Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
Unnatham Logo

நம் காலத்துக் கேள்வி
ச.தமிழ்ச்செல்வன்

தமிழ் இலக்கியத்தில் நீங்கள் ஒரு முக்கியமான கதைசொல்லியாக இருக்கிறீர்கள். அதேசமயம் இடதுசாரியச் சிந்தனைகளின்பால் மிகுந்த பற்றுதல் கொண்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இடதுசாரிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது என்கிற இன்றைய இந்திய அரசியல் சூழலில் இந்தியப் பிரதமர் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளார். இந்நிலையில் இந்திய இடதுசாரிகளுக்கு ரஷ்யா, சீனா என்பவை எந்தவிதமாய்ப் பொருள் தருகின்றன?

Manmohan Singh and Bush நீண்ட காலத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ரஷ்யக் கம்யூனிஸ்ட்களும் அங்கீகரிக்கவில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கீகரிக்கவில்லை. சொந்த நிலைபாட்டை எடுத்தே அக்கட்சி இந்தியாவில் பயணம் செய்து வந்தது. இவர்கள் சர்வதேச அனாதைகள் என்றுதான் அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் கேலி செய்யப்பட்டனர். ஆனாலும்கூட கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே அவர்கள் ரஷ்யாவைப் பார், சீனாவைப் பார் என்று சொல்கிறவர்கள் என்று இந்திய முதலாளிய ஊடகங்கள் கட்டமைத்த சித்தரிப்பு மக்களின் பொதுப்புத்தியில் ஆழப்பதிந்துள்ளது. அது எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் ஒட்டிக்கொண்டுள்ளது. ரஷ்யா, சீனா பற்றிய கவலையைவிட இந்தியாவைப் பற்றிய கவலைதான் மார்க்சிஸ்ட்டுகளுக்கு முக்கியம். இந்திய நிலைமைகளைக் கணக்கில் கொண்டுதான் அவர்கள் இயங்குகிறார்கள். சர்வதேசக் கண்ணோட்டம் அவர்களை வழிநடத்துகிறது.

மன்மோகன்சிங் அமெரிக்கா போன அதே நாட்களில் பிரகாஷ்காரத் சீனா போனதால் ஊடகங்கள் வழக்கம்போலச் சில கதைகளைக் கட்டி விட்டன. அவைபற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஊடகங்களின் ஊடாக நாம் மார்க்சிஸ்ட்டுகளைப் புரிந்துகொள்வது தவறாகவே இருக்கும். அவர்களின் மத்திய குழு அறிக்கைகள், மாநாட்டுத் தீர்மானங்கள் வழியாகவே அவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். சில சமயம் அக்கட்சியின் தலைவர்கள் சொன்னதுகூட மத்திய குழுவால் தவறென்று விமர்சிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. ஜோதிபாசு பிரதமராக வேண்டும் என்கிற பிரச்னை உதாரணம்.

தற்சமயம் ஏற்பட்டுள்ள இந்திய அமெரிக்க ஒப்பந்தங்கள் இந்தியாவின் சுதந்திரத்தை அடகு வைப்பவையாகவும் நாட்டின் பாதுகாப்பை அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைப்பதாகவும் உள்ளன. ஆகவே இடதுசாரிகள் அவற்றை எதிர்த்து பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுகிறார்கள். மன்மோகன்சிங் அமெரிக்காவுக்குக் கிளம்புவதற்கு முதல் நாள் அங்கேபோய் நாட்டை அடகு வைக்கும் விதமாக எதுவும் பேசக்கூடாது. ஒப்பந்தம் போடக்கூடாது என்று இடதுசாரிகள் பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர். அவரும் கிளம்பும்போது விமான நிலையப் பேட்டியில் எங்களுக்கு யாரும் தேசபக்தியைப் பற்றி வகுப்பு எடுக்கவேண்டிய அவசியமில்லை என்று காட்டமாகப் பேசிவிட்டு அமெரிக்காவில் போய் மண்டிபோட்டார். அது அவர்களின் வர்க்க குணாம்சம். வர்க்க நிலைபாடு. பாஜகவும் இதையேதான் செய்தது. எந்த முதலாளித்துவக் கட்சியும் இதைத்தான் செய்யும். அமெரிக்காவுக்கு கீழைப் பிராந்தியத்தில் இந்தியாவைத் தன் ராணுவக் கூட்டாளியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது திட்டம். இந்திய முதலாளிகளுக்கு தாங்கள் ஆசியப் பிராந்தியத்தின் சண்டியராகிவிட வேண்டும் என்று ஆசை. 100 கோடி மக்களைக் கொண்ட பரந்த இந்திய மார்க்கெட் அமெரிக்க நாக்கில் எச்சிலை ஒழுக விடுகிறது. மௌனமாக திமிறி வளரும் சீனா பற்றிய நடுக்கம் இருவருக்குமே பொது. இப்படியான பின்னணியில்தான் ஒப்பந்தங்கள் வந்துள்ளன.

