Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

கட்டுரை

தலித் அரசியல் - நேற்று, இன்று, நாளை

அ. மார்க்ஸ்

தலித் அரசியல் என நாம் பொதுவாகச் சொன்ன போதிலும் தலித்களுக்குள் உள்ள மூன்று பெரிய உட்பிரிவுகளும் (பறையர், தேவேந்திர குலவேளாளர், அருந்ததியர்) ஒரே அளவில் அரசியல் மயப்பட்டிருக்கவில்லை.

Tiger பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த இரட்டை ஆட்சி முறையுடன் நவீன அரசியல் இங்கே தொடங்கியது எனக் கொண்டோமானால் தலித் பிரிவுகளின் பறையர்களே முதலில் அரசியல் உணர்வு பெறுகின்றனர். இதற்கான பல காரணங்களில் இப்பிரிவினர் சென்னையிலும் அதன் அருகிலும் கணிசமாக இருந்தது ஒரு முக்கியக் காரணம். தேவேந்திர குலவேளாளர்கள் பெரும்பாலும் தென்மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலுமே குவிந்திருந்தனர். அருந்ததியர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் சென்னையில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும்பான்மையோர் வேற்றுமொழி பேசக் கூடியவர்களாக (தெலுங்கு, கன்னடம்) இருந்ததனாலும் வரலாற்று ரீதியாக அவர்களாகப் பின் தங்கிய நிலைமையில் இருந்ததாலும் பறையர்கள் அளவு அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படவில்லை.

அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், முனுசாமிப்பிள்ளை, எம்.சி. ராஜா, சிவராஜ், மீனாம்பாள் என்பது போன்ற தொடக்ககால தலித் அரசியல் தலைவர்கள் எல்லோருமே பறையர் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. ராணுவ சேவை, கிறிஸ்தவ மிஷனரிகளின் கல்வி முயற்சிகள், பிரிட்டிஷ்காரர்களுடனான நேரடித் தொடர்பு (குறிப்பாக சமையற் பணிகள்) ஆகியவற்றின் மூலம் இந்த விழிப்புணர்வு உருவாகியது. எனினும் இது சென்னையைத் தாண்டி பெரிய அளவில் பரவவில்லை. தமிழகம் தழுவிய ஒரு அணிதிரட்டல் நடைபெறவில்லை. சககானந்தர் போன்ற ஒரு சிலர் சிதம்பரம் போன்ற பகுதிகளில் உருப்பெற்றபோதிலும் அவர்கள் ரொம்பவும் உள்ளூர் அளவிலான தலைவர்களாகவே இருந்தனர்.

தென் மாவட்ட தேவேந்திர குல வேளாளர்களைப் பொருத்தமட்டில் ஓரளவு போர்க்குணம் மிக்கவர்களாக அவர்கள் இருந்தபோதிலும் 1950களில் இமானுவேல் சேகரன் களத்தில் இறங்கிய பின்னரே அவர்கள் அரசியல் மயப்படத் தொடங்கினர். அதற்கும் முன்னதாகத் தேக்கம்பட்டி பாலசுந்தரராஜ் போன்ற ஒரு சிலரைக் குறிப்பிட்ட போதிலும் புதிதாய் உருவான தேர்தல் அரசியலைச் சார்ந்து அரசியல் உணர்வூட்டல் என்பது இமானுவேலுடனேயே தொடங்குகிறது. இமானுவேலுக்கு முன்னர் தேவேந்திரர்களில் பல உள்ளூர் தலைவர்கள் ஆதிக்க சாதியினரான தேவர்களின் உதவியாளர்களாகவே இருந்து வந்தனர்.

