை விரும்புபவர்களாகவும், மதிப்பவர்களாகவும் தோன்றினார்கள். ஆண் மிடுக்கு என கியூப ஆண்கள் வெளிப்படையாக அழைத்துக் கொள்ளும் ஆண் வலிமை, குடும்பத்திலும், ரத்த உறவுகளிலும் பெண்களுக்குள்ள ஆதிக்கத்தை சமன் செய்வதற்காக இருக்கலாம் என எண்ண இடமிருக்கிறது.

கியூப சேவலுக்கும், ரஷ்யக் கரடிக்கும் இடையிலான அன்றாட நட்பின் உரசல்களுக்கு ஒரு காரணம், பெண்களை ரஷ்யர்கள் நடத்தும் முறைதான். கியூபப் புரட்சியின் தோற்றத்திற்கு மார்க்ஸ்,லெனினை விட நாயகன் ஜோசெ மார்த்தி முக்கிய காரணமாக இருந்தார். உயர்ந்த பண்பாளராகவும், தெளிவான, தொடர்ச்சியான அரசியல் கருத்தியல் கொண்டவராகவும், பெண்களைப் போற்றுபவராகவும் இருந்தார் ஜோசெ. மாம்பி படையுடன் இணைந்து போரிட்டு 1895ல் இறந்து விட்டபோதிலும், அவரது ஆளுமை இன்னமும் கியூபாவில் கோலோச்சுகிறது. 1952ம் ஆண்டு மொன்காடா ஆயுதக் கிடங்கை தாக்கிய பிறகு ஃபிடெல் ஒரு மார்க்ஸிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டார்.

அதற்கு அவர், இந்த தாக்குதலை முழுமையாக திட்டமிட்டவர் ஜோசெ மார்த்தி என்று பதில் சொன்னார். பெண்கள் ஆதரவு தரும் எந்த ஒரு குறிக்கோளும் தோற்காது. பெண்கள் ஆதரவைப் பெறாத எந்த அணியும் வெற்றி பெறாது என மார்த்தி நம்பினார். மார்த்தியின் பெண்ணியம், பெண் ஆதரவு நோக்கில் பெண்ணை தூய்மையான, பண்புடைய, விருப்பு வெறுப்பற்ற ஒரு லட்சியப்பெண்ணாக பார்க்கிறது. இந்த லட்சியப் பெண் உருவகம், பெண்குறித்த முதலாளித்துவ கருத்துக்களான, அவள் வலிமையற்றவர், புனிதமானவள், ஆணைவிட பாலியல் நாட்டம் குறைந்தவள் என்றும் அடிப்படையில் அமைந்தது. ஆனால், கீழ்மைப்படுத்துகிற கடும் உழைப்பிலிருந்து பெண்கள் பாதுகாக்கப்படாத ஓர் சமூகத்தில் இந்த கருத்துக்கு ஒரு குறிப்பான தேவை இருந்தது.

ஆணும், பெண்ணும் ஒருவருக்கும் ஈடுசெய்து கொள்ளக்கூடியவர்கள் என்ற மார்த்தியின் கருத்து, இருவரும் எதிர் எதிர் முனைகள் என்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், முதலாளித்துவ அடக்குமுறையின் ஒரு முனை, பெண்ணிலும், ஆணிலும் இருக்கக்கூடிய பெண்மைக் குணத்தை ஒடுக்குகிறது எனவும் அவர் வாதிட்டார். கறாரான சுயநலத்தை முன்னிறுத்தும் அமெரிக்க பெண்ணியம், விடுதலைபெற்ற சமத்துவ அமெரிக்க பெண்ணியம், விடுதலைபெற்ற சமத்துவ அமெரிக்க கனவை புரட்டிப் போடுவதாக அவர் கண்டார். அமெரிக்கப் பெண்கள் தங்கள் சுயநலக் குறிக்கோள்களை அடைந்துவிட்டார், ரோஜாப்பூக்களின் வாசம் எங்கிருக்கும்? எனக் கேட்டார். தற்கால மார்த்தி ஆய்வாளர்கள், சமூகத்திற்கு பெண்தன்மைகள் தேவை என வாதிட்டனர். அவை என்ன என்று வலியுறுத்திக் கேட்டபிறகு ‘தன்னை வெறுத்தல், கூர்மையான உணர்வு, புத்தார்வம், திண்ணிய பொது எண்ணம், மென்மை ஆகியவை’ என்று சொன்னார்கள். ‘வாழ்க்கையின் ஆற்றல் மற்றும் வாழ்வதற்கான ஒரே காரணம், ஒரு பெண்ணின் காதல் என்பதைத் தவிர வேறு உண்டா?’