இடதுசாரிகளின் ஆதரவோடு இதைச் செய்கிறார்களே என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வி. ஒரு முக்கியமான உண்மையை நாம் மறந்துவிடுகிறோம். 540 பேர் கொண்ட மக்களவையில் இடதுசாரிகள் 60 பேர்தான். பாக்கி 480 பேர் வலது அரசியலுக்காக நிற்பவர்கள். அமெரிக்க ஒப்பந்தங்களுக்கோ தனியார் மயத்துக்கோ அந்நிய நேரடி முதலீட்டுக்கோ அந்த 480 பேரும் எதிரானவர்கள் அல்ல. 60 பேர் எதிர்த்தாலும் பாஜக ஆதரவுடன் முதலாளிகளுக்குத் தேவையான அரசின் திட்டங்கள் நிறைவேறும். இன்சூரன்ஸ் பில், எஃப்.டி.ஐ உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் பாஜகவும் காங்கிரசும் இதர கட்சிகளும் கூட்டாக நின்றதை நாம் கண்டோம். 60 பேர் முடிந்தவரை போராடுவார்கள். மக்களிடம் எடுத்துச் செல்வார்கள். அதுதான் நடக்கிறது.

தினமணி உள்ளிட்ட முதலாளிய ஊடகங்கள் சித்தரிப்பதுபோல பெல் பங்குகளை விற்பதை இடதுசாரிகள் எதிர்ப்பது இந்திய அமெரிக்க ஒப்பந்தங்களை எதிர்ப்பது என்பது எதிர்வரும் கேரள மேற்குவங்க தேர்தலை மனதில் வைத்து அல்ல. இடதுகளின் வரலாற்றை மனச்சாட்சிக்கு துரோகம் செய்யாமல் வாசிக்கும் எவரும் இப்படிப் பேசமாட்டார். சரி செய்யவே முடியாத அளவுக்கு நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை கைகழுவுவதில் ஆட்சேபம் ஏதுமில்லை. மேற்குவங்கத்தில் அதுதான் நடக்கிறது. எல்லாவற்றையும் சமப்படுத்திப் பேசி இடதுசாரிகள் ஒன்றும் வித்தியாசப்பட்டவர்கள் அல்ல என்று சித்திரிக்கவேண்டிய அவசியம் முதலாளிய ஊடகங்களுக்கு உண்டு. தலைப்புச் செய்திகளாக இடதுசாரிகளின் முட்டுக்கட்டை தினசரி வருவதும் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி மக்கள் பேசத் துவங்கியிருப்பதும் முதலாளிய ஊடகங்களுக்குப் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா இன்று சோசலிச நாடாக இல்லை. அதன் வீழ்ச்சியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதால் சீனா மிகுந்த எச்சரிக்கையுடன் எட்டுகளை எடுத்து வைக்கிறது. இந்திய இடதுசாரிகளும் கவனமுடன் தான் அடி எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது.

வீடு தீப்பற்றி எரியும்போது கிடைக்கிற சாக்கடை நீரையும் பயன்படுத்தி நாம் அணைப்பது போலத்தான் கொலைவெறியை தன் அஜெண்டாவில் வைத்துள்ள பாசிஸ்ட் பாஜகவை தவிர்க்க இன்று காங்கிரஸ், திமுக, அதிமுக என சகலத்தையும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. காங்கிரசும் எதிர்க்கப்பட வேண்டிய சக்தி என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. இடதுசாரிகளின் சொந்தபலம் வளரும்வரை பல்வேறு விதமான தந்திரோபாயங்களைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். நாட்டின் நலன் கருதி சொந்தபலம் என்பது தேர்தல் பலம் மட்டும் அல்ல. வலுவான மக்கள் இயக்கமாக மாறும் பலம். அது வேகமாக வளராமல் இருப்பதற்கான காரணங்கள் பற்றிப் பேசுவது வேறு கேள்வி - வேறு விவாதமாகிவிடும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com