அருந்ததியர்களைப் பொருத்தமட்டில் இன்று வரையிலும் கூட அவர்கள் முழுமையாக அணி திரட்டப் படவில்லை. தலித் பிரிவினர்களிலேயே பல்வேறு அம்சங்களிலும் ஆகக் கீழானவர்களாக இருப்பவர்கள் இவர்கள். சென்னையைத் தலைநகராகக் கொண்டு நீதிக்கட்சி அரசியல் உருபெற்ற காலத்திலும்கூட அதில் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளைச் சார்ந்த உயர்சாதியினர் முக்கிய பங்கு வகித்தபோதிலும் அவர்கள் தெலுங்கு, கன்னடம் பேசிய அருந்ததியர்களை அணி திரட்டுவதிலோ, அவர்களின் நலன்களை முன்னெடுப்பதிலோ போதிய அக்கறை காட்டவில்லை.

தலித் மக்களின் கோரிக்கைகளைத் தொகுத்து, முதன்மைப்படுத்தி இயங்கியவர்களாக பண்டிதரையும், சீனிவாசரையும் நாம் பார்க்கிறோம். சம காலத்தில் நீதிக்கட்சி, காங்கிரஸ் இயக்கங்களில் பெருந்தலைவர்களெல்லாம் இருந்தபோதிலும் இப்பணியைத் தலித் தலைவர்களே முன்னெடுக்க வேண்டியதாயிற்று. சட்டமன்றத்தில் தீண்டாமை ஒழிப்புச் சட்டங்களை முன்மொழிந்து நிறைவேற்றியவராக இரட்டைமலை சீனிவாசரையே நாம் பார்க்கிறோம். அதே போல பண்டிதர் தனது இதழியப் பணிகளின் மூலம் கலாச்சாரக் களத்தில் மட்டுமின்றி சாதிக் கொடுமைகளுக்கு எதிரான செயற்பாடுகளையும் மேற்கொண்டார்.

எனினும், இவர்களின் பணி கூட பிரிட்டிஷ் அரசிடம் விண்ணப்பம் அளித்துத் தம் குறைபாடுகளை நீக்கிக் கொள்வது என்பதாகத்தான் இருந்ததே ஒழிய பெரிய அளவில் பறையர் சமூகத்தை அணிதிரட்டும் முயற்சி அவர்களிடம் இல்லை. வட நாட்டில் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இரட்டை வாக்குரிமை, இந்து மதத்தை விட்டு வெளியேறுதல் என்கிற செயல்பாடுகளை முன்னெடுத்தபோது தமிழக தலித் தலைவர்கள் அவற்றிலிருந்து ஒதுங்கியே இருந்தனர். சில அம்சங்களில் எதிர்ப்பாகவும் இருந்தனர்.

1930களின் பிற்பகுதியில் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையை வீழ்த்திய பின்னர், அதை ஈடுகட்டுவதை போல மகாத்மா காந்தி இந்தியாவெங்கிலும் ஆலய நுழைவு, தீண்டாமை ஒழிப்பு முயற்சிகளை மேற்கொண்டார். தமிழகத்திலும் இது எதிரொலித்தது. மதுரை போன்ற இடங்களில் ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றன. இதை ஒட்டி காங்கிரஸ் கட்சியில் கணிசமான தலித்துகள் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.

பெரிய அளவில் விவசாயக் கூலிகளாக தலித்துகள் (பறையர் மற்றும் தேவேந்திரர்கள்) குவிந்திருந்த கீழத் தஞ்சையில் 1940களில் பொதுவுடைமை இயக்கம் மலரத் தொடங்கியது. பி. சீனிவாசராவ் என்கிற ஒரு வரலாற்று நாயகரின் முயற்சி இதில் மிக முக்கியமானது. மிகப் பெரிய பண்ணை எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கூலி உயர்வு பெற்றது மட்டுமின்றி தீண்டாமைக் கொடுமைகளும் பேரளவு ஒழிவதற்கு பொதுவுடைமை இயக்கம் காரணமாகியது. எனினும் கம்யூனிஸ்ட் கட்சி அக்காலத்தில் கொண்டிருந்த இறுக்கமான வர்க்கப் பார்வை சாதிப் பிரச்சினைக்கு அதற்குரிய அளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நடைபெற்றப் போராட்டங்களில் உள்ளார்ந்திருந்த சாதியக் கூறுகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இன்றும் கூட சாதிய உணர்வுகள் முற்றாக மறையவில்லை.

பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் தலித் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டது. எனினும் சூத்திரர் + ஆதி திராவிடர் என்கிற ஒற்றுமை அதனாலும் பூரணமாக உருவாக்கிவிட இயலவில்லை. 1937க்குப் பின் திராவிட நாடு என்கிற கோரிக்கையை முன் வைத்துப் பெரியார் இயங்கத் தொடங்கியபோது, தலித் மற்றும் முஸ்லிம் பிரச்சினைகள் மீதான பெரியாரின் கவனம் குறையத் தொடங்கியது. திராவிட நாடு கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் முடிந்துவிடும் என்பதாக அவர் நம்பினார். இந்நிலையில் 1940களின் இறுதியில் அம்பேத்கர் அவர்கள் ‘அட்டவணைச் சாதியினரின் கூட்டமைப்பை’ உருவாக்கிய போது சிவராஜ் போன்ற தலித் தலைவர்கள் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் பாரம்பரியத்திலிருந்து விலகி அதில் இணைந்தனர். 1947 சுதந்திரத்தையும் 1950 அரசியல் சட்டத்தையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார். தேர்தலில் பங்கு பெறுவதில்லை என்கிற நிலைபாட்டை எடுத்தார். தேர்தல் அரசியலை நோக்காகக்கொண்டு தி.மு.க. உருவானபோது தலித் அரசியல் தலைவர்கள் பலரும் அதை நோக்கிச் சென்றனர். எனினும் தி.மு.க.வில் இருந்த ஆதிக்க சாதியினரின் மேலாண்மையில் அடித்தள தலித் மக்கள் வெறுப்புற்றே இருந்தனர். 1970களில் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கிய போது பிற்படுத்தப் பட்டவர்களிலும் இதுகாறும் அரசியல் அதிகாரம் பெறாத தேவர்கள் போன்ற சாதியினர் மட்டுமின்றி தலித்களும் கணிசமாக அதில் இணைந்தனர்.

* * * * *
1960களின் இறுதியில் உலகெங்கிலும் திரும்பத் தொடங்கிய அடையாள அரசியல், 1990களில் அம்பேத்கர் நூற்றாண்டு மற்றும் மண்டல் எதிர்ப்புப் போராட்டங்களை ஒட்டி தமிழகத்தில் புதிய தலித் அரசியல் உருவெடுத்தது. பல்வேறு அரசியல் கட்சிகளிலும் இருந்து செயல்படுவது என்பதற்கு மாறாக தலித் என்கிற தனித்துவமான அடையாளத்துடன் தனி அரசியல் அமைப்புகளாக உருவாகும் நிலை ஏற்பட்டது. முன்னதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட இயக்கங்களின் வெறுப்புற்ற தலித் தலைவர்கள் ஆங்காங்கு உருப்பெற்ற தீண்டாமைக்கு எதிரான தீவிரமாக போராட்டங்களை எடுத்திருந்தபோதிலும் (எ-டு: சந்திரபோஸ், அரங்க குணசேகரன். டி.எம். மணி) அவர்கள் உள்ளூர் மட்டங்களிலான தலைவர்களாகத்தான் இருந்தார்களே ஒழிய தலித் அரசியல் என்கிற கருத்தாட்டம் உருப்பெறவில்லை.

