Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2007
சூலப்பிடாரி

கால பைரவன்

திருக்கச்சூரிலிÕந்து சாமி சிலையை ஊருக்குள் கொண்டு வரும்போது நன்கு இருட்டிவிட்டிருந் தது. சாமி சிலைக்குப் பின் இளைஞர்களும் முதியவர்களும் திரண்டிருந்தனர். தெரு வோரங்களில் பெண்களின் கூட்டம் அலைமோதியது. கையில் வேப்பிலையுடன் சிலைக்கு முன் ஆறுமுகம் சாமி வந்து ஆடிக் கொண்டிருந்தார். பம்பையும் உடுக்கையும் அதிர்ந்தபோது இவர் ஆட்டத்திலும் வேகம் கூடியது. சுற்றி நின்றிருந்தவர்களெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொண்டனர். எங்Ìம் சாராயத்தின் நெடி பரவியிருந்தது. பெரும்பாலான வர்களின் விழிகள் குடித்துக் குடித்து சிவந்திருந்தன. போதையில் அவர்கள் பம்பை உடுக்கை வாசிப்பவர்களை வேகமாக வாசிக்கும்படி நச்சரித்தனர்.

பம்பை அதிர்ந்தது. சூழலை ஒரு இறுக்கம் கவ்விக் கொண்டது. கூட்டம் பெருங்குரலெடுத்து "தாயே மகமாயி" என்று தொடர்ச்சியாக கூவிக்கொண்டிருந்தது. தெரு சிறியதாக இருந்ததால் கூட்டத்தை தாண்டி சிலையை கொண்டு செல்ல அதிகநேரம் பிடித்தது. சிலையை தொடர்ந்து வந்தவர்கள் மிகவும் அயர்வோடு காணப்பட்டனர். தொடர்ச்சியான நடை அவர்களுக்குள் சோர்வை உண்டு பண்ணியது. நேரம் ஆக ஆக கோயிலை நோக்கிச் செல்ல அனைவரும் வேகம் காட்டினர். ஒரு கட்டத்தில் வேகமாக ஆடிக்கொண்டே, வேப்பிலையை வாயில் போட்டு நறநறவென மென்றபடி கோயில் நோக்கி ஓட ஆரம்பித்தார்.

கூட்டம் விழுந்தடித்து ஓடியது. ஈடு கொடுக்க முடியாத சிலர் பின்தங்கினர். அவர்களின் விழிகள் மதுவினால் நிரம்பியிருந்ததை உணரமுடிந்தது. கோயிலை நெருங்க நெருங்க இவரின் ஆட்டத்தில் மீண்டும் வேகம் கூடி யது. பம்பையும் உடுக்கையும் அதிர்ந்தன. மீண்டும் சூழல் இறுக்கமானது. கூட்டம் ஒருவித சிலிர்ப்போடு கட்டுண்டிருந்தது. உடுக்கை ஒலி உச்சத்தை அடையும்போதெல்லாம் கூட்டம் கன்னத்தில் போட்டுக் கொண்டது. கோயில் முகப்பு விளக்கு ஏற்றப்பட்டபோது வாசிப்பு படிப்படியாக குறையத் தொடங்க இவரின் உடல் மெல்ல தளர்ச்சியுற்றது. பூசாரி கற்பூரத்தை ஏற்றி இவரிடம் கொடுத்தார்.

இவர் அதை வாயில் போட்டு விழுங்கியவுடன் மெல்ல கீழே சரிந்தார். அருகிலிருந்தவர்கள் அவரைத் தாங்கிப்பிடித்து பின் தோதாக படுக்கவைத்தனர். அவர் சுவாசத்தில் வேகம் குறைந்திருக்கவில்லை. சாமி சிலை இறக்கப்பட்டு மேற்கிலிருந்த வேப்பமரத்தின் பக்கத்திலிருந்த பீடத்தின் மேல் வைக்கப்பட்டது. சிலைக்கு தென்புறம் மலைத் தொடர் நீண்டும் உயர்ந்தும் இருந்தது. அண்மையில் பெய்த மழையால் எங்கும் பச்சை கட்டியிருந்ததை வெளிச்சத்தில் உணர முடிந்தது. கோயிலைச் சுற்றி நின்றிருந்த வேம்பின் அசைவுகள் காற்றில் குளிர்ச்சியை ஏற்படுத்தின. இவருக்கு மயக்கம் தெளிய கொஞ்ச நேரமானது. எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு கோயிலுக்கு வெளியில் வந்து அமர்ந்தபோது, சூளக்காரர்வீட்டு தெய்வசிகாமணி இவரைப் பார்த்து சொன்னான்.

"சாமி உங்கள சாப்பிடறதுக்கு தலைவர் வூட்டுக்கு வரச் சொன்னாங்க" அவன் கூறியதைக் கேட்டுக் கொண்டவராக தலையை ஆட்டினார். அவன் போன சிறிதுநேரம் கழித்து மஞ்சள் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு தலைவர் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

