Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
UnnathamUnnatham Logo
ஜனவரி - பிப்ரவரி 2006

கருப்பு - வெள்ளை

டி.டி.ராமகிருஷ்ணன்

History teaches that our chances are nil
so stop before it gets out of hand
or creates even more hatred
let’s unite and incinerate the system.
But why, why are we waiting to set the fire?
-‘‘Qu’est-se quion attend” (1995)

SUPREME NTM என்ற பாரிஸ் நகரத்து பாப் பாடகர் சங்கத்தின் வரிகள்.

இவ்வாண்டின் நோபல் பரிசு வென்ற ஹரால்ட் பின்டர் தன் பரிசு ஏற்புரையில் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சித்து ‘What is true? What is false’ என்று கேள்வி எழுப்பியபோது வல்லரசுகளின் பயங்கரவாதத்துக்கு எதிராக உலகின் மனச்சாட்சி எழுப்பும் குரல்தான் முழங்கக் கேட்டோம். பாலூஜாவில் மரணத்தைப் பரப்பிய வெள்ளைக்கந்தகம் போல எழுத்தாளனின் சிந்தனையைச் சுட்டெரிக்கும் சம்பவங்கள்தான் நம்மைச் சுற்றிலும் நடக்கிறது. ஜனநாயகத் தன்மையின் முகமூடியணிந்த கார்ப்பரேட் பாசிஸம் எந்த வகையான எதிர்கருத்துக்களையும் நசீகரம் செய்து கொண்டு உலகம் பூராவும் தன் ஆதிக்கத்தைச் செலுத்த முயற்சிக்கிறது. இதற்கெதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் உலகமயமான தற்காப்பு மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. இவையொன்றும் தங்களை பாதிக்கும் விஷயங்களல்ல என்ற நினைப்பில் தங்களுக்குள்ளேயே ஒதுங்கிக்கொண்டு, ஒருவரை யொருவர் தொட்டுத்தழுவி எழுத்தையும் வாசிப்பையும் ரசிக்கவைக்கவும்ஞி சுகம் காண வைக்கவும் தக்க வழிகளாக மட்டும் காணுகிற மலையாளத்தின் பெரும்பான்மையான சொகுசு இலக்கியவாதிகளின் இருப்பையே கேள்விக்குறியாக்கப்படும் நிலைமை இது.

சொகுசு இலக்கியம் என்பது அடிப்படைத் தத்துவங்களோ செய்முறைத் திட்டங்களோ உள்ள இயக்கம் அல்ல. பல இலக்கியவாதிகளுக்கும் தான் ஒரு சொகுசு இலக்கியப் படைப்பாளி என்ற உண்மை புலப்படுவதில்லை. ஆனால் நம்முடைய இலக்கியச் சூழலின் சக்திவாய்ந்த போக்கு இது. எழுத்தை ஒரு முக்கியமான செயலாகக் கருதாமல் இருப்பதும் எழுத்தின் மூலம் முக்கியத்துவமுள்ள எந்த பிரச்சினையையும் எழுப்பாமல் இருப்பதும்தான் இப்படிப்பட்ட இலக்கியத்தின் முக்கிய அடையாளம். மொழி, பண்பாடு, ஒழுக்கம் போன்றவைகளில் Status quo வை நிலைநாட்டிக்கொண்டு அரசியல் ரீதியல்லாது நடுநிலைமையக் கையாள்வதுதான் சொகுசு இலக்கியத்தின் படைப்புத் தந்திரம். சமூகத்தின் ஞான மண்டலங்களில் எந்த விதத்திலும் பங்கேற்காமல் இருப்பதும் அரசியல் மற்றும் சமுதாயப் பிரச்சனைகளில் எந்தத் தரப்பு சார்பாகவும் ஐக்கியப் படாமலிருப்பதும்தான் இதன் சுபாவம். மலையாள இலக்கியவாதிகளில் பெரும்பான்மையானவர்கள் இப்படிப்பட்டவர்களே என்பது ஒரு துரதிர்ஷ்டவசமான விஷயமாகும்.

