Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
Unnatham Logo

அறுபத்திநாலு பொட்டுச்சாமி

கௌதம சித்தார்த்தன்

மானம் மப்பாய்க் கிடந்தது.மழைக்காலம் ஆரம்பித்துவிட்டதற்கு அறிகுறியாக மத்தியான வெயில் மாறியடித்தது. அதிகாலையிலேயே ஊரை விட்டுக் கிளம்பியிருந்தும் கூட இன்னும் கோயிலுக்குப் போனபாடில்லை. நல்ல தூரம் போல. ஊர் எல்லையிலேயே சடைசடையாய் விரிந்திருந்த மலங்கிளுவை மரத்தினடியில் பொட்டுச்சாமி கோயில் தெரிந்தது. ஊருக்குள் போய் பொட்டு வாங்கிக் கொண்டு திரும்பி இங்கே வரவேண்டும்.

சைக்கிளை ஓரமாக நிறுத்தி ஒரு பையனிடம் விசாரித்துவிட்டு சைக்கிளை மிதித்தான். செம்மண் காரை போட்ட குடிசுகள் அந்த ஊருக்கு ஒரு புதிய பொலிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.பிரதான பாதையை விட்டு இறங்கி வளைந்து குறுகிச் சென்ற நீண்ட சந்தில் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தான்.

Lovers இந்த வருசம் நெல் அறுவடையிலிருந்தே அம்மா ஓயாமல் நச்சரித்துக் கொண்டிருந்தாள். “பொட்டுச்சாமி கோயிலுக்குப் போயிட்டு வா...” அவனது ஊரில் ஒரு வினோதமான அய்தீகம் எள்ளுச் செடியின் எண்ணெய்ப் பிசுக்குபோல ஒட்டிக் கிடந்தது.

பொட்டுச்சாமி எந்த ஒரு குடும்பத்துக்கும் குலதெய்வமாக இல்லாவிட்டாலும் கூட, குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கு வாலிபப் பருவம் கூடிவிட்டால், ஒருநடை பொட்டுச்சாமி கோயிலுக்குப் போய் கும்பிட்டு வரவேண்டும் என்பது சம்பிரதாயம். இந்தச் சடங்கின் புதிர் முடிச்சு அவனுக்குள் ஒரு விடுகதையாய் வெட்டி வெட்டி ஓடித் துள்ளியது. ஆர்வம் கலந்த உற்சாகத்துடன் அந்தப் புதிரை விடுவிக்கச் சொல்லி அம்மாவிடம் கேட்டால், “எனக்கு என்னடா தெரியும்...? அது காலங்காலமா இருக்கற வளமொறை...” என்று வெள்ளைச் சோளமாய் சிரித்தாள்.

அவனுக்குள் அந்த விடுகதையின் தாகம் தீராமல், தனது ஊர்ப் பெருசுகளிடம் பேசிப் பார்த்தான். “கோயிலுக்குப் போகும்போது நம்ம ஊரிலிருந்து பொட்டு வாங்கிட்டு போகக்கூடாது. அந்தப் பொட்டு, சாமிக்கு ஒட்டாது. அந்த ஊரில் பொட்டுச்சாமிக்கு பொட்டு அரைப்பதற்கென்றே பொட்டுக்காரவீடு இருக்குது. அங்கேதான் பொட்டு வாங்கி வைக்கணும். அதுதான் ஒட்டும்...”என்று மேலும் மேலும் முடிச்சுகள்தான் போட்டார்களே தவிர, அவிழ்க்கத் தெரியவில்லை அவர்களுக்கு. அவனது மனசெங்கும் அப்புதிர் பற்றிக் கொள்ள, ஒளிவிளையாட்டு விளையாடும் பையனின் ஆர்வத்தில் அதிகாலையிலேயே சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

அந்த ஊர் வீடுகளிலிருந்து பொட்டுக்காரர் வீடு தனியாய் பளிச்சென்று தெரிந்தது. கைஓடு வேய்ந்து சிமெண்ட் காரை பூசப்பட்ட தொட்டிக்கட்டுவீடு. அதன் ஆசாரத்தில் உட்கார்ந்து வெத்திலை குதப்பிக் கொண்டிருந்த பாட்டியின் காதோலைகள் அவனை வரவேற்றன.