தலைவர் வீடு ஒளி வெள்ளத்தால், பகலைப் போன்று இருந்தது. காம்பவுண்டுக்கு உட்புறம் இரண்டு நாய்கள் கட்டப்பட்டிருந்தன. தெரு வராண்டாவில் ஊர்ப் பிரமுகர்கள் கூடியிருந்தனர். இவர் தெருக் கேட்டை திறந்துகொண்டு உள்ளே வருவதற்குள் வீட்டினுள் இருந்து தலைவரும் அவர் மனைவியும் வேகமாக வந்து அவரது காலில் நீர் ஊற்றி கழுவி, மஞ்சளும் சிவப்புமிட்டு உள்ளே அழைத்துச் சென்றனர். வராண்டாவில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து நின்றனர். இவர் ஒருமுறை அனைவரையும் பார்த்தபடியே உள்ளே சென்றார். நடுக்கூடம் ஒரு கல்யாண மண்டபம்போல இருந்தது. ஒரேநேரத்தில் குறைந்தது இருநூறு பேராவது அமர்ந்து சாப்பிட்டு விட முடியும். அந்த அளவிற்கு பரந்து விரிந்திருந்தது. கூடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேலைப்பாடுமிக்க தூண்கள் வீட்டின் பழமையை உணர்த்திக் கொண்டிருந்தன. இவர் அத்தூண்களின் அழகையே பார்த்துக் கொண்டிருந்தபோது தலைவர் பேசினார். "சாமி வந்து உக்காருங்க நேரமவுது இல்ல"

இவர் மென்மையாக சிரித்தபடி தலைவர் காட்டிய இடத்தில் அமர்ந்தார். உடல் தளர்ந்து கண்கள் ஒடுங்கியிருந்தன. காலையும் மதியமும் விரதம்.இரவு ஒருவேளைதான் சாப்பாடு. பகல் முழுக்க நடந்த களைப்பு. ஊர்ப்பிரமுகர்கள் இவருக்கு இருபுறமும் அமர்ந்து கொண்டனர். தலை வாழைஇலையில் விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. தலைவரும் அவர் மனைவியும் இவரை கவனித்துக்கொண்டனர். எல்லோரும் இவர் சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருந்தனர். கண்களை மூடி கைகளை கூப்பி சில நிமிடங்கள் முனுமுனுத்தபடி இருந்தவர் பின் மெல்ல சாப்பிட ஆரம்பித்தார். அனைவரும் சாப்பிடுவதில் வேகம் காட்டினர். அவர்கள் சாப்பிடுவதையே தலைவர் பார்த்துக்கொண்டிருந்தார். இவர் மெதுவாக சாப்பிட்டார். கண்களில் இனம்புரியாத வலியின் ரேகைகள் ஓடிக் கொண்டிருந்தன. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வேண்டாமென்று சொன்னால் கூட விடாமல், தலைவர் மனைவி இவருக்கு உணவுவகைகளை பரிமாறிக்கொண்டே இருந்தாள். சாப்பிட்டுவிட்டு எழுந்தபோது இவருடன் அனைவரும் எழுந்தனர். கை அலம்பிக்கொள்ள தலைவர் செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். இவர் கைகழுவிக் கொண்டு மற்றவர்களிடம்கொடுத்தார். சிறிதுநேரம் வராண்டாவில் அமர்ந்து பின் அனைவரிடமும் கூறி கோயில் நோக்கி நடந்தார். கோயில் பிரகாரத்தில் ஏற்கனவே சிலர் படுத்துக் கொண்டிருந்தனர். இவர் கிழக்குப் பக்கமாக போடப்பட்டிருந்த பந்தலுக்கு கீழே படுத்துக் கொண்டார். படுத்த கொஞ்ச நேரத்திற்குள் உறங்கியும் போனார்.

கோலக்காரர் வீட்டு நிலம் கண்ணுக்கெட்டிய தூரம் பரந்து விரிந்து கிடந்தது. ஆடிப்பட்டத்துக்காக நிலத்தை உழுது கொண்டிருந்த ஆறுமுகத்தை கோலக்காரர் வீட்டு அங்கமுத்து பெரியவர் கையசைத்துக் கூப்பிட்டார். பெரியவரின் சத்தம் கேட்டதும், ஏர்க்கலப்பையை அப்படியே விட்டுவிட்டு தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து உதறி, இடுப்பில் சுற்றிக்கொண்டு பெரியவர் முன்வந்து நின்றார். சூரியனின் கதிர்கள் நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. பெரியவர் வெயில் தாங்க முடியாமல் மாமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்துகொண்டார். கொஞ்சம் தள்ளியே கைகளை கட்டிக்கொண்டு நின்றார் இவர். பெரியவர் தொண்டையை செருமிக் கொண்டபடியே இவரிடம் பேசினார்: "நாளுவேற நெருங்கிடுச்சி, எப்ப ஓட்டி எருவு அடிக்கிறது, எப்ப வெதைக்கிறது. கொஞ்சம் சுருக்கா பார்டா". "எல்லாம் கரெக்டா முடிஞ்சிடும் சாமி". "நீ இருக்கிற தெகிரியம் தான்".

அவர் கூறியதும் இவருக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. காதுரோமங்கள் சிலிர்த்துக் கொண்டன, மாமரத்தில் பறவைகள் சடசடத்துக் கொண்டிருந்தன. ஏர்க்கலப்பையில் பூட்டப்பட்டிருந்த மாடு கத்தத் தொடங்கியதும், அவர் இவரிடம் கூறினார்: "அப்ப நான் கௌம்புறேன். ஆவ வேண்டியத பாரு புரியுதா?"