சமுதாயத்தின் உயர்வகுப்பினரின் கையிலிருந்த இலக்கியத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் கைப்பற்றியிருக்கின்றனர் என்பதே இருபத்தி யோராம் நூற்றாண்டின் பிரத்யேகத்தன்மை. இலக்கிய மாளிகைகளில் வீற்றிருக்கும் அரச அரசியர்களின் ஒடுக்கு முறைகளை உயர் வகுப்பினரின் அதிகாரச் சின்னமான மேல்மட்ட மொழியைக் கழற்றிப் பிரித்துப் போடுவதன் வழியே புதிய எழுத்தாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்த தலித் எழுத்தாளர்களின் சுயசரிதைத் தன்மை கொண்ட நாவல்கள் முதல் ராப் இசையின் பாடல் வரிகள் வரையுள்ள பலவிதமான உருவங்களில் இந்தப் புதிய இலக்கியம் புலப்படுகிறது. இலக்கியத்தைக் குறித்து இன்று நிலவியுள்ள தத்துவங்களையும் அளவுகோல்களையும் வைத்துப் பார்த்தால் இது இலக்கியமல்ல. ஆனால் இப்படிப்பட்ட எழுத்துத்தான் அதிகாரத்தின் கொடுமைக்கெதிராகக் கேள்வி கேட்டுக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கு ஆயுதமாக மாறுகிறது. பாரிஸ் நகரத்தில் சமீப காலத்தில் நடந்த இனக்கலவரங்களுக்குக் காரணமாகக் காட்டப்படுவது அந்த நகரின் ஓரங்களை மையமாகக் கொண்டு செயல்படும் ஏழு ராப் இசைக் குழுக்கள்தான் (குறிப்பாக அவர்களின் பாடல் வரிகள்) என்று சில வலதுசாரி அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

சமூகம் அங்கீகரித்த இலக்கியவாதிகளும் அக்காதெமியைச் சார்ந்த அறிவு ஜீவிகளும் இந்தப் படைப்புகளைப் பற்றிப் பேசவோ அவையை இலக்கியமாக ஏற்றுக் கொள்ளவோ செய்வதில்லை. இந்தியாவில் ‘கத்தார்’ போன்ற பாடகரின் படைப்புக்களின்பால் அதிகாரவர்க்கம் காட்டும் எதிர்ப்பை இதை மனதில் வைத்துக்கொண்டுதான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் இன்று தலித் இலக்கியம் என்பது ஒதுக்கப்படவே முடியாத சக்தியாக மாறிவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சரண்குமார் லிம்பாலே, ஓம் ப்ரகாஷ் வால்மீகி மற்றும் பாமாவின் படைப்புக்கள் தலித் இலக்கிய அரங்கில் புரட்சி உண்டாக்கியது போல சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களின் முன்னுக்கு வருகையும் அப்பட்டமான உண்மையாகத் திகழ்கிறது. 2005-இல் மிகவும் சர்ச்சை செய்யப்பட்ட மலையாளப் புத்தகம் எதுவென்றால் நளினி ஜமீலாவின் ‘ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை’ எனலாம். கீழ்மட்ட மக்களின் இலக்கியத்தால் பொது சமுதாயத்துக்கு உண்டாக்கக் கூடிய தாக்குதலை இது கோடிட்டுக் காட்டுகிறது.

ஓரங்கட்டப்பட்ட சமூகத்தின் எழுத்தாளர்களும் வாசகர்களும்தான் சொகுசு இலக்கியத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். சமூகத்தில் நிலவியிருக்கும் சூழ்நிலை தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு அளிப்பது வெறும் அவதிதானென்றும் உயர்மட்ட மற்றும் நடுத்தர இனமக்கள் இவர்களின் வாழ்க்கையையோ கலாச்சாரத்தையோ அங்கீகரிப்பதில்லையென்றும் புரிந்து கொண்ட அடித்தள மக்கள் உயர்ஜாதியினரின் எழுத்துக்கு அச்சு மாதிரிகளாக மாறுவதற்கு இடமளிக்காமல் பேனாவைக் கையிலெடுத் திருக்கிறார்கள். அப்படித்தான் மீன் விற்பவனும், பாலியல் தொழிலாளியும், ஜேப்படிக்காரனும் எழுத்தாளனாகிறான். சமுதாயத்திலுள்ள ஏதாவது தற்போதைய பிரச்சனையைக் கையிலெடுத்து அதை உலகமயமாக்குதலுடன் சேர்த்து வைத்து சிறிது கற்பனை வீச்சும் பூசி மெழுகி வெளியிடுகின்ற அறிவு ஜீவித்தனமான பாசாங்கல்ல இவர்களின் எழுத்து.

