Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
Unnatham Logo

தொன்மமும் அரங்கமும்
சண்முகராஜா

சமகால மனிதன் தனித்தும் சமூகமாகவும் எதிர்கொள்ளும் வாழ்வியற்சூழல்கள் சிக்கலானவை. இந்தச் சிக்கல்களை மேடையில் பரிசீலிப்பதற்கு திறனற்றவையாகவும் போதாமையோடும் விளங்குகின்றன பெரும்பாலான நவீன நாடகப்பிரதிகள். நிரந்தர உண்மையை வலியுறுத்துதலையும் ஒற்றை முழுமையை நோக்கி அர்த்தப்படுத்துதலையும் தலையாயப் பணியாகக் கொண்ட இந்நவீனப் பிரதிகளை பின் நவீனத்துவ அரங்கம் முற்றிலும் மறுதலிக்கிறது. பின் நவீனத்துவ அரங்கு நிகழ்த்துப் பிரதியை முதன்மைப் படுத்துகிறது. உலகம் முழுவதிலுமுள்ள பின் நவீனத்துவ நாடக இயக்குநர்கள் எழுத்துப் பிரதியை அடிப்படை அமைப்பாகக் கொண்டுள்ளனர். அப்பிரதியின் மேல் புதிதளித்தல் முறையில் தங்கள் படைப்பாற்றல் தனித்துவத்திற்கேற்ப நிகழ்த்துப் பிரதியை பன்முக கலாச்சாரப் பிரதியாக உருவாக்குகிறார்கள். இவர்கள் நடப்புலகின் கருத்தமைவுகளை விசாரணைக்குட்படுத்தப் புராதன சமூகங்களுக்குள் சென்று தொன்மங்களைத் தெரிவு செய்கின்றனர்.

Muller ஜெர்மானிய நாடக இயக்குநரான ஹெய்னர் முல்லர் தொன்மங்களின் தீவிரமான பண்புகளைப் புரிந்துகொண்டு அதை நாடக அரங்கில் திறம்பட பயன்படுத்தியோரில் குறிப்பிடத் தகுந்தவர். ஜெர்மானிய நாடக வரலாற்றில் பெர்டோல்ட் ப்ரெக்ட்டுக்குப் பின் மிக முக்கியமானவராக அறியப்படும் இவர் ஒரு தேர்ந்த பிரதியாளர். சிறந்த இயக்குநருங்கூட. மேலும் இவர் பெர்லினர் என்செம்பளின் கலை இயக்குநராகவும் பணியாற்றியவர். பிரதியை வடிவமைப்பது கையாளுவது பற்றிப் பேசும் பொழுது இளம் நெறியாளர்களுக்கு அவர் கூறுவதாவது “குறைவாகப் பார் பெரிதாக விவரி” என்பதே. இதுவே ஹெய்னர் முல்லரின் வெளிப்பாட்டு முறைத் தத்துவமாகும்.

ஹேம்லட் மெஷின் மீடியா மெட்டிரியல் ஆகியன தொன்மங்களை அடிப்படையாகக் கொண்ட பின் நவீனத்துவ நாடகப் பிரதிகளாகும். இவை ஹெய்னர் முல்லரின் படைப்பு ஆளுமைக்கும் புதுவகையான அரங்க மொழியை உருவாக்கியதற்கும் சான்றாக விளங்குகின்றன. ஹெய்னர் முல்லரின் இணை இயக்குநராகப் பல ஆண்டுகள் அவருடன் பணிபுரிந்தவர் ஸ்டீபன் சுஸ்கே. ஜெர்மனியிலிருந்து மீடியா மெட்டிரியல் நாடகத்தை எங்கள் வகுப்பிற்காக இயக்குவதற்கு தேசிய நாடகப்பள்ளிக்கு வந்திருந்தார். செப்டம்பர் 11 அமெரிக்க வணிகவளாக குண்டு வெடிப்புக்குப்பின் அமெரிக்கப்படைகள் பின்லேடனை பிடிப்பது அல்கொய்தா இயக்குநனரை அழித்தொழிப்பதென ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அங்குள்ள அப்பாவி மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த சமயத்தில் மீடியா மெட்டிரியல் நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டது மிக அவசியமானதாக இருந்தது. மீடியா மெட்டிரியல், கிரேக்க நாடகமான மீடியாவையும் அதன் தொன்மத்தையும் பற்றிப் பேசுகிறது. வாட்டர் ப்ரண்ட் வேஸ்ட்லேண்ட் மீடியா மெட்டிரியல் லேண்ட்ஸ் கேப் வித் ஆர்கெனட்ஸ் ஆகிய மூன்று பகுதிகளாக விரியும் மீடியா மெட்டிரியல் இயந்திரமான நகரம், போர், சகோதரக்கொலைகள், புலப்பெயர்வு முதலியவற்றை சகிக்க முடியாத அவலத்தொனியில் சாட்சியப் படுத்துகிறது.

“அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் இரண்டையும் விட காலம் நீண்டு செல்வது” எனும் ஹெய்னர் முல்லரின் கதா பாத்திரங்களான மீடியாவும் ஜேசனும் அவர்களோடு உலவும் பல்வேறுபட்ட படிமங்களும் நம் வாழ்வினை, நடப்பைச் சுற்றிச் சுழலும் நிழல் போல் பின் தொடர்கின்றன.

மூன்று மாத காலம் எங்களுடன் தங்கி நாடகத் தயாரிப்பில் ஈடுபட்ட ஸ்டீபன் சுஸ்க்கே எங்களுடனான சுற்றுப் பயணங்களிலும், வகுப்பிலும், ஒத்திகை காலத்திலும் உலக வரலாற்றில் குறிப்பாக இயந்திரயுகத்திற்கு பிந்தைய உலகில் நாடுகளிடையே ஏற்பட்ட யுத்தங்கள், ஆக்கிரமிப்புகள், அழிவுகள் ஆகியவற்றின் வரலாறுகளை கவனப்படுத்துவதிலேயே அக்கறை கொண்டிருந்தார். சுய நிர்ணய உரிமை மற்றும் தேசியம் குறித்த சொல்லாடல்கள் ஓருலகு, ஒற்றை அதிகாரமய சூழலில் மறுக்கப்படும் விதத்தை அவர் எடுத்துரைத்தார். பொதுப்புத்தியின் அரசியலில் விடுதலை பற்றிய உணர்வெழுச்சி ‘பயங்கரவாதம்’ என சித்தரிக்கப்படுவதையும் விவரித்தார். அமெரிக்க அரசு ஆப்பானிஸ்தானில் நடத்திய இராணுவ வன்முறையை செய்திகளாகக் கொண்ட அந்த மாத நாளிதழ்களை மீடியா மெட்டிரியல்களுக்கு நிகரான இணைப் பிரதிகளாக்கினார். ரவிசங்கர் உமாசங்கர் மிஸ்ரா ஆகியோரின் மாணவரும், நாடக இசை பற்றிய தேர்ந்த ஞானம் உள்ளவருமான பாஸ்கர் சந்தவார்க்கர் பிரதியின் வார்த்தை, ஒலி, இசையை ஒழுங்குபடுத்தினார்.

நாளிதழ்களால் நிர்மாணிக்கப்பட்ட அரங்கில் பதினாறு நடிகர்கள் உடல் அசைவாலும், ஓசையாலும் எழுப்பிய மேடைப் படிமங்கள் அழுத்தமான மனவெழுச்சியை பார்வையாளர் மத்தியில் ஏற்படுத்தியது. பார்வையாளர்களின் மனவெளிச்சிக்கு கிரேக்க மீடியா தொன்மம் மீடியாவோடு ஒத்த சாயலையுடைய புராதன தொன்மங்கள் எல்லா கலாச்சாரத்திலும் அதற்கான வட்டாரத் தன்மைகளோடு புலங்கி வருகின்றன. ஆகவே நமது பிரக்ஞையில் இருப்பதை தீவிரப்படுத்திப் பார்ப்பது நமக்கு இயல்பான செயலாகிறது. மேலும் தொன்மத்தை சமகால நிகழ்வோடு தொடர்புபடுத்திய விதம் மீடியாவை கிரேக்கத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கும், ஈழத்திற்கும் இன்னும்பிற ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கும் நீட்சியடையச் செய்கிறது.

பார்வையாளர்களையும் பங்கேற்றவர்களையும் சுதந்திரமாக பிரதியோடு ஈடுபட வழிவகுத்து புதுவிதமான அனுபவத்தை, பார்வையை இந்நாடகம் உருவாக்கியதற்கு முக்கியக் காரணம் பிரதி முழுவதும் தொன்மமும் சமகால வரலாற்றுப் பதிவுகளும் ஒருசேர விரவியிருந்ததே. தொன்மங்களை அரங்கத்திற்காக மீட்டெடுப்பது பின் நவீனத்துவ அரங்கில் பெரிதும் சாத்தியப்படும் காரியமாகும். அரங்கை மக்களுக்கானதாக்க இது அவசியமான பணியாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com