இவர் அப்படியும் இப்படியுமாகத் தலையை ஆட்டினார். அவர் கட்டிலைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினார் இவர். வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மாடுகள் சோர்ந்து கலப்பையை இழுப்பதில் தயக்கம் காட்டின. இவர் அவற்றை விரட்டிக் கொண்டே இருந்தார். இவராலும் வெப்பத்தை தாங்க முடியவில்லைதான். என்ன செய்வது? உழுதாக வேண்டுமே. சாயுங்காலம் திரும்பி வந்து பார்க்கும்போது உழுது முடித்திருக்காவிட்டால் பெரியவரின் கோபம் பீறிட்டு வரும் முகத்தை எப்படி எதிர்கொள்வது என்ற எண்ணமே களைப்பை பொருட்படுத்தாமல் இயங்கச் செய்தது. மாடுகளோடு மாடாய் சேற்றுக்குள் உழன்று கொண்டிருந்தபோது கிணற்றுமேட்டிலிருந்து தனது பெயர் சொல்லி யாரோ கூப்பிடுகிறார்கள் என்பதை உணர்ந்தவர் திரும்பிப் பார்த்தார். மரத்து நிழலில் பெரியவரின் இளையமகன் தலையில் கூழ்ப் பானையுடன் நின்று கொண்டிருந்தான். கலப்பையிலிருந்து மாட்டை தரித்து விட்டுவிட்டு, தலையில் கட்டியிருந்த துண்டை உதறி இடுப்பில் கட்டிக்கொண்டு ஓடிவந்தார். அதற்குள் பெரியவரின் மகன் கூழ்ப் பானையை இறக்கி வைத்துவிட்டு அமர்ந்து கொண்டான். அருகில் வந்த இவர் அவனைப் பார்த்து கேட்டார்: "சின்னவரே இந்த வெயில்ல நீங்க ஏன் வரனும். சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே". "இல்ல ஆறுமுகம் கொல்லிக்காட்ட பாக்கனும்னு ஆசை. அதான் நானே புறப்பட்டு வந்தேன்".

மரத்தின் நிழல் குளிர்ச்சியாக இருந்தது. வெயில் எங்கும் வியாபித்திருந்தது. இவர் கூழை ருசித்துக் குடித்தார். இவரது விரல்களில் பானையின் விளிம்பு பட்டுவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வோடு கூழை ஊற்றினான். சாப்பிட்டு முடித்து கைகளின் இருபுறமும் தனது நாவால் சுத்தம் செய்து கொண்டே தொட்டி நோக்கிச் சென்றார். அப்போது அவன் இவரிடம் கூறினான்:"ஆறுமுகம் எச்ச கைய அதுல கழுவாத நா மொண்டு ஊத்தறேன்" என்று கூறிக்கொண்டே, தொட்டிக்கருகில் வந்து தண்ணீர் மொண்டு தூக்கி ஊற்றினான். இவர் கைகளை கழுவிக்கொண்டு அவனிடம் சொன்னார்: "சின்னவரே, போயி கட்டல்ல படுங்க. வெய்ய சாயறப்ப போலாம்"

அவனுக்கும் கிணற்றுமேட்டில் மரக் கட்டிலில் படுத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை. இவர் சொன்னதும் சென்று படுத்துக் கொண்டான். இவர் மண்வெட்டியை எடுத்து வரப்பு மடிக்க மீண்டும் நிலத்திற்குள் இறங்கினார். வீசத்தொடங்கியது. மரக் கட்டிலில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான் அவன். கலப்பை, மண் வெட்டிகளை மோட்டார் கொட்டகைக்குள் வைத்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பும் விதமாக கூப்பிட்டார்: "சின்னவரே நேர மாயிட்டது எழுந்திருங்க"

அவன் புரண்டு படுத்து கண்களை திறந்து பார்த்தான். வெயில் முற்றிலுமாக குறைந்து விட்டிருந்தது. கண்களை கசக்கியபடியே கட்டிலை விட்டு கீழிறங்கி பானையைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டான். இவர் மாடுகளைப் பிடித்துக் கொண்டார். ஏற்கனவே அறுத்து வைத்திருந்த புல்லுக்கட்டை தலையில் தூக்கிக்கொண்டு அவனைப் பின் தொடர்ந்து நடந்தார்.

கோலக்காரர் வீட்டு மாட்டுக் கொட்டகையில் சாணத்தின் நெடி எங்கும் பரவியிருந்தது. புல்லுக் கட்டை இறக்கி தொட்டி மேடையில் வைத்தார். தவிட்டை கொண்டு வந்து தொட்டியில் கரைத்தார். அக்கம் பக்கத்து வீடுகளில் கழிவுநீர்ப் பானைகளில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து தவிட்டோடு ஊற்றி நன்கு கலக்கினார். பின் ஒவ்வொரு மாடாக அவிழ்த்து, தண்ணீர் காட்டி விட்டு மீண்டும் கட்டினார். தெற்கு பக்கமிருந்த வைக்கோல் போரிலிருந்து பன்னை பன்னையாக வைக்கோல் பிடுங்கி மாடுகளுக்குப் போட்டுவிட்டு நிமிர்ந்தபோது முதுகில் கடுமையான வலி ஏற்பட்டதை, உணர்ந்தார். தினம் தினம் செய்யும் வேலைதான் என்றாலும், அவருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. கண்கள் மங்கலாகிக் கொண்டு வந்தபோது மாட்டுக்கொட்டகையின் படலை சார்த்திவிட்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வீட்டில் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. தன் மனைவி ஆக்கி வைத்திருந்ததை சாப்பிட்டு விட்டு படுத்தவர் உடனே தூங்கிப் போனார். அந்த அளவிற்கு அவர் களைப்பாக உணர்ந்தார். அவர் மனைவி பிற வேலைகளை முடித்துக் கொண்டு படுத்த சிறிது நேரத்திற்கு பிறகு கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து, கதவை திறந்தாள். தலைவர் வீட்டு வேலைக்காரன் நின்று கொண்டிருந்தான். அவள் வெளியில் வந்து அவனிடம் கேட்டாள்: "இந்த நேரத்தில் ஏது இவ்ளோ தூரம்?".