கியூபப் பெண்ணியல்வாதிகள், பெண்மையின் மீது அழுத்தம் கொடுப்பதற்கு மார்த்தியின் தொடரும் பாதிப்பே காரணம் என நாம் கூறலாம். கொலை செய்வதற்காக பயிற்சி பெற்றவர்கள், கொலை செய்யும் போது முத்து போன்று அழகு செய்யப்பட்ட நகப்பூச்சுகளை அணிந்திருப்பார்கள். நாட்டில் உள்ள விரல் நக ஒப்பனைக் கலைஞர்களுக்கு தொடர்ந்து விநியோகிக்கப்படுவதால், அசெப்டோனுக்கு எப்பொழுதுமே தட்டுப்பாடுதான். கரும்பு வெட்டும், சுரங்கங்களில் வேலை செய்யும், கிரேன்களை இயக்கும் உழைப்பு கதாநாயகிகள் கூட முடிகளை அகற்றி, நாற்றம் நீக்கி, நறுமணம் பூசி இருப்பர்.

மிகக் குறைவாக வழங்கப்படும் துணிகளைக் கொண்டு, கியூபப்பெண்களுக்கு எப்படி அழகிய உடைகளை தயாரிப்பது என்பதே பெண்கள் கூட்டமைப்பு சமாளிக்க வேண்டிய முதல் பிரச்னைகளில் ஒன்றாக இருந்தது. பெண் தையல்காரர்களுக்கும், ஆண் தையல்காரர்களுக்கும் பயிற்சி அளித்து, அரசு திட்டம் ஒன்றின் கீழ் உரிமம்பெற்ற கைவினைஞர்களாக பணிபுரிந்தார்கள். பெண்கள் கூட்டமைப்பின் மாநாட்டில், ஏன் பல பெண்கள் மீன் கொத்தி நீல நிறத்தாலான பாலியஸ்டர் உடைகளை அணிந்திருந்தனர் என வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் எண்ணினர். அது என்ன சீருடையா என்று அவர்கள் கேட்டனர். உண்மையில், கிடைக்கின்ற பல நிறங்களில், இந்த வகை நீல நிறமே கண்ணைக் கவர்வதாக இருந்ததால், பலரும் அதை தேர்ந்தெடுத்தனர்.

கவர்ச்சியும், வேலைப்பளுவும் இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்பார்த்து பெண்களிடம் அழுத்தம் ஏற்படுத்துவது நமது சமூகத்தின் மிக மோசமான குணம் என்று என்னைப்போன்ற பெண்ணியல்வாதிகள் நினைக்கிறோம். கியூபப் பெண்களிலும் நேர் எதிரான கோரிக்கைகளை வைப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். கொலை செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படும் பெண்கள் மலர்போல மென்மையாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறார்கள். மரிபோஸா மலர், கலாஷ்னிகோவ் துப்பாக்கியுடன் இணைந்து இருக்கவேண்டும்.

ஒரு பெண் மூளை அறுவை சிகிச்சை நிபுணராகவோ, பொலிட்பீரோ உறுப்பினராகவோ, காவல்துறை தலைவராகவோ இருந்தாலும் அவர்களது குழந்தைகள் மருத்துவமனையிலிருந்தால் அவர்கள் படுக்கைக்கு பக்கத்தில் அமர்ந்து அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் சமாளிக்க முடிகிறது என கியூபப்பெண்கள் பெருமிதப்படுகின்றனர். ஒளியை நோக்கி வளரும் மலர், பாறையை உடைப்பது போல தங்களை கருதுகிறார்கள் அவர்கள்.

‘பெண்கள் சோர்வடையாத போது, களைப்படையும் ஆண்கள் இருக்கிறார்களா?’ என்ற மார்த்தியின் கேள்விக்கு அவர்களின் பதில் ‘ஆம்’ என்பதே.