மொழியியல் வல்லுநர்களையும் இலக்கண நீதி மன்றங்களையும் நிராகரிக்கிற இவர்கள் எழுதுவது பச்சையான வாழ்க்கை மட்டுமே. ஜமீலா பாலியல் தொழிலில் சந்தோஷப்பட்டிருந்தேன் என்று கூறுகையில் நமது சமூகத்தில் இலைமறைவாக விபச்சாரத்துடன் இழைந்தோடும் பாவத்தைப்பற்றியான தீர்மானங்களைக் கேள்விக்குள்ளாக்கிறது. இது நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மலையாளியின் போலியான ஒழுக்க நெறிமுறைகளை ரொம்பவும் நோகடிக்கிறது. பாலியல் தொழிலாளி என்ற வார்த்தையை உச்சரிக்கவும் தயங்குகிற ஒழுக்கமிக்க பாரம்பரியமுள்ள வாசகர்கள் இப்படியொரு தொழிலே கிடையாது என்ற மட்டில் இருக்கின்றனர். பாலியல் பாவமென்றும் அதைத் தொழிலாக ஏற்றுக் கொண்டவள் மகா பாவிதானென்றும் கருதுகின்ற இவர்களுக்கு பாலியல் தொழிலாளியை எப்படி மனித ஜென்மமாகக் கருத முடியும்? புதிய எழுத்து இப்படிப்பட்ட விஷயங்களை வாசக அறைக்குக் கொண்டு வருகிறது. சொகுசு இலக்கியத்தின் காலத்தில் இப்படி மனதைத் தொந்தரவு செய்யும் கேள்விகள் எழுப்பப்பட்டதில்லை.

மலையாள சொகுசு இலக்கியத்தின் முக்கியமான நுகர்வோர் கூட்டம் ‘பைங்கிளி’ (மட்டமான உப்புச்சப்பற்ற மேலோட்டமான இலக்கியம்) வாசகர்கள் எனலாம். உண்மையில் பைங்கிளிப் படைப்புக்களை வாசிக்க விரும்பும் இவர்கள் அறிவு ஜீவிப் பாசாங்கிற்காகத்தான் இலக்கியத்தைப் படித்திருந்தனர். உயர் ரக இலக்கியம் படித்து ரசிக்க விருப்பமோ திறமையோ இல்லாத இவர்களின் ரசனையைத் திருப்பதிப்படுத்தின சொகுசு இலக்கியப் படைப்புக்கள். நகரமயமாதலின் காரணத்தால் கிராமங்களிலிருந்து பிடுங்கி நடப்பட்டவர்களைப் பழைய ஞாபகங்களால் சந்தோஷப்படுத்துவது, நிறைவேறாத புரட்சியைப்பற்றி துக்கமயமான ஒப்பாரி இலக்கியம் படைப்பது, கீழ்மட்ட மக்களின் பிரச்சனைகளை வெளிக் கொணர்வதாக நடித்து உயர்ஜாதியினரின் தாழ்ந்தோர்க்கெதிரான வேலைகளுக்கு நியாயமான காரணங்கள் கண்டெடுப்பது, பின்நவீனத்துவ சிந்தனைகளின் லேபலில் யாருக்கும் புரியாத பாஷையிலான சர்ச்சைகள் வழியாக இலக்கியம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எட்டிப் பிடிக்க முடியாத விஷயம் என்று தோன்றவைப்பது என பலதரப்பட்ட நோக்கங்கள் கொண்டுள்ள சொகுசு இலக்கியப் படைப்புகள் மலையாள இலக்கியத்தில் ஏராளமான போலி பிம்பங்களை உண்டாக்கி எழுத்தில் உயர்வகுப்பினரின் ஆதிக்கம் அழிந்து போகாமல் அதேபடி தக்க வைக்கவும் உதவிசெய்தன. உயர்வகுப்புபிராமண ஆதிக்கத்துக்குத் தொந்தரவு ஏற்படாமல் உயர்வகுப்பு மொழி மற்றும் இலக்கியத்தின் ‘Deconstruction’ னைத் தடுத்து நிற்பதற்காகவே இப்படிப்பட்ட போலிப் படைப்புக்களை உயர்ஜாதி விமர்சகர்கள், ‘என்ன அழகான பாஷை!’ ‘எத்தனை உயர்வான வாழ்க்கைக் கண்ணோட்டம்’ என்றெல்லாம் புகழ்ந்து கொண்டாடினர்.