"ஆறுமுகத்த தலைவர் கையோட கூட்டாரச் சொன்னாரு"

அவன் வார்த்தைகளில் தடுமாற்றம் இருந்ததை உணர்ந்தவள் அவன் கண்களைப் பாரத்தாள். நன்கு சிவந்திருந்தன அவன் மீது சாராயத்தின் நெடி குப்பென அடித்தது. மீண்டும் அவள் கேட்டாள்: "எதுக்குன்னு சொன்னாங்களா?". அவன் தெரியாது எனும் விதமாக தலையாட்டினான். அவள் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பினாள். இவர் புரண்டு புரண்டு படுத்தார். சுலபத்தில் இவரால் கண்களை திறக்கமுடியவில்லை. கண்கள் பிசுபிசுத்தன. மெல்ல முனகிக்கொண்டே எழுந்தார். கண்களில் தூக்கம் அப்படியே இருந்தது. என்ன செய்வது தலைவர் வீட்டு அழைப்பு. போகாமல் இருக்க முடியாது. துண்டை எடுத்துக் கொண்டு கீழேக் குனிந்து வாசற்படியைத் தாண்டி வெளியில் வந்தார். இவரைப் பார்த்து அவன் மெல்லிய சிரிப்பை உதிர்த்தான். இவர் மனைவியிடம் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார். அவன் சலசலவென பேசிக்கொண்டே வருவதை இவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தூக்கக்கலக்கம் வேறு. கோபம் கோபமாக வந்தது எதுவும் சொல்ல முடியாதவராக நடந்தார்.

வேலைக்காரன் தான் என்றாலும் அவன் தலைவர் வீட்டு வேலைகாரனாச்சே. ஆகவே அவனிடம் எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தார். காலனியைத் தாண்டி ஊருக்குள் நுழையும்போதுதான் பாதை சீராக இருந்தது. தெரு விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. மஞ்சள் வெளிச்சம் இரவை ரம்யமாக்கிக் கொண்டிருந்தது. நாடக மேடையில் ஒரு கும்பல் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது. அதற்கு எதிர்புறமிருந்த மாரியம்மன் கோயில் வாசலில் கோலக்காரர் மற்றும் சிலர் அமர்ந்திருந்தனர். இவர் வருவதைப் பார்த்த அவர் கூப்பிட்டார்.

"ஆறுமுகம் என்ன இந்த பக்கம்?". இவர் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு தூரத்திலிருந்தே கூறினார்: "தலைவர் வூட்டுக்கு சாமி"

எதற்கு தலைவர் வீட்டுக்கு என்று சிறிதுநேரம் யோசித்த பெரியவர் மீண்டும் பேசினார்: "திருவிழா பத்தி சொல்றதுக்கா இருக்கும் போ போ" எனக்கூறி அவர் அனுப்பி வைத்தார். தலைவர் வீட்டு முன் வந்து நின்ற ஆறுமுகம் உள்நோக்கி சொன்னார்: "சாமி, ஆறுமுகம் வந்திருக்கேன்." கதவு திறக்கிறதா என்று பார்த்தார். எந்த அசைவுமின்றி இருந்தது கதவு. மீண்டும் சொன்னார். இம்முறை குரலில் கொஞ்சம் வலு கூடியிருந்தது. கூறி முடிக்குமுன் தெருவிளக்கு போடப்பட்டது. கதவைத் திறந்து கொண்டு தலைவர் வந்தார். இவர் இடுப்புத்துண்டை சரிசெய்து கொண்டார். தெருவில் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன. காம்பவுண்ட் கேட்டுக்கு உட்பக்கமாகவே நின்று கொண்டு சொன்னார்: நாளன்னிக்கி சூலப்பிடாரிக்கு காப்பு கட்றது. வழக்கம்போல பத்துநாளும் ஊருக்குள்ளேயே இருந்துக்க வேண்டியது. எந்த வேலையா இருந்தாலும் நாளக்கே முடிச்சிடு. இங்க வந்துட்டா திருவிழா முடிஞ்சாத்தான் காலனிக்குள்ள போகமுடியும். அதாலதான் சொல்றேன். என்ன வௌங்கிச்சா?

தலைவர் படபடவென்று பேசியதையே இவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். கணக்குபிள்ளைத் தெரு முக்கில் நாய்கள் ஓலமிட்டுக் கொண்டிருந்தன. தலைவர் மீண்டும் கேட்டார்:"வேற ஏதாவது சொல்றதுக்கு இருக்கா ஆறுமுகம்?". இல்லை என்பதுபோல இவர் தலையாட்டியதும், அவர் உள்ளே சென்று கதைவை சாத்தி விளக்கை அணைத்தார்.

நாதஸ்வரம் ஊதும் சப்தம் கேட்டு, திடுக்கிட்டு விழித்தார். தான் எங்கு இருக்கிறோம் என்று உணர்ந்து கொள்ள இவருக்கு கொஞ்சநேரம் பிடித்தது. இவ்வளவு நேரமாக தூங்கிக் கொண்டுதான் இருந்தோமா என யோசித்தவாறே கையை பார்த்தார். காப்பு கட்டப்பட்டிருந்தது. தான் கண்ட நீண்ட கனவை நினைத்தபடியே மேளக்காரரிடம் கேட்டார்: "ஏன்னே, செத்த முன்னாடியே எழுப்பியிருக்கக்கூடாது. நடந்து வந்த களைப்பு அடிச்சி போட்ட மாதிரி இருந்திச்சி அதான்". இவர் சொல்லி முடித்ததும் நாதஸ்வரம் வாசிப்பவர் சொன்னார்: "தலைவர் வூட்டு சாப்பாடுன்னா சும்மாவா?".

