Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜுலை - ஆகஸ்ட் 2007

கட்டுரை

திருத்தக்கதேவர் - சில சிந்தனைகள்
கு. மகுடீஸ்வரன்

சமணர் சங்கம் மருவிய காலத்திலேயே தொடர்நிலைச் செய்யுளான ‘சிலப்பதிகாரத்தை’ச் செய்தனர். சோழர் கால ஆரம்பத்தில் சிந்தாமணி, சூளாமணி என்பவற்றை இயற்றினர். “சோழப்பெரு மன்னர் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு சிறக்கிறது - செல்வச் செழிப்பு மிகுகின்றது. அக்காலம் காவியகாலம் எனப்படுகிறது. காவியம், மக்கள் இவ்வுலகிலே வாழவேண்டிய நெறியை எடுத்துக்கூறுகிறது எனலாம். பூரணத்துவம் பெற்ற வாழ்வு எது என்பது பற்றிய சோழர் காலச்சிந்தனை, சிந்தாமணி, சூளாமணி, கம்பராமாயணம் என்பன எடுத்துக்கூறும் கதைகளிலிருந்து புலனாகிறது” என ஆ. வேலுப்பிள்ளை கூறுவார். பூரணத்துவம் பெற்ற வாழ்வைக் கூறுவதாகக் கூறப்படும் சிந்தாமணி கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதை இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த நூலைப்படைத்த திருத்தக்கதேவர் தோன்றிய ஊரைக்கூறுவதில் பல மாறுபாடுகள் காணப்படுகின்றன.

‘திருத்தகு மாமணியான தேவர் பிறந்தது கொங்கு நாடே’ அதுவும் பெருவஞ்சி என அழைக்கப்படும் தாராபுரத்திற்கு அருகிலுள்ள ‘வீராட்சி மங்கலம்’ என்பதைச் சான்றுகளுடன் காண்போம்.

சோழர் குலமா?

கி.பி. 1868 இல், முதன் முதலில் சிந்தாமணியின் நாமகள் இலம்பகம் மட்டும் ரெவரெண்ட் எச். பவர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. ஆனால் 1887இல் தான் உ.வே.சாமிநாத அய்யங்காரால் நூல் முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டது. உ.வே.சா., சிந்தாமணி முன்னுரையில் நூலாசிரியர் வரலாறு கூறுமிடத்து “இந்நூலாசிரியராகிய திருத்தக்க தேவருடைய காலம், இடம், அவரை ஆதரித்த பிரபுவின் பெயர் முதலிய வற்றுள் யாதொன்றும் தமிழ் நூல்களால் வெளிப்படையாக விளங்கவில்லை.

‘முந்நீர் வலம்புரி (3143) என்னும் ஓம்படைச் செய்யுளின் உரையில் இந்நூலாசிரியரை, ‘சோழர் குலமாகிய கடலிலே பிறந்த வலம்புரி’ என்று நச்சினார்க்கினியர் எழுதியிருந்ததால், இவர் சோழர் குலத்தில் பிறந்தவரென்பதும் நச்சினார்க்கினியருரைச் சிறப்புப் பாயிரத்தில் உள்ள ‘வண்பெருவஞ்சிப் பொய்யா மொழிப்புகழ் மையறு சீர்த்தித் திருத்தகு முனிவன்’ என்னும் வாக்கியத்தால், இவன் வஞ்சியென்னும் ஊரிலிருந்த பொய்யாமொழி என்பவரால் புகழ பெற்றவர் என்பதும் வெளியாகின்றன” என்பர். நச்சினார்க்கினியரின் உரையைக் கொண்டே ‘சோழர்குலம்’ என்ற சொல்லின் மூலம் திருத்தக்க தேவர் சோழநாட்டைச் சேர்ந்தவர் என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் முடிவுக்கு வருகின்றனர். சோழ குலத்தின் பல கிளைகள் கொங்கு, தொண்டை மண்டலங்களையும் ஆண்டுள்ளனர் என்பது இங்குக் குறிக்கத்தக்கது.

