Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜுன் 2006
பத்திரிகைச் செய்தி

வைக்கம் முகமது பசீர்
தமிழில்: மு.ந. புகழேந்தி

‘மே 9.... ஊரில் பயங்கரமாகப் பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தைப் பொருட் படுத்தாமல் தன் உயிரைப் பணயம் வைத்து இங்குள்ள இளைஞர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பு வகிக்கும் திருவாளர் கெ. இன்று மதியம், ஆற்று நீர்ச்சூழலில் சிக்கி மரணமடைய இருந்த, யார் துணையுமில்லா ஒரு கிழவனைக் காப்பாற்றவும், சிகிச்சை செய்வதற்காக அவ்வூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கவும் செய்துள்ளார். திருவாளர் கெ. யினுடைய தைரியமான இந்த செயல் ஊரிலுள்ள இளைஞர்கள் இடையில் என்னென்றைக்கும் ஒரு முன் உதாரணமாய் இருக்கும்’ என்னும் பத்திரிக்கைச் செய்தி. ஒரு வீரச் செயல் என்று பரங்கிக்காய் அளவு பெரிய எழுத்துக்களில் தலைப்புடன் அரசாங்க அதிகாரிகள், செல்வந்தர்கள், பல அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் அதிகாரிகள், செல்வந்தர்கள், பல அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள் என அவ்வூரினுடைய நாலாபக்கங்களிலும் உள்ள அனைவரும் நாளிதழில் படித்தார்கள் என்றாலும் யார் துணையுமில்லாத அந்தக் கிழவன் மரணச் சூழலில் சிக்கி ஒரேயடியாக மூழ்கிப் போக நினைத்தது ஏன் என்னும் இரகசியத்தை அறிந்திருந்த இரண்டு மூன்று பேரில் ஒருவர்தான் 39 ஆம் எண் போலீஸ் கான்ஸ்டபிள்.

அந்த மனிதன், அந்தப் பத்திரிக்கைச் செய்தியைப் படிக்கவும், அந்தக் கிழவனைக் காணவும், அவனுடன் பேசவும், அதைத் தொடர்ந்து நடந்த பயங்கரமான சம்பவத்திற்கு சாட்சியாகவும், அந்த சம்பவத்தைப் பற்றி வெளிவந்த பத்திரிகைச் செய்தியை படிக்கவும் செய்தவர்.

பி.சி. 39க்கு மருத்துவமனையில்தான் வேலை. லாக்கப்பில் இருந்த பிரதிகளில் இரண்டு பேர் மருத்துவமனையில் இருந்தார்கள். கிழவனைக் காப்பாற்றிய செய்தியைப் படித்ததற்கு அடுத்த நாள் பகல் ஐந்து மணிக்கு திருவாளர் கெ. யினுடைய தலைமையில் பத்திருபது இளைஞர்கள் மருத்துவமனைக்கு வந்ததையும், நோயாளிகளைப் படுக்க வைக்கும் வார்டில் இருந்த வயதான ஒரு நோயாளியினுடைய முன்னால் கூட்டமாய் நின்றதையும், போட்டோ எடுத்துக் கொள்வதையும் பார்த்தார். அப்பொழுது பி.சி.39க்கு பத்திரிகைச் செய்தி நினைவிற்கு வந்தது. திருவாளர் கெ. அவர்களுக்கும், இளைஞர் சங்கத்திற்கும் புகழ் சேர்த்த கிழவனைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்ற பிறகு பி.சி.39 அங்கு சென்று கிழவன் முன்னால் நின்றார். வெள்ளைத்துணி விரிக்கப்பட்டிருந்த கட்டிலில் கிழவன் அசைவற்றுப் படுத்துக் கொண்டிருந்தான். வெறும் எலும்பும் தோலும், கண்கள் சிவந்து தீப்பந்தங்கள் போலிருந்தன.