வாடகைக் கார் ஒன்றை எடுத்துக்கொண்டு, ஹவானா, மடன்ஸாஸ், பினார் டெல் ரியோ வட்டாரங்களில் சுற்றிவந்தபோது புரட்சியின் தேவைகள் காரணமாக பிரிந்து வாழும் தங்கள் பெற்றோரை கணவர்களை, காதலர்களை பார்ப்பதற்காக சாலைகளில் பயமில்லாமல் லிப்ட் பேட்டுச் செல்லும் பல டஜன் பெண்களை சந்தித்தேன். அவர்கள் வெட்கப்பட்ட போதிலும், பேசுவதற்கு பயப்படவில்லை.

பிலார் சரியானதொரு எடுத்துக்காட்டு. அவள், ஹவானா பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப்படிப்பை முடிக்கப் போகிறாள். அடுத்து, வேலைவரும் தீவின் ஏதோ ஒரு மூலையிலோ, உலகத்தின் எங்கோ ஒரு பகுதியில் நூறு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் மடன்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தன் கணவரை பார்க்க என்காரில் ஹிட்ச் ஹைக் செய்தாள் பிலார். (ஹிட்ச் ஹைக் என்றால், இடையில் மற்றவர் ஊர்தியில் ஏறி செய்யும் நடைப்பயணம்)

‘இப்பொழுதும் பிரிந்து வாழ்கிறீர்கள், எதிர்காலத்திலும் பிரிந்து வாழப்போகிறீர்கள். மணவாழ்க்கையில் இது கஷ்டமாயில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘எங்களால் இதை சமாளிக்க முடியும். நாங்கள் எட்டு வருஷம் காதலித்தோம். அப்போதும் இப்படித்தான்’ என்றாள். நான் இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள, அவளிடம் ஒரு வாரம் முழுக்க கடினமாக உழைத்தபிறகு, ஆண்கள் எதிர்பார்க்கும் கவனிப்பை அவர்களுக்கு தர முடிகிறதா என்று கேட்டேன். அவள் புன்முறுவலித்தாள். அவள் எவ்வளவு வெளிறிப்போயிருந்தாள், அவளது பல் ஈறுகள் எவ்வளவு வெள்ளையாக இருந்தன என்பதையும் பார்த்தேன்.

‘சில சமயங்களில், இரவு முழுவதும் அறுவை சிகிச்சை அறையில் வேலை பார்த்துவிட்டு, காலையில் பையை எடுத்துக்கொண்டு பயணத்திற்காக சாலையில் இறங்கவேண்டியிருக்கும். குவாகுவா பேருந்துக்காக காத்திருக்க எனக்கு நேரமில்லை. எப்பொழுதும் கூட்டமாக வேறு இருக்கும். என்னால் முழுப்பயணத்தையும் நின்று கொண்டு மேற்கொள்ள முடியாது’ என்றாள் பிலார்.

அவளை தூங்க விட்டுவிட்டு, சாலையிலுள்ள மேடுபள்ளங்கள் மீது நான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், நான் அவளிடம், ‘இரத்த சோகை இல்லாமலிருந்தால் நன்றாக இருக்குமில்லையா?’ என்று கேட்டுவிட்டேன். அதை கேட்டவுடன் அவள் அதிர்ந்தது போலத்தோன்றியது. ‘இருக்கலாம். நான் கருத்தடை சாதனம் (காப்பர் டீ) பொருத்தியிருக்கிறேன்.’ அவள் புருவங்களை நெழித்தாள். பதினாறு வயதோ அதற்கு மேலோ இருந்தால், பெண்கள் விரும்பினால் கருத்தடை சாதனம் பொருத்திக் கொள்ளலாம்.

உள்ளூரிலேயே வளர்க்கப்படும் தாழை இழையிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டிராய்டு மாத்திரைகளும் கிடைக்கின்றன. உள் பொருத்தப்படும் கருத்தடை சாதனங்களிலிருந்து மாத்திரைகளுக்கு மாற ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. கருத்தடை சாதனம் பொருத்திய இளம் மக்கள்தொகை எப்பொழுதும் பிரச்னைதான். ஆனால், இப்பிரச்சனைக்கு கியூபாவில் உரிய வெளிப்படையான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இளம் பருவ கருத்தரிப்பு மிக அவசரமான பிரச்னையாக இருக்க, அதை எப்படித் தடுப்பது என்பதிலேயே முழு அழுத்தமும் இருக்கிறது.

