Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

கட்டுரை

பேராசிரியர் நா. வானமாமலையும் ஆராய்ச்சியும்
முனைவர் இரா. காமராசு

தமிழ் ஆராய்ச்சி, இன்று பல் அறிவுத்துறைகளையும் இணைத்துக்கொண்டு வளர்ச்சி கண்டு வருகிறது. தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியில் ஆய்வு இதழ்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. தமிழ் இதழியலின் தொடக்கம் 1830 என்பர். (மா.சு. சம்பந்தன், 1987:19) தமிழ் இதழியல் ஏறக்குறைய ஒன்றேமுக்கால் நூற்றாண்டு வரலாறு கொண்டது.

இந்த வளர்ச்சியானது, “சாதி, சமய, சமூக உணர்வில் ஆழ்ந்து சிந்திப்பவர்களையெல்லாம் ‘தமிழ் இதழ் உலகம்’ தட்டியெழுப்பி, அவர்களைக் குறிப்பிட்ட சிறுவட்டத்துக்குள்ளே சுழன்று வருவதைத் தடுத்து நிறுத்தி, உலகளாவிய பெரிய வட்டத்திற்குள் அவர்களை அடியெடுத்து வைக்கும்படி செய்துள்ளது. மேலும் மெத்த படித்தவர்களே எதையும் எழுத முடியும். எப்படியும் எழுத முடியும் என்ற நிலையை மாற்றி அறிவு வேட்கை கொண்டு ஆர்வ மிகுதியால் உந்தப்பட்டு எழுதத் துடிக்கும் எவரையும் வாய்ப்புக் கொடுத்து, அது எழுத்துத் துறையில் ஈடுபடச் செய்துள்ளது.” (மேலது, ப. 21) என்ற நிலையில் கருதத்தக்கது. நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் தான் இதழ்கள் தொடங்கி நடத்த முடியும் என்ற நிலை இன்று மாறி தமிழ் இதழியல் துறை ஜனநாயகப்படுத்தப் பட்டுள்ளது.

தொடக்கக்காலத் தமிழ் ஆய்வு இதழ்கள் வடமொழி - ஆரிய எதிர்ப்பு, திராவிட மேன்மை, தமிழின் தொன்மை, இலக்கண - இலக்கியப்பதிப்புக் குறிப்புகள், கால ஆராய்ச்சி, இலக்கிய வளர்ச்சி முதலிய சிந்தனைப் போக்குகளில் கவனம் செலுத்தின. இந்த வகை இதழ்களில் மதுரை தமிழ்ச்சங்கத்தின் ‘செந்தமிழ்’ (1902), சைவச்சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ‘செந்தமிழ்ச்செல்வி’ (1923), கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ‘தமிழ்ப்பொழில்’ (1925) ஆகியன குறிப்பிடத்தக்கன. தொடர்ந்து இலக்கியங்களை முன்னிலைப்படுத்திய இதழ்களிலும் (மணிக்கொடி - 1933), சக்தி - 1939 கிராம ஊழியன் 1943) ஆய்வுச் செய்திகள் சிறிய அளவில் இடம் பெற்றன. நாட்டின் விடுதலைக்குப்பின் அரசியல், பொருளாதார, சமூகக் காலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், இதழியல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. இதன் விளைவாக நிறுவனங்களாலும், தனி நபர்களாலும், குழுக்களாலும் பல ஆய்விதழ்கள் தொடங்கப்பட்டன. இவ்வகையில் Tamil culture 1952, ‘ஆராய்ச்சி’ (1969), ‘தமிழாய்வு’ (1972) ‘புலமை’ (1975), மொழியியல் (1977) முதலியன குறிப்பிடத்தக்கன. 1980க்குப் பின் ஆய்வியலில் துறை வாரி இதழ்கள் (நாட்டுப்புறவியல், கல்வெட்டியல், தலித்தியம், பெண்ணியம், விளிம்புநிலை (ஆய்வுகள்) பெருகி ஆய்வுப்பர வலுக்கும், பாய்ச்சலுக்கும் வழி வகுக்கின்றன. இக்கட்டுரை ‘ஆராய்ச்சி’ இதழ் குறித்ததாக அமைகின்றது.

இதழின் தோற்றம்

ஆராய்ச்சி இதழின் ஆசிரியர் நா. வானமாமலை. இவர் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர். தமிழ் ஆய்வில் அறிவியல் சார்ந்த சமூகவியல் ஆய்வுகளை வரலாறு, இலக்கியம், பண்பாடு, தத்துவம், நாட்டுப்புறவியல், தொல்லியல், மானிடவியல் முதலியன பல்துறை இணை ஆய்வுகளாக நடத்திக் காட்டியவர். கல்வி நிறுவனங்கள் சாராத ஆய்வாளர்களை வளர்த்தெடுக்க ‘நெல்லை ஆய்வுக்குழு’ என்ற அமைப்பை 7.12.1967 இல் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளை மட்டுமே தாங்கி வரக்கூடிய ஆராய்ச்சி இதழை 1969 ஜூலை மாதத்தில் தொடங்கினார். இவ்விதழ் பாளையங்கோட்டை யிலிருந்து காலாண்டாய்விதழாக வெளிவந்தது.

