Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2008

கருப்பு நிலாக்களின் கதை
எஸ்.காமராஜ்
.

வெங்கப் பெருசு சிரித்துக்கொண்டு தான் சேவு தின்று கொண்டிருந்தார். சோமு மாமன் கொஞ்சம் வெல்லக் கட்டியைக் கொடுத்தவுடன் இதுக்கு துட்டு உண்டா என்றார். இல்ல பெரியா என்றபடி சீதையக்காவுக்கு சீடக்கருவாடு நிறுத்துப் போட்டார்.

தூசு துப்பட்டயெல்லாம் சேத்து நிறுத்துப் போட்றயே கொஞ்சம் வெலயக் கொறைக்கக் கூடாதா என்று கேட்டபடி கருவாட்டோடு கிடந்த தூசிகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தாள். ஏந்தோட்டத்துல பருத்தி போட்டுருக்கேன், அதுல துட்டு மொளைக்கட்டு ஓசிக்கே இந்த ஊருக்கு கருவாடு நிறுத்துப்போட்றேன் என்று சொல்லிவிட்டு, என்ன சீட்டு வெளாட்டுல இன்னைக்கி ஜெயிச்சிட்டானா ஒம்புருசன், மத்தியானத்துலயே கொளம்புத் தண்ணி?

தாத்தா இருக்கு இல்ல நல்லாக் கேட்டுப்பிடுவேன் என்று சொன்னபடி சில்லறையைக் கொடுத்துவிட்டு கடையை விட்டு நகர்ந்து போனாள்.

என்ன வெடுக்கு வெடுக்குன்னு பேசுறா நத்தக்காட்டுக்காரி, ஏப்பா நெசமாவே நத்த திம்பாங்களாப்பா அந்த ஊர்க்கார பயக என்றார்.

பெரியா, சீனாக்காரங்க பாம்பு திங்காங்க. மேகாட்டுல ஈசலக்கூட திங்காங்க. நத்த தின்னா என்ன செத்தா போயிருவாங்க.

இவா இருக்காளே வந்து புதுசுல மாடு போடுற அன்னைக்கெல்லாம் கொலப்பட்டினி கெடப்பா வீட்டுல தண்ணிகூட குடிக்கமாட்டா, அவளுக்கு தனிக்கோப்பை டம்ளர் வச்சிட்டு ஒரு வாரத்துக்கு பாப்பாத்தி மாதிரி கொனட்டிக்கிட்டு அலைவா, இப்ப?

இப்பென்ன, எலும்பு, குண்டி, கொதக்கு, எல்லாத்தையு அள்ளிப் போட்டுக் குடுக்கலன்னா கறி போடுறவகள வஞ்சி வாட்டிப்புடுவா.

குரங்குடி தண்ணியு, வீமன் அடிக்கிற மாடும் வாக்கப்பட்டு வாரவகள வாய் பேச வச்சிருதில்ல. யேப்பா அதென்ன கண்ணகிப்பிள்ள வீட்டுக்கு அந்த மேட்டுப்பட்டிக்காரென் வாரானாமில்ல.

அதெயேங் கேக்க ஊர்ல மட்டு மரியாத இல்லாமப்போச்சு நாமெல்லா சேலயக் கட்டிப்புட்டு அலையனும்.

இப்படிப் பேசுவது இப்போதெல்லாம் ஊரின் முக்கியமான பேசுபொருளாகிவிட்டது. சீட்டு விளையாட்டு மடம், தண்ணிக்கிணறு, பீக்குளம், சோமண்ணன் கடை, இப்படி ஜனங்கள் கூடுகிற எல்லா இடத்திலும் கண்ணகியைப் பற்றியே பேச்சு நடந்தது.

செவத்தமணியும், கண்ணகியும் நல்லாத்தான் நெகமும் சதையுமாக இருந்தார்கள். மேட்டுப்பட்டிக்கு கெணறு வெட்டப்போனபோதுதான் செவத்தமணிக்கு வினை வந்து சேர்ந்தது. சரக்கு அடிக்கிறபோது கிடைத்த சிநேகிதனாக அறிமுகமானான் காவக்கார பால்சாமி. அந்தப் பழக்கத்தில் மணி வீட்டுக்குள் நுழைந்த பால்சாமி பேரில் ஏழு கொலை வழக்கு சாத்தூர் காவல் நிலுவையில் இருந்தது. சுத்துப்பட்டியில் பேர்போன சண்டியர் பால்சாமி.