“பாட்டி வீட்ல ஆருமில்லையா..? பொட்டுச்சாமி கோயிலுக்குப் போவோணும்... பொட்டு வேணும்...” கிழவிக்கு சுருக்கம் ஏறியிருந்தாலும் தாட்டியமாக இருந்தாள். கண்களின் ஒளி இன்னும் துலக்கமாயிருந்ததுபோல. சடக்கென்று எழுந்து வீட்டுக்குள் போனாள். ஆசாரமெங்கும் அரைத்த பொட்டின் மணம் கும்மென்று அடித்தது. பொட்டு செலவுகள் அங்கங்கு சிதறியிருந்தன. சந்தனக் கட்டையில் உரசிய சந்தனக் குழம்பு திரைந்து போயிருக்க, அம்மிக்குழவியில் அரைத்த பொட்டு மாவு அப்பியிருந்தது. பொட்டுகளை நான்கைந்து பொட்டலங்களாகக் கட்டிவந்து கொடுத்தாள் கிழவி.

‘பொட்டுச்சாமியைப் பற்றி இந்தக் கிழவியிடம் கேட்டால் என்ன...?’ அவனது உடலெங்கும் ஒரு நீரோட்டம் பீச்சியடித்தது. அதைப் புரிந்து கொண்டவள் போல அவனைப் பார்த்து அர்த்த பூர்வமாகப் பொக்கை வாய்ச் சிரிப்பைக் காட்டினாள்.

பொட்டுச்சாமியின் வினோதமான வழக்காறுகளின் விடுகதையை அவளால்தான் விடுவிக்க முடியும்... என்று பேச்செடுத்தான். அவளது வாஸ்தவமான தலையசைப்பை ஏற்றுக் கொண்டு உட்கார்ந்தான். சுருக்கம் வாங்கிய அவளது கண்கள் அவனைக் கூர் தீட்டிப் பார்க்க, கண்களின் ஒளி உள் வாங்கிப் போய்க் கொண்டேயிருந்தது. மூலையில் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்காலத்து மொடாக்களின் மேல் இருந்த தூசுதும்புகள் மெல்ல மெல்லமாய் மறைந்து பளிச்சென்று புதுசாக மாறிக் கொண்டேயிருந்தன.

மழை கொஞ்சம் கொஞ்சமாய் சுதியேறித் தடித்துக் கொண்டிருந்தது. கருத்த இருட்டைப் பிளந்து கொண்டு காத்தில்லாமல் ஒரே சீராக நின்று பெய்யும் மழையில் பட்டியிலிருந்த செம்பிலி ஆடுகள் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தன. பட்டியின் நடுவில் நான்கு கால்களை ஊன்றி நின்றிருந்த நெட்டைக்கால் குச்சுக்குக் கீழிருந்த இடத்தில் ஒடுங்கியிருந்தது பட்டிநாய். பளீரென அடிக்கும் மின்னல் கீத்துகளில் கருத்த மழையின் பேயாட்டத்தையும், தனது தலை மேலேயே வந்துவந்து விழுகும் இடியின் உறுமலையும் குச்சுக் கட்டிலில் படுத்தபடி வெறுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான் ராசய்யா.

சனங்களுக்கு மழையின் போக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. சொல்லி வைத்தாற்போல ராவானதும் பேயஆரம்பித்து, விடிகாலையில் வெட்டாப்பு விட்டுவிடும். சனங்களின் அன்றாட வேலைப் பிழைப்புக்கு இடைஞ்சலாக இல்லாமல் உழவோட்டம் உற்சாகமாக நடந்தது. பயிர் பச்சை வளர்ந்து செழித்தது. வேய்க்கானமாக சாத்திக் கொண்டிருக்கும் மழை அவனுக்கு மட்டும் பிடிக்காமல் போனது.