வீட்டு வேலை குறித்து பேசினோம். ‘ஒருவனுக்கு மனைவி வேண்டும் இல்லையா? ஒரு வேலைக்காரி இல்லை’ என்று உரத்து சொன்னாள் பிலார். பிலாரைப் போன்றே இருக்கும் வேறு சில பெண்களையும் பார்த்தேன். கடினமாக வேலை செய்யும் கட்சி உறுப்பினர்கள், தங்கள் பாலியல் உறவு உட்பட எல்லாவற்றிலும் தீவிரமாகவும், பொறுப்பாகவும் ஈடுபடுகிறார்கள். தன்னுடைய கணவனின் கூட்டு வசிப்பிடம் நோக்கி அவள் நடந்து போவதை பார்த்துக்கொண்டிருந்தபோது, அவனது அறை சுத்தமாக இருக்கும், அவளது உடைகள் துவைத்து, மடித்து வைக்கப்பட்டிருக்கும் என நம்பினேன். வயதான பெண்கள் சொன்னார்கள், ‘இல்லை, இல்லை வசதியாக இருக்க வேண்டும் என நினைத்தால், இவள்தான் எல்லா வேலைகளையும் செய்து கொள்ள வேண்டும்’ என்றார்கள். இளம் பெண்களும் ஆமோதித்தார்கள். ஆனால் அது நிஜமான உணர்வு என்பதைக் காட்டிலும், கருத்தியல் சார்ந்தது எனத்தோன்றியது. விலகி நடக்கம் பிலாரைப் பார்த்து, ‘உடம்பப் பார்த்துக்கோ’ என்று கத்தினேன். அவள் ஒரு வெள்ளைச் சிரிப்பை உதிர்த்து, நேர் எதிராக தோளைக் குலுக்கினாள்.

ஃபிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி பெண்களை சுரண்டுகிறது என வாதிட வாய்ப்பிருக்கிறது. சோஷலிஸ புரட்சி, எல்லோரையும் சுரண்டுகிறது. ‘‘ஒவ்வொரு மனிதனின் திறமைக்கேற்ப, ஒவ்வொரு மனிதனின் தேவைக்கேற்ப’’ கியூபா தன் குறிக்கோள்களை அடைய, ஒவ்வொரு துளி தைரியமும், பொறுமையும், ஆற்றலும், உறுதியும், அறிவும் தேவைப்படுகிறது. அந்தச் சுமை, ஆண், பெண் இருவர் மீதும் பாரபட்சமின்றி விழ வேண்டும்.

வளரிளம் பருவத்தின் பாலுறவுச் செயல்களுக்காக கியூபப்பெண்கள் கொடுக்கும் விலை அதிகம். 1976ல் கியூபாவில் நிகழ்ந்த 187, 500 பிரசவங்களில், 52,000 பிரசவங்கள் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. மேலும், இதில் 10,000 பிரசவங்கள் சரியாக கணக்கெடுக்கப்படவில்லை. ஒருவேளை, இந்த தாய்மார்கள் 15 வயதுக்கு குறைவானவார்களாக இருக்கலாம். ஏனென்றால், அந்த வகை கணக்கெடுப்பில் வெளிப்படையாக குறிப்பிடப்படவேயில்லை. ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் கருக்கலைப்புகள் நடக்கின்றன. அதில் கால்பங்கு 19 வயதுக்கு குறைந்த பெண்கள் செய்துகொள்வது. 19வயதுக்குட்பட்ட 40 லட்சம் பெண்கள் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இதில், ஆயிரத்துக்கு பதிமூன்று திருமணங்கள் நிலைத்திருக்கின்றன என்றால், ஆயிரத்துக்கு 3.2 திருமணங்கள் முறிந்துபோகின்றன.