புதிய தலித் அரசியலின் எழுச்சி மிகுந்த வெளிப்பாடுகளாக திருமாவளவனின் ‘விடுதலைச் சிறுத்தைகளும்’, டாக்டர் கிருஷ்ணசாமியின் ‘புதிய தமிழகமும்’ அமைந்தன. முன்னது பறையர்களைச் சார்ந்தும் பின்னது தேவேந்திரர்களைச் சார்ந்தும் இருந்தன. சென்னையை மையமாகக் கொண்டும், புதிய சூழலில் ஊடகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் இவர்கள் செயல்படத் தொடங்கியவுடன் தமிழகம் தழுவிய அரசியல் கட்சிகளாக இவர்கள் உருப்பெற்றனர். ஊடக வெளிச்சம் தங்கள் மீது விழுவதற்குச் சாத்தியமற்றுப் போன உள்ளூர்த் தலைவர்கள் அவர்கள் என்னதான் வலுமிக்கப் போராட்டங்களை நடத்தியவர்களாகவும், தியாகங்கள் செய்தவர்களாகவும் இருந்தபோதிலும் வலுவிழக்கத் தொடங்கி திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் தமிழகம் தழுவிய தலைவர்களாயினர்.

தொன்னூறுகளில் உலகெங்கிலும் கம்யூனிசச் சித்தாந்தத்திற்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து பல மறுபரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்ட போது இங்குள்ள சாதியம் குறித்த கரிசனம் அறிவு ஜீவிகளின் மத்தியில் மேலெழுந்தது. மிகுந்த உற்சாகத்துடன் பெரியார், அம்பேத்கர் முதலியோர் மறுவாசிப்பிற்குள்ளாயினர். அம்பேத்கர் நூற்கள் ஏராளமாக அச்சாயின. தலித் அரசியல், தலித் இயக்கம் முதலிய கருத்தாக்கங்களை இவர்கள் உற்சாகத்துடன் உயர்த்திப் பிடித்தனர். பெரிய அரசியல் கட்சிகளெல்லாம் சற்றே அதிர்ச்சியுற்றன. கடந்த ஓரிரு ஆண்டுகள் முன்புவரை இந்நிலை தொடர்ந்தது.

* * * * *

தமிழகத்தில் தேர்தல் வர உள்ள இன்றைய சூழலின் பின்னணியில் தலித் அரசியலை நாம் இன்று மதிப்பிட வேண்டியுள்ளது. இரண்டு அம்சங்கள் நம் கவனத்தில் வருகின்றன.

1. சென்ற சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களைக் காட்டிலும் கூட்டணிகளில் பேரம் பேசும் சக்தி இன்று தலித் அரசியலுக்குக் குறைந்துள்ளது. திருமாவளவனைக் கூட்டணியில் சேர்க்க இயலாது என்கிற நிலையை தி.மு.க. எடுக்கிற போது அவருக்கு அனுதாபம் காட்ட இன்று யாருமில்லை (பா.ம.க. தவிர). கூப்பிட்டுப் பெறக்கூடிய அளவிற்கான ஒரு அரசியல் சக்தியாக கிருஷ்ணசாமி இன்று இல்லை. அவரது அமைப்பு சிதைந்து, அணிகள் சிதறியுள்ளன. அருந்ததியர் இன்னும் முழுமையாக அமைப்பாக்கம் பெறவில்லை.

2. தலித்களைப் போலவே பின் தங்கியவர்களையும் அரசியல் விழிப்புணர்வு குறைந்தவர்களாகவுமிருந்த முஸ்லிம்களில் கடந்த பத்தாண்டு கால ஒருமித்த செயற்பாடுகளின் விளைவாக இன்றைய தேர்தலுக்கான முஸ்லிம்களின் கோரிக்கைகள் உருத்திரட்சி பெற்றுள்ளன. இட ஒதுக்கீடு, சிறையிலுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலைச் செய்தல் என்பனவே இன்றைய முஸ்லிம்களின் கோரிக்கைகள். இவற்றின் மீது சாதகமான முடிவெடுப்பவர்களின் பக்கமே இன்று முஸ்லிம்களின் ஆதரவு அமையப் போகிறது. முஸ்லிம்களுக்கு இப்படியான கோரிக்கைகள் உருத்திரட்சி பெற்றிருப்பதுபோல தலித்களின் கோரிக்கைகள் இன்று ஒரு தேர்தல் பிரச்சினையாக உருப்பெறவில்லை.