‘ஆராய்ச்சி’ முதல் இதழின் முன்னுரையில், “ஆராய்ச்சியை மட்டுமே தலையாயப் பணியாகக் கொண்டு தமிழில் வெளிவரும் பத்திரிகை இதுவொன்றே. பல பண்பாட்டுத் துறைகளிலும் ஆராய்ச்சி புரியும் வல்லுனர்களை அணுகி அவர்களது சிந்தனை முடிவுகளை வெளியிட்டு அறிவொளி பரப்ப முன் வந்துள்ள பத்திரிகை இதுவொன்றே. இதற்கு ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர் அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இப்பத்திரிகையைத் துவக்க முன்வந்தேன்” (1969 : I) என இதழாசிரியர் நா. வா. சுட்டிக் காட்டுகிறார். இவரின் இந்த நம்பிக்கை நிறைவேறியது. மாற்று முகாம்களைச் சார்ந்தவர்களும், சார்பற்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் எழுதும், வாசிக்கும் இதழாக ‘ஆராய்ச்சி’ மாறிற்று, என்றாலும், இதழ் தனது தத்துவ நோக்கில், கொள்கைச் சார்பில் சமரசம் செய்து கொள்ளவில்லை.

இதனை எஸ். தோதாத்ரி, “ஆராய்ச்சி முதல் இதழ் பெரும் வரவேற்பைப் பெற்றது. பழம் பெருமை பேசுதல், மொழி ஆராய்ச்சி என்ற போக்கில் சென்று கொண்டிருந்த தமிழ்ச்சிந்தனைப் போக்கிற்கு ஆராய்ச்சி பத்திரிகை ஒரு மரண அடிகொடுத்தது எனலாம். தமிழ்ப் பண்பாட்டினை வரலாறு, தொல்லியல், சமூகவியல், மார்க்சியம், பிராய்டிசம் போன்ற அணுகுமுறையைப் பயன் படுத்தி விளக்க முடியும் என்பதை ஆராய்ச்சியின் கட்டுரைகள் வெளிப்படுத்திக் காட்டின. ஆனால் ஆராய்ச்சியின் அடித்தளம் மார்க்சியமே. பல்கலைக் கழகத்திற்கு வெளியே ஒரு ஆராய்ச்சிப் படை உருவாவதற்கு ஆராய்ச்சி பத்திரிக்கை ஒரு வலுவான அடித்தளமிட்டது” (2001:27) என மதிப்பிடுகிறார்.

இதழின் வடிவம்

ஆராய்ச்சி இதழின் முகப்பில் இதழின் பெயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். இதழ் வரிசை முறை மலர், இதழ் எனக் குறிக்கப்படுவதோடு, இதழின் தொடர் எண்ணும் இடம் பெற்றிருக்கும். இதழ் 1 X 4 அளவில் வெளி வந்தது. முகப்பு அட்டையில் சிற்பங்கள், கல்வெட்டுகள் போன்ற ஆய்வுத் தொடர்பானச் சான்றுகள் அழகுணர்வோடு தரப்பட்டன. அறிமுகம் என்ற பகுதியில் அவ்வவ் இதழ்களின் கட்டுரைப் பொருளை அறிமுகப்படுத்துதல், தேவையெனில் உள்ளே கட்டுரைகள் இடம் பெறும் பகுதியில் குறிப்புகள் தருதல், கட்டுரையாளர்களை ‘Our contributors’ என அறிமுகம் செய்தல் ஆகியன இடம் பெற்றன. பெரிய அறிஞராயினும், ஆய்வு மாணவராயினும் பெரிய, சிறிய எழுத்து வேறுபாடின்றிக் கட்டுரைத் தலைப்புகள், எழுதியோர் பெயர்கள் பதிப்பிக்கப் பட்டன. தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் கட்டுரைகள் வெளிவந்தன. குறிப்பிட்ட கட்டுரையாளர்களின் கட்டுரைகள் தனித்தனியாகக் கோப்பு செய்யப்பட்டுக் கூடுதல் பிரதிகள் அவர்களுக்குத் தரப்பட்டன.