இந்த வளர்பிறையிலிருந்தே ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த அடைமழை இப்பொழுது ஓய்கிற மாதிரி தெரியவில்லை. அவன் படுத்திருந்த குச்சிலும் கூதலின் ஓதம் அடிக்கத் தொடங்கியிருந்தது. ஈரமேறியிருந்த குச்சு ஓலைகளில் ஊமைக்குளிர் கசிய, செம்பிலி ஆடுகளின் வீச்சம் கப்பென்று அடித்தது. மூக்கைச் சுண்டியவனாய் ஒருக்களித்துப் படுத்தான். நிதானமாகப் பெய்த மழையை சுழட்டி வீசியது சாரக்காத்து. அதனூடே அலையடித்து வந்தது செவிந்திப்பூவின் வாசம். உடம்பெங்கும் எகிறிப் பாய்ந்து அவனுக்குள் கிறக்கத்தை ஏற்படுத்தியது.அந்த மணத்தோடு மணமாக மாற ஆரம்பித்தான் அவன். கண்கள் சொருகிப்போக தேகமெங்கும் வெது வெதுப்புக் கூட்ட, கால்ப் பெருவிரலில் ஏறியது தீ.

“எத்தனை நாளாச்சி செவிந்தியைப் பாத்து...? இன்னைக்கும் போய்ப்பாக்க முடியாதா..?” உச்சந்தலைவரை விலுவிலுவென்று தீக்கங்கு பாய்ந்தோடியது. குச்சு ஆலை இடுக்கில் சொருகி வைத்திருந்த தலைத்துண்டை எடுத்து மோந்து பார்த்தான். இன்னும் மிச்சமிருந்த செவிந்தியின் வாசம் புரண்டு புரண்டோடியது.

‘இப்ப என்ன செஞ்சிட்டிருப்பா..? என்னைப் போலவே அவளும் நெனச்சிட்டு கவுந்தடிச்சிப் படுத்திருப்பாளோ..? சனியம் புடிச்ச இந்தமழைய திட்டிட்டிருப்பா...’அவனுக்கு இறுப்புக் கொள்ளவில்லை.

பட்டிநாய் காராட்டில் முணகியது. பாவம் அதன் இணையைப் பார்த்து எத்தனை நாளாச்சோ... படுக்கையை விட்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தான். மானத்தைப் பொத்துக் கொண்டு கொட்டும் மழையின் சத்தம் குச்சுக்கூரையில் எதிரொலித்தது. பேயும் மழையில் கரைந்து உருகி வழிந்து மழையோடு மழையாக அடித்துப் போய் செவிந்தியிடம் சேர்த்து விடக்கூடாதா என்று ஒரு பொழுது வேண்டினான்.

அதேபோக்கில் நோட்டமிட்டவன், இனிமேலும் பொறுக்க முடியாதென சடக்கென எழுந்து உட்கார்ந்தான். கட்டிலின் கால்மாட்டில் விரித்திருந்த கோணிப்பையை எடுத்து கொங்காடை முடிந்து தலைமீது போட்டுக் கொண்டு குச்சை விட்டுக் கீழிறங்கினான். சுழட்டிக் கொண்டிருந்த சாரல் அவன் கால்களை சடுதியில் நனைத்தது. குச்சுக்கு அடியில் படுத்திருந்த நாய் எழுந்து முனகியவாறு வாலைச் சுழட்டியது. குனிந்து குச்சை விட்டு வெளியே வந்து பட்டிப் படலை விலக்கி வெளியே காலடி வைத்தான்.

அதற்குள் சடைசடையாய் அடித்த மழை அவனைத் துவட்டி எடுத்தது. அவனது கால்கள் சேற்றுச் சகதியில் மாட்டிக் கொண்டு தடுமாறின. கொங்காடை முழுக்க நீரோட்டம் பாய்ந்து உடம்பெங்கும் சாமக் குளுரின் குடைச்சல் இழுத்தது. சாட்டவார்க்குச்சி போல மழைநீரின் வீச்சு சுரீல் சுரீலென்று வலி உயிரே போவதுபோல சொடுக்கியது. கால்கள் மேற்கொண்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் விறைத்துப் போய் உடல் கிலுகிலுவென்றாட, பின்வாங்கி குச்சுக்கே வந்து புகுந்தான்.

