Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
Unnatham Logo

நம் காலத்துக் கேள்வி

குட்டிரேவதி

பெண்மொழி என்கிற ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கப் புள்ளியாக நீங்கள் இருந்து வந்திருக்கிறீர்கள். உங்களைப் போன்ற படைப்பாளிகளின் வருகைக்குப் பிறகு தமிழ்க் கவிதையின் பாரம்பரியம் தன்னை சட்டையுறித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து சமூகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் பரபரப்பாக அலை அடித்து வருகிறது. சக பெண் படைப்பாளிகளே இதை எதிர்க்கும் நிலையும் உருவாகியிருக்கிறது. இது குறித்து உங்களது நிலைப்பாடு என்ன? நீங்கள் செயல்படும் கவிதையின் தளம், பெண்மொழியின் நுட்பம், குறித்துச் சொல்லுங்கள்.

Kutti Revathi இலக்கியத்தின் மற்ற வடிவங்களில் சித்தரிக்கப்படும் கதைத்தளமும், ஊடாட்டமும் படைப்புகளில் இடம்பெறும் கதாபாத்திரத்தின் குணாம்சங்களாக அணுகப்படுகிறது. ஆனால், கவிதையோ படைப்பாளியின் அந்தரங்கமான மொழியையும், சிந்தனைத் தளத்தையும் கோருகிறது. எனவே, இதுவரை பதிவுபெறாத கருப்பொருட்கள் பெண்களின் சொற்களால் துலக்கம் பெறும்போது பெண்மொழி என்றாகிறது. மற்றபடி, கவிதைக்கு பால்பேதமில்லை.

குடும்பம் என்ற நிறுவனத்தின் அமைப்பு, அதன் உயர்ந்து நிற்கும் தூண்களை பெண்தோள் மீது சுமத்துவதாயும், ஆண் அதன் பயன்பாடுகளை நுகர்பவனாயும் விரிந்துள்ளது. சமூக அமைப்பு, பெண்ணிடமிருந்து தொடர்ந்து பாலியல் ஒழுக்கத்தை மட்டும் வற்புறுத்திப் பெறுவதாயும், அவளது சமூக உரிமைகளின் அசிரத்தையையும், மறதியையும் கொண்டிருக்கிறது. காதல் கூட மறுக்கப்படும் ஒழுக்கவாதிகளின் சமூகத்தில், ஆணின் பாலியல் ஒழுக்கத்தையும், அதற்கான அரசியல் தேவைகளையும் கோரமுடியாத இரும்புக் கட்டமைப்புகள் ஏராளம். தன் உடல் அழுகிப்போகும் கனியைப்போலவோ, பாறையில் வீழ்ந்த விதையைப்போலவோ பார்க்கப்படுவதை பெண், மொழிப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதான நெருக்கடியைக் கொண்டிருக்கிறது.

பெண்நிலைவாதம், தமிழகத்தில் பல அடுக்குப் பரிமாணங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது. வேறுபட்ட சமூகப்பின்புலத்திலிருந்து, அதனதன் அரசியல் கட்டமைப்புகளோடு மோதும் தன் உடலின் இயங்கியலை அப்பின்புலங்களிலிருந்து வரும், அத்தனைப் பின்புலங்களிலிருந்து வரும் பெண்களும் படைத்தளிக்க வேண்டியிருக்கிறது. இதுதான், சமூகத்தின் ஒட்டுமொத்த பரிமாணத்திற்கான வரைபடத்தைத் தரஇயலும். ‘பெண்ணியக் கருத்தியல்’ வன்மை பெறுவதற்கான காலமாயும் அது அமையும்.

கவிதை, இதில் நுட்பமான செயலாற்றுகிறது. ஒரு கோலிகுண்டை, மற்றொரு கோலிகுண்டால் சுண்டிவிட, அது சூழ்ந்திருக்கும் அத்தனை குண்டுகளையும் மோதி சிதறடிக்கிறது. இது, ஓர் ஆழ்ந்த கவனம் கோரும் விளையாட்டு. கவிதை, சொற்களைச் சுண்டிவிடுவதன் மூலம் நிகழ்த்துகிறது. வெறும் சொற்கள் மட்டுமேயன்று. பேரனுபவத்தை உணர்த்தும் காட்சிவெளியும் அவசியம். உறைந்துபோன சமூகச்சீரழிவின் வடிவத்தையோ, பேரொளியின் பரவசத்தையோ ஒரு படிமம், தன்னைத் தோலுரித்துக்காட்டுவதன் வழியாகச் செயலாற்றுகிறது. பலசமயங்களில், உணர்வுகளின் பின்னோடி சொல்பிடிக்கும் வித்தையாகிறது.