தாயில்பட்டியில் நடந்த ஒரு கொலைக்கான காரணம் மிக மிக அற்பமானது. மிதமிஞ்சிய போதையில் பால்சாமி கரிசல்குளத்துக்கு நடந்து போய்க்கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு முன்னால் போன ஒரு வாலிபனைப் பார்த்து ஏலே ஏ மாப்ளே ஏலே ஏ மாப்ளே... என்று கூப்பிட்டுக்கொண்டே தொடர்ந்தான். போனவன் சண்டியர் என்கிற பயத்தில் பதிலேதும் சொல்லாமல் நடந்து போனான். ஆத்திரத்தோடு அவனை விரட்டிப் பிடித்து முகத்தைப் பார்த்து எந்த ஊர்க்காரன் என்று தெரிந்து கொண்ட பால்ச்சாமிக்கு ஆத்திரம் கூடிப்போனது.

ஒரு கீழ்ச்சாதிக்காரனையா நான் மாப்பிள்ளை என்று சொன்னேன் என்னும் ஆத்திரம். ஏண்டா நா மாப்ள மாப்ளன்னு கூப்டா நீ பாட்டுக்க செனாச்சிக்கிட்டுப் போற, இல்ல சாமினு சொல்ல வேண்டியதுதானே. நீயெல்லாம் எனக்கு மாப்ளயாடா என்று சொல்லி இடுப்பில் வைத்திருந்த வங்கியால் அந்த பாதசாரியைக் குத்திக் கொன்றே விட்டான். அந்த வட்டாரத்தில் மேல்கீழ் பிரச்சினை கிளம்புகிற ஊரில் பணக்காரச் சாதிக்காரர்களுக்கு பால்சாமிதான் ஆயுதம். பெயிலெடுக்கவும் வழக்கு நடத்தவும் ஊர்ப்பணம் செலவாகும். ஒரு ஊரில் கொலை செய்துவிட்டு இன்னொரு ஊரில் குடியேறிவிடும் பால்சாமிக்கு அங்கங்கு பெண்டாள ஒத்தவீடு, பத்துவீடு என்று பூஞ்சைக் குடியிருப்புகள் கிடைத்துவிடும். எதிர்த்தவர்களின் ரோசத்தை அறுக்க அவனிடம் திருப்பாச்சேத்தியில் வாங்கிய அரிவாளும் சூரிக்கத்தியும் உடனிருந்தது. அவனால் கணவனை இழந்தக் குடும்பங்களுக்கு வறுமையோடு அநாதரவும் சேர்ந்துகொள்ளும்.

பால்சாமி வாங்கிக்கொடுத்த சாராயத்தில் கண்ணகியின் பேரில் வைத்திருந்த குரூர போதை மறைந்திருந்தது. குமரிக் கோலம் குடியிருக்கிற கண்ணகி காட்டுவேலை செய்து முறுக்கேறிப் போனவள். பால்சாமியை எதிர்க்கிற வல்லமை அவளுக்கிருந்த போதும்கூட, பின்விளைவுகளுக்குப் பயந்து அடங்கிப் போனாள். அரசல்புரசலாக நடந்த தொடுப்பு செவத்தமணிக்குத் தெரிந்து ஒருநாள் தனியாக வந்த பால்சாமியை கட்டக்கம்பெடுத்து அடித்த சேதி பால்சாமியின் ஊருக்குத் தெரிந்து ஜாதிச்சண்டையாக உருவெடுத்தது. இரண்டு பக்கமும் பரஸ்பரம் அடிதடிகள் நடந்தது. அதன் பிறகு நெடுநாள் அந்தபக்கம் பால்சாமியின் தலை தட்டுப்படவில்லை. இப்போது கொஞ்சநாளாகவே இரவில் அவன் ஊருக்குள் வந்துபோவதாக முணுமுணுப்புகள் வெளிவரத் தொடங்கியது.

காட்டுக்கு விறகொடிக்கப் போன கண்ணகியைத் துரத்தியதும், இஷ்டமில்லாத கண்ணகி தப்பித்துக் கொண்டதும் அவளது சம்மதத்தோடு நடந்ததாகப் பேசப்பட்டது. கண்ணகியிருக்கிற பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் செவத்தமணி தன் பிள்ளைகளைக் கூப்பிட்டுக்கொண்டு கண்காணாத தேசம் ஓடிவிட்டான்.

கொஞ்சநாள் ஊரைவிட்டு எங்கும் போகாமல் இருந்த கண்ணகி ஒருநேரம் கூடக்குடித்தும் குடியாமலும் வதங்கிப் போனாள். உள்ளூரில் பெரும்பாலும் வேலை குறைந்தே கிடைத்ததால் சாத்தூருக்கு சித்தாள் வேலைக்கு நல்ல கிராக்கியாக இருந்தது. கூலியும் பத்துரூபாய் கூடுதலாகக் கிடைத்தது. வேலை நடக்கிற இடங்களைத் தெரிந்து கொண்டு பால்சாமி அங்கும் வந்து தொந்தரவு செய்தான்.