சமுக்காளத்தை எடுத்து கால்வழியப் போர்த்திக் கொண்டும் நடுக்கம் தீரவில்லை. உடம்பெங்கும் அனலாய்க் கொதித்தது. கால்களில் அப்பியிருந்த சகதியை வழித்தெறிந்தான். எலிப்பொறிக்குள் மாட்டிக் கொண்ட எலியின் கண்களாகிக் கொண்டிருந்தன அவனுடையவை. ஆடுகள் கழிந்த புழுக்கைகளின் புதுமணம் வீசியதில் இரண்டாம் சாமம் நெருங்கிக் கொண்டிருப்பதை அறிந்தான். மெல்ல எழுந்து தலைமாட்டில் வைத்திருந்த சிக்கி முக்கிக் கற்களை எடுத்துத் தட்டினான். ஈரத்தில் நவுத்துப் போயிருந்தன கற்கள். அவைகளைக் கைகளால் தேய்த்துச் சூடேற்றித் தட்டியதும் தீப்பொறி பறந்தது. சாதுரியமாக விளக்குப் பொருத்தினான்.

வேட்டி முந்தியில் முடிஞ்சிருந்த கஞ்சா இலைகளை எடுத்து உள்ளங்கையில் வைத்து நிமிண்டினான். உருண்டையாய்த் திரட்டி சிலும்பியில் அடைத்து தீப்பொருத்தி இழுத்தான். புகை மண்டையெங்கும் சுருண்டு எண்ண ஓட்டங்களைச் சுழட்டியது. தேகமெங்கும் ஊதிஉப்பியது ஒரு வேகம்.

இன்றைக்கு எப்படியும் அவளைப் பார்த்து விட வேண்டும் என்ற வேட்கை பற்களைக் கிட்டித்தது. இந்தப் பேய்மழைக்குக் குடை ஒன்று கிடைத்து விட்டால் போதுமா..? கொங்காடை யெல்லாம் எம்மாத்திரம்..? வாழைமட்டைக் குடை நார்நாராய்க் கிழிந்து போகும். ஏத்தல் இறைக்கிற பறி ஒன்று கிடைத்தால் கூடப் போதுமே...தூக்கித் தலைமேல் கவிழ்த்துக் கொண்டு அப்படியே போய்விடலாம். நல்ல பாரமாக இருக்குமே... செவிந்தியைப் பார்க்க இந்த உலகத்தையே தூக்கிவரச் சொன்னால்கூட வந்துடுவேன்...

ஆமா...இந்தக் குச்சையே தூக்கீட்டுப் போனா என்ன..? பளீரென அவனது எண்ணத்தில் ஒரு மின்னல் இழுத்தது. அந்தப் பொழுதே செவிந்தியோடு படுத்தெழுந்த ஒரு திருப்தி அவனுக்குள் நிரம்பி வழிந்தது. அந்த நெட்டைக்கால் குச்சை முழுசாக நோட்டம் விட்டான். உடலெங்கும் கவ்விக் கிடந்த கூதல் விலகிவிட்டதுபோல ஒரு வெதுவெதுப்பு விறுவிறென ஏறியடித்தது. ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவனாய் சிலும்பியைக் கடைசி இழுப்பு இழுத்துவிட்டு கட்டிலை விட்டுக் கீழிறங்கினான். நெட்டைக்கால் குச்சின் கால்களைத் தட்டிப் பார்த்தவன், புங்க மரமாக இருக்குமென்று தீர்மானத்துடன் அசைத்துப் பார்த்தான். இந்த அடைமழையினால் கால்கள் நன்றாக நிலத்தில் ஊறி இறங்கியிருந்தன. மீண்டும் பலத்தை ஒன்று திரட்டி அசைக்க அசைக்க, குச்சு அனாயசமாக அசைவது போல் தெரிந்தது. கண்கள் சிவந்துபோக, மண்டை கும்மென்று வலிக்க, குச்சு நகர்ந்து கொடுத்தது.

பூரித்தெழும்பும் கொண்டாட்டத்துடன்,குச்சுடன் இணைந்திருக்கும் கயிற்றுக் கட்டிலின் நடுவில் தலையை முட்டி, தனது பலம் அனைத்தையும் நெஞ்சுக் கூட்டில் கூட்டி அந்த நெட்டைக்கால் குச்சை நெட்டாப்பாய் தூக்க ஆரம்பித்தான்.