நிலவெளியைப்போல விரிந்துகிடக்க வேண்டிய பெண்ணின் உடல் ஒரு கழிவறையைப்போல குறுக்கப்பட்டுவிட்டது, வெக்கையூட்டும் சுவர்களால். இத்தடைகளைத் தகர்க்கும் முறைமைகளைக் கண்டறிகிறது, ‘உடலரசியல்’. இது பெண்ணுக்கு, தனது உடலின் இயங்கியல் குறித்த முழுமையான ஞானத்தை அளிக்கிறது; புலன் இன்பங்கள் பற்றிய மனத்தடைகளை விலக்குகிறது; தன் உடல்மீது இறங்கும் ஆணின் அதிகார மையங்களை அறிந்து, முறித்துப் போடுகிறது. இந்த அரசியல் வெறுமனே ஒரு பிரச்சாரமாகவோ, கொள்கையாகவோ, சமன்பாடுகளாகவோ முடிந்துவிடாமல்,பண்பாட்டுக் குழைவையும், காலமாறுபாட்டிற்கேற்ப வளர்சிதை மாற்றமுறும் அறத்தையும், அழகியலையும் கொண்டிருக்க வேண்டும்.

தமிழகச்சூழலில் உடலரசியலுக்கு பெண் படைப்பாளிகளிடமிருந்து இன்னும் பெரிதான பங்களிப்பு ஏதும் வழங்கப்படவில்லை என்பதே என் கருத்து. யுத்தத்தையும், அதன் வன்முறைகளையும் தன் உடலால் மட்டுமே எதிர்கொள்ளும் ஈழப்பெண் கவிஞர்கள், தமது விடுதலைக்கான ஏக்கங்களையும், வாழ்வியலில் நசுக்கப்படும் பெண்ணின் காதலையும், பாடுகளையும் ஏற்கனவே முன்வைக்கத் தொடங்கிவிட்டனர்.
பலசூழ்நிலைகளில் ஆணாதிக்கச் செயல் பாட்டாளர்கள் வடிவமைக்கும் இயக்கக் கருத்தியல், மொண்ணையாகவே முடிந்து போவது கண்கூடு. ஆணாதிக்க சமூகம் கொண்டிருக்கும் செங்கோல், பெண்ணின் கற்பைக்காவல் காப்பதற்கானது. திராவிட அரசியலும், தமிழ்ப்பாதுகாப்பு இயக்கங்களும் உதிர்ந்துபோகும் சுண்ணாம்புக் காரைகள், சமூகத்தின் உள்ளீடுகளையும், அதில் வேர்விட்டிருக்கும் பெண்ணின் இருத்தலையும் கணக்கில் கொள்ளாதவை.

எனது படைப்புகளுக்கான விமர்சனங்களைப் பெரும்பாலும் புறக்கணித்திருக்கிறேன். ஏனெனில் கவிதையை சுயமதிப்பீடுகள் சார்ந்து அணுகுவது ஆரோக்கியமான சிந்தனையின் வழிப்பட்டதன்று. ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட அரசியல் சமன்பாடுகள் மூலம், பெண்ணின் கலைப் படைப்புகளை அணுகினால் அதிர்ச்சியைத்தான் எழுப்பும். பலர் அனுபவ வெளியை மறுத்து, சொற்களின் உத்திரத்தில் தூக்குப் போட்டுத் தொங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். மாறாக, திறந்த இதயத்துடனும், சகிப்புத் தன்மையுடனும் படைப்புகளை அணுகவேண்டும். என்றாலும், இந்த விமர்சனங்களும், எதிர்ப்புகளும் வாழ்வியலினூடே எமது படைப்புகள், அதிர்வுகளை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன என்பதைத்தாம் உணர்த்துகின்றன. பெண்கள், ஒரு புதிய பண்பாட்டு எழுச்சியை இலக்கியத்தின் வழியாக உருவாக்க முடியும் என்றே நம்புகிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com