“ஏத்தா ஊர் நாட்டுல ஆம்பிளயே இல்லையா, அந்தக் கொலக்காரங்கிட்ட என்னத்த பாத்து மசங்கிப்போன, இத்தனைக்கும் அவனுக்குப் பேர் சொல்ல வித்து கிடையாது”, எனச் சொன்ன கொத்தனார்த் தேவர், இனியும் அவன் இங்கு வந்தால் நீ வேலைக்கு வரவேண்டாமென்று சொல்லிவிட்டார். இரவுகளில் வீட்டுக்கடவில் ஆள் நடமாடும் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தபோதும் சிமிண்ட் சுண்ணாம்பு படிந்த உடம்பின் காந்தலும், அலுப்புமாக விடிந்த பின்னால் தான் முழிப்புத் தட்டும். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை தங்கிளியான் வந்து அவளுக்கு எதிர்க்க உக்காந்துக்கிட்டான்.

“ஏம்மா, நாம நம்ம ஒழப்பத்தா விக்கனும் ஒடம்பயில்ல, ஊருக்கு ஒன்னால தலகுனிவு. ஏம்பிள்ளையா நெனச்சி சொல்றேன், எவனாவது நல்ல பெயலாப் பாத்து நம்ம பெயலுகள்ள ஒருத்தங் கூடச் சேந்துக்க, இல்லாட்டி ஒதுக்கி வச்சிப்பிடுவோம்”

எப்பிடியெல்லாம் மணியும் அவளும் சேர்ந்து அலைந்தார்கள் இந்த ஊரில். கவுந்த தலையைத் தூக்காமல் எதிரே உக்காந்திருந்தவளுக்கு புருசனின் வாசம் அடித்தது. நினைத்த நேரமெல்லாம் சாத்தூருக்கு கூட்டிப்போவான். தேவி ஓட்டலில் ஆட்டுக்கறி வறுவலும் புரோட்டாவும் வாங்கித் தருவான். ரஜினி படத்துக்கு டிக்கெட் எடுத்து ஆம்பிளையாள் பக்கம் போய் உட்கார்ந்து கொள்வான். எடவேளையப்பம் தனலச்சுமி தேட்டர் இனிப்பு பன்னும், டீயும் வாங்கிக்கொண்டு பொம்பளயாள் பக்கம் வருவான். முதலாட்டம் முடிந்த பிறகு சைக்கிளில் போவார்கள். முக்கு ரோடு திரும்பியதும் வாகன வெளிச்சம் மொத்தமாக இல்லாமல் போகும். தூரத்தில் மேட்டுப்பட்டி தெரு விளக்குகள் மட்டும் மின்னொட்டாம் பூச்சியாகத் தெரியும்.

கதை பேசிக்கொண்டே வருவான். ஒத்தக்கையை விட்டுப் பிட்டு பின்னால் கைவைத்து மாரைக் கிள்ளி வைப்பான். மேட்டுப்பட்டி தாண்டியதும் தாம்போதில் ஒன்னுக்கு வருவதாக பாவனை செய்துகொண்டு இறங்கி சைக்கிளை நிறுத்திவிட்டு நாத்துக்கட்டைத் தூக்குவதுபோலத் தூக்கி வைத்துக்கொண்டு கன்னத்தையும் மூக்கையும் கடித்து வைப்பான். பேறுகாலத்துக்கு எலவந்தூர் போயிருந்த போது, வாரத்துக்கு ரெண்டுதரம் வந்துவிடுவான். வெக்கமில்லாமல் பச்சப்பிள்ளையைப் பட்டினிபோட வைத்து விடும் பாவி அவன். ரெண்டாவது பிள்ளைக்கு “நீ ஙொம்ம ஊருக்குப்போயி நொட்டுனது போதும் இங்கயெ பெத்துக்கோ” என்று சொல்லிவிட்டான்.

மூனாவது பெத்துக்க போனபோது தான் சாராயம் குடிக்கிறது ஓவராகிப் போனது. அதுவரைக்கும் சாராயம் எப்போதாவதுதான் கொஞ்சமாக் குடிப்பான். அன்னெக்கெல்லாம் கட்டாயம் ஈரல் வதக்கி வைக்கவேண்டும். அல்லது கொடலும் ரெத்தமும் போட்டு நல்லா மொளகாயும் வெங்காயமும் போட்டு வதக்கிக் கொடுக்கனும். குடித்துவிட்டு “மீன் கொடித்தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்” என்று பாடுவான். தன் உயிரையே உதட்டில் சேத்துவைத்து கடிக்காமல் முத்தம் குடுப்பான். ஆனால் சாராயமே கதியெனக் கிடக்கமாட்டான். சிலநேரம் அவளேகூட இந்தவாரம் சாராயங் குடிக்கலயா என்று கேட்பாள்.