இதழின் பங்களிப்பு

நா. வானமாமலை 2-2-1980இல் இறக்கும் வரை 22 இதழ்கள் வெளிவந்தன. தமிழ்ச் சூழலில் அதிகம் கவனம் பெறாத மானிடவியல், பழங்குடி மக்கள் ஆய்வுகள், நாணயவியல், கல்வெட்டியல், தொல்லியல் ஆய்வுகளுடன் சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரையான ஆய்வுக் கட்டுரைகள், ஆராய்ச்சி இதழில் வெளிவந்தன. ஆய்வுக்குப் பயன்படும் அறிய குறிப்புகள் பலவும் அவ்வப்போது ஆராய்ச்சியில் வந்தன. நூல் மதிப்பீடுகள், நூல் வெளியீட்டு விவரங்கள் ஆகியனவும் இதழில் இடம் பெற்றன. சர்வதேச, இந்திய அறிஞர்கள் பலரின் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

“1969 தொடங்கி 1980 வரை (நா.வா. மறைவு வரை) உள்ள ஆராய்ச்சி இதழ்களின் பக்கங்கள் சுமார் 2000. அவற்றுள் கட்டுரைகள் - 155, இலக்கியம் - 57, சமுதாயவியல், வரலாறு - 37, மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் - 34, இலக்கணம், மொழியியல் - 10, தத்துவம் - 10, பொது - 7” (1955:81) என இராம. சுந்தரம் வகைப்படுத்திக் கூறுவது ஆராய்ச்சி இதழின் பங்களிப்பை உணர்த்தும்.

ஆராய்ச்சி இதழை முன்மாதிரி ஆய்விதழாக நடத்தி, அதன் வாயிலாக தமிழில் முறையான ஆய்வு மனப்பாங்கை உருவாக்க நா. வானமாமலை முயன்றார். விளைவாக ஆய்வுக்கு அடிப்படையாகத் திகழும் ஆய்வு நெறிமுறைகளை இளம் ஆய்வாளர்களுக்கு அறிமுகம் செய்யும் விதத்தில்
கா. சுப்பிரமணியப்பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, இரா. இராகவய்யங்கார், ஏ.வி. சுப்பிரமணிய அய்யர் ஆகியோரின் ஆய்வு நெறிகள் குறித்த கட்டுரைகள் ஆராய்ச்சி இதழில் வெளிவந்தன. தமிழ் நாவல் இலக்கியப் போக்குகளைச் சுட்டும் விதத்தில் தொடக்கக்கால நாவல்கள் பற்றியும் கல்யீக, எஸ். சண்முகசுந்தரம், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், நீல. பத்மநாபன், சுந்தரராமசாமி ஆகியோரது நாவல்கள் குறித்தும் பல கட்டுரைகள் வெளிவந்தன. பழங்குடி மக்களது வாழ்க்கை குறித்த ஆய்வுகள், கலை, இசை, சிற்பம் முதலாக நுண் கலைகள் குறித்த ஆய்வுகள், மானிடவியல் குறித்த ஆய்வுகள் ஆகியன பிற ஆய்விதழ்களிடம் இருந்து ஆராய்ச்சியை வேறுபடுத்திப்பார்க்க காரணமாயின.

எவ்வித நிறுவனப் பின்புலமோ, பொருளியல் வசதியோ இல்லாமல் மன உறுதி ஒன்றையே முதலீடாகக் கொண்டு தன் கடின உழைப்பாலும் தனது நண்பர்களின் உழைப்பாலும் நா.வா. ஆராய்ச்சி இதழை நடத்தினார். இதனை ஆராய்ச்சியின் நான்காவது இதழ் தலையங்கத்தில் கீழ்க்காணுமாறு பதிவு செய்துள்ளார் நா.வா.

“இத்துடன் ஆராய்ச்சி நான்கு இதழ்கள் வெளிவந்து விட்டன. தமிழ்நாட்டு இன்டெலக்சுவல்களின் பத்திரிக்கை என்ற ஸ்தானத்தை இப்பத்திரிக்கை பெற்றிருக்கிறது. ஆராய்ச்சி ஆர்வமுடைய அனைவரும் இப்பத்திரிக்கை நீடித்துப் பணிபுரிய வேண்டும் என விரும்புகிறார்கள். விருப்பங்கள் குதிரைகளாகி விட்டால் பிச்சைக்காரர்களும் சவாரி செய்ய முடியும் என்றோர் ஆங்கிலப் பழமொழி உண்டு. ஆனால் விருப்பங்கள் குதிரைகளாகவதில்லை என்பதை நாம் அறிவோம். விருப்பங்கள் குதிரைகளாவதற்கு விடா முயற்சியும் பணமும் தேவை. ஆராய்ச்சிக்கு அதன் கட்டுரையாளர்களின் மூளை பலம் தவிர வேறு பண பலம் கிடையாது. சந்தா வடிவம், விற்பனை வரவும் தான் அதன் வருவாய்த் துறைகள், வியாபார நோக்கத்துக்காக அல்லாமல் சுமார் 20 ஆராய்ச்சி நண்பர்கள் ஆராய்ச்சி இதழை விற்றுத் தருகிறார்கள்”. (1970:451-52).