எல்லோரும் சிரித்தனர். மேளமும் நாதஸ்வரமும் தயார்நிலையில் இருந்தன. தீவட்டி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டு, இவரிடம் கொடுக்கப்பட்டது. தாளம் போடுபவரை எல்லோரும் எதிர்பார்த்தபடி இருக்க, அவர் மூச்சு வாங்க ஓடி வந்தார். அம்மன் ஊர்வலம் ஆரம்ப மாகியது. தீவட்டியைக் கொளுத்தி இவர் தாழ்த்தி பிடித்துக் கொண்டார். இரண்டு மேளக்காரர்கள், இரண்டு நாதஸ்வரம், ஒரு தாளம், கூட இருவர் என எட்டுபேர் ஊர்வலத்தில் கலந்துகொண்டார். மேளச்சப்தம் கேட்டதும் ஊரார் யாரும் எதிரில் வந்துவிடாமல் வீட்டிற்குள்ளேயே பதுங்கிக் கொண்டு பார்த்தனர். மேள மும் நாதஸ்வரமும் ஒரே சீராக வாசிக்கப்பட்டன.தெரு வெறிச்சோடிக்காணப்பட்டது. தங்கள் வீட்டைக் கடந்தபிறகே ஒவ் வொரு வீட்டிற்குள்ளிருந்தும் ஆட் கள் வந்து ஊர்வலத்தைப் பார்த்தனர். தீவட்டிக்கு எதிரில் யார் வந்தாலும், அடுத்தநாள் ரத்தம் கக்கிச் சாக நேரிடும் என்பது ஐதீகமாக இருந்த தால், மக்கள் அவரவர் வீடு களிலேயே இருந்தனர்.

ஊர்முழுக்க சுற்றி கோயிலை வந்த டைந்தபோது மணி இரண்டைத் தாண்டி விட்டிருந்தது. அனைவரும் பந்தலடியிலேயே படுத்துக்கொண் டனர். இவருக்கு மட்டும் தூக்கம் வர வேயில்லை. மனைவியின் ஞாபகம் வர மனது கனத்தது. புரண்டு புரண்டு படுத்தார்.

மக்களால் நிரம்பி வழிந்தது கிராமம். எங்கும் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். இசைக் கச்சேரி, நாடகம், ஆடல் பாடல் போன்ற கேளிக்கைகளால் அன்றாட இரவுகள் திணறிக் கொண்டிருந்தன. தற்காலிக கடைகள் நிறைய தோன்றி யபோது, ஊரின் பிரதான கொண் டாட்டமாக மது அருந்துதல் மாறி விட்டிருந்தது. எங்கும் சாராயத்தின் நெடி பரவியிருந்தது. வயது வித்தி யாசமின்றி இளைஞர்களும் முதி யோர்களும் ருசித்து குடித்துக் கொண்டிருந்தனர். ஊரின் நிறம் வேறொன்றாக மாற்றம் கொண்டிருந் தது. விழாவின் அனைத்துக் கூறுக ளும் புதுமையின் வெளிப்பாட்டைக் கொண்டிருந்தன. எல்லா வேலை களையும் ஒதுக்கி வைத்துவிட்டு மிகுந்த ஆர்வத்தோடு தங்களையும் கொண்டாட்டத்தில் பிணைத்துக் கொண்டிருந்த மக்களின் கண்களில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. இரவையும் பகலையும் பிரித்தறிய முடியாதபடி எந்நேரமும் பேச்சுக் குரலைக் கேட்க முடிந்தது. தொடர்ந்து ஊரை வலம் வந்தபடியே யிருந்தது வாத்தியங்களின் ஒலி. வான வேடிக்கைகளால் காற்றில் கந்தகத்தின் மணம் கூடிக்கிடந்தது.

ஒவ்வொரு நாள் திருவிழாவும் மாலை ஐந்துமணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நீண்டது. இரவை கொண்டாடுவது என்ற அளவில் திரு விழா புரிந்து கொள்ளப்பட்டு, ஒரு சாராரிடம் புணர்ச்சியின் சுகிப்பை அதிகப்படுத்தியிருந்தது. இளைஞர்கள் தங்கள் ஸ்நேகிதிகளு டன் அடர்ந்து பரவியிருந்த இருளில் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டி ருந்தனர். சில இடங்களில் அடர்ந்தி ருந்த இருள் அவர்களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்கியிருந்தது. தப்பையும், சரியையும் பிரித்துப் பார்க்க முடியாமல் மக்கள் திணறிக் கொண்டிருந்தனர். அனைத்துமே கொண்டாட்டத்தின் சிறுசிறு பகுதி களாகத் தோன்றின.