நாட்டில் உள்ள 15வயதுக்கு மேற்பட்ட 33,71,000 பெண்களில் 14லட்சம்பேர் சட்டபூர்வமாக பணிமுடித்தவர்கள். மீதிப்பேர், தன்னியல்பாக இணைந்து வாழ்பவர்கள் 19 வயதுக்குட்பட்ட சுமார் 5லட்சத்து 75ஆயிரம் பெண்களில், 52 ஆயிரம்பேர் சட்டபூர்வமாக மணமுடித்தவர்கள். 87ஆயிரம்பேர், ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்கிறார்கள். மேலும், 25ஆயிரம் பேர் விவாகரத்து செய்தோ, தனித்தோ வாழ்பவர்கள். இந்த கணக்கெடுப்பு முழுமையானதல்ல. ஆனால், அவை பெண்களின் நிலையை உணர்த்துவனவாக உள்ளன. எந்த நேரத்தில் தொழில்முறை அனுபவமும், தகுதியும் பெற வேண்டுமோ அப்பொழுது, வீட்டு மற்றும் குடும்ப பொறுப்புகளை ஏற்கவேண்டியதாகிவிடுகிறது.

வளர்ந்து வரும் பாலியல் நாட்டம், செயலூக்கமுள்ள தோழரா அல்லது பால் கவர்ச்சிப்பண்டமா என்ற மாறுபாடு இவற்றோடு ஒருபெண் இளம்தாய் மற்றும் நேரமிழப்பு, சக்தியிழப்பு ஆகிய பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இலவச கருத்தடை, தேவைப்பட்டால் இலவச கருக்கலைப்பு, பகல்நேர குழந்தைக் காப்பகங்கள் என சட்டபூர்வமான அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. ஆனால், இளம் வயது திருமணம், குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு, மணமுறிவு இவற்றால் இளம் பெண்களுக்கு ஏற்படும் உணர்ச்சிபூர்மான யதார்த்தத்தை மாற்றமுடியாது. 45 நாள் குழந்தைகள் காப்பகங்களில் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், அந்த 12 மணிநேரத்துக்கு அம்மாவுக்கு அனுமதி இல்லை. எனவே, பாலுட்ட விரும்பும் பெண்களுக்கு இந்த வசதி பயன்படாது.

இளம் கம்யூனிஸ்டுகள் இதில் முன்னோடிகளாக இருக்கின்றனர். இருபாலரும் பங்கேற்கும் பாலியல் கலந்துரையாடல் குழுக்களில், உறவுகள் மேலும் நெருக்கமானதாகவும், ஒப்புவிப்புத் தன்மையுள்ளதாகவும் இருக்கவேண்டும் எனக்கருதினார்கள். ஆண்கள், பெண்களில் வேலைகளில் உதவ வேண்டும் என்ற கருதுகோளை நிராகரித்துவிட்ட கியூப பெண்ணியவாதிகள் ஆண்கள் குழந்தை வளர்ப்பு முதல் குடும்பத்தின் அனைத்து அம்சங்களிலும் மேலும் அதிகமாக பங்கேற்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். பெண் சமத்துவத்திற்கான முன்னேற்றம் என்பது, இறுகிப்போயிருக்கும் மனப்பான்மைகளுக்கும், வாக்கொழிந்த ஆனால் தொடர்ந்து நிலவும் பால்சார்ந்த வேலைப்பிரிவினை ஆகியவற்றுக்கு எதிரானப் போராட்டம் என்பது புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு வயதான கியூபன், தனது குழந்தைகள் மீதும், குழந்தைகளின் அம்மா அல்லது அம்மாக்கள் மீதும் தனக்கு உள்ள பொறுப்பை உங்களிடம் ஒப்புக்கொள்வார். ஆனால், எவ்வெப்பொழுது தன் குழந்தைகளை சந்திக்கிறார், எவ்வளவு நேரம் அவர்களுடன் கழிக்கிறார் என்ற நேரடி கேள்விக்கு குழப்பமாக பதிலளிப்பார். அவரது இல்லாமையையும், மற்ற பெண்களுடனான உறவையும், தன் மனைவி விளையாட்டாக ஏற்றுக் கொள்கிறார் எனச் சொல்லலாம். ஆனால் அதை அவர் மனைவி ஏற்றுக்கொள்ள மாட்டார்.