முன்பு ஒரு முறை, இளவட்டக்கல் தூக்கும் விழாவில், தான் அனாயசமாய் அந்தக் கல்லைத் தூக்கி வீசியதை அவனது புஜங்கள் பெருமிதத்துடன் சொல்லின. அதுபோல மூன்று கற்களின் பாரம் கொண்டதாகத்தான் இருக்கும். ம். தூக்கு... மூச்சுக் கட்டித் தூக்கு...

ஒரே மூச்சில் அந்த நெட்டைக்கால் குச்சு அவனது தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டது. முதலில் சற்றே தடுமாறியபடி நடந்தாலும் சுதாரித்துக் கொண்டவனாய் உறுதி கொண்ட நடையில் நடை போட்டன கால்கள். சுழட்டியடிக்கும் சூறை மழையில், குச்சு அவனைக் குடையாய் கப்பிக் கொள்ள, கம்பீரமாய் நடந்தான். உலகத்தையே தாங்கி நடப்பதுபோல பாரம் கழுத்தாம் பட்டையை முறித்தாலும், தாபமூட்டும் நினைவுகள் அதை இலவம்பஞ்சாய் ஏந்திக் கொண்டு நடந்தன. சேத்து மண்ணில் அழுந்திய கால்களை எடுத்து நடக்கும் போதெல்லாம் கெண்டை மடிப்புகளில் வலி எடுத்தது. இருளையும் மழையையும் துளைத்துக் கொண்டு அந்த வினோதமான குடை வீறு கொண்டு விரைந்தது.

அவனது பார்வையை குச்சின் கூறை மறைத்துக் கொண்டதால், தடத்தின் போக்குத் தெரியாது குருட்டாம் போக்கிலேயே போனாலும், மனப்போக்கில் புலப்பட்டது செவிந்தியின் போக்கு.

‘இன்னைக்குப் பாத்து செவிந்தியின் புருசங்காரன் பட்டிக்குக் காவல் போகாமல் வீட்டிலேயே இருந்து விட்டால்..?’ தடாலென அவனது கால்களின் விறுவிறுப்பு தடுமாற ஆரம்பித்தது. தலை சுத்திக் குச்சைக் கீழே போட்டுவிடும் நிலையில் நின்றவன், சுதாரித்துக் கொண்டு நடந்தான்.

ஒரு வழியாக செவிந்தியின் வீட்டு வாசலை அடைந்தபோது மேலெங்கும் விண்ணித் தெறித்த வலி காணாமல் போயிருந்தது. ஒரு மயிலிறகின் லாவகத்துடன் வாசலில் குச்சை இறக்கி வைத்தபோது ஏற்பட்ட கொண்டாட்டத்தின் களிப்பு ஒவ்வொரு மயிர்க்காலிலும் நெட்டுக்குத்தாய் நின்றது. குச்சிலிருந்து குனிந்து வெளியே வந்து செவிந்தியின் வீட்டுக் கூறைக்குள் ஓடுவதற்குள்ளாக மழை அவனை நசுக்கி எடுத்து விட்டது. தலைத் துண்டை எடுத்து மேலைத் துவட்டிக் கொண்டு, கதவைக் கள்ளத் தட்டு தட்டினான். திடுமென அவனுக்குள் இனம் புரியாத பயமும், சந்தோசமும் கூடி நடுக்கமெடுத்தது.

கதவின் தாழ்ப்பாள் தேயும் ஓசை அவன் தேகமெங்கும் உராய்ந்தது. கண்களை மலங்க மலங்க முழித்துக் கொண்டு பார்த்தான். செவிந்திப்பூவின் வாசம் தூக்கியடித்தது அவனை. தலை கிறுகிறென்று சுத்த ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவள் கைகளைப் பற்றினான்.

“அய்யோ, எப்பிடி வந்தீங்க..? இதென்ன கோலம்..?” என்று வியப்புடன் அவன் கைகளைத் தட்டி விட்டாள். அந்தப் பொழுது தகீரென்று ஒரு மின்னல் வெட்டி இழுத்ததில் வாசலில் இருந்த நெட்டைக்கால் குச்சு கண்சிமிட்டி மினுங்கியது.