கொங்குச் சோழர்

கொங்கில் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே சோழர்களுடைய ஆட்சி தோன்றி விட்டது. ஆதித்த சோழன் கி.பி. 880இல் பட்டத்திற்கு வந்தபின் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். மேலும் கொங்கு, சோழ நாட்டின் ஒரு பகுதியாக வீரசோழ மண்டலம், அதிராச மண்டலம், சோழ கேரள மண்டலம் என்று பெயர் பெற்றிருந்ததைத் தம் நூலில் வைத்தியநாதன் குறிப்பார் (K.S. Vaidyanathan: 1998) மேலும் கொங்கு நாட்டு மக்கள் பலருக்குச் ‘சோழன்’ என்ற அடைமொழி உள்ளதைச் சோழன் காடவூரான், சோழன் காளி வீரவிக்கரம சோழியாண்டான் (ARE 211 of 1909) எனக்கல் வெட்டுக்களில் இடம் பெறும் பெயர்கள் காட்டுகின்றன.

“வீராட்சி மங்கலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரமியம் திருவலஞ்சுழிநாத சுவாமி ஆலயக்கல்வெட்டில்,

அக்காலத்தில் வீரசங்காத சதுர்வேதி மங்கலத்தில் (பிராமியம்) காமக்கண்ணி சோமாசி என்ற பிராமணன் இருந்தான். அவன் ராஜதுரோகமான காரியங்களைச் செய்ததனால் அவனுடைய நிலம் அரசனால் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு அந்நிலத்தை ஒரு பெரியான் சோழன் என்ற வீரசோழ காங்கயன் விலைக்குப் பெற்றுக் கொண்டான்” என்ற செய்தி உள்ளது. இவ்வாறு ‘சோழ’ குலப்பெயரை வைத்துக் கொள்வது அவ்வப்போது கொங்குப் பகுதியில் அதிகமாக இருந்ததைக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. ஆகவே ‘சோழ குலம்’ எனத் திருத்தக்க தேவர் சுட்டப்பட்டது, கொங்கிலிருந்த சோழர் கிளைகளில் ஒன்றே எனலாம்.

பெருங்கதையும் சிந்தாமணியும்

“தமிழிலுள்ள கொங்கு நாட்டுக் காப்பியமான பெருங்கதைத் தோன்றிய காலம் கி.பி. 700 என்று கொள்ளுதல் தகுதியாம். இப்பெருங்கதையைச் சிந்தாமணி பல இடங்களில் எடுத்தாளுகின்றது. கருத்தும், தொடர்களும் சொல்லும் பல இடங்களில் ஒற்றுமைப்பட்டுச் செல்லுகின்றமை உ.வே. சாமிநாதய்யர் சிந்தாமணிப் பதிப்பின் ஒப்புமைப் பகுதியாலறியலாம் என்பார் வையாபுரிப் பிள்ளை. (1992-இலக்கியச் சிந்தனை)

கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளில் ஒன்றான குறும்பு நாட்டில் ஓர் ஊராக விளங்கிய விசயமங்கலத்தில், கொங்கு வேளிர் என்பவரால் இயற்றப்பட்டது பெருங்கதை. விசயமங்கலம் சந்திரபிரபா தீர்த்தங்கரர் கோயிலில் பெருங்கதைத் தொடர்பான கல்வெட்டும் அமைந்துள்ளது. கொங்கு ஆவணங்களில், பெருங்கதையில் வரும் உதயணன் பல இடங்களில் ‘கரிதனில் உதயன்’, ‘கரிக்கு உதயன்’, ‘கடகரி உதயன்’ என்று சுட்டப்பெறுகிறான். சிறு கிராமங்களில் எழுதப்பட்ட நாட்டுப்புற மக்களின் ஆவணங்களில் இப்புகழ் மொழிகளைக் காண்கிறோம். அப்படிப்பட்ட கொங்கு நாட்டுக்காப்பியமான பெருங்கதையோடு சிந்தாமணி ஒற்றுமைப் பட்டுப்போவதென்பது அவையிரண்டும் பண்பாடு இயைந்த ஒரு பகுதியில் தோன்றினமையே என்பதை உறுதிப்படுத்துகிறது.