"பெண்களுக்கு பொருளதார சுதந்திரம் உள்ளதால், அவர்கள் இனியும் அவமானத்தை தாங்கிக்கொள்ள மாட்டார்கள், பிறன்மனை நாடும் கணவர்களை தள்ளிவைக்க தயங்க மாட்டார்கள்" என்று பிரதிநிதிகள் சொன்னார்கள். ஆனால், ஆண்களின் நிலையற்ற போக்கு குறித்த கவலையை அவர்களால் மறைக்க முடியவில்லை. பெண்கள் ஒற்றுமையில் உள்ள தீவிரமான ஓட்டைகளால்தான், ஆண்கள் பிறன்மனை நாடமுடிகிறது என்ற என் வாதத்தை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பெண்கள் ஒருதாரமண ஒழுக்கத்தை, உண்மையில் கடைபிடித்தால், ஆண்களின் கூடா ஒழுக்கத்தை, உண்மையில் கடைபிடித்தால், ஆண்களின் கூடா ஒழுக்க உறவுக்கு பெண்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

ஆண்களின் ஒழுக்கமின்மை, இயல்பானதல்ல என்பதையும் அவர்கள் ஒப்பவில்லை. ‘அவன் ஆம்பளை’ என்ற பால்சார் விளக்கத்தையே, அவர்களால் ஆண்களின் நம்பிக்கைத் துரோகத்திற்கு அளிக்கமுடிந்தது, ஆண்களின் முறை தவறலும் பெண்களின் ஏமாளித்தனமும் பாலியல் காலனியாதிக்கத்தின் ஒரு அம்சம் என்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை. கியூபப் பெண், தன்னுடைய அனைத்து உணர்ச்சி முட்டைகளையும், ஒரே கூடையில் வைத்திருக்கிறாள். அவள், ஒரு பயிர் சார்ந்த உளவியல் பொருளாதாரமாய் இருக்கிறாள். ஆண்தடைகளால், குறிப்பாக அன்பையும், நெருக்கத்தையும் விலக்கி விடுவேன் போன்ற தடைகளால் தீவிரமாக மிரட்டப்படுகிறாள். அவள் வேறுவிதங்களில் உணர்வுபூர்வமான மனநிறைவை வளர்த்துக்கொள்ளலாம்.

வேறு மதிப்பீட்டு ஆதாரங்களை உருவாக்கி தன்னை காத்துக்கொள்ளலாம் என்ற ஆலோசனையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சகோதரித்துவத்திற்கு, மிகக் குறைந்த அழுத்தமே பெண்கள் கூட்டமைப்பால் கொடுக்கப்படுகிறது. தனித்து வாழும் பெண் என்பது குறித்து யாருமே பேசவில்லை. எப்படியிருந்தாலும், கியூபாவில் தனித்து வாழும் பெண் ஒரு அரிய பிராணிதான். புரட்சியின் சோஷலிச லட்சியங்களுக்கும், பெரும்பாலான கியூபர்கள் நவீன அரசின் அடிப்படையாகக் கருதும் முதலாளித்துவ இலக்கணமான தனிக்குடும்பத்துக்கும் தனிக் குடும்பத்தில், ஒரு குழந்தை வேறு வேறு பால் கொண்ட இரண்டு பெரியவர்களை எதிர்கொள்கிறது. அப்போது, ஒருவரை சார்ந்து வளரும் போக்கு தவிர்க்க முடியாதது.

தனிக்குடும்பத்தில் திரும்பச் செய்தல் என்பது, நுகர்வோர் சமூகத்தில், நுகர்ச்சியின் முதன்மை அலகான குடும்பத்தின் பங்குடன் தொடர்புடையது. நல்லதொரு வாழ்வுக்கு தேவையானது எனக் கருதப்படுகின்ற அனைத்து நுகர்பொருள் சாதனங்களையும், ஒவ்வொரு குடும்பமும் வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு மனிதனும் உச்சகட்டமாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. பாலுறவைப்போல, நுகர்விலும் தனிக்குடும்பம் பிரத்யேகமான உரிமையையும், சொந்தத்தையும் கோருகிறது. இதன் காரணமாக, தனிக்குடும்பம் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்காகவும் பணியாற்றும் உணர்வுபூர்வமான உறவுக்காரர்களுக்கு எதிராக இருக்கிறது.