தலித்களுக்கு கோரிக்கைகள் இல்லை என்பதல்ல. இதன் பொருள் இரட்டை வாக்குரிமை, பஞ்சமி நில மீட்பு, தனியார் துறைகளின் இட ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு, தலையில் மலம் சுமக்கும் இழிவை நீக்குதல் முதலான கோரிக்கைகள் கடந்த காலத்தில் முன் வைக்கப்பட்ட போதிலும் இன்று அவை தேர்தல் பிரச்சினைகளாக உருப்பெறவில்லை. இவற்றில் சில கோரிக்கைகள் மாநில அளவில் தீர்க்க இயலாதவை என்றபோதிலும் இவற்றை அரசியல் கட்சிகள், கொள்கை அளவில் ஏற்பது என்பது கூட இன்று ஒரு கோரிக்கையாக அமையவில்லை.

இதற்கான காரணங்களை பரிசீலிப்பது எதிர்கால தலித் அரசியலுக்குப் பயனுடையதாக இருக்கும். ஒரு குறிப்பான அடையாளத்துடன் கூடிய மக்களை அணி திரட்டிய தமிழக தலித் தலைவர்கள் அவர்களை அரசியல்படுத்தத் தவறினர். அம்பேத்கர் நூற்களைப் படிப்பது, அரசியல் வகுப்புகள் எடுப்பது முதலான முயற்சிகள் மேற்கொள்ளப்படவே இல்லை. மாறாகத் தனி நபர் வழிபாடு என்கிற வகையில் அமைப்புகள் உருவாயின. தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான தன்னம்பிக்கை, சுயமரியாதை, தமது தனித்துவம் குறித்த பெருமிதம் முதலியன இவ்வியக்கங்கள் கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கிய பாராட்டுக்குரிய விளைவுகள் என்பதில் யாருக்கும் அய்யம் இருக்க இயலாது. தமிழகமெங்கும் ஆங்காங்கு காட்சியளிக்கும் மீசை முறுக்கும் திருமாவளவனின் படங்கள் தலித் தன்னம்பிக்கையின் குறியீடுகளாகவே அமைகின்றன.

எனினும் இதற்கிணையாக அரசியல் மயப்படாத நிலையின் விளைவாக இவ்வமைப்புகள் உள்ளூர் மட்டங்களில் பெரும்பாலும் கட்டப் பஞ்சாயத்து செய்வனவாகக் குறுகியுள்ளன. கீழத் தஞ்சை போன்ற இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி கலகலத்து தலித்கள் அனைவரும் அவற்றிலிருந்து விலகிவிடுவார்கள் என்கிற நிலை இன்று மாறிவிட்டது. தலித் அமைப்புகளின் பலவீனமே இதற்குக் காரணம். அமைப்பு பலவீனம் மட்டுமன்று, கருத்தியப் பலவீனமும் கூட.

டாக்டர் கிருஷ்ணசாமியைப் பொருத்தமட்டில் அமைப்பு சிதைந்ததற்கு அவரது தனிப்பட்ட அணுகுமுறையே பெருங் காரணம். முறையான அமைப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதது, அணிகளை மதிக்காமை, சில ஆலோசகர்களை அதிகமாக நம்புவது, ஆடம்பரமான அரசியல் நடவடிக்கைகள், அதீத தனி நபர் வழிபாடு முதலியன அவரது வீழ்ச்சிக்குக் காரணமாகிவுள்ளன. இடதுசாரிப் பின்புலமுள்ள டாக்டரின் அரசியல் பார்வை வரவேற்கத்தக்கதாக இருந்தபோதிலும் (பார்க்க: அவரது கோவை அறிக்கை) மேற்குறித்த விமர்சிக்கத்தக்க செயற்பாடுகள் அவரை வீழ்த்தின.