சிந்தாமணியும் கொங்கும்

கொங்கு நாட்டில் தோன்றிய சிந்தாமணியில் வரும் பெரும்பாலான பழக்க வழக்கங்கள் கொங்கில் இன்றும் காணப்படுகின்றன.

சிந்தாமணியின் மூலக்கதையாக விளங்கும் ஸ்ரீபுராணம், சீவகன் கட்டியங்காரனைக் கொன்று தன் நாட்டினைக் கைப்பற்றுமளவும், அவன் தன் தாயினைத் தண்டகாரணியத்திலே இருக்கச் செய்வதாகவும் கூறும். ஆனால் திருத்தக்க தேவரோ, சீவகன் தன் தாயைத் தன் தாய்மாமனாகிய கோவிந்தனிடம் சேர்ப்பித்ததாகப் பாடுவார். இம்மாற்றம் ‘மாமன்’ எனும் உறவு கொங்கு நாட்டில் மரியாதைக்குரிய உறவாகக் கொள்ளப் பட்டிருந்ததன் தாக்கம் எனலாம். அதே போல் தன் மாமனாகிய கலுழவேகனைச் சீவகன் ‘மன்பெரிய மாமழை மகிழ்ந்து திசை வணங்கு’வதாகவும் காட்டுவார்.

கொங்கில் முருக வழிபாடு அதிகமிருப்பதைக் காணலாம். சிந்தாமணியும் பல இடங்களில் குன்றேறி நிற்கும் முருகனைக் காட்டுகிறது.

“குன்றம் மார்பு அறிந்து வெள்வேல் குருமிமா மஞ்ஞை ஊர்ந்து / நின்றமால் புருவம் போல நெரிமுரி புருவமாக்கி” எனக் கூறிக் குருகு பெயர்க் குன்றத்தைப் பிளந்து மயில் மீது ஏறியமர்ந்த முருகன் வெகுளியால் புருவத்தை நெரித்ததைச் சச்சந்தனுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறது.

கொங்கு நாட்டில் ‘சாமி’ என்று முடியும் பெயர்கள் தான் அதிகம் வழங்கி வருகிறது. பழனிச்சாமி, பெரியசாமி, கந்தசாமி, கருப்புச்சாமி.... என வாய் நிறைய அழைப்பதை இன்றும் கொங்கு நாட்டுச் சிற்றூர்களில் காண முடிகிறது. திருத்தக்க தேவரும் சீவகனைச் ‘சாமி’ என்றே பல இடங்களிலும் அழைக்கிறார். ‘திருமிக்குடைச் செல்வன்றிறற்சாமி நனி காண்க’ என்ற வரி அதனைக் காட்டும்.

கொங்கு வட்டாரச் சொற்கள் பல சிந்தாமணியுள் நிறைந்து கிடைக்கின்றன. ‘அரக்கி’ விடுதல் எனும் சொல் ‘அமுக்கி’ டுதல் எனும் கொங்குப் பொருளிலேயே பயிலப் பட்டுள்ளது. ‘இந்த ஆளுக இலெசுப்பட்ட ஆளுல்ல’ என்று சிலரைக் கூறுவது வழக்கு. இங்கு ‘இலேசு’ எனும் சொல் சிறுதை (1;10;770) என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.

கொங்கு நாட்டில், ஒன்றுமில்லாதவனை மிகக் கடுமையாக ‘வெறுவாய்க்கிலை கெட்டவன்’ என்று திட்டுவார்கள். திருத்தக்க தேவர் தம் காப்பியத்தில் சீவகன் வேடனைக் காணும் போது, ‘வாழ்மயிர் கரடி யொப்பான் வாய்க்கிலை யறிதலில்லான்’ (1230) என்றே கூறுவார். அதே போல் ‘முகர்ந்து’ என்பது கொங்கில் ‘மோந்து’ என வழங்கும். தேவரும் அவ்வாறே பல இடங்களிலும் ‘கண் கழுநீர் மேல் விரலால் கிழித்து மோந்தார் (2700) என்பது போலக்கூறுவார்.