இப்படித் தனிமனித அர்ப்பணிப்பு உணர்வில் நடத்தப் பட்ட ஆராய்ச்சி, புதியன நாடிய ஆய்வுத்துறை இளைஞர்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளின் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் வரவேற்ப்பைப் பெற்றது போலவே, இலக்கிய ஆராய்ச்சிக்குச் சமூகவியல், அறிவியல் சார்ந்த பார்வைகளை வழங்கிய மார்க்சிய நெறி சார்ந்த ஆய்வுகள் பெருகவும் வழி அமைத்தது.

“தமிழகத்தில் புதுநோக்கும், பரந்த அறிவும், ஆழமான சிந்தனையுமுடைய ஒரு புதிய ஆராய்ச்சியாளர் பரம்பரையை வளர்ப்பதற்கு ஆராய்ச்சி உதவுகின்றது. ஆராய்ச்சியைப் பல்கலைக் கழகங்களின் முதுசமாகப் பேணும் தமிழக நிலையினைத் தகர்த்தெறிந்துள்ளது. இச்சஞ்சிகை அத்துடன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் பலரின் (கேரளம் இதற்குள் வராது) ஆராய்ச்சி ஆழமின்மையையும் அது மறைமுகமாக எடுத்துக்காட்டி வருகின்றது” என்ற கா. சிவத்தம்பியின் மதிப்பீடு ஆராய்ச்சி இதழின் வீச்சை இனம் காட்டும்.

தமிழ்ச் சூழலில் கல்வி நிறுவனங்களுக்கு வெளியே புதுமையானதும், ஆழமானதுமான ஆய்வுக் கட்டுரைகளை தரமான முறையில் வழங்கிய இதழாக ஆராய்ச்சி விளங்கிற்று. பின் வந்த ஆய்விதழ்கள் பலவற்றுக்கும் ஆராய்ச்சி இதழே முன்மாதிரியாக அமைந்தது. புலமை இதழின் தோற்றம் குறித்து கூறுகையில் பொற்கோ, “உலகளாவிய நிலையில் உயர்ந்த தரத்தில் வைத்து மதிக்கத்தக்க ஆராய்ச்சி இதழ்கள் தமிழில் வெளி வரவில்லையே என்ற குறை என்னை உறுத்திக் கொண்டிருந்தது. 1970 வாக்கில் திருவாளர் வானமாமலை அவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் மிகச்சிறப்பான முறையில் ஒரு சிறந்த ஆய்விதழைத் தொடங்கினார். அப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர். இராமசுந்தரம் அவர்களும், டாக்டர். ஆர். பெரியாழ்வார் அவர்களும் நானும் அந்த இதழுக்கு மகிழ்ச்சியோடு எங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கினோம். அது ஒரு காலாண்டிதழாகத் தொடங்கப்பட்டது. இதழ் சிறப்பாக வெளிவந்தது. இருந்தாலும் அன்றைய தேவைக்கு அந்த இதழ் போதவில்லை” (2005 : III) எனக்கூறி ஆராய்ச்சி இதழைத் தொடர்ந்தே புலமை ஆய்விதழ் உருவானதைச் சுட்டிக்காட்டுகிறார்.

நா.வா. மறைவுக்குப்பின்....

ஆராய்ச்சியைத் தோற்றுவித்து நடத்திய நா.வா. 2.2.1980இல் காலமானார். அதுவரை 22 இதழ்கள் வெளிவந்தன. நா.வா. சேகரித்து வைத்திருந்த, இதழுக்கு என வந்திருந்த கட்டுரைகள் 23, 24, 25 எண்ணிட்ட இதழ்களாக நா.வா.வின் ஆராய்ச்சி என்ற பெயரில் வெளிவந்தன. தொடர்ந்து ஆசிரியர் குழு அமைக்கப்பட்டு வடிவ மாற்றத்தோடு (டிம்மி சைஸ்) வந்து கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் தமிழ் ஆய்வு இதழ்களில் ‘ஆராய்ச்சி’ புதிய கண்ணோட்டங்களை முன் வைத்த இதழாக, பின் வந்துள்ள பல சமூக ஆய்விதழ்களுக்கு முன்னோடியான இதழாக, தமிழ் ஆய்வில் இடது சாரிக் கருத்தோட்டங்கள் பரவலாக்கம் பெறத் துணை நின்ற இதழாக விளங்குகிறது எனலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com