ஆனால் பின்தங்கியுள்ள அருந்ததியர்கள் இன்னும் முழுமையாக அமைப்பாக்கம் பெறவில்லை. இரா. அதியமானின் தலைமையில் இயங்கும் “ஆதித் தமிழர் பேரவை’ நம்பிக்கையூட்டக்கூடிய அமைப்பாக உள்ளது. எனினும் தமிழகம் தழுவியதாக அது இன்னும் மாறவில்லை. மீடியா கவனம் பெறுவதற்கு ஏற்ப சென்னையில் அவர்களுக்கு தலைமையகமும் இல்லை. எல்லாவற்றின் மேலாக “ஆதித்தமிழர்” என்கிற அடையாளத்தை வற்புறுத்துவது, தமிழ்ப் பெயர் மாற்ற அரசியலில் ஆர்வம் காட்டுவது முதலிய செயற்பாடுகள் சென்னை போன்ற இடங்களிலுள்ள மொழிச் சிறுபான்மையினரான அருந்ததியர்களிடமிருந்து அவர்களை அன்னியப்படுத்தி வைத்திருக்கிறது. குணா வழி அரசியலையே நேரடியாகவோ மறைமுகமாகவோ பின்பற்றுவதை தமிழ்த் தேசியர்கள் இவர்கள் என்னதான் தமிழர் அடையாளம் சூட்டிக் கொண்டாலும் ஏற்கப் போவதில்லை. அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என குணா எழுதியது குறிப்பிடத்தக்கது.

தலித் அரசியல் 90களில் எழுச்சியுடன் இங்கே உருப்பெற்றபோது முன் வைக்கப்பட்ட அம்பேத்கர் பார்வைகள் இயக்க கொள்கைகளாக மாற்றப்படவில்லை. அம்பேத்கர் ஒரு ‘திருஉரு’வாக மட்டுமே ஏற்கப்பட்டார். அவரது இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை புறந்தள்ளப்பட்டன. சாதி எதிர்ப்பு. பார்ப்பன எதிர்ப்பு என்பதற்குப் பதிலாக கம்யூனிச எதிர்ப்பு, திராவிட இயக்க எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு என்பதாகச் சிறுத்தைகளின் அரசியல் அமைந்தது. கீழத் தஞ்சை போன்ற இடங்களில் அணிகள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட்களிடம் இருந்த நிலைமையில் அவர்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை தலித் இயக்கங்களுக்கு இருந்ததை நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் இது விமர்சனம் என்கிற நிலையைத் தாண்டி கம்யூனிச, பொதுவுடைமை கருத்தியல்கள் மீதான எதிர்ப்பாகவே மாறியது. “உண்டியல் குலுக்கிகள்” என்கிற அளவிற்குக் கம்யூனிஸ்ட்களைத் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்யும் தன்மையைச் சில தலித் அறிவு ஜீவிகள் கூடக் கடைபிடித்தனர். பெரியார் எதிர்ப்பும் திராவிட எதிர்ப்பும் எந்த நிலைக்குப் போனதென்றால் இன்று கூட்டணிக்குள் சிறுத்தைகளை இணைக்க முயல்வோர் கலைஞர் எழுப்பும் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாத நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

“நாளெல்லாம் திராவிட இயக்கத்தை எதிர்த்துவிட்டு இன்று கூட்டணிக்குள் நுழைந்தால் அவர்களின் அணியிலிருந்து வாக்கு நமக்கு விழும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்று கலைஞர் எழுப்பும் கேள்விக்கு யார்தான் என்ன பதில் சொல்ல இயலும்? அடையாள அரசியலிலிருந்து தேர்தல் அரசியலுக்குச் செல்லும்போது யாருடன் இணைகிறோம் (என்னமாதிரி அகன்ற அடையாளத்தை நோக்கிச் செல்கிறோம்) என்பது முக்கியம். டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கும் இந்தப் பிரச்சினை இருந்திருக்கிறது. 1920களில் அவர் அரசியலைத் தொடங்கும்போது ‘ஹிதகரிணி பகிஷ்கரித் சபா’ என்கிற பெயரில் இயக்கத்தைத் தொடங்குகிறார். அதாவது ‘ஒடுக்கப் பட்டோர் விடுதலைக் கழகம்’ 1930களில் தேர்தல் அரசியலுக்கு வரும்போது ‘ஒடுக்கப்பட்டோர்’ என்கிற அடையாளத்தைச் சற்றே விரித்து ‘Independent Labour party’ என கட்சிக்குப் பெயர் சூட்டுகிறார்.