அவைகளில் பயங்கரக் கோபம், யார் மேல்?... எதற்கு? பி.சி.39 ஆச்சரியமாக இருந்தது. தன் முன்னால் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் நின்று கொண்டிருக்கிறார் என்னும் எண்ணம் கொஞ்சங் கூட அக்கிழவனிடம் காணப் படவில்லை. அவன் கவனம் முழுவதும் அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரங்களின் மீதே இருந்தது.

அவனிடம் எப்படிப் பேச்சை தொடங்குவது என்று பி.சி.39க்குப் பிடி கிடைக்கவில்லை. இருந்தாலும், செய்தியில் சொல்லப்பட்டுள்ள ஆள் அவன்தானா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள நினைத்த அவர் கிழவனிடம் கேட்டார்.

“ஆற்று வெள்ளத்தில் இருந்து காப்பற்றப் பட்டதாகப் பேசப்படுவது உங்களைப் பற்றித் தானா?”
கிழவன் மெதுவாக முகத்தைத் திருப்பிப் பார்த்தான். கடுங்கோபத்துடன் அந்தத் தீப்பந்தங்கள் போன்ற கண்கள் பி.சி.39ன் முகத்தில் பதிந்தன. நாள்தோறும் பல கொலைகாரர்களையும், திருடர்களையும் கைகார்யம் செய்து கொண்டுள்ள தன் பதினேழு வருட அனுபவத்தில், இவ்வளவு கோபமாய் பி.சி.39ஐப் பார்க்க யாருக்கும் தைரியம் இருந்ததில்லை.

திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டதற்கு, கிழவன் மெதுவாக பதில் கேள்வி கேட்டான்.

‘அதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?’

‘எதுவும் செய்யப் போவதில்லை’ சும்மா, தெரிந்து கொள்ளலாம் என்றுதான். பி.சி.39 னுடைய குரலில் அமைதியும், கருணையும் நிறைந்திருந்தன.

‘உங்களைத்தான் ஆற்று வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினார்களா?’ என்று போலீஸ்காரன் கேட்டதற்குக் கிழவன் ‘ஆமாம்’ என்று பதில் சொன்னான்.

பி.சி.39 னுடைய கேள்வி தொடர்ந்தது...

‘எப்படி ஆற்றில் விழுந்தீர்கள்? - குளித்துக் கொண்டிருந்தீர்களா?

அதற்கான பதிலைக் கேட்டு அவர் திடுக்கிட்டார்.

கிழவன் சொன்னான்... ‘நான்தான் குதித்தேன்’

‘எதற்கு?’

அதற்கு கிழவன் கேட்டான்

‘ஆழமான ஆற்றில், நீச்சல் தெரியாத ஒருவன் எதற்காகக் குதிப்பான்? என் உடலில் பலம் இருந்த காலத்தில் நான் வேலை செய்து வாழ்ந்து கொண்டிருந்தேன். இன்று என் உடலில் சக்தி இல்லை. எனக்கு சோறுபோட யாரும் இல்லை. இவ்வுலகத்தில் நான் தனி ஆள். பிச்சையெடுத்துத் தின்பது என்பது - அது போகட்டும், இந்த உடலால் இனி எனக்கு எந்தப் பயனும் இல்லை, இந்த நிலைமையில் நான் என்ன செய்ய வேண்டும்?’

பி.சி.39 ஒன்றும் சொல்லவில்லை. அவருக்கு சட்டம் தெரியும். தற்கொலை செய்து கொள்ள முயல்வது குற்றம். கிழவனைக் கைது செய்து, கேஸ் பதிவு செய்து நியாயாதிபதிக்கு முன்னால் நிறுத்த வேண்டும். சட்டப்படி அதைத்தான் செய்யவேண்டும். ‘நீங்கள் வேறு யாரிடமாவது இதைச் சொன்னீர்களா?’ என்று பி.சி.39 கேட்டதற்குக் கிழவன் பதில் சொன்னான்:

‘எல்லோரிடமும் நான் இதை சொல்லியிருக்கிறேன்.’

‘யாரிடமெல்லாம்?’

‘என்னைப் பிடித்துக் கரைக்குக் கொண்டு வந்த அந்த சிறுவனிடமும், மருத்துவரிடமும்.’