சிந்தாமணியும், கொங்குப் பெயர்களும்

“கொங்கு நாட்டில் வாழ்ந்த பெருமக்கள் பலர் ‘சிந்தாமணி நயினார்’ என்று பெயர் வைத்துக் கொண்டுள்ளனர். ‘பாகவதன் அனதாரி’ என்பவர் வேளாளர் வரலாறு கூறும் சூடாமணி என்ற நூலைப்பாடும்போது, ‘சீவகனார் புகழ் உரைக்கும் சிந்தாமணி அதனின் பாவம் அறுந்திட ‘தான் பாடுவதாகக் கூறுகிறார். இதிலிருந்து கொங்கு நாட்டு வேளாளர்கள் சிந்தாமணியையே படித்துக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறது என்பார் புலவர் இராசு.

சேலம் மாவட்ட அலைவாய் மலைப்பட்டயத்தில் கையொப்பமிட்டுள்ள வேளாளர் ஒருவர் பெயர் ‘சிந்தாமணிக் கவுண்டர்’ என்பதாகும். அதே போல் அவிநாசி அருகேயுள்ள ஆலத்தூர் சமணக்கோயில் கல்வெட்டில் ‘கமலநாத சிந்தாமணித் தேவர்’ என்ற சமண அடியார் ஒருவர் குறிக்கப் பெறுகிறார். சத்தியமங்கலம் கல்வெட்டொன்றில் சிந்தாமணி என்று ஓர் ஆறு இருந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது.

கேமசரியார் இலம்பகத்தில், கேமாபுர வணிகனான சுபத்திரனின் மகள் கேமசரி ‘நாணமற்றவளாக’ உள்ளாள். அவள் யாரைப் பார்த்து நாணமடைகிறாளோ, அந்த ஆண்மகனே அவளுக்குக் கணவனாவான் எனச் சோதிடன் உரைக்கிறான். இந்தக் கதை கொங்கில் வழங்கியதால்தான் இன்றும் நாட்டுப்புறங்களில் வெட்கமில்லாத பெண்களைத் திட்டும்போது ‘கோமசரி’ எனக் கடிவார்கள். கேமசரி இங்கு ‘கோமசரி’ ஆகிவிட்டாள்.

வீராட்சி மங்கலமும் சமணமும்

கொங்கில் சில இடங்களில் கட்டுமானக் கோயில் களோடும், சில இடங்களில் கோயில்களின்றியும் சமணச்சிலைகள் அமைந்துள்ளன. தாராபுரத்தின் வடக்குப் பகுதியில் தான் வீராட்சிமங்கலம் அமைந்துள்ளது. தாராபுரத்தின் வடக்கே ஒரு பர்லாங்கில் வயலிடையே ஒரு திட்டில் யட்சி சந்திரபிரபாத் தீர்த்தங்கரர் திருவுருவம் 5 அடி உயரத்தில் நல்ல வேலைப் பாடாகவும் அநேக சிலைகள் உடைந்தும் அநேக சிலைகள் புதைந்தும் கிடைக்கின்றன என 1933 ஆம் ஆண்டு எழுதிய ‘கொங்கு நாடு’ எனும் நூலில் தி.அ. முத்துச்சாமி கோனார் குறிப்பிடுகிறார். ஆனால் இன்று எந்தச் சமணச் சிற்பங்களும் கிடைப்பதில்லை.

கங்கர்கள் தங்களுடைய ஆட்சியில் ‘ஸ்கந்தபுரத்தைத்’ தலைநகராகக் கொண்டு ஆண்டனர், அது தாராபுரமே என்று கூறும் வரலாற்று ஆசிரியர்கள், கங்க மன்னர்கள் சமணத்தைப் போற்றி வளர்த்துள்ளதையும் குறித்துள்ளார்கள். சமணம் செழித்திருந்த பகுதியில் சமணக் காப்பியமான சிந்தாமணி படைக்கப்பட்டது வியப்பில்லை எனலாம். மேலும் சமண இராமாயணத்தில் ‘கொங்குத் தாராபுரி’ சமணம் செழித்த ஊர்களில் ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.