நினைவுகள் போதையோடு நகர்ந்து கொண்டிருந்தது குனிந்த கண்களில் வழியே வழிந்த கண்ணீர் மடியில் ஈரமாகியிருந்தது. தொப்பென்ற சத்தங் கேட்டு தலை நிமிர்ந்தபோது, எதிர்த்த வீட்டில் முத்தம் தொளிக்க வெள்ளச்சிக் கிழவி சாணியெடுத்து வந்து போட்டாள். சாணியின் நாத்தத்தோடு பால்சாமி நினைவுகள் வந்து போனது. அப்பச்சிக்கு கறி வதக்கிக்கொண்டு போறேன் என்று சொல்லும் போதெல்லாம் அவுகள்ளாம் நம்ம கறித் திம்பாங்களா என்று வெள்ளந்தியாகக் கேட்பாள்.

நாளாக ஆக வீட்டுக்கே வந்து களி கிண்டி மாட்டுக்கறி கொளம்பு வைத்துக் கொடுக்கச் சொல்லி உரிமையோடு கேட்பான். சங்கரநத்தம் தேவர் மணியை அடித்ததற்கு கத்தியெடுத்துக் குத்தப்போய்விட்டான். பழகிப்போனால் பாம்பைக்கூட வீட்டில் வைத்துக்கொள்ளலாம். பால்சாமி இப்போது செவத்தமணியின் சிநேகிதனாகிப் போனான். அவனுங்கூட, ‘ஏத்தா நீ நம்ம பொறப்பு கெணக்கா’ என்று சொல்லுவான். அப்போதெல்லாம் அண்ணந்தம்பியில்லாத கண்ணகி உருகிப்போவாள். மூனாவது பெய சின்னக் கருப்பசாமிக்கு காச்ச வந்து வலிப்பு கெணக்கா வந்திருச்சி, அன்னைக்கித் தான் அவங்கப்பன் ஆவியூர் பக்கம் கெணறு தோண்டும் வேலைக்குப் போயிருந்தான். வர இன்னும் பத்துநாளாகும்.

ராத்திரி கடைசிவண்டிக்குத் திரும்பிவிடலாம் என்கிற நெனப்பில் ஏழரைமணி வண்டியேறி ஞானதுரை டாக்டரிடம் காட்டப் போனாள். அவரில்லை. கொண்டல்சாமி டாக்டரிடம் போய் ஊசி போட்டுவிட்டு ஒருமணிநேரம் காத்துர்ந்துட்டு காச்சக் கொறஞ்சதும் சொல்லிட்டுப்போம்மா என்றார். காச்சக் கொறஞ்சதும் சொல்லிட்டு ஓட்டமும் நடையுமா தெக்கடைசிக்கு வந்தபோது கடைசி பஸ் போயிருந்தது. வேன் சைக்கிள் மாட்டு வண்டி ஏதாச்சும் வந்தாக்கூட போயிரலாம் என்று தெக்கடைசியில் காத்திருந்தாள். ரெண்டு பிள்ளைகளும் என்ன செய்யுமோ என்கிற கலக்கம் ஒவ்வொரு நொடியையும் ரணமாக்கியது. ஆள்நடமாட்டமும் குறைந்துகொண்டு வந்தது.

அவளுக்கு திக்குத்திக்குன்னு இருந்திச்சி. உப்பத்தூர் வண்டிக்கு காத்திருந்த ரெண்டு பொம்பளைகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது இருந்த கொஞ்சநஞ்ச தெம்பும் தைரியமும் அவர்கள் பஸ் ஏறிப் போனதும் போய்விட்டது. மனசுக்குள் பிள்ளைகள் என்ன செய்வார்களோ என்னும் பதைபதைப்பும், எட்டு கிலோமீட்டர் எப்படிப் போவது என்ற பயமும் அங்குமிங்கும் அலைந்தது. கொண்டல்சாமி ஆஸ்பத்திரியில் போய் படுத்துவிட்டு காலையில் மொத பஸ்சப் பிடித்து ஓடி விடலாம் என்று திரும்பி நடந்தாள். அப்போது பின்னாலிருந்து, “ஏத்தா மணி பொண்டாட்டி என்ன இந்தநேரம் ஒத்தியில டவுனுக்குள்ள திரியிற” என்று சாராய வாடையோடு நெருக்கமா நின்றிருந்த பால்சாமி கடவுளாகத் தெரிந்தான்.