தீவட்டியோடு ஊரைச் சுற்றி வரும் போது மட்டுமே ஊர் அமைதியின் பிடியில் இருந்தது. மற்றநேரங்களில் ஊரை மெல்ல வருடிக்கொண்டே இருந்தது சப்தத்தின் நீண்ட நாவு. இதில் எதிலுமே அகப்பட்டுக் கொள் ளாமல் மிகுந்த பயபக்தியுடன் ஒரு குழுவினர் தேரை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.ஒவ்வொரு நாளும் தேரின் வளர்ச்சியை பார்க்க முடிந் தது. பத்தாம்நாள் காலை தேர் பிரம் மாண்டமாக ஓங்கி நின்று கொண்டி ருந்தது. வண்ணத்துணிகளும் தோர ணங்களும் தேரின் பொலிவைக் கூட்டி காட்டின. உச்சியில் ஓர் வெண் கலக்குடையும் அதற்கு மேலாக ஒரு கொடியும் கட்டப்பட்டிருந்தது. காற்றின் போக்கில் பறக்கும் கொடியைத் தொடர்ந்து பார்க்க முடி யாதபடி இருந்தது தேரின் உயரம். தேரைச் சுற்றி மக்கள் கூட்டம் அலை மோதியது. தேரை இழுப்பதற்கு கூட்டம் முண்டியடித்துக் கொண்டி ருந்தபோது கூட்டத்திற்குள்ளாக சல சலப்பு தொடர்ந்து கேட்டபடியே இருந்தது. ஆறுமுகம் கோயிலிலி ருந்து அம்மன் சிலையை தூக்கிக் கொண்டுகூட்டத்திற்குள்ளாக நடந்து வந்து கொண்டிருந்தார். கண்கள் உக்கிரத்தோடு சிவந்திருந்தன. முகம் இறுகிக் காணப்பட்டது.

இவர் சிலையை எடுத்து வருவதைக் கண்ட கூட்டம் ஒதுங்கி வழிவிட்டது. சிலை தங்களைக் கடக்கும்போது கூட்டம் கன்னத்தில் போட்டுக் கொண்டது. தேருக்கருகில் சென்றதும் அவர் தேரை மூன்றுமுறை சுற்றி வந்தார். கூட்டம் திணறிக் கொண்டிருந்தது. வாத்தியங்களின் ஒலிகள் மக்களிடம் அதிர்வை ஏற்படுத்திக் கொண்டிருந் தன. தங்களை மறந்த நிலையில் பலர் சாமிவந்து ஆடிக்கொண்டிருந்தனர். வாத்தியங்களின் ஒலி கூடத் தொடங் கியபோது, அவர்களின் ஆட்டத்தி லும் ஆக்ரோஷம் கூடியது. அவர் சிலையை தேருக்குள் வைத்தார். கற்பூரம் ஏற்றி தேருக்கு படைத்த போது கூட்டம், "தாயே மகமாயி" என்று பெருங்குரல் எடுத்து கத்தியது. தேர் நோக்கி பிதுங்கிக் கொண்டிருந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை. துண்டை எடுத்து இடுப் பில் கட்டிக்கொண்டு சாமியை கை கூப்பி வணங்கி தேரின் வடத்தை ஆறுமுகம் பிடித்தார். ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூட் டம் திமுதிமுவென ஓடிவந்து வடம் பிடித்தது. தேர் மெல்ல நகர்ந்தபோது மக்கள் வெள்ளம் ஆர்ப்பரித்தது. "தாயே மகமாயி" எனும் ஒலி எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது.

பிரதான தெருக்களைச் சுற்றிக் கொண்டு தேர் நிலைக்கு வந்துசேர இரவு எட்டு மணியாகிவிட்டது. கூட் டம் குறைந்தபாடில்லை. சுற்று வட் டாரத்திலிருந்து நிறையபேர் வந்தி ருந்தனர். மின்சாரம் நிறுத்தப்பட்டி ருந்ததால் ஊரை இருள் சூழ்ந்திருந் தது. கோயில், தேர் நிற்குமிடங்க ளில் பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சத்தைக் காணமுடிந்தது. கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டனர் மக்கள். எங்கும் பேச் சின் ஒலி கேட்டுக்கொண்டேயிருந் தது. இருட்டுக்கு எத்தனை வாய்கள். இத்தனை நாட்கள் இந்த பேச்சுகள் யாருக்காக சேமித்து வைக்கப்பட்டி ருந்தன என்று யோசித்தபடியே பந்தலடியில் இருந்த பெஞ்சின் மீது அவர் அமர்ந்திருந்தார்.

இரவு ஒன்பது மணி சுமாருக்கு மக்கள் பந்தலடியில் குவியத் தொடங்கினர். மந்தவெளியில் ஒரு பிரிவினர் வாண வேடிக்கைகளை நடத்திக் கொண்டி ருந்தனர். தெருவின் இருமுனை களையும் தொட்டபடி நீண்ட வெடி களை வைத்து வெடித்து மகிழ்ந்த ஒரு கூட்டம் அனைவரிடத்திலும் பயத் தையும் அதிர்வையும் ஏற்படுத்தியது. வெடிச்சத்தம். ஒரே புகைமண்டலம். கந்தக நெடி. சட்டென மயானத்தின் தோற்றத்தைக் கொடுத்தது மந்த வெளி. தேரடியிலிருந்தக் கூட்டம் மெல்லக் கலைந்து சிலர் வீட்டிற்கும் கோயிலுக்குமாக பிரிந்துசென்றனர். தொடர்ச்சியாக பகல் முழுக்க காய்ந்த வெயிலினால் ஒரே நசநசப் பாக இருந்தது பந்தலடி.

ஆறுமுகம் குளித்துவிட்டு தயாராக வந்தபோது மணி பத்தாகியிருந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. அம்மன் திருமணத்தைக் காண கூட்டம் அலைமோதியது. சுற்றியிருந்த கட்டடங்கள் மரங்கள் மீதெல்லாம் மக்கள் ஏறி நின்று கொண்டிருந்தனர்.தர்மகர்த்தா வீட்டி லிருந்து கொண்டுவரப்பட்ட பட்டும் காசுமாலையும் சாமிக்கு அணிவிக் கப்பட்டது. பட்டுவேட்டியை ஆறு முகம் உடுத்திக்கொண்டார். மிருதங் கமும் நாதஸ்வரமும் மென்மையாக வாசிக்கப்பட்டன. இரண்டின் இசை யும் சூழலை ரம்யமாக்கிக் கொண்டி ருந்தது. இருளும் ஒளியும் கலந்த சூழல் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தின. ஏதோ கனவில் நடப்பதைப் போன்றி ருந்தது. தர்மகர்த்தா கை உயர்த்தி நேரம் பார்த்தார். பின் ஆறுமுகத் திடம் திரும்பி சொன்னார்: "சாமி நேரம் நெருங்கிடுச்சி. மாங்கல்யம் சாத்திடலாங்களா?"

ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருப் பவரைப்போல நின்று கொண்டிருந்த ஆறுமுகம் மௌனமாகத் தலை யாட்டினார். மாங்கல்யம் இருந்த தட்டை எடுத்து ஆறுமுகத்திடம் கொடுத்தார் தர்மகர்த்தா. மாங்கல் யத்தை கையில் எடுத்துக்கொண்டு அம்மனை நோக்கிச் சென்றவர் மேளக்காரர்களை நிமிர்ந்து பார்த் தார். கூட்டம் "வேகமாக அடிங் கப்பா" என்று வாத்தியக்காரர்களை நோக்கி கூவியது. வாத்தியங்களின் வேகம் கூட்டப்பட்டது. தாலிகட்டு வதை பார்க்க முட்டி மோதிய கூட்டத்தில் சலசலப்பு அடங்கி ஒரு வித அமைதி நிலவியது. வாத்தியங் களை ஆவேசத்துடன் வாசித்துக் கொண்டிருந்தனர். அம்மனுக்கு அருகில் சென்றவர் கூட்டத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்தபின் மாங்கல் யத்தை அம்மன் கழுத்தில் அணிவித் தார். வாத்தியங்களின் பேரிசை கூட் டத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது வெடிச்சத்தம். வாத்தியங் கள் எழுப்பும் அதிர்வைத் தாங்காமல் மூலவீட்டு கனகாம்பாள் ஆடிக் கொண்டே அம்மன் சிலைக்கு முன்பாக வந்தாள்.

அவளிடம் தர்ம கர்த்தா பேசி னார்:"வந்திருக்கிறது யாருன்னு சொன்னா வசதியா இருக்கும்". உக்கி ரத்தோடு ஆடிக்கொண்டிருந்த அவள் கூறினாள்:"நா ஆத்தா வந்திருக் கேன்டா" கூட்டம் கன்னத்தில் போட்டுக் கொண்டு ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. மீண்டும் தர்மகர்த்தாவே பேசினார்: "ஆத்தா குத்தம் கொற ஏதுமில்லேயே?". குறை இருப்பதுபோல தலையாட்டி னாள். கூட்டத்தில் சட்டென ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆடிக் கொண்டே இருந்தாள். அவளுக்கு உக்கிரத்தைக் கூட்ட மேளக்காரரால் அதற்கு மேல் ஈடுகொடுக்க முடிய வில்லை. பம்பையும் உடுக்கையும் வரவழைக்கப்பட்டு வாசிக்கப்பட்ட போது சூழலில் மீண்டும் இறுக்கம் கூடியது. அவள் உக்கிரத்தோடு ஆடினாள். உடுக்கை வாசிப்பவரின் குரல் காத்திரம் மிக்கதாக இருந்தது. பம்பையும் உடுக்கையும் உச்சத்திற்கு சென்ற போது தர்மகர்த்தா அவளிடம் பேசினார்: "ஆத்தா எந்த கொற இருந் தாலும் உம் பசங்ககிட்ட சொன்னா தான தெரியும்". மூச்சு வாங்க பேசி னாள்: "அத எப்படிடா நான் சொல் வேன்." "மனசிலே வச்சி கிட்டா எப்படி ஆத்தா சொன்னாதான தெரியும்"

இன்னும் சுவாசம் அவளுக்கு சீராகியி ருக்கவில்லை. கண்கள் சிவந்திருந் தன. மீண்டும் தர்மகர்த்தாவே பேசி னார்:"ஆத்தா நேரமாவுது இல்ல. சீக்கிரம் சொல்லிடு ஆத்தா". உக்கிரத் தோடு பேசினாள்:"டேய் இவ்ளோ நாளாகியும் எனக்குனு ஒரு கோயில உங்களால கட்ட முடியலயே"

அவளின் வார்த்தைகள் கூட்டத்தில் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற் படுத்தின. கோயில் கட்டப்படாத தற்கு ஒருபிரிவினர் மற்றொரு பிரிவி னரை காரணமாக்க அங்கு பேச்சு தடித்து கைகலப்பு ஏற்படும்போல தோன்றியது. ஆறுமுகம் எதுவும் பேசாது அமைதியாக இருந்தார். ஆடிக்கொண்டே இருந்த அவளுடன் தர்மகர்த்தா மீண்டும் பேசினார்: "ஆத்தா வேற ஏதாச்சும் கொற இருக் குதா?" அவள் கன்னத்தில் அறைவது போல சொன்னாள் "மொத இந்த கொறய போக்குங்கடா" கூட்டம் அவளின் வார்த்தையை ஆமோதித் தது. "சரி தாயி அதை பூர்த்தி செஞ்சிடு றோம்" அவளது ஆட்டத்தில் வேகம் குறையத் தொடங்கியபோது கூட்டத் தில் இருந்து யாரோ ஒருவர் கேட்டார் "இந்த வருசமாவது மழை உண்டா?" மெல்ல ஆடிக்கொண்டே அவள் கூறினாள் "எட்டன தூரத்துக்கு மழை பெய்ற வாய்ப்பே இல்ல" எனக் கூறி அவள் இருகைகளையும் நீட்டினாள். தர்மகர்த்தா சூடம் ஏற்றிக் கொடுக்க அதை வாயிலிட்டபடியே மயங்கி சரிந்தாள். கூட்டம் தங்களுக்குள்ளாக பேசிக்கொண்டது.