‘ஒடுக்கப்பட்டோர்’ என்கிற அடையாளத்திலிருந்து “தொழிலாளர்” என்கிற அடையாளத்திற்குச் செல்கிறார். “சுதந்திரத் தொழிலாளர் கட்சி” எனப் பெயரிடுகிறார். அது பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்கும்போது, “ஆம் தொழிலாளர்கள் என்றால் அது ஒடுக்கப்பட்டவர்களையும் உள்ளடக்கும்தானே?” என்றார். எஸ்.ஏ. டாங்கேயுடன் ஒரே மேடையில் பேசுகிறார். கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டங்களை மேற்கொள்கிறார்.

1940களில் பல்வேறு காரணங்களால் அவர் மீண்டும் அடையாள அரசியலுக்குத் திரும்பியபோது ‘Scheduled caste federation’ (‘அட்டவணைச் சாதிக் கூட்டமைப்பு’) என்கிற பெயரைத் தேர்வு செய்கிறார். 1950களில் மீண்டும் தேர்தல் அரசியலுக்குத் திரும்பும்போது ‘குடியரசுக் கட்சி’ என்கிற பெயர் அவர் தேர்வாகிறது. சோஷலிஸ்டுகள், லோகியாவாதிகள் அவரது நட்புச் சந்திகளாகின்றனர். கன்ஷிராம் ‘பகுஜன்’ என்ற அடையாளத்தைக் கட்டமைத்து தாழ்த்தப்பட்டவர்களும் மிகப் பிற்படுத்தப்பட்ட சக்திகளும் இணைந்து பார்ப்பன சதியை, ஆதிக்கத்தை எதிர்ப்பது என்கிற நிலைபாட்டை முன் வைத்தார். முஸ்லிம்கள் அதனால் இயல்பான கூட்டாளியாயினர்.

ஆனால் திருமாவளவன் இப்படியான ஒரு அகன்ற அடையாளத்தை நோக்கிச் சென்றபோது தமிழ்த் தேசிய அடையாளத்தைத்தான் தேர்வு செய்தார். கம்யூனிஸ்ட்களையும், பெரியாரியர்களையும், திராவிட இயக்கத்தவரையும் எதிரியாகப் பார்த்த அவர் தமிழ்த் தேசியர்களை நட்பு சக்திகளாக அணுகினார். அவரது கடந்த சில ஆண்டுச் செயற்பாடுகள் அனைத்தும் தமிழ்ப் பாதுகாப்பு, ஈழத் தமிழர் நலன் என்கிற அடிப்படையில் அமைந்தன. தலித் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன.

இன்றைய தேர்தல் சூழலில் கூட, சென்ற பிப்ரவரி 14 அன்று அவர் நடத்திய பெரிய மாநாடு ஈழத் தமிழர்களின் பாதுகாப்பிற்கானதாகவே இருந்தது. “தேர்தலை மனதில் வைத்து விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தொடங்கப் படவில்லை. இந்த இனத்தின் விடுதலைக்காக, மொழியின் விடுதலைக்காகத் தொடங்கப்பட்ட இயக்கம் தமிழ்த் தேசியம், சாதி ஒழிப்பு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது” என அம்மாநாட்டில் அவர் பிரகடனம் செய்தார். (தினமணி, பிப்ரவரி 15, 2006). ஆக தலித் விடுதலையைக் காட்டிலும் தமிழ்த் தேசியம் அவருக்கு முக்கியமாகிறது. ‘சாதி எதிர்ப்பு’ செய்வதில் எல்லாம் அடங்கி விடுகிறது எனச் சாமர்த்தியம் பேசினாலும் எதற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இவ்வளவும் சொல்வதால் தலித் அரசியலுக்கான நியாயம் மறைந்து விட்டது என நான் சொல்லவரவில்லை. இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு தலித் இயக்கம் அமைந்தால் எதிர்காலத்தில் அதன் பொருத்தப்பாடு கூடும் என்பதே என் கருத்து. தொகுப்பாகச் சொல்வதானால்:

1. தலித் இயக்கத்திற்குக் கருத்தியல் தெளிவு தேவை. அம்பேத்கரின் வழிகாட்டலைக் காட்டிலும் சிறந்த கருத்தியல் என்ன இருக்க முடியும்? “இந்த நாட்டுப் புரட்சியின் இரு பெரும் எதிரிகள் பார்ப்பனியமும் முதலாளியமுமே” என்கிற அளந்து வழிகாட்டல் இன்றைக்கும் என்றைக்கும் பொருத்தமானதே. இன்றைய சூழலில் ‘முதலாளியம்’ என்பதில் உள்நாட்டு முதலாளியத்தோடு உலக முதலாளியமும் உள்ளடங்குகிறது என்பதை விளக்க வேண்டியதில்லை.

2. தனிநபர் வழிபாடு குறைக்கப்பட்டு அமைப்புகளுக்கு ஜனநாயம் புகுத்தப்படவேண்டும்.

3. அணிகளுக்கு அரசியல் பயிற்சி அளிக்கப்படவேண்டும். கட்டப் பஞ்சாயத்து முதலான செயற்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.

4. சகதலித் அமைப்புகள், இடது சாரிகள், சிறுபான்மையினர் ஆகியோர் தோழமைச் சக்திகளாக அமைக்கப்படவேண்டும். இத்தகைய அணி ஒன்று உருவாவதற்கான பெரும் பொறுப்பு இடதுசாரிகளுக்கு உண்டு. கடந்த காலத் தவறுகள் குறித்த மறு பரிசீலனைகளுடன் அவர்கள் தலித் அரசியலை முழுமையாக அங்கீகரிக்க வேண்டும்.

5. தனித்துவமான உட்சாதி இயக்கங்கள் தவிர்க்க இயலாது என்ற போதிலும் தலித் அமைப்புகளுக்கு இடையேயான ஒற்றுமை கட்டமைக்கப்படவேண்டும்.

புதிய உலக மயச் சூழலில் தலித் மக்களின் கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு வாக்குரிமை அல்லது விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் என்கிற வகையில் தேர்தல் சீர்திருத்தம், தலித்களுக்கு நிலங்கள் வழங்குதல், தனியார் துறையில் இட ஒதுக்கீடு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை மேலும் இறுக்கமாகச் செயல்படுத்துதல், அரசு நிதி ஒதுக்கீடு / சிறப்புக் கூறுத் திட்டங்கள் முதலியவற்றைச் சரியாகச் செயற்படுத்துதல், இரட்டைத் தம்ளர் முறை முதலிய தீண்டாமை, ஒதுக்கல்களை முறியடித்தல், தலையில் மலம் அள்ளும் முறையை ஒழித்தல் முதலான தலித் கோரிக்கைகளை வலுவாக முன்னெடுக்கப்படுதல் அவசியம்.

இத்தகைய கோரிக்கைகளை முன் வைத்து தலித் அமைப்புகள் கூட்டாக இணைந்து செயற்படும்போது தேர்தல் கூட்டணிகள் தாமாகவே வந்து ஆதரவு நாடுதற்கும் தலித் கோரிக்கைகள் தேர்தல் பிரச்சினைகளாக மாறுவதற்கும் வழி ஏற்படும்.

(இந்தக் கட்டுரை திருமாவளவன் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கு முன்பு எழுதப்பட்டது).



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com