ஆபத்துக்குப் பாவமில்ல வா ஒன்னக்கொண்டுபோயி ஊரெல்லைல எறக்கிவிட்றேன் என்று சொன்னவனின் சைக்கிள் பின்னால் கூச்சத்தோடு ஏறி உட்கார்ந்தாள். செயின் கழண்டிருச்சி என்று சைக்கிளைவிட்டு இறங்கும் போதெல்லாம் சீக்கிரம் சைக்கிள் போகாதா என்று தவித்தாள். சரியாக தாம்போது வந்தபோது சைக்கிளை விட்டு இறங்கச் சொல்லி கூச்சமில்லாமல் ஒன்னுக்கடித்தான். இங்க வந்து ஓம்புருசனோட எறங்குவியாமில்ல என்று கேட்டபோது தான் மனசு திக்கென்றது. மிருகங்களை விடவும் வெளிப்படையாக கட்டளையிட்டான். அவளை யோசிக்கவிடாமல், சூரிக்கத்தியை எடுத்துவைத்தான், எனக்கு ஜெயிலொன்றும் புதிதில்லை என்றபோது வேறுவழியில்லாமல் கட்டையாகக் கிடந்தாள். மண்தரையில் துண்டு விரித்துக் கிடத்திய குழந்தை அழுதுகொண்டு நெருங்கி வந்தபோது நொட்டங்கையால் தூக்கி வைத்தான். அதன் பிறகு இணங்கியும் இணங்காமலும் நடந்ததை சிமிண்டுக் கலவை சுமக்கிற சுமையாகவே சுமந்தாள்.

ஊருக்குத் தெரிந்து, மணிக்குத் தெரிந்து, மணியோடு பிள்ளைகளும் பிரிந்து போனபோது அவளது பிடிப்பெல்லாம் ஊரைவிட்டுப் போனது. கொஞ்சநாள் கழித்து தூத்துக்குடியில் உப்பளத்தில் இருக்கிற மணியைத் தேடிப் போயிருந்தபோது மணி வீட்டில் இல்லை. மூத்தவன் அப்பனோடு உப்பள்ளுகிற வேலைக்குப் போயிருந்தான். இளசுகள் ரெண்டும் அவளைப் பார்த்து தயங்கிப் பின் ஓடிவந்து காலைக்கட்டிக் கொண்டது. நாலாவது பயலுக்கு இப்போது ரெண்டு வயதாகியிருந்தது. அவன் தயங்கித் தயங்கி அவளது மாரைத் தொட்டான். உடைந்து “குத்து வெளக்காயிருந்து இன்னைக்கு பீக்கெடங்காயிட்டேனே” என்று அழுது கொண்டிருந்தபோது மணி வீட்டுக்கு வந்து கொதவளையை நெறித்து கண்முழிப் பிதுங்க வைத்தான். மூத்தவன் வந்து செத்துருவா விட்டுருய்யா என்று சொன்னபோது தெய்வமே என்ன எடுத்துக்கோ என்று கதறினாள்.

இப்போது செவத்தமணி வாங்கிக் கொடுத்த அந்த சில்வர் அண்டா மேலே நின்றிருந்தாள், உருவாஞ்சுருக்கு எடுத்து கழுத்துக்குள் திணித்தபோது மணியை நெனச்சிக்கிட்டு ஓவென அழுதாள். சத்தங்கேட்ட வெள்ளச்சிக்கெழவி ஓடி வந்து “ஏ பாதகத்தி ஒனக்கென்ன கிறுக்கா பிடிச்சிரிச்சி நீயென்ன கொலக்குத்தமா செஞ்ச, தூக்குல தொங்கறதுக்கு” என்று சொல்லி வச்சிருந்த பனை வெளக்கமாறால் அடித்துக் கீழே இறக்கிவிட்டாள்.

அதன் பிறகு விடிந்ததும் கதவைப் பூட்டிவிட்டு சாத்தூருக்குப் போனாள். சாயங்காலம் வரை காத்திருந்து பால்சாமியைக் கண்டுபிடித்தாள். இனி பகலில்கூட வரலாம் என்று கட்டளையிட்டாள். அப்படி ஒரு பகலில் ஊருக்குள் வந்தவனிடம் ஊர்த்தலைவர் “சாமி இது ஊரு, பொம்பளப் புள்ளக இருக்கிற எடம். இப்பிடி நீங்க வந்தா நல்லாருக்காது” என்று சொன்னபோது “யாரு, யாருட்ட வந்து எதுத்து பேசுறது” என்று முதுகில் செருகியிருந்த அருவாளை உருவினான். எளவட்டங்கள் சேர்ந்து பிடித்து வைத்து அடித்து விரட்டிவிட்டார்கள்.