ஆறுமுகம் அமை தியாகவே அமர்ந்திருந்தார். ஊர் பெரியவர்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பேசிக்கொண்டே கூட்டம் நாலாதிசையிலும் கலைந்து சென்றது. ஆறுமுகம் எழுந்து மரத்தடி யில் போய் அமர்ந்தபோது "சாமிக்கு யாரு மாங்கல்யம் சாத்துறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு" என்று யாரோ ஒருவர் பேசிக்கொண்டே இருளுக்குள்ளாக மறைவதை இவர் பார்த்துக்கொண்டிருந்தார். அதைக் கேட்ட இவரது உடல் அதிர்ந்தது. கைகள் நடுங்கின. முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிப்பது போல உணர்ந்தார். சிறிது நேரம் தனித்தி ருக்க வேண்டுமென தோன்றியது இவருக்கு. வீட்டுக்கு சென்றுவிட லாமா என்றும் யோசித்தவர் கையில் கட்டப்பட்டிருந்த காப்பை தடவிப் பார்த்தார். காப்பை அவிழ்த்தப் பின் தான் வீட்டிற்கு செல்ல வேண்டு மென யோசித்தவர் அறுத்தெறிந்தால் என்ன நடந்துவிடும் என்றும் யோசித் தார். மெல்ல தலை உயர்த்தி கோயில டியைப் பார்த்தார். யாரையும் காணோம். தனித்து விடப்பட்டதாக உணர்ந்தார். இந்த ஒன்பதுநாள் இரவு களையும் நினைத்துப் பார்த்தவருக்கு மனது கணத்தது. கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. தான் ஏன் அழ வேண்டுமென யோசித்துக் கொண்ட வர் துண்டால் கண்களை துடைத்துக் கொண்டபடி கவிந்திருந்த இருளைப் பார்த்து மிகுந்த ஆத்திரத்தோடு 'தேவிடியாப் பசங்களா' எனக் கூறி தனது உடலின் வலிமைகளையெல் லாம் ஒன்று திரட்டி காறித் துப்பினார். அப்படி இருந்ததும் அவரது ஆத்திரம் குறையவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. பின் உடல் சோர்வு காரணமாக அங்கேயே படுத்துக் கொண்டார். உறக்கம் வராமல் நெடு நேரம் புரண்டு படுத்துக் கொண்டே இருந்தவருக்குள் அவ்வார்த்தைகள் ஒரு புழுவைப் போல் நெளிந்து கொண்டே இருந்தன.

மறுநாள் காப்பை அவிழ்க்கும்போது கூட யாருடனும் அவர் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மெல்ல வன்மம் உருக்கொள்கிறதோ என்ற அச்சம் ஆறுமுகத்தின் மனதில் தோன்றியபோது, அவர் காப்பை அவிழ்த்து நடப்பட்டிருந்த சூலத்தில் மாட்டிவிட்டு மெல்ல நடக்கத் தொடங்கினார். ஊர் பிரமுகர்கள் அவரிடம் அவரின் நிலைகுறித்து கேட்டதற்குகூட அவர் எந்த பதிலை யும் கூறாமல் அமைதியாக இருந்தார். யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஆனால் அவரின் அமைதி அனைவ ரையும் சங்கடப்படுத்திக் கொண்டி ருந்தபோது அவர் நடக்கத் தொடங்கி யிருந்தார். ஊரைக் கடந்து காலனிக்கு செல்லும் பாதையில் கால் வைத்த போது ஒருவித பதற்றத்தோடு கூடிய சுதந்திரத்தை அவரால் உணர முடிந் தது. அவரது உறவினர்கள் ஆறுமுகத் தின் வரவை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யாருடனும் அவர் பேசாமல் நேராக வீட்டிற்குள் சென்று படுத்துக் கொண்டார். வீட்டு முன் கூடியிருந்த கூட்டம் எதுவும் புரியாமல் மெல்ல கலைந்து சென்றது.

அவர் தூங்கி எழுந்தபோது நன்கு இருட்டிவிட்டிருந்தது.முகம் கழுவிக்கொண்டு தெருவில் வந்து அமர்ந்தார். வேலைகளை முடித்துக் கொண்டு அவர் மனைவி அவருக்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டாள். அவரின் மௌனம் அவளுக்கு கஷ்டத்தைக் கொடுத்தபோது அவரி டம் கேட்டாள்: "ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க, ஏதாவது பிரச்சனையா?" அவர் இல்லையெனும் விதமாக தலையாட்டினார். பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் நெடு நேரம் அமைதியாகவே அமர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் அவருக் குள் ஏதோ ஒன்று மிகுந்த சங்கடத் தோடு துடிதுடித்துக் கொண்டிருந் ததை அவளால் உணர முடிந்த அன்றிரவு பெருமழை பெய்து ஏரிக் குளமெல்லாம் நிரம்பி வழிந்தது. மறுநாள் விடியலில் ஊரைச் சுற்றி ஆக்ரோசத்தோடு துளிர் விட்டிருந்த வன்மத்தின் கொடியை ஆறு முகத்தைத் தவிர வேறு யாருமே அங்கு உணர்ந்திருக்கவில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com