ஒருதார மணத்திற்கெதிரான மார்க்ஸ், எங்கெல்ஸின் வாதங்களை மெத்தப்படித்த கியூபர்கள் கூட அறிந்திருப்பதாக தெரியவில்லை. திருமணத்தின் நிலையற்ற தன்மைக்காக வருத்தப்படும் அவர்கள், முதிர்ச்சி அடையும் வரை தனிப்பட்ட பாலியல் இனைவுகளை தாமதப்படுத்தும்படி இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். இதற்கு பதிலாக, இளம் வயதில் ஏற்படும் உறவு முறிவுகளை எதிர்கொள்ளவதற்கான தைரியத்தை வளர்த்துக்கொள்ளும்படி குறிப்பாக பெண்களிடம் ஆலோசனை கூறுவதில் இன்னும் கொஞ்சம் நேரம் செலவழிக்கலாம். இதன்மூலம் எதிர்காலத்தில் அவர்களது பலவீனம் குறையலாம்.

புரட்சியின் கதாநாயகிகளில் ஒருவரான ஹய்தே சாண்டாமரியா, தன்கணவர் தன்னைவிட இளமையான, தன்னைவிட கவர்ச்சியான ஒரு பெண்ணுடன் வெளிப்படையாக உறவாடத் தொடங்கியவுடன் தற்கொலை செய்துகொண்டார். லத்தின் அமெரிக்க நாடுகள் முழுவதும் மதிக்கப்படுகின்ற ‘காசா தலா அமெரிக்காஸ்’ (அமெதிக்காவிற்கான வீட்டு வசதி) என்ற அமைப்பை நிறுவியவர் என்றபோதிலும், தன்னுடைய தன் மதிப்பின் விழுந்த அடியை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், எதிர் பால் உறவுகளின் வெற்றியின் மீது பெண்களுக்கு இருக்கும் மனோவியல் ஈடுபாட்டை குறைப்பதற்கு எந்தவொரு முயற்சியியையும் கியூப பெண்ணியம் எடுக்கவில்லை.

பெண்களுக்குள்ளான தோழமை உணர்வை வளர்ப்பதிலோ, ஆண்கள் இல்லாமல் எப்படி வாழ்வது என்பதை தெரிந்து கொள்வதன் மூலமே ஆண்களுடன் சேர்ந்து வாழ முடியும் என்பதை சொல்லித் தருவதிலோ கியூபப் பெண்ணியல்வாதிகள் ஈடுபடவில்லை. வாழ்க்கைத் தரம் உயர, உயர, பெண்களின் வேலை உயருகிறது. அதே வேளையில் குடும்பத்தின் அளவு குறையக்குறைய, தங்கள் கணவருடனான பாலியல் உறவுன் மீதான சார்பு அதிகரிக்கிறது.

கியூபப்பெண்ணுக்கு கஷ்டமான நாட்கள் வர இருக்கின்றன. ஆனால், புரட்சியின் கருத்தியில் உயிர்போடும், உண்மையோடும் இருக்கும் வரையில், புதிய மன அழுத்தங்களை எதிர்கொள்ள வழி காணப்படும். இதற்கிடையில், பெண்கள் ஆணுக்கிணையான ஊதியத்துடன் தான் விரும்பும் எந்த வேலையையும் செய்யவும், விரும்பும் எந்த கல்வித் தகுதிக்காக படிக்கவும், ராணுவத்தில் தங்கள் ஆயுதங்களை தாங்களே தரித்து கர்னல் பதவி வரைக்கும் உயரவும், விருப்பம்போல உடையணியவும், விருப்பம்போல ஆணின் பாலியல் கவனிப்பை ஆமோதிக்கவும், அல்லது நிராகரிக்கவும், கருவை விரும்பினால் கலைப்பதற்கும் அல்லது வளர்ப்பதற்கும், தாங்கள் செல்லும் பாதையில் செல்ல உறுதுணை உண்டு என்று அறிந்து பயணிப்பதற்கும் உலகிலேயே உள்ள ஒரே நாடு கியூபாதான்.

‘கியூபாவில் பெண்களின் அதிகாரம் உண்மையில் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது, கட்சியின் மையக் குழுவில் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று சொல்வதில் இல்லை. மாறாக, கியூபாவிற்கு பெண்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை ஒரு எளிய எடுத்துக்காட்டு மூலம் காட்டலாம். பாலியல் செயல்பாடுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கருப்பைக்குழாய் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டறியும் சுரண்டல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பெண்கள் காப்பாற்றப்படுகின்றனர். சம வாய்ப்புகள் கமிஷன் இருக்கும் இங்கிலாந்திலோ, இந்த கருப்பாதை சுரண்டல் சோதனைகள் செய்யப்படுவதில்லை.