உலக அளவில் இலக்கியல் ஒரு இக்கட்டான நிலைமையை எதிர்கொள்கிறதென்றும் அதுவே மலையாள இலக்கியத்திலும் நடக்கிறதென்று வலியச் சொல்லித் தோன்ற வைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதற்கு உண்மையான நிலையுமாக ஒரு பந்தமுமில்லை. உண்மையில் இக்கட்டான நிலைமைக்குள்ளானது என்னவென்றால் உயர்வகுப்பு இலக்கியத்தின் சொகுசு இலக்கியக் கண்ணோட்டம் தான். இது ஒட்டு மொத்தமாக இலக்கியம் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைமையல்ல. மார்க்கேஸின் புதிய புத்தகம் சூடான பலகாரம் போல விற்பனையாவதிலிருந்து வாசிப்பு என்ற கலை மடிந்துவிடவில்லை என்பது தெளிவாகிறது. பாவ்லோ கொய்லோ போன்ற எழுத்தாளர்களின் ஜனரஞ்சகத் தன்மை நம்மை அசுர வைக்கும் விதத்தில் உயர்ந்து கொண்டே போகிறது. இது லத்தின் அமெரிக்காவில் மட்டும் நிகழும் விஷயமல்ல. துருக்கியிலும் அல்பேனியாவிலும் மொராக்கோவிலுமெல்லாம் இலக்கியம் மிக மும்மரமாகச் செயல்படுகிறது. ஆர்பான் பாழக், இஸ்மாயில் காதர், மற்றும் தாஹர் பென் ஜெலோனின் புத்தகங்கள் லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்படுகின்றன.

ஆந்திராவில் கத்தாரின் பாடல்களைக் கேட்க மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு வருகின்றனர். மிகச் சிறிய தேசங்களில் மட்டும் பேசப்படும் மொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள் கூட உலகளவில் கவனத்தை ஈர்க்கின்றனர். இவர்களின் படைப்புகள் சிந்தனா மண்டலத்தில் வெடித்துச் சிதறல் ஏற்படுத்த முடிகிறதென்பதுதான் காரணம். மலையாளத்தில் ஏன் இப்படி நடப்பதில்லை? மலையாள இலக்கிய மண்டலத்தில் நிலவியுள்ள உயர்வகுப்பினரின் ஆதிக்கம் எழுத்தாளனின் சிந்தனைகளை ஒரு பிரத்யேகமான உருவாக்க நிலையில் உறையச் செய்வதால்தான். நவீனத்துவத்தின் யுகத்தில் மிகவும் பத்திரமான சில அராஜக சிந்தனைகளை எடுத்துரைத்த எம்.முகுந்தனுக்கு எதிராகக்கூட கஞ்சாவும் சரஸ்ஸும் ஏமாற்றமன நிலைமையையும் பிரச்சாரம் செய்து இளம் தலைமுறையினரை வழிதவறச் செய்தார் என்று குற்றம் சாட்டியவர்கள் நாம். உலக சரித்திரத்தில் எல்லா தத்துவஞானிகளுக்கும் அறிவு ஜீவிகளுக்கும் எதிராக இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இளைய தலைமுறையை வித்தியாசமான வழிகளில் சிந்திக்கத் தூண்டுபவர்கள்தான் சமூகத்தை கலாச்சாரப் பிணத்தன்மையிலிருந்து விடுபடச் செய்பவர்கள். இலக்கியம், கலை, தத்துவஞானம் என்றவையெல்லாம் இவர்கள் மூலமாகத்தான் முன்னேற்றமடைகிறது. இந்த உண்மையை அங்கீகரிக்காதவர்களே எதிர்மறை சிந்தனைகளை சகிப்புத் தன்மையில்லாமல் அழிக்க முற்படுகின்றனர்.