மெல்லமாய் அந்த விபரீதப் பயணத்தைப் புரிந்து கொண்டவளின் முகம் விதிர்விதிர்த்துப் போனது. “அய்யோ...இப்படியுமா..?” என்று திறந்த வாய் மூடாமல் வெட்கத்துடன் அவனை ஏறிட்டுப் பார்க்க, வெற்றிப் பெருமிதத்துடன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மீசையை முறுக்கினான். இரண்டாம் சாமத்தின் ஆவேசமான குளிர்க்காத்து அவர்களுக்குள் சுழட்டியடிக்க, வீட்டுக்குள் நுழைந்தாள் அவள். தாழ்ப்பாள் வைத்தான் அவன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனைத் தட்டி எழுப்பினாள் செவிந்தி. “கோழி கூப்புட்டிருச்சி... இனி வெடிஞ்சி போயிரும்...எந்திருச்சி சீக்கிரமாப் போங்க...” என்று பதட்டத்துடன் அவசரப் படுத்தினாள். கைகால்களெல்லாம் மூட்டுக்கு மூட்டுவலி எடுத்தது அவனுக்கு. ஆயாசமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு எட்டி அவள் கைகளைப் பற்றினான்.

“அய்யய்யோ...வெடியப் போவுது...சீக்கிரபாப் போங்க...மழையும் வேற வுட்டிருச்சி...மாம வந்திருவாரு...”என்று கோபத்தில் கடிந்து கொண்டே கைகளை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள்.

தன் வேட்டியிலிருந்த செவிந்தி வாசத்தை ஒருமுறை மோந்து பார்த்துக் கொண்டு கட்டிலை விட்டு எழுந்தான். தாழ்ப்பாளைத் திறந்து அவனை வெளியே தள்ளி விட்டதில், மெல்ல விடிந்து கொண்டிருந்த மானம் துலாம்பரமாய் இருந்தது. அவன் கண்களில் அறைந்தது நடுவாசலில் உட்கார்ந்திருந்த நெட்டைக்கால் குச்சு. அவனுக்குள் நிரம்பியிருந்த சந்தோசம் சுருங்கிப் போக திடீரென ஒரு பதட்டம் ஊடுருவியது. பதை பதைப்புடன் உருமாலை மடித்து தலையில் கட்டிக் கொண்டு, குச்சுக்குள் நுழைந்து மூச்சுக் கட்டித் தூக்கினான். அடப்பாவி மக்கா...தூக்க முடியலே சாமியோவ்...உடல் பலமனைத்தையும் ஒன்று கூட்டி முக்கிப் பார்த்தான்.

நெஞ்சுக்கூட்டில் கெஸ்.. கெஸ்சென்று இளைப்புதான் வாங்கியது. ‘இட்டேரிக்காட்டு முனியப்பா...எம்மானத்தைக் காப்பாத்துறா..’ தனது குலதெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டு முட்டிப் பார்த்தான். நெட்டைக்கால் போட்டு சாவகாசமாய் உட்கார்ந்திருந்தது குச்சு.

“அய்யய்யோ...தலைக்குத் தீம்பைக் கொண்டாந்து போட்டீங்களே...இனி என்ன பண்றது... எப்பிடியாச்சும் தூக்கீட்டுப் போயிருங்க...” என்று செவிந்தி பெனாத்த ஆரம்பித்தாள்.

குச்சை விட்டு வெளியே வந்து தண்ணி ஒரு சொம்பு வாங்கிக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான். விடிந்து கொண்டிருந்த மானத்தைப்போல இருவர் முகமும் வெளுத்திருந்தது. கைகளைப் பிசைந்து கொண்டு மறுபடியும் குச்சுக்குள் நுழைந்து மூச்சுக் கட்டித் தூக்க ஆரம்பித்தான். திடீரென நாய் ஒன்று குரைக்கும் சத்தம் கேட்டதும் அவன் பலமெல்லாம் சடுதியில் குன்றிப் போயிற்று. நாயின் குரைப்பொலி ஒரே பாய்ச்சலாக நெருங்கி வரவர, மேலும் நாய்களின் குரைச்சல்கள் சேர்ந்து கொள்ள, அவனது உடம்பு முச்சூடும் ஒடுங்கி கண்ணாமுழிகள் பிதுங்கிப்போய் குச்சில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