அன்று இரவு இரண்டு டிராக்டரில் அடியாட்கள் வந்தார்கள். கலகம் நடந்துவிட வாய்ப்பிருக்கிற நேரத்தில் போலீஸ் வேன் வந்து சேதம் தவிர்க்கப்பட்டது. அன்று இரவே ஊர்த் தலைவர் கண்ணகியை அடித்து ஊரைவிட்டு விரட்டினார். பின்னாட்களில் ஊர் வழியே போகிற கண்ணகியின் ஊர்க்காரர்களைக் சைக்கிள் செயினால் அடித்து அனுப்பினான் பால்சாமி. பிரச்சினையை சுமூகமாக்க இரண்டு ஊர்ப்பெரியவர்களும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆயிரந்தான் தப்பு செஞ்சாலும் கைநீட்டுனது ஒங்க தப்பு அதுக்கு பைசல் பண்ணிட்டுத்தான் போகனும் என்று மடக்கினார்கள். நிலைமையை உணர்ந்த ஊர்த்தலைவர் பால்சாமியிடம் மன்னிப்புக் கேட்டார். அப்போது பால்சாமிக்கருகில் இருந்த கண்ணகியைப் பார்த்தார். கண்ணகியின் கண்கள் ஏதோ போலிருந்தன. இறுகிக்கிடந்த முகத்தில் எந்த பாவமும் இல்லை. கண்ணகிக்கு தாலியெடுத்துக் கொடுத்தது அந்த ஊர்த் தலைவர்தான்.

மூன்று வருடங்கள் ஓடிப்போனது. முதலில் நடராஜாத் தேட்டரில் ஜோடியாகப் பார்த்ததாகவும், உடுப்பி ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும் அவ்வப்போது அவளைப்பற்றி ஊரில் சேதிகள் பரவும். கடைசியாக ஆத்துப்பாலத்துக்கு தெக்கே அமீர்பாளையத்தில் அவளைப் பார்த்தாகச் சொன்னார்கள். இப்போது அதுவுங்கூடச் சுருங்கிப்போனது. சாத்தூரின் பழய பாலத்தைத் தாண்டிய தாழ்வானப் பகுதியில் அமீர்பாளையம் இருக்கிறது. அங்குதான் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்து கண்ணகியை வைத்திருந்தான்.

வாரத்தில் ஒன்றிரண்டுநாள் வந்துபோகும் அவனுக்குக் குடிக்க ஒரு பாட்டில் சாராயம் வாங்கி எப்போதுமே தயாராக வைத்திருந்தாள். முங்கக் குடித்துவிட்டு வாந்தியெடுத்துவிட்டு மல்லாக்கக் கிடந்து தூங்கிப் போவான். காலையில் எழுந்ததும் அவனது செலவுக்கு ஐம்பதோ, நூறோ வைத்திருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் தலைமுடியைப் பிடித்து சாத்தி விட்டு போய்விடுவான். அக்கம்பக்கத்துக்காரர்கள் இவ்வளோ இம்சையைத் தாங்கிக்கிட்டு ஏந்தாயி மல்லாட்ற என்று கேட்கும்போது விரக்தியாகச் சிரிப்பாள்.

புருசன்னா அடிக்கத்தா செய்வான். இதெல்லா பெரிய அடியா என்று பதில் சொல்லுவாள். புதிதாக ஒரு களவு கேசில் தேடப்பட்டபோது ஒரு ரெண்டு மாசம் வீட்டுக்கு வரவில்லை. அப்போது கண்ணகியைப் போலிஸில் கூப்பிட்டுக் கொண்டு போய் ரெண்டுநாள் வைத்திருந்து விட்டு திருப்பி அனுப்பினார்கள். அன்றும்கூட ஒரு ராத்திரி முழுக்க தூங்கவில்லை. அந்த நேரத்தில் மதுரைப்பக்கம் விளாங்குடியில் இருப்பதாகவும் அங்கு ஒரு பொம்பிளையோடு தொடுப்பு வைத்திருப்பதாகவும் பால்சாமியின் கூட்டாளி வந்து சிரித்துக்கொண்டே சொன்னான்.

‘அதுக்கென்ன’ ரொம்ப இளக்காரமாகக் கேட்டாள். ‘காட்டத் தருசாப் போடக்கூடாதுத்தா’. ‘இப்ப ஓவ்வீட்டுல தருசாக் கெடக்குமா? தண்ணி பாயுமா?’ என்று கேட்டதும், ‘ஏ.. சிறுக்கி’ என்று சாதியச் சொல்லி திட்டினான். ‘இங்க பாரு, அந்த மனுசந் திரும்ப வந்தா என்ன கெதியாகுந் தெரியுமா?’. அப்போது கொஞ்சம் கலங்கிப்போய் “நல்ல ராங்கி பிடிச்சவா. அப்பிடியில்லன்னா கெட்டுனவன உட்டுட்டு இப்டி ஓடியாந்துருப்பாளா” என்று சொல்லிக் கொண்டே கடந்து போனான்.