‘அவர்கள் இரண்டு பேருக்கு மட்டும்தானே தெரியும். இனி இதை யாரிடமும் சொல்ல வேண்டாம். நீங்கள் செய்தது தப்பு. தற்கொலைக்கு முயற்சி செய்தால் தண்டனை கிடைக்கும். ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை-’

கிழவனுக்கு நிம்மதியாக இருந்தது: ‘அப்படியென்றால், என்னைக் கைது செய்து தண்டனை கொடுக்க வையுங்கள். சிறைக்குப் போனால் சோறு கிடைக்குமில்லையா?’

‘அதற்கு நீண்ட நாட்கள் ஆகும். சிறைக்குப் போவதற்கு முன்பு கொஞ்ச காலம் லாக்கப்பில் இருக்க வேண்டி வரும். மூட்டைப் பூச்சிக் கடியை ஏற்று, தொற்று நோயுள்ளவர்களுடன், காற்றும் வெளிச்சமும் இல்லாமல் இருண்ட அறைகளில், மூத்திரத்தின் மேல் படுக்க வேண்டிவரும். நேரத்திற்கு சாப்பாடு கிடைக்காது. அப்படிப்பட்ட நிலையில் ஒன்றரை வருடங்கள் கூட இருக்க வேண்டி வரும். அதற்குப் பிறகுதான் தண்டனை கிடைக்கும். இந்த வயதான காலத்தில் நீங்கள் எதற்கு சிறைக் கெல்லாம் போகவேண்டும்? ‘இருந்தாலும், தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. அது அரசாங்கத்தினுடைய சட்டம். உங்களைப் போல ஒரு வழியும் இல்லாத எத்தனையோ பேர் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், யாரும் தற்கொலை செய்து கொள்ள நினைப்பதில்லையே?

‘இரண்டு கால் மாடுகள், உணர்ச்சி நசித்துப் போனவர்கள். அதனால்தான் அவர்களுடைய வாழ்க்கை வேண்டாத ஒரு பாரம் என்பது அவர்களுக்குத் தோன்றாது... நடக்கின்ற சவங்கள்’

‘நீங்கள் நினைப்பது சன்மார்க்க நியதிக்கு எதிரானது.’

கிழவன் பி.சி.39ஐ ஒரு முறை நன்குப் பார்த்த விட்டு, மெதுவாக ஒரு பிரசங்கம் செய்தான்:

‘ஆமாம், ஒரு நோயும் இல்லாத நான் இந்த மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இருக்கும் ஒரே ஒரு நோய் - பசிதான். அதைப் போக்க எனக்கு பார்லித் தண்ணீர் கொடுக்கிறார்கள், கை நிறைய சம்பளம் வாங்கும் நன்கு படித்த ஓர் அரசாங்க அதிகாரிதானே மருத்துவர்? அவர் சொல்வது சரியானதாகத்தானே இருக்கும்? ஆனால், பணமில்லாத நோயாளிகளுக்கெல்லாம் இங்கே பார்லி வெள்ளம், பணம் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனை செலவில் பாலும் ரொட்டியும்....

கிழவன் மிகுந்த வேதனையுடன் தொடர்ந்து சொன்னான்: ‘இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஒரு சன்மார்க்க நியமம் இருக்கிறது. நம்முடைய நாட்டில் இருப்பவன் இல்லாதவனுக்கு ஒரு வாய் கஞ்சித் தண்ணீர் கொடுப்பானா, சாகப் போகிறான் என்றாலும்? நாம் அனைவரும் சகோதரர்கள், படைத்தவன் முன் நாமெல்லோரும் சமம், இந்த பூமி நம் அனைவருக்கும் பொதுவானது என்றும் ஒரு சன்மார்க்க நியமம் இருக்கிறது. ஆனால், சிலர் இந்த பூமியைக் கைப்பற்றி இதில் விளைபவற்றை மிக அதிக விலைக்கு விற்று சொத்து சேர்த்து பணக்காரர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நூற்றாண்டுகள் கழிந்த பொழுது இதுவும் ஒரு சன்மார்க்க நியமமாகிவிட்டது.