சற்றைக்கெல்லாம் சனங்களின் பேச்சொலி கூடியிறைந்தது. “யார்ரா அவன் களவாணி... டேய், கீலெறங்கி வாடா...” என்று ஆளாளுக்குக் கத்தினார்கள். குச்சின் நெட்டைக் கால்களில் காவல் தடியால் தட்டினான் செவிந்தியின் புருசன். குச்சைச் சுற்றியும் குரைத்துக் கிடந்த நாய்களை ஏவிவிட்டுப் பார்த்தனர் இளவட்டங்கள். இந்தக் களேபரத்தில் தன்வீடு இன்னமும் திறக்காதது கண்டு கதவை தடதடவென்று பலமாகத் தட்டினான் செவிந்தியின் புருசன். சற்றுப் பொறுத்து மெதுவாகத் திறந்த கதவிடுக்கில் வதங்கிப்போன செவிந்தி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றிருந்தாள்.

ஊர்க்காரர்கள் எல்லாரும் ஊர் எல்லையில் குமிந்திருந்தனர். கூட்டத்தில் நடுவாந்திரமாக பம்மியவாறு நின்றிருந்தான் ராசய்யா. அவன் இடுப்பில் கட்டியிருந்த தலைவேட்டியிலிருந்து செவிந்தியின் வாசம் சுழட்டியது. சனங்கள் அவனைக் கெக்கலி கொட்டிக் கொண்டும், கிண்டாயமடித்துக் கொண்டும் இருந்தனர். சற்றுத் தள்ளி தெவைஞ்சி போன முகத்துடன் நின்றிருந்தாள் செவிந்தி. ஞாயம் பேசும் பட்டக்காரர்கள் கட்டிலில் அமர்ந்து வெத்திலை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

சற்றைக்கெல்லாம் இளவட்டங்கள் அய்ந்தாறு பேர் தூக்கிக் கொண்டுவர, கம்பீரமாய் அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்தது நெட்டைக்கால் குச்சு. அதைக் கண்ட மாத்திரத்தில் பெண்டுகளின் பார்வை அவனது நெஞ்சில் சுருண்டிருந்த கேசத்தில் சுருள ஆரம்பித்தது. திகைப்புடன் வாய்பிளந்து நின்றது ஊர் எல்லை.

“செரி, வளவளன்னு பேச்சு வேண்டாம்...அவுங்க செஞ்சது தப்புதா... நம்ம ஊரு வளமொறைப்படி என்ன தெண்டனை குடுக்கவேணுமோ, அதைக் குடுத்துற வேண்டியதுதா...” என்று புளிச் சென்று வெத்திலை எச்சிலைத் துப்பினார் கொத்துக்காரர். அது செஞ்சாந்துப் பொட்டு போல ஈர மண்ணில் இணுகியது.

“ம், ஆம்பளைக்குப் பொட்டு வெச்சுட்டறலாம்... பொம்பளை அந்தப் பொட்டை அரைச்சிக் குடுக்கட்டும்...” என்று தன் தலைமயிரைக் கோதி முடிந்தார் பட்டக்காரர்.

அடுத்த சில பொழுதுகளில் அந்தச் சடங்கு ஆரம்பமானது. முன்னால் நின்று எல்லாக் காரியங்களையும் நடத்திக் கொண்டிருந்தார் அருமைக்காரர். சற்றுத்தள்ளியிருந்த இடத்தில் முழங்கால் அளவு குழி வெட்ட ஆயத்தப் படுத்தினார். அந்தக்குழி நிறைய சாணித்தண்ணியைக் கரைத்து ஊற்றினார்கள். அதில் ராசய்யா அம்மணமாக இறங்கி நிற்க, ஒரு மாதாரியை அழைத்து, அவனுக்கு முறத்தால் குடை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள், பொட்டுக்கான செலவுப் பண்டங்களை செவிந்தியிடம் கொடுத்து அரைத்துக்கொண்டு வரச் சொன்னார்.