அவளின் பொழுதுகள் சாந்துச் சட்டியோடும் கேலிப்பேச்சுகளோடும் கடந்துபோய்க் கொண்டிருந்தது. பால்சாமி திரும்பி வந்த ஒரு இரவில் அவனோடு இன்னொருவனும் வந்திருந்தான். இருந்த சாராயத்தை இருவரும் பங்கு போட்டுக் குடித்து சிறிதுநேரத்தில் குடிசைக்குள்ளிருந்த அந்த ஆள் வெளியே உட்கார்ந்திருந்த கண்ணகியை கூப்பிட்டான். “ஏத்தா ஏ மணி பொண்டாட்டி உள்ள வா”. நிலைமையை உணர்ந்த அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள். பத்துதரம் கூப்பிட்டுவிட்டு வெளியே வெறியோடு வந்தான். “என்ன நீ பெரிய்ய பத்தினிக்...யோ, வாடி வா உள்ள” என்று சொல்லி கையைப் பிடித்து தரதரவென்று இழுத்தான். கீழே தள்ளிவிட்டு வேட்டியை அவுத்தான்.

இடுப்பிலிருந்த சூரிக்கத்தியைக் காட்டியபடி “வகுந்துருவேன், பட்றி... நாயே” என்றான். அசைவற்றுக் கிடந்தவளின் மேலே விழ இருந்தவனின் தொடைகளுக்கு நடுவே பலங்கொண்ட மட்டும் வேகத்தோடு காலால் ஒரு உதை விட்டாள். “யப்போ” என்று கத்தியபடி கீழே விழுந்தவனின் சூரிக்கத்தி அவள் கையில் இருந்தது.

“எல்லாம் பாத்தாச்சு அறுத்துருவன் ஓடிரு” என்று கத்தினாள். நொண்டி நொண்டி அந்த இடத்தைக் கடந்துபோன பின்பு ரெண்டுநாள் பால்சாமி கூட வரவில்லை. ரெண்டு நாள் கழித்து வந்தவன் வீட்டுக்குள் நுழைந்ததுமே சப்பென்று கன்னத்தில் அடித்தான். “நாங்ககூட நாய்க்கரையாங்கிற வார்த்தைக்கு மறுவார்த்த பேசமாட்டோம், பொட்டச்சி அதும் கெட்டசாதிப் பொட்டச்சி, கால்ட மிதிச்சிருக்க” மீண்டும் அடித்தான். “இங்க பாருங்க, நா ஒங்கள நம்பித்தா வந்துருக்க ஊருக்கு முந்தான விரிக்க இல்ல”

“ஆ ஆ ஆ... மா, பெரிய்ய பத்தினி, இங்கரு சொல்றதக் கேட்டுட்டு இரு. இல்ல காணாப் பொணமாக்கிருவ”. இப்போது பயந்து போனாள். நீண்டநேரம் அமைதியாகக் கழிந்தது. “சரி எடு அந்தப் பாட்டல” என்றான். அன்றைக்கு ரொம்பவும் பணிவாகவும் குழைவாகவும் நடந்து கொண்டாள். காலையில் கையிலிருந்த ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு, சேலயெடுத்துக்கோ என்று சொல்லிவிட்டு போகும்போது கட்டிப் பிடித்துவிட்டுப் போனான். ரெண்டேநாளில் திரும்ப வந்து சினிமாவுக்குக் கூட்டிக் கொண்டு போனான். “எனக்கு ரொம்பநாளா நேத்திக்கடன் ஒன்னு பாக்கியிருக்கு திருச்செந்தூர் போறேன்” இரவில் படுத்திருக்கும்போது சொன்னான்.

“ஏண்டெ ஏஞ் சொல்றீக?”.

“திர்ச்செந்தூர் பாக்கல்லல்ல நீ, வாராயா?”

“நானா நெசமா”

ஆச்சரியம் காட்டினாள். மறுநாள் விடிந்ததும் மஞ்சள் பூசிக் குளித்தாள் புதுச்சேலையைக் கட்டச் சொன்னான். கோவில்பட்டியில் இறங்கி ஆர்த்தி ஓட்டலில் பிரியாணி வாங்கிக் கொடுத்தான். தூத்துக்குடியில் இறங்கி பேருந்து நிறுத்தத்தில் நிற்க வைத்துவிட்டுப் போனவன் அரைமணி நேரம் கடந்துதான் வந்தான். திருச்செந்தூர் பஸ்ஸில் உட்கார்ந்த பிறகுங்கூட ஒருமுறை இறங்கினான். ஆத்தூர் கடந்து போகும்போது இவள் தூங்கிவிட்டாள் என்று நினைத்து பின்னாலே உட்கார்ந்திருந்தவனிடம் ஏதோ சைகை செய்தான். கோவில் போனதும் கடலைப் பார்த்தபடி ஒரு அறையெடுத்துக் கொண்டார்கள். கடைத்தெருவுக்குப் போய் சருவம், பீங்கான் தட்டு, சோப்புடப்பா, காய் நறுக்க கத்தி, கறியறுக்க அருவாமனை என்று கண்டமானிக்கு சாமான்களை வாங்கினார்கள்.