பணமில்லாதவன், பணக்காரன், அரசாங்க அதிகாரி, அரசியல் கட்சித்தலைவன், மதத்தலைவன் என்னும் யாராவது ஒருவருக்கு நேராக சும்மா பார்த்தாலே அது அசன் மார்க்கமாகிவிடும், அவனைத் தண்டிப்பதற்கு சட்டம், போலீஸ், பட்டாளம், சிறை, தூக்குமரம் எல்லாம் உள்ளன. நாட்டிலுள்ள ஏழைகளுக்காக அரசாங்கமோ, அரசியல் கட்சித் தலைவர்களோ, மதத் தலைவர்களோ... யாராவது, ஏதாவது செய்கிறார்களா? குப்பை நியமங்கள்.’ பட்டினி கிடந்து சாகப்போகிற ஒருவன் ஒருநாள் முன்னதாகவே தற்கொலை செய்து கொள்ளக்கூடாது, சன்மார்க்க நியமம்... பயங்கரக் கோபத்துடன் கிழவன் காறித் துப்பினான். கபம், பார், உங்களுடைய சன்மார்க்க நியமங்கள், நாகரீகம், வெறும் கபம்.

பி.சி.39 திடுக்கிட்டார். உடலிலுள்ள சதையெல்லாம் வற்றி வெறும் தோலால் மூடப்பட்டுள்ள உயிர் மட்டுமே உள்ள ஒரு எலும்பு கூட்டிலிருந்து, இப்படிப்பட்ட கருத்துக்கள் வெளிவரும் என்று பி.சி.39 எதிர்பார்க்கவேயில்லை. அவருக்கு வேதனை தோன்றியது. கிழவனை என்ன சொல்லித் தேற்றுவது? வேலை செய்து பிழைக்க சக்தியில்லை, காப்பாற்ற ஆளில்லை - வாழ்வதற்கு ஆசையும் இல்லை. அப்படி ஆசை இருந்தாலும் யார் காப்பாற்றப் போகிறார்கள்?

திரும்பிப் போவதற்கு முன்பு அவர் கிழவனுக்கு ஒரு நொண்டிச் சமாதானம் சொன்னார்: ‘கண்டதையெல்லாம் யோசித்து மனதை வேதனைப்படுத்திக் கொள்ளாதீர்கள்.’

கிழவன் அவரைப் பார்த்தார். கோபமும், அவமரியாதையும் கலந்த ஒரு ‘பயங்கரப் பார்வை’ அதைத் தொடர்ந்து நடைபெற்ற பயங்கரச் சம்பவம் அடுத்த நாள் இரவு ஏறக் குறைய மூன்று மணிக்கு நடந்தது. பி.சி.39 நிலாவெளிச்சத்தில் அதை நன்றாகப் பார்த்தார். தடுக்கவில்லை, அந்த சம்பவத்தைப் பற்றி அரசாங்க அதிகாரிகள், வியாபாரிகள், பெரும் பணக்காரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மதங்களினுடைய அனைத்துத் தலைவர்கள், தொழிலாளர்களினுடைய தலைவர்கள், இலக்கியச் சங்கத்தினுடைய முன்னணியில் இருப்பவர்கள், பத்திரிகையாசிரியர்கள் - இப்படி நாட்டினுடைய நாலாபக்கங்களிலும் உள்ள கோடான கோடிப் பேருடன் பி.சி.39 நாளிதழ்களில் படித்த அந்த மிகச் சாதாரணமான செய்தி:

‘மே 16.... ஊரில் உள்ள மருத்துவ மனையில் ஒரு நோயாளி, நேற்று இரவு, மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு மரக் கொம்பில் தூக்குப் போட்டு இறந்துவிட்டார். கயிறுக்கு பதிலாக அவர் பயன்படுத்தியது, கிழிந்த முறுக்கிக் கட்டிய மருத்துவமனைத் துணி.’


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com