வீராட்சி மங்கலமே சிந்தாமணியூர்

தாராபுரத்தின் வடகிழக்கே அமைந்துள்ள வீராட்சி மங்கலம், இயற்கை வளம் சூழ்ந்தது ‘வீரன்’ எனும் சொல் சிந்தாமணியில் ஸ்ரீவர்த்தமான சுவாமிகளைக் குறிப்பதாகவே உள்ளது (சிந்தாமணி ப:1463), சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரே பல இடங்களில் மகாவீரரைக் குறிக்கிறார்.

“விழாக் கொள விரிந்தது வீரன் பிண்டியே” (3012) எனும் வரி அதற்குச் சான்றாக அமைகிறது.

வீராட்சி மங்கலம் பல இலக்கிய ஆசிரியர்களையும் பெற்றுள்ளது. ‘வேளாள புராணம்’ பாடிய கந்தசாமி கவிராயர் இந்த ஊரே. சாமிநாதப் பள்ளு எனும் சிற்றிலக்கியம் படைத்த சிவபெருமான் என்ற கவிராயரும் இந்த ஊரே.

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால், த. பூமிநாகநாதனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு ஓலைச்சுவடியினின்றும், கைப்பிரதியினின்றும் படியெடுக்கப்பட்ட ‘சாமிநாதப் பள்ளு’, 2000 இல் அச்சானது. இந்நூல் வீராட்சி மங்கலத்தில் வாழும் பள்ளர் குடியினைப் பாடுகிறது. அதன் மொழி நடை 18 ஆம் நூற்றாண்டினை ஒட்டியதாக உள்ளது. சாமிநாத பூபேந்திரன் என்பவர் மேல் பாடப்பட்ட இதன் பாடல்கள், வீராட்சி மங்கலத்தைச் ‘சிந்தாமணியூர்’ என்று குறிக்கின்றன.

“மருக்கமழ் சிந்தாமணியூர் பெரிய திருவடியுதவுவர்க்கு மாரன் / தருக்குலவு காதலத்தான் சாமினா தேந்திரவேள்.... (ப.73) என்றும், பற்றலர் குடோரியென வந்து நித்த செயலானிப் /பட்டன் சேருவை தழைக்கக் கடவாய் குயிலே / வளம்புனை சிந்தாமணியில் வருசாமினா தேந்திர / மன்னவனை வாழ்த்தியே கூவாய் குயிலே.... (ப. 87) என்றும், கதைத் தலைவன் சாமிநாதேந்திரன் ஊர் வீராட்சி மங்கலமான ‘சிந்தாமணியூர்’ என்று கூறுகின்றதை அறிய முடிகிறது. சிந்தாமணி தோன்றிய ஊராதலால் அந்தப் பெயரிலும் அந்த ஊர் வழங்கியிருப்பதற்கு இதையே சான்றாகக் கொள்ளலாம்.

மேலும் ‘சிந்தாமணியாழ்வார்’ (ப. 120) என்ற பெயரும், இந்நூலில் குறிக்கப்படுகின்றது. மேலும் கதைத் தலைவனான சாமிநாதேந்திரன் ‘சிந்தாமணி’யைக் கற்றுச் சிறந்தவன் என்பதை, “நலஞ் சொல் என்பவரை நாட்டினான் துதி / துலங்கு தென்கரை நாட்டினான் / நுந்தா மணியை யீந்தவன் முன்பு / சிந்தாமணியில் வாய்ந்தனன்” (ப.134) என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர் பிறந்த ஊர் குறித்த இவ்வளவு சான்றுகள், வேறெந்தப் பகுதிக்கும் இல்லாத நிலையில், சிந்தாமணியூரான வீராட்சி மங்கலமே திருத்தக்க மாமணியான தேவர் பிறந்த இடம் எனக் கொள்ளலாம்.

ஆதாரம்: 1. கொங்கும் சமணமும் - புலவர் இராசு,
2. சாமிநாதப் பள்ளு, பதி த. பூமிநாகநாதன், உ.த.ஆ. நிறுவனம், 2000.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com