இந்த ஊரின் அறுபத்தி நாலு குடும்பங்களையும் அழைத்து வரிசையாக நிற்க வைத்து, பொட்டு வைக்கும் சடங்கை ஆரம்பித்தார்கள். முதல் பொட்டு வைக்கும் முறை செவிந்தியுடையது. செத்துப்போன முகத்துடன் செவிந்தி அவனை நோக்கி நடந்தாள். அந்த ஊரே பதட்டத்துடன் அதைக் கண்கொட்டாமல் பார்க்க, அந்தப் பொழுதே சாவு வந்து சேராதா என்று இருவரின் எண்ணங்களும் மாய்ந்து மாய்ந்து குமைந்தன.

இது என்ன மாதிரியான தண்டனை.. தண்டனை விதித்து வேடிக்கை பார்க்கும் இவர்களுடைய யோக்கியதை என்ன..? அவர்களை அந்த நிலைக்கு ஆளாக்கிய எல்லாவற்றின் மீதும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கூனிக் குறுகிப் போயிருந்த அவனது மீசை, அவளைப் பார்த்து ஆற்றாமையால் பொங்கியது. பொட்டை எடுத்து அவன் நெற்றியில் இடுவதற்குக் கையை உயர்த்தியபோது, அங்கு கூடியிருந்த எல்லோர் மேலும் பொட்டு வைக்க வேண்டும் என்ற ஆவேசம் அலையடித்து எழுந்தது. சட்டென ஒருபொழுதில் நிலை மாறினாள். அவளது கை தாழ்ந்து, தளர்ந்து தொங்கிக் கிடந்த அவன் குறியில் பொட்டை வைத்தாள். யோக்கிய வேசத்தின் மீது பொட்டை வைத்தாள். ஆதிக்கத்தின் மீது பொட்டை வைத்தாள். சமூக நியதியின் மீது பொட்டை வைத்தாள். ஊர்சனங்கள் திடுக்கிட்டுப் போயினர். பட்டக்காரர்கள் செய்வதறியாது திகைத்தனர். அந்த அற்புதத்தை அங்கு நின்றிருந்த மலங்கிளுவை மரங்கள் தலையாட்டி ரசித்தன. அதன் பிறகு, அவன் ஊருக்குள் போகவேயில்லை. அந்த மலங்கிளுவை மரத்தினடியில் போடப்பட்டிருந்த குச்சில் ஏறி உட்கார்ந்து விட்டான்.
.
கிழவியின் எதிரிலிருந்த மொடாக்களின் மீது மெல்ல மெல்ல தூசுதும்புகள் படிய ஆரம்பித்தன. அவளது கண்களில் பலகாததூரம் போய்வந்த களைப்பு தெரிந்தது. அந்த செவிந்தியின் வமிசாவளியில் வந்தவர்கள்தான் தாங்கள் என்றும், பொட்டு அரைத்துக் கொடுப்பதற்கான மிராசு தங்களுக்குத்தான் பாத்தியதை என்றும் பெருமை பிடிபடக் கூறினாள்.

வாலிபப் பருவத்தில் பிள்ளைகள் அறஒழுக்கத்தோடு இருக்க வேண்டும். மீறினால் பொட்டுச்சாமியின் நிலைதான் என்பதை வலியுறுத்துவதுபோல பொட்டுச்சாமியின் வழிபாடு அமைந்திருப்பதாக விடுகதையின் எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்துப் போட்டாள் கிழவி. காலப்போக்கில், இந்த அய்தீகத்தின் புதிர் மறைந்து போய், வெறும் சடங்காக மாறிப்போன துயரத்தையும் விண்டு காட்டினாள்.

பேசிமுடித்த அமைதியில், வெயில் மங்கிப் போனதை நோட்டமிட்டான் அவன். கிழவியிடம் சொல்லிக் கொண்டு எழுந்து வெளியே வந்து சைக்கிளைத் தள்ள ஆரம்பித்தான். எதிரில் தெரிந்த பொட்டுச்சாமியின் கிளுவை மரம் அசைந்து அசைந்து அவனை வரவேற்றது. ஆனால், அவனுக்கென்னமோ செவிந்தியைத்தான் பார்க்க வேண்டும் போலிருந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com