அறைக்கு வந்தபின் உள்டவுசரிலிருந்து பிராந்தி பாட்டிலை எடுத்தான். அவளுக்கும் ஊற்றினான். அவளும் மறுக்காமல் குடித்தாள். சாப்பிட்டுவிட்டு தூங்கப் போனார்கள். ரெண்டு கத்திரிச் சீரெட்டு வாங்கியாரென் என்று சொல்லிவிட்டுப் போனான். வரும்போது ரெண்டுபேர் வந்தார்கள். பிருஷ்டத்தில் ஒரு எத்து எத்தியபடி அன்னிக்கு ஓடிப்போன ஆள் நின்று கொண்டிருந்தான். இப்பிடித்தான் அன்னிக்கும் மணியும் அவளும் படுத்திருந்தபோது, வந்து மணியை ஒரு எத்து எத்திவிட்டான் பால்சாமி. ஆங்காரத்தோடு எந்திரிச்ச மணியின் கழுத்தைச் சுத்தி அருவாளை வைத்திருந்தான். மடேரென்று புருசனைத் தள்ளிவிட்டு பால்சாமியின் காலில் விழுந்தாள். அன்று மம்மலில் ஊருக்குத் தெரியாமலும் கண்ணகியிடம் சொல்லாமலும் பிள்ளைகளோடு ஊரைக் காலி பண்ணிக்கொண்டு போனான். அந்த சங்கதி யாருக்கும் தெரியாது.

அதேபோல இதோ இன்னொருவன். உடம்பு சிலிர்த்தது. அடக்கிக் கொண்டு “சாமி வாங்க அன்னைக்கி நீங்க யாருன்னு தெரியாம அப்டி நடந்துக்கிட்டெ அப்பிச்சி சொன்னாப்புறந்தா இந்த முண்டக்கி தட்டுப்பட்டுச்சி, மனசுல வச்சுக்காதீக, வெவரமில்லாம நடந்துகிட்டேன்”. என்று சொல்லி தானாகவே சேலையை உருவிப்போட்டாள். வந்தவர்கள் திரும்பி வெளியே போய் ஏதேதோ குசுகுசுத்துவிட்டு மீண்டும் வந்தார்கள்.

சரி வா அங்கிட்டு கடக்கரைக்கு போவோம் என்றார்கள். கக்கூசுக்குள் போய்விட்டு திரும்ப வந்து சாமான்கள் வாங்கி வைத்திருந்த சாக்குப்பையை எடுத்துக்கொண்டு, சரி போகலாமென்றவள், பையிலிருந்த மூனுபாட்டில் பிராந்தியை எடுத்துக் காண்பித்தாள். ஆளில்லாத கடற்கரைப் பக்கத்தில் காற்று ஈரத்தோடு முகத்திலடித்தது. அலையின் சத்தம் சளார்சளாரென்று இரைச்சலோடு கேட்டுக் கொண்டிருந்தது. ஆளரவம் இல்லாத இடம்தேடி ரொம்ப தூரம் நடந்து போனார்கள். இரவு முழுவதும் கடலிரைச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது.

ரெண்டுநாள் கழித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரெண்டு ஆண் பிணங்கள் கிடந்தது. போலீஸ் நாய் ரயில்வே நிலையம்வரை வந்து திரும்பிவிட்டது. தீர்த்தக்கரையினருகே ஒரு அருவாமனை கிடந்தது. மதுவோடு விஷம் கலந்திருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இருவருக்கும் பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட குறிப்புகள் மட்டும் அதில் இல்லை. அந்தச் சேதி பேப்பரில் வராமல் மறைப்பதற்கு ரெண்டு குடும்பமும் ஒரு பெருந்தொகை செலவு செய்தது. ஒருமாசம் இதே பேச்சாக இருந்தது. கண்ணகியின் சொந்தங்கள் இருந்த எல்லா இடங்களையும் போலீஸ் அலசி அலசித் தேடியது. ரயிலிலே எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியில் ஒரிஸ்ஸாவின் கொனார்க் கோவிலுக்கு அருகில் ஒரு இளநீர்க்கடையில், சாந்தி என்கிற பெயரில் இளநீர் சீவிக் கொடுத்துக் கொண்டிருக்கும் அவள் ஒவ்வொரு முழு நிலாவன்றும் ஓங்கிச் சிரிக்கிறாள் ஆனால் அவளுக்கு மனப்பிறழ்வு இல்லவே இல்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com