செல்கள் அபரிமித வளர்ச்சி அடைவது குறித்து சொல்லப்படாததால், இங்கிலாந்து பெண்கள் இறக்கின்றனர். தேவைப்படும் பெண்கள் அனைவரும் கருப்பாதை சுரண்டல் சோதனை செய்யுங்கள் வந்து நின்றால், பிரச்சினை இருப்பது தெரிந்து தொடர்ச்சியான மருத்துவத்திற்கு வந்து நின்றால் பிரிட்டிஷ் மருத்துவத் துறை தாக்குப்பிடிக்காது. ஆனால், குட்டி நாடு கியூபா சமாளிக்கிறது. மறு ஆய்வு கியூபப்பெண்கள் கூட்டமைப்பால், தெரு அளவில் செய்யப்பட, தேவையான தொழில்நுட்ப வசதிகள் அரசாங்கத்தால் அளிக்கப்படுகின்றன. முதலாளித்துவ சமூகங்களில் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுவதை போன்ற அதிகாரமல்ல இது. தங்கள் உயிர்காக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரத்தை பெண்கள் வேண்டுகிறார்கள்.

அதிகாரம் குறித்து உலகின் பெரும் பகுதிகளில் உலவும் மேலாதிக்க கற்பனைகள் போலல்லாத இது உண்மையான அதிகாரம் ஆகும். இதற்காக, கியூபப்பெண்கள் போராடியிருக்கிறார்கள். அதனை வரையறுத்திருக்கிறார்கள். தங்கள் சார்பாக அதை பயன்படுத்தியிருக்கிறார்கள். உலக அரங்கில், கியூபப்பெண்கள் உலக அரங்கத்தில், தங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வார்களா? களைத்துப்போன, குற்றமுள்ள இந்த உலகத்தை மறு உருவாக்கம் செய்வதில் பெண்களின் வலிமையையும், மென்மையையும் எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதை அவர்கள் வளர்ந்து வரும் நாடுகளுக்குச் சொல்லிக்கொடுப்பார்களா? இந்த கேள்விகளுக்கான பதில்களை பெற நாம் காத்திருக்கத்தான் வேண்டும். கியூபாவின் தலைவர்கள் எல்லா காலங்களிலும் புரிந்துகொண்டதைப்போல, ‘உயிர் பிழைத்திருத்தல்’ என்னும் மிகத்தீவிரமான பிரச்னையை உலகின் சரிபாதியாக உள்ள மக்களிடம் விட்டுவிட முடியாது. உலகில் உள்ள ஒவ்வொரு மாநகர, நகர, கிராம தெருக்களிலும் அந்தந்த தேசங்களைச் சார்ந்த பெண்கள் கூட்டமைப்புகள் ஒன்று திரண்டு நிற்பதை நாம் பார்க்கவேண்டும்.

"வேலை வாய்ப்புக்காக
கல்விக்காக
நமது விடுதலையை கட்டமைப்பதற்காக"

ஜெர்மேன் கிரையர்

1939ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த பெண்ணியவாதி கல்வியலாளர், விமர்சகர், மற்றும் செய்தியாளர். 1970ல் வெளிவந்த (The Female Eunuch) "பெண் அலி" என்ற நூல் மூலம் உலகப் புகழ் பெற்றார்.

இவரது பிற நூல்கள் தடை ஓட்டம் (The Obreacle Race) 1979
உடலுறவும், தலைவிதியும் - மனிதப்பொலிவின் அரசியல் 1984 (Sea and Descing The politics of Human Ferkilicy)
அப்பா, உங்களை எங்களுக்கு கொஞ்சமும் தெரியாது (1989) (Daddy, We Hardly Knew you)
மாற்றம் - பெண்கள், முதுமை அடைதல், மாதவிடாய் (1991) (The change Women, Aging and the Menopause)
முழு பெண் 1999 (The Whole Woman)
அழகிய பையன் 2003 (The Beautiful boy)

ஜெர்மேன் கிரையர் பற்றி குளோரியா ஸ்டைனம் சொன்னது: பெரும்பாலும் பெண்கள் மகிழ்ச்சியடையாத ஒன்றில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். அதனால், அது மதிப்பு வாய்ந்தது. அது, வெளியே வந்து, ஆண்களுடன் சண்டை போடுவது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com