சொகுசு இலக்கியகர்த்தாக்களுக்கு இவ்வகையான பிரச்சனைகளையெல்லாம் எதிர்கொள்ள முடியாது. சமுக, அரசியல் ரீதியிலான பிரச்சனைகளில் சொந்தமாக எந்த பட்சமும் சேராமல் யாருக்கு எது நேர்ந்தாலும் நமக்கொன்றுமில்லை என்ற ரீதியில் எழுதுபவர்களுக்கு செயலற்ற நடுநிலைமைதான் சௌகரியமாக அமைகிறது. தப்புக்கும் சரிக்குமிடையில் நடுநிலைமை ஏற்பது என்பது தவறினைப் பின்தாங்குவதற்கு இணையானது என்பதை இவர்கள் அறியாமலில்லை. தாங்கள் உண்மையின் பட்சம்தான் என்று சொல்லும்போதே தவறினை எதிர்க்காமல் இருப்பதுதான் இவர்களின் தந்திரம். மேல்மட்டஞிகீழ்மட்ட சுரண்டல்ஞிசுரண்டப்படல் இனங்களுக்கிடையில் வரும் போராட்டங்களில் நடுநிலைமையை ஏற்றுக்கொள்பவர்கள் குறிப்பிட்ட பட்சங்களில் நிற்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களை நிராகரிக்க கீழ்மட்ட மக்கள் தைரியம் காட்டுவதின் பாகமாகத்தான் சொகுசு இலக்கியத்தைக் குப்பைத் தொட்டியில் எறிகின்றனர். இடது சாரி அரசியல் உட்பட இலக்கிய, கலாச்சார அரங்கத்தில் புரட்சி வழியாக தங்களின் இருப்பை நிலைநாட்ட முயலும் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்வகுப்புத் திறனாய்வாளர்களின் பாராட்டுக்கோ விருதுகளுக்கோ காத்திருக்கவில்லை.

மலையாள இலக்கியம் மற்ற இந்திய மொழிகளைவிட மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்ற எண்ணம் எப்படியோ மலையாளியின் மனதில் வேரூன்றி விட்டுள்ளது. ஆனால் இன்று நிலைமை இப்படியல்ல. மற்ற பல மொழிகளிலும் சராசரிக்கும் மேலாக உயர்ந்த இலக்கியப் படைப்புகள் வெளிவருகின்றன. மலையாளத்தில் உள்ளது போல மத்தியதர சொகுசு இலக்கியம் அங்கே இல்லை. தலித் படைப்புக்கள் மற்ற மொழிகளில்தான் கூடுதலாக உள்ளது. முழுவதுமாக அரசியல் மயமாக்கப்பட்ட தெலுங்கு எழுத்து அங்கு நிலவியுள்ள புரட்சி அரசியலின் பாகமே. அசத்தும் விதத்தில் தமிழ் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அங்கேயெல்லாம் கேரளத்தில் உள்ளது போன்ற ஒரு சக்திவாய்ந்த மத்தியவர்க்கம் உருவாகாமலிருத்தல்தான் காரணம் என்று தோன்றுகிறது. மத்தியவர்க்க சமூகத்தில் எழுத்தாளனுக்கு என்றும் தன் இமேஜைப் பற்றித்தான் கவலை. யாரும் இஷ்டப்படாத உண்மைகளை உரக்கச் சொல்லாமல் தன் இமேஜைக் காப்பாற்றுவதற்காக அவன் தன்னையறியாமல் ஒரு சொகுசு இலக்கியவாதியாகி விடுகிறான். இப்படிப்பட்ட சொகுசு இலக்கியத்தின் அழிவுதான் இப்போது ஆரம்பமாகியுள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com